Friday, April 29, 2011

ஜான் டேவிட்டும் பாவ மன்னிப்பும்


எங்கள்  ஊரில்  பொன்  நாவரசு  பள்ளி  உள்ளது .நாவரசு நினைவாக  அவர்  தந்தை  பொன்னுசாமி  தொடக்கிய  பள்ளி. அதன்  வழியாக  போகும்போது  ஏதோ   ஒரு  இனம்  புரியாத  உணர்ச்சி  மனதில்  எழும் . படித்தவர்களான  நமக்கே  இன்னும்  புரியாத சட்டத்தை எதிர்க்க  முடியாத  இயலாமையினால்  ஏற்பட்ட  வெட்க  உணர்ச்சியா ,அல்ல  அதன் மிக  இழுவையான   விசாரணையைக்  கண்டு  ஒதுங்கி  விட்ட  குற்ற  உணர்ச்சியா என்பது  தெரியவில்லை .



ஆனால்  இத்தனை  காலம்   கழித்து  ஜான்  டேவிட்  குற்றம்  உறுதிபடுத்தப்பட்டுள்ளது ; இரட்டை  ஆயுள்  தண்டனை  என்று  செய்தி  வரும்போது ...
எந்த  ஒரு சலனமும்  மனதில் எழவில்லை . ஒருவேளை  இதுதான்  இந்திய  சட்டத்துக்கு  கிடைத்த  வெற்றியோ ?

'பிரச்சனைகளை  உடனே  தீர்த்தால்  உணர்ச்சி மேலிட்ட  தீர்வே  கிடைக்கும்..ஆற  போடுங்கள் ;எல்லா  கூச்சல்களும்  அடங்கிய  பின் அலசி  முடிவெடுங்கள் ;எல்லாரும் அமைதியாய் ஏற்றுக் கொள்வார்கள்'  என்று யாரோ  ஒரு பேர்  தெரியாத பெரியவர்  சொன்ன  உருப்படாத முறையை  கொண்டுள்ளதா  நம்  சட்டம் ?
இந்த முறை  எல்லாவற்றிற்கும்  பொருந்துமா ?குறிப்பாக இந்த வழக்குக்கு பொருந்துமா ? 

இப்போது  நிறைய  பேரிடம்  ஒரு கேள்வி  எழுகிறது.

ஜான்  டேவிட் திருந்தி  விட்டாரே  ? பிறகு  எதற்கு  தண்டனை ? 
என்று ஒரு அனுதாபம்    குற்றவாளி  மீது  விழத் தொடங்கியுள்ளது .

திருந்தி விட்டார்  என்று உனக்கு  எப்படி தெரியும் ? 
அவர் திருந்தவில்லை  என்பது உனக்கு எப்படி தெரியும் ? 
என்று விவாதங்கள்  தொடர்கின்றன .நான்  எந்த விவாதத்திற்கும்  வரவில்லை. .
என்  கண்களுக்கு  இப்போது விவாதங்கள் தெரியவில்லை .
பழைய  ராகிங்  கொடூர  கொலை  தெரியவில்லை .
ஜான் டேவிட் தெரியவில்லை .
நாவரசு தெரியவில்லை .
நீதிமன்றம்  தெரியவில்லை .

எனக்கு  தெரிவது  ஒரு தாயும்  தந்தையும் .எங்கோ ஒரு மூலையில் மவுனமாக இருந்துகொண்டு ,இழப்பை மனதிலும்,வலியை நெஞ்சிலும் தாங்கி ,  இதைப்பற்றி துளியும் வாய் விட்டு பேசாமல் ஒதுங்கி வாழும் ஒரு சாந்தமான அப்பா அம்மா ....

இந்த சமூக  நிகழ்வை  சீர்தூக்கிப்  பார்க்க  வேண்டுமென்றால் ,ஒரு தனி  மனித  மனதின்  இயக்கம்  எப்படி  ஒரு நிகழ்வுக்கு  
ஒத்துழைக்கிறது என்று முதலில்  கவனிக்க  வேண்டும் . 

ஒரு சராசரி  சாதாரண  மனிதனுக்கு  கஷ்டங்கள்  வரும்போது வருத்தபடுகிறான் . கஷ்டங்கள் அதிகமாகும்போது  புலம்ப  தொடங்குகிறான் .
திடீரென  கஷ்டம்  துக்கமாக  மாறும்போது  வெடித்து  அழ  தொடங்குகிறான் .
 இந்த நிலையில்தான்  உணர்ச்சிகள்  மேலெழுந்து , பழிவாங்குதலோ அல்ல தற்கொலையோ  எந்த தவறான  முடிவும்  எடுக்கிறான் .அப்போது  ஒருவேளை தனக்கு  நியாயம்  கிடைத்தால்  ஆறுதல்  அடைகிறான் .அல்லது  அழுவதை  தொடர்கிறான் .

அழுகை  அடங்கியதும்  ஒரு அமைதி  கிடைக்கும். நியாயத்திற்காக    காத்துக்கிடக்கிறான்     . இப்போது நியாயம்  கிடைத்தால் ஒரு சாந்தமான  சந்தோசம்  கிடைக்கும் .வாழ  தனக்குத்தானே    ஒரு அர்த்தம்  கற்பித்துக் கொள்கிறான்   . இல்லையென்றால்  காத்திருப்பு  அந்த  அமைதியை  விரக்தியாய்  மாற்றி விடுகிறது.நடைப்பிணம்  போல  வாழ தொடங்குகிறான் .இவனின்  அடுத்த  உயிர்வாழும்  காலங்கள்  நரகம் . உப்பில்லாத  சத்தில்லாத  வாழ்க்கை .

பின் ஒரு நாள்  அவனுக்கு  நியாயம் கிடைத்ததாக  கேள்விப்படுகிறான் .ஆனால்  அதனால்  எந்த சந்தோசமோ  ,பாரம்  குறைந்த  உணர்வோ  ,அல்லது குறைந்தபட்சமாக  ஒரு சலனமோ  கூட  அவனுக்கு ஏற்படுவதில்லை . பிணமாகவே  வாழ்கையை எஞ்சிய  காலமும்  தொடர்கிறான் . அந்த தீர்ப்பு  , பாதிக்கப்பட்ட  அவனைப் பொறுத்தவரை   எந்த பலனும்  கொடுக்கவில்லை .

இப்படித்தான் இருக்கும் - பாதிக்கப்பட்டு, நியாயம் வேண்டி  தீர்ப்புக்கு காத்திருக்கும் ஒவ்வொரு சாதாரண இந்திய குடிமகனின் வாழ்க்கை.

தவறான தீர்ப்பை  விட  தாமதிக்கப்பட்ட  தீர்ப்பு மன்னிக்க முடியாத குற்றமாக கருதப்படவேண்டும். 

ஜான் டேவிட் பக்கம்  அனுதாபப்  பார்வை  பார்ப்பவர்கள்  , 
இந்த பெற்றோரை  ஒரு முறைப்  பார்த்து  புன்னகை  செய்ய  மனம்  உள்ளதா  என  யோசியுங்கள் . இந்த பதினைந்து வருடம்  யாராவது  அவர்களை  பார்த்து 'நல்லா இருக்கீங்களா ?' என்று கேட்டிருப்பார்களா   என்று சிந்தியுங்கள் .
நாவரசின்  புகைப்படம்  தேடி  எடுத்து  பார்த்து  ,
'என் வீட்டில்  இப்படி  நடந்தாலும்  நானும்  பதினைந்து வருடம் கழித்து மன்னிப்பு  கொடுப்பேன் ' என்று சொல்ல  உங்களால்  முடிகிறதா  என்று பாருங்கள் .
அப்போதும்  சரி  , இப்போதும்  சரி -நம்மைப்  பொறுத்தவரை நாவரசு  கொலை ஒரு செய்தி .ஆதலால்  இப்போது சாதுவாய்  குற்றவாளி 
காணப்படும்போது  இறக்கம்  ஊற்றெடுப்பது  இயற்கையே  . ஆனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின்  நபராக  நாம்  இருந்தால் ?



 இனி  உங்கள்  முடிவு ..
      
பாதிக்கப்பட்டது  பிரதிவாதி  மட்டும்  அல்ல ,குற்றவாளியும்தான் . அவர் இத்தனை ஆண்டுகளில்   திருந்தினாரோ  இல்லையோ ,  அவர் வாழ்க்கைக்கு  எதையும்  முடிவெடுக்க  முடியாத நிலையில் இருந்தார் என்பது நிதர்சனம் .தண்டனை அப்போதே  அளித்திருந்தால்  அதை முழுதாக  அனுபவித்து  ,
  பிறகாவது  ஒரு வாழ்கை உருவாக்கியிருக்கலாம் .

ஆனால் எப்போது  என்ன  தீர்ப்பு வருமோ  என்றே  பயந்து  பயந்து பாதிரியார்  ஆகி துறவறத்தை  இழிவு  செய்ததுதான்  மிச்சம் . வாழ எல்லா வழியும்  இருந்து  எதுவும்  வேண்டாம்  என்பவனே  உண்மையான  துறவி .
இனி எதுவும் இல்லை என்றதும்  துறவி ஆகிறவன்   வெறும்  போலி .


    

    மீதி  கேள்விகள்  நீதித்துறைக்கு ...

பத்து  ஆண்டுகள் அலசி ஆராய  - நிறைய பேர் சம்பந்தப்பட ,இது என்ன அரசியல்  கொலையா  ?  இவன்  அவனை  கை  காட்ட  அவன்  இன்னொருவனை  கை காட்ட  என்று சிக்கலாய்  இருக்கும்  வழக்கா  இது ?

'ஆயிரம்  குற்றவாளிகள்  தப்பிக்கலாம் .ஆனால் ஒரு நிரபராதி  தண்டனைக்குள்ளாக   கூடாது ' என்ற  கோட்பாடைக்  காப்பாற்ற  
யோசித்திருந்தால்  ,குற்றவாளியே உண்மையை ஒத்துகொண்ட பின்னரும் இந்த வழக்கில்  யார்  தவறாக  தண்டனைக்குள்ளாக போகிறார்கள் ?

ஊர்  அறிந்த  ரகசியமாய்  வழக்கின்  பக்கங்கள்  இருக்க  ,தீர்ப்புக்கு  எதற்கு தாமதம் ?


மெதுவாகத்தான்  முடியும்  என்றால்  ஊழல்  வழக்குகளில்  கைதாகும்  தலைவர்கள்  மட்டும் ,  ஆட்சி  அவர்கள்  கைக்கு  மாறியதும்  , வழக்கு  விரைந்து  அவர் பக்கம் சாதகமாக  முடிவது  எப்படி ?

சட்டம் படித்தவர்கள்  குறையா  அல்ல சட்டத்தின்  குறையா ?
 நீதிபதிகள்  தவறா அல்லது நீதியின்  தவறா ?

--->
எத்தனையோ  வழக்குகள்  இன்னும் நிலுவையில்  இருக்க இந்த கேள்விகளுக்கு  மட்டும் பதில் உடனே கிடைக்குமா என்ன ?

இப்படியாக . ஒரு குற்றம் இழைக்கப்பட்டு அதற்கு தீர்ப்பு வர காலம் அதிகமாகி அது  காலாவதி ஆகும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதனால்தான் , சில சமயம் போலிஸ் நடத்தும் என்வுன்டர்களையும் முழுமனதுடன் எதிர்க்க முடிவதில்லை. மாறாக பொதுமக்கள் அதை வரவேற்கும் அபாயமும் வந்துள்ளது . உதாரணம்: சமீபத்தில் உடுமலை அருகில் நடந்த சிறுமி கடத்தல் ,கொலையின் குற்றவாளிக்கு நேர்ந்த கதி.
    
எனவே சட்டத்தை முடக்குவதை நிறுத்தி, எங்கெல்லாம்,எப்போதெல்லாம் சட்டத்தை முடுக்க வேண்டுமோ,  துரிதப்படுத்த வேண்டுமோ அதை அப்போதே செய்தால் , குற்றவாளி சாகும் முன்போ , பாதிக்கப்பட்டவர் சாகும் முன்போ நியாயம் கிடைக்கும். இந்த மாற்றத்தை எதிர்பார்க்கலாமா ?

இனி வருவது எப்படியோ , நாவரசு விஷயத்தில்  வழக்கையே தூக்கில் போட்டாகி விட்டது.   இனி இரட்டை ஆயுள்  யாருக்கு  என்ன செய்யும் ?
   
புகைந்தது போதும் ; எரிய விடுங்கள். இந்த தீர்ப்பாவது  இறுதித் தீர்ப்பாகட்டும் .

மக்களே ,இனி நீங்கள் யாருக்கு பாவ மன்னிப்பு கொடுப்பீர்கள்?  டேவிடுக்கா அல்ல தாமததிற்க்கா ? 

4 comments:

Suresh S R said...

well said.........

இராஜராஜேஸ்வரி said...

தவறான தீர்ப்பை விட தாமதிக்கப்பட்ட தீர்ப்பு மன்னிக்க முடியாத குற்றமாக கருதப்படவேண்டும்.//

தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்.

priyamudanprabu said...

பாதிக்கப்பட்டது பிரதிவாதி மட்டும் அல்ல ,குற்றவாளியும்தான் . அவர் இத்தனை ஆண்டுகளில் திருந்தினாரோ இல்லையோ , அவர் வாழ்க்கைக்கு எதையும் முடிவெடுக்க முடியாத நிலையில் இருந்தார் என்பது நிதர்சனம் .தண்டனை அப்போதே அளித்திருந்தால் அதை முழுதாக அனுபவித்து ,
பிறகாவது ஒரு வாழ்கை உருவாக்கியிருக்கலாம் .
////
who is response for this?
did he accept his mistake?

virutcham said...

உண்மை தான். மிகத் தாமதமாக வந்த தீர்ப்பு. பிள்ளைகளை விடுதியில் படிக்க அனுப்பவே பல பெற்றோர் பயப்பட வைத்த வழக்கு அது. அந்த தாயையும் தந்தையையும் பற்றி யோசித்தால் துக்கம் நெஞ்சை அடைக்கும். வழக்குகளை தேங்க வைத்து காலங்கழித்துக் வழங்கப்படும் தீர்ப்பு எந்த விதத்தில் யாருக்கு உபயோகமோ தெரியவில்லை.

Post a Comment