Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Sunday, January 27, 2013

விஸ்வரூபம்

ராஜபார்வை - வணிகரீதியாக உலக நாயகனுக்கு விழுந்த முதல் பெரிய அடி. அதனால் எந்த தளர்வும் இல்லாமல் , தன்னை வளர்த்து விடும் கலையுலகத்திற்கு தொடர்ந்து நல்ல படங்களை கொடுப்பது மட்டுமல்லாமல் , உலகத்தின் ஏதோ ஒரு கோடியில் எங்கோ ஒரு புது தொழில்நுட்பம் கண்ணில் பட்டாலும் அதை தமிழுக்கு கொண்டு வந்து சேர்ப்பதில் தன் கஷ்டங்களை பார்த்ததில்லை கமல்.

' எத்தனை தோல்விகள் வந்தாலும் , எனக்கு சினிமா தவிர வேறு எதுவும் தெரியாது' என்று பிரகடனப்படுத்தி , அரை நூற்றாண்டு காலமாக தன் கடமையை இம்மியளவும் தொய்வில்லாமல் செய்யும் கலைஞனை , அவன் பாதையில் கல்லையும் முள்ளையும் வாரியிறைக்கும் ஒரு சாரார் ஆரம்பத்திலிருந்தே தொல்லை கொடுத்து வந்தது உலகறியும்.

முதன்முதலில் தன் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றமாக மாற்றிய நடிகர் , தன் உடலுறுப்புகளை தானம் செய்து ,அதன் விழிப்புணர்வை வெகுஜன மக்களுக்கு கொண்டு சென்றவர் என்ற பல நன்மைகளை செய்தாலும் , அவரை குற்றம் சாட்டியே கொடுமை படுத்திய கூட்டம் எப்போதும் உண்டு.

'அவ்வை சண்முகி , பிராமணர்களை குறி வைத்து கேவலப்படுத்துகிறது'

'ஹே ராம் படத்தை நிறுத்து . காந்தியை கேலி செய்கிறாயா?'

'சண்டியர்' பெயரை மாற்று. சாதிய வன்மத்தை தூண்டாதே.'

அது என்ன வசூல்ராஜா ? மருத்துவர்களை அவமதிக்காதே '

'தசாவதாரத்தை தடை செய். கடவுள் மறுப்பை திணிக்காதே '

இப்படி ஏறக்குறைய தனது எல்லா படத்திற்கும் போர் தொடுக்கும் எதிரிகளுக்கு   - பொறுமை இழக்காமல் , நிமிர்ந்து நின்று கமல் எடுத்து காட்டிய 'விஸ்வரூபம்' தான் இந்த படம்   .



எப்போதும் போல கமலின் இந்த படத்தையும் ,கண்டிப்பாக நமது அடுத்த தலைமுறை 'அப்போவே எப்படியா இந்தாளு இப்படி படம் எடுத்துருக்காரு ?' என்று சிலாகித்து பேசும் அளவுக்கு புதிய தொழில்நுட்பம் தொடங்கி , தீவிரவாதியம் சார்ந்த கதை களன் , முதிர்ந்த கூர்மையான வசனங்கள் , தேர்ந்த பாத்திர படைப்பு என்று எந்த விஷயத்திலும் கமல் - 'Exceeds the Expectation'

ஆண்ட்ரியா, பூஜா குமார், ராகுல் போஸ், 'எலிசபெத்' இயக்குனர் சேகர் கபூர் என அனைவரின் நடிப்பும் துல்லியம்.

படம் ஆரம்பமே டாக்டரிடம் கவுன்சலிங் செய்யும் பூஜா ,'அவர் நார்மல் ஆனவர் இல்ல' என்று கமலை பற்றி சொல்லி Intro கொடுக்க ,அடுத்த
நொடி  கமல் நடனமாடியபடியே வரும் காட்சிக்கு  கைதட்டல் அள்ளுகிறது. நடனமும் , சகல வித பாவனைகளும் காட்ட  , பரதத்தை முறைப்படி கற்ற கமலுக்கு சொல்லிதர தேவையில்லை ; எனவே ஆச்சரியப்பட ஏதுமில்லை.

பாடல்  முடிந்ததுமே பிராமண பாஷை பேசும் கமலின் முதல் டயலாக்கிலிருந்தே சர்ச்சைக்கு விஷயம் கிடைக்கிறது.என்னவென்று படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

கமல் முஸ்லிம் என்று தெரிவதிலிருந்து தொடங்கும் சுவாரசியம் , அவர் அடி மேல் அடி வாங்கி , சாவதற்கு முன் தொழுகை செய்ய கைகட்டை அவிழ்க்க சொல்லி , பிறகு அதிரடியாக தன் விஸ்வரூபத்தை காட்ட ஆரம்பிக்க , ஜெட் வேகத்தில் ஏறுகிறது. அந்த ஒரு காட்சியை முதலில் சண்டைக்கும் , பிறகு 'யார் என்று தெரிகிறதா ?' என்ற பாடலுக்கு சேர்த்து மறுமுறையும் வேறு கோணத்தில்  காட்டியிருப்பதில்
கமலின் இயக்கம் கை தட்ட வைக்கிறது.




ஷங்கர் - இசான்-லாய் மூவரின் இசை - துப்பாக்கி சத்தங்களுக்கு ஏற்ற தாளங்கள் , காட்சிகளின் விறுவிறுப்புகேற்ற பின்னணி இசை என பாராட்ட வைக்கிறது.குறிப்பாக கடைசி இருபது நிமிட  காட்சிகளில்.

நான் லீனியராக நகரும்  கதையை , தெளிவாக, பார்ப்பவருக்கு புரிய வைக்க மிகவும் மெனக்கெட்டிருக்கிறார் கமல்.உபயம் - முந்தைய ஆளவந்தானிலும் , ஹே ராமிலும் தமிழை அதிகம் பயன்படுத்தாமல் அடி வாங்கிய அனுபவம். ஹ்ம்ம் ..கமலுக்கும் அடி சறுக்கும். நல்ல வேளை ,இந்த படத்தில் அந்த தவறை செய்யவில்லை.

சேகர் கபூர் நல்ல தேர்வு. பூஜாவை ஒப்பிட்டுப் பார்க்கும் போது  ஆன்ட்ரியாவுக்கு வேலை அதிகம் இல்லை.
வெடிகுண்டை தடுக்கும் ஹீரோ என்ற அரத பழசான ஒற்றை நாடி கதைக்கு , கமலின் புது ட்ரீட்மென்ட் ஒன்றே எல்லாரையும் திரையை விட்டு கண்ணை நீக்காமல் இருக்க செய்கிறது.  ஆப்கானில் நடைபெறும் நிகழ்ச்சிகளாக காட்டும் இடங்களில்  , ஒளிப்பதிவு அட்டகாசம். நடிப்பு தொடங்கி Location முதல் எதிலேயுமே Compromise ஆகாமல் படம் கொடுக்க வேண்டும் என்று கமல் முடிவு செய்திருந்த போது  இத்தனை கோடி செலவு ஏன் ஆகாது? .

விருமாண்டி ஒலி நாடா வெளியீட்டின் போது இயக்குனர் இமயம் பாலச்சந்தர் , ஆளவந்தான் படத்தை பற்றி பேசும் போது 'உன்னை போல நடிகனும் யாரும் இல்லை. உன்னை போல இயக்குனரும் யாரும் இல்லை ' என்று சொன்ன வார்த்தைகள் ,ஒரு குருவின் உணர்ச்சி மிகுதலால் கொடுக்க பட்ட மிகைபடுத்திய பாராட்டோ ? என்ற ஐயத்தை சிலருக்கு கொடுத்திருக்கும்.இந்த படத்தை பார்த்த பின் அந்த சந்தேகமும் அவர்களுக்கு இல்லாதிருக்கும். இயக்கம் கனகட்சிதம்.



மொத்தத்தில் , ஒரு சிறந்த கலைஞனின் சீரிய படைப்பு. கமலுக்கு இருக்கும் ,எல்லாரையும் எதிர்க்கும் தைரியம் , ரசிகர்கள் ஆதரவு தனக்கு இருப்பதாக அவர் ஆணித்தரமாக நம்புவதால் மட்டுமே. இது போன்ற தரமான படங்கள் கொடுக்கும் வரை அந்த நம்பிக்கை கண்டிப்பாக வீண் போகாது.

இங்கே இந்த படத்தை எதிர்க்கும் சினிமா அதிபுத்திசாலிகள் , இதே படத்தை ஹாலிவுட் இயக்குனர்கள் ,
அப்படி இப்படி மாற்றி எடுத்திருந்தால் உற்சாகமாக பாராட்டி எழுதிவிட்டு IMDB-இல் பத்துக்கு 8.1 ரேட்டிங் கொடுத்திருப்பார்கள். பிறகு அதே இயக்குனர்கள் ,தன் படம் எடுக்க 'விஸ்வரூபம்' படமே ஒரு உந்துதலாக இருந்தது என்று அறிவித்தால் ,
நம் மரியாதைக்குரிய புத்திசாலிகள் வெட்கமில்லாமல் ஒளிந்து கொள்வார்கள்.

இதை எதிர்ப்பவர்களுக்கு ஒரு கேள்வி ? - தீவிரவாதத்தைப் பற்றிய படத்தை , தீவிரவாதிகளை காட்டாமல் எப்படி எடுப்பது என்று யாராவது தெளிவாக சொல்லுங்களேன்?

இந்த படம் உணர்த்தும் கருத்தை விட - எந்த களமாக இருந்தாலும் சரி , தான் செய்யும் தொழிலில் திறமையும் ,தான் எடுத்த முடிவில் நம்பிக்கையும் வைத்திருப்பவன் எவனுக்கும் அடிபணிய தேவையில்லை என்ற உண்மையை உணர்த்தியிருக்கிறது அது வெளியான விதம்.

விஸ்வரூபம் - 'தீ என்று தெரிந்திருக்கும்.இவர் யார் என்று புரிந்திருக்கும்.'



பேஸ்புக்கில் தொடர , வலது பக்க மேல் ஓரத்தில் உள்ள 'Find us on Facebook'ல்  Like பட்டனை அழுத்தவும்.

Saturday, May 19, 2012

கலகலப்பு @ மசாலா கஃபே

1996 -இல் நவரச நாயகன் கார்த்திக் மார்க்கெட் இழந்து , நடிப்பதை விட்டுவிட்டு சொந்த ஊர்  போய்விடலாம் என்று முடிவு செய்தபோது ஒரு பட வாய்ப்பு வந்தது. அதை முடித்து விட்டு நம்பிக்கையில்லாமல் கிளம்ப தயாரானபோது, படம் சரவெடி போல படு ஹிட் ஆகி ,கார்த்திக்கை கம்பீரமாக அடுத்த ரவுண்ட் வரவைத்தது. படம் - உள்ளத்தை அள்ளித்தா . இயக்கம் - சுந்தர் சி.

பதினைந்து வருடங்களுக்கு பிறகு 'நடிகர்' சுந்தர் சி ,ஏறக்குறைய அதே நிலைமையில் இருக்க, இயக்குனர் சுந்தர் சி அவரை காப்பாற்றியிருக்கிறார். படம் - கலகலப்பு @ மசாலா கஃபே. நல்ல இயக்குனர் தமிழுக்கு  திரும்ப கிடைத்ததற்கு  மகிழ்ச்சி.

லாஜிக்  என்ற ஒரே ஒரு விதியை தளர்த்திவிட்டு சுந்தர் சி படத்துக்கு போனால் , கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்ற மாட்டார் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார். படம் இரண்டரை மணி நேரம் புன்னகைக்க  - ரசிக்க -விலா நோக சிரிக்க வைக்கிறது.


விமல் - சிவா - சந்தானம் என்று மூன்று நாயகர்கள்.  அப்பாவி நடிப்பில் வழக்கம் போல கிண்டல் கலந்து விமல் கலக்கினால், பஞ்ச் டயலாக் கொடுத்து  அவருக்கு இணையாக கூடிய வரை நடிக்கிறார் சிவா. ஆனால் நடிப்பில் வெல்வது விமல்தான்.

கும்பகோணத்தில் நடக்கும் கதை. அப்பா காலம் வரைக்கும் நன்றாக ஓடிய ஹோட்டல்  டல்லடிக்க தொடங்கியதும் , அதை மீண்டும் முன்னுக்கு கொண்டு வர அவர் படும் பாடும் , ஒவ்வொரு  முயற்சியும் தோற்கும்போதும் அவர் கட்டும் ரியாக்சனும் , இளவரசுவிடம்  கடன்  வாங்கி கட்ட முடியாமல் 
அவரிடம் இருந்து தப்பிக்க போராடுவதும் - நல்ல நடிப்பு.

காமெடி தாண்டி சிவா எந்த படத்திலும் நடிக்க முடியாது என்பதை தெரிந்து , இயக்குனர் அவரை உபயோகபடுத்தியிருப்பது நன்றாக வேலை செய்கிறது. டீக்கடையில் நண்பன் 'மச்சான் உன் ஆளு போறாடா' என்றவுடன் 'அண்ணே..இவனுக்கு மட்டும் ரெண்டு பிஸ்கட் கொடுங்க' என்பதிலிருந்து  விமலிடம் ' கேள்வி கேக்கறது ரெம்ப சுலபம்.பதில் சொல்றதுதான் கஷ்டம். அதுவும் மகாநதி பாக்காதவன்கிட்ட பதில் சொல்லவே முடியாது' என கத்துவதிலும் 'சகோதரர்' என்று விமலை அழைப்பதிலும் -ஹ்ம்ம்  நல்ல முயற்சி சிவா.குறை ஏதும் இல்லை.   

இடைவேளை தாண்டி சந்தானம் வந்ததும் , ஏதோ பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறக்கும்போது ஏற்படும் ஆனந்த கூச்சல் போல தியேட்டர் எங்கும் கைதட்டல் எதிரொலிக்கிறது. 'அவ்வ்வ்ளோ  பெரிய ஜோக் இல்ல இது ' என்ற டயலாக் கூட சிரிப்புக்கு மினிமம் கேரன்ட்டி.
அதிரடி introவுக்கு அடுத்த சீனிலேயே , ' வழக்கம் போல இன்னைக்கும் உங்கள ஒருத்தன் என்ன பத்தி படு கேவலமா பேசியிருப்பானே..அவன் யார்னு போட்டு  கொடுத்தா ஐநூறு ரூபா தருவேன்' ன்னு தன் அக்மார்க் அலம்பலை ஆரம்பித்து விடுகிறார்.



அதுவும்
வள்ளி பட ரஜினி வசனத்தை சொல்லும்
அஞ்சலியிடம் ' ஏன் இத இப்டி சொல்லேன்.நீ விரும்புற பையனை விட உன்னை விரும்பற பையனை கட்டிகோன்னு.' என்று நச் கேள்வி கேட்டு பிறகு உதிர்க்கும் மொட்டைமாடி டயலாக் பின்னுகிறது.இம்சை அரசன் திரும்பி வருவதற்குள் ஒரு நல்ல உயரத்துக்கு போய்விடுவார் சந்தானம்.இவரோடு போட்டி போட்டு கலக்கும் மனோபாலா கேரக்டர் ஸ்கெட்ச் அசத்தல். அவர் கெட்டப் படு பொருத்தம்.

அஞ்சலி , ஓவியா நடிப்பு ஓகே. not  bad.

ஹீரோக்கள் மூன்று பேர் இருந்தாலும் படத்தின் நிஜ ஹீரோக்கள்  திரைக்கதையும் வசனமும்தான். ஹோட்டல் நிகழ்வையும் , வைரம் கைமாறும் கதையையும் சரியாக பொருத்தி அமைத்த விதம் அருமை. வசனங்கள்தான் படத்தின் ஆணிவேர். சுந்தர் சி -  பத்ரி இருவரின் உழைப்பு தெள்ளதெளிவாக தெரிகிறது.  
சுந்தர் சி-யின் 25வது படம் இது.சொல்லும்படியான லேண்ட்மார்க்.  ஒவ்வொரு காட்சியிலும் perfection தெரிகிறது

'அட்டு பிகருக்கு குட்டு பாய்' உட்பட சில வசனங்கள் கேபிள் சங்கரின் கைவண்ணம் என்று நினைக்கிறேன்.திரையுலகில் அவர் பிள்ளையார் சுழி வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது .மகிழ்ச்சி.அவர் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

கடனை திருப்பி  கேட்டு விமலை மிரட்டும் இளவரசுவை ,
சிவா வந்தவுடன் , இன்ஸ்பெக்டரிடம் மாட்டிவிட்டு அவரை பல கெட்டப்களில் ஓட வைக்கும் காட்சிகள் செம கலக்கல். இளவரசு - ஜான் விஜய் - பஞ்சு சுப்பு என எல்லாரும் நிறைவாக செய்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் , ரசிகர்களின் மாறிவரும் ரசனையை உணர்ந்து ,அதற்கு ஈடுகொடுக்கும்  திறமையான  ஒரு குழு இணைந்து , தரமான காமெடி படத்தை கொடுத்திருக்கிறார்கள். தாராளமாக ரசிக்கலாம்.

கலகலப்பு - நல்ல பொழுதுபோக்கு படம்.


பேஸ்புக்கில் தொடர , வலது பக்க மேல் ஓரத்தில் உள்ள 'Find us on Facebook'ல்  Like பட்டனை அழுத்தவும்.

Monday, April 16, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி


'சினிமா என்னும் ஊடகத்தை வியாபாரமாக மாற்றுகிறார்கள்; கமர்ஷியல் என்னும் பெயரால் அதை  அழிக்கிறார்கள்' என்று அடிதொண்டையில் கத்தும் சினிமா விமர்சகர்கள் ஓகே ஓகே  தியேட்டர் பக்கம் வர வேண்டாம்.
எப்படியும் இவர்களும் யாருக்கும் தெரியாமல் ராத்திரி வந்து படம் பார்க்கத்தான்
போகிறார்கள்; முழுக்க பார்த்து ரசித்து பிறகு அடுத்த நாள் கலைத்தாயின் காவல்காரர்களாக படத்தை குற்றம் சாட்டுவார்கள்.

ஆனால் இது எதைபற்றியும் கவலைப்படாமல், படம் பார்க்க வரும் சாமான்ய ரசிகர்களை , இரண்டரை மணி நேரம் சிரிக்க வைத்து , கவலையை மறக்க வைத்த இயக்குனர் ராஜேஷ்க்கு பெரிய கைதட்டல் கொடுக்கலாம். நிச்சயமாக சொல்லி அடித்த கல் இது - டார்கெட் மிஸ் ஆகல.


இதுதான் யதார்த்தம். என்னதான் கலை , உலகத்தரம் என்று எத்தனையோ மேதைகள் சினிமாவைப் பற்றி பேசினாலும் , சாதாரண ரசிகனின் சந்தோசமான கைதட்டல் சத்தத்தில் அவை எதுவுமே யாருக்கும் கேட்காது.இந்த உண்மையால்தான் சிவாஜி காலத்தில் எம்ஜீஆரும் , கமல் காலத்தில் ரஜினியும் ஓவர்டேக் செய்து வெற்றிபெற முடிந்தது.

நாலாயிரத்து முன்னூற்றி இருபத்தி ஏழு தடவை பார்த்த  கதை.  அதில் கடைசி இரண்டு , இதே இயக்குனர் தன் போன இரண்டு படத்தில் ஏற்கனவே காட்டி விட்டார். இப்போதும் அதே. ஆனால் நடிகர்கள் வேறு வேறு.  அதனாலென்ன? படத்தின் தோல்வி என்பது நிர்ணயம் ஆவது - படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கு சலிப்பு வந்தால் மட்டுமே . அதை ஒவ்வொரு நிமிடமும் மனதில் வைத்து ஒவ்வொரு சீனையும் தரமான சிரிப்பிற்காக செதுக்கி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.

சிவா மனசுல சக்தி , பாஸ் என்கிற பாஸ்கரன் - இந்த இரண்டு படங்களும் இப்போதும் டிவியில் போட்டால் ,அது எத்தனை முறை பார்த்ததானாலும் மீண்டும் பார்க்க தோன்றும் ஈர்ப்பு  உண்டாகியிருக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் இனி கண்டிப்பாக இடம்பெறும்.

படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.  தளபதி மகன் என்பதால் பன்ச் டயலாக்கோ , தலைவர் பேரன் என்பதால் பக்கபக்கமாய் வசனமோ வேண்டும் என்று கேட்காமல் , ஒரு சராசரி யூத் கேரக்டர் மூலம் அறிமுகம் ஆகி பெரிய பாராட்டை பெறுகிறார். கொஞ்சமே கொஞ்சம் அரசியலை கலந்திருந்தாலும் , மண்ணை கவ்வியிருக்கும் இந்த படம்.

நல்ல ஒரு தயாரிப்பாளர்க்கு  இருக்க வேண்டிய புத்திசாலித்தனம் உதய்க்கு  இருக்கிறது. அதற்கு கிடைத்த பரிசு - படத்தின் இமாலய வெற்றி. மென்மையான குரல், உணர்ச்சிகளை வேறுபடுத்தி காட்டத்தெரியாத நடிப்பு,  வராத நடனம் என்று எத்தனையோ மைனஸ் இருந்தாலும் , கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்த விதத்தில் எல்லாவற்றையும் ஓரங்கட்டி கைதட்டல் பெறுகிறார் உதயநிதி.

சந்தானத்தை பேச விட்டு , அடக்கி வாசித்து நடிக்கும் உத்தி ஜெயித்திருக்கிறது.
குரலிலும் மேனரிசத்திலும் ஜீவாவை நினைவுபடுத்தினாலும் , முதல்  படத்துக்கு நல்ல ஹோம் வொர்க் செய்து உழைத்திருப்பது தெரிகிறது.  சரண்யா - அழகம்பெருமாள் காட்சிகள் யதார்த்தம் - சண்டைக்கு சொல்லும் காரணம் தவிர.

படத்தில் சகிக்க முடியாத ஒன்று , சந்தானத்துக்கு ஜோடியாக வரும் பெண்ணை கிண்டலடிக்கும் காட்சிகள். அழகில்லாததால் மட்டுமே அந்த பாத்திரம் இவ்வளவு கிண்டலுக்கு உட்படுகிறது என்ற நினைப்போடு டைரக்டர் காட்சிப்படுத்தியிருந்தால் ,அது மிக கண்டிக்கப்படவேண்டிய விஷயம்.

போன இரு படத்திலும் செய்த அதே தவறு இந்த படத்திலும் மீண்டும் எதிரொலிக்கிறது. கிளைமாக்ஸ் சொதப்பல். தேவையில்லாமல் ஆர்யா , ஆண்ட்ரியா என நட்புக்கு ஆளை நடிக்க கூட்டிவந்து இழுத்தடித்த கடைசி  இருபது நிமிட கொடுமை தவிர மற்றவை எல்லாம் ஓகே. இந்த படத்தை இப்படிதான் முடிக்க முடியும் என்பது திரையுலக டிக்சனரியில் உள்ளதென்பது பார்க்கும் எல்லாருக்கும் தெரியும்.அதனால் டைரக்டர் பிழைக்கிறார்.


படத்தின் இரண்டு சறுக்கல்கள் இசை மற்றும் கதாநாயகி. சரக்கு தீர்ந்து போன ஹாரிஸ் ,ஏற்கனவே ஹிட்டடித்த தன் பாடல்களை வைத்து ஒட்டியிருக்கிறார். பின்னணி இசை காட்சிக்கு ஏற்ற தாளம் பிசகுகிறது. எதிர்பார்த்து ஒன்றுதான்.

SMS அனுயா போலவோ , பாஸ் நயன்தாரா போலவோ நடிக்க தெரியவில்லை ஹன்சிகாவுக்கு.Just chubby  yet cute. போகட்டும். மற்ற பாசிடிவ் விஷயங்களால் இவை இரண்டும் மறைந்து விடுகிறது.  

படத்தின் ஆணிவேர் , தூண் , ஏன் மொத்த பலமுமே சந்தானம்தான்.  போன விஜய் அவார்டில் சந்தானத்துக்கு விருது கொடுக்கும்போது , மூன்றாம்  முறையும் இந்த படம் மூலம் சந்தானத்துக்கே கிடைக்கும் என்று அடித்து  சொன்ன ராஜேஷ் அதை உறுதிபடுத்தியிருக்கிறார். நல்ல நடிகரும் , அந்த நடிகரிடம் இருந்து சிறந்த நடிப்பை வாங்க தெரிந்த இயக்குனரும் சேர்ந்தால் கிடைக்கும் ரிசல்ட் நூற்றுக்கு நூறு என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த படம்.



கண்ணை உறுத்தும் கலர் பேன்ட் , பொருந்தாத டி ஷர்ட் ,
எண்ணெய்  வைத்து ஒழுங்காய் வாரிய தலைமுடி  என ஒரு மாதிரியான கெட் அப்பில் அசத்துகிறார் சந்தானம். அடிக்கடி சிவாஜியையும், கமலையும் மிமிக் செய்து அடிக்கும்  அட்டூழியமும் , உச்சகட்டமாக கிளைமாக்ஸ்  காட்சியில் மதபோதகரை இமிடேட் செய்யும் காட்சியிலும், என கிடைத்த எல்லா கேப்பிலும் பவுண்டரி அடித்து விளையாடியிருக்கிறார்.

வடிவேலுவின் இடம் காலியாய் இருக்கும் நேரத்தில், விவேக்கின் காமெடி காலி பெருங்காயமாய் கரைந்து முடிந்திருக்கும் நேரத்தில்,  இருக்கும் மிச்ச சொச்சங்களை புறந்தள்ளி டாப் காமடியனாக கம்பீரமாக உயர்ந்திருக்கிறார்  சந்தானம்.இது போன்ற படங்களை ஒரு ஐந்து வருடங்கள் தொடர்ந்து கொடுத்தால், பல வருடம் காத்திருந்த கவுண்டமணியின் கிரீடத்தை சந்தானத்துக்கு தாராளமாக வழங்கலாம்.

எந்த லாஜிக்கும் பார்க்காமல் மூன்று மணி நேரம் சிரிக்க , சரியான மினிமம் கேரன்ட்டி இந்த படம்.

ஓகே ஓகே - டபுள் ஓகே.


பேஸ்புக்கில் தொடர , வலது பக்க மேல் ஓரத்தில் உள்ள 'Find us on Facebook'ல்  Like பட்டனை அழுத்தவும்.

Wednesday, April 4, 2012

'3' - தனுஷின் ரத்த சரித்திரம்

ஒரு ஆறு மாசமா படத்தோட தலைப்புக்கு என்ன அர்த்தம்னு தெரியாம முழிச்சிட்டு இருந்த ரசிகர்களுக்கு ரெண்டரை மணி நேரம் மூச்சு திணற திணற சுத்தி சுத்தி அடிச்சிட்டு   '' கேளாய் மானிடா .. 3  என்பது 3 அடிமுட்டாள்கள் என்பதன் சுருக்கமே . ..இயக்குனரும் , நடிகரும் முதல்  இரண்டு பேர். மூன்றாவது நபர் நீதான் எங்கள்  செல்லமே... 'ன்னு புரியாம புரிய வெச்சிருக்காங்க..

இத அனுபவபட்டுதான் புரியனும்னு இன்னும் நினைக்கிறவங்க ,வீட்டுல ஒருதடவைக்கு ரெண்டு தடவை சொல்லிட்டு தியேட்டர்க்கு போகலாம்.மத்தவங்க போஸ்டர் பக்கம் கூட போய்டாதீங்க.. டிவில இந்த படத்தை போடும்போது  , தப்பித்தவறி உங்க வீட்டுல கரண்ட் இருந்ததுனா , வெளிய ஓடிபோய் வெயில்லுல நின்னுக்கோங்க...


தனுஷ் மூணாவது தடவையா லூஸா நடிக்கிற படம். தலைப்பு இதுக்கும் பொருந்துது. 

ஸ்கூல் காலத்துல இருந்து வர காதல், ப்ரெண்ட்ஸ் கூட்டத்தோட நாலு காமெடி, அப்பா செண்டிமெண்ட்,ரெண்ட வீட்டுலயும் காதலுக்கு எதிர்ப்பு ,   பல பரிணாம வளர்ச்சிக்கு பிறகு கல்யாணம்.இப்படி தமிழ் திரைவரலாற்றிலயே இதுவரைக்கும் யாரும்  தொடாத கதையை கையில எடுத்து திரைக்கதை எழுதி அப்புறம் அதை படமா ரிலீஸ் செஞ்சிருக்காங்க.

படத்துல இவ்வளவு  இருந்தாலும் இது தனுஷ் படம் ஆச்சே...எதோ மிஸ் ஆவுதேன்னு நீங்க நெனச்சா எல்லாம் தெரிஞ்ச  இயக்குனருக்கு தெரியாதா என்ன? ஆடியன்ஸ் பல்ஸ கரெக்டா தெரிஞ்சிக்கிட்டு கல்யாணத்துக்கு அப்புறம் தனுஷ்க்கு மனநோய் தாக்குதுன்னு ஒரு ட்விஸ்ட் வெச்சிருக்காங்க.. அதுக்கு அப்புறம் கதை என்னவாகுதுங்கறதுதான் படம்.பாக்குற நாம என்னவாகறோம்ங்கறது நம்ம விதி.

பிரபு , பானுப்ரியா , ஸ்ருதிஹாசன் ,சிவகார்த்திகேயன்னு வரிசையா நல்ல ஸ்டார் வேல்யு உள்ள நடிகர்கள் இந்த படத்துல தேவை இல்லாம இருக்காங்க. அனிருத் , கொலைவெறி பாட்டு  தவிர இன்னும் ரெண்டு மெலடி நல்லபடியா கொடுத்திருக்காரு.இவர் ஓபனிங்  மட்டும்தான் இந்த படத்துல உருப்படியான விஷயம்.

ஐஸ்வர்யாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. ஒரு கமர்ஷியல் இயக்குனர் ஆக முதல் தகுதி அடுத்த படத்துல இருந்து கதையை சுடறதுதான். அது இவங்களுக்கு அழகா வருது. என்ன ஒன்னே ஒன்னு .. எல்லாமே தனுஷ் நடிச்ச பழைய படங்கள்ல இருந்தே உருவனதுனால நம்ம பசங்க கரெக்டா கண்டுபிடிச்சிடாங்க...

அவரோட முதல் படத்துல இருந்து கடைசியா வந்த படம் வரைக்கும் இருக்குற எல்லா சீனையும் எடுத்து 'இங்க்கி பிங்க்கி பாங்க்கி' போட்டு எது வருதோ அத எடுத்து இதுல மறுபடியும் யூஸ் பண்ணிருக்காங்க. நல்ல வருவீங்க மேடம். உங்கள மாதிரி திறமையான இயக்குனர்கள் சினி பீல்டுக்கு தேவை.

அம்மா..நாங்கெல்லாம் பேரரசு படத்தை கூட விசிலடிச்சு பார்ப்போம். மரண மொக்கை படமா இருந்தாலும் சிரிச்சிக்கிட்டே கமென்ட் அடிச்சிட்டு பாப்கார்ன மென்னுட்டு படத்தை ஜீரணம் பண்ணிக்குவோம். சத்தியமா இந்த மாதிரி கைக்குழந்தை கணக்கா தேம்பி தேம்பி  அழுது  பாத்தா படம் இதுதான். 

பவர் ஸ்டார் உட்பட மத்தவங்க யாருமே எங்கள அழ வெச்சி பாக்க விருப்பபட்டதில்ல.. நீங்க மட்டும் ஏன்? உங்களுக்கு செல்வராகவன் படங்கள்தான் இயக்குனர் ஆக இம்ப்ரெஸ் பண்ணுச்சுதுனா அதுக்காக இப்படியா?  செல்வராகவன் மாதிரி படம் எடுக்க செல்வராகவன் இருக்காரே.நீங்க எதுக்கு?

தனுஷ்  நீங்க ரொம்ப அடக்கமான மனிதர்.நல்ல நடிகர். தறுதலை,ரவுடி,வீட்டுக்கு அடங்காத பிள்ளை,லோக்கல் ஆளு,மெண்டல் கேரக்டர் எல்லாம் நல்லா பண்ணுவீங்க. அதுக்காக கேப் விடாம மெண்டலாவே நடிச்சிட்டு இருந்தா உண்மைலயே  அப்படி ஆகிடற அபாயம்  உங்களுக்கு இருக்கோ இல்லையோ ,பாக்கற   எங்களுக்கு இருக்கு.

ஒரு நாலஞ்சு வருஷம் உங்க வீட்டு ஆளுககிட்ட இருந்து விலகி நல்ல இயக்குனர்களோட சேர்ந்து நடிச்சா ,பேர காப்பாத்திக்க சான்ஸ் இருக்கு.என்ன பண்றது? சிம்பு தொல்லைல இருந்து தப்பிக்க எங்களுக்கு நீங்கதான கதி.

இது எல்லாத்தையும் மீறி இந்த படம் முதல் மூணு நாளுல ஒன்னே கால் கோடி வசூல் அள்ளி ஹவுஸ்ஃபுல்லா ஓடிட்டு இருக்கறது என்னைய  மாதிரி சாதாரண ரசிகனுக்கு வெளங்கல. ஒரு வேளை நமக்குதான் கலை கண்ணோட்டம் அந்த அளவுக்கு இல்லையோ..?!!?

அத விட இந்த படத்தோட  தெலுங்கு பதிப்பு பத்து கோடிக்கு வியாபாரம் ஆயிருக்காம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு , மக்கள் கூட்டம் சாரிசாரியா படத்துக்கு போகுதாம். ஹிந்திக்கு அடுத்த மாசம் படம் போகுதாம்.

நல்லது .. ரெம்ப நல்லது.. எவ்வளவு அள்ளணுமோ இந்த ஒரு தடவைலயே அள்ளிடுங்க எஜமான் அள்ளிடுங்க .. ஆனா தயவுசெஞ்சு இதே மாதிரி '4 ' , '5 'ன்னு எடுத்துராதீங்க..அந்த விபத்தை சந்திக்க எங்ககிட்ட    
தைரியம் இல்ல...

மூணு - முடியல..

Friday, March 9, 2012

தேசிய விருதுகள்: வாகை சூடிய தமிழ்த்திரை

மெகா பட்ஜெட் ஆடம்பர செலவுகள் இல்லை. படத்தின் அரை வாசி செலவை சம்பளமாக கேட்கும் நட்சத்திர நாயகர்கள் இல்லை. பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகள் இல்லை. கவர்ச்சியான கதாநாயகி இல்லை. முக்கியமாக ,சேட்டிலைட் டிவிகளில் நிமிடத்துக்கு ஒரு முறை வரும் விளம்பரம் இல்லை. 

இப்படி எதுவுமே இல்லாமல்  ஐந்து தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறது தமிழ் திரையுலகம்.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் : அழகர்சாமியின் குதிரை
சிறந்த தமிழ் திரைப்படம்                         : வாகை சூட வா
சிறந்த துணை நடிகர்                                 : அப்புக்குட்டி (அழகர்சாமியின் குதிரை )
சிறந்த புதுமுக இயக்குனர்                     : தியாகராஜன் குமாரராஜா (ஆரண்ய காண்டம் )
சிறந்த படத்தொகுப்பாளர்                         : பிரவீன் கே .எல் (ஆரண்ய காண்டம் )

சாதிக்க திறமை மட்டுமே போதும் என்பது இன்னொரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. மேற்கூறிய எல்லா படங்களுமே   வசூலில் அடி வாங்கிய படங்களே.
திரையிட சரியான அரங்குகளும் நாட்களும் கிடைக்காமல்  , கமர்சியல் படங்களின் வரவுகளுக்கு இடையே இருந்த மிக குறுகிய காலகட்டத்தில் திரையரங்குகளை சந்தித்தவை.ஆனால் அரங்குகளை நிரப்பவில்லை.  காரணம் - படிக்க பதிவின் முதல் பத்தி.

இப்போதைய காலகட்டத்தில் பலகாரம் சுவையாய் தரமாய் இருப்பதை விட அதை  பார்ப்பதற்கு அழகாக wrap செய்து  மக்களை வாங்க வைக்கும் உத்தியே வெற்றி பெறுகிறது.ஆனால் வெற்றி என்பது வேறு. அங்கிகாரம் என்பது வேறு. இரண்டாவதற்கு , கடின உழைப்பையும்,திறமையையும் தவிர எந்த மேற்பூச்சு வேலையும் தேவை இல்லை. ஆதாரம் -  இந்த ஐந்து விருதுகள்.
திரையுலகின் பல விதிகளை உடைத்திருக்கின்றன மேற்கூறிய படங்கள்.

ஆரண்ய காண்டம் :

கதையும் அதன் களமும் முடிவான உடனே , தயாரிப்பாளருக்கு புரிந்திருக்கும் - கல்லாவை நிரப்ப தேவைப்படும் தாய்க்குலங்கள் ஆதரவு இந்த படத்திற்கு சைபர் என்று. உபயம் - படத்தில் தவிர்க்க முடியாத வசனங்கள்.ஆனாலும் முட்டி மோதி படத்தை வெளியிட்ட சரணுக்கு வாழ்த்துக்கள்.

மீதி வர வேண்டிய சொற்ப  கூட்டத்தையும் சாதாரண தமிழ் ரசிகனுக்கு புரியாத தரமான போஸ்டரின் ஆங்கில தாக்கத்தால் இழந்தது இந்த படம்.


படம் வெளிவந்து ஓடி முடித்த நான்கைந்து நாட்கள் தாண்டியே இது ஒரு தமிழ் படம் என்று பெரும்பானவர்களுக்கு  புரிந்தது.
  ஆனாலும் இயக்குனரும் , தொகுப்பாளரும் படத்தின் நாயகர்களாய் மிளிர்ந்தது சத்தியம்.
படத்தின் வேகத்தில் பிரவீனின் உழைப்பு நன்றாக தெரிந்தது. 
ஆரண்ய காண்டம் , கேங்ஸ்டர் படங்களின்  புது கோணத்தை , வேறு பாணியில் சொல்லும் விதத்தை அறிமுகப்படுத்தியது.

வசனங்களின் கூர்மையையும் , திருப்பங்களையும் நம்பிய இந்த படம்  தமிழ் திரை சரித்திரத்தில் ஒரு மைல்கல்.

அழகர்சாமியின் குதிரை:

வெண்ணிலா கபடிகுழு சுசீந்திரனின் இன்னொரு காவியம். ஒரு கதையை திரைப்படம் ஆக்கும்போது அந்த மாற்றத்திற்கு தேவையான அனைத்தையும் படத்தில் உபயோகித்த விதத்திற்கு பரிசு கிடைத்திருக்கிறது.
அப்புக்குட்டி , அழகர்சாமி பாத்திரத்தின் கனகச்சிதமான நல்ல தேர்வு. இளையராஜா இசை , காட்சிகளில் தெறித்த  உணர்வுகளுக்கு  மேலும் அழுத்தம் கொடுத்திருக்கிறது.


பொழுதுபோக்குக்கு தேவையான அனைத்து நல்ல அம்சமும் படத்தில் உண்டு.ஆனால் அவை யாவும் யதார்த்த   கோட்டுக்குள் மட்டுமே நின்று சாதித்திருக்கிறதே தவிர , காதை அடைக்கும்  குத்து பாட்டும் , கண்ணை உறுத்தும் சண்டை காட்சிகளும் அல்ல. கதை ,குதிரையை சுற்றிய நூலை நழுவவிடாமல் மற்ற துணை கதைகளை இணைத்து சென்ற விதம் அருமை.


ஒரு நடிகனுக்கு , நாயகனுக்கு தேவையான எந்த அடையாளமும் அப்புகுட்டிக்கு இல்லை. அதுவே இந்த வெற்றிக்கும் காரணம். அப்புகுட்டியின் இந்த வளர்ச்சி  கண்டிப்பாக திரையுலகில் நுழைய நினைக்கும் எந்த சாமானியனுக்கும் ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.

சுசீந்திரன் ,தமிழுக்கு இன்னொரு பாரதிராஜாவாக வர தகுதியான இயக்குனர். அவசரப்பட்டு 'ராஜபாட்டையில்' பயணிக்காமல் நிதானமாய் சென்றால் வளர்ச்சி தொடரும்.

வாகை சூட வா:

வசூலில் கடும் இழப்பு , நாயகன் விமல்  , வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுக்க வைத்தது. நல்ல படங்களுக்கு மட்டுமே உண்டான சாப நிலை இது.

பீரியட் படங்கள் வரிசையில் நல்ல கருத்தையும் முன்வைத்து வெளியான படம். வெயில் தகிக்கும்  சூழலில் , கலகலப்பான கிராமிய பின்னணியுடன்  அழகான காதலையும் சேர்த்து கொடுத்த படம். கிப்ரானின் இசை புது மாதிரியாய் கிறங்கடிக்க வைத்தது.


விமலின் அப்பாவித்தனமான நடிப்பும் , இனியாவின்  வாயாடித்தனம் கலந்த துடிப்பும் , ஏனைய நடிகர்களின் ஆரவாரமில்லாத பங்களிப்பும் , படத்தின்  தரத்தை உயர்த்தியது.   சிறந்த படங்களில் இந்த படத்துக்கு முதலிடம் கிடைத்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.வெகு பொருத்தமான தேர்வு.

-------------------------------------

இந்த படங்கள்  வெளியாகி , மக்களின் மவுத்டாக் மூலம் ' நல்ல படம் , பார்க்கலாம்' என்று கூட்டம் தயாரவதற்குள், திரையரங்குகளில் இருந்து காணாமல் போக நேர்ந்தது.  இது போன்ற நல்ல முயற்சிகளை 'ஆவண படம்' அல்லது  'அவார்டுக்கு மட்டும் தகுந்த படம் ' என்று ஒதுக்குகிற  விபத்தும் எப்போதும் நேர்கிறது.

ஆனால் இந்த மூன்று படங்களும் , ஆவணப்படம் போல  வெறும் செய்தியை மட்டும் சொல்லாமல் அதை சுவாரஸ்யமாகவும் . நகைச்சுவையுடனும்  சொல்லி பார்ப்பவரை சிரிக்க வைத்திருந்தாலும் ,தயாரிப்பாளர்களை அழ வைத்தவை என்பது உண்மை.

ஒரு பெரிய நடிகனின் பட பட்ஜெட்டில் ,இது போன்ற பத்து படங்கள் செய்து விடலாம் என்பது நிதர்சனம்.

ஒரு பக்கம்  , நல்ல படங்களை  கொடுக்க தயாரிப்பாளர்கள் இருக்க வேண்டும். அப்படி மிக கடினப்பட்டு அவர்கள் கொடுக்கும் படத்தை வரவேற்று  அதை காப்பாற்றும் ரசிகர்கள் இருக்க வேண்டும்.  இரண்டும் இல்லை என்றால் நல்ல கதை சொல்லி இயக்குனர்கள் காணாமல் போய் , ஹீரோயிசத்தில் கதையை பலி கொடுக்கும் இயக்குனர்கள் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்.

தொடரட்டும் இந்த அங்கீகாரங்கள்.
 

Friday, November 4, 2011

ஏழாம் அறிவு

'தமிழர் பண்பாடு சிறந்தது. அதன் சரித்திரம் மிக பன்மையானது. அதை  மறந்துகொண்டிருக்கும் தலைமுறை அதை மீண்டும் போற்ற வேண்டும். அதன் பெருமையை காக்க வேண்டும்.' - இந்த மிக முக்கியமான கருத்தை உணர்த்தும் படம் ஏழாம் அறிவு.

ஆனால் நாம் மறந்த இந்த கசப்பான  உண்மையை  உணர்த்த இனிப்பு தடவி தரும் விஷயத்தில் கோட்டை விட்டதால் படம் கசக்கிறது. ஆனால் ஆச்சர்யம் முக்கிய கதையான போதிதர்மன் கதை காட்சிகள்  மட்டும் ரசிக்கத்தக்க வண்ணம் இருக்கிறது.

சக்கரைப் பொங்கல் சுவையாய் சூடாக இருந்தாலும்  , நைந்த இலையில் வாங்கியதால்  ரசித்து சாப்பிட முடியாமல் அவசரகதியில் விழுங்க வேண்டிய நிர்பந்தம் போல இருக்கிறது படம்.

படங்கள்  பெரும்பாலும் இருவகைகளில் அடங்கி விடும். ஆவணம் அல்லது கருத்தை மட்டும் க்ளாசிக்கலாக தரும் படம்  , கமர்சியல் படம் .  இரண்டும் தனித்தனியே இருக்கும் வரை பிரச்சனை இல்லை. ஆனால் இரண்டையும் சேர்த்து தரும்போது இயக்குனர் அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காஞ்சிவரம்,பெரியார்,கல்லூரி போன்ற படங்கள் கிட்டத்தட்ட முதல் வகை. விஜய் , எஸ்.ஜே.சூர்யா ,சிம்பு,தரணி,பேரரசு  படங்கள் இரண்டாம் வகை.

இந்த இரண்டையும் கலந்து தரும்போது மிக நுட்பமாக கையாள வேண்டிய படமாக இருக்கும். ஜென்டில்மேன் ,இந்தியன்,அந்நியன் போன்ற ஷங்கர் படங்களும், தற்போது வந்த வானம், எங்கேயும் எப்போதும் ( கவனிக்க வேண்டிய irony -இது முருகதாஸ் தயாரித்த படம்) போன்ற படங்கள் கலவை பட்டியலில் சேரும் .

ஏழாம் அறிவும் இந்த பட்டியலில் சேர்ந்திருக்க வேண்டிய படம்.  துரதிர்ஷ்டவசமாக திரிசங்கு மாதிரி இங்கேயும் அல்லாமல் அங்கேயும் இல்லாமல் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஈழம் முதல் தமிழ் பற்று  , தமிழர் பெருமை என மக்களை உணர்ச்சிவசப்படுத்தும்  பல வசனங்கள் படத்தில் உள்ளன. ஆனால் வசனம் மட்டுமே அந்த உணர்ச்சியை படம் பார்ப்பவர்களுக்கு தராது. அதை காட்சியில் ஊட்ட வேண்டும். அதில் சறுக்கியிருக்கிறார் இயக்குனர்.

கிருமியை பரப்புவது என்ற ஆதி கால ஜேம்ஸ் பாண்ட் பட வில்லன் உத்திதான்  Operation Red என்று தெரிந்ததும் தலை வலிக்கிறது. படத்தை பார்ப்பவர்களும் அதே ட்ரீட்மென்ட்டில் சிக்கியது போல ஒரு வலி.

முதல் பதினைந்து நிமிடம் முருகதாஸ் இயக்கியிருக்கிறார். பிறகு அவரின் ஏதோ ஒன்றிரண்டு கத்துக்குட்டி உதவி இயக்குனர்கள் படத்தை எடுத்து  முடித்துள்ளனர் - இறுதி காட்சி உட்பட.
தமிழின் மேல் நமக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் ஒரு இம்மியளவும் குறையவில்லை. இந்த படத்தை குறை சொல்லுபவர்களை , தமிழை மதிக்க தவறியவர்கள் என்று  பிறர் கருதும் வகையில் படத்தில் அதன் கதையோடு தமிழை
முடிச்சு  போட்டு
விளையாடியிருக்கிறார்  முருகதாஸ். படத்தின் ஒரே பலம் இதுதான்.


'படம் நல்லா இல்லை' என்று சொன்னாலே ஏதோ தமிழ் மொழிக்கு நிரந்தர  விரோதி போல மற்றவர்கள் பார்ப்பது குழப்பமடைய வைக்கிறது. முன் எச்சரிக்கையாக ' இந்த படம் தெலுங்கில் பார்தேன். நல்லாவே இல்ல 'என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

பதிவுக்கு சம்பந்தமான கேள்வி: 

 'போதி தர்மர் தமிழர்தானே? காஞ்சிபுரத்தில் தானே பிறந்தார்.?அப்புறம் ஏன் தெலுங்கு படத்துல அவர் குண்டூர்ல பிறந்ததாகவும் ..ஹிந்தி படத்துல தாரவில பிறந்ததாகவும் சொல்கிறார்கள்.இரண்டு மொழிகளிலும் அவர் தமிழர்ன்னு பெருமையா சொல்லி இருக்கலாமே

தமிழர்களை பெருமைப்படுத்துற படம்னு சொல்லிட்டு தமிழர்களை ஏன் இப்படி அசிங்கப்படுத்தனும்???'
- இயக்குனர் மு.களஞ்சியம்


முதல் பார்வையில் காதல் என்றதும் கிளை கதை 'நான் ஒன்றும் வித்தியாசமான கதை அல்ல ' என்பதை அறிவித்து விடுகிறது.

ஹீரோவுக்கு ஒரு நண்பன், எல்லாரும் படியில்  இறங்கியதும் லிப்ஃட்டில் வில்லன் வருவது போன்ற வழக்கமான எல்லாரும் யுகிக்ககூடிய காட்சிகள் சலிப்படைய வைக்கின்றன. 
தன் மேல் கொண்டிருந்தது காதல் அல்ல நடிப்பு என்று தெரிந்ததும் சூர்யா பாடும் பாடல், ஹீரோயின் அப்பா நடித்த அபூர்வ  சகோதரர்கள் படப்பாடலை நினைவு படுத்துகிறது.

சண்டை காட்சிகளிலும்  , ரோட்டில் நடக்கும் கார்களை பயன்படுத்தி  சூர்யாவை வில்லன்  கொல்ல முயலும் காட்சியில்  மூன்றாம் தர கிராபிக்ஸ் சிரிக்க வைக்கிறது.

கடைசியாக எல்லாரும் எதிர்பார்த்த சண்டைகாட்சியும் , பீட்டர் ஹெய்ன் அவசரகதியில் முடித்த , நிறைவைத் தராத ஒன்றாகவே இருக்கிறது. அவ்வளவு அடி கொடுத்த வில்லனை எப்படியெல்லாம் புரட்டி எடுக்க வாய்ப்புள்ள சண்டைக் காட்சி அது.. ஹுஹும்ம்.. failed the expectation..


சுருதி ஹாசன் தமிழில் அறிமுகமான படம் என்று பின்னாளில் ஞாபகம் வைக்க பயன்படும் படமாக மட்டும் இது இருக்கும்.இவர் நடிப்பு பாராட்டகூடியது; தமிழ் உச்சரிப்பு ஏன்
மூச்சு திணறும்படி , அழுத்தம் கொடுத்து ,இவ்வளவு சிரமப்பட்டு வருகிறது என்று புரியவில்லை. வேறு குறை இல்லை..முன்னேற வாய்ப்பிருக்கிறது .

போதி தர்மர் சூர்யா மட்டுமே வித்தியாசமாய் தெரிகிறார். சர்க்கஸ் சூர்யா எல்லா படத்திலும் பார்த்த , பழகிய பாவனையுடைய  ஒருவராகவே இருக்கிறார்.கெட்டப் மாற்றத்தில் இருக்கும் கவனம் , நடிக்கும் உடல் அசைவு,முக பாவனை ,மற்ற  மேனரிசத்திலும் இருக்க வேண்டும்.
இவரைப் பொறுத்த வரையில் , இதுவும் இன்னொரு படமே..நல்ல நடிப்பு என்று பெருமைப்படவும் முடியவில்லை.. மோசமான நடிப்பு என்று புறந்தள்ளவும் தேவையில்லை....

ஹாரிஸ் ஜெயராஜ் இன்னொரு திருஷ்டி. தான் கொடுத்த  பழைய வெற்றி பாடல்களின் தாக்கத்திலிருந்து இவர் மீளாத வரை ,  இவரை நம்பி இருக்கும் இயக்குனர்கள் பரிதாபப் படவேண்டியவர்கள்  .


முருகதாஸ்க்கு , நல்ல ஒரு கருத்தை சொல்ல முனைந்ததமைக்கு  பாராட்டுகள். அதை சரியாக சொல்லாததற்கு
பலமான ஒரு கண்டனம்.
இரண்டையும் சொல்ல ரசிகர்களுக்கு உரிமை இருக்கிறது.

கிளைகதையில் மெனக்கெட்டு , முக்கிய கதையில் இணைக்கும் வித்தையை இன்னும் கற்க வேண்டும். உங்கள் பலம் புதுகதையை உருவாக்குவதில் அல்ல.. அது எங்கிருந்தாலும் எடுத்து விடுவீர்கள். அந்த கதையை செதுக்குவதில் மட்டுமே உள்ளது.

கஜினி வெற்றிக்கு காரணம் Memento அல்ல..அதில் நீங்கள் சேர்த்த சரக்கும் (improvising) , உங்கள் புதுவித ட்ரீட்மென்ட்டும் தான் காரணம்.இதில் அது துளியும் இல்லை.
விஜய் அவார்ட் நடுவர் குழுவில் அடுத்த வருடம்   இடம்பெற நீங்கள் இன்னொரு முறை உங்களை நிரூபிக்க வேண்டும்.
கண்டிப்பாக இந்த படம் அந்த பெருமையைக்  கொடுக்காது.

மொத்தத்தில் நல்ல கதைக்கருவை , திறமையுள்ள ஒரு குழு , தங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தாமல் ,அதை குறைபடுத்தி அரைகுறையாய் முடித்திருக்கும் படம் ஏழாம் அறிவு.

வெரி சாரி முருகதாஸ்.  அடுத்த முயற்சியில் உங்களையும்   ரசிகர்களையும் ஏமாற்றாமல் இருப்பீர்கள்  என்று நம்புகிறோம்.

Friday, October 7, 2011

எங்கேயும் எப்போதும்

சேது வெற்றிக்கு பிறகு தமிழ்  படங்கள் பார்முலா மாற்றப்பட்டது. கடைசி  காட்சி மட்டும் கொடூரமாய் இருக்க வேண்டும் ; மீதி முழுக்க  நகைச்சுவையாகவும் , 
மசாலாத்தனம்  உள்ளதாகவும் மேலோட்டமாக பார்த்தால் எதார்த்தமாகவும் இருக்க வேண்டும் என்பதை பல படங்களில் கடைபிடிக்கப்பட்டது.

நந்தா,  காதல், பிதாமகன்,7G ரெயின்போ காலனி,செல்லமே,பருத்திவீரன், காதலில் விழுந்தேன், மைனா என ஒரு நீண்ட வரிசையில் படங்கள் வந்தன; வெற்றியும் பெற்றன. ஆனால் அந்த வகையில் பத்தோடு பதினொன்று என சேர்க்க முடியாத படம்  - எங்கேயும் எப்போதும். காரணம் கடைசியில்.


கிளைமாக்ஸ் காட்சி முதலில். அதை நோக்கி நடைபெறும் காட்சி நகர்த்தல்களில் படம் சொல்லும் முறை. ஆங்கில படங்களில் அதிகம் பயன்படுத்தபட்டிருந்தாலும் , தமிழில்  தசாவதாரம்,அங்காடி தெரு , கிட்டத்தட்ட வெயிலில்.. இப்போது  இந்த படத்தில். இதில் உள்ள ஒரே ஆபத்து , தெரிந்த கிளைமாக்ஸ் காட்சிக்கு சுவாரசியம் குறையாமல் பார்ப்பவரை அமர வைக்க தெரிந்திருக்க வேண்டிய உத்தி. அது இயக்குனர் சரவணனுக்கு இருக்கிறது.

ஜெய் - சுப்ரமணியபுரம் வெற்றி மமதையில் இருந்து இறங்கி வந்து , தன் இடம் தெரிந்து நடித்திருக்கும் படம். இடையில் அவள் பெயர் தமிழரசி என்ற ஒரு நல்ல படம் கொடுத்தார். மற்றவை குப்பைகள். இந்த படத்தில் அவரின் அப்பாவித்தனமான நடிப்பும் , காதலிக்கு அடங்கி ஒடுங்கும் பாத்திரமும் கனகச்சிதம்.
இது சரியான ட்ராக். ஜெய்.. போலாம் ரைட்...

அஞ்சலி - கற்றது தமிழ் , அங்காடிதெரு போன்ற பேர் சொல்லும் படங்களில் , நினைவில் நிற்கும்  பாத்திரங்களில் நடித்து இவரும்  இடையில் ரெட்டசுழி, மங்காத்தா,ஆயுதம் செய்வோம்  இன்னும் சில குப்பைகள் நடித்து மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.

இந்த மாதிரி வாயாடி காதலி பாத்திரத்தில் நடிக்க நிறைய தைரியம் வேண்டும். பார்ப்பவருக்கு எதோ ஒரு இடத்திலாவது  , 'இந்த சுமாரான பொண்ணுக்கு போய் எதுக்கு இவ்ளோ பயப்படறார்?' என்று நினைத்தால்  கதை கந்தல். அதை உடைத்தெறியும் நடிப்பும் , அளவான அழகும்  அஞ்சலிக்கு உண்டு. இதை தொடர்ந்தால் சுஹாசினி இடத்துக்கு வர முடியும். வாழ்த்துக்கள்.

அனன்யா - ஷர்வானந் காதல் காட்சிகள் , இளைஞர்கள்  மத்தியில் ஹிட். ' கோவிந்தா..கோவிந்தா' பாடலில் அனன்யாவின் நடிப்பும் , அப்பாவித்தனமும் , கடந்த இருபது நாளாக பேஸ்புக்கில் அதிகம்  பகிரப்பட்ட ஒன்று.

படத்தின் கதை இந்த நேரம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். எல்லாருக்கும் தெரிந்து பயன் இல்லை.  ஓட்டுனர்கள்,குறிப்பாக தனியார் பேருந்து , லாரி ஓட்டுனர்கள் பார்க்க வேண்டிய படம்.  விஜய் டிவி இனி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் என்று தனியாக ஒரு பிரிவை ஆரம்பித்து இந்த படத்திற்கு தாராளமாக விருது கொடுக்கலாம்.

முருகதாஸ் கொண்டாடப்பட்ட வேண்டிய இயக்குனர் ஒன்றும் அல்ல.  ஆனால் இந்த படத்தை கொடுத்ததன் மூலம் பாராட்டப்பட வேண்டிய தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். சங்கர் S பிக்சர்ஸ் மூலம் செய்ததை, பிரகாஷ்ராஜ் முன்பு  டூயட் மூவீஸ் மூலம் செய்ததை  இவர் தொடரலாம் என்று நம்புவோம். புதிய  பல இயக்குனர்கள் வர ஏணியாய்/ஏதுவாய்  இருக்கும்.

சரி , படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்று விட கூடாது.  யோசிப்போம். இது ஒன்றும் மிகைபடுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. சென்னை - கோவை-திருச்சி - மதுரை- பெங்களுரு என்று இருக்கும் எல்லா தேசிய நெடுஞ்சாலைகளிலும் நடக்கும் அன்றாட விபத்துகளில் ஏற்படும் தனி மனித பாதிப்பை உணர்த்தும் கதை இது. 

நன்றாக படித்து , கணினி நிறுவனத்தில் வேலை வாங்கி , கடினமாக ஐந்து வருடம் உழைத்து பதவி உயர்வு பெற்ற பிறகே திருமணம் என்று சொல்லி ,அதன் பிறகு கல்யாணத்திற்கு தலையாட்டி , நிச்சியதார்த்ததிற்கு செல்லும்போது சமீபத்தில் விபத்தில் கருகிய என் தோழியை நினைக்கிறேன். மீதி வாழ்க்கையை எங்கு வாழ அனுப்பி வைக்கபட்டாள் சிரிக்க மட்டுமே தெரிந்த என் அப்பாவி தோழி ? காரணம் - முகமறியா ஒரு ஓட்டுனர்.  

மேலும் வலியை உணர இதையும் பார்க்கலாம்.   

எங்கேயும் எப்போதும் - இப்போதும் எப்போதும் நினைவில் இருக்க வேண்டிய படம்.
-------------------

Wednesday, September 7, 2011

மங்காத்தா - A well deserved 50*

இது புதுகதைன்னு யாரும் கண்டிப்பா சொல்ல முடியாது. அதுவும் அடித்தட்டு தமிழ் ரசிகன் கூட குறைஞ்சபட்சம் டப் செய்யப்பட ஹாலிவுட் படத்தை பார்த்து தன்னோட பார்வைய விலாசமாகிட்ட இந்த காலகட்டத்துல , இது மாதிரி ஒரு திருப்பமான கதை வந்ததே இல்லைன்னு சொல்லமுடியாது..தமிழுக்கு இது கொஞ்சம் புதுசு.அவ்வளவுதான்.



அதுக்காக Italian Job , Inside Man மாதிரி  இப்படி ஒரு பாங்க்  ராபரி கதைல வேகத்தை அப்படியே கொண்டு வந்துடாங்கனு பெருமையும் பட முடியல..இடைல ரெண்டு பாட்டு முதல் பாதியில பொறுமையை சோதிக்க வைக்குது..

அப்புறம் என்ன படத்த காப்பாத்துது..?

அஜித் அஜித் அஜித்

இதுதான் படத்தோட வெற்றி. வேற எதுவும் இல்ல..

கிட்டத்தட்ட ஆறு, ஏழு ஆங்கில படங்களிலிருந்து Copy inspire செய்யப்பட்டு எடுத்த காட்சிகள்-ன்னு  நல்லா தெரிஞ்சாலும்   , யாரும் அதை பெருசா குறை சொல்ல முடியல. காரணம் - அஜித்   

நாலு ஹீரோயின் இந்த படத்துக்கு எதுக்கு..அதுவும் அஞ்சலி , ஆண்ட்ரியா தேவையே இல்ல.. வெறும் ஸ்டார் வேல்யுக்காக  இத்தனை பேரை கதைக்குள்ள டைரக்டர்  எறக்கியிருக்காருன்னு  படத்த கோவிச்சிக்க  முடியல. காரணம் - அஜித்.

 ஹீரோ நடுத்தர வயசு , அதுவும் கெட்டவன் , முடியெல்லாம் நரைச்சு தனக்கு வயசு நாப்பது ஆகபோகுதுன்னு அவனே சொல்றான், பஞ்ச் டயலாக் எதுவுமே இல்ல , ஹீரோயினோட கடைசியா சேரவே  இல்ல..கிளைமாக்ஸ்ல போலீஸ்கிட்ட செமத்தியா அடி வாங்குறான்  ..  ஹீரோ எப்படி இருக்கணுமோ அப்படி எந்த  இலக்கணமும் இந்த படத்துல ஹீரோவுக்கு இல்ல.. என்னடா தமிழ் படம் எடுத்துருக்கீங்கன்னு சத்தம் போட முடியல .. 
காரணம் - அஜித்.

அட..அதான் கதைக்கு சப்டைட்டில் கூட-'Strictly No Rules' .

எம்ஜீஆர் கெட்டவரா நடிச்சா மக்கள் ஏத்துக்கமாட்டாங்க .. சிவாஜி டான்ஸ் ஆடி , சண்டை போட்டா கண்டிப்பா எடுபடாது. அடுத்து வந்த ரஜினி இது ரெண்டையும் செஞ்சு சூப்பர் ஸ்டார் ஆனாரு. ( கமல் பாதை வேற.அவர இங்க சேர்க்க வேண்டாம்). ரஜினிக்கு அப்புறம் அந்த வித்தை ஒருத்தருக்கு கைவந்து ,அத மக்களும் ரசிக்கறாங்கன்னா அது அஜித் தான்.

இல்லைனா வாலியும்,அமர்க்களமும் , அட்டகாசம் வெள்ளைசட்டையும்
ஃப்ளாப் ஆகி  படுத்துருக்கும். பில்லா ரீமேக் பண்ண யாரும் இருக்க  மாட்டாங்க..
முகவரியும் கொடுப்பாரு; தீனாவும் கொடுப்பாரு; ரெண்டுக்கும்  கனகட்சிதமா  பொருந்துற முகம்.



'Good Cop Bad Cop'
விஷயத்தை அழகா நடிப்புல கொண்டுவர  ஒரு ஹீரோவ சரியா  பயன்படுத்துனா, லாஜிக் முன்னபின்ன இருந்தாலும் படம்
கண்டிப்பா  கல்லா கட்டும்னு முதல நிருபிச்சவர் ஷங்கர் - படம் சிவாஜி.அடுத்து அதை அழகா கையாண்டிருக்கார் வெங்கட்பிரபு.

வெள்ளை கட்டம்போட்ட நீல சட்டை. மேக்கப் இல்லாத , கருப்பு வெள்ளை கலந்த முடி. நரைத்த தாடி. ஒரு சராசரி , அதிக பில்டப் இல்லாத ஆனா ஆண்மைத்தனமான கேரக்டர் . அதிகபடியா அப்பப்போ கூலிங் கிளாஸ்.வெகு அலட்சியமா தம் அடிச்சிட்டே பேசுற வசனம்-ன்னு தனி ஆவர்த்தனம் பண்ணிருக்கார் அஜித்.

அர்ஜுன் இருந்தாலும் உண்மையான ஆக்சன் கிங் அஜித் தான். தண்ணியடிச்சிட்டு அடுத்த நாள் தலைய பிடிச்சிட்டு 'இனி மேல  சத்தியமா தண்ணி அடிக்க கூடாது'ன்னு புலம்புவதிலிருந்து , வெகு கத்தலா  'இது என் கேம். நான்தான் ஓவர்னு சொல்லுவேன்'ன்னு   போனில் வெளுத்துகட்டுவதிலிருந்து ,காரிலிருந்து வெகு ஸ்டைலாக ஜெயப்ரகாஷை தள்ளிவிடும்வரை  பாவனைகளின் அத்தனை பௌண்டரியையும்  தொட்டிருக்கிறார் அஜித்.



இந்த படம் வேறு யாரை வைத்து எடுத்திருந்தாலும் முதல் நாளே தியேட்டரை விட்டு ஓடியிருக்கும்.இப்போதோ படம் இமாலய வெற்றி - உபயம் அஜித் .
விஜய் ரசிகர்களும் மனசார பாராட்டும் படம்.

வெங்கட்பிரபு நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார்.ஆனால் அவர் சிரிப்பு மூட்ட  வழக்கமாக செய்யும் ஃபார்முலா  போர் அடிக்க ஆரம்பிச்சிருச்சு. இந்த படத்திற்கு பெரிய திருஷ்டிபொட்டு பிரேம்ஜி அமரன். தம்பியை கொஞ்சம் அடக்கி வாசிக்க வைச்சு  , அவருக்கு வீணா கொடுக்கும் பில்டப்பை ஒதுக்கி வைச்சு  அடுத்த படம் கொடுக்கலைனா வெங்கட்பிரபு மறுபடியும் நடிக்க வரும் ஆபத்து  ரசிகர்களுக்கு இருக்கு. பார்த்துகோங்க.
தம்பிக்காக காமெடிக்கு
மெனக்கெடரத விட்டுதொலைங்க..எங்களுக்கு இப்போ அவர பாத்தா சத்தியமா சிரிப்பு வரல..

மத்தபடி நீங்க எங்க இருந்தோ கதைய கொண்டு வந்து ரசிகர்களை ரசிக்க வைச்சாலும் 'Spicing it UP' வித்தை உங்களுக்கு நல்லா வருது.வாழ்த்துக்கள்.


தன் கூட்டாளிகளை எதிரிகள் தியேட்டர் வாசலில் சுத்தி  வளைச்சு  நிற்கும்போது,  ஜெயப்ரகாஷ் பின்னால் மெதுவா துப்பாக்கியோடு நடந்து வந்து கை தூக்கி அஜித் சிரிக்கும்போது , விசில் சத்தமும் 'தல' கூச்சலும் காதை பிளக்குது..

மங்காத்தா பேருக்கான அர்தத்த கடைசியா தெரிய வரும்போது கைதட்டல் தெறிக்குது..

ஆக , அத்தனை பேர் இருந்தாலும் , படம் முழுக்க தெரிவது அஜித் தான்.எல்லா பாவத்தையும்  கங்கை கொண்டுபோவது மாதிரி , படத்தோட எல்லா குறையையும் அஜித்தோட அசத்தல் நடிப்பு & இமேஜ்  தட்டிட்டு போய்டுச்சு.

மங்காத்தா - அஜித்தின் 'சிவாஜி'..  

Monday, July 18, 2011

தெய்வத்திருமகள்

அழகான மாலையில் , பூங்காவில் நிழல்குடையில்   அமர்ந்து இயற்கையை ரசிக்கும் போது , மெல்லிதாக ஒரு மழை வந்தால்  எப்படியிருக்கும்? மண்வாசமும் ,  குளிர் காற்றும் , ஆர்ப்பட்டமில்லாத மழைத்துளிகள் முகத்தில் மோதினால் தோன்றும் உணர்வு எப்படியிருக்கும்?  பக்கத்தில் உங்கள் தாயோ தந்தையோ , அவர்கள் தோள் சாய்ந்து இயற்கையை அந்த நேரத்தில் ரசித்தால் மனம் எப்படி லேசாக இருக்கும் ?

தெய்வத்திருமகள் பாருங்கள்...


கிளாசிக் படங்கள் என்றால் அது கேரளாவில் இருந்து மட்டுமே என்ற இந்திய திரைப்பட நியதி தற்போது உடைபட்டு வருகிறது. மிஸ்கின்,வசந்தபாலன்,ராதா மோகன் , பாலா ,சற்குணம்,சசி குமார் ,சமுத்திரகனி   போன்றவர்கள்  பெருகிக்கொண்டு வருவது தமிழுக்கு மிகப்பெரிய பலம்.
 
அந்த வரிசையில் கவனிக்கத்தக்கவராக மிளிர்கிறார் விஜய். மதராசப்பட்டிணம் என்ற அருமையான , மெல்லிய காதலும் ,நிதானமான கதையும் கொடுத்து வியக்க வைத்தவரின் அடுத்த படைப்பு தெய்வத்திருமகள்.
 
முதலில் , ஒரு  ஆறு வயது அழகிய ,நடிக்கத்தெரிந்த கதாநாயகியை அறிமுகப்படுத்தியதற்கு  ஒரு பெரிய சல்யுட். 
 
 
 
குழந்தை சாரா சிரிக்கிறாள் - சிலிர்க்கிறோம்; பேசுகிறாள் - கிறங்குகிறோம் ;கவலைப்படுகிறாள் - பதறுகிறோம்; தந்தையுடன் மௌன பாஷை பேசுகிறாள் - உருகுகிறோம்.இதை சாத்தியப்படுத்துவதன் மூலமே அறுபது சதவீத வெற்றி பெற்று விட்டார் இயக்குனர். படத்தில் ஜி.வி.பிரகாஷின் இசைக்கு போட்டி இவள் குரல்தான் .
 
எமி ஜாக்சன்,சாரா என்று நல்ல நடிகைகள் கண்டுபிடிப்பில் பேர் வாங்கும் அடுத்த பாரதிராஜா இதோ இங்கே.



கண்ணை உறுத்தாத நடிப்பு. பாத்திரத்துக்கு தேவையான  பாவனைகள்.  சந்தோசம். அனுஷ்கா இனி இந்த படத்தை தன் அடையாள அட்டையாக தாராளமாக பயன்படுத்தலாம்.

மைனா போன்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் அறிமுகம் ஆகி இதில் குறைந்த  காட்சிகளில் தோன்றுவதை பொருட்படுத்தாமல் நடித்த 
அமலாவுக்கு விஜய் நன்றி சொல்லியிருப்பார். இப்போது விஜய்க்கு அமலா நன்றி சொல்ல வேண்டும். இரு நடிகைகளும் சாராவுக்காக முதலிடத்தை படத்தில் விட்டு கொடுத்தது பாராட்டப்பட வேண்டியது.

நாசரை தவிர வக்கீல் பாஷ்யம் கேரக்டருக்கு யாரை தேடுவது?  எத்தனை படங்களில் வக்கீலாக நடித்திருந்தாலும் ஒவ்வொன்றிலும் மாறுதல் கடைபிடிக்கும் சிறந்த நடிகரை கையில் வைத்துக் கொண்டு விஜய் யாரை தேடுவார்?  கனப்பொருத்தம்.

இன்னும் ஒரு இரண்டு வருடம் இதை தொடர்ந்தாலே போதும்.. சந்தானம் முதலிடத்தில் இருப்பார். விவேக் வைத்திருப்பது போல எந்த டெம்ப்ளேட்டும் இல்லாதிருப்பதே இவரின் பலம்.  யதார்த்த நகைச்சுவைக்கு தற்போதைய நாயகன் சந்தானம்தான். தனி ட்ராக் எதுவும் இவருக்கு தேவை இல்லை. வாழ்த்துக்கள்.
 
ஏற்கனவே பலமுறை சொன்னதுதான். கமலுக்கு அடுத்து கதைக்குள் தன்னை ஒளித்துவைத்து பாத்திரமாக மட்டுமே தெரிவது விக்ரம் மட்டுமே.
ஆறு வருட அலைகழிப்புக்கு பிறகு விக்ரம், ரசிகர்களுக்கு  மீண்டும் தன்னை திருப்பிக் கொடுத்து விட்டார்.  

வசனங்கள் குறைவு..இருக்கும் வசனமும் எந்த தெளிவையும் சொல்லாது.. மனதில் இருக்கும் பதிலை ,வெறும் திணறலில் மட்டுமே ரசிகர்களுக்கு புரிய வைக்க வேண்டிய கட்டாயம்  விக்ரமுக்கு. அதை செய்ய கொஞ்சம் நாடகத்தனம் கொடுத்திருந்தாலும் , பாத்திரம் வலுவிழந்திருக்கும்.
அந்த கவலை இயக்குனருக்கு நேராமல் இருக்கும் நம்பிக்கையை விக்ரம்  முன்னமே கொடுத்திருப்பார். அதை காப்பாற்றியிருக்கிறார்.  



சொல்ல வந்ததை சொல்லாமலேயே புரிய வைக்கும் இவருக்கு ,சாதனை செய்ய இறைவன் நல்ல இயக்குனர்களை கொடுக்கட்டும்.
சரி.. மீன்குட்டியின் நீச்சலை பாராட்ட தேவையே இல்லை.
இயக்குனரை மட்டுமே பார்ப்போம்.
 
'குழந்தைக்கு பேரு வெக்காத..பெரிய பிரச்சனை ஆகிடும்..அப்புறம் எல்லாரும் பேர சொல்லியே கூப்பிடுவாங்க..' -
 
மனநிலை பாதிக்கப்பட்டவரின் ஆலோசனையாக இந்த டயலாக் வரும்போது மெல்லிய நகைச்சுவையினூடே அவர்களின் அப்பாவித்தனத்தை இதை விட  அழகாக இது வரை எவரும் சொன்னதில்லை..
-------------------------------

'நீ மட்டும் அப்பாகிட்ட இருக்கலாம்.நான் இருக்க கூடாதா? ' -
சாராவின் கேள்விக்கு அமலா மட்டும் அல்ல யாருமே பதில் சொல்ல முடியாது..

------------------------------

கோர்ட் காட்சியில் கொஞ்சம் தவறினாலும் , நாடகம் பார்க்கும் எண்ணம் ரசிகர்களுக்கு வந்து விடும். அல்லது எப்போதோ வந்த விதி படமும் , அவ்வப்போது வரும் சீரியல் கோர்ட் காட்சிகளும் மனதில் வந்து தொலைக்கும். அதை வரவிட அனுமதிக்காத திறமை  விஜய்க்கு இருக்கிறது.

அனுஷ்கா - ஒய்.ஜி இணக்கத்தை காட்டும் கவிதை காட்சிகள் , பல தந்தை-பெண் உறவில்  நடக்கும் ஈகோ நிகழ்வு.   

எல்லாவற்றிற்கும் மேலாக இறுதி காட்சியில் வரும் அந்த அப்பா மகள் மௌன உரையாடல்... ஹ்ம்ம்.. மெலோ ட்ராமா இல்லாமல் அழவைக்கும் மென்மையின் சக்திக்கு உதாரணம்.

எத்தனை காலம்தான் திரிசூலம் டெலிபோன் காட்சியை பார்த்து 'இதோ ..உணர்ச்சி குவியலின் சிகரம்'  என்று வேறு வழியில்லாமல் பாராட்டிக்கொண்டிருப்பது?
இங்கே அமைதியாக ,வசனம் எதுவும் இல்லாமல் ஸ்பரிசங்களின் ஸ்வரங்களாக பார்ப்பவரை 
ஆட்கொள்கிறது காட்சி..

இங்கேயே தமிழ் படங்களின் தரம் உயர்ந்திருப்பதை உணர முடிகிறது..

உங்களுக்கு விலாசம் தமிழ் திரையுலகில் தங்கத்தால் எழுதப்பட்டுவிட்டது விஜய். அதை எந்த நடிகரின் இமேஜுக்காகவும் தூசுப்பட வைக்காமல் உங்கள் வழியில் செல்லுங்கள்.



யாராவது இனி தமிழ் படத்தின் தரம் என்ன என்று நிர்ணயிக்க தொடங்கினால் , இந்த படத்தை பார்க்கட்டும். நாங்கள் பிளாஸ்டிக் புன்னகையும் , கிளிசரின் கண்ணீரையும் , தாலி செண்டிமென்ட்டையும்  தாண்டி பல காலம் ஆகி விட்டது  என புரிந்து கொள்ளட்டும். 

தெய்வத்திருமகள் - லக்ஷ்மி விக்ரகம்.

Friday, July 15, 2011

வேங்கை - வேகம் இல்லை..

ஹரிக்கு இது பதினோராவது படம்.. சரியாதான் இருக்கு.. இது அவருக்கு பத்தோட பதினொன்னு.. அத்தோட இது ஒன்னு ..
 
 

சிங்கம் படம் முடிந்ததும் ஹரியின் அடுத்த படத்திற்கான ஆரம்ப வேலை நாள் இப்படிதான் இருந்திருக்கும்..

'பிரகாஷ்ராஜ் சார்..மேக்கப்ப களைச்சுடாதீங்க.. அப்படியே
இருங்க.. இங்க வாப்பா.. மீசையை ரெண்டு பக்கமும் இன்னும்  பெருசா ஒட்டு..'

'ராதாரவிய அனுப்பிடு.. அப்பா கேரக்டருக்கு நீ போயி  கோவில் பட கெட்டப்ல  ராஜ்கிரண் சார கூட்டிட்டு வா..'

'தமன்னா மேடம்.. சாமி பட சிடி போட்டு பாருங்க.. த்ரிஷா கேரக்டர்தான் நீங்க பண்ண போறீங்க '

' இந்த படத்துக்கு ஹீரோ யார போட்டுருக்கோம். தனுஷா.. ஹ்ம்ம் சரி சண்டைக்கு நம்ம பழைய பட அரிவாள் சண்டை கிளிப்பிங் எல்லாம் போட்டு காமி..என்ன கேரக்டர்னு கேட்டார்னா ஐயா பட சரத் இல்லேன்னா 'வேல்' பட சூர்யா கேரக்டர்னு சொல்லு.. 

பைட் மாஸ்டர்ட்ட சொல்லி ஒல்லியான அடியாளுகள மட்டும் போட சொல்லிடு..மரத்துல மளமளன்னு தாவி ஏறுற சீன மட்டும் வெச்சுரு..அந்த ஒரே அடில பெரிய ஆளுகள அடிக்கிற  சீன அடுத்த சூர்யா படத்துல வெச்சுக்குவோம்.'

---------------------------------------------------

'தனுஷ் அப்பா ராஜ்கிரண்ணா ? என்னண்ணே  பொருத்தமே இல்ல?'

'அட போடா.. லாஜிக் எல்லாம் பாத்தா தனுஷுக்கு அப்பா வேசத்துக்கு மனோபாலாவும் , பட்டிமன்ற ராஜாவும்தான் போடணும்..எல்லாம் சரியா வரும்.. போ'
-------------------------------------------------

காமெடி யாரு?

'யார வேணும்னாலும் போடு.. படத்துக்கு வேகத்துக்கு நடுவுல கொஞ்சம் ஜனங்க தம் அடிக்க போறதுக்கு வசதியா இருக்கணும்..அது போதும்.'




கதாபாத்திரங்கள் என்னண்ணே...?

'அத பத்தி கவலை இல்ல.. நம்ம படத்துல நாலு பேர்தான் முக்கியம்.. ஹீரோ,ஊர் பெரியவரா ஹீரோ அப்பா,வில்லன்,ஹீரோயின்.. இவ்வளவுதான்.. ரெண்டு பக்கமும் அடியாளுகளா அந்த அருவாள் கோஷ்டிகள அப்படியே வெச்சுக்கலாம்..'
----------------------------------------------

அப்ப கதை.?

'அதுவும் பெரிய விஷயம் இல்லைடா..எல்லாரும் எதாவது ஒரு வட்டார பாஷை பேசணும். ஹீரோவுக்கு வில்லனுக்கும் நடக்கற சண்டை.. ஆனா நம்ம வித்தியாசம் எங்கேன்னா ரெண்டு பேருக்கும் நடுவுல இண்டர்வல் அப்ப ஒரு சவால் வரும்..



நமக்கு ஒரே குறிக்கோள் , படம் வேகமா போற மாதிரி இருக்கணும்..அதுக்கு டைம் பாம்  கவுண்ட்டவுன் மாதிரி  ஒரு கிளைமாக்ஸ் நாள் வெச்சுக்கணும்.. சாமி படத்துல எழு நாள் சொன்னோம்மா ? அருள் படத்துல எலெக்சன் வரைக்கும்னு சொன்னோமா ? அப்போ இந்த படத்துல முப்பது நாள் வெச்சுக்கலாம்.

ஹீரோவ இடைல அப்பப்போ ஓட விட்டு அத
பாஸ்ட் பார்வர்ட் பண்ணி  காமிக்கணும்.. வில்லனோ ஹீரோவோ எதாவது பிளான் பண்ணும்போது அத எடிட்டிங்ல அந்த சீன டக்கு டக்குனு காமிக்கிற மாதிரி இருக்கணும்..ராஜேஷ்குமார் நாவல்ல வர மாதிரி, சின்ன சின்ன க்ளுவ வெச்சு  ஹீரோ ,வில்லன் பிளான்ன கண்டுபிடிச்சு முறியடிக்கனும். '

இவ்வளோதான்டா.. போய் சீன டெவெலப்  பண்ணு..
------------------------------------------

இது தனுஷ்க்கு கூடுதலா ஒரு படம்.. மத்தபடி எதுவும் இல்ல..



சராசரியான மசாலா படம்.. ஆனா ஹிட் ஆகாது..
2  மணி நேரம் வெட்டியா இருந்தா பாக்கறதுல தப்பில்லை...


வேங்கை - இயக்கம்  ஹரி.. அதோட சரி..

Monday, July 11, 2011

டாம் ஹாங்க்ஸ்

ஹாலிவுட் படங்களின் தீவிர ரசிகர்களுக்கு டாம் ஹாங்க்ஸ் என்னும் பேர் மயக்கத்தையும் ஆவலையும் உண்டாக்கும். டாம் க்ரூஸ் போல   இவர் எந்த  ஒரு ஆக்சன் படங்களும் செய்ததில்லை.போலீஸ் வேடத்தில்  ஒன்றிரண்டு படங்களில் தோன்றிய போதும்  விறைப்பாக கூட நடித்ததில்லை.எப்போதுமே காதல் படங்கள் மட்டுமே செய்வதில்லை. ஆனாலும் அடித்து சொல்லலாம் - ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் ஹாங்க்ஸ்தான். 



அது 'காதல்' படம் வருவதற்கு ஆறு மாதங்கள் முன். தமிழில் நல்ல படங்கள் வருகை குறைந்த வறட்சி காலம்.

தில்,சாமி, தூள் ,ரன்  வெற்றியை தொடர்ந்து அரிவாளும் காட்டுக்கத்தலும் தியேட்டரில்  நிரம்பியிருந்த காலம்.சரி ஒழியட்டும் .. ஹாலிவுட் பக்கம் பார்ப்போம் என்று இந்த பக்கம் திரும்பி  imdb படங்கள் பார்த்து கொண்டிருந்த நான் அதிர்ஷ்டவசமாக கவனித்த  நடிகர் - டாம்   ஹாங்க்ஸ். படம் 'தி டெர்மினல்' .

நல்ல நடிகரின் படங்களை , நல்ல கதையம்சமுள்ள படங்களை எல்லாம் தமிழில் பார்த்தாயிற்று என்றால் , வாருங்கள் இந்த பக்கம். இங்கு ஒரு அற்புதமான நடிகர் , தர வரிசையாக படங்களை அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கிறார். உங்களை சிரிக்க வைக்கிறார். அழ வைக்கிறார். நெகிழ வைக்கிறார். ஆச்சர்யப்பட வைக்கிறார்.பரவசப்பட வைக்கிறார்.  மொத்தத்தில் கமல் செய்யும் அனைத்தும் செய்கிறார்.

கமல் படங்களுக்கு பிறகு நான் தவறாமல் பார்க்கும் படங்கள் இவருடையதுதான்.

இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள்.
படத்துக்கு படம் வித்தியாசம் - கதையிலும் சரி , தேர்ந்தெடுக்கும் பாத்திரத்திலும் சரி.
நடிப்புக்கு மெனக்கெடுதல் மட்டுமன்றி  உச்சரிக்கும் வசனத்தின் அதிர்வுகளிலேயே காட்சியின் விறுவிறுப்பை ஊட்டுவது.
கதையை ஹீரோயசம்  ஓவர்டேக் செய்யாமல் கவனமாக கையாளுவது.
இப்படி எத்தனையோ ஒற்றுமைகள்.

நான்  பார்த்த முதல் டாம் ஹாங்க்ஸ் படம் - 'தி டெர்மினல்' .அமெரிக்க விமான நிலையத்தில் மாட்டிகொள்ளும் ஒரு அப்பாவி பாத்திரத்தில் டாமின் நடிப்பு என்னை வெகுவாக ஈர்த்தது.
ஆங்கிலம் தெரியாமல் திண்டாடி , வேறு வழியில்லாமல் விமான நிலையத்துக்கு உள்ளேயே வாழ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு , எல்லார்க்கும் உதவி செய்து , நண்பர்களாக்கி , வேலை செய்து போராடி ஜெயிக்கும் மனிதனாக வாழ்ந்திருப்பார் ஹாங்க்ஸ்.


அது வரை அவரைப் பற்றி எந்த ஒரு அறிமுகமும் இல்லாததால் அவர் நடிப்பு என்னை ஆச்சர்யபடுத்தியது.

தொடர்ந்து அவர் படங்களே பார்க்க முடிவு செய்து அடுத்ததாய் பார்த்த படம் எல்லாருக்கும் நன்கு தெரிந்த 'கேஸ்ட் அவே' .
விமான விபத்தில் யாருமே இல்லாத ஒரு தீவில் தனியாக மாட்டிகொண்டு , உயிர் வாழ தன்னையே மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதனின் பரிணாமத்தை அவர் நடித்து காட்டிய விதம் என்னை அவர் நடிப்பில் கட்டிபோட்டது.

 உடலை வருத்தி , உணவுக்காக மீனைப் பிடிக்க கற்றுக்கொண்டு , நெருப்பு மூட்ட கற்றுக்கொண்டு ,தனிமையை போக்க ஒரு பந்தினை நண்பனாக  கற்பனை செய்து பேசிக் கொள்வது ,  கடைசியில் படகு செய்து தப்பிக்க போராடுவது என அந்த தீவில் உண்மையில் வாழ்ந்திருப்பார் டாம்.



'சேவிங் ப்ரைவேட் ரியான் '  - ராணுவ அதிகாரியின் பிம்பத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது. ஸ்பீல்பெர்க் இயக்கமும் டாமின் நடிப்பும் கை கோர்த்துக்கொண்டு படத்தை புகழ் உச்சிக்கு கொண்டு சென்றது.

இறுதியில் குண்டடிபட்டு வீழ்ந்தபோதும் எதிர் வரும் டாங்கியை நோக்கி சுட்டுக்கொண்டே சாகும் காட்சியில் டாமின் கை கூட நேர்த்தியாக நடித்திருக்கும்.

மிக சிக்கலுக்கு உண்டான 'தி டாவின்சி கோட் ' படமும் அதன் பின் வந்த அதன் தொடர்ச்சியான 'ஏஞ்சல்ஸ் அண்ட் டீமான்ஸ் ' படத்திலும் ஒரு ஆராய்ச்சியாளரின் பதிவை நம் முன் கொண்டு வந்திருப்பார் டாம். படத்தின் சுவாரஸ்யம் ,விறுவிறுப்பு துணை கொடுக்க , ஹாங்க்சின் கேரியரில் ஒரு மைல்கல்லாக அமைந்தன இரு படங்களும்..

இவர்தான் டாம் என்று தெரியாதபோது  நான் பார்த்த படம் 'கேட்ச் மீ இஃப் யூ கேன்' . மீண்டும் ஒரு முறை பார்த்தேன். டீகப்ரியோ, டாம் இருவரும் போட்டி போட்டு நடித்த படம்.

அடுத்து நான் பார்த்த படம் 'தி கிரீன் மைல்'  . வித்தியாசமான , மிக புதிய கதைகளன். சிறை அதிகாரியாக வரும் டாம் மட்டுமல்லாமல் எல்லாரும் அற்புதமாக நடித்திருப்பார்கள்.

'யூ ஹாவ் காட் எ மெயில் ' - இது போன்ற மென்மையான , மோதலில் மலரும் காதல் கதை மிக அபூர்வம். ஒவ்வொரு காட்சியும் டாமின் முக பாவனைகளும், கதை நாயகியை வரும் அற்புதமான நடிகை மெக் ரியான் நடிப்பும் தூள் கிளப்ப படம் எல்லாம் காதலர்கள் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்தது.



இப்படி நான் தொடர்ச்சியாய் பார்த்த படங்கள் அனைத்தும் டாம் நடுத்தர  வயதானபின் நடித்தவை.  
அதன் பின் அவரை இளமையாக பார்த்த படம் ' Big'  (நம் எஸ்.ஜே.சூர்யாவின் 'நியூ' படத்தின் மூலம்) .

இன்னும் பல படங்கள் அவரின் வசீகர நடிப்பின் கட்டுக்குள் என்னை வைத்திருக்கின்றன.'பிலடெல்ப்ஹியா' படத்தில் எய்ட்ஸ்  நோயாளியாக , நோயின் வீரியத்தை ஒவ்வொரு காட்சிக்கும்  அதிகரிப்பதை  உணர்த்தும்  நடிப்பை கொடுத்திருப்பார்.

குழந்தைகளும் நாமும் விரும்பி பார்க்கும் ' டாய் ஸ்டோரி ' தொடர் படங்களின்  ஹீரோ வூடியின் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்.  

ஹாங்க்சின் வெற்றிக்கு காரணமே அவரின் அலட்டிக்கொள்ளாத  நடிப்பும் , கதையின் தன்மையை உணர்ந்து பாத்திரத்தை உள்வாங்கி கொள்ளும் திறனே. பின்பு அதை நடிப்பில் வெளிக்காட்டும்போது அது பாராட்டப்படுவது ஒன்றும் ஆச்சர்யம் இல்லையே.. 
 
நல்ல கலைஞர்கள் எங்கு இருந்தாலும் பாராட்டப்பட வேண்டியது நல்லது.அதுவே நல்ல ரசிகர்களுக்கான அடையாளமும் கூட.

மொழி தாண்டி , கலாசாரம் தாண்டி , கலையினால் நம்மை ஈர்க்கும் மனிதர்கள் வரிசையில் டாம் ஹாங்க்ஸ்-க்கு தனி இடம் உண்டு.
என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு சினிமா ரசிகனும் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்கள் இவருடையது.


ஐம்பத்தைந்து வயது தாண்டி இன்னும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் கிரீடத்தை தக்க வைத்திருக்கும் டாம் ஹாங்க்ஸ்க்கு  இன்று பிறந்தநாள்.
எப்போதும் நல்ல படங்களை மட்டுமே கொடுத்து,  ரசிகர்களை என்றைக்கும் ஏமாற்றாத நடிகருக்கு வாழ்த்துக்கள்.

டிஸ்கி : இரண்டு நாள் முன்னால் எழுதிய பதிவு..  :)

Wednesday, June 22, 2011

அவன் இவன்- A Bala Remake

உலக தமிழர்களே..சினிமா ஞானம் அதிகம் இருக்குற உங்களுக்கு சவால் விடுற கேள்விகள் கீழ இருக்கு.
எங்கே பதில் சொல்லுங்க பாப்போம்..

பாலா படம்.ரெண்டு ஹீரோ சப்ஜெக்ட். ஒருத்தன் வாயாடி.
இன்னொருத்தன் பலசாலி. என்ன படம் ? 

பாலா படம்.ஹீரோ அந்த ஊர் பெரியவருக்கு விசுவாசமா இருப்பான். அவர கொன்ன வில்லன கடைசி சீன்ல ஹீரோ கொடூரமா கொல்லுவான். என்ன படம்?

பாலா படம். அய்யர் ஹீரோயின் பொண்ண பொறுக்கி ஹீரோ கிண்டல் பண்ணி கலாய்ப்பான். அப்புறம் அந்த பொண்ணு அவனையே  காதலிப்பா. என்ன படம்?

பாலா படம்.ஊர்க்கு வந்த சினிமா நடிகனோ,நடிகையோ ஹீரோவ புகழ்ந்துட்டு போவாங்க.என்ன படம்?

பாலா படம்.லூசு மாதிரி ஒரு ஹீரோயின் , லொட லொடன்னு பேசிகிட்டு இருப்பா.  என்ன படம்?

பாலா படம்.ஹீரோ கூட இருக்குற பொம்பள கஞ்சா இல்லனா பீடி அடிச்சிட்டோ , வித்துட்டோ, கர்ணகொடூரமா பேசிட்டு இருப்பா.என்ன படம்?

மேல கேட்ட கேள்விக்கு எல்லாம் நந்தா இல்லேன்னா பிதாமகன்-னு பதில் சொல்லியிருந்திங்கனா நீங்க இன்னும் 'அவன் இவன்' பாக்கலைன்னு அர்த்தம்.
படம் இன்னும் பாக்கலையேன்னு வருத்தப்பட வேணாம்.இதிலையும் அதே பழைய விஷயத்தைதான் காசு கொடுத்து மறுபடியும் பாக்க போறீங்க.




அவன் இவன்னு படத்துக்கு பேர் வெச்சுட்டு  அவன பத்தியும்  இவன பத்தியும்..அட எவன பத்தியும் சரியா சொல்லல பாலா.. பேசாம படத்துக்கு ' நான் எடுத்த படங்கள் - திரும்பி பார்க்கிறேன்'னு பேர் வெச்சிருக்கலாம்.

ஆனா நடிக்கிறவங்க எல்லாரும் புதுசுங்க. இந்த படத்துல சத்தியமா லைலா கெடயாது - ஜனனி அய்யர். ராஜ்கிரண் கெடயாது - ஜி.எம்.குமார். சங்கீதா கிடையாது - அம்பிகா.முக்கியமா விக்ரம் கெடையாது - விஷால். இது போதாதான்னு பாலா நெனச்சுடாரு போல.

மக்களை , அவங்க ஏமாற்றத்த சொல்லியும் குத்தமில்லை.
இது பிதாமகன் மாதிரி இருக்கும்னு நெனச்சு வந்தா மறுபடியும்  பிதாமகனையே போட்டு காட்டுனா கடுப்பாகுமா இல்லையா?

'அவன் இவன்' காமெடி படம்னு முன்னாடியே சொல்லியிருந்தா இவ்வளவு எதிர்பாத்து ஏமாந்திருக்க  மாட்டோம். சொல்லாம இருந்ததும் சரிதான். இது காமெடி படமும் இல்ல.
அப்போ ஆக்சன் படமா பாலா சார் ? அப்படியும் தெரியலயே. சரி முடிவா சொல்லுங்க - என்ன மாதிரி படம் இது ? ..ஐயோ பாவம் அவரே கன்ப்யூஸ் ஆயிட்டாரு.

பிதாமகன்ல விக்ரம் எண்ணெய் வைக்காத செந்தலையோட, காரைப்பல்லோட  சுத்தறதுல ஒரு அர்த்தம் இருக்கு. அவர் கேரக்டர் அப்படி.  அதுதான் கதையோட  அஸ்திவாரமேனு சத்தமா பதில் சொல்ல உரிமை இருக்குற
உங்களுக்கு... இதுல   விஷால் ஏன் சார் ஒண்ணரைக் கண்ணோட வராரு , அதுவும் பெண் தன்மை கலந்திருக்கிற மாதிரின்னு கேட்டா என்ன பதில் சொல்லுவீங்க ?



உங்க நாலு படமும் நாலு விதமான மக்களைப் பத்தி உருப்படியா காமிச்சுது. படிக்கிற காலத்துல அடாவடியும் காதலும் பண்றவன் கதை , தப்பான அப்பாவால கொலைகாரனா  வளர்ந்தவன் கதை , இலங்கை அகதிகளோட வாழ்க்கை, வெட்டியான் மனநிலை , சில்லறைத்  திருடன் பொழப்பு, சாமியாரா போனவன்  சமூகத்துக்கு திரும்பி வந்தா நடக்குற கதைன்னு ராஜ நடை போட்ட நீங்க  எவன் கதைய , யார் மனநிலைய , எந்த சமூக விஷயத்தை சொல்லும்னு எதிர்பார்த்து ஒரு வருஷமா இந்த படம் எடுத்தீங்க?

சரி எதையும் தெளிவா சொல்ல வேணாம் .. லைட்டாவாவது புரிய வெச்சிருக்க முயற்சி பண்ணியிருக்கலாம். என்னமோ போங்கடான்னு விட்டுட்ட மாதிரி இருக்கே  பாலா?

தாராளமா அடித்தட்டு மக்கள் கதைய எடுங்க , ஆனா அத மட்டுமே எடுத்துட்டு இருந்தீங்கனா ஓவர்டோஸ் ஆகி , லாலாலா விக்ரமனுக்கும்,  செண்டிமெண்ட் சேரனுக்கும் நடந்ததுதான் உங்களுக்கும் நடக்கும். அப்புறம் நீங்களா மாறணும்னு நெனைச்சு உண்மையா வேற மாதிரி படம் கொடுத்தாலும்  , ஏதோ செயற்கையா பண்ற மாதிரி இருக்கும். ஏற்கனவே மத்தவங்களுக்கு நடந்த கதைதான்.

உங்க குருநாதர் மட்டும் என்ன மூன்றாம் பிறை ,வீடு, மறுபடியும்-னு அழுகை படங்களாவேவா கொடுத்தாரு? ரெட்டைவால் குருவியும் , சதிலீலவதியும் இடையில கொடுத்து வெரைட்டி காமிச்சாரு. உங்களுக்கு தெரியாதா என்ன?

விஷாலுக்கு வாழ்த்துக்கள் சொல்லுங்க பாலா.  உசுர கொடுத்து நடிச்சிருக்காரு. ஆனா பாவம்
ஏன் ? எதுக்குன்னு கேள்வி கேட்காம நடிச்சிருக்காரு. அவருக்காவது  அவர் கேரக்டர் பத்தி
 தெளிவா சொன்னிங்களா பாலா? அவருக்காவது புரிஞ்சுதா?

சரி அவர விடுங்க..இந்த படம் யாருக்கு பிரயோஜனமோ இல்லையோ அவருக்கு இருக்கு.இத வெச்சு இன்னும் ஒரு வருஷம் ஓட்டிடுவாரு. 



பாலா..உங்க நாலு படங்களும் அருமையான படங்கள்தான்.ஆனா அதுவே நாலு பக்கமும் நின்னுகிட்டு உங்க கற்பனையை தடுக்குது. அதைத்தாண்டி வாங்க.
ஷங்கர்கிட்ட கூட கதை கேட்டபின்னாடிதான் நடிக்க வர சில நடிகர்கள் ,உங்க குரலுக்கு மட்டும்தான் போட்டத போட்டபடி வந்து நிப்பாங்க.  அதை காப்பாத்துங்க.

யாரும் உங்க மேல கோபப்படல பாலா.. அப்படியே கோபபட்டாலும் அதுல தப்பு இல்ல... காரணம் நல்ல படங்கள கொடுங்க சார்-னு நாங்க பேரரசுகிட்ட கேட்க முடியாது.கேட்கவும் கூடாது. உங்ககிட்டதான் அப்படி உரிமையா கேட்க முடியும். நீங்களும் கை விட்டுடீங்கனா ,அப்புறம் எங்க கதைய யார் படமா எடுப்பாங்க ?

இது வீழ்ச்சி இல்ல பாலா. வெறும் திருஷ்டிதான். திரும்பி பாக்காம வேகமா அடுத்த நல்ல கதைக்கு வந்துடுங்க..


அவன் இவன்  - பாக்க வேண்டிய படம்னும் இல்ல. பாக்க கூடாத படம்னும் இல்ல..ஆனா உங்ககிட்ட இருந்து வரக்கூடாத படம்.இது மாதிரி படம் கொடுக்க/கெடுக்க ஆயிரம் பேர் இருக்காங்க.

ஆனா எங்கள இழுக்கற  பாலா-ங்கற அந்த காந்தம்  நீங்க ஒருத்தருதான பாலா!!!!