Saturday, June 16, 2012

பாப்கார்ன் பாக்கெட் - 20120616

'அனுதாப அலை ' மிக மோசமானது என்பது மற்றொரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது.
கழுத்தில் காயம்பட்ட எம்ஜிஆர் போஸ்டர் மட்டுமே ஓட்டுகளை அள்ளி  குவித்தது இதற்கு ஒரு எடுத்துகாட்டு. போன முறை சன் டிவி ,கலைஞர் கைதை திரும்ப திரும்ப காட்டி ஒட்டு வாங்கியது இந்த முறையில்தான்.
உண்மைகளை மறக்க வைத்து வெறும் உணர்ச்சிகளால் பெருமளவில் குத்தப்படும் இந்த ஓட்டுகள்  , ஆந்திர இடைதேர்தலில் காங்கிரஸ்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.   
ஜெகன்மோகன் கட்சிக்கு 15 சீட்டுகள் கிடைத்திருக்கிறது. காங்கிரஸ்க்கு 2  மட்டும்.
சொத்துகுவிப்பு வழக்கில் கைதாகி சிறைப்பட்டிருக்கும் ஜெகன் ,  இடைதேர்தல் பிரசாரத்துக்கு ஜாமீன் கேட்க , அதுவும் கொடுக்கப்படாத   நிலையில்  ,அதுவே அவருக்கு பெரிய அநுகூலமாகி விட்டது.
2014 தேர்தலில் அவரே முதல்வர் ஆவார் என்று இப்போதே அரசியல்  ஆருடங்கள் ஆரம்பித்து விட்டன. 
வெட்டவெளிச்சமாக அவர் குற்றங்கள் , ஊழல்கள் எல்லாம் வெளியே உலா வரும்போதும் இந்த வெற்றி கிடைத்திருப்பது நியாயமான அரசியல்வாதிகளை தலைகுனிய வைக்கிறது ( அதற்காக ,காங்கிரஸ் நியாயமான் கட்சி என்பதல்ல அர்த்தம்) .
இப்படி எந்த ஒரு புரிதலும் இல்லாமல் மக்கள் இருக்கும் வரை , இது போன்ற ஆச்சர்யங்கள் அரசியலில் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருக்கும். கண்டிப்பாக இவை மக்களுக்கு நல்லதல்ல. 
போகிற போக்கை பார்த்தால் , முதல்வர் பதவிக்கு போட்டி போட , முதல் தகுதியே  அந்த நபர் ஊழல்  வழக்கிலும்,சொத்துகுவிப்பு வழக்கிலும் கைதாகியிருக்க வேண்டும் 
என்பதாக  மாறிவிடும் போல.
 அது சரி , அக்கம் பக்கம் எல்லா மாநிலத்திலும் இந்த நிலை இருக்கும்போது ஆந்திரா மட்டும் என்ன புண்ணியம் செய்திருக்கிறது , தப்பிக்க ?
-------------------------------------------------

 அதிமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியிருக்கும் நிலையில் , இந்த காலகட்டத்தில் என்ன சாதனை நிகழ்ந்துள்ளது என்று அலசினால் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. முக்கிய பிரச்சனையான மின்வெட்டு அதிகமாகியிருக்கிறதே தவிர எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. அண்ணா நூலக மாற்றம் , இரண்டு இடைதேர்தல் , புதுக்கோட்டை இடைதேர்தலுக்கான 32 அமைச்சர்கள் கொண்ட குழு
அமைத்தது   , முன்னாள் எம்எல்ஏக்கள் வீடுகளில் சோதனை செய்வது, எதிர்கட்சியான தேமுதிகவை அவமதிப்பது என்ற வட்டத்துக்குள் மட்டுமே ஒரு வருடம் செலவாகியிருக்கிறது.

எதற்கு ஒரு இடைதேர்தலுக்கு 32 அமைச்சர்கள் கவனம் தேவை ? கூடவே முதல்வரின் நேரடி பிரசாரமும்? ஓராண்டு ஆட்சி திருப்தி அளிக்கும்படியிருந்தால்   மக்கள் தாங்களாகவே  அரசுக்கு வாக்களிக்க போகிறார்கள்.


ஆளுங்கட்சி செயல் இப்படி என்றால் எதிர்கட்சியின் செயல்திறன் அதையும் மிஞ்சிவிட்டது.  தேமுதிக செயல்பாட்டை விமர்சனம் செய்யும் முன் எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் என்று விஜயகாந்த் சொல்லி பல மாதங்கள் ஓடி விட்டது. பொறுப்பான ஒரு எதிர்க்கட்சி செய்யவேண்டிய எந்த ஒரு பணியையும் இவர்கள் செய்யவில்லை.இவர்களும் இடைதேர்தலில் மட்டுமே சக்தியை 
செலவழிப்பது வேதனை.

ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் இடைதேர்தல்களில் மட்டுமே கவனம் செலுத்தினால் மக்களை யார் பார்ப்பது?

வாழ்க ஜனநாயகம்
---------------------------------------------------------

கப்பார்சிங் கலக்கி எடுத்துட்டு இருக்கு - ஆந்திரா மட்டுமல்ல  உலகம் முழுக்க.
'பத்து வருஷம் பெரிய ஹிட் இல்லைனாலும் பரவாயில்ல ; சுமாரான ஒரு படமாவது கொடுங்க தலைவா'ன்னு  பவன் கல்யாண் ரசிகர்கள் வெறித்தனமான வேண்டுக்கோள் வைக்க , பவனும் அங்க இங்க தேடி,  'தபாங்'கை கையில் எடுத்து , அவரைப்போலவே தொடர் தோல்விய  தந்துட்டு இருந்த இயக்குனர் ஹரிஷ் கையில கொடுத்து படம் பண்ணலாம்னு  சொன்ன தைரியத்துக்கு  கிடைச்ச  வெற்றி இது.

கூடவே நம்மூர் ஸ்ருதி கமல். அந்த பொண்ணுக்கும் அங்க ராசியில்லாத நடிகைனுதான் பேர். இப்படி எல்லாம் வெளங்காத  ராசியும் ஒண்ணா சேர்ந்து , நல்ல ராசியான படத்த கொடுத்துட்டாங்க..

இதுவரைக்கும் இந்த படத்தை எனக்கு தெரிஞ்ச எல்லா தெலுங்கு  நண்பர்களும் 2 தடவை பாத்துட்டாங்க.சண்டை , நக்கல் வசனம், அலற வைக்கிற பாட்டுன்னு கமர்சியல் பார்முலா சரியான கலவைல கலந்த காக்டெயில் ,
தெலுங்குதேசத்தில்  யாருக்குதான் பிடிக்காது?ரீமேக் படம்னா ,சட்டை கூட மாத்தாம அப்படியே சீனுக்கு சீன் காப்பி அடிக்க தேவையில்லன்னு , விஜய்க்கும் ,ஜெயம் ராஜாவுக்கும்,  ஒஸ்தி தரணிக்கும் சொல்லாம சொல்லி கொடுத்திருக்கு இந்த படம். கெவ்வ்வ்வ்  கேகா..
  --------------------------------------------------------------------------

அப்துல் கலாம் பரிசீலனையில் இல்லை என்பது உறுதியாகி விட்ட பிறகு , யார் வந்தால் என்ன என்ற மனநிலை வந்துவிட்டது.

இந்தியாவின் முதல் குடிமகனாக  கண்டிப்பாக ஒரு அரசியல்வாதி வரகூடாது என்பதுதான் மீதியுள்ள  இந்திய குடிமக்களின்  ஆசை. அதுவும் இன்று  வரை கலாம் பல நாடுகளில் சென்று ஆற்றிய உரைகளை பார்க்கும்போது , ஒரு ஏக்கம் நம்மையறியாமல் மனதை வாட்டுகிறது.

காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பிரணாப்க்கு மார்க்சிஸ்ட் , திமுக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள நிலையில் மக்கள்தான் என்ன செய்வது என்று புரியாமல் வழக்கம் போல திணறுகிறார்கள். 51  சதவீதம் தாண்டி ஆதரவு இருப்பதால் அவர் ஜெயித்தது போலதான்.  பிரதமர் ஆக வேண்டும் என்று விரும்பிய அவருக்கு ஜனாதிபதி பதவி கிடைக்கிறது.

கலாமை ஆதரித்த மம்தாவுக்கு நன்றிகள்.அடுத்த 'ரப்பர் ஸ்டாம்ப்'க்கு வாழ்த்துக்கள்.
---------------------------------------------------

MIB 3 - மிக ரசித்து பார்த்தேன். நான் முதல்முதலில் தனியாக தியேட்டர் போய்   பார்த்த படம் MIB முதல் பாகம். அதன் பின்னால் வந்த இரண்டாம் பாகத்தில் எனக்கு எந்த குறையும் தெரியவில்லை என்றாலும் , படம் படுவிமர்சனத்துக்கு உள்ளானது,  இழந்த நிலையை மீட்ட , மீண்டும் இணைந்த இந்த குழு மிகபெரிய வெற்றி அடைந்துள்ளது. 


வில் ஸ்மித் பதினைந்து வருடம் கழித்தும் அப்படியே இருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருந்தாலும் , கதைக்கு இன்னமும் பொருந்துகிறார். அதே அவசரத்தனம்,சின்ன தவறுகள் செய்து முழிப்பது என்று நொடிக்கு நொடி ரசிக்க வைக்கிறார்.

டாமி லீ ஜோன்ஸ் வயதிற்கு தக்கவாறு கதை அமைத்து , அதை பல முடிச்சுகள் போட்டு குழப்பிவிட்டு , பின் கடைசி காட்சி வரும் வரை ஒவ்வொன்றாக தெளியவைத்து முடித்திருப்பது மிக அருமை. கடைசி ஐந்து நிமிடம் ,வில் ஸ்மித்தின் தந்தை யார் என்று விளக்கி , அவருக்கும் ஜோன்ஸ்க்கும் உள்ள உறவைப்பற்றி உணரும்போது , கதை அமைத்த விதம் ஆச்சர்யப்படுத்துகிறது.

எனக்கு படம் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. அவ்வளவு சுவாரஸ்யம். கூட வந்த மீதி இரண்டு பேர், படம் முடிந்ததும்  ஒரே மாதிரி சொன்னார்கள் - 'சரியான மொக்கை டா.. எப்போ முடியும்னு ஆகிடுச்சு'  -  ஹ்ம்ம் Yes..Opinion differs.
--------------------------------------------
வைரமுத்து வரிகளும் ரஹ்மானின் இசையும் ... காதல் பிரிவின் வலியை இதை விட உணர்ச்சிபூர்வமாய் யாரும் உணர்த்தமுடியாது என்னும்படி சவாலான பாடல்..