Monday, April 16, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி


'சினிமா என்னும் ஊடகத்தை வியாபாரமாக மாற்றுகிறார்கள்; கமர்ஷியல் என்னும் பெயரால் அதை  அழிக்கிறார்கள்' என்று அடிதொண்டையில் கத்தும் சினிமா விமர்சகர்கள் ஓகே ஓகே  தியேட்டர் பக்கம் வர வேண்டாம்.
எப்படியும் இவர்களும் யாருக்கும் தெரியாமல் ராத்திரி வந்து படம் பார்க்கத்தான்
போகிறார்கள்; முழுக்க பார்த்து ரசித்து பிறகு அடுத்த நாள் கலைத்தாயின் காவல்காரர்களாக படத்தை குற்றம் சாட்டுவார்கள்.

ஆனால் இது எதைபற்றியும் கவலைப்படாமல், படம் பார்க்க வரும் சாமான்ய ரசிகர்களை , இரண்டரை மணி நேரம் சிரிக்க வைத்து , கவலையை மறக்க வைத்த இயக்குனர் ராஜேஷ்க்கு பெரிய கைதட்டல் கொடுக்கலாம். நிச்சயமாக சொல்லி அடித்த கல் இது - டார்கெட் மிஸ் ஆகல.


இதுதான் யதார்த்தம். என்னதான் கலை , உலகத்தரம் என்று எத்தனையோ மேதைகள் சினிமாவைப் பற்றி பேசினாலும் , சாதாரண ரசிகனின் சந்தோசமான கைதட்டல் சத்தத்தில் அவை எதுவுமே யாருக்கும் கேட்காது.இந்த உண்மையால்தான் சிவாஜி காலத்தில் எம்ஜீஆரும் , கமல் காலத்தில் ரஜினியும் ஓவர்டேக் செய்து வெற்றிபெற முடிந்தது.

நாலாயிரத்து முன்னூற்றி இருபத்தி ஏழு தடவை பார்த்த  கதை.  அதில் கடைசி இரண்டு , இதே இயக்குனர் தன் போன இரண்டு படத்தில் ஏற்கனவே காட்டி விட்டார். இப்போதும் அதே. ஆனால் நடிகர்கள் வேறு வேறு.  அதனாலென்ன? படத்தின் தோல்வி என்பது நிர்ணயம் ஆவது - படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கு சலிப்பு வந்தால் மட்டுமே . அதை ஒவ்வொரு நிமிடமும் மனதில் வைத்து ஒவ்வொரு சீனையும் தரமான சிரிப்பிற்காக செதுக்கி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.

சிவா மனசுல சக்தி , பாஸ் என்கிற பாஸ்கரன் - இந்த இரண்டு படங்களும் இப்போதும் டிவியில் போட்டால் ,அது எத்தனை முறை பார்த்ததானாலும் மீண்டும் பார்க்க தோன்றும் ஈர்ப்பு  உண்டாகியிருக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் இனி கண்டிப்பாக இடம்பெறும்.

படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.  தளபதி மகன் என்பதால் பன்ச் டயலாக்கோ , தலைவர் பேரன் என்பதால் பக்கபக்கமாய் வசனமோ வேண்டும் என்று கேட்காமல் , ஒரு சராசரி யூத் கேரக்டர் மூலம் அறிமுகம் ஆகி பெரிய பாராட்டை பெறுகிறார். கொஞ்சமே கொஞ்சம் அரசியலை கலந்திருந்தாலும் , மண்ணை கவ்வியிருக்கும் இந்த படம்.

நல்ல ஒரு தயாரிப்பாளர்க்கு  இருக்க வேண்டிய புத்திசாலித்தனம் உதய்க்கு  இருக்கிறது. அதற்கு கிடைத்த பரிசு - படத்தின் இமாலய வெற்றி. மென்மையான குரல், உணர்ச்சிகளை வேறுபடுத்தி காட்டத்தெரியாத நடிப்பு,  வராத நடனம் என்று எத்தனையோ மைனஸ் இருந்தாலும் , கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்த விதத்தில் எல்லாவற்றையும் ஓரங்கட்டி கைதட்டல் பெறுகிறார் உதயநிதி.

சந்தானத்தை பேச விட்டு , அடக்கி வாசித்து நடிக்கும் உத்தி ஜெயித்திருக்கிறது.
குரலிலும் மேனரிசத்திலும் ஜீவாவை நினைவுபடுத்தினாலும் , முதல்  படத்துக்கு நல்ல ஹோம் வொர்க் செய்து உழைத்திருப்பது தெரிகிறது.  சரண்யா - அழகம்பெருமாள் காட்சிகள் யதார்த்தம் - சண்டைக்கு சொல்லும் காரணம் தவிர.

படத்தில் சகிக்க முடியாத ஒன்று , சந்தானத்துக்கு ஜோடியாக வரும் பெண்ணை கிண்டலடிக்கும் காட்சிகள். அழகில்லாததால் மட்டுமே அந்த பாத்திரம் இவ்வளவு கிண்டலுக்கு உட்படுகிறது என்ற நினைப்போடு டைரக்டர் காட்சிப்படுத்தியிருந்தால் ,அது மிக கண்டிக்கப்படவேண்டிய விஷயம்.

போன இரு படத்திலும் செய்த அதே தவறு இந்த படத்திலும் மீண்டும் எதிரொலிக்கிறது. கிளைமாக்ஸ் சொதப்பல். தேவையில்லாமல் ஆர்யா , ஆண்ட்ரியா என நட்புக்கு ஆளை நடிக்க கூட்டிவந்து இழுத்தடித்த கடைசி  இருபது நிமிட கொடுமை தவிர மற்றவை எல்லாம் ஓகே. இந்த படத்தை இப்படிதான் முடிக்க முடியும் என்பது திரையுலக டிக்சனரியில் உள்ளதென்பது பார்க்கும் எல்லாருக்கும் தெரியும்.அதனால் டைரக்டர் பிழைக்கிறார்.


படத்தின் இரண்டு சறுக்கல்கள் இசை மற்றும் கதாநாயகி. சரக்கு தீர்ந்து போன ஹாரிஸ் ,ஏற்கனவே ஹிட்டடித்த தன் பாடல்களை வைத்து ஒட்டியிருக்கிறார். பின்னணி இசை காட்சிக்கு ஏற்ற தாளம் பிசகுகிறது. எதிர்பார்த்து ஒன்றுதான்.

SMS அனுயா போலவோ , பாஸ் நயன்தாரா போலவோ நடிக்க தெரியவில்லை ஹன்சிகாவுக்கு.Just chubby  yet cute. போகட்டும். மற்ற பாசிடிவ் விஷயங்களால் இவை இரண்டும் மறைந்து விடுகிறது.  

படத்தின் ஆணிவேர் , தூண் , ஏன் மொத்த பலமுமே சந்தானம்தான்.  போன விஜய் அவார்டில் சந்தானத்துக்கு விருது கொடுக்கும்போது , மூன்றாம்  முறையும் இந்த படம் மூலம் சந்தானத்துக்கே கிடைக்கும் என்று அடித்து  சொன்ன ராஜேஷ் அதை உறுதிபடுத்தியிருக்கிறார். நல்ல நடிகரும் , அந்த நடிகரிடம் இருந்து சிறந்த நடிப்பை வாங்க தெரிந்த இயக்குனரும் சேர்ந்தால் கிடைக்கும் ரிசல்ட் நூற்றுக்கு நூறு என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த படம்.



கண்ணை உறுத்தும் கலர் பேன்ட் , பொருந்தாத டி ஷர்ட் ,
எண்ணெய்  வைத்து ஒழுங்காய் வாரிய தலைமுடி  என ஒரு மாதிரியான கெட் அப்பில் அசத்துகிறார் சந்தானம். அடிக்கடி சிவாஜியையும், கமலையும் மிமிக் செய்து அடிக்கும்  அட்டூழியமும் , உச்சகட்டமாக கிளைமாக்ஸ்  காட்சியில் மதபோதகரை இமிடேட் செய்யும் காட்சியிலும், என கிடைத்த எல்லா கேப்பிலும் பவுண்டரி அடித்து விளையாடியிருக்கிறார்.

வடிவேலுவின் இடம் காலியாய் இருக்கும் நேரத்தில், விவேக்கின் காமெடி காலி பெருங்காயமாய் கரைந்து முடிந்திருக்கும் நேரத்தில்,  இருக்கும் மிச்ச சொச்சங்களை புறந்தள்ளி டாப் காமடியனாக கம்பீரமாக உயர்ந்திருக்கிறார்  சந்தானம்.இது போன்ற படங்களை ஒரு ஐந்து வருடங்கள் தொடர்ந்து கொடுத்தால், பல வருடம் காத்திருந்த கவுண்டமணியின் கிரீடத்தை சந்தானத்துக்கு தாராளமாக வழங்கலாம்.

எந்த லாஜிக்கும் பார்க்காமல் மூன்று மணி நேரம் சிரிக்க , சரியான மினிமம் கேரன்ட்டி இந்த படம்.

ஓகே ஓகே - டபுள் ஓகே.


பேஸ்புக்கில் தொடர , வலது பக்க மேல் ஓரத்தில் உள்ள 'Find us on Facebook'ல்  Like பட்டனை அழுத்தவும்.

Tuesday, April 10, 2012

பாப்கார்ன் பாக்கெட் - 20120410

'மூணு' படத்தின் என் விமர்சனத்தைப் பார்த்து எனக்கு தெரிந்த ஒருவர்     
'உங்களுக்கு என்ன அந்த படத்து மேல அவ்ளோ கோபம்? அப்படியே   இருந்தாலும் அதை சொல்ல உங்களுக்கு என்ன  உரிமை இருக்கு? ரொம்ப ஓவரா போறீங்க' என்று  தாளித்தார். 'பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பார்த்த எனக்கு இல்லாத உரிமை யாருக்கு இருக்கு?'ன்னு மட்டும் சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

'இவ்ளோ பேசறீங்களே..என் விமர்சனத்தை விமர்சனம் செய்ய உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?ன்னு அவர் பாய்ண்டை திருப்பி அவரையே எதிர் கேள்வி கேட்க   கடைசி வரைக்கும் நான்  யோசிக்கவே இல்லை.பழகின தோஷம்.  

இவங்க எல்லாம்  தான் என்ன நினைக்கிறோமோ அதையே பார்க்கணும், அதை ஆமோதிக்கிற கருத்தை மட்டுமே மத்தவங்க எழுதணும்  பேசணும்ன்னு நினைக்கிறாங்களே தவிர அடுத்த  கோணத்துல ,மத்தவங்க ரசனைக்கும் மதிப்பு கொடுக்கணும்னு யோசனை கூட செய்யறது இல்ல.
 
படத்தை நல்லாயிருக்குன்னு சொல்றவங்ககிட்ட நாம எதிர்வாதம் செய்ய கூடாது.
.'படம் நல்லாயிருக்கு'ன்னு நீயும் சொல்லித்தான் ஆகணும்ன்னு சொல்றவங்கள மதிக்கவே  கூடாது.

இது எல்லாத்துக்கும் பொருந்தும்.

'சுய கருத்துரிமையை விட்டுகொடுத்துதான் நட்பை காப்பாத்திக்கணும்னா அந்த நட்பே தேவை இல்ல'ங்கறது என் கருத்து.
-----------------------------------------------------------------------

அடுத்த ஜனாதிபதி யாரென்று இன்னும் மூன்று மாதத்தில் தெரிந்து விடும். தற்போதைய ரப்பர் ஸ்டாம்ப் பிரதீபா பாட்டில் ,இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை தவிர வேறு எந்த ஒரு சிறு துரும்பையும் கிள்ளி போடவில்லை. எதிர்பார்த்ததுதான்.அதனால் ஏமாறவில்லை.

வாழ்த்துக்கள் பிரதீபா. வரலாறு மிக முக்கியம் என்பதை தெரிந்து அதில் உங்கள் பேரையும் இடம்பெற செய்து விட்டீர்கள்.நீங்கள் ஜனாதிபதியாய் வரவேண்டும் என்று இந்தியாவில் முதன்முதலில் ஆதரவு கூட்டம் போட்ட கலைஞருக்கு ஒரு நன்றியை  அறிவித்து விட்டு விடைபெறுங்கள்.

காங்கிரஸ் சார்பில் மக்களவை சபாநாயகர் மீராகுமார், துணை ஜனாதிபதி ஹமித்அன்சாரி, பிரபல தொழில் நுட்ப நிபுணர் சாம்பிட்ரோடா, நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி, கரண்சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. போன முறை போல இந்த முறையும் கலாம் இந்த போட்டியில் கலந்துகொள்ளாமல் இருந்து விடுவாரோ என்ற வருத்தம் கலந்த எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது.


 மீண்டும் அழைக்கும்படி அவர் அப்படி என்ன செய்து விட்டார் என்று கேட்பவர்கள் , அவரின் முன்னும் பின்னும் இருந்தவர்கள் யாரும் செய்யாத ஒன்றை செய்தவர் என்பதை அறியாதவர்கள். நாட்டுக்கு தன் இளமை காலம் தொட்டு சேவை செய்து அதன் புகழை தாங்கி நிற்கும் தூணாக இருந்த பின்தான் ஜனாதிபதி தேர்தலில் நின்றார்.ஐந்து வருடங்கள் எத்தனையோ மாணவர்களுக்கு தன் பேச்சின் , ஆலோசனையின்  சேவையை வழங்கினார்.

இது எல்லாம் அவர் ஜனாதிபதியாய் இருந்து செய்யவேண்டும் என்பது இல்லை என்பதையும் விளம்பரம் ஏதும் இல்லாமல் அடுத்த ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து செய்து நிருபித்தார். இவரைத் தவிர பொருத்தமானவர் வேறு யார் ?

பாஜக இவரை ஆதரிப்பதாக  செய்திகள் வருகிறது. உண்மையாய் இருந்தால் மிக்க நல்லது. வாருங்கள் கலாம்.
----------------------------------------------------------

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்ததுபோன்று தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்திருக்கிறார். கூடவே , இந்த உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,383.49 கோடி செலவு ஏற்படும் என்றும் ஒரு ஓரத்தில் கோடிட்டு காட்டியுள்ளார்.சந்தோஷம்.

மின் பற்றாகுறை பிரச்சனை  பூதாகாரமாய் இருக்கும் சமயத்தில் இந்த அறிவிப்பு ஒன்றும் பெரிய அனுகூலத்தை அரசுக்கு கொடுக்காது.  இருந்தாலும் ஆசிரியர்கள் உட்பட சத்துணவு ஊழியர்கள்,வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள் என பலருக்கும் இந்த உயர்வு கொஞ்சம் நிம்மதி அளிக்கும்.

இதை நம்பி நடுத்தர மக்கள்  யாரும் குடும்ப பட்ஜெட்டில் உடனே எந்த திட்டத்தையும் செலவு வகையில் வைத்து விட
முடியாது.  காரணம் பால் , மின் கட்டணம் , மூன்று முறை பெட்ரோல் விலை உயர்வு என்று எல்லாம் சேர்ந்து இதை நேர்படுத்தி விடும்.

எது இங்கிருந்து கொடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
There exists an equation.
---------------------------------------------------

'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' எரிச்சலூட்டுகிறது.  கேள்விகள் தரம் பற்றி அதிகம் விமர்சனம் கேட்டாகி விட்டது.



எனக்கு பெரிய உறுத்தல் சூர்யாவின்  தடுமாறும்  செந்தமிழ் உச்சரிப்பும்,அந்த  மெனக்கெடலுக்காக அவர் படும் பாடும்தான்.  என்னதான் அவர் சிரித்தாலும், பதட்டத்தை மறைக்க முற்பட்டாலும் ஒருவித இறுக்கம் அவரை மீறி தெரிகிறது.

அதை விட போட்டியில் கலந்து கொள்பவர்களின் சுய புராணத்தை விஜய் டிவி அளிக்கும் விதம் மிக கொடுமை. பொழுதுபோக்கு நிகழ்ச்சியை , அதில் கலந்து கொள்பவர்கள் சோகத்தை
( வருத்தத்திற்குரியதுதான் ) வைத்து , நிகழ்ச்சியின் தரத்தை   கெடுக்கிறார்கள்.

பல வருடங்கள் முன்னால் வந்த கோடிஸ்வரன் நிகழ்ச்சி இதை விட நூறு மடங்கு நன்றாக இருந்தது. சரத்குமார் சூர்யாவை  விட நல்ல முறையில் செய்திருப்பார்.
நகைச்சுவையோடு ஒரு எதார்த்தம் அவரிடம் இருந்தது.
-----------------------------------------------------------

சச்சினின் பின்வாங்கல் பெரிய ஷாக். சென்னையை விட மும்பைக்கு இந்த முறை ஆதரவு அளிக்கலாம் என்ற என் எண்ணத்தில் பெரிய தடுமாற்றம். ஹர்பஜனுக்கு எல்லாம் சென்னையை விட்டுகொடுக்க முடியாது.

ஆனால் சென்னைக்கு  கோப்பை இல்லை என்ற கட்டம் உருவானால் என் ஓட்டு  தாதாவுக்கே.  கங்குலி தலைமையில் புனே அணி கொல்கத்தாவை பந்தாட வேண்டும் என்பதே கொல்கத்தா மக்களின் எதிர்பார்ப்பும் கூட. இவர்களுக்கு கோப்பையை விட கங்குலிக்கு போன வருடம் ஷாருக் அளித்த அதிர்ச்சி வைத்தியத்துக்கு மருந்து கொடுப்பதே முக்கிய குறிக்கோள். கானுக்கு இது தேவைதான்.


சென்னை டீம் வழக்கம் போல கலக்கலாகத்தான் இருக்கிறது. தோனி தவிர ரைனா , முரளி விஜய் , பிராவோ கூடவே அஷ்வின் என நல்ல பலமான பட்டாளம். சறுக்கலான காலகட்டத்தில் ஸ்ரீகாந்த் அனிருதா போன வருடம் நன்றாக உதவினார். தோனி எப்போதும் செய்யும் தப்பான ,   முக்கியமான தருணத்தில் ஜோஹிந்தருக்கு ஓவர் கொடுக்காமல் இருந்தால் பல வெற்றிகளை சென்னை பார்க்கலாம்.

இந்த முறை என் சாய்ஸ் சென்னை மற்றும் புனே. Let see who deserve.
----------------------------------------------------

உன்னி மேனன்  குரலில் ரஹ்மானின் அற்புதம்.வைரமுத்து வார்த்தை கையாடல் இந்த பாடலில் உச்சகட்டத்தை எட்டியிருக்கும்.
அதிர்ஷ்டவசமாக ஒளிப்பதிவும், பாடலின்  லொக்கேஷனும்  ,கண்களை உறுத்தாமல் பாடலை முழுதாக ரசிக்க வைக்கிறது. இந்த படம் வணிகரீதியாக தோல்வி அடைந்தாலும் , தமிழுக்கு புதிய முயற்சி. பாடல்கள் அனைத்தும் மிக அருமை.

சுரேஷ் மேனன் இயக்கத்தில் 'புதிய முகம்'  படத்தில் வந்த பாடல். தெலுங்கில் இதே பாடலை எஸ்பிபி பாடியிருந்தாலும் , உன்னி மேனனின் குரல் அதிகம் மயங்க  வைக்கிறது.



'கள்வர்க்கு இரவழகு;காதலர்க்கு நிலவழகு '  -
ஆகச்சிறந்த கற்பனை ஊற்று.
-----------------------------------------

Wednesday, April 4, 2012

'3' - தனுஷின் ரத்த சரித்திரம்

ஒரு ஆறு மாசமா படத்தோட தலைப்புக்கு என்ன அர்த்தம்னு தெரியாம முழிச்சிட்டு இருந்த ரசிகர்களுக்கு ரெண்டரை மணி நேரம் மூச்சு திணற திணற சுத்தி சுத்தி அடிச்சிட்டு   '' கேளாய் மானிடா .. 3  என்பது 3 அடிமுட்டாள்கள் என்பதன் சுருக்கமே . ..இயக்குனரும் , நடிகரும் முதல்  இரண்டு பேர். மூன்றாவது நபர் நீதான் எங்கள்  செல்லமே... 'ன்னு புரியாம புரிய வெச்சிருக்காங்க..

இத அனுபவபட்டுதான் புரியனும்னு இன்னும் நினைக்கிறவங்க ,வீட்டுல ஒருதடவைக்கு ரெண்டு தடவை சொல்லிட்டு தியேட்டர்க்கு போகலாம்.மத்தவங்க போஸ்டர் பக்கம் கூட போய்டாதீங்க.. டிவில இந்த படத்தை போடும்போது  , தப்பித்தவறி உங்க வீட்டுல கரண்ட் இருந்ததுனா , வெளிய ஓடிபோய் வெயில்லுல நின்னுக்கோங்க...


தனுஷ் மூணாவது தடவையா லூஸா நடிக்கிற படம். தலைப்பு இதுக்கும் பொருந்துது. 

ஸ்கூல் காலத்துல இருந்து வர காதல், ப்ரெண்ட்ஸ் கூட்டத்தோட நாலு காமெடி, அப்பா செண்டிமெண்ட்,ரெண்ட வீட்டுலயும் காதலுக்கு எதிர்ப்பு ,   பல பரிணாம வளர்ச்சிக்கு பிறகு கல்யாணம்.இப்படி தமிழ் திரைவரலாற்றிலயே இதுவரைக்கும் யாரும்  தொடாத கதையை கையில எடுத்து திரைக்கதை எழுதி அப்புறம் அதை படமா ரிலீஸ் செஞ்சிருக்காங்க.

படத்துல இவ்வளவு  இருந்தாலும் இது தனுஷ் படம் ஆச்சே...எதோ மிஸ் ஆவுதேன்னு நீங்க நெனச்சா எல்லாம் தெரிஞ்ச  இயக்குனருக்கு தெரியாதா என்ன? ஆடியன்ஸ் பல்ஸ கரெக்டா தெரிஞ்சிக்கிட்டு கல்யாணத்துக்கு அப்புறம் தனுஷ்க்கு மனநோய் தாக்குதுன்னு ஒரு ட்விஸ்ட் வெச்சிருக்காங்க.. அதுக்கு அப்புறம் கதை என்னவாகுதுங்கறதுதான் படம்.பாக்குற நாம என்னவாகறோம்ங்கறது நம்ம விதி.

பிரபு , பானுப்ரியா , ஸ்ருதிஹாசன் ,சிவகார்த்திகேயன்னு வரிசையா நல்ல ஸ்டார் வேல்யு உள்ள நடிகர்கள் இந்த படத்துல தேவை இல்லாம இருக்காங்க. அனிருத் , கொலைவெறி பாட்டு  தவிர இன்னும் ரெண்டு மெலடி நல்லபடியா கொடுத்திருக்காரு.இவர் ஓபனிங்  மட்டும்தான் இந்த படத்துல உருப்படியான விஷயம்.

ஐஸ்வர்யாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. ஒரு கமர்ஷியல் இயக்குனர் ஆக முதல் தகுதி அடுத்த படத்துல இருந்து கதையை சுடறதுதான். அது இவங்களுக்கு அழகா வருது. என்ன ஒன்னே ஒன்னு .. எல்லாமே தனுஷ் நடிச்ச பழைய படங்கள்ல இருந்தே உருவனதுனால நம்ம பசங்க கரெக்டா கண்டுபிடிச்சிடாங்க...

அவரோட முதல் படத்துல இருந்து கடைசியா வந்த படம் வரைக்கும் இருக்குற எல்லா சீனையும் எடுத்து 'இங்க்கி பிங்க்கி பாங்க்கி' போட்டு எது வருதோ அத எடுத்து இதுல மறுபடியும் யூஸ் பண்ணிருக்காங்க. நல்ல வருவீங்க மேடம். உங்கள மாதிரி திறமையான இயக்குனர்கள் சினி பீல்டுக்கு தேவை.

அம்மா..நாங்கெல்லாம் பேரரசு படத்தை கூட விசிலடிச்சு பார்ப்போம். மரண மொக்கை படமா இருந்தாலும் சிரிச்சிக்கிட்டே கமென்ட் அடிச்சிட்டு பாப்கார்ன மென்னுட்டு படத்தை ஜீரணம் பண்ணிக்குவோம். சத்தியமா இந்த மாதிரி கைக்குழந்தை கணக்கா தேம்பி தேம்பி  அழுது  பாத்தா படம் இதுதான். 

பவர் ஸ்டார் உட்பட மத்தவங்க யாருமே எங்கள அழ வெச்சி பாக்க விருப்பபட்டதில்ல.. நீங்க மட்டும் ஏன்? உங்களுக்கு செல்வராகவன் படங்கள்தான் இயக்குனர் ஆக இம்ப்ரெஸ் பண்ணுச்சுதுனா அதுக்காக இப்படியா?  செல்வராகவன் மாதிரி படம் எடுக்க செல்வராகவன் இருக்காரே.நீங்க எதுக்கு?

தனுஷ்  நீங்க ரொம்ப அடக்கமான மனிதர்.நல்ல நடிகர். தறுதலை,ரவுடி,வீட்டுக்கு அடங்காத பிள்ளை,லோக்கல் ஆளு,மெண்டல் கேரக்டர் எல்லாம் நல்லா பண்ணுவீங்க. அதுக்காக கேப் விடாம மெண்டலாவே நடிச்சிட்டு இருந்தா உண்மைலயே  அப்படி ஆகிடற அபாயம்  உங்களுக்கு இருக்கோ இல்லையோ ,பாக்கற   எங்களுக்கு இருக்கு.

ஒரு நாலஞ்சு வருஷம் உங்க வீட்டு ஆளுககிட்ட இருந்து விலகி நல்ல இயக்குனர்களோட சேர்ந்து நடிச்சா ,பேர காப்பாத்திக்க சான்ஸ் இருக்கு.என்ன பண்றது? சிம்பு தொல்லைல இருந்து தப்பிக்க எங்களுக்கு நீங்கதான கதி.

இது எல்லாத்தையும் மீறி இந்த படம் முதல் மூணு நாளுல ஒன்னே கால் கோடி வசூல் அள்ளி ஹவுஸ்ஃபுல்லா ஓடிட்டு இருக்கறது என்னைய  மாதிரி சாதாரண ரசிகனுக்கு வெளங்கல. ஒரு வேளை நமக்குதான் கலை கண்ணோட்டம் அந்த அளவுக்கு இல்லையோ..?!!?

அத விட இந்த படத்தோட  தெலுங்கு பதிப்பு பத்து கோடிக்கு வியாபாரம் ஆயிருக்காம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு , மக்கள் கூட்டம் சாரிசாரியா படத்துக்கு போகுதாம். ஹிந்திக்கு அடுத்த மாசம் படம் போகுதாம்.

நல்லது .. ரெம்ப நல்லது.. எவ்வளவு அள்ளணுமோ இந்த ஒரு தடவைலயே அள்ளிடுங்க எஜமான் அள்ளிடுங்க .. ஆனா தயவுசெஞ்சு இதே மாதிரி '4 ' , '5 'ன்னு எடுத்துராதீங்க..அந்த விபத்தை சந்திக்க எங்ககிட்ட    
தைரியம் இல்ல...

மூணு - முடியல..