Monday, June 6, 2011

நடுநிலையாய் ஒலிக்கட்டும் கேப்டனின் 'முரசு'


உலகத்தில் எந்த  குடியாட்சி ஆனாலும் எந்த நாடானாலும் சரி ,ஆளும் கட்சியை விட விழிப்பாக இருக்க வேண்டியது
எதிர்கட்சியே. காரணம் ,அந்த ஸ்தானத்தில் இருக்கும்போதுதான் மக்களுக்காக குரல் கொடுக்கும்
 முதல் உரிமையும் ,அரசு தவறினால் சுட்டிக்காட்டும் பொறுப்பும் அதிகமாகிறது.  தெளிவாக சொன்னால் ஒரு கட்சி ,தன் ஆளுமை காலத்தை விட , எதிர்கட்சியாய் இருக்கும்போதுதான் மக்களிடம் அதிக அபிமானம் பெற வாய்ப்பு அதிகம்
கிடைக்கிறது.

போன ஐந்து வருடம் அதிமுக அப்படி எந்த ஒரு உருப்படியான செயலையும் மக்களுக்கு செய்யவில்லை. மக்களுக்கு உதவும்படி  ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளி போடாமல் இருந்த கட்சிக்கு , மாநிலம் முழுதும் நிறைந்திருந்த திமுக எதிர்ப்பலை  மட்டுமே ஓட்டுகளாக மாறி மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது . என்ன செய்ய போகிறார்கள் என்று பாப்போம்.

அதிமுகவிற்கு சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. ஆனால் கேப்டன் செய்ய வேண்டியது நிறைய.

ஆறே வருடத்தில் எதிர்க் கட்சியாய் வளர்ந்திருக்கிறது  தேமுதிக. கட்சி  ஆரம்பித்து ஆறே மாதத்தில் ஆட்சியை பிடித்த எம்ஜிஆரை முன்மாதிரியாக நினைத்து , அரசியலுக்கு
வந்தவர்தான் விஜயகாந்த். ஆனால் மிக ஆணித்தரமாக சொல்லலாம். -இரண்டாமவருக்கு துணிச்சல் அதிகம். 

காரணம் அப்போதைய தமிழகத்துக்கு இரண்டே முகவிலாசம் தான். ஒன்று தன் பேச்சாலும் எழுத்தாலும்,அரசியல்
ஞானத்தாலும் 
அதீத  செல்வாக்கு பெற்ற கலைஞர். இன்னொன்று மிக சுமாரான நடிப்பை மட்டும் வைத்திருந்தாலும் , தன் படங்களிலும் அதில் வரும் பாடல்களிலும் மக்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கைவசம் வைத்திருந்த எம்ஜிஆர்.

சிவாஜியை   எல்லாம் அப்போது மக்கள் , தலைவர்கள்  கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. ஆக கலைஞர் சற்றே வெளிப்படையாக தவறிழைக்க , இந்த பக்கம் திரும்பியது மக்கள் ஆதரவு. எஞ்சியிருப்பது ஒரே எதிர் தலைவர். எம்ஜிஆருக்கு ஜெயம்.


ஆனால் விஜயகாந்த் வரும்போது எண்ணற்ற போட்டிகள். ஆட்சியில் ஜெயலலிதா. எதிர்பக்கம் கலைஞர். இரண்டு பக்கமும் எண்ணற்ற ,கைவசம் ஒவ்வொருவருக்கும் இருந்த வாக்கு வங்கிகளுடன் பல தலைவர்கள் என அரசியல் கடலில் பல பெரிய கப்பல்கள் .அவைகளுக்கு நடுவே படகோட்ட வந்தார் விஜயகாந்த்.

ஏற்கனவே ரஜினி சறுக்கியிருக்க , சரத் குழம்பியிருக்க , எதைப் பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலாய்  வந்து அடுத்த மாற்றத்துக்கான ஆணிவேர் ஆதாரமாய் மாறி பல வாக்குகளை திசை மாற செய்து , எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்க விடாமல் , கூட்டணி ஆட்சிக்கு வழிவகுத்தவர் விஜயகாந்த்.

இப்போது இவருக்கு கிடைத்திருப்பது ,இவரே எதிர்பார்க்காத ஜாக்பாட். கிடைத்த வெற்றியை உடனே தலைக்கு கொண்டுபோகாமல் ,பதவியை பந்தாவுக்கு பயன்படுத்தாமல் பக்குவமாய் நடந்தால் அடுத்த முறை அதிமுக-திமுக போட்டி இருக்காது. அதிமுக-தேமுதிகதான். 

'இப்போதைய அரசாங்கம்  நோய்க்கு மருந்து கொடுக்கும் வேலையை நன்றாக செய்து கொண்டு வருகிறது. நன்றாக எனக்கு தெரிகிறது' என்று அரசைப் பாராட்டும் கேப்டன் , கிடைத்தற்கரிய எதிர்கட்சித் தலைவர் பணியை ஒழுங்காக செய்வாரா என்று எல்லார் மனதிலும் எண்ணம் தோன்றி வருகிறது. அரசு கொடுத்த இலவச அரிசியை சில இடங்களில் தன கைப்பட கொடுத்த கேப்டன் , ஆளுனர் உரை மனதிற்கு திருப்தியாக இருக்கிறது
என்றும் 'இப்போதுதான் எல்லாம் ஒரு நேர்கோட்டில் போய்க்
கொண்டிருக்கிறது  ' என்றும் சொல்லியுள்ளார்.  

எனக்கு இவரைப் பார்க்கும் போதெல்லாம் ஏனோ வைகோ ஞாபகம் வந்து தொலைக்கிறது. அவரும் இப்படிதான் ஐந்து வருடமாக அம்மாவுக்கு தலையாட்டி பின்பு கடைசியில் தனிமரம் ஆனார். கேப்டன் அதுபோல் ஆகாமல் முதுகெலும்பை நிமிர்த்தி, இந்த ஆட்சி தவறு செயும்போது சுட்டிக் காட்டினால்தான் அடுத்த முறை மிக  தைரியமாக  மீண்டும் எந்த கூட்டணியையும் நம்பாமல் தனித்து நின்று முதல்வர் ஆக முயற்சிக்கலாம்.

எவ்வளவு   சீக்கிரம் கூட்டணியில் இருந்து வெளியே வந்து எதிர்குரல் கொடுக்க ஆரம்பிக்கிறாரோ
அப்போதுதான் இவருக்கு ஒரு தனி அங்கிகாரம் கிடைக்கும். 
சரி , இன்னும் காலம் இருக்கிறது. 
கூட்டணி தர்மத்திற்காவது(??!!?) ஒரு ஆறு மாதமாவது கூட்டணியில் இருந்து அதன்பின் இந்த தனி ஆவர்த்தன வேலையை ஆரம்பித்தால் கேப்டன் முழு அரசியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று விட்டார்  என்று நம்பி சொல்லலாம்.

அப்படியில்லாமல் ,ஐந்து வருடம் அனுசரணையாக இருந்து விட்டு , தேர்தலுக்கு மட்டும் தனித்து வந்தால் இந்த முறை வைகோவுக்கு நேர்ந்தது போலத்தான் ஆகும்.பார்த்துக் கொள்ளுங்கள்.

(அலார்ட்:  முன்னெல்லாம் ஜெயா டிவிலதான் ஒவ்வொரு தடவையும் மைனாரிட்டி திமுக ,  
மைனாரிட்டி திமுகனு சொல்லி உயிரை வாங்குவாங்க. இப்போ
உங்க கேப்டன் டிவி நியுஸ்ல உங்கள பத்தி சொல்லும்போதெல்லாம், 'தேமுதிக நிறுவன தலைவரும் , தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் ' அப்படின்னு சொல்றத நிப்பாட்ட சொல்லுங்க சார்.. இம்சை அரசன் படத்துல வர 'ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க..'மாதிரியே இருக்கு..)

தேமுதிக , பல விஷயங்களில் பதுங்குவதை விட்டொழிக்க வேண்டும். முதலில் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தன் நிலைப்பாடு என்ன என்று உறுதியாக அறிவிக்க வேண்டும்.உதாரணம்- இலங்கை பிரச்சனை, சமச்சீர் கல்வி, புதிய சட்டபேரவை தேவை...இதில் நீங்கள் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லுங்கள்.ஒதுங்காதீர்கள். இல்லையென்றால் சிரஞ்சீவி கதிதான்.

'நான் ஆட்சிக்கு வந்ததே கலைஞரை ஒழிக்கத்தான் ' என்று முன்னர் சொன்னதை ஏறக்குறைய செய்தாகி விட்டது. ஆனால் அதே வசனம் காலத்துக்கும் உதவாது. மூன்றாம் சக்திக்கு ஒதுங்கிய கூட்டம்தான் இன்று வரை உங்களிடம் அதிகமாக இருக்கிறது. அதை தக்க வைக்க வேண்டுமானால் - நீங்கள் உதவுவீர்கள் ..எளிதில் நெருங்க கூடியவர்  என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுங்கள்.

சமீப காலமாக உங்களிடமும் சில ஆணவப்போக்கு   தென்படுகிறது. மக்கள் பேய்க்கு  பயந்து பிசாசிடம் வரமாட்டார்கள்.தமிழகத்துக்கு ஒரு ஹிட்லர் போதும்.

குடும்ப அரசியல் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.அது உங்கள் கட்சிக்குள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். மக்களை பாதிக்காத வரை அது ஒரு பொருட்டல்ல.ஆனால் அடுத்த முறை உங்கள் மனைவியும் , மைத்துனரும் தேர்தலில் நின்றால் இருவரும் கடந்த வருடங்களில் என்ன செய்தார்கள் என்று மக்கள் கேள்வி எழுப்பினால்  நியாயமானதே.

29 எம்எல்ஏ என்பது பெரிய வட்டம். விருதாச்சலதிற்கு என்ன செய்தீர்கள் என்று இனி கேட்க மாட்டோம். அப்போது நீங்கள் ஒரு கை ஓசை. இப்போதோ நீங்கள் ஒரு ஆளுமை சக்தி. ஆளும்கட்சி ஆதரவுடன் அந்த
தொகுதிகளுக்கு நல்லதை
செய்தால் அடுத்த முறை அவைகளை மக்கள் பரிசீலனை செய்து அதற்கான பலனை கண்டிப்பாக கொடுப்பார்கள். 


மொத்தத்தில் இது உங்களுக்கு ஒரு பொற்காலம்.அதிமுகவுடன் அடித்தாலும் அணைத்தாலும் நீங்கள் எதிர்கட்சிதான்.அதை முடிந்த வரை மக்களுக்கு உபயோகபடுத்தினால் உங்கள் கட்சிக்கு நல்ல எதிர்காலம்.கட்சிக்கு மட்டுமே பயன்படுத்தினால் மக்களுக்கும் வேறு தலைவர்கள் நிறைய உண்டு.

ஆரம்பத்தில் ஆரவாரமாய் பொங்கி பின் சத்தமே இல்லாமல் அடங்கிப் போகும் சோடா பாட்டில் உற்சாகமாக இல்லாமல்  , நிலைத்து நின்று மக்களுக்கு உதவினால் , இவ்வளவு நாள் கலைஞருக்கு அளித்த ஆதரவை 'புரட்சிக்'கலைஞரான உங்களுக்கும் தருவார்கள் தமிழக மக்கள்.
செய்வீர்களா கேப்டன்?

வாழ்த்துக்களுடனும்  எதிர்பார்ப்புகளுடனும்  ..
வாக்களித்த மக்கள்

1 comment:

கோவை நேரம் said...

நல்ல அலசல் ..

Post a Comment