Saturday, November 10, 2012

தீபாவளி

டிஸ்கி - கொஞ்சம் பெரிய பதிவு.

என் பள்ளி நாட்கள் வரை தீபாவளி என்பது வருடத்துக்கு ஒரு முறை
மலரும் ஒரு தெய்வீக காதல் போல். ஒரு மாதம் முன்பிலிருந்தே ஒன்றிலிருந்து முப்பது வரை ஒரு பேப்பரில் எழுதி ஒவ்வொரு நாளாக அடித்துவிட்டு 'இன்னும் 24 நாள் இருக்கு ' 'இன்னும் 17 நாள் இருக்கு ' என்று காலையில் தொடங்கும் என் நாட்கள் , பண்டிகைக்கு பத்து நாள் முதலிருந்து அடுத்த கட்ட விறுவிறுப்புக்கு போகும்.காரணம் - பட்டாசு.
எதிர் வீட்டு பிரபு அண்ணன்,பக்கத்துக்கு வீட்டு ஆனந்த் , அதற்கடுத்த வீட்டு ரவி,ராஜா சகோதரர்கள் என்ற பட்டாளம் நட்பை மறந்து ஒரு போட்டி மனப்பான்மையோடு முறைத்துக் கொண்டு அலையும் நாட்கள் அவை.காரணம் - பட்டாசு.

சிந்தாமணியில் போய் முதல் கட்ட பரிவர்த்தனையை ஆரம்பித்து வைத்தால் ,தீபாவளிக்கு மூன்று நாள் முன்னரே அனைத்தையும் வெடித்து தீர்த்து விடும் அபாயம் உண்டு என்பதால் அப்பா வேறு ஒரு யோசனையை , நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது செய்ய ஆரம்பித்தார்.

கூட வேலை பார்க்கும் அனைவரிடமும் என்ன விதமான பட்டாசுகள் தேவை என கேட்டு , சிவகாசிக்கு ஆள் அனுப்பி மொத்தமாக வரவழைத்து வீட்டில் வைப்பார்.சரியாக பண்டிகைக்கு ஐந்து நாள் முன்னாடிதான் அந்த பெரிய 'மங்காத்தா' பணப்பெட்டி அளவுக்கு பெரியதாய் இருக்கும் பட்டாசு பெட்டியை பிரிக்க ஆரம்பிப்பார். கூட உதவிக்கு மூன்று பேர். இம்சைக்கு நான்.

எல்லாரும் கொடுத்திருக்கும் லிஸ்டை எடுத்து ஒவ்வொன்றாக படித்து , அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பெட்டியில் பட்டாசுகளை நிரப்ப வேண்டும்.
உதவிக்கு என வந்தாலும் எல்லாரும் அமர்ந்துகொண்டு 'அதுல ஒன்னு எடுத்து அவங்க பாக்ஸ்ல போடு ; இந்த பாக்ஸ்ல ரெண்டு கலர் மத்தாப்பு' என என்னை வேலை வாங்கினாலும் எனக்கு அது அலுப்பாகவே இருக்காது.

எல்லாருக்கும் ஒரு பெட்டி என்றால் எங்கள் வீட்டுக்கு மட்டும் இரண்டு பெட்டி. எனக்கொன்று ; என் அக்காவுக்கு ஒன்று.காரணம் எனது முந்தைய தீபாவளி காலத்தில் நடந்த ஊழல்கள்தான். மொத்தமாக வாங்கி இதில் பாதி உனக்கு ;பாதி எனக்கு என்று மிக நியாயமாக தொகுதி பங்கீடு செய்தாலும் , கூட்டணி தர்மத்தை
துச்சமென மதித்து , அக்கா வீட்டில் இல்லாத
போது கொஞ்சத்தை எடுத்து ,ஓரிரு நாளில் ஏறக்குறைய முழுதும்
என் பொக்கிஷ குவியலில் இருக்கும்.
ஆகவே என் வீட்டுக்கு இரண்டு பெட்டி பட்டாசுகள் என்பது எழுதபடாத விதியாய் இருந்தது.

ஆனாலும் தீபாவளி அன்று மாஸ்டர் பிளான் செய்து , அக்கா நான்கைந்து வெடி வெடித்ததும் , பக்கத்தில் அலறும்படி ஒரு வெடியை தூக்கிப் போட்டால் ,பயந்து போய் ' எல்லாத்தையும் நீயே வெடிச்சு தொலைடா' என உள்ளே ஓடி விடுவாள்.திரியைக் கிள்ளி தரும் பொறுப்பு அப்பாவுக்கு.



எல்லா வருடமும் என் லிஸ்ட்தான் பெரியதாய் இருக்கும் என்றாலும் , எந்த பெட்டியைப் பார்த்தாலும் பொறாமையாகவும் , இந்த பெட்டி என்னுடையதை விட பெரிதாக இருக்கிறதே என்ற அவநம்பிக்கையும் இருக்கும். ஆனால் அப்பா கூட வேலை பார்க்கும் எல்லாருக்கும் வீட்டில் பெண் குழந்தைகள்தான் என்பதனால் வெறும் சங்கு சக்கரம்,பூவாணம் , மத்தாப்பு போன்ற காந்தியவாதி பட்டாசுகளாக இருக்கும். அதையெல்லாம் பார்த்து ஏதோ சோலே பட அம்ஜத்கான் போல ஒரு ஏளன சிரிப்பு என்னிடம் பிறக்கும்.

எனக்கெல்லாம் பச்சை
கயிறு இறுக்கி கட்டிய நைட்ரஜன் பாம் , செவென் ஷாட் எனப்படும் எங்கெங்கோ அலைபாய்ந்து வெடிக்கும் இன்னொரு தீவிரவாத வெடி , சரவெடி , லட்சுமி வெடி , நேதாஜி வெடி , இது எல்லாம் போக , என் சொந்த ஊரிலிருந்து சித்தப்பா கொண்டு வந்த ஓலை வெடி , நானும் வீரன்தான் என காண்பிக்க கையில் பற்ற வைத்து தூக்கி போடும் ஊசி வெடி என ஒரு படுபயங்கர வெடிபொருட்கள் லிஸ்டில் இருக்கும்.

பிள்ளையார் சுழி போடுவது ரோல் கேப் மூலம்தான்.அதிலும் ரோல் கேப் துப்பாக்கி எதுவும் ஒரு நாளைக்கு மேல் வராது. பத்து முறை லோட் செய்தால் பதினோராவது தடவை பயன்படாது. அதிகபட்சமாக ஒரு முறை நான்கு துப்பாக்கி வாங்கியிருக்கிறேன். பிறகு எனக்கே மனம் பொறுக்காமல் மீதி கேப்பை சுவற்றில் தேய்த்தும் , வெடிகளுக்கு சுற்றும் டெட்டனேட்டராக பயன்படுத்துவேன்.


வெங்காய வெடி என்கிற மாப்பிளை வெடி அப்போதே தடை செய்யபட்டிருந்தாலும் , எங்களுக்கு எப்படியாவது கிடைக்கும்படி தேவராஜன் கடை அண்ணாச்சி ஏற்பாடு பண்ணியிருப்பார். இப்போதெல்லாம் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. சரியான ரவுடி வெடி.

இது மட்டும் வைத்து சமர்த்தாக வெடிக்கும் ரகம் அல்ல எங்கள் கோஷ்டி. பாம் என்றால் அது எவ்வளவு சத்தமாக, விதவிதமாக வெடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய தயாராய் இருக்கும் தன்மானபடை. வெயிட்டான பொருள் எது சிக்கினாலும் , அதற்கு அடியில் வெடி வைப்பது , பத்தியை அழகாக வெட்டி , வெடியுடன் சேர்த்து பற்ற வைத்து ஏறக்குறைய நாட்டு வெடிகுண்டை டைம்பாம் போல ஆக்கி வெடிக்க வைப்பது என பலவிதங்கள்.

இதில் நாங்கள் எல்லை மீறியது எதிலென்றால் , தீபாவளி சமயத்தில் மழை பெய்து தேங்கியிருக்கும் தண்ணீரில் , வெகு பக்குவமாக எதாவது ஒரு காய்ந்த இலையை மிதக்க வைத்து ,அதில் பாம் வைப்பது.
பற்ற வைக்கும்போது கொஞ்சம் அதிர்ந்தாலும் வெடி தண்ணீரில் மூழ்கி செயலிழந்து விடும் அபாயம் இருப்பதால் , எந்த யோகாவும் , ப்ராணயாமாவும் கற்றுகொள்ளாமலேயே மூச்சை முறைபடுத்தி ஒரு பட்டாம்பூச்சி அமர்வது போல் பற்ற வைத்து ஓடி வருவோம்.

இந்த சின்ன வயதில் , இந்த செயற்கரிய செயலை பாராட்டாமல், பெருசுகள் எதோ அந்த பக்கம் சரியாக வெடி வெடிக்கும்போது வந்து சட்டையை சேறாக்கி கொண்டு , எதோ நாங்கள்தான் தப்பு செய்த மாதிரி
' உங்க பையன் என் தீபாளி சட்டைய என்ன பண்ணிருக்கானு பாருங்க ' என வீட்டில் பற்ற வைத்து விடுவார்கள். பிறகு பண்டிகை நாளில் என் முதுகில் வெடி வெடிக்கும்.

ஒரு வழியாக எல்லா பட்டாசையும் வெடித்து , பிறகு இரவானதும் , ராக்கெட் , பூவாணம் , சங்கு சக்கரம் என ஒரு ரவுண்ட் வந்து அதையும் முடித்து , பாம்பு பட்டாசு புகையை முடித்து கொண்டு , எல்லா பசங்களும் ஆயுதம் தீந்த போர்வீரர்கள் மாதிரி நிராயுதபாணி ஆக நிற்போம். (நிற்க;கார்த்திகை பட்டாசு கோட்டா தனி.)

பிறகு வெடித்த எல்லா பட்டாசையும் மொத்தமாக ஓரிடத்தில் கொட்டி , நெருப்பு மூட்டி அதில் வரும் வண்ண வண்ண புகைகளை ரசித்த பிறகே எங்கள் போர் குணம் தணியும். இருந்தாலும் எங்கள் தினவெடுத்த தோள்களுக்கு இன்னும் வெடி தேவை என்று பரிதாபமாக யாரை பார்த்தாலும் , எல்லாரிடமும் சொல்லி வைத்ததுபோல் ஒரு ஏளன புன்னகை தோன்றும் ' கொஞ்சமாடா ஆடுனீங்க..இனி என்னடா பண்ணுவீங்க ? ' என்பதுபோல்.

அடுத்த நாள் எந்த வீட்டுக்கு முன்னால் பட்டாசு குப்பை அதிகமாக இருக்கிறதோ அங்கு எதாவது ஒரு வாண்டு இருக்கிறது என்று அர்த்தம்.

கால மாற்றத்தில் எது மாறினாலும் , தீபாவளி நாளின் பரபரப்பு மட்டும் மாறாமல் இருக்கிறது. இப்போதும் ஊருக்கு சென்று எங்கள் வீதியை பார்த்தால் புதிய கோஷ்டி ஒன்று நாங்கள் செய்த அதையே திரும்ப அனுபவித்து செய்து கொண்டிருப்பது தெரிகிறது.ஆனால் எனக்கு இப்போதெல்லாம் வெடி வெடிக்க பயம் ஏற்பட்டுள்ளதை ஒத்துக்கொள்ள வேண்டும். அக்கா பையன் ரோல்கேப் வெடித்தாலே கண்ணை முடிகொள்ளும் பய உணர்ச்சி வந்து விட்டது. என்ன காரணமோ?

ஆனாலும் குடும்பத்துடன் ஒன்றாய் இருப்பது , மகிழ்ச்சியாய் கொண்டாடுவது என தீபாவளியின் தனிச்சிறப்பு மாறவில்லை.டிவி சேனல்களின் பிடிகளில் சிக்காமல் அந்த நல்ல நாளை காப்பாற்றுவது நம் பொறுப்பு.
அன்றைக்கு ரிலீஸ் ஆகும் படத்தை கூட வேறொரு நாள் பார்த்துக்கொள்ளலாம். குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடும் சந்தோசம் வேறு நாள் கிடைக்காது.

வேலையில் மூழ்கி, பொறுப்புகளில் சிக்கிக்கொண்டு ,எப்போதும் முகத்தில் ஒரு கண்டிப்பை போலியாய் காட்டிகொண்டு , கண்டம் தாண்டி வாழ்ந்து வரும் இந்த சமயத்தில் , எல்லாரும் ஊரில் தீபாவளி கொண்டாடி அதை படம் எடுத்து அனுப்புகிறோம் என்று சொன்னாலும் ,அது முழு சந்தோசத்தை கொடுக்காது என்பது நிதர்சனம்.

எப்போதும் தீபாவளி பின்னிரவில் ,அப்பாவை கட்டிக்கொண்டு ஏக்கமாய் கேட்கும் கேள்வி ஞாபகத்துக்கு வருகிறது - 'அடுத்த தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்குப்பா?' .

அதிக நாள் ஆகும் என்று தெரிந்திருந்தாலும் , அவர் அன்பாக அணைத்துக்கொண்டு , 'சீக்கிரமா வந்திரும்ப்பா ' என்று சொல்லும் ஆறுதலுக்கு மயங்கும் அந்த கணம் கவிதை.

ஹ்ம்ம் ..குழந்தையாகவே இருந்திருக்கலாமோ?