Saturday, November 12, 2011

அண்ணா நாமம் வாழ்க..அண்ணா நூலகம்???


மிக அருகில் இது நடக்கலாம். தாராளமாக 'திமுக கால திட்டங்கள் ஒழிப்பு'  என்ற புது இலாக்காவை அதிகாரபூர்வமாக உருவாக்கி அதை அம்மா தன்  கட்டுபாட்டில் வைக்கக்கூடும்.  நல்லது.  திமுக காலத்தில் உருப்படியில்லாத எந்த திட்டத்தையும் ஒழிக்க எல்லார் ஆதரவும் அம்மாவுக்கு உண்டு. ஆனால் அண்ணா நூலக விஷயம் கண்டிப்பாக அதில் இல்லை.  


புதிய சட்டபேரவையை உப்பு பெறாத காரணம் சொல்லி அதை மருத்துவமனை ஆக்கியபோது , அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் அது யாரையும் பாதிக்கபோவதில்லை.  யார் பதவியில் இருந்தாலும் அவர் ஒழுங்காக ஆட்சி செய்தால் அதை கொடநாட்டில் செய்தால் என்ன ? கோபாலபுரத்தில் செய்தால் என்ன?  நல்லாட்சிதான் முக்கியம். எனவே அது விவாததிற்கு தேவை இல்லாதது.
 
ஊழல் செய்த முன்னாள் மந்திரிகளை கைது செய்வதும் , மேலவை வேண்டாம் என்று நிராகரித்ததும் உத்தமமே.
ஆனால் அண்ணா நூலகம் அப்படி இல்லை. அது அங்குதான் இருக்க வேண்டும்.காரணம் அதன் பயன்பாடும் பெருமையும்.

சுமார் இருநூறு  கோடியில் செலவு செய்து உருவாக்கிய நூலகம். மொத்தம் ஒன்பது தளங்களில் நூலகத்தின் ஒவ்வொரு பாகத்திலும் கொட்டிகிடக்கும் புத்தகங்கள்.ஏறக்குறைய பனிரெண்டு லட்சம் புத்தகங்கள் அடங்கிய நூலகம். ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும் எல்லா வகையான நூல்களும் வகைபடுத்தி அடுக்கிவைக்கப்பட்டு ,அவைகளை படிக்க தனியாக படிப்பறைகளும் கொண்ட நூலகம். பல்வேறு புத்தகங்களுடன் , ஆடியோ - வீடியோ மூலம் தகவல்களை அறிந்து கொள்ள வசதியும் ,புகைப்பட நூல்களும் தனியாக உள்ளன. கூடவே உணவுகூடமும். ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகமாக கருதப்படுவது.
 
இதைதான் குறிவைத்திருக்கிறது தற்போதைய அரசு. சொல்லும் காரணம் - கூட்டம் வரவில்லை என்பது. உண்மையான காரணம் உலகறிந்தது.
 
புதிய சட்டசபையை மருத்தவமனையாக்குவோம் என்று அறிவித்தபோது மக்கள் சந்தோசப்பட காரணம் 'இவ்வளவு செலவு செய்து கட்டிய கட்டிடம் அப்படியாவது பயன்படட்டுமே ' என்றுதானே தவிர     'இதை போல எந்த கட்டிடத்தையும் மருத்துவமனை ஆக்கினால் நல்லது '  என்றல்ல.  
 
 
இப்போது நூலகமும் மருத்துவமனை ஆக்கப்படும் என்பது
அறிவிப்பு.மருத்துவனைகள் மிக அவசியம்தான். அதை புதிதாக உருவாக்கி கொடுங்கள். வணங்குகிறோம்.வாழ்த்துகிறோம்.ஆனால் நூலகத்தை மாற்றி அல்ல.
 
பெரிய கோவிலை சுற்றிபார்க்க வருபவர்களுக்கு கால் வலிக்கும்தான். எங்கேயாவது அமர ஏதாவது இடம் கிடைக்குமா என மனம் நினைக்கும்தான்.அதற்காக அழகான சிற்பத்தை உடைத்து , அதை கீழே போட்டு , இதில் அமருங்கள் என்று பெருமிதமாக சொல்லுவதை எந்த கணக்கில் சேர்ப்பது ? கண்டிப்பாக இதற்கு நன்றியோ பாரட்டுதலோ கிடைக்காது.
 
தவிர நூலகம் கட்டும்போதே ,இதன் பயன் புத்தகங்களை  அடுக்க, வாசிக்க என திட்டமிட்டு ஒரு அமைப்பாய் இருக்கும்.அதை மருத்துவமனை ஆக்கும்போது , முழுதும் தலைகீழாக  மாற்ற வேண்டும். அதன் செலவு கண்டிப்பாக புது மருத்துவமனை கட்டுவதை  விட அதிகம் ஆகும். இது வேண்டாமே.
இருக்கும் அறிவை அழித்து உடல்நலத்தை வாங்கும் முட்டாள்தனம் போல ஆகிவிடும் இதன் பயன்.
 
இப்படி பெரிய பணத்தை போட்டு அதிநவீன மருத்துவமனை ஒன்றை பெருநகரத்தின் மத்தியில் கட்டுவதை விட , குறைந்தது இருபது மைல் தொலைவில் இருக்கும் மருத்துவமனையை நம்பியிருக்கும் கிராமங்களுக்கு சிறு சிறு மருத்துவமனைகளாக அவர்கள் கிராமத்திலேயே கட்டி உதவலாம். காலகாலம் அவர்கள் ஓட்டு உங்களுக்குதான்.சத்தியம். 
 

நூலகம் சரியாக பயன்படுத்தபடுவதில்லை என்ற அக்கறைக்கு நன்றி. அதை பிரபலமாக்க அரசு பலவழிகளில் முயற்சிக்கலாம். சென்னை பள்ளிகள் , கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நூல்களின் பலன்களை எடுத்துரைத்து , அவர்களை வர செய்யலாம்.  கண்டிப்பாக புரிந்து வருவார்கள். குமுதம் , கல்கண்டு படித்து புத்தி தடுமாறிய 80 ,90 காலகட்ட மாணவர்கள் அல்ல இப்போது. 'புதிய தலைமுறை'யும் நாணயம் விகடனும் படித்து முன்னேற  ஆர்வமுள்ளவர்கள் காலம் இது.
 
பழி வாங்குவதுதான் முக்கியம் என்று நினைத்திருந்தால் 2006 -இல் கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்றதும் ஆயிரக்கணக்கான டாஸ்மாக்  ஊழியர்கள் வேலை இழந்திருப்பார்கள். அதற்கு நன்றிக்கடனாக நூலகமும் , கண்ணகி சிலையும் , கன்னியாகுமரி   வள்ளுவர் சிலையும் , சிவாஜி சிலையும் இனி பிழைத்து போகட்டுமே . நூலகம் தப்பினால் அந்த பெருந்தன்மைக்கு 2016ல் நன்றிகள் ஓட்டுகளாக அதிமுகவிற்கு கிடைக்கும். 
 
எம்ஜீஆர் ஆத்மா உங்களை கண்டிப்பாக வாழ்த்தும். 
--------------------------------

Tuesday, November 8, 2011

பாப்கார்ன் பாக்கெட் - 20111108ஐம்பத்தி எழு வயதை தொட்டிருக்கிறார் கலைஞானி. சச்சினின் கிரிக்கெட் சாதனைகளை போல , சினிமாவில் கமல் சரியாக செய்திருக்கிறார்.வயது ஏற ஏற புது முயற்சிகளை இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கும் சாதனையாளர். மக்கள் சலிக்கும் வரை மரத்தை சுற்றி சுற்றி பாடாமல் , மாற்றத்தை கொண்டு வந்து மக்களை மகிழ்விக்கும்  கலைஞன்.


சிவாஜிக்கு வயதானதும் தமிழுலகம் அவரை சரியாக பயன்படுத்தவில்லை. தாவணி கனவுகளும் ,முதல் மரியாதையும் ,தேவர் மகனையும் தவிர  சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் இல்லை. காரணம் திரையுலகம் அவர் மேல் வைத்திருந்த  மரியாதையும் அதனால் ஏற்பட்ட தூரமும்தான்.

கமல் அந்த விஷயத்தில் மிக கவனம் கொள்ள வேண்டும். இளைய இயக்குனர்களோடு படம் செய்தால் அமிதாப்பின் செகண்ட்  இன்னிங்க்ஸ் போல நல்ல வெற்றி கிடைக்கும்.  நல்ல வேளை இன்னும் கமலுக்கு முதல் இன்னிங்ஸே முடியவில்லை. அதையே இன்னும் பத்து வருடமாவது  தொடர்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடவுள் இயற்கை அதற்கு ஆதரவு  கொடுக்கட்டும்.

கமலின் மாஸ்டர்பீஸ்:


பிறந்த நாள் வாழ்த்துக்கள் உலகநாயகனே..
--------------------------------------

ரசித்தது:தங்கச்சி !!! டில்லில இருக்குற எல்லா கடையிலையும் கேட்டுட்டு வந்துட்டோம்.... வஞ்சரமீன் இருக்குன்றான், வாலமீன் இருக்குன்றான், நெய் மீன் இருக்குன்றான், நெத்திலி மீன் இருக்குன்றான், கென்டமீன் இருக்குன்றான், கெலுத்தி மீன் இருக்குன்றான் இவ்வளவு ஏன்ணே சுறா மீன் முதற்கொண்டு இருக்குன்றான்.... ஆனா நீ கேட்ட ஜாமீன் மட்டும் இல்லையாம்...
கடல்லயே இல்லையாம்... :-)
------------------------------------

கண்டிப்பாக தெரிந்திருக்க  வேண்டிய செய்தி

ஆதார் அடையாள அட்டை:

இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.

தபால் நிலையத்தில் உங்கள் அப்ளிகேஷனைப் பூர்த்தி செய்து, உங்கள் பத்து விரல் கை ரேகை பதிந்து, புகைப்படம் எடுத்த பிறகு உங்களுக்கு தற்காலிக ஐடி கொடுப்பார்கள். 30 - 60 நாட்களுக்குள் வீட்டுக்கு உங்களுக்கு ஒரிஜினல் கார்டு கிடைக்கும். உங்களுடைய கார்டு ஸ்டெட்டஸை ஆன்லைன் மூலம் உங்களிடம் இருக்கும் தற்காலிக ஐடி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு கட்டணம் ஒன்றும் கிடையாது. இந்த கார்டு மூலம் உங்கள் வங்கி கணக்கும் இணைக்கப்படும். இது தான் நமது நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு அடுத்த பெரிய ஐடி. இதை வைத்து நேபாலுக்கு கூட பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம்.

நவம்பர் 1-ம் தேதி முதல் மயிலாப்பூர், தியாகராய நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமைத் தபால் நிலையங்கள் மூலம் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்கி உள்ளது. நவம்பர் 21-ம் தேதி முதல் 31 மாவட்டங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்கவுள்ளது. கார்டு பெற அப்ளிகேஷனை இங்கு டவுன்லோடு செய்யலாம்.
அங்கே சென்று , மாநிலம் - தமிழ்நாடு-ஐ கிளிக்கவும்.
-------------------------------

'மாற்றம் என்பது மானுட தத்துவம்' என்ற கண்ணதாசன் வார்த்தை இந்த விஷயத்தில் பொய்த்து போகிறது. சில வழக்கங்கள் எப்போதும்  மாறுவதில்லை.

'திராவிட' கழகங்கள் மேடையில் கூவும்  'சுயமரியாதைதான் எங்கள் முதல் குறிக்கோள் '  என்பது சும்மா 'மைக் ஒன் டெஸ்டிங் ஓவர் ஓவர்  ' போலத்தானா ?------------------------------

'வாகை சுட வா' இரண்டாவது தடவையாக பார்த்தேன். காட்டுக்குள் ஒரு செங்கல் சூளையும், அதை சுற்றி ஒரு முப்பது குடிசையும் மட்டும் செட் போட்டு , அதில் மட்டுமே இரண்டு மணி நேரத்தை ஓட்டியிருந்தாலும் , இயக்குனர் வெற்றி பெற்று விட்டார் என்ற அறிவிப்பது  , பார்ப்பவர் சலிப்படையாமல் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை சிரிப்பதிலும் , கை தட்டுவதிலும் தெரிந்து விடுகிறது.


களவாணி கிளாசிக்கல் காமெடியாக கொடுத்து கல்லா கட்டியிருந்தாலும், போன ரூட்டிலேயே போகாமல் , நல்ல கருத்தை அறிவிக்கும் படமாக  இரண்டாவது படத்தை கொடுத்திருக்கிறார் சற்குணம். 

விமல் நடிப்பு படத்துக்கு படம் மெருகேறுகிறது.இனியா இனிய நடிப்பு.பாடல்கள் ஏற்கனவே சொன்னது போல் எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரி - அட்டகாசம் கிப்ரான். 

சூழலின் வெப்பத்தை ,மக்களின் கடின வாழ்க்கையை காண்பிக்க படம்  முழுக்க பயன்படுத்திய  கேமரா டோன் மிக அருமை.பொருத்தம்.
இது போன்ற முயற்சிகள் கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டும்.


ஹ்ம்ம். புது இயக்குனர்கள் பட்டையை  கிளப்புகிறார்கள்.
அனுபவ இயக்குனர்கள்தான் குட்டையை குழப்புகிறார்கள்.

----------------------------------------------------

உன்னிமேனனின் முதல் பாடல்.  பல வருடம் , இதை  யேசுதாஸ்தான் பாடியிருக்கிறார் என்று நம்பியிருக்கிறேன்.
உன்னிமேனன் குரலும் , கமலின் போலீஸ் கெட்டப்பில் மிதமான புன்னகை கலந்த காதலின் உணர்ச்சியும்  , ரேவதியின் அழகும்...
அற்புதம்.என் ஹிட் லிஸ்டில் எப்போதும் இருக்கும் பாடல். ---------------------------------------

Friday, November 4, 2011

ஏழாம் அறிவு

'தமிழர் பண்பாடு சிறந்தது. அதன் சரித்திரம் மிக பன்மையானது. அதை  மறந்துகொண்டிருக்கும் தலைமுறை அதை மீண்டும் போற்ற வேண்டும். அதன் பெருமையை காக்க வேண்டும்.' - இந்த மிக முக்கியமான கருத்தை உணர்த்தும் படம் ஏழாம் அறிவு.

ஆனால் நாம் மறந்த இந்த கசப்பான  உண்மையை  உணர்த்த இனிப்பு தடவி தரும் விஷயத்தில் கோட்டை விட்டதால் படம் கசக்கிறது. ஆனால் ஆச்சர்யம் முக்கிய கதையான போதிதர்மன் கதை காட்சிகள்  மட்டும் ரசிக்கத்தக்க வண்ணம் இருக்கிறது.

சக்கரைப் பொங்கல் சுவையாய் சூடாக இருந்தாலும்  , நைந்த இலையில் வாங்கியதால்  ரசித்து சாப்பிட முடியாமல் அவசரகதியில் விழுங்க வேண்டிய நிர்பந்தம் போல இருக்கிறது படம்.

படங்கள்  பெரும்பாலும் இருவகைகளில் அடங்கி விடும். ஆவணம் அல்லது கருத்தை மட்டும் க்ளாசிக்கலாக தரும் படம்  , கமர்சியல் படம் .  இரண்டும் தனித்தனியே இருக்கும் வரை பிரச்சனை இல்லை. ஆனால் இரண்டையும் சேர்த்து தரும்போது இயக்குனர் அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காஞ்சிவரம்,பெரியார்,கல்லூரி போன்ற படங்கள் கிட்டத்தட்ட முதல் வகை. விஜய் , எஸ்.ஜே.சூர்யா ,சிம்பு,தரணி,பேரரசு  படங்கள் இரண்டாம் வகை.

இந்த இரண்டையும் கலந்து தரும்போது மிக நுட்பமாக கையாள வேண்டிய படமாக இருக்கும். ஜென்டில்மேன் ,இந்தியன்,அந்நியன் போன்ற ஷங்கர் படங்களும், தற்போது வந்த வானம், எங்கேயும் எப்போதும் ( கவனிக்க வேண்டிய irony -இது முருகதாஸ் தயாரித்த படம்) போன்ற படங்கள் கலவை பட்டியலில் சேரும் .

ஏழாம் அறிவும் இந்த பட்டியலில் சேர்ந்திருக்க வேண்டிய படம்.  துரதிர்ஷ்டவசமாக திரிசங்கு மாதிரி இங்கேயும் அல்லாமல் அங்கேயும் இல்லாமல் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஈழம் முதல் தமிழ் பற்று  , தமிழர் பெருமை என மக்களை உணர்ச்சிவசப்படுத்தும்  பல வசனங்கள் படத்தில் உள்ளன. ஆனால் வசனம் மட்டுமே அந்த உணர்ச்சியை படம் பார்ப்பவர்களுக்கு தராது. அதை காட்சியில் ஊட்ட வேண்டும். அதில் சறுக்கியிருக்கிறார் இயக்குனர்.

கிருமியை பரப்புவது என்ற ஆதி கால ஜேம்ஸ் பாண்ட் பட வில்லன் உத்திதான்  Operation Red என்று தெரிந்ததும் தலை வலிக்கிறது. படத்தை பார்ப்பவர்களும் அதே ட்ரீட்மென்ட்டில் சிக்கியது போல ஒரு வலி.

முதல் பதினைந்து நிமிடம் முருகதாஸ் இயக்கியிருக்கிறார். பிறகு அவரின் ஏதோ ஒன்றிரண்டு கத்துக்குட்டி உதவி இயக்குனர்கள் படத்தை எடுத்து  முடித்துள்ளனர் - இறுதி காட்சி உட்பட.
தமிழின் மேல் நமக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் ஒரு இம்மியளவும் குறையவில்லை. இந்த படத்தை குறை சொல்லுபவர்களை , தமிழை மதிக்க தவறியவர்கள் என்று  பிறர் கருதும் வகையில் படத்தில் அதன் கதையோடு தமிழை
முடிச்சு  போட்டு
விளையாடியிருக்கிறார்  முருகதாஸ். படத்தின் ஒரே பலம் இதுதான்.


'படம் நல்லா இல்லை' என்று சொன்னாலே ஏதோ தமிழ் மொழிக்கு நிரந்தர  விரோதி போல மற்றவர்கள் பார்ப்பது குழப்பமடைய வைக்கிறது. முன் எச்சரிக்கையாக ' இந்த படம் தெலுங்கில் பார்தேன். நல்லாவே இல்ல 'என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

பதிவுக்கு சம்பந்தமான கேள்வி: 

 'போதி தர்மர் தமிழர்தானே? காஞ்சிபுரத்தில் தானே பிறந்தார்.?அப்புறம் ஏன் தெலுங்கு படத்துல அவர் குண்டூர்ல பிறந்ததாகவும் ..ஹிந்தி படத்துல தாரவில பிறந்ததாகவும் சொல்கிறார்கள்.இரண்டு மொழிகளிலும் அவர் தமிழர்ன்னு பெருமையா சொல்லி இருக்கலாமே

தமிழர்களை பெருமைப்படுத்துற படம்னு சொல்லிட்டு தமிழர்களை ஏன் இப்படி அசிங்கப்படுத்தனும்???'
- இயக்குனர் மு.களஞ்சியம்


முதல் பார்வையில் காதல் என்றதும் கிளை கதை 'நான் ஒன்றும் வித்தியாசமான கதை அல்ல ' என்பதை அறிவித்து விடுகிறது.

ஹீரோவுக்கு ஒரு நண்பன், எல்லாரும் படியில்  இறங்கியதும் லிப்ஃட்டில் வில்லன் வருவது போன்ற வழக்கமான எல்லாரும் யுகிக்ககூடிய காட்சிகள் சலிப்படைய வைக்கின்றன. 
தன் மேல் கொண்டிருந்தது காதல் அல்ல நடிப்பு என்று தெரிந்ததும் சூர்யா பாடும் பாடல், ஹீரோயின் அப்பா நடித்த அபூர்வ  சகோதரர்கள் படப்பாடலை நினைவு படுத்துகிறது.

சண்டை காட்சிகளிலும்  , ரோட்டில் நடக்கும் கார்களை பயன்படுத்தி  சூர்யாவை வில்லன்  கொல்ல முயலும் காட்சியில்  மூன்றாம் தர கிராபிக்ஸ் சிரிக்க வைக்கிறது.

கடைசியாக எல்லாரும் எதிர்பார்த்த சண்டைகாட்சியும் , பீட்டர் ஹெய்ன் அவசரகதியில் முடித்த , நிறைவைத் தராத ஒன்றாகவே இருக்கிறது. அவ்வளவு அடி கொடுத்த வில்லனை எப்படியெல்லாம் புரட்டி எடுக்க வாய்ப்புள்ள சண்டைக் காட்சி அது.. ஹுஹும்ம்.. failed the expectation..


சுருதி ஹாசன் தமிழில் அறிமுகமான படம் என்று பின்னாளில் ஞாபகம் வைக்க பயன்படும் படமாக மட்டும் இது இருக்கும்.இவர் நடிப்பு பாராட்டகூடியது; தமிழ் உச்சரிப்பு ஏன்
மூச்சு திணறும்படி , அழுத்தம் கொடுத்து ,இவ்வளவு சிரமப்பட்டு வருகிறது என்று புரியவில்லை. வேறு குறை இல்லை..முன்னேற வாய்ப்பிருக்கிறது .

போதி தர்மர் சூர்யா மட்டுமே வித்தியாசமாய் தெரிகிறார். சர்க்கஸ் சூர்யா எல்லா படத்திலும் பார்த்த , பழகிய பாவனையுடைய  ஒருவராகவே இருக்கிறார்.கெட்டப் மாற்றத்தில் இருக்கும் கவனம் , நடிக்கும் உடல் அசைவு,முக பாவனை ,மற்ற  மேனரிசத்திலும் இருக்க வேண்டும்.
இவரைப் பொறுத்த வரையில் , இதுவும் இன்னொரு படமே..நல்ல நடிப்பு என்று பெருமைப்படவும் முடியவில்லை.. மோசமான நடிப்பு என்று புறந்தள்ளவும் தேவையில்லை....

ஹாரிஸ் ஜெயராஜ் இன்னொரு திருஷ்டி. தான் கொடுத்த  பழைய வெற்றி பாடல்களின் தாக்கத்திலிருந்து இவர் மீளாத வரை ,  இவரை நம்பி இருக்கும் இயக்குனர்கள் பரிதாபப் படவேண்டியவர்கள்  .


முருகதாஸ்க்கு , நல்ல ஒரு கருத்தை சொல்ல முனைந்ததமைக்கு  பாராட்டுகள். அதை சரியாக சொல்லாததற்கு
பலமான ஒரு கண்டனம்.
இரண்டையும் சொல்ல ரசிகர்களுக்கு உரிமை இருக்கிறது.

கிளைகதையில் மெனக்கெட்டு , முக்கிய கதையில் இணைக்கும் வித்தையை இன்னும் கற்க வேண்டும். உங்கள் பலம் புதுகதையை உருவாக்குவதில் அல்ல.. அது எங்கிருந்தாலும் எடுத்து விடுவீர்கள். அந்த கதையை செதுக்குவதில் மட்டுமே உள்ளது.

கஜினி வெற்றிக்கு காரணம் Memento அல்ல..அதில் நீங்கள் சேர்த்த சரக்கும் (improvising) , உங்கள் புதுவித ட்ரீட்மென்ட்டும் தான் காரணம்.இதில் அது துளியும் இல்லை.
விஜய் அவார்ட் நடுவர் குழுவில் அடுத்த வருடம்   இடம்பெற நீங்கள் இன்னொரு முறை உங்களை நிரூபிக்க வேண்டும்.
கண்டிப்பாக இந்த படம் அந்த பெருமையைக்  கொடுக்காது.

மொத்தத்தில் நல்ல கதைக்கருவை , திறமையுள்ள ஒரு குழு , தங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தாமல் ,அதை குறைபடுத்தி அரைகுறையாய் முடித்திருக்கும் படம் ஏழாம் அறிவு.

வெரி சாரி முருகதாஸ்.  அடுத்த முயற்சியில் உங்களையும்   ரசிகர்களையும் ஏமாற்றாமல் இருப்பீர்கள்  என்று நம்புகிறோம்.