Saturday, November 12, 2011

அண்ணா நாமம் வாழ்க..அண்ணா நூலகம்???


மிக அருகில் இது நடக்கலாம். தாராளமாக 'திமுக கால திட்டங்கள் ஒழிப்பு'  என்ற புது இலாக்காவை அதிகாரபூர்வமாக உருவாக்கி அதை அம்மா தன்  கட்டுபாட்டில் வைக்கக்கூடும்.  நல்லது.  திமுக காலத்தில் உருப்படியில்லாத எந்த திட்டத்தையும் ஒழிக்க எல்லார் ஆதரவும் அம்மாவுக்கு உண்டு. ஆனால் அண்ணா நூலக விஷயம் கண்டிப்பாக அதில் இல்லை.  


புதிய சட்டபேரவையை உப்பு பெறாத காரணம் சொல்லி அதை மருத்துவமனை ஆக்கியபோது , அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் அது யாரையும் பாதிக்கபோவதில்லை.  யார் பதவியில் இருந்தாலும் அவர் ஒழுங்காக ஆட்சி செய்தால் அதை கொடநாட்டில் செய்தால் என்ன ? கோபாலபுரத்தில் செய்தால் என்ன?  நல்லாட்சிதான் முக்கியம். எனவே அது விவாததிற்கு தேவை இல்லாதது.
 
ஊழல் செய்த முன்னாள் மந்திரிகளை கைது செய்வதும் , மேலவை வேண்டாம் என்று நிராகரித்ததும் உத்தமமே.
ஆனால் அண்ணா நூலகம் அப்படி இல்லை. அது அங்குதான் இருக்க வேண்டும்.காரணம் அதன் பயன்பாடும் பெருமையும்.

சுமார் இருநூறு  கோடியில் செலவு செய்து உருவாக்கிய நூலகம். மொத்தம் ஒன்பது தளங்களில் நூலகத்தின் ஒவ்வொரு பாகத்திலும் கொட்டிகிடக்கும் புத்தகங்கள்.ஏறக்குறைய பனிரெண்டு லட்சம் புத்தகங்கள் அடங்கிய நூலகம். ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும் எல்லா வகையான நூல்களும் வகைபடுத்தி அடுக்கிவைக்கப்பட்டு ,அவைகளை படிக்க தனியாக படிப்பறைகளும் கொண்ட நூலகம். பல்வேறு புத்தகங்களுடன் , ஆடியோ - வீடியோ மூலம் தகவல்களை அறிந்து கொள்ள வசதியும் ,புகைப்பட நூல்களும் தனியாக உள்ளன. கூடவே உணவுகூடமும். ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகமாக கருதப்படுவது.
 
இதைதான் குறிவைத்திருக்கிறது தற்போதைய அரசு. சொல்லும் காரணம் - கூட்டம் வரவில்லை என்பது. உண்மையான காரணம் உலகறிந்தது.
 
புதிய சட்டசபையை மருத்தவமனையாக்குவோம் என்று அறிவித்தபோது மக்கள் சந்தோசப்பட காரணம் 'இவ்வளவு செலவு செய்து கட்டிய கட்டிடம் அப்படியாவது பயன்படட்டுமே ' என்றுதானே தவிர     'இதை போல எந்த கட்டிடத்தையும் மருத்துவமனை ஆக்கினால் நல்லது '  என்றல்ல.  
 
 
இப்போது நூலகமும் மருத்துவமனை ஆக்கப்படும் என்பது
அறிவிப்பு.மருத்துவனைகள் மிக அவசியம்தான். அதை புதிதாக உருவாக்கி கொடுங்கள். வணங்குகிறோம்.வாழ்த்துகிறோம்.ஆனால் நூலகத்தை மாற்றி அல்ல.
 
பெரிய கோவிலை சுற்றிபார்க்க வருபவர்களுக்கு கால் வலிக்கும்தான். எங்கேயாவது அமர ஏதாவது இடம் கிடைக்குமா என மனம் நினைக்கும்தான்.அதற்காக அழகான சிற்பத்தை உடைத்து , அதை கீழே போட்டு , இதில் அமருங்கள் என்று பெருமிதமாக சொல்லுவதை எந்த கணக்கில் சேர்ப்பது ? கண்டிப்பாக இதற்கு நன்றியோ பாரட்டுதலோ கிடைக்காது.
 
தவிர நூலகம் கட்டும்போதே ,இதன் பயன் புத்தகங்களை  அடுக்க, வாசிக்க என திட்டமிட்டு ஒரு அமைப்பாய் இருக்கும்.அதை மருத்துவமனை ஆக்கும்போது , முழுதும் தலைகீழாக  மாற்ற வேண்டும். அதன் செலவு கண்டிப்பாக புது மருத்துவமனை கட்டுவதை  விட அதிகம் ஆகும். இது வேண்டாமே.
இருக்கும் அறிவை அழித்து உடல்நலத்தை வாங்கும் முட்டாள்தனம் போல ஆகிவிடும் இதன் பயன்.
 
இப்படி பெரிய பணத்தை போட்டு அதிநவீன மருத்துவமனை ஒன்றை பெருநகரத்தின் மத்தியில் கட்டுவதை விட , குறைந்தது இருபது மைல் தொலைவில் இருக்கும் மருத்துவமனையை நம்பியிருக்கும் கிராமங்களுக்கு சிறு சிறு மருத்துவமனைகளாக அவர்கள் கிராமத்திலேயே கட்டி உதவலாம். காலகாலம் அவர்கள் ஓட்டு உங்களுக்குதான்.சத்தியம். 
 

நூலகம் சரியாக பயன்படுத்தபடுவதில்லை என்ற அக்கறைக்கு நன்றி. அதை பிரபலமாக்க அரசு பலவழிகளில் முயற்சிக்கலாம். சென்னை பள்ளிகள் , கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நூல்களின் பலன்களை எடுத்துரைத்து , அவர்களை வர செய்யலாம்.  கண்டிப்பாக புரிந்து வருவார்கள். குமுதம் , கல்கண்டு படித்து புத்தி தடுமாறிய 80 ,90 காலகட்ட மாணவர்கள் அல்ல இப்போது. 'புதிய தலைமுறை'யும் நாணயம் விகடனும் படித்து முன்னேற  ஆர்வமுள்ளவர்கள் காலம் இது.
 
பழி வாங்குவதுதான் முக்கியம் என்று நினைத்திருந்தால் 2006 -இல் கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்றதும் ஆயிரக்கணக்கான டாஸ்மாக்  ஊழியர்கள் வேலை இழந்திருப்பார்கள். அதற்கு நன்றிக்கடனாக நூலகமும் , கண்ணகி சிலையும் , கன்னியாகுமரி   வள்ளுவர் சிலையும் , சிவாஜி சிலையும் இனி பிழைத்து போகட்டுமே . நூலகம் தப்பினால் அந்த பெருந்தன்மைக்கு 2016ல் நன்றிகள் ஓட்டுகளாக அதிமுகவிற்கு கிடைக்கும். 
 
எம்ஜீஆர் ஆத்மா உங்களை கண்டிப்பாக வாழ்த்தும். 
--------------------------------

Tuesday, November 8, 2011

பாப்கார்ன் பாக்கெட் - 20111108ஐம்பத்தி எழு வயதை தொட்டிருக்கிறார் கலைஞானி. சச்சினின் கிரிக்கெட் சாதனைகளை போல , சினிமாவில் கமல் சரியாக செய்திருக்கிறார்.வயது ஏற ஏற புது முயற்சிகளை இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்கும் சாதனையாளர். மக்கள் சலிக்கும் வரை மரத்தை சுற்றி சுற்றி பாடாமல் , மாற்றத்தை கொண்டு வந்து மக்களை மகிழ்விக்கும்  கலைஞன்.


சிவாஜிக்கு வயதானதும் தமிழுலகம் அவரை சரியாக பயன்படுத்தவில்லை. தாவணி கனவுகளும் ,முதல் மரியாதையும் ,தேவர் மகனையும் தவிர  சொல்லிக்கொள்ளும்படியான படங்கள் இல்லை. காரணம் திரையுலகம் அவர் மேல் வைத்திருந்த  மரியாதையும் அதனால் ஏற்பட்ட தூரமும்தான்.

கமல் அந்த விஷயத்தில் மிக கவனம் கொள்ள வேண்டும். இளைய இயக்குனர்களோடு படம் செய்தால் அமிதாப்பின் செகண்ட்  இன்னிங்க்ஸ் போல நல்ல வெற்றி கிடைக்கும்.  நல்ல வேளை இன்னும் கமலுக்கு முதல் இன்னிங்ஸே முடியவில்லை. அதையே இன்னும் பத்து வருடமாவது  தொடர்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. கடவுள் இயற்கை அதற்கு ஆதரவு  கொடுக்கட்டும்.

கமலின் மாஸ்டர்பீஸ்:


பிறந்த நாள் வாழ்த்துக்கள் உலகநாயகனே..
--------------------------------------

ரசித்தது:தங்கச்சி !!! டில்லில இருக்குற எல்லா கடையிலையும் கேட்டுட்டு வந்துட்டோம்.... வஞ்சரமீன் இருக்குன்றான், வாலமீன் இருக்குன்றான், நெய் மீன் இருக்குன்றான், நெத்திலி மீன் இருக்குன்றான், கென்டமீன் இருக்குன்றான், கெலுத்தி மீன் இருக்குன்றான் இவ்வளவு ஏன்ணே சுறா மீன் முதற்கொண்டு இருக்குன்றான்.... ஆனா நீ கேட்ட ஜாமீன் மட்டும் இல்லையாம்...
கடல்லயே இல்லையாம்... :-)
------------------------------------

கண்டிப்பாக தெரிந்திருக்க  வேண்டிய செய்தி

ஆதார் அடையாள அட்டை:

இந்திய குடிமக்களுக்காக இலவசமாக வழங்கப்படும் 12 டிஜிட் எண் கொண்ட ஆதார் அடையாள அட்டையை பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம். பாஸ்போர்ட் இருக்கிறதோ இல்லையோ இந்த கார்டு ஒவ்வொரு குடிமகனுக்கும் அவசியம்.

தபால் நிலையத்தில் உங்கள் அப்ளிகேஷனைப் பூர்த்தி செய்து, உங்கள் பத்து விரல் கை ரேகை பதிந்து, புகைப்படம் எடுத்த பிறகு உங்களுக்கு தற்காலிக ஐடி கொடுப்பார்கள். 30 - 60 நாட்களுக்குள் வீட்டுக்கு உங்களுக்கு ஒரிஜினல் கார்டு கிடைக்கும். உங்களுடைய கார்டு ஸ்டெட்டஸை ஆன்லைன் மூலம் உங்களிடம் இருக்கும் தற்காலிக ஐடி மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இதற்கு கட்டணம் ஒன்றும் கிடையாது. இந்த கார்டு மூலம் உங்கள் வங்கி கணக்கும் இணைக்கப்படும். இது தான் நமது நாட்டின் பாஸ்போர்ட்டுக்கு அடுத்த பெரிய ஐடி. இதை வைத்து நேபாலுக்கு கூட பாஸ்போர்ட் இல்லாமல் செல்லலாம்.

நவம்பர் 1-ம் தேதி முதல் மயிலாப்பூர், தியாகராய நகர் மற்றும் பூங்கா நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தலைமைத் தபால் நிலையங்கள் மூலம் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்கி உள்ளது. நவம்பர் 21-ம் தேதி முதல் 31 மாவட்டங்களில் உள்ள தலைமைத் தபால் நிலையங்களில் அடையாள அட்டை பதிவுப் பணி தொடங்கவுள்ளது. கார்டு பெற அப்ளிகேஷனை இங்கு டவுன்லோடு செய்யலாம்.
அங்கே சென்று , மாநிலம் - தமிழ்நாடு-ஐ கிளிக்கவும்.
-------------------------------

'மாற்றம் என்பது மானுட தத்துவம்' என்ற கண்ணதாசன் வார்த்தை இந்த விஷயத்தில் பொய்த்து போகிறது. சில வழக்கங்கள் எப்போதும்  மாறுவதில்லை.

'திராவிட' கழகங்கள் மேடையில் கூவும்  'சுயமரியாதைதான் எங்கள் முதல் குறிக்கோள் '  என்பது சும்மா 'மைக் ஒன் டெஸ்டிங் ஓவர் ஓவர்  ' போலத்தானா ?------------------------------

'வாகை சுட வா' இரண்டாவது தடவையாக பார்த்தேன். காட்டுக்குள் ஒரு செங்கல் சூளையும், அதை சுற்றி ஒரு முப்பது குடிசையும் மட்டும் செட் போட்டு , அதில் மட்டுமே இரண்டு மணி நேரத்தை ஓட்டியிருந்தாலும் , இயக்குனர் வெற்றி பெற்று விட்டார் என்ற அறிவிப்பது  , பார்ப்பவர் சலிப்படையாமல் ஐந்து நிமிடத்துக்கு ஒரு முறை சிரிப்பதிலும் , கை தட்டுவதிலும் தெரிந்து விடுகிறது.


களவாணி கிளாசிக்கல் காமெடியாக கொடுத்து கல்லா கட்டியிருந்தாலும், போன ரூட்டிலேயே போகாமல் , நல்ல கருத்தை அறிவிக்கும் படமாக  இரண்டாவது படத்தை கொடுத்திருக்கிறார் சற்குணம். 

விமல் நடிப்பு படத்துக்கு படம் மெருகேறுகிறது.இனியா இனிய நடிப்பு.பாடல்கள் ஏற்கனவே சொன்னது போல் எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரி - அட்டகாசம் கிப்ரான். 

சூழலின் வெப்பத்தை ,மக்களின் கடின வாழ்க்கையை காண்பிக்க படம்  முழுக்க பயன்படுத்திய  கேமரா டோன் மிக அருமை.பொருத்தம்.
இது போன்ற முயற்சிகள் கண்டிப்பாக வரவேற்கப்பட வேண்டும்.


ஹ்ம்ம். புது இயக்குனர்கள் பட்டையை  கிளப்புகிறார்கள்.
அனுபவ இயக்குனர்கள்தான் குட்டையை குழப்புகிறார்கள்.

----------------------------------------------------

உன்னிமேனனின் முதல் பாடல்.  பல வருடம் , இதை  யேசுதாஸ்தான் பாடியிருக்கிறார் என்று நம்பியிருக்கிறேன்.
உன்னிமேனன் குரலும் , கமலின் போலீஸ் கெட்டப்பில் மிதமான புன்னகை கலந்த காதலின் உணர்ச்சியும்  , ரேவதியின் அழகும்...
அற்புதம்.என் ஹிட் லிஸ்டில் எப்போதும் இருக்கும் பாடல். ---------------------------------------

Friday, November 4, 2011

ஏழாம் அறிவு

'தமிழர் பண்பாடு சிறந்தது. அதன் சரித்திரம் மிக பன்மையானது. அதை  மறந்துகொண்டிருக்கும் தலைமுறை அதை மீண்டும் போற்ற வேண்டும். அதன் பெருமையை காக்க வேண்டும்.' - இந்த மிக முக்கியமான கருத்தை உணர்த்தும் படம் ஏழாம் அறிவு.

ஆனால் நாம் மறந்த இந்த கசப்பான  உண்மையை  உணர்த்த இனிப்பு தடவி தரும் விஷயத்தில் கோட்டை விட்டதால் படம் கசக்கிறது. ஆனால் ஆச்சர்யம் முக்கிய கதையான போதிதர்மன் கதை காட்சிகள்  மட்டும் ரசிக்கத்தக்க வண்ணம் இருக்கிறது.

சக்கரைப் பொங்கல் சுவையாய் சூடாக இருந்தாலும்  , நைந்த இலையில் வாங்கியதால்  ரசித்து சாப்பிட முடியாமல் அவசரகதியில் விழுங்க வேண்டிய நிர்பந்தம் போல இருக்கிறது படம்.

படங்கள்  பெரும்பாலும் இருவகைகளில் அடங்கி விடும். ஆவணம் அல்லது கருத்தை மட்டும் க்ளாசிக்கலாக தரும் படம்  , கமர்சியல் படம் .  இரண்டும் தனித்தனியே இருக்கும் வரை பிரச்சனை இல்லை. ஆனால் இரண்டையும் சேர்த்து தரும்போது இயக்குனர் அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காஞ்சிவரம்,பெரியார்,கல்லூரி போன்ற படங்கள் கிட்டத்தட்ட முதல் வகை. விஜய் , எஸ்.ஜே.சூர்யா ,சிம்பு,தரணி,பேரரசு  படங்கள் இரண்டாம் வகை.

இந்த இரண்டையும் கலந்து தரும்போது மிக நுட்பமாக கையாள வேண்டிய படமாக இருக்கும். ஜென்டில்மேன் ,இந்தியன்,அந்நியன் போன்ற ஷங்கர் படங்களும், தற்போது வந்த வானம், எங்கேயும் எப்போதும் ( கவனிக்க வேண்டிய irony -இது முருகதாஸ் தயாரித்த படம்) போன்ற படங்கள் கலவை பட்டியலில் சேரும் .

ஏழாம் அறிவும் இந்த பட்டியலில் சேர்ந்திருக்க வேண்டிய படம்.  துரதிர்ஷ்டவசமாக திரிசங்கு மாதிரி இங்கேயும் அல்லாமல் அங்கேயும் இல்லாமல் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஈழம் முதல் தமிழ் பற்று  , தமிழர் பெருமை என மக்களை உணர்ச்சிவசப்படுத்தும்  பல வசனங்கள் படத்தில் உள்ளன. ஆனால் வசனம் மட்டுமே அந்த உணர்ச்சியை படம் பார்ப்பவர்களுக்கு தராது. அதை காட்சியில் ஊட்ட வேண்டும். அதில் சறுக்கியிருக்கிறார் இயக்குனர்.

கிருமியை பரப்புவது என்ற ஆதி கால ஜேம்ஸ் பாண்ட் பட வில்லன் உத்திதான்  Operation Red என்று தெரிந்ததும் தலை வலிக்கிறது. படத்தை பார்ப்பவர்களும் அதே ட்ரீட்மென்ட்டில் சிக்கியது போல ஒரு வலி.

முதல் பதினைந்து நிமிடம் முருகதாஸ் இயக்கியிருக்கிறார். பிறகு அவரின் ஏதோ ஒன்றிரண்டு கத்துக்குட்டி உதவி இயக்குனர்கள் படத்தை எடுத்து  முடித்துள்ளனர் - இறுதி காட்சி உட்பட.
தமிழின் மேல் நமக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் ஒரு இம்மியளவும் குறையவில்லை. இந்த படத்தை குறை சொல்லுபவர்களை , தமிழை மதிக்க தவறியவர்கள் என்று  பிறர் கருதும் வகையில் படத்தில் அதன் கதையோடு தமிழை
முடிச்சு  போட்டு
விளையாடியிருக்கிறார்  முருகதாஸ். படத்தின் ஒரே பலம் இதுதான்.


'படம் நல்லா இல்லை' என்று சொன்னாலே ஏதோ தமிழ் மொழிக்கு நிரந்தர  விரோதி போல மற்றவர்கள் பார்ப்பது குழப்பமடைய வைக்கிறது. முன் எச்சரிக்கையாக ' இந்த படம் தெலுங்கில் பார்தேன். நல்லாவே இல்ல 'என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

பதிவுக்கு சம்பந்தமான கேள்வி: 

 'போதி தர்மர் தமிழர்தானே? காஞ்சிபுரத்தில் தானே பிறந்தார்.?அப்புறம் ஏன் தெலுங்கு படத்துல அவர் குண்டூர்ல பிறந்ததாகவும் ..ஹிந்தி படத்துல தாரவில பிறந்ததாகவும் சொல்கிறார்கள்.இரண்டு மொழிகளிலும் அவர் தமிழர்ன்னு பெருமையா சொல்லி இருக்கலாமே

தமிழர்களை பெருமைப்படுத்துற படம்னு சொல்லிட்டு தமிழர்களை ஏன் இப்படி அசிங்கப்படுத்தனும்???'
- இயக்குனர் மு.களஞ்சியம்


முதல் பார்வையில் காதல் என்றதும் கிளை கதை 'நான் ஒன்றும் வித்தியாசமான கதை அல்ல ' என்பதை அறிவித்து விடுகிறது.

ஹீரோவுக்கு ஒரு நண்பன், எல்லாரும் படியில்  இறங்கியதும் லிப்ஃட்டில் வில்லன் வருவது போன்ற வழக்கமான எல்லாரும் யுகிக்ககூடிய காட்சிகள் சலிப்படைய வைக்கின்றன. 
தன் மேல் கொண்டிருந்தது காதல் அல்ல நடிப்பு என்று தெரிந்ததும் சூர்யா பாடும் பாடல், ஹீரோயின் அப்பா நடித்த அபூர்வ  சகோதரர்கள் படப்பாடலை நினைவு படுத்துகிறது.

சண்டை காட்சிகளிலும்  , ரோட்டில் நடக்கும் கார்களை பயன்படுத்தி  சூர்யாவை வில்லன்  கொல்ல முயலும் காட்சியில்  மூன்றாம் தர கிராபிக்ஸ் சிரிக்க வைக்கிறது.

கடைசியாக எல்லாரும் எதிர்பார்த்த சண்டைகாட்சியும் , பீட்டர் ஹெய்ன் அவசரகதியில் முடித்த , நிறைவைத் தராத ஒன்றாகவே இருக்கிறது. அவ்வளவு அடி கொடுத்த வில்லனை எப்படியெல்லாம் புரட்டி எடுக்க வாய்ப்புள்ள சண்டைக் காட்சி அது.. ஹுஹும்ம்.. failed the expectation..


சுருதி ஹாசன் தமிழில் அறிமுகமான படம் என்று பின்னாளில் ஞாபகம் வைக்க பயன்படும் படமாக மட்டும் இது இருக்கும்.இவர் நடிப்பு பாராட்டகூடியது; தமிழ் உச்சரிப்பு ஏன்
மூச்சு திணறும்படி , அழுத்தம் கொடுத்து ,இவ்வளவு சிரமப்பட்டு வருகிறது என்று புரியவில்லை. வேறு குறை இல்லை..முன்னேற வாய்ப்பிருக்கிறது .

போதி தர்மர் சூர்யா மட்டுமே வித்தியாசமாய் தெரிகிறார். சர்க்கஸ் சூர்யா எல்லா படத்திலும் பார்த்த , பழகிய பாவனையுடைய  ஒருவராகவே இருக்கிறார்.கெட்டப் மாற்றத்தில் இருக்கும் கவனம் , நடிக்கும் உடல் அசைவு,முக பாவனை ,மற்ற  மேனரிசத்திலும் இருக்க வேண்டும்.
இவரைப் பொறுத்த வரையில் , இதுவும் இன்னொரு படமே..நல்ல நடிப்பு என்று பெருமைப்படவும் முடியவில்லை.. மோசமான நடிப்பு என்று புறந்தள்ளவும் தேவையில்லை....

ஹாரிஸ் ஜெயராஜ் இன்னொரு திருஷ்டி. தான் கொடுத்த  பழைய வெற்றி பாடல்களின் தாக்கத்திலிருந்து இவர் மீளாத வரை ,  இவரை நம்பி இருக்கும் இயக்குனர்கள் பரிதாபப் படவேண்டியவர்கள்  .


முருகதாஸ்க்கு , நல்ல ஒரு கருத்தை சொல்ல முனைந்ததமைக்கு  பாராட்டுகள். அதை சரியாக சொல்லாததற்கு
பலமான ஒரு கண்டனம்.
இரண்டையும் சொல்ல ரசிகர்களுக்கு உரிமை இருக்கிறது.

கிளைகதையில் மெனக்கெட்டு , முக்கிய கதையில் இணைக்கும் வித்தையை இன்னும் கற்க வேண்டும். உங்கள் பலம் புதுகதையை உருவாக்குவதில் அல்ல.. அது எங்கிருந்தாலும் எடுத்து விடுவீர்கள். அந்த கதையை செதுக்குவதில் மட்டுமே உள்ளது.

கஜினி வெற்றிக்கு காரணம் Memento அல்ல..அதில் நீங்கள் சேர்த்த சரக்கும் (improvising) , உங்கள் புதுவித ட்ரீட்மென்ட்டும் தான் காரணம்.இதில் அது துளியும் இல்லை.
விஜய் அவார்ட் நடுவர் குழுவில் அடுத்த வருடம்   இடம்பெற நீங்கள் இன்னொரு முறை உங்களை நிரூபிக்க வேண்டும்.
கண்டிப்பாக இந்த படம் அந்த பெருமையைக்  கொடுக்காது.

மொத்தத்தில் நல்ல கதைக்கருவை , திறமையுள்ள ஒரு குழு , தங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தாமல் ,அதை குறைபடுத்தி அரைகுறையாய் முடித்திருக்கும் படம் ஏழாம் அறிவு.

வெரி சாரி முருகதாஸ்.  அடுத்த முயற்சியில் உங்களையும்   ரசிகர்களையும் ஏமாற்றாமல் இருப்பீர்கள்  என்று நம்புகிறோம்.

Wednesday, October 26, 2011

தீபாவளி

டிஸ்கி - கொஞ்சம் பெரிய பதிவு.  

என் பள்ளி நாட்கள் வரை தீபாவளி என்பது வருடத்துக்கு ஒரு முறை
மலரும்  ஒரு தெய்வீக காதல் போல். ஒரு மாதம் முன்பிலிருந்தே ஒன்றிலிருந்து முப்பது வரை ஒரு பேப்பரில் எழுதி ஒவ்வொரு நாளாக அடித்துவிட்டு 'இன்னும் 24  நாள் இருக்கு ' 'இன்னும் 17  நாள் இருக்கு ' என்று காலையில்   தொடங்கும் என் நாட்கள் , பண்டிகைக்கு பத்து நாள் முதலிருந்து அடுத்த கட்ட விறுவிறுப்புக்கு போகும்.காரணம் - பட்டாசு.
 
 
எதிர் வீட்டு பிரபு அண்ணன்,பக்கத்துக்கு வீட்டு ஆனந்த் , அதற்கடுத்த வீட்டு ரவி,ராஜா  சகோதரர்கள்  என்ற பட்டாளம் நட்பை மறந்து ஒரு போட்டி மனப்பான்மையோடு  முறைத்துக் கொண்டு அலையும் நாட்கள் அவை.காரணம் - பட்டாசு.

சிந்தாமணியில் போய் முதல் கட்ட பரிவர்த்தனையை ஆரம்பித்து வைத்தால்  ,தீபாவளிக்கு மூன்று நாள் முன்னரே அனைத்தையும் வெடித்து  தீர்த்து விடும்  அபாயம் உண்டு என்பதால் அப்பா  வேறு ஒரு யோசனையை , நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது செய்ய ஆரம்பித்தார்.

 கூட வேலை பார்க்கும் அனைவரிடமும் என்ன விதமான பட்டாசுகள் தேவை என கேட்டு , சிவகாசிக்கு ஆள் அனுப்பி மொத்தமாக வரவழைத்து வீட்டில் வைப்பார்.சரியாக பண்டிகைக்கு ஐந்து நாள் முன்னாடிதான் அந்த பெரிய 'மங்காத்தா' பணப்பெட்டி அளவுக்கு பெரியதாய் இருக்கும் பட்டாசு பெட்டியை பிரிக்க ஆரம்பிப்பார். கூட உதவிக்கு மூன்று பேர். இம்சைக்கு  நான்.

எல்லாரும் கொடுத்திருக்கும் லிஸ்டை எடுத்து ஒவ்வொன்றாக படித்து , அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பெட்டியில் பட்டாசுகளை நிரப்ப வேண்டும்.
உதவிக்கு என வந்தாலும் எல்லாரும் அமர்ந்துகொண்டு 'அதுல ஒன்னு எடுத்து அவங்க பாக்ஸ்ல போடு ; இந்த பாக்ஸ்ல ரெண்டு கலர் மத்தாப்பு' என என்னை வேலை வாங்கினாலும் எனக்கு அது அலுப்பாகவே  இருக்காது.

எல்லாருக்கும் ஒரு பெட்டி என்றால் எங்கள் வீட்டுக்கு மட்டும் இரண்டு பெட்டி. எனக்கொன்று ; என் அக்காவுக்கு ஒன்று.காரணம் எனது முந்தைய தீபாவளி காலத்தில் நடந்த ஊழல்கள்தான். மொத்தமாக வாங்கி இதில் பாதி உனக்கு ;பாதி எனக்கு என்று மிக நியாயமாக தொகுதி பங்கீடு செய்தாலும் , கூட்டணி தர்மத்தை 
துச்சமென  மதித்து , அக்கா வீட்டில் இல்லாத
போது கொஞ்சத்தை எடுத்து ,ஓரிரு நாளில்  ஏறக்குறைய முழுதும்
என் பொக்கிஷ குவியலில் இருக்கும்.
ஆகவே என் வீட்டுக்கு இரண்டு பெட்டி பட்டாசுகள் என்பது எழுதபடாத விதியாய் இருந்தது.

ஆனாலும் தீபாவளி அன்று மாஸ்டர் பிளான்  செய்து , அக்கா நான்கைந்து வெடி வெடித்ததும் , பக்கத்தில் அலறும்படி ஒரு வெடியை தூக்கிப் போட்டால் ,பயந்து போய் ' எல்லாத்தையும் நீயே வெடிச்சு தொலைடா'  என  உள்ளே ஓடி விடுவாள்.திரியைக் கிள்ளி தரும் பொறுப்பு அப்பாவுக்கு.எல்லா வருடமும் என் லிஸ்ட்தான் பெரியதாய் இருக்கும் என்றாலும் , எந்த பெட்டியைப் பார்த்தாலும் பொறாமையாகவும் , இந்த பெட்டி  என்னுடையதை விட பெரிதாக இருக்கிறதே என்ற அவநம்பிக்கையும் இருக்கும். ஆனால் அப்பா கூட வேலை பார்க்கும் எல்லாருக்கும் வீட்டில் பெண் குழந்தைகள்தான் என்பதனால் வெறும் சங்கு சக்கரம்,பூவாணம் , மத்தாப்பு போன்ற காந்தியவாதி பட்டாசுகளாக இருக்கும். அதையெல்லாம் பார்த்து ஏதோ சோலே பட அம்ஜத்கான் போல ஒரு ஏளன சிரிப்பு என்னிடம் பிறக்கும்.

எனக்கெல்லாம் பச்சை
கயிறு  இறுக்கி கட்டிய நைட்ரஜன் பாம் , செவென் ஷாட் எனப்படும் எங்கெங்கோ அலைபாய்ந்து வெடிக்கும் இன்னொரு தீவிரவாத வெடி , சரவெடி , லட்சுமி வெடி , நேதாஜி வெடி , இது எல்லாம் போக , என் சொந்த ஊரிலிருந்து சித்தப்பா கொண்டு வந்த ஓலை வெடி , நானும் வீரன்தான் என காண்பிக்க கையில் பற்ற வைத்து தூக்கி போடும் ஊசி வெடி என ஒரு படுபயங்கர வெடிபொருட்கள் லிஸ்டில் இருக்கும்.

பிள்ளையார் சுழி போடுவது ரோல் கேப் மூலம்தான்.அதிலும் ரோல் கேப் துப்பாக்கி எதுவும் ஒரு நாளைக்கு மேல் வராது. பத்து முறை லோட் செய்தால் பதினோராவது தடவை பயன்படாது. அதிகபட்சமாக ஒரு முறை  நான்கு துப்பாக்கி வாங்கியிருக்கிறேன். பிறகு எனக்கே மனம் பொறுக்காமல் மீதி கேப்பை   சுவற்றில் தேய்த்தும் , வெடிகளுக்கு சுற்றும் டெட்டனேட்டராக பயன்படுத்துவேன்.


வெங்காய வெடி என்கிற மாப்பிளை  வெடி அப்போதே தடை  செய்யபட்டிருந்தாலும் , எங்களுக்கு எப்படியாவது கிடைக்கும்படி தேவராஜன் கடை அண்ணாச்சி ஏற்பாடு பண்ணியிருப்பார். இப்போதெல்லாம்  கிடைக்கிறதா  என்று தெரியவில்லை.  சரியான ரவுடி வெடி.

இது மட்டும் வைத்து சமர்த்தாக வெடிக்கும் ரகம் அல்ல எங்கள் கோஷ்டி. பாம் என்றால் அது எவ்வளவு சத்தமாக, விதவிதமாக  வெடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய தயாராய் இருக்கும்  தன்மானபடை.  வெயிட்டான பொருள் எது சிக்கினாலும் , அதற்கு அடியில் வெடி வைப்பது , பத்தியை அழகாக வெட்டி , வெடியுடன் சேர்த்து பற்ற வைத்து ஏறக்குறைய நாட்டு வெடிகுண்டை டைம்பாம் போல ஆக்கி வெடிக்க வைப்பது என பலவிதங்கள்.

இதில் நாங்கள் எல்லை மீறியது எதிலென்றால் , தீபாவளி சமயத்தில் மழை பெய்து தேங்கியிருக்கும் தண்ணீரில் , வெகு பக்குவமாக எதாவது ஒரு காய்ந்த இலையை மிதக்க வைத்து ,அதில் பாம் வைப்பது.
பற்ற வைக்கும்போது கொஞ்சம் அதிர்ந்தாலும் வெடி தண்ணீரில் மூழ்கி செயலிழந்து விடும் அபாயம் இருப்பதால் , எந்த யோகாவும் , ப்ராணயாமாவும் கற்றுகொள்ளாமலேயே மூச்சை முறைபடுத்தி ஒரு  பட்டாம்பூச்சி  அமர்வது போல்  பற்ற வைத்து ஓடி வருவோம்.

இந்த சின்ன வயதில் , இந்த செயற்கரிய செயலை பாராட்டாமல், பெருசுகள் எதோ அந்த பக்கம் சரியாக வெடி வெடிக்கும்போது வந்து சட்டையை சேறாக்கி கொண்டு , எதோ நாங்கள்தான் தப்பு செய்த மாதிரி 
' உங்க பையன் என் தீபாளி சட்டைய என்ன பண்ணிருக்கானு பாருங்க ' என வீட்டில் பற்ற வைத்து விடுவார்கள். பிறகு பண்டிகை நாளில் என் முதுகில் வெடி வெடிக்கும்.

ஒரு வழியாக எல்லா பட்டாசையும் வெடித்து , பிறகு இரவானதும் , ராக்கெட் , பூவாணம் , சங்கு சக்கரம் என ஒரு ரவுண்ட் வந்து அதையும் முடித்து , பாம்பு பட்டாசு புகையை முடித்து கொண்டு , எல்லா பசங்களும் ஆயுதம் தீந்த போர்வீரர்கள் மாதிரி நிராயுதபாணி ஆக நிற்போம். (நிற்க;கார்த்திகை  பட்டாசு கோட்டா தனி.)

பிறகு வெடித்த எல்லா பட்டாசையும் மொத்தமாக ஓரிடத்தில் கொட்டி , நெருப்பு மூட்டி அதில் வரும் வண்ண வண்ண புகைகளை ரசித்த பிறகே எங்கள் போர் குணம் தணியும். இருந்தாலும் எங்கள் தினவெடுத்த தோள்களுக்கு இன்னும் வெடி தேவை என்று பரிதாபமாக யாரை பார்த்தாலும் , எல்லாரிடமும் சொல்லி வைத்ததுபோல் ஒரு ஏளன புன்னகை தோன்றும் ' கொஞ்சமாடா ஆடுனீங்க..இனி என்னடா பண்ணுவீங்க ? ' என்பதுபோல்.

அடுத்த நாள் எந்த வீட்டுக்கு முன்னால் பட்டாசு குப்பை அதிகமாக இருக்கிறதோ அங்கு எதாவது ஒரு வாண்டு இருக்கிறது என்று அர்த்தம்.

கால மாற்றத்தில் எது மாறினாலும் , தீபாவளி நாளின் பரபரப்பு மட்டும் மாறாமல் இருக்கிறது. இப்போதும் ஊருக்கு சென்று எங்கள் வீதியை பார்த்தால் புதிய கோஷ்டி ஒன்று நாங்கள் செய்த அதையே திரும்ப அனுபவித்து செய்து கொண்டிருப்பது தெரிகிறது.ஆனால் எனக்கு இப்போதெல்லாம் வெடி வெடிக்க பயம் ஏற்பட்டுள்ளதை ஒத்துக்கொள்ள வேண்டும். அக்கா பையன் ரோல்கேப் வெடித்தாலே கண்ணை முடிகொள்ளும் பய உணர்ச்சி வந்து விட்டது. என்ன காரணமோ?

ஆனாலும் குடும்பத்துடன் ஒன்றாய் இருப்பது , மகிழ்ச்சியாய் கொண்டாடுவது  என தீபாவளியின் தனிச்சிறப்பு மாறவில்லை.டிவி  சேனல்களின் பிடிகளில் சிக்காமல் அந்த நல்ல நாளை காப்பாற்றுவது நம் பொறுப்பு.
அன்றைக்கு ரிலீஸ் ஆகும் படத்தை கூட வேறொரு நாள் பார்த்துக்கொள்ளலாம். குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடும் சந்தோசம் வேறு நாள் கிடைக்காது.

வேலையில் மூழ்கி, பொறுப்புகளில் சிக்கிக்கொண்டு ,எப்போதும் முகத்தில் ஒரு கண்டிப்பை போலியாய் காட்டிகொண்டு , கண்டம் தாண்டி வாழ்ந்து வரும் இந்த சமயத்தில் , எல்லாரும் ஊரில் தீபாவளி கொண்டாடி அதை படம் எடுத்து அனுப்புகிறோம்  என்று சொன்னாலும் ,அது முழு சந்தோசத்தை  கொடுக்காது என்பது நிதர்சனம். 

எப்போதும் தீபாவளி பின்னிரவில் ,அப்பாவை கட்டிக்கொண்டு ஏக்கமாய் கேட்கும் கேள்வி ஞாபகத்துக்கு வருகிறது - 'அடுத்த தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்குப்பா?' .

அதிக நாள் ஆகும் என்று தெரிந்திருந்தாலும் , அவர் அன்பாக அணைத்துக்கொண்டு , 'சீக்கிரமா வந்திரும்ப்பா ' என்று சொல்லும் ஆறுதலுக்கு மயங்கும் அந்த கணம் கவிதை.

ஹ்ம்ம் ..குழந்தையாகவே இருந்திருக்கலாமோ?

Monday, October 24, 2011

பாப்கார்ன் பாக்கெட் - 20111024' உள்ளாட்சி தேர்தல் முடிவு ஒன்றும் வியப்பில்லை'ன்னு திமுக , தேமுதிக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மாறி மாறி அறிக்கை விடும்போது, பாஸ் என்கிற பாஸ்கரன் சந்தானம் டயலாக்தான்  ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.

பெரும்பாலான கட்சிகள் உள்ளாட்சித் தேர்தல்ல இந்த தடவ போட்டியிட்டதுக்கு காரணம் , கட்சி காணாம போகக் கூடாதுங்கற பயம்தான். அதுவும் குறிப்பா இந்த தடவ படுகேவலமா தோற்போம்னு தெரிஞ்சும் நாளுக்கு ரெண்டு பில்டப் அறிக்கை விட்டு, நாங்க இன்னும் இருக்கோம்னு மக்களுக்கு அட்டென்சன் போட்ட கட்சிகள் நிறைய..தேர்தல் முடிவ பார்த்ததும் தெரிஞ்ச விஷயம் -

திமுக உயிரோடதான் இருக்கு. பிழைக்க வாய்ப்பிருக்கு.

தேமுதிக , ஏற்கனவே சொன்னதுதான். ஒரு தடவை தப்பித்தவறி ஜெயிச்சதுக்காக எல்லா தடவையும் அப்படியே நடக்கும்னு நெனைக்கிறது முட்டாள்தனம்.

வைகோ தன்னோட உண்மையான ஈழபோரட்டத்தோட பலனை ,அதன் அங்கிகாரத்தை மக்கள்கிட்ட இருந்து ஓரளவுக்கு வாங்கிட்டார். 

மீதிகட்சிகள் பத்தி அறிய ரெண்டாம் பத்தியை மறுபடியும் படிங்க.

இந்த தேர்தலில் நான் பார்த்த சந்தோசமான விஷயம் , பத்து மேயர்கள்ல ஆறு பெண் மேயர்கள்.அட இனியும் என்ன முப்பத்தி மூணு சதவீதம் ? அறுபது சதவீதம் எடுத்துட்டாங்க.. வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------

ஸ்டீவ் ஜாப் மறைவில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு அதிர்ச்சி செய்தி -  'சி' நிரலாக்க மொழியை உருவாக்கிய டென்னிஸ் ரிட்ச்சி காலமானது. கணினி தோழர்களுக்கு  பாலபாடமே சி-தான்.எந்த தொழில்நுட்பம் சார்ந்த கணினி தளத்தில் இருந்தாலும் இந்த மொழியறிவு இல்லாமல் ஒரு துரும்பு கூட அசைக்க முடியாது. இல்லை என்று சொல்லுபவர்கள் ,அவர்களை அறியாமல் அதன் சாரங்களை பயன்படுத்தியிருப்பார்கள்.
யுனிக்ஸ் இயங்குதளத்தை வேறு சிலரோடு சேர்ந்து  உருவாக்கியவரும்  இவர்தான். இவரும் புற்றுநோய்க்குதான் பலியாகியிருக்கிறார்.இவர்களைப் போன்ற சிறந்த அறிவு ஜீவிகளை மரணத்தை தவிர வேறு யாராலும் தோற்கடிக்க முடியாது.அதே சமயம் மரணம் வருவது தெரிந்தாலும் , அதை ஒத்திபோட தகுதி படைத்தவர்கள் இவர்கள் - 'இரு..என்ன அவசரம்? என் வேலையை முடிச்சுட்டு வரேன்.' என்று தங்கள் பணிகளில் ஐக்கியம் ஆகும் ரகத்தை சேர்ந்தவர்கள் இவர்கள். மரணமும் கைகட்டி ஒரு ஓரமாக நின்று ,அவர்கள் வேலை முடிந்ததும் அழைத்து செல்லும்.

ஆக மரணத்தை தள்ளிபோட சிறந்த வழி, எதாவது உருப்படியாக செய்ய முனைவதும் , அதில் முழுமுனைப்போடு ஈடுபடுவதும்தான் என்று வாழ்ந்து காட்டியவர்கள். They are Legends.
------------------------------------

முரண் படம் தமிழுக்கு புதியது.நல்ல முயற்சி.சேரனும் சரி , பிரசன்னாவும் சரி ,தங்கள் நிலை உணர்ந்து பாத்திரத்தை தேர்ந்தெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கதையின் முதல் காட்சி விஷயத்தை , கடைசி காட்சிக்கு முடிச்சு போடும் உத்திக்கு பேர் என்னவென்று தெரியவில்லை. ஆனால் அதை படத்தில் நுழைக்க கதையை மிக கவனமாக கையாள வேண்டும்.  இயக்குனர் அதை செய்திருக்கிறார்.

ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் 'Strangers on a Train' படத்தின் தழுவலாக இருந்தாலும் , அதை பெரிதாக எடுத்துகொள்ள தேவையில்லை. தெய்வதிருமகள் வெற்றிக்கு பிறகு ஏறக்குறைய எல்லா பெரும் 'அட விடுங்க பாஸ்..எங்க இருந்து எடுத்தா என்ன ? நமக்கு போர் அடிக்காம ரெண்டு மணி நேரம் ஓட்டரானுகளா.. அது போதும் ' என்ற மனப்பான்மை வந்திருக்கிறது. அதுவும் சரிதான்.

நான்கு படத்தை தெலுங்கில் இருந்து நல்லபடியாக அப்படியே திருப்பிபோட்ட ஜெயம் ராஜா கூட 'கிக்'கை தில்லாலங்கடி ஆக்கும்போது குப்புற விழுந்தார்.  தழுவலோ காப்பியோ , படத்தை ரசிக்கும்படி கொடுத்தால் போதும் போல. முரண் அந்த ரகம்.
சேரனுக்கு 'யுத்தம் செய் 'க்கு பிறகு சொல்லிகொள்ளும்படி இன்னொரு படம். ஆனால் ஒரே குறை - இந்த விஷயத்துக்கு இப்படிதான் ரியாக்ட் பண்ணுவார் என்று பார்ப்பவருக்கு நன்றாக முன்னரே தெரிகிறது.

வேறு வழியில்லை. விஜய்க்கு எப்படி முதிர்ச்சியான கேரக்டர் ஒத்து  வராதோ , தனுஷ்க்கு எப்படி டீசென்டான கேரக்டர் ஒத்து வராதோ , அதே போல சேரனுக்கு முரட்டு கேரக்டர் ஒத்து வராது. தப்பில்லை.முயற்சி எடுக்கிறேன் பேர்வழி என்று காமெடி  ஆக்காமல் இருக்கும் வரை இவர் பாராட்டப்பட  வேண்டியவர்.
முரண் - Classic Thriller.
----------------------------------------

எல்லாரும் எப்போதும் அரசியல் சுப்புடு ஆகி விட முடியாது. சோ போல பாலிடிக்ஸில் பின்னால் நடப்பதை அப்படியே ஒப்பிக்க முடியாது. ஆனால் சில விஷயங்கள் 'சூரியன் காலை உதிக்கும்.இரவில் மறையும்' என்பதுபோல் வெகு சுலபமாக கணிக்க முடியும். தேர்தலுக்கு முன்னால்
கேப்டன் விஷயத்தில் அம்மாவின் போக்கு பற்றிய என்னுடைய கணிப்பும் நூறு சதம் இதில் உண்மையாயிருக்கிறது.

//
ஆனால் இப்படியும் இருக்கலாம். கீழ்வருமாறு இவர் யோசித்திருந்தால் இவர் முடிவு சரிதான். 

தனியாக நின்று மொத்தமாக தோல்வியுறுவதை விட இப்படி நாற்பது தொகுதிகளில் நின்றால் எப்படியும் ஆளும்கட்சி எதிர்ப்பலைகளினால் குறைந்தது முப்பதாவது கிடைக்கும்.திமுக படுதோல்வி அடைந்தால் அந்த கட்சி உடைந்து விடும் கூறு அழகாக கண் முன் தெரிகிறது. 

பின் இந்த அம்மையார் எப்போதும் போல (தனி பெரும்பான்மையில் வந்தால் ) உடனே கூட்டணியில் இருந்து விலக்கி விடுவார். அதுதான் நமக்கும் வேண்டும்.

திமுக :குடும்ப சண்டையில் அழகிரி - ஸ்டாலின் - மாறன் என்று அடித்துக் கொண்டிருப்பார்கள். காங்கிரஸ் உட்கட்சி பூசல் - எந்த தலைவரும் இல்லை. .வைகோவின் மதிமுக மரணத்தருவாயில். பாமக எல்லாம் அம்மையாருக்கு ஒரு பொருட்டே அல்ல. 

பிறகென்ன ?  நாம்தான் பிரதான எதிர்க்கட்சி. ஐந்து வருடம் பொறுத்திருந்தால் அடுத்த முறை தேமுதிக - அதிமுக தான். வேறு யாரும் இல்லை. 

2016  சரியான நீயா ? நானா ? போட்டியாக இருக்கும். இப்போது இருப்பது போல் நீயா ? நானா ? அவனா ? இவனா? என்பதெல்லாம் இருக்காது. தமிழ் மக்களுக்கே உரிய குணமான ஆட்சி மாற்ற எண்ணம் நம்மை முதல்வர் ஆக்கி விடும்.

ஆக , இப்படி இவர் காய் நகர்த்துவது இந்த முறை பலனை எதிர்பார்த்து அல்ல .இப்போது கிடைக்க போகும் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் , திமுகவை பின் தள்ளி இரண்டாம் இடத்தை தக்க வைத்துக்கொள்வதிலும் , பின் வரும் பெரிய பலனையும் எதிர்பார்த்துதான். 
//

அம்மாவும் ,தாத்தாவும்,ஐயாவும் குணம்  மாறாமல் இருக்கும் வரை பல விஷயங்கள் இப்படிதான் எல்லாராலும் எளிதாக கணிக்க முடியும்.
--------------------------------------

எம்ஜீஆர் சூட் போட்டாலே அவருக்கு ஒரு தனி அழகு வந்து விடும். அவரின் முக வசீகரம்  இந்த பாடலில் மிக பிரகாசிக்கும்.தன்மையும் மிக கண்ணியமும் உள்ள நாயகன் பாடும் பாடல். எந்த காலத்துக்கும் பொருந்தும்.

அதிலும் இந்த பாடலில் கையை அதிகம்  ஆட்டாமல் , நடனம் ஆடாமல் மிக நளினமாக நடித்திருப்பார்.  (ராதாரவி இதே பாணியைத்தான் 'பூவே செம்பூவே' பாடலில் பயன்படுத்தியிருப்பார் ). கூடவே வாலியின் பாடல் வரிகள் ஆளை தலைகீழாக உலுக்கிபோடும்.
'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்; வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்;
 இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.'

கடைசி வரியை எம்ஜீஆரை தவிர எந்த ஹீரோ பாட முடியும்?
--------------------------------

Tuesday, October 11, 2011

அலைபேசி - சவால் சிறுகதை-2011

'இதுல்ல இவ்வளவு ஆபத்து இருக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல.புதுசா முளைச்சிருக்கிற இந்த பிரச்னையை சத்தமில்லாம முடிச்சிடணும்.  எதாவது நம்ம கை மீறி நடந்தா...?'
மறுப்பாக தலையாட்டினான் இரண்டாமவன்.

'பயப்படாத. நம்மள யாருக்கும் தெரியாது. தெரிய வாய்ப்பும் இல்லை. நிலைமை என்னனு தெரியாம நாம எதுவும் செய்ய முடியாது.'

'நம்ம திட்டத்துல எதாவது மாறுதல் இருக்கா? '

'கண்டிப்பா இல்ல.'

'இனி இந்த மாதிரி விஷபரிட்சை எல்லாம்  வேணாம். பேசாம இந்த பிளானையும் கூட பாதியிலேயே ட்ராப் பண்ணிடலாம் '

'இன்னொரு தடவ இப்படி பேசாத. இது ஒரு புரட்சி. முத்துக்கள் சில கிடைக்க வேண்டுமானால் சிப்பிகள் சில உடையத்தான் வேண்டும். இது நமக்கான வேத வாக்கு. மனசுல வெச்சுக்கோ. '

இதுவரை அமைதியாய் இருந்த நடுத்தர வயதுக்காரர் அவன் தோளைத்  தட்டி கொடுத்தார்.

'உன் தைரியம் என்னை பெருமைப்பட வைக்குது. உன்ன மாதிரி எல்லா தோழர்களும் இருந்துட்டா நம்ம இயக்கம் பெரிய வெற்றி அடைஞ்சிடும். சரி ஆயுதம் பத்திரமா இருக்கா ?'

இரண்டாமவன் பேண்ட் பாக்கெட்டில் கை வைத்து பார்த்து உறுதிசெய்து கொண்டான்.வெளியில் தைரியமாக பேசினாலும் , அதன் கனமும் உறுத்தலும் அவனை கவலைக்குண்டாக்கியது. தலையாட்டினான்.

'ஞாபகம் இருக்கட்டும்.வேற வழியே இல்லைனாதான் அதை உபயோக்கிக்கணும்.அது பிரமாஸ்திரம். அப்புறம் தகவல் எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியுமா? '

'நம்பத்தகுந்த எடத்துல இருந்து வந்திருக்கு.சத்தமில்லாம போய் பார்ப்போம்'

 நிசப்தத்தை கிழித்து அலைபேசி கதறியது. எடுத்து திரையை பார்த்தவன் அலறினான்.

'மேலிடம். மேலிடம். என்ன சொல்றது?'

'எதுவும் சொல்லாத.பேசாத.தேவையில்லாமல் நெறைய கேள்விக்கு பதில்  சொல்ல வேண்டியிருக்கும்.

வீதியில் வெளிச்சம் குறைந்திருந்தது.

'அதோ கடைசி வீடு. ஆள் பேர் முத்துசாமி.கவனமா பேசணும். வீட்டுல இருக்கறவங்களுக்கு நம்ம மேல ஒரு துளி சந்தேகமும் வந்துற கூடாது.'

'ஆள் என்ன செய்றான்?'

'சொன்னா சிரிப்பிங்க . பள்ளிக்கூட வாத்தியார்.அதுவும் சின்ன பசங்களுக்கு'

'அதுக்காக குறைவா மதிக்க கூடாது.கொஞ்சம் தகவலை வெச்சுகிட்டே இவ்வளவு தூரம் போயிருக்கானா அவன் லேசுபட்ட ஆள் இல்ல.  நிலைமை கொஞ்சம் விபரீதமானாலும் நம்மதான் பொறுப்பு. அட்ரஸ் சரிதான?'

'மறந்துடீங்களா?. இது என் ஊர். நல்லா தெரியும்'

கேட்டை சத்தமில்லாமல் திறந்தபடி உள்ளே சென்றார்கள்.அழைப்புமணியை அழுத்தும் முன் முகத்தில் வேர்வை அரும்பியது. பாக்கெட்டை ஒரு முறை தொட்டுபார்த்து கொண்டு அடுத்தவனை திரும்பி பார்த்தான். அவன் தலையாட்டவே பொத்தானை அழுத்தினான்.
------------------------------------------------

மூன்றாவது முறை அழைப்பு மணி கேட்டது.

எரிச்சலாக  தலையை உயர்த்தி பார்த்து அந்த சத்தத்தை அலட்சியபடுத்தினார் முத்து. தன் நாற்காலியிலிருந்து அவர் இம்மியும் நகரவில்லை. கண்கள் கருவளையத்தில் அகப்பட்டிருந்தன.மேஜையில் இருந்த இரண்டு குறிப்புகளையும் மீண்டும் குழப்பமாக  பார்த்தார்.இரண்டும் விஷ்ணு பெயரில் இருந்தது.

ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்து சென்று அறை மூலையில் இருந்த தொலைபேசியை எடுத்தார்.கை நடுக்கத்துடன் எண்களை அழுத்தினார்.


அதே நேரத்தில் மேஜை மேலிருந்த அவரின் அலைபேசி திடீரென கனைக்கத் தொடங்கியது. பதறியபடி , ஓடி சென்று பார்த்தார். நினைத்த இடத்திலிருந்துதான் அழைப்பு.இதயம் உச்சகட்ட வேகத்தில் துடிக்கத் தொடங்கியது. இரண்டு குறிப்புகளும் அவரை ஏளனமாக பார்த்ததுபோல் இருந்தது.

'இனியும் தள்ளிபோட கூடாது.முடிவெடு.என்ன செய்யலாம்? யோசி யோசி..'

அழைப்பு நின்றது. அலைபேசி திரையில் '67 missed call ' என்றிருந்தது. முத்து பொறுமை இழந்தார். தலை சுற்ற தொடங்கியது.அலைபேசியை தூர எறிந்தார்.

அருகிலிருந்து ஸ்டீல் ஸ்கேலை எடுத்து கையைக் கிழிக்க ஆரம்பித்தார்.  ரத்தம் பெருக ஆரம்பித்து தரையை ஈரமாக்கியது.

'கோகுல்ல்ல்லல்ல்.......' என்று வீறிட தொடங்கினார்.
முத்துவின் அலறல் வீதியில் எதிரொலித்தது. காய்ந்த சருகாக தரையில் உதிர்ந்தார். 
-----------------------------------------------

கதவை திறந்தபடி கவலை தோய்ந்த முகத்தோடு ஒரு நடுத்தர வயது பெண்மணி எதிர்பட்டார்.அருகில் ஒரு சிறுவன்.

'நீங்க...?'

'முத்து சார் இருக்காரா ? நாங்க அவருக்கு வேண்டியவங்க.'

'உள்ளார  வாங்க.நான் மீனாட்சி.அவர் வீட்டுலதான் இருக்காரு'

ஹாலில் சிறிது நேரம் அமர்ந்திருந்தனர். தூரத்தில் அலைபேசி அடிக்கும் சத்தம் மெல்லியதாய்  கேட்டது.

'பையனை அனுப்பி கடைல வாங்குனதுதான். சமைக்க நேரமில்லை.சாப்பிடுங்க.தொலவுல இருந்து வரீங்களா?'

மூன்று தட்டில் சாம்பார் இட்லியை பரிமாறியபடி மீனாட்சி கேட்டதற்கு மெல்லியதாய் தலையாட்டினார்கள்.

'அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல.  எதாவது முக்கியமான விஷயங்களா? இருங்க அவரை கூட்டிட்டு வரேன்.'
என்றவர் திடீரென திரும்பி , 'உங்களுக்கு கோகுல்னு யாராவது தெரியுமா ? என்றார். மூன்று பேர் முகமும் மின்சாரம் பாய்ந்ததுபோல் திடுக்கிட்டன. திணறலாக மறுத்தார்கள். மீனாட்சி சந்தேகமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ,உள்ளே சென்றார்.

'நாம நெனச்சது சரிதான். உடனே காரியத்தை முடிச்சாகணும். இனி தாமதிக்கிற ஒவ்வொரு வினாடியும் ஆபத்து.'

அலைபேசி மீண்டும் அலறியது. திரும்பவும் மேலிடம். இப்போது அவனுக்கு பயம் அதிகரித்தது.மேலிடத்திற்கு என்ன காரணம் சொல்வது?  ஆபத்து சுற்றி வளைக்க ஆரம்பித்திருப்பது மட்டும் அவனுக்கு நன்றாக புரிந்தது. அருகிலிருந்தவனைப்  பார்க்க, அவனிடம் ஒரு பரிதாபமான   பார்வை தோன்றியது.

நடுத்தர வயதுக்காரர் சூழ்நிலையின்  இறுக்கத்தை குறைத்தார்.பேச்சை மாற்றினார்.
'தம்பி என்ன படிக்கிற? பாவம் இந்த நேரத்துல எந்த கடைல இட்லி வாங்குன ?'
பையன் பேசிகொண்டிருக்கும்போதே ஒரு அலறல்  சத்தம் மூவரையும் திடுக்கிட வைத்தது. உள்ளே ஓடினார்கள்.
---------------------------------------
டாக்டர் மீனாட்சியை தேற்றிகொண்டிருந்தார்.

'ஒன்னும் இல்லம்மா.
இப்போ நல்லா தூங்கிட்டிருக்கார் .இது ஒரு சின்ன depression . சூழ்நிலையோட இறுக்கத்தை மூளையும் மனசும் ஏத்துக்க  முடியாதபடி  அழுத்தம் வரும்போது இப்படி நடக்கறது இயற்கை.

ஒரு விஷயத்தைப் பத்தி திரும்ப திரும்ப யோசிச்சு தீர்வு கிடைக்கலைனா இப்படி ஆகும்.இதுக்கு Obsessed stateன்னு சொல்லுவாங்க.
ஆமா இந்த அளவுக்கு போக அவருக்கு என்ன பிரச்சனை? உங்களுக்குள்ள எதாவது சண்டையா?'

கண்ணீரை கட்டுபடுத்திக்கொண்டே மீனாட்சி கதறலோடு கோபத்தில் பொங்க ஆரம்பித்தார் - 'அதெல்லாம் ஒன்னும் இல்லேங்க டாக்டர். பத்து நாள் முன்னாடி வரைக்கும் நல்லாத்தான் இருந்தாரு.  எல்லாம் இந்த எழவு பிடிச்ச கம்ப்யூட்டர்னாலதான்.
எதோ கதை எழுதுற போட்டியாம். மூணாயிரம் ரூபா பரிசாம். அந்த  அறிவிப்பு வந்ததுல இருந்து இந்த ஆளு புத்தியோடவே  இல்லீங்க டாக்டர். 

வீட்டுபோன்ல இருந்தே செல்போனுக்கு கால் பண்ணிக்கிட்டு, பேப்பர் பேப்பரா எழுதி கிழிச்சு  போட்டுட்டு ஒரே தொல்லைங்க டாக்டர்.

பையன்கிட்ட ரெண்டு வரி அளவுக்கு எதையோ  கொடுத்து ,இதே மாதிரி எழுதி பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வாடான்னு சொல்லி, கொட்ட கொட்ட அந்த கெரகத்த பார்த்துட்டு இல்லாத  அட்டுழியம் பண்ணிட்டு இருந்தாருங்க டாக்டர். ஏணுங் டாக்டர் நீங்களே சொல்லுங்க ? அன்னைக்கு எதோ அவருக்கு தெரிஞ்சவங்க மூணு பேரு வந்ததால சட்டுன்னு இங்க வந்து சேர்க்கறதுக்கு ஆச்சுங்க. மவராசனுக நல்லா இருப்பாங்க.இல்லீனா இந்த மனுசனுக்கு எதாச்சும் ஆயிருந்தா எனக்கும் என்ர பையனுக்கும் யாருங்க டாக்டர் பொறுப்பு?

ஆளு முழிச்சதும் , இந்த கன்றாவியெல்லாம் இனி தொடக்கூடாதுன்னு  கண்டிசனா சொல்லிபோடுங்க டாக்டர்.மறுக்கா இது மாறி பண்ணுனா நான் பையன கூட்டிட்டு என்ர பாட்டுக்கு போய்ட்டே இருப்பேன். போதுஞ்சாமி இந்த புத்திகெட்ட ஆளு சகவாசம். இப்ப கதை ஒண்ணுதான் இந்த ஆளுக்கு கேடு.
போட்டி வைக்கரானுகளாமா  பொல்லாத போட்டி? நாசமா போறவனுக நல்லாவே இருக்க மாட்டானுக டாக்டர்.'

--------------------------------------
  பரிசல் , ஆதியை தேற்றிக்கொண்டிருந்தார்.

'விடுப்பா அந்த ஆளுக்கு ஒன்னும் ஆகலைல.udanz இயக்கத்துக்கு எந்த கெட்ட பேரும் இல்ல.தப்பிச்சோம். '

'யோவ் சும்மா இருய்யா.
பெரிய தீவிரவாத இயக்கம்  ரேஞ்சுக்கு பில்டப் பண்ணிக்கிட்டு
இருக்கீங்க.
நல்ல வேளை சரியான நேரத்துக்கு நம்ம போனோம் ,அந்த ஆளு உயிர் பிழைச்சான் .
அந்த அம்மாவுக்கு மட்டும் நாம யாருன்னு தெரிஞ்சிருந்தது , செத்திருப்போம்..முதல தகவல் சொன்னவனுக்கு ஒரு பெரிய கும்புடு போடணும்.இல்லேன்னா நம்ம கதி என்ன ஆவறது ? '

'ஒன்னும் ஆயிருக்காது.
புலம்ப அரம்பிச்சிராத..அதான் போகும்போதே
கஷ்டப்பட்டு கடன வாங்கி  , பாக்கெட்ல பணமும் கொண்டு போயிருந்தோம்ல. ஒரு வேளை அந்த ஆளு  கதை எழுதாம சாக மாட்டேன்னு சொல்லியிருந்தா,  போதும்பா நீ கதை எழுதுனதுன்னு சொல்லி பணத்தை அப்போவே கொடுத்திருப்போம். பரவாயில்ல பணம் மிச்சம்.'

பரிசல் பேசிக்கொண்டே போக தடுத்து நிறுத்தியது அலைபேசியின் அழைப்பு. மேலிடம்.ஒரு பெருமூச்சு விட்டபடி இப்போது அழைப்புக்கு பதில் கொடுத்தார்.

'எங்கங்க இருக்கீங்க? மூணு மணி நேரமா கால் பண்ணிட்டு இருக்கேன்.எடுக்க மாட்டீங்கறீங்க.வீட்டுக்கு வாங்க.உங்களுக்கு இருக்கு.'

'ஐயோ இல்லமா.அது ஒரு சின்ன பிரச்சனை. வந்து கூகிள்.. இல்ல கோகுல்....'

'உளறாதீங்க..இன்னும் பத்து நிமிசத்துல வீட்டுல இருக்கணும்'

பரிசலின் தவிப்பை ரசித்தபடி ஆதி கேட்டார்.

'என்ன சங்கர் உங்களுக்கு ,  ட்ரைனுக்கு லேட் ஆகல?'

பதில் சொல்லாமல் கேபிள் சங்கர் மிக சிரத்தையோடு எதையோ லேப்டாப்பில் டைப் செய்து  கொண்டிருந்தார்.

'சாப்பாட்டுக்கடை -  திருப்பூரில் பதிவர்கள் சார்பில் ஓர் அவசரகூட்டம் ஆதி , பரிசல் தலைமையில் நடைபெற்றது. ....
.....இவர்களின் ஸ்பெஷாலிட்டி சாம்பார் இட்லி .அருமையான நெய் மணக்கும் சாம்பார் இட்லி , கொத்தமல்லிதழை மிதக்க வெகு சூடாக  இருக்கிறது. ம்ம்ம்ம் அட்டகாசமான சுவை.விலை கொஞ்சம் அதிகமென்றாலும் worth .திருப்பூர் போகும்போது தவறாம ஒரு நடை போயிட்டு வந்திருங்க.
ராத்திரி  ஒரு மணி வரைக்கும்  பார்சலும் உண்டு.
 டிவைன்.'

----------------------------------------------------------------

Monday, October 10, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ் - I-sad ...

கடவுளுக்கு ஒரு பொறாமை உண்டு. மிக நல்லவர்களை , அறிவு ஜீவிகளை பூமிக்கு அனுப்பி வைத்தால் வெகு சீக்கிரம் பொறுமை இழந்து விடுவார். உடனே  அவர்களை திருப்பி அழைத்துக் கொள்வார். பாரதி ,ஷெல்லி , மொசார்ட்,கணிதமேதை ராமானுஜம் ,ப்ரூஸ்லீ ,மைக்கேல் ஜாக்சன், இப்படி பலர். இப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் - ஆப்பிள் கணினி நிறுவனர்.


இவரின் எண்ணமும் தொழில் முன்னேற்றமும் எந்த அளவுக்கு அதிக வளர்ச்சியடைந்ததோ அதே அளவுக்கு அவர் உடலில் புற்றுநோய் செல்களும் வளர்ந்து அவரை  நாளுக்கு நாள் கொன்று  வந்திருக்கிறது.அதை எதிர்த்து இவ்வளவு வருடங்கள் போராடியவர் , போன மாதம்தான் பணியில் இருந்து விருப்ப ஓய்வை அறிவித்தார்.
வேலையில் இருக்கும்போது இவரை அணுக முடியாத மரணம் , ஓய்வை நாடியபோது வெகுசுலபமாக அதன் வேலையை முடித்துவிட்டது.
--------------------

இனி இவரைப் பற்றி  வெப்துனியா :

ஐபோன், ஐபாட், ஐடியூன்ஸ்  போன்றவைகளை கண்டுபிடித்து ,கணினி தொழில்நுட்பத்தில் மைக்ரோசாப்டுக்கு போட்டியாக ஒரு சகாப்தமாக விளங்கியவர் ஸ்டீவ்.
இவரின் தகுதி என்று பார்த்தால் - பொறியியல் படிப்பில் எந்த  முறையான பட்டமும் பெறவில்லை.கல்லூரியில் முதல்  செமஸ்டருடனேயே படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு கணினி ஆர்வம் காரணமாக அந்த துறையில் மூழ்க தொடங்கினார்.

பிறந்தது - அமெரிக்கா, சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் , 1955 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ல் .  அருகில் உள்ள ஒரு ஊரை சேர்ந்த தம்பதியரால் பிறந்த ஒரு வார காலத்திலேயே தத்தெடுக்கப்பட்டார்.

பள்ளி படிப்பின்போதே கம்ப்யூட்டர் விவகாரங்களில் ஆர்வம் காட்டிய ஸ்டீவ் ஜாப்ஸ், தாம் வசித்த நகருக்கு அருகில் உள்ள பாலோ ஆல்டோ என்ற ஊரில் இருந்த கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் கணினி நிபுணர்கள் உரையாற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஆர்வமுடன் சென்று வருவார்.பின்னர் கோடை விடுமுறையில் ஸ்டீவ் வாஸ்னிக் என்ற பொறியாளருடன் சேர்ந்து பணியாற்றினார்.

இந்நிலையில் போர்ட்லாண்டில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ், முதல் செமஸ்டருடனேயே தமது படிப்புக்கு மங்களம் பாடிவிட்டு கம்ப்யூட்டர் தொடர்பான வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்ட தொடங்கினார்.

இந்த ஆர்வம் அவரை வீடியோ கேம் டெக்னீசியன்களில் முன்னோடி எனக் கூறப்படும் அடாரி என்பவருடன் சேர்ந்து பணியாற்ற வைத்தது.அதன் பின்னர் தம்மை போன்றே கல்லூரி படிப்பை பாதியில்விட்ட வோஜ்னியாக் என்பவருடன் சேர்ந்து கம்ப்யூட்டர் கிளப் ஒன்றில் சேர்ந்தார்.
கம்ப்யூட்டர் மீதான இவர்கள் இருவரது ஆர்வமும் ஒரே அலைவரிசையில் ஒத்துப்போன நிலையில், 1976 ஆம் ஆண்டு இருவரும் சேர்ந்து தொடங்கியதுதான் " ஆப்பிள் கம்ப்யூட்டர்".

இந்த நிறுவனத்தை தொடங்கியபோது ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு வயது 21; அவரது சகாவான வோஜ்னியாக்கின் வயது 26.


பின்னர் 1980 ஆம் ஆண்டு இருவரும் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டரை உருவாக்கி வெளியிட, அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் கணினி தொழில் நுட்பத்தை மாற்றிய பெருமை இவருக்கே உரியது. சாதாரணமான கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக உருவாகிய ஆப்பிள் நிறுவனத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஐ பாடு மற்றும் ஐ டியூன்ஸ், ஐபோன் உருவாக்கியவர் இவரே.

2003 ஆம் ஆண்டு ஐ பாடு உருவாக்கபட்ட பிறகு இசை உலகில் ஒரு மாற்றமே ஏற்பட்டது. சுமார் 20 கோடி பேர் இதில் பதிவு செய்து ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பாடல்களை பதிவிறக்கம் செய்து ரசித்து வருகின்றனர்.

2007 ஆம் ஆண்டு ஐ‌ போனை இவர் உருவாக்கினார்.ஸ்மார்ட் போன் உருவாக இது ஒரு முன்னோடியாக விளங்கியது. 2011ல் உருவாக்கப்பட்ட ஐ டியூன்ஸ் சேவை மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டை ‌கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம், கணினி யுகத்தில் புதிய வரலாற்றைப் படைத்தது.

கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டேப்லட் பிசி என்ற கம்ப்யூட்டரை, ஐ பேடு பின்னுக்குத் தள்ளி, 2010 இறுதியில் ஒன்றரை கோடி விற்பனையானது. இவர் கடந்த ஆகஸ்ட் வரை அதன் ‌தலைவராகவும் இருந்தார்.  

சாதனையாளர்களை விதி அதிக நாட்கள் வாழவிடுவதில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம். ஆனால் அவரது சாதனைகளுக்கு அழிவில்லை!
--------------------

இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக உங்கள் வாழ்க்கை பாதை அமைந்துவிட்டது  ஸ்டீவ். அந்த விதத்தில் நீங்கள் , இனி வெற்றி பெரும் ஒவ்வொரு இளைஞன் மூலமாகவும் , என்றும்  உயிர்ப்போடுதான் இருப்பீர்கள்.     

Friday, October 7, 2011

எங்கேயும் எப்போதும்

சேது வெற்றிக்கு பிறகு தமிழ்  படங்கள் பார்முலா மாற்றப்பட்டது. கடைசி  காட்சி மட்டும் கொடூரமாய் இருக்க வேண்டும் ; மீதி முழுக்க  நகைச்சுவையாகவும் , 
மசாலாத்தனம்  உள்ளதாகவும் மேலோட்டமாக பார்த்தால் எதார்த்தமாகவும் இருக்க வேண்டும் என்பதை பல படங்களில் கடைபிடிக்கப்பட்டது.

நந்தா,  காதல், பிதாமகன்,7G ரெயின்போ காலனி,செல்லமே,பருத்திவீரன், காதலில் விழுந்தேன், மைனா என ஒரு நீண்ட வரிசையில் படங்கள் வந்தன; வெற்றியும் பெற்றன. ஆனால் அந்த வகையில் பத்தோடு பதினொன்று என சேர்க்க முடியாத படம்  - எங்கேயும் எப்போதும். காரணம் கடைசியில்.


கிளைமாக்ஸ் காட்சி முதலில். அதை நோக்கி நடைபெறும் காட்சி நகர்த்தல்களில் படம் சொல்லும் முறை. ஆங்கில படங்களில் அதிகம் பயன்படுத்தபட்டிருந்தாலும் , தமிழில்  தசாவதாரம்,அங்காடி தெரு , கிட்டத்தட்ட வெயிலில்.. இப்போது  இந்த படத்தில். இதில் உள்ள ஒரே ஆபத்து , தெரிந்த கிளைமாக்ஸ் காட்சிக்கு சுவாரசியம் குறையாமல் பார்ப்பவரை அமர வைக்க தெரிந்திருக்க வேண்டிய உத்தி. அது இயக்குனர் சரவணனுக்கு இருக்கிறது.

ஜெய் - சுப்ரமணியபுரம் வெற்றி மமதையில் இருந்து இறங்கி வந்து , தன் இடம் தெரிந்து நடித்திருக்கும் படம். இடையில் அவள் பெயர் தமிழரசி என்ற ஒரு நல்ல படம் கொடுத்தார். மற்றவை குப்பைகள். இந்த படத்தில் அவரின் அப்பாவித்தனமான நடிப்பும் , காதலிக்கு அடங்கி ஒடுங்கும் பாத்திரமும் கனகச்சிதம்.
இது சரியான ட்ராக். ஜெய்.. போலாம் ரைட்...

அஞ்சலி - கற்றது தமிழ் , அங்காடிதெரு போன்ற பேர் சொல்லும் படங்களில் , நினைவில் நிற்கும்  பாத்திரங்களில் நடித்து இவரும்  இடையில் ரெட்டசுழி, மங்காத்தா,ஆயுதம் செய்வோம்  இன்னும் சில குப்பைகள் நடித்து மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.

இந்த மாதிரி வாயாடி காதலி பாத்திரத்தில் நடிக்க நிறைய தைரியம் வேண்டும். பார்ப்பவருக்கு எதோ ஒரு இடத்திலாவது  , 'இந்த சுமாரான பொண்ணுக்கு போய் எதுக்கு இவ்ளோ பயப்படறார்?' என்று நினைத்தால்  கதை கந்தல். அதை உடைத்தெறியும் நடிப்பும் , அளவான அழகும்  அஞ்சலிக்கு உண்டு. இதை தொடர்ந்தால் சுஹாசினி இடத்துக்கு வர முடியும். வாழ்த்துக்கள்.

அனன்யா - ஷர்வானந் காதல் காட்சிகள் , இளைஞர்கள்  மத்தியில் ஹிட். ' கோவிந்தா..கோவிந்தா' பாடலில் அனன்யாவின் நடிப்பும் , அப்பாவித்தனமும் , கடந்த இருபது நாளாக பேஸ்புக்கில் அதிகம்  பகிரப்பட்ட ஒன்று.

படத்தின் கதை இந்த நேரம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். எல்லாருக்கும் தெரிந்து பயன் இல்லை.  ஓட்டுனர்கள்,குறிப்பாக தனியார் பேருந்து , லாரி ஓட்டுனர்கள் பார்க்க வேண்டிய படம்.  விஜய் டிவி இனி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் என்று தனியாக ஒரு பிரிவை ஆரம்பித்து இந்த படத்திற்கு தாராளமாக விருது கொடுக்கலாம்.

முருகதாஸ் கொண்டாடப்பட்ட வேண்டிய இயக்குனர் ஒன்றும் அல்ல.  ஆனால் இந்த படத்தை கொடுத்ததன் மூலம் பாராட்டப்பட வேண்டிய தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். சங்கர் S பிக்சர்ஸ் மூலம் செய்ததை, பிரகாஷ்ராஜ் முன்பு  டூயட் மூவீஸ் மூலம் செய்ததை  இவர் தொடரலாம் என்று நம்புவோம். புதிய  பல இயக்குனர்கள் வர ஏணியாய்/ஏதுவாய்  இருக்கும்.

சரி , படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்று விட கூடாது.  யோசிப்போம். இது ஒன்றும் மிகைபடுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. சென்னை - கோவை-திருச்சி - மதுரை- பெங்களுரு என்று இருக்கும் எல்லா தேசிய நெடுஞ்சாலைகளிலும் நடக்கும் அன்றாட விபத்துகளில் ஏற்படும் தனி மனித பாதிப்பை உணர்த்தும் கதை இது. 

நன்றாக படித்து , கணினி நிறுவனத்தில் வேலை வாங்கி , கடினமாக ஐந்து வருடம் உழைத்து பதவி உயர்வு பெற்ற பிறகே திருமணம் என்று சொல்லி ,அதன் பிறகு கல்யாணத்திற்கு தலையாட்டி , நிச்சியதார்த்ததிற்கு செல்லும்போது சமீபத்தில் விபத்தில் கருகிய என் தோழியை நினைக்கிறேன். மீதி வாழ்க்கையை எங்கு வாழ அனுப்பி வைக்கபட்டாள் சிரிக்க மட்டுமே தெரிந்த என் அப்பாவி தோழி ? காரணம் - முகமறியா ஒரு ஓட்டுனர்.  

மேலும் வலியை உணர இதையும் பார்க்கலாம்.   

எங்கேயும் எப்போதும் - இப்போதும் எப்போதும் நினைவில் இருக்க வேண்டிய படம்.
-------------------

Tuesday, September 27, 2011

உள்ளாட்சித் தேர்தல் -A Solo Stunt

'எங்கள் கூட்டணியே நேர்மையான கூட்டணி' 

' அதர்மத்தை அழிக்கவே இந்த கூட்டணி' 

 'எங்கள் கொள்கைகள் வெவ்வேறாயினும் குறிக்கோள் ஒன்றுதான் ; அதன் விளைவே இந்த கூட்டணி ' 

 'பழையதை மறந்து விட்டோம் ; இனி நடப்பது நல்லதாய் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த கூட்டணி ' 

 'எங்கள் இரண்டு கட்சிகளும் , மக்கள் சேவை என்ற புள்ளியில்  இணைந்திருக்கிறோம் என்பதை மக்களுக்கு சொல்லத் தேவையில்லை'  

'நாங்கள் ஒரே குருகுலத்தில் அரசியல் பயின்றவர்கள்.. நாங்கள் இணைவதில் என்ன ஆச்சர்யம்? '

'இத்தனை வருடங்கள் எங்களை மதிக்காதவர்கள் கூட்டணியில் இருந்து இப்போதுதான் வெளியே வந்திருக்கிறோம். ஒரு விதத்தில் இது எங்களுக்கு ஒரு விடுதலை.இனி மக்கள் பணியே எங்களுக்கு முக்கியம்'

'பாசிச கட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதை இல்லை. ஆனால் இங்கு வந்ததும் தலைவர் கட்டி அணைத்து வரவேற்றதில் ஏற்பட்ட கண்ணீரில் எங்கள் மனகசப்புகள் கரைந்துவிட்டன.. '

யப்பா...இப்படி எத்தனை உளறல்கள் தாண்டி வந்திருக்கிறோம்.பொறுத்து வந்திருக்கிறோம். மேலே கண்ட அறிக்கைகள் அனைத்தும் ஒரு கட்சி ,இன்னொரு கட்சியுடன் கூட்டணி வைக்கும்போது கூறிய காரணங்கள் - . கொடுமை.

திமுக தோற்றதில் யாருக்கு என்ன லாபம் கிடைத்ததோ என்னவோ , இந்த உள்ளாட்சி தேர்தல் ஒரு வரமாக ,தமிழக மக்களுக்கு கிடைத்து விட்டது.
தமிழக வரலாற்றிலேயே ,இந்த உள்ளாட்சி தேர்தல் மிக முக்கியமான ஒன்று.. நம்புங்கள்... யாரும் யாரோடும் கூட்டணி இல்லை...  

ஜெயிப்பது எந்த கட்சியாய் வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் Victory Factor எனப்படும் வெற்றிக்கான காரணத்தை, குழப்பமில்லாமல்  நிர்ணயம் செய்ய மக்களுக்கு இப்போது ஒரே கேள்விக்கான பதில் தெரிந்தால் போதும் - 'இந்த கட்சிக்கு ஒட்டு போட்டால்  ,ஏமாற்றாமல் மக்களுக்கு எதாவது செய்யுமா ? 
இதற்கு முன் செய்திருக்கிறார்களா ?' -  இது மட்டுமே..

மற்ற முறை போல - ' நல்லவர்தான்..ஆனால் இவருக்கு போட்டால் , அந்த கட்சியில் நம் கட்சி கூட்டணி வைத்திருக்கிறதே .. என்ன செய்யலாம்?' என்றோ
'போன முறை ஒன்றும் செய்யவில்லை.இந்த முறை போட வேண்டாம் என்று பார்த்தால் , ஆளும் கட்சியோடு கூட்டு வைத்திருக்கிறாரே..எதாவது தேறுமா?' என்றோ 'குழப்பமா இருக்கே.. இந்த ஆள் ரெம்ப மோசம்.ஆனா என்ன பண்ணித்தொலைக்கிறது? நம்ம ஜாதிகட்சியோட ஆதரவுல நிக்கறாரே..' என்றோ எதுவும் குழம்ப வேண்டாம்.

எல்லாரும் தனித்தனி. அதற்காக எல்லாரும் 'நாங்கள் நல்லவர்கள்.அந்த தைரியத்தில்தான் தனியாக நிற்கிறோம்' என்று சொல்லவில்லை (சொல்ல தகுதியும் இல்லை). கூட்டணி படியவில்லை. அதுதான் காரணம்.

சரி .. இப்போ ஒரு பாமரத்தனமா, வெள்ளந்தியா , சராசரி வாக்காள  ஜனமா கட்சிகள அலசுவோம். 


அதிமுக தனி மெஜாரிட்டி. ஏற்கனவே சொன்ன மாதிரி  ,தேர்தல் முடிஞ்சதும் தேமுதிகவை (இன்னபிற சில்லறை கட்சிகளை )அம்மா தலைமையிலான   அ.இ.அ.தி.மு.க. கட்சியில் நடந்த பொதுக்குழு கூட்ட நிர்வாக கூட்டம்  (இதுல்ல என்ன சுத்தி வளைக்கிறது ? அம்மா தான் கட்சி. அம்மா மட்டும்தான் கட்சி )கழட்டி விடும் என்ற உண்மை அரசியலில் அ , ஆ மட்டுமே தெரிஞ்ச சின்ன பையனுக்கு கூட தெரியும்.

அம்மா அம்மாதான். எப்பவாவது 'இந்த கட்சியை கூட்டணியிலிருந்து  அதிமுக  விலக்குகிறது'ன்னு அவங்களா சொல்லிருக்காங்களா.. ? அந்த கட்சியே வெளிய போறோம்னு அழுதுட்டு ஓடிவர  மாதிரி பண்ணுவாங்க..அதான் பெர்பெக்ட் லீடர்ஷிப்.

ஆக அதிமுக தனியாக நிக்கறதுல எந்த சந்தேகமும், ஆச்சர்யமும்  இல்லை.திமுக.. மன்னிக்கவும்..அடுத்த நாலரை  வருசத்துக்கு  தேமுதிகவுக்கு அப்புறம்தான் திமுகவை பத்தி பேச முடியும்.
சரி.. தேமுதிக சிறந்த எதிர்கட்சியாக கடந்த நான்கு மாதமாக ,மிக சிறப்பாக ,அருமையாக ,ஒட்டு போட்ட மக்களுக்காக உடனடியாக.. அட என்னப்பா செஞ்சிருக்காங்க..யாராச்சும் சொல்லுங்க - சட்டசபையில் நூற்றுக்கு நூறு சதவீதம் Attention போடுவதை தவிர. 

சரி இப்போ ஒரு வழியா  கூட்டணியில் இருந்து வெளிய வந்திருக்காங்க.. அவங்க கேட்டது மாதிரி அவங்களுக்கு மார்க் போட இன்னும் ஒரு ஆறு மாசம் கொடுப்போம். (இப்படி ஆறு ஆறு மாசம் கொடுத்து அடுத்த தேர்தலே வந்துடும் போல ) .

இப்போ அவங்க தனி. கூட மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட். இந்திய கம்யுனிஸ்டையையும் கூப்பிட போறார் கேப்டன்.  ஹ்ம்ம் அதனால ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்ல. ஏறக்குறைய தேமுதிக மட்டும்தான்.  ராஜ அதிர்ஷ்டம் சூழ்நிலை காரணமா யாருக்காவது ஒரு தடவ வரும். ஆனா அத தக்க வைக்கிறது உங்க சாமர்த்தியம் கேப்டன். இதை அப்புறமா பேசலாம். இப்போ இவங்க தனி. அதான் நமக்கு முக்கியம்.


சரி..இப்போ திமுக.  தோல்விக்கு பிறகு சட்டசபை பக்கம் வரலை. மன்னிக்க. சட்டசபைக்கு உள்ள வரல. பெரும்பாலும் எல்லாரும் உள்ள இருக்காங்க. வெளிய இருக்கறவங்க ,உள்ள இருக்குறவங்கள போய் பாத்துட்டு இருக்காங்க. அவங்க இப்போ ஏழை கட்சி ஆகிட்டாங்களாம் -திமுக தலைவர் சொல்லியிருக்கார்..  ஆனா நல்ல முடிவு எடுத்திருக்காங்க - தனியா நிக்கறதுன்னு.

'உன்னால நான் கெட்டேன்;என்னால நீ கெட்ட'-ன்னு எத்தனை நாள்தான் கோபத்தை அடக்கிட்டு கைகோர்த்து இருக்கறது. இந்த தடவ தனியாவே அடி வாங்கிக்கிறோம்ன்னு காங்கிரஸ்க்கு டாட்டா  காமிச்சிட்டார் தாத்தா . இந்த கட்சி சார்பா நிக்கறதுக்கு , ஜெயிலுக்கு போக பயப்படாம தைரியமா இருக்க ,  வேட்பாளர்கள் கிடைச்சிடாங்க போல .அதுவே பெரிய சந்தோசம். இப்போ இவங்க தனி.


அடுத்து காங்கிரஸ்.  வெளி கூட்டணி எதுவும் எடுபடல. சரி உள்ளயாவது ஒற்றுமையா இருக்கறாங்களானா அப்படி எதுவும் தெரியல. மத்தியில சிதம்பரம் நெலமையும் சரியில்ல;உள்ளூர்ல காங்கிரஸ் கரைவேட்டிக்கும்  கட்டம் சரியில்ல. நாடு முழுக்க எதிர்ப்பலை. அது எப்படிங்காணும் இவ்வளவு அடிவாங்கியும் பயமே இல்லாம தனியா ஒட்டு கேக்க வரீங்க..?..
ஹ்ம்ம் எந்த தைரியத்துல தனியா நிக்கறாங்கன்னு தெரியல. ஆனா தனியா நிக்கறாங்க.

பாமக - ரெண்டு மாசம் முன்னாடியே டாக்டர் சொல்லிட்டார் - நாங்க இனி தனி-ன்னு. இப்படி சொல்றோமே ? மக்களாவது நம்மள  சேர்த்துக்குவாங்களான்னு ஒரு தடவைக்கு நாலு தடவ யோசிச்சு  சொல்லிருக்கணும். இந்த தடவையாவது சொல்லுங்க டாக்டர் - உங்க கொள்கைதான் என்ன? சரி அத விடுங்க.. உலக மகா அதிசயம் .. இவங்களும் தனி.

மதிமுக..சாரி - வைகோ தனியா நிக்கறார்.

மீதி இருக்குற கட்சிகளும் பெருசா எந்த கூட்டணியும் இல்லாம அங்கங்க தனி கடை போட்டுருக்காங்க..
எத்தனை பேர் மறந்து போய் பழக்கதோசத்துல 'எங்க கூட்டணிக்கு ஒட்டு போடுங்க'-ன்னு சொல்ல போறாங்களோ?!!!? .
இனி பிரசாரத்துலதான் பெரிய காமெடி இருக்கு.

பிரசாரம் நடக்க நடக்கவே , சொல்லும் விஷயங்களுக்கு ஏற்ப  அதிமுகவில இருந்து பல கட்சிகள் சட்டபேரவையில் வெச்ச கூட்டணியிலிருந்து விலக்கப்படும்.

சரி மக்களே.. கட்சிக்கு தனித்தனியா மார்க் போட ரெம்ப வசதியான சந்தர்ப்பம்.  அது பூஜ்யம்னாலும் பரவாயில்ல..சந்தோசமா போடுங்க.
யாருக்கு தெரியும்? இந்த தேர்தல்ல தமிழ்நாட்டுல இருந்து பல கட்சிகள் காணாமலேயே போய்டலாம்.

முந்துங்கள் இந்த சலுகை இந்த முறை மட்டுமே. இந்த ஒரு முறையாவது மக்கள் எல்லாரும் கூட்டணி வைப்போம்.

Get Ready Folks...

Thursday, September 15, 2011

பாப்கார்ன் பாக்கெட் - 20110915

என்னிடம்  ,ஒரு நான்கு வருடம் முன்னால் சிக்னல் நிறுத்தத்தின்போது ,
விலாசம் தேடி அலைந்து கொண்டிருந்த ஒருவர் அட்ரஸ்ஸை கொடுத்து , நுனிநாக்கு ஆங்கிலத்தில் எங்கே என்று கேட்டார். விலாசம் நூறு ருபாய் நோட்டில். இது யார் கொடுத்தது என்று கேட்டதற்கு பதில்  'Well,I wrote.Why?'.

பளார் என்று அறைய தோன்றியது.பொறுமையாக இப்படி எழுதாதீர்கள் என்று சொன்னதற்கு , 'பாஸ் , அட்ரஸ் மட்டும் தெரிஞ்சா சொல்லுங்க..அட்வைஸ் வேண்டாம்.
நானே Financing செக்டார்ல தான் ஒர்க் பண்றேன். I know. Moreover that is my money' என்றார்.
பெருமூச்சோடு வழி சொன்னேன். ஒரு தேங்க்ஸ் கூட சொல்லாமல் சென்று விட்டார்.'செல்வி - சுந்தரம் ' , 'என் உயிர் ரம்யா ',' பிரேம் BE CSC','இளையதளபதி ROCKS ' என்று உங்கள் புக்கில், வீடு சுவற்றில் , அப்பா சட்டையின் பின்னாடி ,  தாராளமாக எழுதுங்கள்  ; ரூபாய்  நோட்டில் வேண்டாமே...

படித்திருக்கிறோம்,அந்த அறிவு கொஞ்சமாவது இருந்தால் இதை மறுபடியும் செய்ய மாட்டோம். இது மாதிரி கிறுக்கல்களால் பல கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள்  செல்லாதவை ஆகின்றன.ATM ' எதுவும் இந்த நோட்டுகளை ஏற்றுகொள்ள  மறுக்கின்றன.

அரசாங்கத்தை அடிக்கடி ஒவ்வொரு விசயத்துக்கும் குற்றம் சொல்லும் நாம் , நம் பக்கம் இருக்கும் சில மிக முட்டாள்தனத்தை கவனிப்பதில்லை.
இதை சொல்லும்போது வார்த்தைகளில் கோபம் தொனிக்க காரணம் , இதை செய்வது படித்தவர்கள் மட்டுமே. எழுதபடிக்க தெரியாதவர்களுக்கு இதை செய்ய இயலாது.

பணத்தின் மதிப்பு , முதலீடு,அந்நிய செலாவணி ,பங்குவர்த்தகம் பற்றியெல்லாம் ஆதி முதல் அந்தம் வரை பேசும் நாம் , இந்த அர்த்தமற்ற செயலை தடுக்கவும் செய்ய வேண்டும். படித்தவர்க்கும் , படிக்காதவர்களுக்கும் வித்தியாசம் உண்டுதானே..அப்போ அதை செயலில் காண்பியுங்கள்.

BTW ,நான் அவருக்கு சொன்ன வழி , அவர் காட்டிய அட்ரஸ்க்கு நேர் எதிர் வழி. சொல்லிய நேரம் காலை பத்தரை. அப்போது வேளச்சேரி - தரமணி பக்கம்   டிராபிக் எப்படியிருக்கும் என்று உங்களுக்கு சொல்லத்தேவை இல்லை. எனக்கு குற்றவுணர்ச்சியே இல்லை. 
He deserves it.
-------------------------------------------

சட்டசபையில் பல புதுமுகங்கள் இருப்பதால் பார்க்கும் நமக்கு ஒரு அன்னியம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. அதுவும் விஜயகாந்த்,பண்ருட்டி தவிர அருண்பாண்டியன் உள்ளிட்ட தேமுதிக உறுப்பினர்கள் எல்லாரும் freshers .

கடந்த ஒரு மாதமாக கேப்டன் செய்திகள் பார்த்து வந்தேன். மிக விவரமாகத்தான் இருக்கிறார்கள்.அரசுக்கு ஒத்து ஊதும் வேலையை செய்யும்போதும் , நன்றாக பேலன்ஸ் செய்து தலைவரின் இமேஜையும் காப்பாற்றி வருகிறார்கள். நடுநிலை செய்திகள் இதிலும் துளிகூட இல்லை.
சட்டசபையில் திருக்குறள் வாசித்ததும் வெளியேறும் திமுக உறுப்பினர்கள்   நிலைமை பரிதாபம்தான். காரணம் மொத்தம் இருக்கும் இருபது பேர் என்ன கூச்சல் போட முடியும்? அதுவும் ஒரே இடத்தில இடம் ஒதுக்கப்படாமல்  இருக்கும்போது எந்த தைரியத்தில் கத்த முடியும்?

இருந்தாலும் இப்படியே வெளிநடப்பு செய்துகொண்டே இருந்தால் கட்சி  காணாமல் போய்விடும் வாய்ப்பு உண்டு. சரி..எவ்வளவோ சோதனைகளை தாண்டி வந்த சரித்திரம் திமுகவுக்கு உண்டு. இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்று பார்ப்போம்.

ஹ்ம்ம்..எந்த மாதிரியும் இல்லாத புது மாதிரியாக ஒரு சட்டசபை இப்போது.பாப்போம்.

---------------------------------------------

நேரு பிரதமரை  இருந்தபோது கூட்டங்களில் கலந்துகொள்ளும்போது கூடியவரை பத்திரிக்கைகளுக்கு புகைப்பட போஸ் கொடுக்க மறக்க மாட்டார். சிலசமயம் 'நேரு ஒரு விளம்பரப்பிரியர்' என்று பேர் வந்தபோது கூட அதை அவர் நிறுத்தவில்லை.

பிறகு ஒருமுறை இதற்கான காரணம் சொன்னார் -'நாட்டில் எவ்வளவு பேருக்கு படிக்க தெரியும்? எண்ணிக்கை குறைவுதானே..அவர்களுக்கு பத்திரிக்கையில் என் படம் பார்த்தால் நமக்காக அரசு எதோ புதிதாக செய்கிறது என்று நம்பிக்கை வரும் அல்லவா..அதுதான் நோக்கம் ' .தொலைநோக்கான பார்வை.இதைபோல,நம் தற்போதைய  பிரதமர் முதன்முதலாக  ஒரு உருப்படியான காரியம் செய்திருக்கிறார். கண்தானம் செய்திருக்கும் அவரைப் பற்றி அடித்தள மக்களுக்கு தெரியவரும்போது ,கண்டிப்பாக கண்தானம் பற்றி கேள்வி கேட்பார்கள்.விஷயங்கள் புரியும்.நிறைய பேர் அதை பின்பற்றுவார்கள் என்பது உண்மை.

காரணம் ,கிராமத்து மக்கள் ஒரு நல்லதை யாராவது செய்தார் என்று கேள்விப்பட்டால்  தாங்களும் தங்கள் பங்குக்கு செய்யவேண்டும் என்ற வெள்ளந்தி  உள்ளம் உடையவர்கள்.
வாழ்த்துக்கள் சிங். இது தனிச்சையா எடுத்த முடிவுன்னு எதிர்பார்க்கலாம்.  இல்லேன்னா வாழ்த்துக்கள் சோனியா.
---------------------------------------------

திமுகவுக்கு போன தடவ ஓப்பனிங்  நல்லா இருந்துச்சு. ஃபினிஸிங்தான் சரியில்ல.இங்க அதிமுகவுக்கு ஓப்பனிங்கே சரியில்லையே..

இப்போதான் சமச்சீர் கல்வி விசயத்துல அடிவாங்கி பணிஞ்சு போன அரசு , இப்போ அடுத்த திட்டத்திலும் மண்ணை கவ்வ வேண்டியதாயிருச்சு.  அரசு கேபிள் டிவி கொண்டு வந்து நல்லது நடக்கும்னு எதிர்பார்த்த கேபிள்  ஆப்பரேட்டர்கள் இப்போ கதிகலங்கி போயிருக்காங்க.

என்னடா இது கிணறு வெட்ட பூதம் கெளம்புன கதையா இருக்குனு முழிக்க ஆரம்பிச்சு ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதுவும் எல்லாம் டிஜிட்டல்மயமாக இருக்கும்   இந்த காலத்தில் , பொதிகை சேனல் மாதிரி இன்னும் அனலாக் நெட்வொர்க் பக்கம் போகும் அரசு முறையை ,தலையில் அடித்துக்கொண்டு வெறிக்கிறார்கள் ஆப்பரேட்டர்கள்.

போன ஆட்சியில கேபிள் இருந்துது , டிவி இருந்துது , கரண்ட் இல்ல..இந்த ஆட்சியில டிவி மட்டும்தான் இருக்கு - அதுவும் கலைஞர் கொடுத்தது.அப்பப்போ கரண்ட் வருது. கேபிள் வரும்;ஆனா வராதுன்னு ஆயிடுச்சு..

பாவம் நம்ம பெண்கள். சாப்பாடு இல்லாம இருப்பாங்க..சீரியல் இல்லாம இருக்க மாட்டாங்க.ஆம்பளைகளையும் அலட்சியமா நெனச்சிடாதீங்க..அமைதியா இருப்பாங்க..கிரிக்கெட் பாக்க முடியலைனா மட்டும் ,விளைவுகள்  பயங்கரமா இருக்கும்..

 'நான்கு வருஷம் கழித்து வரபோகும் வாக்காள மடையர்களுக்கு இதெல்லாம் ஞாபகம் இருக்கவா   போகிறது?'ன்னு குறுக்குதனமா யோசிக்காதீங்க.. இப்போவே சரி செய்துடுங்க. தாய்குலங்கள் ஓட்டு மிக முக்கியம் அமைச்சரே..
------------------------------------------------------

சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணிக்கு அறிவிக்கப்பட்ட பரிசுதொகை...அடேங்கப்பா - தலா இருபத்தி ஐந்து ஆயிரம் ரூபாய்.
இதுதான் தேசிய விளையாட்டுக்கு , அரசு அளிக்கும் மரியாதையா?

லட்சங்களை போன நூற்றாண்டிலேயே தாண்டி , குறைந்தது அணியில் இடம் மட்டும்  பிடித்தாலே போதும் -கிரிக்கெட் வீரருக்கு கோடிகளை சம்பளமாக  தரும் அரசு , இதர விளையாட்டுகளுக்கு மட்டும் ஏதோ போனால் போகட்டும் என்று கிள்ளித் தருவது வெட்கப்பட வேண்டிய விஷயம்.


எந்த வீரரும் அந்த பணத்தை வாங்க மறுக்க ,இப்போது அதை ஆறுமுறை உயர்த்தி ஒன்றரை லட்சம் அறிவித்திருக்கிறார்கள். 
கிரிக்கெட் மோகம் என்பது தவறல்ல..அதே சமயம்,  மற்ற விளையாட்டில்  நம் அணியினர் சாதிக்கும்போது அதை பாராட்ட தவறக்கூடாது. எந்த வீரனுக்கும் அங்கீகாரம்தான் முதல் சம்பளம்.

திறமையானவரை  பாராட்டக்கூட வேண்டாம்..ஆனால் கண்டிப்பாக அவமானப்படுத்த கூடாது.. 
மற்றவர்கள் எப்படியோ போகட்டும்.. நாம் குறைந்தது நம் பாராட்டுகளை ஃபேஸ்புக்கிலாவது  பகிரலாமே...யோசியுங்கள்..
-------------------------------------------

வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்..அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால் எந்த வண்டி ஓடும் ?

அற்புதம் கண்ணதாசா..  காலம் தாண்டி நிற்கும் கவிஞன்...


-------------------------------------------------

Wednesday, September 7, 2011

மங்காத்தா - A well deserved 50*

இது புதுகதைன்னு யாரும் கண்டிப்பா சொல்ல முடியாது. அதுவும் அடித்தட்டு தமிழ் ரசிகன் கூட குறைஞ்சபட்சம் டப் செய்யப்பட ஹாலிவுட் படத்தை பார்த்து தன்னோட பார்வைய விலாசமாகிட்ட இந்த காலகட்டத்துல , இது மாதிரி ஒரு திருப்பமான கதை வந்ததே இல்லைன்னு சொல்லமுடியாது..தமிழுக்கு இது கொஞ்சம் புதுசு.அவ்வளவுதான்.அதுக்காக Italian Job , Inside Man மாதிரி  இப்படி ஒரு பாங்க்  ராபரி கதைல வேகத்தை அப்படியே கொண்டு வந்துடாங்கனு பெருமையும் பட முடியல..இடைல ரெண்டு பாட்டு முதல் பாதியில பொறுமையை சோதிக்க வைக்குது..

அப்புறம் என்ன படத்த காப்பாத்துது..?

அஜித் அஜித் அஜித்

இதுதான் படத்தோட வெற்றி. வேற எதுவும் இல்ல..

கிட்டத்தட்ட ஆறு, ஏழு ஆங்கில படங்களிலிருந்து Copy inspire செய்யப்பட்டு எடுத்த காட்சிகள்-ன்னு  நல்லா தெரிஞ்சாலும்   , யாரும் அதை பெருசா குறை சொல்ல முடியல. காரணம் - அஜித்   

நாலு ஹீரோயின் இந்த படத்துக்கு எதுக்கு..அதுவும் அஞ்சலி , ஆண்ட்ரியா தேவையே இல்ல.. வெறும் ஸ்டார் வேல்யுக்காக  இத்தனை பேரை கதைக்குள்ள டைரக்டர்  எறக்கியிருக்காருன்னு  படத்த கோவிச்சிக்க  முடியல. காரணம் - அஜித்.

 ஹீரோ நடுத்தர வயசு , அதுவும் கெட்டவன் , முடியெல்லாம் நரைச்சு தனக்கு வயசு நாப்பது ஆகபோகுதுன்னு அவனே சொல்றான், பஞ்ச் டயலாக் எதுவுமே இல்ல , ஹீரோயினோட கடைசியா சேரவே  இல்ல..கிளைமாக்ஸ்ல போலீஸ்கிட்ட செமத்தியா அடி வாங்குறான்  ..  ஹீரோ எப்படி இருக்கணுமோ அப்படி எந்த  இலக்கணமும் இந்த படத்துல ஹீரோவுக்கு இல்ல.. என்னடா தமிழ் படம் எடுத்துருக்கீங்கன்னு சத்தம் போட முடியல .. 
காரணம் - அஜித்.

அட..அதான் கதைக்கு சப்டைட்டில் கூட-'Strictly No Rules' .

எம்ஜீஆர் கெட்டவரா நடிச்சா மக்கள் ஏத்துக்கமாட்டாங்க .. சிவாஜி டான்ஸ் ஆடி , சண்டை போட்டா கண்டிப்பா எடுபடாது. அடுத்து வந்த ரஜினி இது ரெண்டையும் செஞ்சு சூப்பர் ஸ்டார் ஆனாரு. ( கமல் பாதை வேற.அவர இங்க சேர்க்க வேண்டாம்). ரஜினிக்கு அப்புறம் அந்த வித்தை ஒருத்தருக்கு கைவந்து ,அத மக்களும் ரசிக்கறாங்கன்னா அது அஜித் தான்.

இல்லைனா வாலியும்,அமர்க்களமும் , அட்டகாசம் வெள்ளைசட்டையும்
ஃப்ளாப் ஆகி  படுத்துருக்கும். பில்லா ரீமேக் பண்ண யாரும் இருக்க  மாட்டாங்க..
முகவரியும் கொடுப்பாரு; தீனாவும் கொடுப்பாரு; ரெண்டுக்கும்  கனகட்சிதமா  பொருந்துற முகம்.'Good Cop Bad Cop'
விஷயத்தை அழகா நடிப்புல கொண்டுவர  ஒரு ஹீரோவ சரியா  பயன்படுத்துனா, லாஜிக் முன்னபின்ன இருந்தாலும் படம்
கண்டிப்பா  கல்லா கட்டும்னு முதல நிருபிச்சவர் ஷங்கர் - படம் சிவாஜி.அடுத்து அதை அழகா கையாண்டிருக்கார் வெங்கட்பிரபு.

வெள்ளை கட்டம்போட்ட நீல சட்டை. மேக்கப் இல்லாத , கருப்பு வெள்ளை கலந்த முடி. நரைத்த தாடி. ஒரு சராசரி , அதிக பில்டப் இல்லாத ஆனா ஆண்மைத்தனமான கேரக்டர் . அதிகபடியா அப்பப்போ கூலிங் கிளாஸ்.வெகு அலட்சியமா தம் அடிச்சிட்டே பேசுற வசனம்-ன்னு தனி ஆவர்த்தனம் பண்ணிருக்கார் அஜித்.

அர்ஜுன் இருந்தாலும் உண்மையான ஆக்சன் கிங் அஜித் தான். தண்ணியடிச்சிட்டு அடுத்த நாள் தலைய பிடிச்சிட்டு 'இனி மேல  சத்தியமா தண்ணி அடிக்க கூடாது'ன்னு புலம்புவதிலிருந்து , வெகு கத்தலா  'இது என் கேம். நான்தான் ஓவர்னு சொல்லுவேன்'ன்னு   போனில் வெளுத்துகட்டுவதிலிருந்து ,காரிலிருந்து வெகு ஸ்டைலாக ஜெயப்ரகாஷை தள்ளிவிடும்வரை  பாவனைகளின் அத்தனை பௌண்டரியையும்  தொட்டிருக்கிறார் அஜித்.இந்த படம் வேறு யாரை வைத்து எடுத்திருந்தாலும் முதல் நாளே தியேட்டரை விட்டு ஓடியிருக்கும்.இப்போதோ படம் இமாலய வெற்றி - உபயம் அஜித் .
விஜய் ரசிகர்களும் மனசார பாராட்டும் படம்.

வெங்கட்பிரபு நிச்சயம் ஒரு ரவுண்ட் வருவார்.ஆனால் அவர் சிரிப்பு மூட்ட  வழக்கமாக செய்யும் ஃபார்முலா  போர் அடிக்க ஆரம்பிச்சிருச்சு. இந்த படத்திற்கு பெரிய திருஷ்டிபொட்டு பிரேம்ஜி அமரன். தம்பியை கொஞ்சம் அடக்கி வாசிக்க வைச்சு  , அவருக்கு வீணா கொடுக்கும் பில்டப்பை ஒதுக்கி வைச்சு  அடுத்த படம் கொடுக்கலைனா வெங்கட்பிரபு மறுபடியும் நடிக்க வரும் ஆபத்து  ரசிகர்களுக்கு இருக்கு. பார்த்துகோங்க.
தம்பிக்காக காமெடிக்கு
மெனக்கெடரத விட்டுதொலைங்க..எங்களுக்கு இப்போ அவர பாத்தா சத்தியமா சிரிப்பு வரல..

மத்தபடி நீங்க எங்க இருந்தோ கதைய கொண்டு வந்து ரசிகர்களை ரசிக்க வைச்சாலும் 'Spicing it UP' வித்தை உங்களுக்கு நல்லா வருது.வாழ்த்துக்கள்.


தன் கூட்டாளிகளை எதிரிகள் தியேட்டர் வாசலில் சுத்தி  வளைச்சு  நிற்கும்போது,  ஜெயப்ரகாஷ் பின்னால் மெதுவா துப்பாக்கியோடு நடந்து வந்து கை தூக்கி அஜித் சிரிக்கும்போது , விசில் சத்தமும் 'தல' கூச்சலும் காதை பிளக்குது..

மங்காத்தா பேருக்கான அர்தத்த கடைசியா தெரிய வரும்போது கைதட்டல் தெறிக்குது..

ஆக , அத்தனை பேர் இருந்தாலும் , படம் முழுக்க தெரிவது அஜித் தான்.எல்லா பாவத்தையும்  கங்கை கொண்டுபோவது மாதிரி , படத்தோட எல்லா குறையையும் அஜித்தோட அசத்தல் நடிப்பு & இமேஜ்  தட்டிட்டு போய்டுச்சு.

மங்காத்தா - அஜித்தின் 'சிவாஜி'..  

Monday, September 5, 2011

மூன்றாம் கடவுள் தினம்

ஆசிரியர்கள் தினமாக செப்டம்பர் ஐந்தை அப்போதுதான் அறிவித்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. ஒரு கல்லூரியில் அந்த நாளை கொண்டாட ,விழா ஏற்பாடு செய்து ,அங்கே  பணி புரிந்த  விரிவுரையாளர்களை பேச அழைத்தனர். எல்லாரும் ஆசிரியர் தின பெருமையைப் பற்றி விலாவரியாக பேச,
 சந்திர  மோகன்  ஜெயின்  என்னும் ஒருவர் மட்டும் தன் முறை வந்ததும் இப்படி சொன்னார்:

'ஒரு ஆசிரியராக இருந்து   , அதை விட்டு விலகி ஜனாதிபதியாக பொறுப்பேற்றுகொண்ட ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை  ஆசிரியர்கள் தினமாக கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.ஒரு வேளை அவர் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு , மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்பினால், அவர் திரும்பிய அந்த நாளை  ஆசிரியர்கள் தினமாக  வெகு சிறப்பாக கொண்டாடலாம்' என்று பொட்டில் அடித்ததுபோல் சொல்லிவிட்டு சென்றார்.

பின்னாளில் அந்த சந்திர  மோகன்  ஜெயின்  , மக்களால் ஓஷோ என்று கொண்டாடபட்டார்.
-----------------------------------

திலகர் காலத்தில் சுதந்திரம் கிடைப்பதற்கான சாத்தியகூறுகள் அதிகம் இருந்தன.அப்போது அவரை அணுகிய நண்பர்கள் , சுதந்திர இந்தியாவில் அவர் வகிக்க விரும்பும் பதவியைப் பற்றி நிறைய ஆலோசனைகள் கூறியபடி இருந்தனர். சிலர் , அவரை ஜனாதிபதியாக வேண்டும் என்றும் , சிலர் பிரதமமந்திரி ஆக வேண்டும் என்றும் சொல்ல , திலகர் கொஞ்சங்கூட  தயங்காமல் சொன்ன பதில்:

'நான் ஏன் பிரதமமந்திரி ஆக வேண்டும்? நான் மீண்டும் என் ஆசிரியர் பணிக்கு செல்வேன்.. நூறு பிரதமர்களை உருவாக்குவேன்..'
-------------------------------------

நீங்கள் ஓஷோவை ஆதரிக்கிறீர்களோ ,அல்ல திலகர் வழியை  பின்பற்றுகிறீர்களோ எதுவும் தவறில்லை. ஆனால் எந்த துறை
வல்லுனரையும் உருவாக்கும் ஆசிரியர் இனத்தை வாழ்த்த ,
அவர்களுக்கு நன்றி செலுத்த வருடத்தில் ஒரு நாள்,அது எந்த நாளாக இருந்தாலும் சரி, ஒதுக்குவது மிக முக்கியம்.

உலகறிந்த பெரியவர்களைத் தவிர, என் வாழ்க்கையில் நான் சந்தித்த  யாரையும் முன்மாதிரியாய் நினைத்து முன்னேற இயலவில்லை.ஆனால் ஒரு சிலர் நாம் நினைவுப்படுத்தாமலேயே , நம் மனதில் அவ்வப்போது வந்து நமக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துவார்கள். அதில் கண்டிப்பாக நமக்கு ஆசிரியராய் இருந்த  ஒருவராவது இருப்பார்.அப்படி இல்லையென்றால் நீங்கள் 
அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று அர்த்தம். நானும் கிட்டத்தட்ட அப்படிதான் , அவரை சந்திக்கும் வரை.
பதினோராவது வகுப்பு தொடங்கியபோது , புதிதாக எங்கள் பள்ளிக்கு வந்து சேர்ந்தார் முத்துகுமாரசாமி - பௌதீக ஆசிரியர் .MKS என்று சுருக்கி கூப்பிட சொன்னார்.

எல்லாரும் ஆசிரியர் பணி என்ன  என்பதில்  மிக சரியான ஒரு தவறான அபிப்ராயம் வைத்திருக்கிறோம்.பாடம் சொல்லிக் கொடுப்பவன்தான்  வாத்தியார் என்று.  அல்ல. வாழக் கற்றுக்கொடுப்பவன்தான் உண்மையான குரு. MKS  இரண்டாம் வகை.

எதற்கும் வளைந்துகொடுக்காத தைரியம். நேராக கண்ணை ஊடுருவி மனதைப்  படிக்கும் பார்வை.  
யாரையும் அடிக்க தேவையில்லை - வெறும் எச்சரிக்கையில் மட்டுமே மாணவனின் தவறை ஒத்துக்கொள்ள வைத்து விடும் கண்ணியம். இதுதான் MKS.

வகுப்பில் யாரையும் கண்டிக்க மாட்டார்.அத்தனை பேர் முன்னிலும் அவமானபடுத்தமாட்டார்.அதிகமாக போனால் அவரின் கோபத்தின்  உச்சக்கட்டம் 'Quit the hall'லில் முடியும். தனியாக அழைத்து தவறை சொல்லி  திருத்துவார்.திருந்த வேண்டும்.இல்லையென்றால் கண்டிப்பாக திருத்துவார்.  

பாடம் நடத்தும்போது புத்தகம் அவர் கையில் என்றுமே இருந்ததில்லை. வெறுங்கையை வீசி வகுப்புக்கு வரும் ஒரே வாத்தியார் அவர்தான். அவர் நடத்துவதை ஒரு முறை கவனித்தால் , கண்டிப்பாக புத்தகத்தை மறுபடியும் மேயத்தேவை இல்லை.

'Be Black or White' என்பதற்கு மிக சிறந்த உதாரணம். எந்த சூழ்நிலையில் எப்படி இருக்க  வேண்டும் என்பது அவருக்கு தெரியும்.மார்க் எடுக்கவில்லை என்றால் வார்த்தையாலேயே  புரட்டி எடுப்பவர் ,  மாணவர்கள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு 
 சுற்றுலா கூட்டிச்சென்று  கூடப்படிக்கும்   மாணவன் போல் விளையாடுவார்.

புத்தகத்திற்கு அட்டை போடாமல் கந்தலாக வைத்திருக்கும் மாணவனைப் பளார் என்று அறையும் ஆசிரியர் மத்தியில் , அவர் புன்னகையுடனே இப்படி சொன்னார் - 'எவ்வளோ அழகான பையன் நீ. புத்தகத்தையும் அதே மாதிரி வெச்சா நல்லா இருக்கும் இல்ல..?' . அடுத்த நாள் புத்தகம் பளீர்.

மொழிபாடங்களிலும், கணிதத்திலும் நல்ல மதிப்பெண் எடுக்கும் நான் இயற்பியலிலும் , பௌதீகத்திலும் ஒரு சுமார் ரகம்தான்.காரணம் எனக்கு பிடிக்காத பாடத்தில்,  ஆர்வம் இல்லாமல் எதோ படிக்கவேண்டுமே என்று காட்டிய மெத்தனம்.

என் விஷயத்தில் அவர் முடிவெடுக்க சிரமபட்டார். மோசமான மாணவன்  என்று  முடிவெடுக்கவும் முடியவில்லை அதே சமயம் அவர் பாடத்தில் மட்டும் அக்கறை காட்டாமல் இருப்பவனை விடவும்  முடியவில்லை. ஒருநாள் மிக வருந்தி என்னை அழைத்து சொன்னார் - ' நல்லா படிக்கிறவன் நீ. ஆனா பிடிக்காதத,  வலுக்கட்டாயமா படிக்க சோம்பேறித்தனம்.உன் விருப்புவெறுப்பை பாடத்துல காட்டக்கூடாது. பின்னால வருத்தபடுவ.போ' .

அவர் சொன்ன பின்னால , ரிசல்ட் வரும்போது வந்தது. பௌதீகத்தில் மட்டும் ஒரு முப்பது குறைந்து என் இஞ்சினீரிங் கட்-ஆப் மார்க்கில்  ஓரளவு நல்ல அடி. மெரிட் சீட் கிடைக்க விடாமல் தடுத்தது ,அவர் சுட்டிக்காட்டிய என் மெத்தனம்.வருத்தப்பட்டேன்.

வெறும் மனப்பாடம் செய்வது அவருக்கு பிடிக்காது. அந்த விஷயத்தில் மதிப்பெண் என்ன எடுத்தாலும் பாராட்ட மாட்டார். புரிதல்தான் அவர் இலக்கு. டியுசன் எடுக்கும்போது செருப்பு அணிந்து பாடம் நடத்த மாட்டார். அவர் வீடு திருவிழா போல் வண்டிகளால் சூழப்பட்டிருக்கும்.அவர் சோர்வாக இருந்து நான் பார்த்ததில்லை.

 ஒரு கல் , ஆணி, பை, சாக்பீஸ் என எது கையில் கிடைத்தாலும் அதை வைத்து அழகாக ,சொல்லவேண்டிய விஷயத்தை விளக்குவார்.ஒருமுறை , ப்யூஸ் போன ட்யுப்லைட்டை கரண்ட் கம்பத்தில் போகும் வயர்கள் அருகில் பிடித்தால் அது எரியும் என்று அவர் சொல்ல , கிட்டத்தட்ட இருபது பேர் ஏழு , எட்டு ட்யுப்லைட்களை இரவில் அப்படி செய்து பார்த்து ஏதோ நாங்களே அந்த உண்மையை கண்டுபிடித்த மாதிரி சத்தம் போட்டு அக்கம்பக்கம் இருப்பவர்கள் துரத்தும் வரை  சந்தோசத்தை கொண்டாடினோம். 

வசதி குறைந்த மாணவர்களிடம் அவர் எந்த கட்டணமும் வாங்கியதில்லை. அதையும் அவரால் உதவிபெற்ற  மாணவன் ஒருவன் சொல்லித்தான் எனக்கு தெரியும். 

அவரை பொறுத்தவரை நான் அவரிடம் பயின்ற மாணவரில் ஒருவன். என்னை சரியாக நினைவு வைத்திருப்பாரா என்பது சந்தேகமே.இல்லையென்றாலும்  தவறில்லை.நினைவில் வைக்கும் அளவுக்கு நான் அவருக்கு எந்த பெருமையையும் தந்ததில்லை.பதினோரு வருடம் கடந்தாயிற்று.இன்று வரை எதை செய்தாலும் ஒரு ஒழுங்கும்,அக்கறையும்,சரியாக செய்தால் எவருக்கும் பயப்படத் தேவையில்லை என்ற தைரியமும் கொண்டிருப்பது அவரிடம் கற்ற பாடம்தான்.எதிலும் Practical அணுகுமுறை என்பது அவர் சொல்லிகொடுத்த மிகபெரிய மந்திரம்.

நான் கடைபிடிக்கும் வாழ்க்கைமுறை யாராவது பாரட்டும்படியிருந்தால் அந்த பாராட்டு அவருக்கே சேரும். அவர் வாழும்முறையை பார்த்தே அதை மிகத்தெளிவாக  கற்றுக்கொண்டேன். அவரிடம் இதுவரை நான் சரியாக கற்றுகொள்ளாதது..வேறென்ன? பௌதீகம்தான்.

இப்படி எத்தனையோ ஆசிரியர்கள் , நம்மை வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள்.படிக்கும் காலத்தில் அவர்களை , அவர்களின்  கட்டுபாடுகள் நமக்கு பிடிக்காமல் போனாலும் காலம் தாண்டியும் நாம் அவர்களுக்கு கட்டுப்பட்டுள்ளோம்.

இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்.