Thursday, March 17, 2016

உடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்


எல்லா ஊரிலும் நல்லதும் கெட்டதும் எல்லா காலங்களிலும்  உண்டு.

சாதியைக் காரணமாக்கி நடக்கும் அக்கிரமங்கள் புதிதல்ல..
காதலை எதிர்த்து , காதலரை அழிக்கும் கோபத்தின் கொடூரமும் புதிதல்ல..
பகை முற்றி பழி  தீர்ப்பதும் புத்தம் புதியதல்ல ..
நடுத்தெருக்களில் , சுற்றியிருக்கும் மக்கள் நடுங்க , கொலைகள் நடப்பதும் கண்டிப்பாக புதியதல்ல..

ஆனால் இந்த கொடுமைகளின்  நிழல் கூட உடுமலை ஊர் எல்லையை நெருங்கியதில்லை.
இன்றோ எங்கள் இதயத்தின் மையப்புள்ளியில் , கோரத்தின் நிஜம் , அதன் கூரிய நகத்தினால் கொத்திக் கிழித்திருக்கிறது .

அமைதியான ஊர்; மக்களும் சரி ,  ஊரில் அடிக்கும் வெயிலுக்கும் மழைக்கும் சரி : ஒரே குணம் - நிதானம்.

சேர நாட்டு வாசல் அருகில் என்பதால் , தெருவுக்கு ஒருவராவது கேரளத்து  பூர்விகம் ; கடவுளின் சொந்த நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு , உடுமலையில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.  சொந்தத்தில் கல்யாணம் செய்த பெண்ணுக்கு புகுந்த வீடு முன்னமே  பழக்கப்பட்டது போல  , சேட்டன்களுக்கும் சேச்சிகளுக்கும் எங்கள் ஊர் சொந்த ஊரானது.



சுந்தரத் தெலுங்கும்  , கொங்குத்தமிழும் சரிசமமாய் புரளும். மனதில் எந்த பாரம் இருந்தாலும் , பக்கத்துக்கு வீட்டு குடும்பத்தோடு பேசும் பேச்சு மயிலறகு.

அடுத்த வீட்டில் என்றைக்கும் சாரோ மேடமோ எங்களுக்கு இருந்ததில்லை. நடுத்தர வயதிருந்தால் அக்கா மாமா ; அதற்கும் மேலிருந்தால் அப்பா அம்மா.

எல்லாருடைய நிலங்களையும் மனங்களையும் குளிர வைத்து ஊர் சுற்றி ஓடும் வாய்க்கால்  நீருக்கும்  , எங்கள் ஊருக்கும்  - சாதி மதம்  என்பது சத்தியமாய்,  ஒதுக்கி ஓரமாய் புறந்தள்ளும் குப்பைதான்.

கடந்த நூறு வருடங்களை சற்று புரட்டி பார்த்தால் , உடுமலை  அமைதியின் அரவணைப்பில் திளைத்து வளர்ந்த குழந்தை என்பது தெரியும். அதனால்தான் அறிவுதிருக்கோவிலும் , அதன் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது.

வருடந்தோறும் ஊர் குட்டையில் நடக்கும் மாரியம்மன் திருவிழாவில் , மதமோ சாதியோ நிறமோ , இப்படி எந்த ரேகையும் தென்படாமல் , பாசமான உள்ளூர்வாசிகளின் உற்சாகத்தை பார்க்கலாம்.



தலைசிறந்த பள்ளிகளை கொண்ட ஊரில் , எங்கள் உச்சகட்ட பிரிவினையே - 'நல்லா படிக்கிற பிள்ளை  ; சுமாரா படிக்கிற பிள்ளை ' ; இந்த இரண்டே ரகம்தான். பக்கத்துக்கு கிராமத்து குழந்தைகள் , ஊருக்குள் பள்ளித்தோழனின்  வீட்டில் தங்கியிருந்து படிப்பதும் , குடும்பத்தில் இன்னொரு பிள்ளையாய் இருப்பதும் வெகு சாதாரண நிகழ்வு.

அருகிலிருக்கும் திருப்பூருக்கும் , கோவைக்கும் , பொள்ளாச்சிக்கும் பீடித்து வரும் சுற்றுசூழல் மாசுக்கு இன்னும் பலியாகாமல் பசுமையின் ஆரோக்கியத்தை காத்து கம்பீரமாய் நிற்கிறது , ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் உடுமலைப்பேட்டை.

இப்படி எல்லா புகழும் இருக்கும் ஊர் பெயர்தான் இப்போது முகநூலிலும் , வாட்ஸப்பிலும் , எல்லார் வாய்க்கும் கிடைத்த அவலாக பரிதாபப்பட்டு மாட்டியிருக்கிறது.

ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் பகைக்கு , ஒரு உயிர் மட்டும் அல்ல ; ஒரு ஊரின் பெயரும் பலியாகியிருக்கிறது.
'வேறு எங்கோ போய் கொலை செய்வதுதானே?' என்று உணர்ச்சி மேலிட கேட்கும் அளவுக்கு நாங்கள் சுயநலக்காரர்கள் அல்ல . எந்த ஊரிலும் இது போல தவறு நிகழக்கூடாது.எங்கும் அது மன்னிக்கமுடியாத குற்றமே.

ஆனால் , இது எங்கள் ஊர் . எல்லா சாதியினரும் எந்த பேதமும் இல்லாமல் வாழும்  ஊர்.எங்கள் ஊர் பெயரில் , சாதிச்சாயமோ , கலவரக்கீற்றோ உள்ளே வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

ஊடகங்கள் என்ற பெயரில் ஊர் பெயரைக்  கெடுக்க ஓராயிரம் வண்டிகள் வந்தாலும் , உண்மை என்பது மிகத் தெளிவு ; உடுமலை களங்கமற்றது.

நடந்தது கௌரவக் கொலையோ பகையின் மிச்சமோ; அதன் முடிவின் களம் எங்கள் ஊராய் அமைந்ததற்கு , நாங்கள் படுவது நரக வேதனை.  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மட்டுமல்ல , ஊருக்கும் இப்போது தேவை அனுதாபம்.



ஊர் மொத்தமும் ஒன்றாய் கைக்கோர்த்து , உரக்க முழக்கமிடுகிறோம் - சாதிகளுக்கோ , பிரிவினைக்கோ ஊருக்குள் இடமில்லை. அதை வளர்ப்பவருக்கும் இங்கே வேலையில்லை.

நினைவிருக்கட்டும் - இந்த ஒரு கொடிய நிகழ்வால்  , தன்  தவறு ஏதுமின்றி ,  ஒரு ஊர் களங்கமில்லாத தன் சரித்திரத்தில்  , கருப்பு புள்ளியை ஒரு  பக்கத்தில் தெளிக்க நேர்ந்துள்ளது. நாளை  உங்கள் ஊருக்கும் இதே நடக்கலாம்.

சாதியின் பசிக்கு இன்னும் எத்தனை காலம் , எத்தனை  ஊர்களும் நகரங்களும் தங்கள் முகவரியின் புனிதத்தைக்  காவு கொடுப்பது?

இப்படியா நம் மண்ணின் பெருமை உலகத்திற்கு அறியப்படுவது ?


-
அசோக் மூர்த்தி