Tuesday, August 23, 2011

குறுக்கு வழி : A Fiction


----------------------------------------------------
ஆகஸ்ட்  14 ,2011:

'அப்போ இது நிச்சயம் சாத்தியம்தானா ஜெனரல்?
இந்த இக்கட்டான நிலைமையில் இந்த முயற்சி வெற்றி தருமா?'

'வேறு வழி இருக்கா..சொல்லுங்க சார்..?'

'கண்டிப்பா இல்ல..ஆனா இந்த மாதிரி முறை இருப்பதே எனக்கு ஒரு பக்கம் சந்தோசமாவும், இன்னொரு பக்கம் நம்ப முடியாமலும் இருக்கு..நான் சொன்னாலும் மினிஸ்டர் நம்பணுமே..'

'சார்..சில விஷயங்கள் ராணுவத்தை தாண்டி வெளிய போகாது..யார் ஆட்சிக்கு வந்தாலும் கூடியவரை அவர்களுக்கு தெரியாமல் இந்த கண்டுபிடிப்புகளை வைத்திருப்போம்.இப்போ நீங்களா ஆலோசனை கேட்டதால இத சொல்றோம்..வன்முறை எதுவுமே இல்லாம இந்த நிலைமையை சமாளிக்கணும்னா இதுதான் ஒரே வழி..'

'ஆல்ரைட். ஐ அக்ரீ.அப்போ யார் இந்த வேலைய செய்ய போறது?'

'ஒரு சீனியர் Grade-One சயன்டிஸ்ட்.லெவல் ஏ.இந்தியன் சீக்ரெட்  மிலிட்டரி சர்வீஸ் விங்'

'சரி.  ஆல் தி பெஸ்ட் . நான் மேலிடத்துக்கு தகவல் சொல்லிடறேன்.உங்க போன்காலுக்காக காத்திருப்பேன்.'

-------------------------------------------

 ஜூன்  23 , 1976:

'ஆச்சர்யமா  இருக்கு  டாக்டர் . நீங்க சொல்றத பாத்தா இந்த மருந்து தீவிரவாதத்த உலகம் முழுக்க ஒழிச்சிடும் போலிருக்கே'

'சந்தேகம் வேண்டாம் கவ்ரவ். என்னோட பதினைந்து வருட உழைப்பு  இது. அந்த மூணு பேர பார்த்தீங்களா..?'

'ஆமா... அபாரமான மாற்றம்..அதிலயும் சப்ஜெக்ட் 47 பேச்சும் நடையும் நூறு சதவீதம் மாறிடுச்சு..அவ்வளவு மூர்க்கமா தன்  நாட்டுக்காக  மனித வெடிகுண்டா ,எல்லை தாண்டி வந்தவன் இப்படியா அமைதியாவான்?  '

'இதுல ஆச்சர்யபடறதுக்கு ஒன்னும் இல்ல . மருத்துவத்தோட மிக எளிதான சிறப்பு இது.. மூர்க்கத்தை குறைச்சு , அமைதியான மனநிலையை கொடுக்கிற மாத்திரைகள் பல இருக்கே. ஆனா என் கண்டுபிடிப்பு அதோட அடுத்த கட்டம். கூடவே ஒரு சுயநலத்தை புத்திக்குள்ள செலுத்துது.. தன் பாதுகாப்பு , தன் குடும்பம்,தன் குழந்தைன்னு ஒரு வட்டத்த தாண்டாம அதுக்குள்ளயே யோசிக்க வைக்குது. தன் குடும்ப பயம் வந்துதுனாவே ஒரு மனுஷனுக்கு  தீவிரவாதம் ,கொள்கையெல்லாம் 
ரெம்ப தூரம் ஓடி போய்டும்.. பிடிவாதமும் காணாம போய்டும்..'

'எல்லாரையும் இப்படி மன்னிச்சு விட்டுட்டா நம்ம நாட்டுக்குத்தான் டாக்டர் ஆபத்து.?'

'இல்ல..போர்னு வந்தால் நேருக்கு நேர் மோதலாம். அதில் எத்தனை பேரை வேணுமென்றாலும் அழிக்கலாம். ஏன்னா  அது நாடுகள் சம்பந்தப்பட்டது. அப்படி சாகும் வீரர்கள் ஒன்றும் தவறானவர்கள் அல்ல..தங்கள் நாட்டுக்காக போரிட்டு அழிகிறார்கள்..ஆனால் தீவிரவாதிகள் அப்படி அல்ல..தவறான மனிதர்களின் மூளை சலவையினால் பாதை மாறியவர்கள்.திருந்தப்படவேண்டியவர்கள். அவர்களில் ஒருவனை  அழித்தால் தீவிரவாதிதான் சாகிறான்.ஆனால் தீவிரவாதம் சாகாது.அதற்கு இந்த முறைதான் சரி..'
 
'இனி அடுத்த கட்டம் என்ன டாக்டர் ?'

'வேற என்ன? உடனே இந்த மருந்த இந்திய  ராணுவத்துக்கு அர்பணிக்கிறதுதான்.. இனி எதிர்பக்கம் எந்த தீவிரவாதி வந்தாலும் , கொல்லணும்னு அவசியம் இல்ல... மனுசனா ,அதுவும் தன்னலத்துக்காக  அடங்கிபோற சாதுவான மனுசனா மாத்திடலாம்..
இந்தியா அஹிம்சை தேசம்னு பெருமையா சொல்லிக்கலாம் கவ்ரவ்.'

'பாராட்டுக்கள் டாக்டர் மோத்தா '

புதிய குரல் கேட்டு இருவரும் திரும்பினார்கள்.  ராணுவ உடையில் மிடுக்காக ஜெனரல்.அருகில் புது நாகரீக உடையில் ப்ரித்வி. 

----------------------------------------------

ஆகஸ்ட்  18 ,2011:

'எனக்கு ரெம்ப பயமா இருக்கு. இதெல்லாம் நடக்குமா? இன்னும் கொஞ்ச நேரத்துல ஆள் ஜெயில்ல இருந்து வெளிய வர போறதா செய்தி வந்திருக்கு... '

'சார்..இத கண்டிப்பா நம்பலாம். இது வரைக்கும் படத்தில,கதைல  மட்டுமே சாத்தியம்னு நெனச்ச டைம் மெசின் ,இப்போ நம்ம ராணுவ விஞ்ஞானிகள் கிட்ட கைக்குழந்தை மாதிரி இருக்கு... எல்லா பிரச்சனையும் சுமுகமா முடிஞ்சுடும்.'

காரியதரிசி பேசிக்கொண்டே போக , அவரை சந்தேகமாக , கலக்கமாக பார்த்தார் மந்திரி.

-----------------------------------------------

ஜூன்  23 , 1976:

'எனக்கு புரியல ஜெனரல். நான் இந்த மருந்த தீவிரவாதிகளுக்காக கண்டுபிடிச்சிருக்கேன்.அதை நம்ம ராணுவ வீரன் ஒருத்தன்கிட்டயே  சோதனை செய்ய என்ன அவசியம்?'

'எதுவும் கேக்காதீங்க டாக்டர் மோத்தா.மேலிடத்து உத்தரவு.உடனடியா இது நடந்தாகணும்.'

'சாரி ஜெனரல்.காரணம் தெரியாம நான் இதுக்கு ஒத்துக்க முடியாது'

'சரி டாக்டர்..நீங்க ப்ரித்விகிட்ட பேசுங்க..அவர் எவ்வளவு சிரமப்பட்டு இங்க வந்திருக்காருன்னு தெரிஞ்சா நீங்க கண்டிப்பா ஒத்துக்குவீங்க'

'ஹாய்.ஐ அம் டாக்டர்.ப்ரித்வி.உங்க கண்டுபிடிப்பு அபாரம்.ஆனா
ஏன் பயப்படுறீங்கனு தெரியல..தப்பா போய்டும்னு நெனச்சா ?'

'வாட் நான்சென்ஸ். என் கண்டுபிடிப்ப கேள்வி கேட்க , சந்தேகப்பட உங்களுக்கு என்ன தகுதி இருக்கு.?'

'வாஸ்தவம்தான்.உங்க திறமையை சந்தேகப்பட இப்போ எனக்கு தகுதி மட்டும் இல்ல வயசும் இல்ல.. பை தி பை ,எனக்கு இப்போ ஆறு வயசுதான் ஆகுது'

மோத்தா முகத்தில் குழப்பமும் வியப்பும். ப்ரித்வி பேசத் தொடங்கினார்.

 ----------------------------------------

ஆகஸ்ட்  18 ,2011:

'உங்களுக்கு எப்படி இத பத்தி தகவல் தெரிஞ்சுது?'

'சமீபத்துல ராணுவத்துல நம்பிக்கையான என் ஆள் மூலமா அங்க நடந்த முக்கியமான பரிசோதனைகளைப் பற்றிய தகவல் எனக்கு கிடைச்சுது சார். அதுல எனக்கு ரெம்ப வியப்பா  பட்டது டாக்டர் மோத்தா மேற்கொண்ட பரிசோதனைதான்.

சுயநலம் புகுத்தி ஒரு மனிதனோட முழு போராட்ட குணத்தையும் மாத்தி அமைதியாக்குற மருந்தை கண்டுபிடிச்சு, அதுல  
வெற்றியும் அடைஞ்சிருக்காரு.ஆனா எதோ ஒரு காரணத்தால அவர் கண்டுபிடிச்ச மருந்துகள ,அதன் ரகசியத்த ராணுவத்துக்கு கொடுக்காம   பரிசோதனை தோல்வினு அவரா விலகிட்டார்.

ஆனா அவரோட முயற்சி வெற்றிங்கறது ,அவர் சோதனைக்கு உட்பட்ட  தீவிரவாதிகள தொடர்ந்து கண்காணிச்ச நம்ம ராணுவம்   உறுதிபடுத்திருக்கு. அவரோட மருந்துதான் இப்போ நமக்கு கை கொடுக்க போகுது. '

 பேசி கொண்டே போன அவரை ,பாக்கெட்டில்  ஈங்காரமிட்ட செல்போன் தடுத்தது
---------------------------------------

ஜூன்  23 , 1976:

'ஓகே ப்ரித்வி .உங்கள் திட்டத்திற்கு அரைமனதுடன் சம்மதிக்கிறேன்.மருந்த கொடுக்க வேண்டிய ஆள் பேர் என்ன ?

'இந்திய ராணுவத்தில் வேலை பார்க்கும் டிரைவர். 1965இல் நடந்த இந்திய பாகிஸ்தான்  போரில்  
ஒரு  ட்ரக்கில் எறியப்பட்ட குண்டுவீச்சில், உயிர் தப்பிய ஒரே வீரன்.  
பேர் - கிஷன் பாபுராவ் .'

அரை மணி நேரம். ஒரு மயக்க நிலையில் அந்த ராணுவ வீரனை கொண்டு வந்து படுக்க வைத்தார்கள்.

டாக்டர் மோத்தா , மருந்து கலக்கப்பட்ட ஊசியை எடுத்தார்.

----------------------------------------

ஆகஸ்ட்  18 ,2011:

'ஹலோ.மினிஸ்டர் பி.ஏ ?'

'சொல்லுங்க ஜெனரல். உங்க போன்காலுக்காகதான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். '

'போன காரியம் சக்சஸ்.
அனுப்புன ஆள் வெற்றிகரமா வேலையை முடிச்சிட்டு திரும்பிட்டார்.. '

'கிரேட்.உங்க திட்டம் அபாரம். நான் அப்புறம் கூப்பிடறேன்.'
போனை அணைத்து விட்டு சிரித்தார்.

பிறகு சொன்னார் - 'இப்போ ஆள தைரியமா வெளிய விடலாம் சார்.அமைதியா அவர் வீட்டுக்கு மட்டும் போவார்'

-----------------------------------------

ஜூன்  23 , 1976:

'உண்மையாதான் சொல்றீங்களா மோத்தா..'

'ஆமா..
நான் என் பரிசோதனை தோல்வின்னு சொல்லிட போறேன். இது சம்பந்தமான எல்லா  தகவல்களையும் அழிச்சிட போறேன்.
திவிரவாதிகள மனமாற்றம் செய்யணும்னு நான் கண்டுபிடிச்ச மருந்தை,இந்த மாதிரி நல்லவங்கள  ஓரங்கட்ட உபயோகபடுத்துவாங்கனு எனக்கு இப்போதான் தெரியுது.'

'அப்போ இந்த வீரன் நல்லவனா?'

'ஆமா. இன்னும் 35 வருஷம் கழிச்சு நாட்டுல ஊழலுக்கு எதிரா ஒரு மாபெரும்  புரட்சி ஏற்படுத்த போற ஒரு போராளி. அவரோட தேச உணர்வை அழிச்சு , சுயநலத்தை புகுத்திட்டா , அவர்  
அமைதியாயிடுவார்ன்னு நம்பித்தான் இப்போ டைம் மெசின் மூலமா இங்க வந்திருக்காங்க. தற்போது ப்ரித்வி வந்த வருங்காலத்தில் 
இதே நேரத்தில் , இவர் சிறையில் இருக்கிறார். அவர் வெளிவரும்போது மனம் மாறியிருக்க வேண்டும் என்பதே இவர்கள் எண்ணம். ஆனா அவங்களுக்கு ஒரு உண்மை தெரியாது'

'என்ன டாக்டர் அது?'

'நான் அவருக்கு
அந்த மருந்தை செலுத்தவே இல்ல .செலுத்தியிருந்தாலும் பெரிய மாற்றம் ஏற்படாதுன்னு  நெனைக்கிறேன்.'

'ஏன் அப்படி?'

'அவரோட மிலிட்டரி ரெகார்ட் புரட்டி பாத்தேன்.  ஆள் இது வரைக்கும் கல்யாணமே செஞ்சுக்கல.அந்த குண்டுவீச்சில உயிர் பிழைச்ச பின்னாடி ,மறுபடியும் ஒரு விபத்துல இருந்து தப்பிச்சிருக்கார். அதன் பின்னாடி சமூக சிந்தனையோடவே  வாழ்ந்திட்டிருக்கார்.
எதுவுமே தனக்குன்னு இல்லாதவன்கிட்ட  என்ன சுயநலத்த விதைக்க  முடியும்?  '

'அப்போ அவர் மனம் மாறிட்டார்-ன்னு நெனச்சுட்டு போனவங்களோட கதி ?'

கவ்ரவ் கேள்விக்கு மோத்தா ஒரு விஷம சிரிப்பு சிரித்தார்.

-------------------------------------------------------

ஆகஸ்ட்  18 ,2011:

டெல்லி மைதானம்:

'இந்தியாவுக்கு இரண்டாம் சுதந்திர போருக்கான நேரம் வந்து விட்டது.நான் இல்லாவிட்டாலும் இளைஞர்களே  , விட்டு விடாதீர்கள்..' 
- மக்களின் மிகுந்த ஆரவாரத்திற்கு இடையே துடிப்பான பேச்சைத் தொடங்கினார்  அன்னா ஹசாரே என்றழைக்கப்படும் கிஷன் பாபுராவ். 

---------------------------------------------------------

Tuesday, August 16, 2011

பாப்கார்ன் பாக்கெட் - 20110816



சரிந்து விழும் சீட்டுக்கட்டுகள் போல விக்கெட்டுகளை கொடுத்து தோல்வியை தழுவி வரும் இந்திய அணியை என்ன சொல்வது?
ஒன்டே சாம்பியன். டெஸ்ட் தரவரிசையில் முதலிடம். அனுபவம் வாய்ந்த வீரர்கள்.

இப்படி பல பெருமை பெற்றுள்ள இந்திய அணிக்கு இது ஒரு கருப்பு தொடர்தான்.தோற்பது கேவலம் அல்ல. ஆனால் சரணடைவது மிக கேவலம்.

தோனியை கேப்டன் பதவியிலிருந்து விலக்க வேண்டும் என்று சொல்பவர்கள் ,கடந்த முறை அவர் மட்டுமே நின்று கௌரவமாக 77 & 74 ரன்கள் எடுத்ததை நினைத்து பார்க்க வேண்டும். மற்றவர்கள் எடுத்தது மிக சொற்ப ரன்கள். 

ஆக நமக்கு தேவை வேறொரு கேப்டன் அல்ல.. மீண்டும் கேரி கிர்ஸ்டன் போன்ற பயிற்சியாளர்.
இந்தியா மிக மிக  திணறுவதை பார்த்தால் முதலிடத்திற்கு தற்போது இவர்கள் தகுதி இல்லை என்பதும் , இங்கிலாந்து வேகமும் ஒட்டுமொத்த டீமின் தற்போதைய பார்மையும் 
பார்த்தால் ,அந்த இடத்திற்கு இவர்கள் தகுதியுடையவர்கள்
என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை..அவர்களை பாராட்டவும் நமக்கு மனது  வேண்டும்..
வாழ்த்துக்கள்..


ஆனால் இதில் ரவி சாஸ்திரியின் பரபரப்பான பேச்சு சர்ச்சைக்குரியதாக  மாறியுள்ளது. 'England are not the Bloody Number One' என்று இந்தியாவுக்கு வக்காலத்து வாங்கிய அந்த மனுசனுக்காகவாவது கொஞ்சம் நம் ஆட்கள் முயன்றிருக்கலாம்.    

வெற்றி தலைக்கு  ஏறியதும் ,
வீரர்களின் திறமையான ஆட்டம் ,  ஆட்டம் காண்பது இந்திய அணிக்கு உண்டான காலகாலமான சாபம்.
--------------------------------------------

ஒரு விஞ்ஞானி.மனித சக்தியை தாண்டிய ஒன்றை கண்டுபிடிக்கிறார். அதை பரிசோதிக்க, ஒன்றின் மேல் செலுத்த , அது மிகுந்த புத்திசாலியாய் மாறி உலகத்தை எதிர்க்கிறது..இறுதியில் அதை செயலிழக்க வைக்க வேண்டிய கட்டாயம் விஞ்ஞானிக்கு.. எந்திரன் படம் அல்ல இது.. 'Rise of Planet of the Apes'

அதே பழைய கதை என்றாலும் சொல்லிய விதமும் அரைத்த மாவுதான் என்றாலும், இந்த படத்தில் ஒரு முக்கிய அம்சம் 'அனிமட்ரிக்ஸ்' முறையில் உருவாக்கிய குரங்கின் நடிப்புதான்..

சோகம்,குதூகலம்,சந்தோசம்,வெறுப்பு,விரக்தி,வஞ்சம்,பெருமை என்ற  எல்லா உணர்வுகளையும் அருமையாக முகத்தில் கொண்டு வந்து நிறுத்துகிறது.
இனி எல்லா ஹீரோக்களும் கொஞ்சம் பணிந்துதான் போக வேண்டும். சம்பளமும் , கட்டுபாடுகளும் அதிகம் விதித்தால்,' போடா நீயும், உன் மார்கெட்டும்' என்று இதே போல செயற்கையாக ஹீரோவை உருவாக்கி படத்தை வெற்றிபெற வைத்து விடுவார்கள். நல்ல வரவேற்கத்தகுந்த முன்னேற்றம்..



கார்ட்டூன் பாத்திரங்கள் போல , இந்த முறையில் சில பாத்திரங்களை உருவாக்கினால் , அதற்கு கட்டாயம் நல்ல வரவேற்பு இருக்கும்.
நடிகர்களே  இல்லாமல் வெகு சுலபமாக எந்த மாதிரியான படமும்  தயாரிக்கப்படும்.

ஹ்ம்ம் சுஜாதா சொன்னது நடந்துகொண்டே வருகிறது.. திரையுலகை  பொறுத்த வரை கமலும் ,சுஜாதாவும் தீர்க்கதரிசிகள்தான் என்பது இன்னொரு  முறை நிரூபணம்  ஆகியிருக்கிறது.. 

----------------------------------------------

அண்மையில் கேள்விப்பட்ட செய்தி அதிர்ச்சியை தந்தது..
குவைத்தில் நான்கு இந்தியர்களை , ஒருவர்  சுட்டு கொன்ற நிகழ்வு அது.. அதற்கு அவர் சொன்ன காரணம் - ' நோன்பு முடிவதற்கு பத்து நிமிடம் முன்பு உணவு அருந்தியவர்களை தண்டிக்கவே சுட்டேன் ' என்பதுதான்.

அரசு தரப்பில் , சுட்டவர் , அந்நாட்டு உள்துறை இலாகாவில் பணிபுரிவதாகவும் தற்போது மனநிலை பாதிக்கப்பட்டு விடுப்பில் இருப்பதாகவும் மட்டுமே தகவல் தெரிவிக்கப்பட்டது.

அந்த நான்கு இந்தியர்கள் யார்? இதன் பின்னணி என்ன? என்ற எந்த விபரமும் தெரிவிக்கப்படவில்லை. அதே நேரம் இந்த தகவல் வேறு எங்காவது பரவியிருக்கிறதா என்றும் தெரியவில்லை.இந்த விஷயத்தில் இந்திய  அரசின் செயல்பாடு என்ன - ஹுஹும்..தெரியவில்லை.

நயன்தாரா - பிரபுதேவா திருமணம் எங்கு நடைபெறும் என்பதிலும் , அபிதாப் படம்  பஞ்சாபில் தடை செய்யபட்டதை பற்றியும் அலசி ஆராயும்  இந்திய ஊடகங்கள் ,இந்திய உயிர்கள் சம்பந்தப்பட்ட இந்த முக்கிய நிகழ்வை கண்டுகொள்ளாத காரணம் இன்னும் விளங்கவில்லை.

நமக்கு எதாவது ஒன்று என்றால் நம் அரசு கவனித்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை பொய்த்து போனால்  பிறகு எந்த தைரியத்தில் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்வது?  
--------------------------------------------

மீண்டும் ஜனாதிபதி ஆகும் ஆசை இல்லை என்று சொல்லியிருக்கிறார் பிரதீபா பாட்டில். மிக்க மகிழ்ச்சி.

ஒருவர் மிக புகழுடன் அரசாண்டால் பின்னால் வருபவர் எவ்வளவு திறமையாக அரசாண்டாலும் பேர் கிடைக்காது. பாபருக்கு பிறகு ஹுமாயுனுக்கும் ,அக்பருக்கு பிறகு ஜகாங்கீருக்கும் இப்படிதான் ஆனது. ராஜராஜ சோழனுக்கு பிறகு ராஜேந்திர சோழன் தன பெயரை காப்பாற்றி கொள்ள பெரும் பாடுபட்டு புகழடைந்தார்.

இந்தியாவை பொறுத்தவரை அப்துல் கலாம்  மட்டுமே ஜனாதிபதி பதவியை வெறும் ரப்பர் ஸ்டாம்பாக பயன்படுத்தாமல் துடிப்பாக தன்னால் இயன்ற வரை எல்லா இடங்களிலும் சென்று தன் பேச்சினாலும் , செயலாலும் பேர் வாங்கினார். குறிப்பாக மாணவர்கள் பல பேருக்கு தன்னம்பிக்கையை விதைத்தவர்.



ஆனால் ,கலாம் விட்டு சென்ற இடத்தை ,பலத்த எதிர்பார்ப்புக்கு இடையில் எடுத்துகொண்டாலும் , இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெயரை தவிர வேறு எதுவும் செய்யவில்லை திருமதி  பாட்டில்.

பாஜக செய்த மிக சில நல்ல காரியங்களில் , கலாமை ஜனாதிபதி ஆக்கியது முதன்மையானது. இனி யார் வருவார்களோ தெரியாது..
யாரை இருந்தாலும் கலாம் கலாம்தான்...
--------------------------------------------

சுதந்திர தின வாழ்த்துக்கள்.. 


-----------------------------------------
லகான் திரைப்படத்தில் , ரஹ்மானின் இசையில் , ஆஷா போஷ்லே , உதித் நாராயண்  வசீகர குரலில் எழுந்த இந்த கிளாசிக் பாடல் நான் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல்..

மொழி தெரியாவிட்டாலும் இந்த பாடல் ஏற்படுத்திய தாக்கத்தை இன்னும் வேறு எந்த ஹிந்தி பாடலும் எனக்கு ஏற்படுத்தவில்லை. பாடல் நடனமும் மிக அற்புதம்.. அமீர் கான் இந்த பாடலில் மிக இளமையாக அழகாக தெரிந்தாலும், அவரை மிக எளிதாக ஓவர்டேக் செய்து விடுகிறார்  கிரேசி சிங்.நம் ஊர் ஷோபனா  மாதிரி அற்புதமான கிளாசிக் டான்சர். 

கூடவே இந்த பாடலில் அவரின் முக பாவனைகளும் , சடசடவென 
மனதிலுள்ள உணர்ச்சிகளை கோபமும்,காதலும் கலந்த வேகத்தில்
ஆடும் நடனமும் இந்திய நடனதிறமையின் உச்சகட்டம்.



இசையமைப்பாளர் , பாடகர்கள், நடிகர்கள் எல்லாருமே உச்சகட்ட  திறமையை வெளிக்காட்டினால்  ஒரு பாடல் எப்படி சாகாவரம் பெறும் என்பதற்கு இந்த பாடல் ஒரு சிறந்த உதாரணம்..

Friday, August 12, 2011

ஆதங்கம்

'கோழைத்தனம் என்பது என்ன தெரியுமா?

எதிரியிடம் காட்ட வேண்டிய வீரத்தை , கையில் சிக்கும் அவர்கள் இன அப்பாவிகளிடம் காட்டி வீரம் பேசுவதுதான். '

இந்த கருத்தை , போர் சமயம் விடுதலைபுலிகள் சிக்காத கோபத்தில் , இலங்கையில் இருந்த தமிழர்களிடம் கொடூரம் காட்டியபோது சிங்களத்திற்கு உலக  பெரியவர்கள் சொன்னது. 

இப்போது இதை நாமும் நினைத்து பார்க்க வேண்டிய கட்டாயம் நேர்ந்து விட்டது.

இலங்கையில் இருந்து தமிழகம் வந்த சிங்களவர்களை (சிங்கள - புத்த மத பக்தர்களை  )ஆடைகளை களைய சொல்லி ,'நாம் தமிழர்' இயக்க தொண்டர்கள் (?!!?)  செய்த செயல் ஒட்டுமொத தமிழகத்தையும்  தலைகுனிய வைத்திருக்கிறது.
காரணம் - மிக அல்பம் - அவர்கள் அணிந்திருந்த சட்டையில் சிங்கள எழுத்து பொறிக்கப்பட்டிருந்ததாம்.

புத்தகயாவுக்கு வரும் பக்தர்கள் பாதுகாப்பை அதிகபடுத்துமாறு மனுக்கள் மதிய அரசுக்கு குவிகின்றன..

எந்த கொள்கையிலும் தெளிவில்லாமல் , வெறும் உணர்ச்சிவசப்பட்ட பேச்சுக்கு ஆட்பட்ட கூட்டம் இப்படிதான் செய்யும்..

என்ன முட்டாள்தனம் இது? எத்தனையோ புகழ்களையும்  சிறப்புகளையும்  காலப்போக்கில்  இழந்திருக்கும் தமிழகம் , பாதுகாப்பான மாநிலம் என்பதை மட்டும் எக்காலத்திலும்  விட்டு கொடுத்ததில்லை. இப்போது அந்த பெயருக்கும் களங்கம் ஏற்பட்டிருக்கிறது.



இத்தனை இனபிரச்சனை இருந்தாலும் , சின்ன பயமும் இன்றி தமிழகத்துக்கு வந்த பக்தர்கள் இதுவரை நினைத்தது - 'தமிழர்கள் எந்நாளும் தவறாக நடக்க மாட்டார்கள்  ' என்ற நம்பிக்கை சிந்தனையே.அந்த நம்பிக்கையில்தான் நாம் உயர்ந்து நிற்கிறோம்.சிங்களவர்களிடமிருந்து வேறுபடுகிறோம் .மாற்றாரும் போற்றும் அந்த நடத்தை நம்மிடம் இருந்ததை உலகமும் கண்டுகொண்டிருந்தது.  இப்போது அதிலும் மண்.

இனி ராஜபக்ஷேவை பார்த்து நாம் எதாவது கேள்வி கேட்டால் , 'நீங்கள்  மட்டும் யோக்கியமா ? ' என்று எதிர் கேள்வி கட்டாயம் வரும்.
இது நாள் வரை நாம் இலங்கை விஷயத்தில் உரக்க குரல் கொடுக்கும்போது ,நம்மிடம் பக்கபலமாக  இருந்த ஒன்றே ஒன்று , வன்முறையை கையாளாமல் நாகரீகமாக நாம் காட்டிய எதிர்ப்பு.

இப்போது அவர்களுக்கும் நமக்கும் பெரிய வித்தியாசம்  இல்லை என்பதை காட்டி விட்டோம்.

இங்கே நாம் ஏற்படுத்தும் ஒவ்வொரு முட்டாள்தனமான வன்முறையும் , அங்கே நம் சகோதரர்களுக்கு அடி உதையாக திருப்பி கிடைக்கும்.இலங்கையில் ஏதோ ஒரு சிங்களவர் , அருகில் இருக்கும் தமிழரிடம் இது வரை நட்பு பாராட்டி வந்திருந்தாலும்  ,அதற்கும் இப்போது விரிசல் ஏற்படுத்தி விட்டது இந்த நிகழ்வு.

தமிழக மீனவர்கள் விஷயத்தில் கொஞ்சம் அடக்கி வாசிக்க தொடங்கியிருக்கும் சிங்கள படை இனி இதே போல் பழி வாங்க ஆரம்பித்தால்..?



அவர்கள் வன்முறை செய்கிறார்கள் என்று நாமும் செய்ய கூடாது என்பதற்கு ஒரே காரணம் உண்டு. அங்கு காந்தி என்ற மகான் பிறக்கவில்லை.

தவறான கொள்கையை கொண்டாடி சீரழிந்து போன நிலைக்கு எடுத்துகாட்டு ஏராளம் உலகில் உண்டு.
இங்கு வேண்டாமே..

 நாம் எப்போதும் போல காந்தி வாரிசாகவே இருப்போம். 

---------------------------------------------------------------------

சென்ற வாரம் நடந்தது இது.

'அம்மாவின் செல்லப்பிள்ளை ஓ.பன்னீர் செல்வம். அவர் கேட்டால் எல்லாம் நடக்கிறது' என்று சட்டசபையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் லாசர் கூறியதற்கு பன்னீர் செல்வம் 'நான் மட்டுமல்ல, தமிழகத்தில் அதிமுகவில் உள்ள ஒரு கோடி பேரும் முதல்வருக்கு செல்லப்பிள்ளைகள் தான்' என்று பதில் சொல்லியிருக்கிறார்.

இடையில் அம்மா குறிக்கிட்டு 'ஒரு கோடி அதிமுகவினர் அல்ல, ஒன்றரை கோடி அதிமுகவினர்' என்று திருத்திய சம்பவம் சட்டசபையில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சந்தோசம் அம்மா.

ஒரே கேள்வி - ' நூறு நாளா எதை படிக்கிறதுன்னு தெரியாம தவிச்ச லட்சக்கணக்கான      
 மாணவர்கள் உங்கள் செல்ல பிள்ளைகள் கிடையாதா?'



உச்ச நீதிமன்றம் தீர்பளித்து வேறு வழியில்லாமல் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும் தமிழக அரசிடம் , இது வரை ஏன் அதை நிறுத்தி வைத்தோம் ? என்ற கேள்விக்கு தக்க பதில் இல்லை..

இனி இந்த வருடம் மீதி ஆறு மாதம் மாணவர்களுக்கு புது சவால். மிக குறுகிய காலக்கெடுவில் , பாடங்களை படித்து தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

பெரும்பாலும் சனி ஞாயிறு பள்ளி இருக்கும். சொல்லித்தரும் ஆசிரியர்களுக்கும் 'பாடங்களை முடிக்க வேண்டுமே' என்ற பரபரப்பில் முழுதாக பாடத்தை ,அதன் கருத்தை உணர வைக்க சிரமப்படபோவது இயற்கை.

தொடர்ச்சியான வகுப்புகளால் மாணவர்களும் ,பெற்றோரும்,ஆசிரியர்களும் களைத்து போவார்கள்.

அதிலும் குறிப்பாக சுமாராக படிக்கும் மாணவர்கள் நிலை பரிதாபம். எதையும் உடனே புரிந்து கொள்ளும் கற்பூர புத்தியுள்ள மாணவனுக்கே இம்முறை சவால் என்றால், புரிந்து கொள்ள நேரம் எடுத்து கஷ்டப்பட்டு விஷயத்தை , பாடத்தை கிரகிக்கும் ஆவரேஜ் மாணவர்கள் இம்முறை மிக கடின உழைப்பை கொடுக்க வேண்டும்.



மாணவர்களுக்கு இப்போது தேவை ஆசிரியர்கள் , பெற்றோர்களிடம் இருந்து கிடைக்க வேண்டிய உதவி-ஆதரவும் , தன்னம்பிக்கையும் , கடின உழைப்பும் , சலிப்படையாத கவனமுமே..

இதுபோல இனி நடக்காது என்று நம்புவோம். நடக்க விட கூடாது என்று இம்முறை போல் ஒற்றுமையாய் கைகோர்த்து எண்ணுவோம்.

Monday, August 8, 2011

நண்பர்கள் என்னும் தொல்லைகள்..

'உன் சேர்க்கை சரியில்ல.. பிரெண்ட் பிரெண்ட்-ன்னு சுத்தறது நிறுத்து ..அப்போதான் உருப்படுவ..' - அப்பா

'நீ நல்ல பையன்தாண்டா.. அவன் சரியில்லையே..சரியான உதவாக்கரை ஆச்சே.. ' - என் அம்மா

'நீ நல்ல பையன்தாண்டா.. அவன் சரியில்லையே..சரியான உதவாக்கரை ஆச்சே.. ' - அவன் அம்மா

'இப்படி படிக்காம காலேஜுல உங்கள மாதிரி குரூப் சேர்ந்து சுத்துனவங்க  எல்லாம் வெளிய எவ்ளோ கஷ்டபடுறாங்க தெரியுமா..?' - வாத்தியார்

இதையெல்லாம் தாண்டி ,காப்பாற்றி வந்த  நட்பு எந்நாளும் நம்மை தலை குனிய வைக்காது.. மாறாக நம்மை பலப்படுத்தும்;துணை நிற்கும்.உயிர் காக்கும்..




பெரும்பாலும் பள்ளிபடிப்பு ஆரம்பிக்கும்போதே , இதுவும் ஆரம்பமாகும்.. இதற்கு எந்த நியதியும் தகுதியும் கிடையாது. காலங்கள் செல்ல செல்ல , பல சண்டைகள்,மனஸ்தாபங்கள் ,
பிரிவுகள், எல்லாம் தாண்டி பலப்பட்டு அந்திம காலம் வரை கூட வரும் - நட்பு..

'நீ இதை கொடு;நான் இதை தருகிறேன்' என்ற சொந்தபந்தங்களுக்கான அடிப்படை பரிவர்த்தனை தேவை ஏதும் இல்லாமல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும்   நட்பு.

நட்புகளில் பல இன்னல்கள் வரும்.ஆனால் அதன் சிறப்பு , விளைவுகள் சிறிதோ பெரிதோ , நட்பு தயக்கம் ஏதுமின்றி தொடரும்.

-------------------------------------
'பேசாம இருடா .. மாட்டிக்குவோம்..மிஸ் நம்மளயே பாக்கறாங்க..'

'பயப்படாதடா.. சரி சொல்லு .. இன்னைக்கு முதல் பஸ்ல போக வேண்டாம் .. கிரௌன்ட்ல  கொஞ்ச நேரம் விளையாண்டுட்டு ,அப்புறம்..'

'என்னப்பா அங்க ரெண்டு பேருக்கும் எப்போ பாத்தாலும் .. கொஞ்சம் என்கிட்டயும் சொல்லுங்க..'

'தொலஞ்சுது...சொன்னேன் கேட்டியா.. நீயே சொல்லுடா..'

' மிஸ்..அது..இவன் எதோ கிளாஸ் முடிஞ்சதும் விளையாடலாம்னு சொல்லிட்டு இருந்தான் மிஸ் '

'அட பாவி.. கதைய மாத்திட்டியேடா..'

'நீயும் படிக்க மாட்ட.. அடுத்தவனையும் படிக்க விட மாட்ட.. வெளிய போய் நிக்கறியா..'

'இனி உன் கூட சத்தியமா பேச மாட்டேன்டா '

--------------------------------------------------------------

 'என்னடா என்ன  ஆச்சு ? '

' மூணு  பேப்பர் போயிடுச்சுடா..'

'ஆண்டவா..காப்பாத்திட்ட... சூப்பர்டா.. நீ மட்டும் பாஸ் ஆகியிருந்தா நான் அடுத்த தடவை தனியா  அரியர்ஸ் எழுதணும்...'

'இனி உன் கூட சத்தியமா பேச மாட்டேன்டா '

-----------------------------------------------------

'என்ன ஏன்டா திட்டறா..அவ உனக்கு சரியான  பொண்ணே இல்லடா..அதான் வெட்டி விட்டேன்.'

'அந்த ஜூனியர் பொண்ணு விஷயத்துலயும் இதையேதாண்டா சொன்ன'

'என்னடா பண்றது.. அவளும் உனக்கு சரியான பொண்ணு இல்லடா.. அதான் வெட்டி விட்டேன்'

'டேய்..அதை நான் முடிவு பண்ணும்டா..உனக்கு ஏன்டா?.. '

'எனக்கு என்னவா ? யாரு மீதி ரெண்டு வருஷம் தனியா சைட் அடிப்பா? என்னால முடியாதுப்பா..'

'டேய்.இனி உன் கூட சத்தியமா பேச மாட்டேன்டா'
----------------------------------------------------------

'மச்சான் ..மொதல் ரவுண்ட் க்ளியர் பண்ணிட்டேன்டா..
இனி க்ரூப் டிஸ்கசன் மட்டும் ஒழுங்கா பண்ணனும்..'

'பண்ணிக்கோ..எங்கள இப்போவே போ-ன்னு சொல்லிட்டாங்க..உனக்கு சாயந்தரம்  சொல்லுவாங்க'

'டேய்..உனக்கு வாய்ல நல்ல வார்த்தையே வராதாடா.. சரி அரை மணி நேரம் இருக்கு.. அந்த புக்க கொடு '

'அத நான் அப்பவே பிரசாத்கிட்ட கொடுத்து அனுப்பிட்டேன்..யாரு கைலயே வெச்சிருப்பா..சீக்கிரம் வாடா.. பீச்சுக்கு போவலாம்..'

'ஏன்டா உனக்கு இந்த புத்தி..இனி உன் கூட சத்தியமா பேச மாட்டேன்டா' 

---------------------------------------------------------

என்னதான் இம்சையான நண்பனாக இருந்தாலும் , என்ன சண்டை வந்தாலும் அது கண நேரத்தில் காணாமல் போய் விடும்..

நட்பின் சக்திக்கு   முன் , எதிர் வரும் கஷ்டத்திற்கு மட்டுமல்ல ,இடையில் வரும்  கோபத்திற்கும் ஆயுள் இல்லை..

தப்பு செய்திருந்தால், தாய் அடித்தால் கூட சீறும் நம் சுய கவுரவம் , நண்பனின் உரிமையான 'பளார்' முன் உள்ளே பதுங்கி  விடுகிறது..

யோசித்து பாருங்கள்..
கம்யூனிசம் என்பது கண்டிப்பாக நட்பில் மட்டுமே காண முடியும்..எந்த பேதமும் இல்லாமல் நெருங்கிய உறவு தருவது நட்பில் மட்டும்தான்.

ஆணோ பெண்ணோ , நட்பு என்று வரும்போது அங்கே இன பேதங்கள் தளர்ந்து போய் , இங்கிதமும்,செருக்கும் தாண்டிய புனித உறவுக்கு இதயங்கள் ஆட்கொள்ளபடுகிறன..



பள்ளியில் ,ரத்தம் வர சண்டை போட்ட நண்பனுடன் அடுத்த நாளே சிறிது பேசிய  நாட்கள்.. வஞ்சம் என்பது உறவுகளுக்கு நடுவில்தான்.. நட்பில் இல்லை..

அக்கா கல்யாணத்தில் கூட்டமாக வந்து எல்லா வேலையும் செய்த நண்பர்கள்..எல்லாம் முடிந்த பின், கடைசியாக இருப்பதை கௌரவம் பாக்காமல் சாப்பிட்டு செல்லும் அந்த பாசம்..

எல்லா நண்பர்களும் ஒரே வீட்டில் சேர்ந்து இருக்கும்போது , ஒருத்தனுக்கு மட்டும் காரம் ஆகாது என்பதற்காக , எல்லாரும் தங்கள் சுவையை தியாகம் செய்த அந்த கரிசனம்...

நண்பனுக்கு கல்யாணம் என்றால் , எத்தனையோ திட்டு வாங்கியும் , விடுப்பு எடுத்து சென்னையோ , பெங்களூரோ , எங்கிருந்தோ பஸ்ஸில் கூட்டத்தில் கால் கடுக்க பத்து மணி நேரம் நின்று வந்து , வாழ்த்தும் அந்த அன்பு..

அம்மாவோ அப்பாவோ உடல்நலம் இல்லாமல் மருத்துவமனையில் இருக்கும்போது , கேட்காமலேயே வந்து உதவி செய்து தோளில் சாய வைத்து ஆறுதல் படுத்தும் நேசம்...

இதுதான் சார் நட்பு...

குறைவாக சொல்லவில்லை..பெரும்பாலும் தகுதி பார்த்து வருவது காதலும் கல்யாணமும்..இது நிதர்சனம்..

இவன் இப்படி ஒரு நல்ல நிலைக்கு வருவான் என்று எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உயிரை கொடுப்பது , பெற்றோருக்கு அடுத்து நண்பர்கள்தான்..

அதில் இணக்கங்கள் எவ்வளவு இருக்குமோ அதே அளவு பிணக்கங்களும் இருக்கும்..ஆனால் இறுதியில் ஜெயிப்பது நட்புதான்... எல்லா மனகசப்பும் அடுத்த முறை பார்க்கும்போது  சொல்லும் 'எப்படிடா இருக்க?'வில் செத்து போகும்..

பிரிந்த காதலை கூட மறந்து விடுகிறோம்.. ஏதோ ஒரு காரணத்துக்காக பிரிந்த நண்பனை நினைத்தால் அழுகிறோம்..உங்கள் அந்த நட்பு உண்மை என்றால் ,கண்டிப்பாக 'எதற்கு பிரிந்தோம்?' என்ற  காரணம் மறந்திருக்கும்.. நட்பு மட்டும் ஞாபகம் இருக்கும்..

இது வரை நாம் மறந்த நண்பர்களுக்கும் , நம்மை மறந்த நண்பர்களுக்கும்  , 'நண்பர்கள் தின வாழ்த்துக்கள்' சொல்லி நட்பை உயிர்ப்பிப்போம்.




நண்பர்கள் தொல்லைதான் சார்..

ஆனால் அந்த தொல்லை எந்த எல்லை வரை போகிறதோ , அது வரை நம் நட்பின் ஆழம் இருக்கிறது என்பது திண்ணம்..

வாழ்த்துக்கள் சொல்லி நண்பனை மூன்றாம் மனிதனாக்க  வேண்டாம். இன்றைக்கும் எப்போதும் போல அழகாக இம்சைப்படுத்துங்கள்..

நட்பின் வாழ்த்தும் அரவணைப்பும் உங்களுக்கு என்றென்றும் இருக்கும்.

WORSHIP THE FRIENDSHIP.....

Friday, August 5, 2011

பாப்கார்ன் பாக்கெட்- 20110805


ஒரு கட்சி மத்த கட்சியோட கூட்டணி அமைக்கிறது ஒன்னும் தப்பு இல்லை.. ஆனா ஒவ்வொரு தடவையும் கூட்டணி கட்சிய மாத்துறது , ஏதோ அவங்க கட்சி கொள்கை புத்தகத்துல ஆறாம் பக்கத்தில மூணாவது முக்கிய கட்டாய கொள்கை மாதிரி  செய்யிறது இந்த ஒரு கட்சியாத்தான் இருக்கும்.

கூட்டணி விபரம் :
1998-இல் அதிமுக ;  1999-இல்  திமுக ;
 2001-இல் அதிமுக ; 2004-இல் திமுக ;
2009-இல் அதிமுக ;2011-இல்  திமுக



இப்படி கட்சி ஆரம்பிச்சு இருபத்தி இரண்டு வருசமா அரசியல் நடத்திட்டு , இப்போ 'திராவிட இயக்கங்கள் ஏமாற்றுபவை ; இனி மேல எந்த தேர்தல் வந்தாலும் தனியாத்தான் போரிடுவோம்'-னு சொல்றது...ஹ்ஹிஹி வடிவேலு சொல்ற மாதிரி சின்னபுள்ளத்தனமால  இருக்கு..  

இந்த முடிவுக்கு சந்தோசப்படவும் இல்லை; வருத்தப்படவும் இல்லை-னு சொல்லியிருக்கிறார் கலைஞர். எப்பவும் போல அம்மா இதையெல்லாம் மதிக்கவே இல்ல.

' கற்றது தமிழ் ' அஞ்சலி மாதிரி எங்கள கேக்க வெச்சுடீங்களே டாக்டர்..

'நெஜமாத்தான் சொல்றீங்களா?'
--------------------------------------------------------

'வாகை சூட வா'  பாடல்கள் ஒரு புதிய முயற்சி. பீரியட் படம் என்பதால் படத்தில் வேலை செய்யும் எல்லாருக்கும் சவால்.ஆனாலும் கூடுதல் சவால் இசையமைப்பாளருக்குதான்.

பொக்கிஷம் தோற்றிருந்தாலும் பாடல்கள் மக்கள் மனதை    
தொட்டிருந்தன. பின்னர் வந்த மதராசபட்டிணம் இசை அலை இப்போதும் யாரையும் விடவில்லை. இன்னும் என் அலாரம் டோன் - 'தானதீம்தகிட' தான்.
இந்த நிலையில் இன்னொரு பீரியட் படம் என்றதும் முந்தைய படங்களின் எந்த சாயலும் இருக்க கூடாது என்ற பெரிய கட்டுக்குள் மொத்த படமும் மாட்டியிருக்கிறது. 
ஆனால் அதை இசை விசயத்தில் அற்புதமாக உடைத்திருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் கிப்ரான்.



எந்த மாதிரியும் இல்லாத புது மாதிரியாக , எந்த ஒரு பழைய படங்களையும் நினைவுபடுத்தாத ,மனதை பழைய கிராமத்து வீதிகளில் உலவ விட்டிருக்கிறார்.இசை  வாத்தியங்களும் பழைய கருவிகளின் இசைகளையே இதமாக   வீசுகிறன.

ஒரு பாடலுக்கு சிம்போனி உதவி  கொண்டும் உருவாகியிருக்கிறார். 
களவாணி இயக்குனரும், நாயகனும் இனி அவர்கள் திறமையை மீண்டும் காட்டுவார்கள் என்று நம்பலாம். அதுவும் பீரியட் கிராமத்து படமான  சுப்ரமணியபுரம் போல் அதே சக காலத்தில் நடக்கும் கதையை எடுக்க துணிந்துள்ள சற்குணத்திற்கு பாராட்டுக்கள்.

இனிய பாடல்கள் மண்வாசனையும், வறண்ட பூமியின் சுழல்காற்று வாசமும்  கலந்து   மயக்குகின்றன..கிப்ரானை இரு கை தட்டி வரவேற்கலாம்.
-------------------------------------------------

மூன்று மாத ஆட்சியில் , பழைய அமைச்சர்களையும் திமுக  முக்கிய புள்ளிகளையும் கைது செய்வதில் அரசு இயந்திரம் வெகு  மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

இந்த காட்சிகள் தமிழக மக்களுக்கு ஒன்றும் புதிதல்ல.. ஆனால்  தங்கள் குறைகள் எதுவும் மாறாமல் அப்படியே இருக்கிறதே என்ற ஆதங்கம் வளர்ந்து வருவது உண்மை.
குறிப்பாக மின்வெட்டு . முதல்வர் டெல்லி சென்று வந்த பின்னும் எந்த அறிவிப்பும் தற்போது வரை இல்லை.

கணிசமான எம்எல்ஏக்களை பெற்ற  தேமுதிகவும்  என்ன  செய்கிறது என்று தெரிய வில்லை. வெற்றியை கொண்டாட  வேண்டியதுதான். ஆனால் அந்த நேரத்தில் , தேர்தல்  வாக்குறுதிகளை மறக்காமல் இருக்க வேண்டும்.

ஏதோ தோணியது.சொன்னேன். ஏதாவது முன்னேற்றம் 
ஏற்பட்டிருப்பதாக   நீங்கள் கருதினால்  பின்னூட்டத்தில் பட்டியலிடலாம்.அவசரப்படாதீங்க... உடனே எப்படி நடக்கும் என்று சொன்னாலும் சரி, இன்னும் ஒரு மூன்று மாதம் கழித்து ஏதாவது நடக்கிறதா என்று பார்ப்போம். ஏதாவது நடக்கும் என்று காத்திருப்பது ஒன்றும் மக்களுக்கு புதிதில்லையே..


பதிவு எழுதுன பின்னாடிதான் ' ஒரு வருடத்தில், மின்வெட்டு முற்றிலுமாக நீக்கப்படும்' என்று அறிவித்திருக்கிறது அரசு'
என்ற செய்தி பார்த்தேன். .மகிழ்ச்சி. பார்ப்போம்.
------------------------------------------------------

சச்சினுக்கு பாரதரத்னா பரிந்துரைகள் நாட்டில் எல்லா மூலைல இருந்தும் வந்து குவிஞ்சிட்டு இருக்கு. சமூகம்,கலை மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் தேர்ந்தவங்க மட்டும்தான் பாரதரத்னாவுக்கு தகுதியானவங்கனு விதி இருக்கு. அதில் எந்த மாற்றமும் வராதுன்னும் மதிய அரசு அறிவிச்சாச்சு.ஆனா சச்சின் இந்தியாவோட சின்னம் - ஐகான் போல ஆகிட்டாரு. கொடுக்கலாம்.

ஒரு வேளை அப்படி சச்சினுக்கு பாரத ரத்னா கொடுத்தா , கண்டிப்பா விஸ்வநாதன் ஆனந்துக்கும்   கொடுக்கணும்.  அதுதான் நியாயம்.

இப்படி சச்சினுக்கு அங்கிகாரம் கிடைக்க போராடிட்டு இருக்குற இந்த நேரத்துல இப்படி ஆகிடுச்சேன்னு கிரிக்கெட் ரசிகர்கள் கவலைபட்டுட்டு  இருக்காங்க.
எனக்கு ரொம்ப சந்தோசம். 

தோல்வியும் கொஞ்சம் வேண்டும். அப்போதான் ஆணவம் தலைக்கு ஏறாது. அதை உலகத்துக்கு உணர்த்ததான்  நம்ம பசங்க இங்கிலாந்து கிட்ட ஒரு தடவைக்கு ரெண்டு தடவை தோத்து பாத்தாங்க..இதுக்கு போய் ஏன் எல்லாரும் கோபப்படுறீங்க?  

என்ன ..மத்த டீமுக்கும் இந்தியாவுக்கும் தோத்து போறதுல ஒரு சின்ன  வித்தியாசம். மத்த டீம் எல்லாம் தோற்பாங்க.. நாம மட்டும்  ரொம்ப  கேவலமா தோற்போம்.



மத்தவங்களுக்கு தேவையோ இல்லையோ தோனிக்கு இது கண்டிப்பா தேவையான ஒண்ணு. நடந்தது நல்லதுக்குதான். நம்புங்க..
----------------------------------------------------

நில மோசடி புகார் : கைதாகிறார் வடிவேலு ?
இந்த செய்திய பாத்ததும் திடீர்னு எனக்கு அவரோட ரெண்டு டயலாக் ஞாபகம் வருது..

'நான் அப்டியே ஷாக் ஆயிட்டேன்..'


'எல்லா பக்கமும் அணை கட்டுறாங்களே..'

தேர்ந்த ஒரு கலைஞன் தற்போது படும்பாடு கவலை அளிக்கிறது என்றாலும் , இந்த வினை அவர் வலிய சென்று வாங்கிக் கட்டிகொண்டது என்பது எதார்த்தம்.

சமயத்தில் , அப்பாவியாய் இருந்து விடுவதே நல்லது என்று யோசிக்க தோன்றுகிறது. அதீத கோபம்   ,வஞ்சமாய் மாறினால்,விளைவுகளை அது அவர்களுக்கே எதிராக திருப்பி விடுகிறது. 
 ----------------------------------------------------------------------

தென்மேற்கு பருவகாற்று படத்தில் வந்த பாடல் . என்னை மீண்டும் இளையராஜாவின் 80-களுக்கு கூட்டிசென்றது . ராகநந்தன் இசையில் , வைரமுத்து எழுத்தில் உருவான பாடல்கள் அனைத்தும் இனிமை.

குறிப்பாக 'ஏடி கள்ளச்சி'  - விஜய் பிரகாஷ் , ஷ்ரேயா கோஷல் குரலில் மீண்டும் ஏதோ பாரதிராஜா - இசைஞானி கூட்டணியில் வந்த பசுமையான கிராமத்து பாடலின் திருப்தியே உண்டாக்கியது. கடந்த பத்து நாட்களாக  இந்த பாடலை தினம் ஒருமுறையாவது கேட்கிறேன்.



இசையில் கிடைக்கும் கிறக்கத்தை அப்படியே வரிகளிலும் காட்ட முடியும் என்பதை கவிஞர் ஆயிரமாவது முறையாக நிருபித்து விட்டார். ஆனந்தம்..

-----------------------------------

Wednesday, August 3, 2011

பசி

நாம் எல்லாரும் ஏதோ ஒரு நாள் உலகின் மிக விலைமதிப்பற்ற  உணவை ருசி பார்த்திருப்போம். எங்கேன்னு ஒரு நிமிடம் யோசிச்சு  பாருங்க..

போன வாரம் போன கல்யாணத்திலா ?  முந்தின வாரம் போன டீம் பார்ட்டியிலா ?  
இல்லை..இன்னும்  யோசியுங்க..

'ஒ சரி சரி.. என் பையன் பிறந்தநாளுக்கு பெரிய ஹோட்டல்ல போயிருந்தோம்..அப்போ சாப்பிட்டேன்..அதுதான்'-னு சொல்றீங்களா.. இல்லேங்க..

இதெல்லாம் மிகையா போனா ஒரு ஆயிரம் ரெண்டாயிரம் இருக்குமா..? விலைமதிப்பே  இல்லாத உணவு எது தெரியுமா?




சென்னை வெயில்ல மத்தியான நேரம் பசியோட வீட்டுக்கு வரும்போது , மனைவி நீங்க  ராத்திரிதான் வருவீங்கன்னு எதுவும் செஞ்சிருக்க மாட்டாங்க.. அப்போ கிடைச்ச நேரத்துல இருக்குற சாதமும், ஊறுகாயும் , 
தாளித்த தயிரும் உங்களுக்கு அமிர்தமா இருக்கும்.. 

ஆறு மணி நேரம் காத்திருந்து ,திருப்பதி  தரிசனத்தை முடிச்சிட்டு ,மத்தியானமும் இல்லாம ராத்திரியும் இல்லாம ஒரு நேரத்துல ,  வெளிய வந்து நிக்கும்போது, பசியும் மயக்கமும் கலந்து உங்கள கிறங்கடிக்கும். இந்த நேரத்துல எங்கிருந்தோ ஒருத்தங்க வந்து ,பிரசாதம்-னு சொல்லி பொங்கலும்,புளியோதரையும் கொடுப்பாங்க.. எந்த கௌரவமும் பாக்காம வாங்கி சாப்பிடுவோம். அதுக்கு விலை நிர்ணயம் செய்ய முடியுமா?

நாடு விட்டு நாடு போயிருப்போம்.முதல் இருபது நாள் வெறும் ரொட்டியும்,சாண்ட்விச்சும் சாப்பிட்டு சாப்பிட்டு வாழ்க்கையே வெறுத்து போயிருக்கும்போது,கூட வேலை பாக்குற ஒருத்தர் தன் வீட்டுக்கு மத்தியானம் கூப்பிட்டு சிம்பிளான  விருந்து வைப்பார். 

தடபுடலா இல்லாம சாதம்,சாம்பார்,ரசம்,பொரியல்-னு இருக்குற உணவை நீங்க பாக்கும்போதே 
கண் கலங்கும். அந்த சாப்பாடோட விலை அதிகமா போனா நூறு ருபாய் இருக்குமா..?  ஆனா அந்த நேரத்தில்ல அது விலைமதிப்பில்லாதது.  

இதுதான் நிதர்சனம். கோடியில் புரளும் பணக்காரனும் சரி , தெருக்கோடியில் வேலை பார்க்கும் ஏழையானாலும்   சரி , இருவரையும் இணைக்கும் சக்தி வாய்ந்த ஒரே புள்ளி - பசி. இந்த பசிக்கு நாம் மரியாதை கொடுத்தே ஆக வேண்டும். ஆனால் நம் எல்லா மரியாதையையும் பசி இரக்கமே இல்லாமல் எடுத்துக்கொள்ளும்.

ஆனால் இந்த பசியையும் அதன் தாக்கத்தையும் பசி அல்லாத நேரங்களில் நாம் மறந்து விடுகிறோம்.அப்போது கிடைக்கும் உணவையும் நாம் மதிப்பதில்லை. எல்லாரும் , எப்போதும் செய்யும் இந்த சின்ன மிக நுண்ணிய தவறு , எங்கோ யாரோ ஒருவருக்கு பசியை போக்கும் எதிர்ப்பு சக்தியை குறைத்து விடுகிறது.

அந்த தவறுதான் - ஒருவனை திருடன் ஆக்கவும் காரணம் ஆகிறது. இன்னும் சொல்லப்போனால் , எல்லா தவறுகளுக்கும் ஆரம்ப காரணமாக இருப்பது அந்த தவறுதான். அதுதான் - உணவை வீணாக்குதல்.

ஒரு நிமிடம் இந்த வீடியோவைப்   பாருங்கள் :



உணவும் சரி பணமும் சரி , இந்தியாவை பொறுத்தவரை ஏற்றத்தாழ்வுகளில் சிக்கித்  தவிக்கின்றன. பணம் எப்படியோ போகட்டும். அது அவனவன்  சாமர்த்தியம். உழைத்து சம்பாதித்தாலும் சரி; ஊழல் செய்து சம்பாதித்தாலும் சரி. ஏதோ ஒரு வழியில் எப்படியோ வேறு யாருக்கோ பயன்படும்.எல்லாவற்றையும்  அவனே அனுபவிக்க முடியாது.

ஆனால் உணவு அப்படியல்ல. அதற்கு காலநேரம் உண்டு. இன்று வைத்திருப்பவன் பயன்படுத்தவில்லை என்றால் , வெகு சீக்கிரம் யாருமே பயன்படுத்த முடியாமல் போய்விடும். 
பசியில் பலர் வாடும்போது , உணவளிக்கா விட்டால் கூட        
மன்னிக்கலாம். ஆனால் அதை வீணாக்கினால் ?  
 
ஒரு கல்யாணம். கல்யாண வீட்டார் உணவு வீணாவதை குறைக்க எந்த ஏற்பாடும் பண்ண முடியாது. அவர்கள் எண்ணம் , வருவோரை திருப்தியாக கவனித்து அனுப்புவதே. உணவு வீணானாலும் சரி, ஆனால் பற்றாமல் போய்விட கூடாது என்பதே அவர்கள் இலக்கு.

ஆனால் கல்யாணத்திற்கு போவோர் அதை செயல்படுத்தலாமே.. இதை எல்லாரும் சேர்ந்து செய்ய முடியாது. அவரவர் உணர்ந்து , அவரளவில் திருந்தினாலே போதும். தனக்கு எது தேவையோ அதை அளவாக கேட்டு உண்டால் , மீதமாகும் உணவு அன்றிரவு குப்பைதொட்டிக்கு போகாமல்,அநாதை இல்லத்திற்கு கண்டிப்பாக போகும்.

உணவை வீணாக்குவதிலிருந்து  தப்பிக்க  எளிதாக 4 வழிகள் உள்ளன .
Shopping List : முதலில் , அடுத்த ஒரு வாரத்திற்கான உணவு பட்டியலை உருவாக்குவோம்.அதற்கு தேவையான பொருட்களை மட்டும் வாங்கி வைக்கலாம்.
குளிர்சாதனப்பெட்டி இருக்கிறது என்று எல்லாவற்றையும் வாங்கி பிறகு தூக்கி எறிவதை இது தடுக்கும்.

Stick to the List :கூடியவரை பட்டியல்படி சமைக்கலாம். அதில் மாற்றம் இருந்தால் அடுத்த முறை , முதல் முறை வாங்கிய பொருள்களைத் தவிர பிறவற்றை வாங்கலாம்.

Serve in smaller portions: பரிமாறும் அளவு குறைவாகவே இருக்கட்டும். தேவைகேற்ப கொஞ்சமாக  எடுத்து உண்டால் மீதி இருப்பவை வீணாகாது.குப்பைக்கு 
போகாது.

save/share the leftover :மதியம் உணவு மிச்சம் இருந்தால் , இரவு அதற்கேற்ப சமைக்கலாம்.

இதைத் தாண்டியும் மீதமானால் , பசிப்பவர்களுக்கு கொடுக்கலாம்.
இந்த முறைகள் எல்லா நாடுகளிலும் பரவலாக, உணவுப்பண்டங்கள் கண்காணிக்கும் அமைப்புகள் உருவாக்கி  உபதேசித்து வருபவை.

என் ஒரே இடைச்செருகல் கடைசியாக சொன்ன பகிர்தலில்தான். பிச்சைகாரர்களை ஊக்குவிக்காதீர்கள். உடல் ஊனமுற்றவர்க்கு  மட்டும் உதவுங்கள்.
எங்கள் கல்லூரி விடுதியில் விழா  நடந்து முடிந்து ,  உணவு  மீதமாகும்போது ,  வெகு அருகிலிருக்கும் ,மரத்தடியில் அதிகம்பேர் படுத்திருக்கும் கிராமத்தினரிடம் கொடுக்க மாட்டோம். கொஞ்ச தூரம் தள்ளியிருக்கும் கட்டிட தொழிலாளர்களுக்கு கொடுப்போம். நம் கருணை மற்றவரை சோம்பேறியாக்க கூடாது.

'இதையெல்லாம் யார் சார் கவனிச்சிட்டு  இருப்பா ? எல்லாரும் இப்படியே செய்யறாங்களா?' என்று கேட்கும் புத்திசாலி நண்பர்கள் தங்கள் வழியே செல்லலாம். ஆனால் எந்த ஒரு  சந்தர்ப்பத்திலும்  'என்ன நாடு இது? ' என்று கேட்க அவர்களுக்கு தகுதி இல்லை.




இது விழிப்புணர்வு காலம். எந்த ஒரு நல்ல விசயமும் சரி , ஒரு சாரார் அறிந்தால் உடனே மற்றவருக்கு பகிர எளிதாக  வழியிருக்கிறது.உங்கள் வட்டத்திற்கு  எடுத்து சொல்லுங்கள். 
இந்தியாவின் மிக பெரிய சக்தியே அதன் மக்கள்தொகைதான் (ManPower). அதை தவறான வழிக்கு அனுப்ப அரசியலும், வேறு சில காரணங்களும் இருக்கலாம். அதை தடுக்க முடியாது. ஆனால் அது பசியாய் இருக்க கூடாது.

ஞாபகம் வெச்சுக்கோங்க   - நீங்க வீணடிக்கிற ஒரு வேளை உணவு , இன்னொருத்தரின் ஒரு வேளை  உணவை இழக்க வைக்குது.
 
காந்தி சொன்னது பல பேருக்கு மறந்து போயிருக்கும் - தனி மனித மாற்றம்தான் எந்த ஒரு தேசமுன்னேற்றத்திற்கும் முதல் படி.
 
 

சமுக சேவை வெளிய போய்தான் செய்யணும்னு இல்ல.. வீட்டுக்குள்ளயே பண்ணலாம்.  
யோசியுங்க..