Saturday, June 4, 2011

Hang Over 2 - சரக்கு ரிப்பீட்டு..

குங்ஃபூ பாண்டா இரண்டாம் பாகத்தை இரண்டாம் இடத்துக்கு தள்ளி சக்கை போடு போடுகிறது ஹாங் ஓவர் இரண்டாம் பாகம்  . இத்தனைக்கும் குங்ஃபூ பாண்டாவும் இரண்டாம் பாகத்தில் மிக நன்றாக வந்திருக்கிறது என்பது படம் பார்த்தவர்களின் கருத்து. ஆக அதையும் தாண்டி ஹாங் ஓவர் இரண்டாம் பாகம்  நன்றாக ஓடுகிறது என்றால் இந்த இரண்டாம் பாகம்  ,தரத்தில் முதல் தரம் என்பதில் இரண்டாம் கருத்து யாருக்கும் இருக்க முடியாது என்பதில் எனக்கு எந்த இரண்டாம் கருத்தும் இல்லை.  மேலும் இந்த படத்தை இப்போதே பலபேர் இரண்டாவது தடவை பார்த்து விட்டு வருவது இந்த  இரண்டாம் பாகம்  நல்ல படம் என்ற என் கருத்தை இரண்டாவது தடவையாக உறுதிபடுத்துகிறது.சரி ..சீக்கிரம் நான்  இரண்டாம்  பத்திக்கு போய்டறேன்..படம் பார்த்த ஹாங் ஓவர் இன்னும் தீரல.



ரோட் ட்ரிப்,ஓல்ட் ஸ்கூல் படங்கள் கொடுத்த போது டோட் பிலிப்ஸ் பத்தோடு பதினோராவதாக
இயக்குனர் பட்டியலில் இருந்தார்.
அடுத்த  படமும் சரி , பிறகு மிகப்பெரிய நகைச்சுவை நடிகர்களான பென் ஸ்டில்லர்  , ஓவன் வில்சனையும் வைத்து எடுத்த 'ஷ்டார்ஷ்கீ  அண்ட் ஹட்ச்' படமும் சரி அவ்வளவு திருப்தியான படமாக ரசிகர்களுக்கு அமையவில்லை. பிறகு திடீர் என்று தொடர்ச்சியாய் ஹாங் ஓவர் , ட்யூ டேட் என  இரண்டு படம் கொடுத்து   அதிரிபுதிரயாய் ஹிட் அடித்தார்.அதிலும் ஹாங் ஓவர் ,உலகத்தின் எல்லா தரப்பு இளைஞர்களின் சொந்த நிகழ்வுகளை ஒத்திருந்ததால் உலகின் எல்லா  பக்கமும்  கள்ள கட்டியது. அதன் வெற்றியை தொடர்ந்து இன்னொரு பாகம் கொடுக்க வேண்டிய கட்டாயம்.

அதில் வெற்றி பெறுவது மிக கடினம். காரணம் , போட்டியிடுவது வேறொருவர் படத்துடன் அல்ல..தன் முந்தய மாஸ்டர் பீஸ் படத்துடன் . ஆனால் அதை ஒரு சவாலாக எடுத்து சாதித்திருக்கிறார் டோட் பிலிப்ஸ்.

அதே மூன்று நண்பர்கள்.அதில் இப்பொது டாக்டர் நண்பனுக்கு
கல்யாணம்.

பெண்ணின் அப்பா தன் மகனை பெருமை பேசியே இவனை மட்டம் தட்டி மது விருந்துக்கும் தடா போடுகிறார்.எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு ஒரே ஒரு பீர் மட்டும் என பார்ட்டி ஆரம்பிக்க, பின் படத்தின் விறுவிறுப்பு போதை போல ஏறிக் கொண்டே போகிறது சாரி போகிறதாம்  (ஹீஹ்ஹி நமக்குதான் சரக்கு அடிக்கிற பழக்கம் இல்லையே. அதான் போதை எப்படி ஏறும்னு தெரியல )  . அடுத்த நாள் காலையில் எழுந்து பார்த்தால் பெண்ணின் தம்பியை காணவில்லை.ஒரு குரங்கும் அதனிடம் அவனின் துண்டிக்கப்பட்ட ஒரு விரலும் அருகில் இருக்க , டாக்டர் பதற ,நண்பர்கள் அவனை தேடி கண்டுபிடித்து திருமணம் நடத்த  முயற்சி செய்வதுதான் கதை.


கதைக்களன் பாங்காக். போனமுறை லாஸ் வேகாஸில் பண்ணிய அதகளத்தை
பாங்காக்கில் தொடரும்  நண்பர்களில் பிராட்லி  கூப்பர்
நேர்த்தியாக நடித்திருக்கிறார்.
நமக்கு பிடித்த நாயகன் தாடிக்கார தலைவர் களிபியாநிகிஸ் தான் .
இடையில் போன வருடம் ட்யூ டேட் படித்தில் நடித்த அட்டகாசமான  நடிப்பை தொடர்கிறார்.
அவரைப் பார்த்தாலே சிரிப்பு வருகிறது.அவரின் மேனரிசங்களும் வசன உச்சரிப்புகளும் இன்னும் நம்மை சிரிக்க வைக்கின்றன.

 கதையை சொல்லி உங்கள் படம் பார்க்கும் ஆவலை கெடுக்க விரும்பவில்லை.
கண்டிப்பாக தியேட்டர் சென்று சிரிப்பொலிகளில் ஐக்கியமாகி விடுங்கள்.

அப்புறம் முக்கியமாக இது குழந்தைகளைத் தவிர்த்து பார்க்க வேண்டிய படம். மற்றபடி சிரிப்புக்கு முழு உத்தரவாதம்.அந்த குரங்கு என்ன அருமையாக நடிக்கிறது?
இடையில் வரும் இன்னும் பல பாத்திரங்கள் எல்லாம் சேர்ந்து அடிக்கிற கூத்துகள் நம் அடிவயிராய் பதம் பார்க்கின்றன.



அடுத்த பாகத்திற்கு யோசனை போய்க்கொண்டிருக்கிறதாம் . இன்னும்  கதை யோசிக்கவில்லையாம் இயக்குனர். கதையை விட திரைக்கதையில் தான் உங்கள் பலம். வாழ்த்துக்கள்.

ஆங்கில படத்தில் நாட்டம் இல்லாதவர்கள் அல்லது தமிழ் படம் 
மட்டுமே பார்பேன் என்று அடம் பிடிப்பவர்கள்   ,இந்த படத்தை 
இன்னும் ஓரிரு வருடத்தில் சிம்புதேவன் மொக்கையாக அல்லது  காயத்ரி - புஷ்கரோ  ,வெங்கட் பிரபுவோ நல்லபடியாக எடுப்பார்கள். தமிழ் படம் சிவாவோ ,களவாணி விமலோ, தாடிக்காரர்  வேடத்தில் பிரேம்ஜி அமரனோ நடிப்பார்கள். பார்த்துக் கொள்ளுங்கள். 

 எப்போதும் நகைச்சுவைக்காக ரெம்பவும் சிந்திக்காமல் நம் அன்றாட நிகழ்வுகளில்  எடுத்துப் பார்த்தால் அதுவே பெரிய நகைச்சுவைக்கு ஆதாரம் என்பதை இந்த படத்தின் வெற்றி உணர்த்தியுள்ளது - மீண்டும்.

ஹாங் ஓவர் 2  - அடுத்த ரவுண்டு ஆரம்பிங்கப்பா....

1 comment:

Anonymous said...

//ஆங்கில படத்தில் நாட்டம் இல்லாதவர்கள் அல்லது தமிழ் படம்
மட்டுமே பார்பேன் என்று அடம் பிடிப்பவர்கள் ,இந்த படத்தை
இன்னும் ஓரிரு வருடத்தில் சிம்புதேவன் மொக்கையாக அல்லது காயத்ரி - புஷ்கரோ ,வெங்கட் பிரபுவோ நல்லபடியாக எடுப்பார்கள். தமிழ் படம் சிவாவோ ,களவாணி விமலோ, தாடிக்காரர் வேடத்தில் பிரேம்ஜி அமரனோ நடிப்பார்கள். பார்த்துக் கொள்ளுங்கள். //

Fantastic Lines!!

Post a Comment