Thursday, June 23, 2011

பாப்கார்ன் பாக்கெட்- 20110623



ஏற்கனவே சொன்னதுதான்..இன்னொரு தடவை ஞாபகப்படுத்தரதுல தப்பு இல்ல.. மறக்காம ஜூன் 26-ம் தேதி மெரினாவுக்கு வந்துடுங்க..தமிழீழப் படுகொலைகளுக்கு எதிராக அமைதியாக , ஆர்ப்பாட்டம் இல்லாமல் மெழுகுத்திரி ஏந்தி நம் வேதனையை தெரியப்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் கடமை.

ராமேஸ்வரத்தில் போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் மீனவர்களுக்கும் இது ஆதரவளிக்ககூடிய விஷயமா இருக்கும். முப்பது வருஷம் இல்லாம இப்போ மெல்ல மெல்ல இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒரு விழிப்பு அதிகமாய்ட்டு வர்றது சந்தோசமா இருக்கு.தெரியாதவங்களுக்கு பணிவா எடுத்து சொல்லி கூட்டிட்டு வாங்க..நிகழ்ச்சி விபரம் இங்க ...
----------------------------------

சமச்சீர் கல்வி , பள்ளிக்கட்டணம் தொடர்பான போராட்டங்கள் பெற்றோரை பணரீதியாக பாதிப்பதை விட குழந்தைகளை மனரீதியாக பாதிக்கும் வாய்ப்பு அதிகம். பள்ளி நிர்வாகத்துடன் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் நண்பரிடம் அவர் பையன்
 ' அப்பா .. என் பிரெண்டுக்கு புது நோட் ,புக்ஸ் எல்லாம் கொடுத்துடாங்கப்பா.. அவங்கப்பா எல்லாத்துக்கும் கவர் போட்டுட்டு இருக்காரு.எனக்கு எப்போப்பா ஸ்கூல் ? 'னு கேட்க   இவர் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்திருக்கிறார். கொடுமை.



அதை விட கொடுமை , சொன்ன பணத்தை கட்டியவர்களின் குழந்தைகளுக்கு தனியாக பாடம் நடத்தும் பள்ளிகளின் செயல்.. இது குழந்தைகள் நடுவே பெரிய தாழ்வுமனப்பான்மையை
வளர்க்கும். படிப்பை கெடுக்கும். இந்த வயதில் , பிரச்சனை முழுதாக  புரியாமல் பெற்றோர் மீது கோபப்பட வைக்கும்.

இதற்கு தீர்வு காண்பதுதான் அரசின் முதல் பணி.. பிற பின்னரே..
-------------------------------------------------

ஆரண்ய காண்டம் குழுவுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். எஸ்.பி.பி. சரண் இந்த படத்துக்காக தன் தந்தையின் ரெக்கார்டிங் தியேட்டரை விற்று , கஷ்டப்பட்டு
வெளியிட்ட உண்மை பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வணிக ரீதியில் எந்த பலனும் இந்த படம் கொடுக்கலைனாலும் , அத தெரிஞ்சே படத்தை தயாரிச்ச
சரணுக்கு இயக்குனர் மட்டும் அல்ல , படத்தை பார்த்த எல்லாரும் கடமைப்பட்டிருக்கிறோம்.



சம்பத் படத்துக்கு படம் நடிப்பில செஞ்சுரி அடிக்கிறாரு. நல்ல பாத்திரதேர்வு செய்து நடித்தால் இன்னொரு பிரகாஷ்ராஜ் ஆக வாய்ப்பு இருக்கு. பசுபதி மாதிரி ஆகாம பாத்துகோங்க.
ஜமீன் சோமசுந்தரம் பாத்திரம் போல கிராமத்துக்கு ஒருத்தர் கண்டிப்பா இருப்பாங்க.

சென்சார் வெட்டுக்கு ஒரு மணி நேர படத்துக்கான ரீலை பலி கொடுத்தும் , படம் பாக்கறவங்கள அசர வைக்குதுனா , முழு சபாஷும் எடிட்டர்கள் ஸ்ரீகாந்த் , ப்ரவீனுக்குதான்.

காலை தொடங்கி மாலை முடியும் சம்பவங்களின் கோர்வையை , கோர்வை இல்லாமல் சொல்லி ,சினிமா வெறும் கதைசொல்லி ஊடகம் கிடையாதுன்னு
மறுபடியும் இன்னொரு தடவை நிரூபித்திருக்கிறார் இயக்குனர். பாராட்டுக்கள் தியாகராஜன் குமாரராஜா.

எல்லா முந்தய தலைமுறை நல்ல இயக்குனர்களும் ரிட்டைர் ஆகி இவங்களுக்கு வழிவிட்டது வீணா போகாதுன்னு இதுபோல புது இயக்குனர்கள் தங்கள் படத்தின் மூலமா உணர்த்தறாங்க...

நிமிர்ந்து நிக்குது எங்கள் தமிழ் சினிமா... பெருமையா இருக்கு..

-------------------------------------------------
தனியார் பேருந்துகள் பற்றிய விழிப்புணர்வு பதிவை நிறைய பேருக்கு எடுத்த சென்ற சக பதிவர்கள்,வாசகர்களுக்கு என் நன்றிகள்..எதிர்பார்த்தபடியே பாதிக்கப்பட்ட பல பேர் தங்கள் பேஸ்புக் சுவற்றில் பகிர்ந்திருந்தனர். பல பேர் தங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் சக ஊழியர்களுடன் பகிர்ந்ததாக கூறியிருந்தனர். மிக்க நன்றி..

இப்போது பதிவை சுலபமாக பகிர உதவியாக இடப்பக்கம் பேஸ்புக், ட்விட்டர், கூகிள் Buzz போன்றவற்றின் கருவிப்பட்டையை இணைத்துள்ளேன். பகிர்வது வெகு சுலபம்.இதை அறிவுறுத்திய சித்தா 
ட்ரீம்ஸ்-க்கு தனி நன்றி..  
-------------------------------------------------------

கர்நாடகாவுல இனி யாரும் கோர்ட்டுக்கு போக வேணாம்... ஒருத்தன் பொய் சொல்றானா இல்லையான்னு கண்டுபிடிக்க  போலீசோ , நீதிமன்றமோ இனி தேவை இல்லப்பா..முதலமைச்சர் ஊழல் செய்யறாருன்னு எதிர்க்கட்சி தலைவர் சொல்ல ,அதுக்கு கோபப்பட்ட எடியூரப்பா உடனே ஒரு சிறப்பு நீதிமன்றம் ,சிறப்பு நீதிமுறை ரெண்டையும் சொல்லியிருக்காரு. அதுக்கு உடனே தலையாட்டுன குமாரசாமி அதை ஏத்துகிட்டாரு.

சிறப்பு நிதிமன்றம் : தர்மஸ்தலா கோவில்
நீதிபதி : ஜஸ்டிஸ் மஞ்சுநாதா
நீதிமுறை : சத்தியம் செய்வது

என்ன ஒரு எளிமையான , ஆனா பவர்ஃபுல்லான வழிமுறை ?!! விசாரணை கமிஷன் கிடையாது. ..வாய்தா கிடையாது. வக்கீல் செலவு  கிடையாது. ஜாமீன் கிடையாது..தப்பு உறுதியானதும் உடனே உம்மாச்சியை அனுப்பி சாமி கண்ண குத்திடும்..




இவங்க மக்களை பத்தி என்ன நெனச்சுட்டு இருக்காங்க ? மக்களை விடுங்க .சாமிய பத்தி என்ன நெனச்சுட்டு இருக்காங்க ? 'நாம ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடுவோமா?'னு முத்துகாளை வடிவேல்கிட்ட கேக்குற மாதிரி சத்தியம் செஞ்சு சத்தியம் செஞ்சு விளையாட போறாங்களாம். உங்க மதவாத அரசியல கடவுள வெச்சு பண்ணிட்டு இருந்தீங்க.. இப்போ கடவுள்கிட்டயே பண்றீங்களேப்பா ...

நல்ல ஐடியா ராஜாக்களா.. அப்படியே ஒரு போன்ன போட்டு இத தமிழ்நாட்டுக்கு சொன்னீங்கனா , இருக்குற மிச்ச மீதி வழக்குகளையும் எங்க அம்மா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கமிஷன்கிட்டயோ ,மேல்மலையனூர் செசன்ஸ் கோர்ட் மாஜிஸ்ட்ரேட் அங்காள பரமேஸ்வரிகிட்டயோ சத்தியம் பண்ணி வெளிய வந்துடுவாங்க..

நல்லவேளை தாத்தா நாத்திகவாதி..இல்லைனா கனிமொழிகிட்ட 'எங்க குடும்பத்துக்கு சிவாஜிதான் பழக்கம்.. 2ஜியோ 3ஜியோ அவங்க யாருனே எனக்கு தெரியாது'னு சத்தியம் பண்ண சொல்லிடுவாரு..

பாவம் ஓட்டு போட்ட ஜனங்க
-------------------------------------------------

என்னைக்காவது சோர்ந்து போனா இந்த பாட்ட ஒரு தடவை கேட்டா போதும்.. தன்னம்பிக்கை வளர்க்க கடினமான , புரிஞ்சிக்க கஷ்டமான புத்தகங்களோ , மணிக்கணக்கான பேச்சோ தேவை இல்லை .. மூணே மூணு நிமிஷம் போதும்..




உத்வேகமும் உற்சாகமும் உபயம் - கண்ணதாசன்.

-------------------------------------------------

Wednesday, June 22, 2011

அவன் இவன்- A Bala Remake

உலக தமிழர்களே..சினிமா ஞானம் அதிகம் இருக்குற உங்களுக்கு சவால் விடுற கேள்விகள் கீழ இருக்கு.
எங்கே பதில் சொல்லுங்க பாப்போம்..

பாலா படம்.ரெண்டு ஹீரோ சப்ஜெக்ட். ஒருத்தன் வாயாடி.
இன்னொருத்தன் பலசாலி. என்ன படம் ? 

பாலா படம்.ஹீரோ அந்த ஊர் பெரியவருக்கு விசுவாசமா இருப்பான். அவர கொன்ன வில்லன கடைசி சீன்ல ஹீரோ கொடூரமா கொல்லுவான். என்ன படம்?

பாலா படம். அய்யர் ஹீரோயின் பொண்ண பொறுக்கி ஹீரோ கிண்டல் பண்ணி கலாய்ப்பான். அப்புறம் அந்த பொண்ணு அவனையே  காதலிப்பா. என்ன படம்?

பாலா படம்.ஊர்க்கு வந்த சினிமா நடிகனோ,நடிகையோ ஹீரோவ புகழ்ந்துட்டு போவாங்க.என்ன படம்?

பாலா படம்.லூசு மாதிரி ஒரு ஹீரோயின் , லொட லொடன்னு பேசிகிட்டு இருப்பா.  என்ன படம்?

பாலா படம்.ஹீரோ கூட இருக்குற பொம்பள கஞ்சா இல்லனா பீடி அடிச்சிட்டோ , வித்துட்டோ, கர்ணகொடூரமா பேசிட்டு இருப்பா.என்ன படம்?

மேல கேட்ட கேள்விக்கு எல்லாம் நந்தா இல்லேன்னா பிதாமகன்-னு பதில் சொல்லியிருந்திங்கனா நீங்க இன்னும் 'அவன் இவன்' பாக்கலைன்னு அர்த்தம்.
படம் இன்னும் பாக்கலையேன்னு வருத்தப்பட வேணாம்.இதிலையும் அதே பழைய விஷயத்தைதான் காசு கொடுத்து மறுபடியும் பாக்க போறீங்க.




அவன் இவன்னு படத்துக்கு பேர் வெச்சுட்டு  அவன பத்தியும்  இவன பத்தியும்..அட எவன பத்தியும் சரியா சொல்லல பாலா.. பேசாம படத்துக்கு ' நான் எடுத்த படங்கள் - திரும்பி பார்க்கிறேன்'னு பேர் வெச்சிருக்கலாம்.

ஆனா நடிக்கிறவங்க எல்லாரும் புதுசுங்க. இந்த படத்துல சத்தியமா லைலா கெடயாது - ஜனனி அய்யர். ராஜ்கிரண் கெடயாது - ஜி.எம்.குமார். சங்கீதா கிடையாது - அம்பிகா.முக்கியமா விக்ரம் கெடையாது - விஷால். இது போதாதான்னு பாலா நெனச்சுடாரு போல.

மக்களை , அவங்க ஏமாற்றத்த சொல்லியும் குத்தமில்லை.
இது பிதாமகன் மாதிரி இருக்கும்னு நெனச்சு வந்தா மறுபடியும்  பிதாமகனையே போட்டு காட்டுனா கடுப்பாகுமா இல்லையா?

'அவன் இவன்' காமெடி படம்னு முன்னாடியே சொல்லியிருந்தா இவ்வளவு எதிர்பாத்து ஏமாந்திருக்க  மாட்டோம். சொல்லாம இருந்ததும் சரிதான். இது காமெடி படமும் இல்ல.
அப்போ ஆக்சன் படமா பாலா சார் ? அப்படியும் தெரியலயே. சரி முடிவா சொல்லுங்க - என்ன மாதிரி படம் இது ? ..ஐயோ பாவம் அவரே கன்ப்யூஸ் ஆயிட்டாரு.

பிதாமகன்ல விக்ரம் எண்ணெய் வைக்காத செந்தலையோட, காரைப்பல்லோட  சுத்தறதுல ஒரு அர்த்தம் இருக்கு. அவர் கேரக்டர் அப்படி.  அதுதான் கதையோட  அஸ்திவாரமேனு சத்தமா பதில் சொல்ல உரிமை இருக்குற
உங்களுக்கு... இதுல   விஷால் ஏன் சார் ஒண்ணரைக் கண்ணோட வராரு , அதுவும் பெண் தன்மை கலந்திருக்கிற மாதிரின்னு கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க ?



உங்க நாலு படமும் நாலு விதமான மக்களைப் பத்தி உருப்படியா காமிச்சுது. படிக்கிற காலத்துல அடாவடியும் காதலும் பண்றவன் கதை , தப்பான அப்பாவால கொலைகாரனா  வளர்ந்தவன் கதை , இலங்கை அகதிகளோட வாழ்க்கை, வெட்டியான் மனநிலை , சில்லறைத்  திருடன் பொழப்பு, சாமியாரா போனவன்  சமூகத்துக்கு திரும்பி வந்தா நடக்குற கதைன்னு ராஜ நடை போட்ட நீங்க  எவன் கதைய , யார் மனநிலைய , எந்த சமூக விஷயத்தை சொல்லும்னு எதிர்பார்த்து ஒரு வருஷமா இந்த படம் எடுத்தீங்க?

சரி எதையும் தெளிவா சொல்ல வேணாம் .. லைட்டாவாவது புரிய வெச்சிருக்க முயற்சி பண்ணியிருக்கலாம். என்னமோ போங்கடான்னு விட்டுட்ட மாதிரி இருக்கே  பாலா?

தாராளமா அடித்தட்டு மக்கள் கதைய எடுங்க , ஆனா அத மட்டுமே எடுத்துட்டு இருந்தீங்கனா ஓவர்டோஸ் ஆகி , லாலாலா விக்ரமனுக்கும்,  செண்டிமெண்ட் சேரனுக்கும் நடந்ததுதான் உங்களுக்கும் நடக்கும். அப்புறம் நீங்களா மாறணும்னு நெனைச்சு உண்மையா வேற மாதிரி படம் கொடுத்தாலும்  , ஏதோ செயற்கையா பண்ற மாதிரி இருக்கும். ஏற்கனவே மத்தவங்களுக்கு நடந்த கதைதான்.

உங்க குருநாதர் மட்டும் என்ன மூன்றாம் பிறை ,வீடு, மறுபடியும்-னு அழுகை படங்களாவேவா கொடுத்தாரு? ரெட்டைவால் குருவியும் , சதிலீலவதியும் இடையில கொடுத்து வெரைட்டி காமிச்சாரு. உங்களுக்கு தெரியாதா என்ன?

விஷாலுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க பாலா.  உசுர கொடுத்து நடிச்சிருக்காரு. ஆனா பாவம்
ஏன் ? எதுக்குன்னு கேள்வி கேட்காம நடிச்சிருக்காரு. அவருக்காவது  அவர் கேரக்டர் பத்தி
 தெளிவா சொன்னிங்களா பாலா? அவருக்காவது புரிஞ்சுதா?

சரி அவர விடுங்க..இந்த படம் யாருக்கு பிரயோஜனமோ இல்லையோ அவருக்கு இருக்கு.இத வெச்சு இன்னும் ஒரு வருஷம் ஓட்டிடுவாரு. 



பாலா..உங்க நாலு படங்களும் அருமையான படங்கள்தான்.ஆனா அதுவே நாலு பக்கமும் நின்னுகிட்டு உங்க கற்பனையை தடுக்குது. அதைத்தாண்டி வாங்க.
ஷங்கர்கிட்ட கூட கதை கேட்டபின்னாடிதான் நடிக்க வர சில நடிகர்கள் ,உங்க குரலுக்கு மட்டும்தான் போட்டத போட்டபடி வந்து நிப்பாங்க.  அதை காப்பாத்துங்க.

யாரும் உங்க மேல கோபப்படல பாலா.. அப்படியே கோபபட்டாலும் அதுல தப்பு இல்ல... காரணம் நல்ல படங்கள கொடுங்க சார்-னு நாங்க பேரரசுகிட்ட கேட்க முடியாது.கேட்கவும் கூடாது. உங்ககிட்டதான் அப்படி உரிமையா கேட்க முடியும். நீங்களும் கை விட்டுடீங்கனா ,அப்புறம் எங்க கதைய யார் படமா எடுப்பாங்க ?

இது வீழ்ச்சி இல்ல பாலா. வெறும் திருஷ்டிதான். திரும்பி பாக்காம வேகமா அடுத்த நல்ல கதைக்கு வந்துடுங்க..


அவன் இவன்  - பாக்க வேண்டிய படம்னும் இல்ல. பாக்க கூடாத படம்னும் இல்ல..ஆனா உங்ககிட்ட இருந்து வரக்கூடாத படம்.இது மாதிரி படம் கொடுக்க/கெடுக்க ஆயிரம் பேர் இருக்காங்க.

ஆனா எங்கள இழுக்கற  பாலா-ங்கற அந்த காந்தம்  நீங்க ஒருத்தருதான பாலா!!!!

Friday, June 17, 2011

பயணிகள் கவனத்திற்கு...

கடந்த ஒரு வாரமாக கனத்த மனதுடன்தான் நடமாட முடிகிறது. காஞ்சிபுரம் அருகே நடந்த தனியார் பேருந்து விபத்தில் எனக்கு 
தெரிந்த மூன்று பேரை இழந்திருக்கிறேன்.
அதுவும் கருகிய நிலையில் பிணங்களை அடுக்கி வைத்திருந்த புகைப்படத்தைப் பார்த்தபோது , வலி அதிகமாகிறது.

எல்லாரும் பேருந்து ஓட்டுனரையும் அதன் நிறுவனத்தையும் குறை சொல்கிறார்கள்.ஒரு வகையில் அது உண்மையே.ஆனால் முழுதாக குறை சொல்வதற்கு முன் நாம் எப்படி தனியார் பேருந்துகளை சார்ந்திருக்கும் நிலைமைக்கு வந்தோம் என்பதை திரும்பிப் பார்க்க வேண்டியது கட்டாயமாகிறது.



அது தொண்ணூறின்  தொடக்கம். தமிழகத்தின் எந்த ஊரிலிருந்தும் தலைநகரமான சென்னைக்கு போவதானால் எல்லாரும் அணுகுவது ரயில் வசதியை மட்டுமே.இள வயதுள்ளவர்களும்,கடின பயணத்துக்கு பழக்கப்பட்டவர்களும் மட்டுமே பேருந்தை ,அவ்வளவு நீண்ட பயணத்துக்கு 
பயன்படுத்துவார்கள்.

பெரும்பாலும் ஒரே பேருந்து உபயோகம் 
அப்போது இல்லை. இரண்டு , மூன்று பேருந்துகள் மாறி  மாறி சென்னையை அடைய வேண்டியிருக்கும்.ஆனால் இப்படி பயணிப்பவர்கள் மிக சொற்பமே. மீதி பேர் ரயிலின் சுகமான அலுப்பில்லாத , பயணத்திற்கும் , நிதானமான கட்டணத்துக்கும் பழகி ரயிலையே சார்ந்திருந்தார்கள்..இப்போதும் இருக்கிறார்கள்.

அடுத்த பத்து வருடத்தில் மக்கள் எண்ணிக்கை கூட , சென்னையின் தரமும் வேலைவாய்ப்பும் அதிகரிக்க , பயணிகளின் எண்ணிக்கை மிக கணிசமாக உயரத் தொடங்கியது. அதற்கு ஈடாக எத்தனை 
ரயில்களைத்தான் ,பெட்டிகளைத்தான் அரசும் அதிகரிப்பது ? 

பயணிகளுக்கு வேறு வழி இல்லை. மாறி மாறி செல்லும் பேருந்துகளை முயற்சி செய்து பார்த்து , அந்த பயணத்தின் அலுப்பில் அடுத்த நாட்களை தூக்கம் இழந்த கண்ணோடும் , சோர்வோடும் எதிர்கொண்டு கிரங்கியிருந்தார்கள்.அவர்களின் வேலை பாதிக்கப்பட்டது.

பயணிகள் இருவகை உண்டு :
மனைவி,குடும்பத்தை ஊரில் விட்டு , வாரம் ஒரு நாள் விடுமுறையில் வீடு வரும் திருமணம் ஆனவர்கள்.
மாதம் , இருமாதங்களுக்கு  ஒரு முறை பெற்றோரைக் காண வரும் திருமணம் ஆகாத பயணிகள்.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது முதல் வகையே. காரணம் இரண்டாம் வகை பயணிகள் பொறுத்திருந்து ரயிலில் முன்பதிவு செய்து மாதம் ஒரு முறை வருவதால் அது அவர்களுக்கு போதுமானதாய்  இருந்தது. ஆனால் வாரம் ஒரு முறை வீடு செல்லும் கட்டாயம் உள்ளவர்கள் ,எப்படி இதே முறையை பயன்படுத்துவது? அது சாத்தியம் என்றாலும் அப்போதைய நேரடி முன்பதிவு மட்டுமே இருந்த காலத்தில் ,மிக கடினமாய் இருந்தது.


 இங்குதான் தொடங்கியது தனியார் பேருந்து சேவை.
 இந்த பயணிகளை குறி வைத்து ,இவர்கள் தேவை என்ன என்பதை அறிந்து அருமையான திட்டத்துடன் களம் இறங்கின இந்த நிறுவனங்கள்.

'இவர்களுக்கு இருப்பது வார இறுதி நாட்கள் மட்டுமே. ஆக முக்கிய தினங்கள் இரண்டு - வெள்ளி , ஞாயிறு. அதில் கூடியவரை   அலுப்பில்லாமல் இவர்களை அழைத்து  சென்றால்  ,தரமான இந்த சேவையை தொடர்ந்தால் நிரந்தர வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வருவார்கள். ஆனால் இந்த சொகுசான பயணத்தைக் கொடுக்க , அரசு பேருந்துகள் போல் சாதாரண கட்டணம் கட்டுபடியாகாது. இரண்டு மடங்காக இருந்தால் மட்டுமே சமாளிக்க முடியும். முயற்சிப்போம். .பயணிகளின் வரவேற்பு   எப்படி இருக்கிறது என்று..' என சிந்தித்தபடி தொடங்கியது தனியார் சொகுசு பேருந்து சேவை.



எதிர்பார்த்தபடி வந்து குவிந்தன பயணிகள் கூட்டம். 'எனக்கு தேவை என் குடும்பத்துடன் செலவழிக்க இரண்டு நாள். போக வர அலுப்பில்லாத பயணம்.இதை தரும் இவர்களுக்கு கட்டணம் அதிகம் என்றாலும் தலையாட்ட வேண்டியதுதான். வேறு என்ன செய்ய ? ' என்று வந்த பயணிகள் கூடுதல் சலுகையாய் கிடைத்த மிக வேகமான பயணத்தையும் , இரட்டை ஓட்டுனர்கள் உள்ள பேருந்தையும் பாராட்டி ,அவர்களின் பேருந்துக்கு ஆதரவு அளித்தனர்.

இது வரை இரு சாரார் பக்கமும் தவறு இல்லை. இவர்கள் தேவை பூர்த்தியாகிறது.அவர்களின் வேலைக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. A Well Balanced Equation.

முன்னேற்றத்தின் அடுத்த கட்டமாக
திடீரென்று வந்தது சென்னை மற்றும் அண்டை மாநில தலைநகர் பெங்களுரின் புதிதாய் முளைத்த
எக்கச்சக்க  வேலை வாய்ப்புகள்.கூடவே தகவல் தொழில்நுட்பத்தின் துறை சார்ந்த முன்னேற்றமும் நம் ஊர்
பிள்ளைகளுக்கு அங்கே செல்ல வேண்டிய கட்டாயம் உருவாக்கியது. இப்போது பயணிகள் எண்ணிக்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மும்மடங்கு.

ரயிலுக்கு போவதென்றால் அருகிலிருக்கும் பெரிய ஊரின் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து சென்னைக்கு/பெங்களுருக்கு  போக வேண்டும். ஆனால்  தனியார் பேருந்துகளின் கிளைகள் ஒவ்வொரு ஊருக்கும் இருக்கிறதே.இரவு வரை வீட்டில் இருந்து விட்டு மெல்ல செல்லலாமே என்ற
நியாயமான வாதம் ,இந்த பக்கம் காந்தம் போல  இழுக்க எதுவாய் இருந்தது.

பையனோ பெண்ணோ ஊர்க்கு விடுமுறையில் வருகிறேன் என்று சொன்னால் பெற்றோர் கேட்கும் அடுத்த
கேள்வி 'எந்த பஸ்ல வர? இப்போவே ரிட்டனும்  புக் பண்ணிடுறேன்.அப்போதான் இடம் கிடைக்கும்' என்பதுதான். இந்த நிலையில் ரயிலையும் அரசு பேருந்தையும் நம் மக்கள் மறந்தே  போயிருந்தனர் , ஒரு சில நாற்பது ஐம்பது வயது பயணிகளைத் தவிர .

நல்லபிள்ளைகளாக இருந்த தனியார் பேருந்துகள் தடம் மாறியது இந்த சந்தர்ப்பத்தில்தான். அடடா..இப்போது உணவு , உடை போல
பயணிகளுக்கு நம் சேவையும் தேவையான ஒன்றாகி விட்டது
என்று தெரிந்ததும் அவர்கள் பணிவும் உபசரிப்பும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு கூட அல்ல சிற்றெறும்பு ஆன கதை ஆனது.

கோயம்பேட்டில் இந்த தனியார் பேருந்துகளுக்காகவே தனியாக நிலையம் உருவானது.ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை
ஏறும்போது அதை காரணமாக காட்டி மிக அதிகமாக கட்டணத்தை உயர்த்தியபோதும்
மக்கள் கூட்டம் இம்மியும் குறையவில்லை. 
போதாகுறைக்கு ஆன்லைனில் புக் செய்யும் வசதியும் வந்ததால் இளவயது பயணிகளுக்கு இன்னும் வசதி.தீபாவளி , பொங்கல் போன்ற விடுமுறைகளுக்கு ஒரு மாதம் முன்பே முன்பதிவுக்கு ராத்திரி பனிரெண்டு மணி வரை விழித்து  புக் செய்யும் ஒருவித நாகரீகத்துக்கு மிக நேர்த்தியாக தள்ளப்பட்டது நம் மக்கள் நிலை. கேன்சல் செய்தால் பதினைந்து சதவீத பணம் எடுப்பார்கள் என்று தெரிந்தும் புக் செய்யும் நிலைமை.
நாம் என்ன செய்தாலும் இவர்களுக்கு நம்மை விட்டால் வேறு வழி இல்லை என்று தன்  ஆட்டத்தை தொடங்கியது இந்த சேவை.

  • விடுமுறை நேரங்களில் அநியாய விலைக்கு டிக்கெட் விற்பது 

  •  மிக நேரம் தாழ்த்தி வண்டி எடுப்பது

  •  தங்களுக்கு வருமானத்தில் பங்கு தருகிறார்கள்                 என்பதற்காக ஊருக்கு வெளியே தாண்டி மிக மட்டமான ஹோட்டலில்  இரவு  உணவுக்கு இறக்கி விடுவது

  • ஓட்டுனரும், கூட உதவிக்கு இருக்கும் நபரும் பயணத்தின் போது அநாகரீகமாக பேசுவது;எதிர்த்து கேட்டால் 'போய் புகார் பண்ணிக்கோ' என்று அலட்சியமாக பதில் சொல்வது

  • 'ரெட்பஸ்' என்னும் மூன்றாம் நிறுவனம் மூலம் புக் செய்திருந்தால் ,தங்கள் கிளை லாபம் போகிறது என்று , சம்பந்தப்பட்ட பயணியை மரியாதைக்குறைவாக நடத்துவது

  • நேரம் தாழ்த்தி வண்டி எடுத்ததை ஈடு செய்ய இரவில் மிக வேகமாக வண்டி ஓட்டுவது  

இப்படி இன்னும் நிறைய. யார் இந்த பூனைகளுக்கு மணி கட்டுவது ? அரசுதான் என்று சொன்னால் நீங்கள்  முதுகெலும்பு இல்லாதவர் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.

அரசு செய்ய வேண்டியது குறைவுதான்.
  • இருக்கும் அரசு பேருந்துகளை நல்லபடியாக செம்மைபடுத்தி வசதியான பயணத்துக்கு உத்திரவாதம் தரவேண்டும்.

  • ஒருமுறை போக்குவரத்து அமைச்சர் எந்த துரித பேருந்திலாவது போய் பூச்சிகடிகளுக்கு மத்தியில்,உடைந்த ஜன்னல்   அருகே ,சாய்வு வசதி செயலற்ற சீட்டில் அமர்ந்து அனுபவப்பட்டு பிறகு செய்வதை செய்யட்டும்.

  • எந்தெந்த ஊர்களில் , சராசரியாக எவ்வளவு பேர் பெரிய நகரங்களுக்கு  செல்கிறார்கள்  என்று கணக்கெடுப்பு நடத்தி ,அந்த ஊர்களில் இருந்து தரமான அரசு  பேருந்துகளை  (குறைந்தது வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலாவது  ) இயக்க வேண்டும்.அரசுக்கும் வருமானம் கிடைக்கும்.முக்கியமாக அப்படி இயக்கும் பேருந்துகளை , கர்நாடகாவில் இருப்பது  போல ஆன்லைனில் புக் செய்யும் வசதி செய்ய வேண்டும்.

  • தனியார் பேருந்துகளின் தரம்,ஒழுக்கம், சாலை விதிகள் பேணல் - இவற்றை கவனிக்க ஒரு குழுவோ ஆணையமோ  அமைக்க வேண்டும் . விதிகள் தவறினால் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு லைசன்ஸ் ரத்து செய்ய குழுவுக்கு  அங்கிகாரம் வழங்க வேண்டும்.அவர்களை மக்கள் நேரடியாக அணுகும்படி வசதி செய்ய வேண்டும்.



சரி.. அரசு செய்வதை செய்யட்டும். நம் வகையில் என்ன செய்யலாம்?

தனியார் பேருந்தில் செல்வதும் , அதுவும் எங்கும் போகாமல்  நம் ஊர் கிளையிலிருந்தே ஏறிக்கொள்வதும் வசதிதான். ஆனால் அதற்காக அநியாய கொள்ளைக்கு தெரிந்தே அதரவு அளிக்க கூடாது. அதே சமயம் அதிக பணத்தைப் பற்றி கவலைப்பட தேவை இல்லை. வாங்கும் வசதி உள்ளவர்கள் போகட்டும். ஆனால் அதற்கேற்ப நாகரீகமான,பாதுகாப்பான , வசதியான சேவையை தரவில்லை என்றால் கேள்வி கேட்க வேண்டும்.

  • ஒரு பயணியை தரக்குறைவாக நடத்தினால் மீதி பேர் தூங்குவது போல் நடிக்காமல் தட்டிகேட்க வேண்டும். எப்போதும் கூட பயணிப்பவர்களுடன் சேர்ந்து சென்று அணுகி கூட்டமாக கேளுங்கள்.கிடைக்கும் பதிலில் எப்படி மரியாதை உயர்ந்து வருகிறது  என்று பாருங்கள். ஒரு கை ஓசை உதவிக்கு வராது.

  • மாற்று போக்குவரத்துக்கு எப்போதும் ஆதரவளியுங்கள்.கூடியவரை ரயிலில் செல்ல பாருங்கள். மூன்று மாதம் முன்னமே பதிவு செய்யுங்கள். கான்சல் செய்ய வேண்டியிருந்தால் கவலை இல்லை. அவர்கள் எடுக்கும் பணம் மிக சொற்பமே.அது உங்களுகே தெரியும்.

  • எதாவது தவறு   செய்தாலோ அல்லது உங்களுக்கு மோசமான அனுபவம் நடந்தாலோ மேற்படி நிறுவனத்திற்கு புகார் செய்யுங்கள். பலன் இருக்காது.ஆயினும் செய்வது நம் கடமை.பின் அதையே வண்டி எண் ,பிற விபரங்களுடன்  உங்கள் நண்பர்களுடன் ஃபேஸ்புக்கிலோ ,வேறு சமுக இணையதளத்திலோ பகிருங்கள்.எது எதற்கோ ஸ்டேடஸ் மெசேஜ் போடும் நீங்கள் இதையும் போட்டால் மற்றவர்கள் அறிய வசதியாய் இருக்கும்.


  • முக்கியமாக , சரியான நேரத்தில் பேருந்து வரவில்லை என்றால் உடனடியாக என்ன காரணம் என்று கேளுங்கள். பயண நேரத்தை கணக்கு வைத்துக்கொண்டு ,வண்டி எவ்வளவு தாமதமாக எடுக்கபடுகிறது என்று  நேரத்தை பாருங்கள். காலையில் நீங்கள் எப்போதும் போல் சரியான நேரத்தில் ஊர் சேர்ந்தால் , வண்டி ஆபத்தான வேகத்தில் வந்திருக்கிறது என்று அர்த்தம். இதையும் எல்லாரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள். 

  • நினைவிருக்கட்டும்-வண்டி தாமதமாகும் ஒவ்வொரு வினாடியும் , வேகத்தை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தத்தை ஓட்டுனருக்கு உருவாக்குகிறது.

  • முன் எல்லாம் இரண்டு ஓட்டுனர்கள் இருப்பார்கள்.இப்போது ஒரு பேருந்துக்கு ஒருவரே தென்படுகிறார்.விசாரியுங்கள்.முதல் நாளும் ஒய்வு எடுக்கவில்லை என்று அவர் சொன்னால் அதையும் நிறுவனத்திடம் கேளுங்கள்.

  • மிக அதிகமாக அநியாயம் நடப்பதாக தெரிந்தால் மொத்தமாக எல்லோரிடமும் நடந்தவையை எழுதி அதை உறுதிபடுத்த கையெழுத்தும் , முகவரியையும் வாங்குங்கள்.நுகர்வோர் நீதிமன்றம் செல்ல நமக்கு உரிமை உள்ளது.

இதை எல்லாம் செய்தால் இது போன்ற தவறுகள் எப்படி நடக்கும் என்று பார்ப்போம்.

மொத்தத்தில்..பகிருங்கள் சார்.. தகவல்களை பகிர்வதுதான் நம் பலமே. எல்லாருக்கும் ,  நடப்பது உடனுக்குடனே தெரிகிறது என்றால் யாரும் தவறுகளை மேற்கொண்டு செய்ய பயப்படுவார்கள் .முன் போல இந்த ஒருங்கிணைப்புக்கு சங்கமோ வேறு எதுவோ தேவை இல்லை. இணையம் என்ற மிகப் பெரிய ஆயுதம் நம்மிடம்   உள்ளது.அதை கேடயமாகவும் பயன்படுத்தலாம்.கூர்வாளாகாவும் பயன்படுத்தலாம். இனி உங்கள் முடிவு.



ஃபேஷ்புக்கோ , ட்விட்டரோ..  இந்த தகவல்களை உங்கள் நண்பர்களிடம் கொண்டு சேர்ப்பது உங்கள் முதல் பொறுப்பு. இனியாவது ஒவ்வொரு பெற்றோரும் , தங்கள் பிள்ளைகள் பயணிக்கும் இரவு பயமின்றி உறங்கட்டும்.

 விபத்தில் உயிரிழந்த மக்களுக்கு கண்ணீரை விட,அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் வார்த்தைகளை விட , இதில் நாம் கற்ற பாடமும் ,அதில் பெற்ற விழிப்புமே சிறந்த அஞ்சலியாகட்டும் .

Monday, June 13, 2011

பாப்கார்ன் பாக்கெட்- 20110609

தேர்தலுக்குப் பிறகு அதிமுக என்ற கட்சியே காணாமல் போகும் என்று அஞ்சாநெஞ்சன்  சொன்னார். தேர்தலுக்கு பின் 'இனி சூரியன் உதிக்கவே உதிக்காது' என்று அம்மா சொல்லியிருக்கிறார். ஆனால் இதையெல்லாம் செயல்படுத்தும் மக்கள் அமைதியாக இருக்கிறார்கள் - எப்போதும் போலவே.ஆனால் இது புயலுக்குப் பின்னான  அமைதி என்று அம்மாவுக்கு இன்னும் புரியவில்லை.



எந்த அரசியல் சாணக்யனாலும் மக்களின் மனநிலையை
முழுதாக புரிந்துக்கொள்ள முடியாது.

பார்ப்போம் .. சூரியன், இலை,கை,முரசு எல்லாம் அடுத்த ஐந்து வருடத்தில் என்ன பரிணாம வளர்ச்சி அடைகிறது என்று..

ஹிஹி அதுவரைக்கும் நாம் எப்போதுமே மிக புனிதமான  பார்வையாளர்கள் கட்சியில் இருந்து ஆட்டத்தை கவனிப்போம்.
-----------------------------------------------------------------------

'இந்திய பிக்காஸோ' ஹுசைன் காலமாகி விட்டார். ஓவியத்தின் புது பரிணாமத்தை
காட்டியவர். கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்தவர் - கூடவே  எதிர்ப்பையும். பத்மஸ்ரீ விருதுக்கு சொந்தகாரர். சில படங்களும் இயக்கி தயாரித்துள்ளார். கலைஞனுக்கே    உண்டான கர்வமும் வளைந்து கொடுக்காத தன்மையும் இவரிடம் இருந்தது. இவருக்கு பாரத ரத்னா வழங்குவதற்காக,  ஆதரவாளர்கள் அளித்த மனு பரிசீலனையில் உள்ளது.


இந்து பெண் தெய்வங்களை ஆபாசமாக வரைந்தவர் என்று குற்றச்சாட்டு இவர் மீது  உண்டு. அதற்காக பலமுறை தாக்கப்பட்டிருக்கிறார். சிவசேனா அமைப்பினரின் நிரந்தர எதிரி. லண்டனில் கண்காட்சி நடத்தி பணம் சம்பாதித்த போதும் ,அங்கும் எழுந்த  எதிர்ப்பு , கண்காட்சியை மூட வைத்தது.
எனக்கு ஓவியக்கலையில் எந்த அறிவும் கிடையாது- ரசிப்பதை தவிர.
எந்த கருத்தை வலியுறுத்த இப்படி வரைந்தார் என்று எங்காவது விளக்கியிருக்கிறாரா என்று தெரியவில்லை. ஆனால்  நம் கோவில் சிற்பங்கள் கூட அப்படி ஆபாசமாகத்தானே  உள்ளன என்று யாரும் இதுவரை
சிந்திக்கவில்லை. காரணம் கோவிலில் நம் எண்ணங்கள் தவறான கண்ணோட்டத்துக்கு போவதில்லை.அதனால் சிற்பங்கள் ஆபாசமாக தெரிவதில்லை.

ஒருவேளை இவரின் ஓவியங்களையும் , நல்ல கண்ணோட்டத்துடன் பார்த்தால் யாருக்கும் உறுத்தாதோ ? அப்படியானால் தவறு ஓவியம் மீதல்ல , பார்ப்பவர் எண்ணப்படி தானே ?  இது என் நிலைப்பாடு அல்ல. ஏதோ இப்படியும் சிந்திக்கலாமே என்று தோணியது.அவ்வளவுதான்.


எப்படியோ , நிறைவான கலை வாழ்வை வாழ்ந்து விடைபெற்றிருக்கிறார் ஹுசைன்.அவரின் கலைத்திறனுக்கும் சாதனைகளுக்கும் தலைவணங்குவோம்.
------------------------------------------------------------------
இப்போதான் விக்ரம் திரும்ப ட்ரேக்குக்கு வந்திருக்கிறார். ரொம்ப வருஷம் கஷ்டப்பட்டுட்டு பாவம் அவர் பாட்டுக்கு  தில்,தூள்,சாமி,அந்நியன்னு கமர்சியல் படங்கள் கொடுத்து ஹிட் அடிச்சிட்டு இருந்தாரு. அவரை 'பீமா'  மூணு வருஷம்  , கந்தசாமி ஒரு வருஷம் , ராவணன் ரெண்டு வருஷம்னு மொத்தமா குத்தகைக்கு எடுத்து கவுத்து காயப்படுத்துனாங்க.



 நல்ல வேளை 'பொன்னியின் செல்வன்'  ட்ராப் ஆகி இவர்
காரியரை காப்பாத்துச்சு.  இப்போ ரிலீஸ் ஆகப்போற தெய்வத்திருமகன் நல்ல திருப்புமுனை கொடுக்கும்னு ட்ரைலர்
நம்ப வைக்குது.மதராசப்பட்டினம் விஜய் இந்த படத்தையும் ரிச் கிளாசிக்கா எடுத்திருக்கார். 

மிக கவனமா நடிக்க வேண்டிய கேரக்டர்.குணா கமல் , வில்லன்  அஜித் சாயல் வராம அதே சமயம் மனநிலை பாதிக்கப்பட்ட நபரோட அழுத்தம் குறையாம நடிக்கணும்.அதவிட முக்கியம் , பிதாமகன்ல ஏறத்தாழ இதே பாத்திரம்.அதன் சாயலும் இருக்க கூடாது. விக்ரம் நடிப்பு ,முகபாவனை ஓவர் ஆக்டிங் இல்லைன்னு தெரியுது. எதிர்பார்ப்போம்.



உடனே அடுத்த படம்  'ராஜபாட்டை' வேலைல இறங்கி மறுபடியும் சுறுசுறுப்பாகிட்டாரு. தொடர்ந்து மூணு ஹிட் கொடுத்த சுசிந்திரன் டைரக்சன். இதுவும் விக்ரமுக்கு  பழைய இடத்தை வாங்கி தர ஸ்கோப் இருக்கு.பார்ப்போம்.கமான் சியான்.
 -------------------------------------------------------------------------

ஒருவரின் நம்பிக்கையை , அடுத்தவர் நினைத்தால்  மிக எளிதாக சிதைத்து விட முடியும் என்பதற்கான காட்சி.இந்த கருத்தை இதை விட நகைச்சுவையாக யாராலும் சொல்ல முடியாது.




'மேன் ப்ரம் தி சவுத் ' 
என்னும் சிறுகதையிலிருந்து அதன்  கருவை  எடுத்து
ரஜினியின் சிகிரெட் பிடிக்கும் ஸ்டைலை ,லாவகத்தை ,
மிக அழகாக இதில் உபயோகப்படுத்தியிருப்பார் பாலசந்தர்.
ரஜினியும் அருமையாக நடித்திருப்பார்.ஒவ்வொரு தடவையும்  சிகிரெட்டை தூக்கிப் போட்டு பிடித்த பின் , மாறும் அவரின் முக உணர்ச்சிகள் அற்புதம். பந்தாவாக ஆரம்பித்து பின்
பம்முவதில் அவர் காட்டும் அலட்சிய நடிப்பு ரசிக்க வைக்கிறது.
Excellent Rich Classic.
-----------------------------------------------------------------------------

கடைசி கார்ன்:

இது வரைக்கும் கூகுள் மொழிபெயர்ப்பு கருவியைத்தான் பயன்படுத்தி வருகிறேன்.அது என்னை படாதபாடு படுத்தி வருகிறது.மொழிபெயர்க்கும் போது மிக சாதுவாக இருக்கும் அது  , வாக்கியங்களை ப்ளாக்கருக்கு இடம்பெயர்க்கும்போது ஆக்ரோஷமாய் ஃபார்மட்டிங்கை கன்னாபின்னாவென மாற்றி
விடுகிறது.

எனக்கு பதிவை உருவாக்கும் நேரத்தை விட அதை வரிவரியாக ஒழுங்குப்படுத்தி பதிவிடும்போதுதான் அதிக நேரம் எடுக்கிறது.கடினமான வேலைக்கு (உண்மையாக , சத்தியமாக  )இடைப்பட்ட அகால நேரத்தில் , இதெல்லாம் செய்யும்போது எரிச்சலில் சில சமயம் ' இந்த பதிவு வாழ்க்கையில் இருந்து ஒய்வு பெறலாம் ' என்று அறிக்கை கொடுக்க நினைக்க வைக்கிறது.

ஆனால் என்னை நம்பியிருக்கும் கோடிக்கணக்கான வாசகர்கள்  , ஹ்ம்ம் ஓகே லட்சக்கணக்கான ,  அட ஒரு ஆயிரம் , போங்கப்பா.. சரி நூற்றுக்கணக்கான பேர் நிலைமையை எண்ணி அந்த எண்ணத்தை தியாகம் செய்து விட்டேன்.
எனக்கு இதில்  விவரம் தெரிந்த யாராவது உதவினால் என் சேவை தொடரும்.இல்லையென்றால் நானும் 'வலையுலக மக்கள் எனக்கு ஒய்வு அளித்து விட்டார்கள் ' என்று ரத்தினசுருக்கமாய் சொல்லிவிட்டு ஓடிவிடுவேன். 

பாத்துக்கோங்க...
இருக்குற மொக்கைப் பதிவர்கள்ல நான்தான் ரெம்ப கம்மியா மொக்கை போடறேன்னு 'கயோலா-பிக்ஸன்' கருத்துக்கணிப்பு சொல்லிருக்கு.
-------------------------------------------------------------------------

Wednesday, June 8, 2011

மனிதாபிமானம் காப்போம்!

என் முந்தைய இந்த பதிவில் நம் தமிழ் மீனவர்கள்  மீது
சிங்களத்தின் தாக்குதல் பற்றி நம் எதிர்ப்பை தெரிவிக்க கடிதம் அனுப்ப
கோரியிருந்தேன்.அதில் கடைசியாக இப்படி கூறியிருந்தேன் - 'இது காந்திய வழி. நம்மால் ஆன முதல் எளிய நடவடிக்கை. அடுத்த போராட்டங்களுக்கு பிறகு இணைந்து  கை கொடுப்போம்.'

அடுத்த கட்டத்துக்கான நேரம் வந்து விட்டது. இதுவும் காந்திய வழிதான்.அமைதியாக , ஆர்ப்பாட்டம் இல்லாமல் மெழுகுத்திரி ஏந்தி நம் வேதனையை தெரியப்படுத்துவது . யாருக்கு தெரியப்படுத்துகிறோம் என்பதுதான் கேள்விகுறி.

ஆனால் குறைந்தது உலக மக்கள் உண்மையை அறிய ஏதுவாய் இருக்கும். கடலுக்கு நடுவில் அகப்பட்ட ஒரு இனம் படுகொலைகளாலும் , சித்திரவதைகளாலும் பரிதவிக்க , இடையே கடல் தடுத்து நிற்க , வெகு அருகில்  ,அடுத்த கரையில் அந்த இனத்தின் உடன்பிறந்த  கூட்டம் அமைதியாக போராட்டம் செய்வதை உலகம் அறியட்டும்.


ஜூன் 26  - எல்லாரும் மெரினாவுக்கு குடும்பத்துடன் வாருங்கள். இயலாதவர்கள் தனித்து வாருங்கள். வர முடியாதவர்கள் இதைப்பற்றி  கூடிய வரையில் ஊடகங்களில் (ஆர்குட்டோ, பேஷ்புக்கோ , அல்லது உங்கள் வலைப்பக்கமோ  ) பதிவிடுங்கள்.


விடியல் விரைவில் வர வேண்டிக்கொள்வோம்.அதுவரை வெளிச்சம் பெற விளக்கேற்றுவோம்.

Monday, June 6, 2011

நடுநிலையாய் ஒலிக்கட்டும் கேப்டனின் 'முரசு'


உலகத்தில் எந்த  குடியாட்சி ஆனாலும் எந்த நாடானாலும் சரி ,ஆளும் கட்சியை விட விழிப்பாக இருக்க வேண்டியது
எதிர்கட்சியே. காரணம் ,அந்த ஸ்தானத்தில் இருக்கும்போதுதான் மக்களுக்காக குரல் கொடுக்கும்
 முதல் உரிமையும் ,அரசு தவறினால் சுட்டிக்காட்டும் பொறுப்பும் அதிகமாகிறது.  தெளிவாக சொன்னால் ஒரு கட்சி ,தன் ஆளுமை காலத்தை விட , எதிர்கட்சியாய் இருக்கும்போதுதான் மக்களிடம் அதிக அபிமானம் பெற வாய்ப்பு அதிகம்
கிடைக்கிறது.

போன ஐந்து வருடம் அதிமுக அப்படி எந்த ஒரு உருப்படியான செயலையும் மக்களுக்கு செய்யவில்லை. மக்களுக்கு உதவும்படி  ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளி போடாமல் இருந்த கட்சிக்கு , மாநிலம் முழுதும் நிறைந்திருந்த திமுக எதிர்ப்பலை  மட்டுமே ஓட்டுகளாக மாறி மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது . என்ன செய்ய போகிறார்கள் என்று பாப்போம்.

அதிமுகவிற்கு சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. ஆனால் கேப்டன் செய்ய வேண்டியது நிறைய.

ஆறே வருடத்தில் எதிர்க் கட்சியாய் வளர்ந்திருக்கிறது  தேமுதிக. கட்சி  ஆரம்பித்து ஆறே மாதத்தில் ஆட்சியை பிடித்த எம்ஜிஆரை முன்மாதிரியாக நினைத்து , அரசியலுக்கு
வந்தவர்தான் விஜயகாந்த். ஆனால் மிக ஆணித்தரமாக சொல்லலாம். -இரண்டாமவருக்கு துணிச்சல் அதிகம். 

காரணம் அப்போதைய தமிழகத்துக்கு இரண்டே முகவிலாசம் தான். ஒன்று தன் பேச்சாலும் எழுத்தாலும்,அரசியல்
ஞானத்தாலும் 
அதீத  செல்வாக்கு பெற்ற கலைஞர். இன்னொன்று மிக சுமாரான நடிப்பை மட்டும் வைத்திருந்தாலும் , தன் படங்களிலும் அதில் வரும் பாடல்களிலும் மக்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கைவசம் வைத்திருந்த எம்ஜிஆர்.

சிவாஜியை   எல்லாம் அப்போது மக்கள் , தலைவர்கள்  கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. ஆக கலைஞர் சற்றே வெளிப்படையாக தவறிழைக்க , இந்த பக்கம் திரும்பியது மக்கள் ஆதரவு. எஞ்சியிருப்பது ஒரே எதிர் தலைவர். எம்ஜிஆருக்கு ஜெயம்.


ஆனால் விஜயகாந்த் வரும்போது எண்ணற்ற போட்டிகள். ஆட்சியில் ஜெயலலிதா. எதிர்பக்கம் கலைஞர். இரண்டு பக்கமும் எண்ணற்ற ,கைவசம் ஒவ்வொருவருக்கும் இருந்த வாக்கு வங்கிகளுடன் பல தலைவர்கள் என அரசியல் கடலில் பல பெரிய கப்பல்கள் .அவைகளுக்கு நடுவே படகோட்ட வந்தார் விஜயகாந்த்.

ஏற்கனவே ரஜினி சறுக்கியிருக்க , சரத் குழம்பியிருக்க , எதைப் பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலாய்  வந்து அடுத்த மாற்றத்துக்கான ஆணிவேர் ஆதாரமாய் மாறி பல வாக்குகளை திசை மாற செய்து , எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்க விடாமல் , கூட்டணி ஆட்சிக்கு வழிவகுத்தவர் விஜயகாந்த்.

இப்போது இவருக்கு கிடைத்திருப்பது ,இவரே எதிர்பார்க்காத ஜாக்பாட். கிடைத்த வெற்றியை உடனே தலைக்கு கொண்டுபோகாமல் ,பதவியை பந்தாவுக்கு பயன்படுத்தாமல் பக்குவமாய் நடந்தால் அடுத்த முறை அதிமுக-திமுக போட்டி இருக்காது. அதிமுக-தேமுதிகதான். 

'இப்போதைய அரசாங்கம்  நோய்க்கு மருந்து கொடுக்கும் வேலையை நன்றாக செய்து கொண்டு வருகிறது. நன்றாக எனக்கு தெரிகிறது' என்று அரசைப் பாராட்டும் கேப்டன் , கிடைத்தற்கரிய எதிர்கட்சித் தலைவர் பணியை ஒழுங்காக செய்வாரா என்று எல்லார் மனதிலும் எண்ணம் தோன்றி வருகிறது. அரசு கொடுத்த இலவச அரிசியை சில இடங்களில் தன கைப்பட கொடுத்த கேப்டன் , ஆளுனர் உரை மனதிற்கு திருப்தியாக இருக்கிறது
என்றும் 'இப்போதுதான் எல்லாம் ஒரு நேர்கோட்டில் போய்க்
கொண்டிருக்கிறது  ' என்றும் சொல்லியுள்ளார்.  

எனக்கு இவரைப் பார்க்கும் போதெல்லாம் ஏனோ வைகோ ஞாபகம் வந்து தொலைக்கிறது. அவரும் இப்படிதான் ஐந்து வருடமாக அம்மாவுக்கு தலையாட்டி பின்பு கடைசியில் தனிமரம் ஆனார். கேப்டன் அதுபோல் ஆகாமல் முதுகெலும்பை நிமிர்த்தி, இந்த ஆட்சி தவறு செயும்போது சுட்டிக் காட்டினால்தான் அடுத்த முறை மிக  தைரியமாக  மீண்டும் எந்த கூட்டணியையும் நம்பாமல் தனித்து நின்று முதல்வர் ஆக முயற்சிக்கலாம்.

எவ்வளவு   சீக்கிரம் கூட்டணியில் இருந்து வெளியே வந்து எதிர்குரல் கொடுக்க ஆரம்பிக்கிறாரோ
அப்போதுதான் இவருக்கு ஒரு தனி அங்கிகாரம் கிடைக்கும். 
சரி , இன்னும் காலம் இருக்கிறது. 
கூட்டணி தர்மத்திற்காவது(??!!?) ஒரு ஆறு மாதமாவது கூட்டணியில் இருந்து அதன்பின் இந்த தனி ஆவர்த்தன வேலையை ஆரம்பித்தால் கேப்டன் முழு அரசியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று விட்டார்  என்று நம்பி சொல்லலாம்.

அப்படியில்லாமல் ,ஐந்து வருடம் அனுசரணையாக இருந்து விட்டு , தேர்தலுக்கு மட்டும் தனித்து வந்தால் இந்த முறை வைகோவுக்கு நேர்ந்தது போலத்தான் ஆகும்.பார்த்துக் கொள்ளுங்கள்.

(அலார்ட்:  முன்னெல்லாம் ஜெயா டிவிலதான் ஒவ்வொரு தடவையும் மைனாரிட்டி திமுக ,  
மைனாரிட்டி திமுகனு சொல்லி உயிரை வாங்குவாங்க. இப்போ
உங்க கேப்டன் டிவி நியுஸ்ல உங்கள பத்தி சொல்லும்போதெல்லாம், 'தேமுதிக நிறுவன தலைவரும் , தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் ' அப்படின்னு சொல்றத நிப்பாட்ட சொல்லுங்க சார்.. இம்சை அரசன் படத்துல வர 'ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க..'மாதிரியே இருக்கு..)

தேமுதிக , பல விஷயங்களில் பதுங்குவதை விட்டொழிக்க வேண்டும். முதலில் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தன் நிலைப்பாடு என்ன என்று உறுதியாக அறிவிக்க வேண்டும்.உதாரணம்- இலங்கை பிரச்சனை, சமச்சீர் கல்வி, புதிய சட்டபேரவை தேவை...இதில் நீங்கள் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லுங்கள்.ஒதுங்காதீர்கள். இல்லையென்றால் சிரஞ்சீவி கதிதான்.

'நான் ஆட்சிக்கு வந்ததே கலைஞரை ஒழிக்கத்தான் ' என்று முன்னர் சொன்னதை ஏறக்குறைய செய்தாகி விட்டது. ஆனால் அதே வசனம் காலத்துக்கும் உதவாது. மூன்றாம் சக்திக்கு ஒதுங்கிய கூட்டம்தான் இன்று வரை உங்களிடம் அதிகமாக இருக்கிறது. அதை தக்க வைக்க வேண்டுமானால் - நீங்கள் உதவுவீர்கள் ..எளிதில் நெருங்க கூடியவர்  என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுங்கள்.

சமீப காலமாக உங்களிடமும் சில ஆணவப்போக்கு   தென்படுகிறது. மக்கள் பேய்க்கு  பயந்து பிசாசிடம் வரமாட்டார்கள்.தமிழகத்துக்கு ஒரு ஹிட்லர் போதும்.

குடும்ப அரசியல் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.அது உங்கள் கட்சிக்குள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். மக்களை பாதிக்காத வரை அது ஒரு பொருட்டல்ல.ஆனால் அடுத்த முறை உங்கள் மனைவியும் , மைத்துனரும் தேர்தலில் நின்றால் இருவரும் கடந்த வருடங்களில் என்ன செய்தார்கள் என்று மக்கள் கேள்வி எழுப்பினால்  நியாயமானதே.

29 எம்எல்ஏ என்பது பெரிய வட்டம். விருதாச்சலதிற்கு என்ன செய்தீர்கள் என்று இனி கேட்க மாட்டோம். அப்போது நீங்கள் ஒரு கை ஓசை. இப்போதோ நீங்கள் ஒரு ஆளுமை சக்தி. ஆளும்கட்சி ஆதரவுடன் அந்த
தொகுதிகளுக்கு நல்லதை
செய்தால் அடுத்த முறை அவைகளை மக்கள் பரிசீலனை செய்து அதற்கான பலனை கண்டிப்பாக கொடுப்பார்கள். 


மொத்தத்தில் இது உங்களுக்கு ஒரு பொற்காலம்.அதிமுகவுடன் அடித்தாலும் அணைத்தாலும் நீங்கள் எதிர்கட்சிதான்.அதை முடிந்த வரை மக்களுக்கு உபயோகபடுத்தினால் உங்கள் கட்சிக்கு நல்ல எதிர்காலம்.கட்சிக்கு மட்டுமே பயன்படுத்தினால் மக்களுக்கும் வேறு தலைவர்கள் நிறைய உண்டு.

ஆரம்பத்தில் ஆரவாரமாய் பொங்கி பின் சத்தமே இல்லாமல் அடங்கிப் போகும் சோடா பாட்டில் உற்சாகமாக இல்லாமல்  , நிலைத்து நின்று மக்களுக்கு உதவினால் , இவ்வளவு நாள் கலைஞருக்கு அளித்த ஆதரவை 'புரட்சிக்'கலைஞரான உங்களுக்கும் தருவார்கள் தமிழக மக்கள்.
செய்வீர்களா கேப்டன்?

வாழ்த்துக்களுடனும்  எதிர்பார்ப்புகளுடனும்  ..
வாக்களித்த மக்கள்

Saturday, June 4, 2011

Hang Over 2 - சரக்கு ரிப்பீட்டு..

குங்ஃபூ பாண்டா இரண்டாம் பாகத்தை இரண்டாம் இடத்துக்கு தள்ளி சக்கை போடு போடுகிறது ஹாங் ஓவர் இரண்டாம் பாகம்  . இத்தனைக்கும் குங்ஃபூ பாண்டாவும் இரண்டாம் பாகத்தில் மிக நன்றாக வந்திருக்கிறது என்பது படம் பார்த்தவர்களின் கருத்து. ஆக அதையும் தாண்டி ஹாங் ஓவர் இரண்டாம் பாகம்  நன்றாக ஓடுகிறது என்றால் இந்த இரண்டாம் பாகம்  ,தரத்தில் முதல் தரம் என்பதில் இரண்டாம் கருத்து யாருக்கும் இருக்க முடியாது என்பதில் எனக்கு எந்த இரண்டாம் கருத்தும் இல்லை.  மேலும் இந்த படத்தை இப்போதே பலபேர் இரண்டாவது தடவை பார்த்து விட்டு வருவது இந்த  இரண்டாம் பாகம்  நல்ல படம் என்ற என் கருத்தை இரண்டாவது தடவையாக உறுதிபடுத்துகிறது.சரி ..சீக்கிரம் நான்  இரண்டாம்  பத்திக்கு போய்டறேன்..படம் பார்த்த ஹாங் ஓவர் இன்னும் தீரல.



ரோட் ட்ரிப்,ஓல்ட் ஸ்கூல் படங்கள் கொடுத்த போது டோட் பிலிப்ஸ் பத்தோடு பதினோராவதாக
இயக்குனர் பட்டியலில் இருந்தார்.
அடுத்த  படமும் சரி , பிறகு மிகப்பெரிய நகைச்சுவை நடிகர்களான பென் ஸ்டில்லர்  , ஓவன் வில்சனையும் வைத்து எடுத்த 'ஷ்டார்ஷ்கீ  அண்ட் ஹட்ச்' படமும் சரி அவ்வளவு திருப்தியான படமாக ரசிகர்களுக்கு அமையவில்லை. பிறகு திடீர் என்று தொடர்ச்சியாய் ஹாங் ஓவர் , ட்யூ டேட் என  இரண்டு படம் கொடுத்து   அதிரிபுதிரயாய் ஹிட் அடித்தார்.அதிலும் ஹாங் ஓவர் ,உலகத்தின் எல்லா தரப்பு இளைஞர்களின் சொந்த நிகழ்வுகளை ஒத்திருந்ததால் உலகின் எல்லா  பக்கமும்  கள்ள கட்டியது. அதன் வெற்றியை தொடர்ந்து இன்னொரு பாகம் கொடுக்க வேண்டிய கட்டாயம்.

அதில் வெற்றி பெறுவது மிக கடினம். காரணம் , போட்டியிடுவது வேறொருவர் படத்துடன் அல்ல..தன் முந்தய மாஸ்டர் பீஸ் படத்துடன் . ஆனால் அதை ஒரு சவாலாக எடுத்து சாதித்திருக்கிறார் டோட் பிலிப்ஸ்.

அதே மூன்று நண்பர்கள்.அதில் இப்பொது டாக்டர் நண்பனுக்கு
கல்யாணம்.

பெண்ணின் அப்பா தன் மகனை பெருமை பேசியே இவனை மட்டம் தட்டி மது விருந்துக்கும் தடா போடுகிறார்.எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஒரே ஒரு பீர் மட்டும் என பார்ட்டி ஆரம்பிக்க, பின் படத்தின் விறுவிறுப்பு போதை போல ஏறிக் கொண்டே போகிறது சாரி போகிறதாம்  (ஹீஹ்ஹி நமக்குதான் சரக்கு அடிக்கிற பழக்கம் இல்லையே. அதான் போதை எப்படி ஏறும்னு தெரியல )  . அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்தால் பெண்ணின் தம்பியை காணவில்லை.ஒரு குரங்கும் அதனிடம் அவனின் துண்டிக்கப்பட்ட ஒரு விரலும் அருகில் இருக்க , டாக்டர் பதற ,நண்பர்கள் அவனை தேடி கண்டுபிடித்து திருமணம் நடத்த  முயற்சி செய்வதுதான் கதை.


கதைக்களன் பாங்காக். போனமுறை லாஸ் வேகாஸில் பண்ணிய அதகளத்தை
பாங்காக்கில் தொடரும்  நண்பர்களில் பிராட்லி  கூப்பர்
நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
நமக்கு பிடித்த நாயகன் தாடிக்கார தலைவர் களிபியாநிகிஸ் தான் .
இடையில் போன வருடம் ட்யூ டேட் படித்தில் நடித்த அட்டகாசமான  நடிப்பை தொடர்கிறார்.
அவரைப் பார்த்தாலே சிரிப்பு வருகிறது.அவரின் மேனரிசங்களும் வசன உச்சரிப்புகளும் இன்னும் நம்மை சிரிக்க வைக்கின்றன.

 கதையை சொல்லி உங்கள் படம் பார்க்கும் ஆவலை கெடுக்க விரும்பவில்லை.
கண்டிப்பாக தியேட்டர் சென்று சிரிப்பொலிகளில் ஐக்கியமாகி விடுங்கள்.

அப்புறம் முக்கியமாக இது குழந்தைகளைத் தவிர்த்து பார்க்க வேண்டிய படம். மற்றபடி சிரிப்புக்கு முழு உத்தரவாதம்.அந்த குரங்கு என்ன அருமையாக நடிக்கிறது?
இடையில் வரும் இன்னும் பல பாத்திரங்கள் எல்லாம் சேர்ந்து அடிக்கிற கூத்துகள் நம் அடிவயிராய் பதம் பார்க்கின்றன.



அடுத்த பாகத்திற்கு யோசனை போய்க்கொண்டிருக்கிறதாம் . இன்னும்  கதை யோசிக்கவில்லையாம் இயக்குனர். கதையை விட திரைக்கதையில் தான் உங்கள் பலம். வாழ்த்துக்கள்.

ஆங்கில படத்தில் நாட்டம் இல்லாதவர்கள் அல்லது தமிழ் படம் 
மட்டுமே பார்பேன் என்று அடம் பிடிப்பவர்கள்   ,இந்த படத்தை 
இன்னும் ஓரிரு வருடத்தில் சிம்புதேவன் மொக்கையாக அல்லது  காயத்ரி - புஷ்கரோ  ,வெங்கட் பிரபுவோ நல்லபடியாக எடுப்பார்கள். தமிழ் படம் சிவாவோ ,களவாணி விமலோ, தாடிக்காரர்  வேடத்தில் பிரேம்ஜி அமரனோ நடிப்பார்கள். பார்த்துக் கொள்ளுங்கள். 

 எப்போதும் நகைச்சுவைக்காக ரெம்பவும் சிந்திக்காமல் நம் அன்றாட நிகழ்வுகளில்  எடுத்துப் பார்த்தால் அதுவே பெரிய நகைச்சுவைக்கு ஆதாரம் என்பதை இந்த படத்தின் வெற்றி உணர்த்தியுள்ளது - மீண்டும்.

ஹாங் ஓவர் 2  - அடுத்த ரவுண்டு ஆரம்பிங்கப்பா....