Wednesday, October 26, 2011

தீபாவளி

டிஸ்கி - கொஞ்சம் பெரிய பதிவு.  

என் பள்ளி நாட்கள் வரை தீபாவளி என்பது வருடத்துக்கு ஒரு முறை
மலரும்  ஒரு தெய்வீக காதல் போல். ஒரு மாதம் முன்பிலிருந்தே ஒன்றிலிருந்து முப்பது வரை ஒரு பேப்பரில் எழுதி ஒவ்வொரு நாளாக அடித்துவிட்டு 'இன்னும் 24  நாள் இருக்கு ' 'இன்னும் 17  நாள் இருக்கு ' என்று காலையில்   தொடங்கும் என் நாட்கள் , பண்டிகைக்கு பத்து நாள் முதலிருந்து அடுத்த கட்ட விறுவிறுப்புக்கு போகும்.காரணம் - பட்டாசு.
 
 
எதிர் வீட்டு பிரபு அண்ணன்,பக்கத்துக்கு வீட்டு ஆனந்த் , அதற்கடுத்த வீட்டு ரவி,ராஜா  சகோதரர்கள்  என்ற பட்டாளம் நட்பை மறந்து ஒரு போட்டி மனப்பான்மையோடு  முறைத்துக் கொண்டு அலையும் நாட்கள் அவை.காரணம் - பட்டாசு.

சிந்தாமணியில் போய் முதல் கட்ட பரிவர்த்தனையை ஆரம்பித்து வைத்தால்  ,தீபாவளிக்கு மூன்று நாள் முன்னரே அனைத்தையும் வெடித்து  தீர்த்து விடும்  அபாயம் உண்டு என்பதால் அப்பா  வேறு ஒரு யோசனையை , நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது செய்ய ஆரம்பித்தார்.

 கூட வேலை பார்க்கும் அனைவரிடமும் என்ன விதமான பட்டாசுகள் தேவை என கேட்டு , சிவகாசிக்கு ஆள் அனுப்பி மொத்தமாக வரவழைத்து வீட்டில் வைப்பார்.சரியாக பண்டிகைக்கு ஐந்து நாள் முன்னாடிதான் அந்த பெரிய 'மங்காத்தா' பணப்பெட்டி அளவுக்கு பெரியதாய் இருக்கும் பட்டாசு பெட்டியை பிரிக்க ஆரம்பிப்பார். கூட உதவிக்கு மூன்று பேர். இம்சைக்கு  நான்.

எல்லாரும் கொடுத்திருக்கும் லிஸ்டை எடுத்து ஒவ்வொன்றாக படித்து , அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பெட்டியில் பட்டாசுகளை நிரப்ப வேண்டும்.
உதவிக்கு என வந்தாலும் எல்லாரும் அமர்ந்துகொண்டு 'அதுல ஒன்னு எடுத்து அவங்க பாக்ஸ்ல போடு ; இந்த பாக்ஸ்ல ரெண்டு கலர் மத்தாப்பு' என என்னை வேலை வாங்கினாலும் எனக்கு அது அலுப்பாகவே  இருக்காது.

எல்லாருக்கும் ஒரு பெட்டி என்றால் எங்கள் வீட்டுக்கு மட்டும் இரண்டு பெட்டி. எனக்கொன்று ; என் அக்காவுக்கு ஒன்று.காரணம் எனது முந்தைய தீபாவளி காலத்தில் நடந்த ஊழல்கள்தான். மொத்தமாக வாங்கி இதில் பாதி உனக்கு ;பாதி எனக்கு என்று மிக நியாயமாக தொகுதி பங்கீடு செய்தாலும் , கூட்டணி தர்மத்தை 
துச்சமென  மதித்து , அக்கா வீட்டில் இல்லாத
போது கொஞ்சத்தை எடுத்து ,ஓரிரு நாளில்  ஏறக்குறைய முழுதும்
என் பொக்கிஷ குவியலில் இருக்கும்.
ஆகவே என் வீட்டுக்கு இரண்டு பெட்டி பட்டாசுகள் என்பது எழுதபடாத விதியாய் இருந்தது.

ஆனாலும் தீபாவளி அன்று மாஸ்டர் பிளான்  செய்து , அக்கா நான்கைந்து வெடி வெடித்ததும் , பக்கத்தில் அலறும்படி ஒரு வெடியை தூக்கிப் போட்டால் ,பயந்து போய் ' எல்லாத்தையும் நீயே வெடிச்சு தொலைடா'  என  உள்ளே ஓடி விடுவாள்.திரியைக் கிள்ளி தரும் பொறுப்பு அப்பாவுக்கு.



எல்லா வருடமும் என் லிஸ்ட்தான் பெரியதாய் இருக்கும் என்றாலும் , எந்த பெட்டியைப் பார்த்தாலும் பொறாமையாகவும் , இந்த பெட்டி  என்னுடையதை விட பெரிதாக இருக்கிறதே என்ற அவநம்பிக்கையும் இருக்கும். ஆனால் அப்பா கூட வேலை பார்க்கும் எல்லாருக்கும் வீட்டில் பெண் குழந்தைகள்தான் என்பதனால் வெறும் சங்கு சக்கரம்,பூவாணம் , மத்தாப்பு போன்ற காந்தியவாதி பட்டாசுகளாக இருக்கும். அதையெல்லாம் பார்த்து ஏதோ சோலே பட அம்ஜத்கான் போல ஒரு ஏளன சிரிப்பு என்னிடம் பிறக்கும்.

எனக்கெல்லாம் பச்சை
கயிறு  இறுக்கி கட்டிய நைட்ரஜன் பாம் , செவென் ஷாட் எனப்படும் எங்கெங்கோ அலைபாய்ந்து வெடிக்கும் இன்னொரு தீவிரவாத வெடி , சரவெடி , லட்சுமி வெடி , நேதாஜி வெடி , இது எல்லாம் போக , என் சொந்த ஊரிலிருந்து சித்தப்பா கொண்டு வந்த ஓலை வெடி , நானும் வீரன்தான் என காண்பிக்க கையில் பற்ற வைத்து தூக்கி போடும் ஊசி வெடி என ஒரு படுபயங்கர வெடிபொருட்கள் லிஸ்டில் இருக்கும்.

பிள்ளையார் சுழி போடுவது ரோல் கேப் மூலம்தான்.அதிலும் ரோல் கேப் துப்பாக்கி எதுவும் ஒரு நாளைக்கு மேல் வராது. பத்து முறை லோட் செய்தால் பதினோராவது தடவை பயன்படாது. அதிகபட்சமாக ஒரு முறை  நான்கு துப்பாக்கி வாங்கியிருக்கிறேன். பிறகு எனக்கே மனம் பொறுக்காமல் மீதி கேப்பை   சுவற்றில் தேய்த்தும் , வெடிகளுக்கு சுற்றும் டெட்டனேட்டராக பயன்படுத்துவேன்.


வெங்காய வெடி என்கிற மாப்பிளை  வெடி அப்போதே தடை  செய்யபட்டிருந்தாலும் , எங்களுக்கு எப்படியாவது கிடைக்கும்படி தேவராஜன் கடை அண்ணாச்சி ஏற்பாடு பண்ணியிருப்பார். இப்போதெல்லாம்  கிடைக்கிறதா  என்று தெரியவில்லை.  சரியான ரவுடி வெடி.

இது மட்டும் வைத்து சமர்த்தாக வெடிக்கும் ரகம் அல்ல எங்கள் கோஷ்டி. பாம் என்றால் அது எவ்வளவு சத்தமாக, விதவிதமாக  வெடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய தயாராய் இருக்கும்  தன்மானபடை.  வெயிட்டான பொருள் எது சிக்கினாலும் , அதற்கு அடியில் வெடி வைப்பது , பத்தியை அழகாக வெட்டி , வெடியுடன் சேர்த்து பற்ற வைத்து ஏறக்குறைய நாட்டு வெடிகுண்டை டைம்பாம் போல ஆக்கி வெடிக்க வைப்பது என பலவிதங்கள்.

இதில் நாங்கள் எல்லை மீறியது எதிலென்றால் , தீபாவளி சமயத்தில் மழை பெய்து தேங்கியிருக்கும் தண்ணீரில் , வெகு பக்குவமாக எதாவது ஒரு காய்ந்த இலையை மிதக்க வைத்து ,அதில் பாம் வைப்பது.
பற்ற வைக்கும்போது கொஞ்சம் அதிர்ந்தாலும் வெடி தண்ணீரில் மூழ்கி செயலிழந்து விடும் அபாயம் இருப்பதால் , எந்த யோகாவும் , ப்ராணயாமாவும் கற்றுகொள்ளாமலேயே மூச்சை முறைபடுத்தி ஒரு  பட்டாம்பூச்சி  அமர்வது போல்  பற்ற வைத்து ஓடி வருவோம்.

இந்த சின்ன வயதில் , இந்த செயற்கரிய செயலை பாராட்டாமல், பெருசுகள் எதோ அந்த பக்கம் சரியாக வெடி வெடிக்கும்போது வந்து சட்டையை சேறாக்கி கொண்டு , எதோ நாங்கள்தான் தப்பு செய்த மாதிரி 
' உங்க பையன் என் தீபாளி சட்டைய என்ன பண்ணிருக்கானு பாருங்க ' என வீட்டில் பற்ற வைத்து விடுவார்கள். பிறகு பண்டிகை நாளில் என் முதுகில் வெடி வெடிக்கும்.

ஒரு வழியாக எல்லா பட்டாசையும் வெடித்து , பிறகு இரவானதும் , ராக்கெட் , பூவாணம் , சங்கு சக்கரம் என ஒரு ரவுண்ட் வந்து அதையும் முடித்து , பாம்பு பட்டாசு புகையை முடித்து கொண்டு , எல்லா பசங்களும் ஆயுதம் தீந்த போர்வீரர்கள் மாதிரி நிராயுதபாணி ஆக நிற்போம். (நிற்க;கார்த்திகை  பட்டாசு கோட்டா தனி.)

பிறகு வெடித்த எல்லா பட்டாசையும் மொத்தமாக ஓரிடத்தில் கொட்டி , நெருப்பு மூட்டி அதில் வரும் வண்ண வண்ண புகைகளை ரசித்த பிறகே எங்கள் போர் குணம் தணியும். இருந்தாலும் எங்கள் தினவெடுத்த தோள்களுக்கு இன்னும் வெடி தேவை என்று பரிதாபமாக யாரை பார்த்தாலும் , எல்லாரிடமும் சொல்லி வைத்ததுபோல் ஒரு ஏளன புன்னகை தோன்றும் ' கொஞ்சமாடா ஆடுனீங்க..இனி என்னடா பண்ணுவீங்க ? ' என்பதுபோல்.

அடுத்த நாள் எந்த வீட்டுக்கு முன்னால் பட்டாசு குப்பை அதிகமாக இருக்கிறதோ அங்கு எதாவது ஒரு வாண்டு இருக்கிறது என்று அர்த்தம்.

கால மாற்றத்தில் எது மாறினாலும் , தீபாவளி நாளின் பரபரப்பு மட்டும் மாறாமல் இருக்கிறது. இப்போதும் ஊருக்கு சென்று எங்கள் வீதியை பார்த்தால் புதிய கோஷ்டி ஒன்று நாங்கள் செய்த அதையே திரும்ப அனுபவித்து செய்து கொண்டிருப்பது தெரிகிறது.ஆனால் எனக்கு இப்போதெல்லாம் வெடி வெடிக்க பயம் ஏற்பட்டுள்ளதை ஒத்துக்கொள்ள வேண்டும். அக்கா பையன் ரோல்கேப் வெடித்தாலே கண்ணை முடிகொள்ளும் பய உணர்ச்சி வந்து விட்டது. என்ன காரணமோ?

ஆனாலும் குடும்பத்துடன் ஒன்றாய் இருப்பது , மகிழ்ச்சியாய் கொண்டாடுவது  என தீபாவளியின் தனிச்சிறப்பு மாறவில்லை.டிவி  சேனல்களின் பிடிகளில் சிக்காமல் அந்த நல்ல நாளை காப்பாற்றுவது நம் பொறுப்பு.
அன்றைக்கு ரிலீஸ் ஆகும் படத்தை கூட வேறொரு நாள் பார்த்துக்கொள்ளலாம். குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடும் சந்தோசம் வேறு நாள் கிடைக்காது.

வேலையில் மூழ்கி, பொறுப்புகளில் சிக்கிக்கொண்டு ,எப்போதும் முகத்தில் ஒரு கண்டிப்பை போலியாய் காட்டிகொண்டு , கண்டம் தாண்டி வாழ்ந்து வரும் இந்த சமயத்தில் , எல்லாரும் ஊரில் தீபாவளி கொண்டாடி அதை படம் எடுத்து அனுப்புகிறோம்  என்று சொன்னாலும் ,அது முழு சந்தோசத்தை  கொடுக்காது என்பது நிதர்சனம். 

எப்போதும் தீபாவளி பின்னிரவில் ,அப்பாவை கட்டிக்கொண்டு ஏக்கமாய் கேட்கும் கேள்வி ஞாபகத்துக்கு வருகிறது - 'அடுத்த தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்குப்பா?' .

அதிக நாள் ஆகும் என்று தெரிந்திருந்தாலும் , அவர் அன்பாக அணைத்துக்கொண்டு , 'சீக்கிரமா வந்திரும்ப்பா ' என்று சொல்லும் ஆறுதலுக்கு மயங்கும் அந்த கணம் கவிதை.

ஹ்ம்ம் ..குழந்தையாகவே இருந்திருக்கலாமோ?

Monday, October 24, 2011

பாப்கார்ன் பாக்கெட் - 20111024



' உள்ளாட்சி தேர்தல் முடிவு ஒன்றும் வியப்பில்லை'ன்னு திமுக , தேமுதிக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மாறி மாறி அறிக்கை விடும்போது, பாஸ் என்கிற பாஸ்கரன் சந்தானம் டயலாக்தான்  ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.

பெரும்பாலான கட்சிகள் உள்ளாட்சித் தேர்தல்ல இந்த தடவ போட்டியிட்டதுக்கு காரணம் , கட்சி காணாம போகக் கூடாதுங்கற பயம்தான். அதுவும் குறிப்பா இந்த தடவ படுகேவலமா தோற்போம்னு தெரிஞ்சும் நாளுக்கு ரெண்டு பில்டப் அறிக்கை விட்டு, நாங்க இன்னும் இருக்கோம்னு மக்களுக்கு அட்டென்சன் போட்ட கட்சிகள் நிறைய..



தேர்தல் முடிவ பார்த்ததும் தெரிஞ்ச விஷயம் -

திமுக உயிரோடதான் இருக்கு. பிழைக்க வாய்ப்பிருக்கு.

தேமுதிக , ஏற்கனவே சொன்னதுதான். ஒரு தடவை தப்பித்தவறி ஜெயிச்சதுக்காக எல்லா தடவையும் அப்படியே நடக்கும்னு நெனைக்கிறது முட்டாள்தனம்.

வைகோ தன்னோட உண்மையான ஈழபோரட்டத்தோட பலனை ,அதன் அங்கிகாரத்தை மக்கள்கிட்ட இருந்து ஓரளவுக்கு வாங்கிட்டார். 

மீதிகட்சிகள் பத்தி அறிய ரெண்டாம் பத்தியை மறுபடியும் படிங்க.

இந்த தேர்தலில் நான் பார்த்த சந்தோசமான விஷயம் , பத்து மேயர்கள்ல ஆறு பெண் மேயர்கள்.



அட இனியும் என்ன முப்பத்தி மூணு சதவீதம் ? அறுபது சதவீதம் எடுத்துட்டாங்க.. வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------

ஸ்டீவ் ஜாப் மறைவில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு அதிர்ச்சி செய்தி -  'சி' நிரலாக்க மொழியை உருவாக்கிய டென்னிஸ் ரிட்ச்சி காலமானது. கணினி தோழர்களுக்கு  பாலபாடமே சி-தான்.எந்த தொழில்நுட்பம் சார்ந்த கணினி தளத்தில் இருந்தாலும் இந்த மொழியறிவு இல்லாமல் ஒரு துரும்பு கூட அசைக்க முடியாது. இல்லை என்று சொல்லுபவர்கள் ,அவர்களை அறியாமல் அதன் சாரங்களை பயன்படுத்தியிருப்பார்கள்.
யுனிக்ஸ் இயங்குதளத்தை வேறு சிலரோடு சேர்ந்து  உருவாக்கியவரும்  இவர்தான். இவரும் புற்றுநோய்க்குதான் பலியாகியிருக்கிறார்.



இவர்களைப் போன்ற சிறந்த அறிவு ஜீவிகளை மரணத்தை தவிர வேறு யாராலும் தோற்கடிக்க முடியாது.அதே சமயம் மரணம் வருவது தெரிந்தாலும் , அதை ஒத்திபோட தகுதி படைத்தவர்கள் இவர்கள் - 'இரு..என்ன அவசரம்? என் வேலையை முடிச்சுட்டு வரேன்.' என்று தங்கள் பணிகளில் ஐக்கியம் ஆகும் ரகத்தை சேர்ந்தவர்கள் இவர்கள். மரணமும் கைகட்டி ஒரு ஓரமாக நின்று ,அவர்கள் வேலை முடிந்ததும் அழைத்து செல்லும்.

ஆக மரணத்தை தள்ளிபோட சிறந்த வழி, எதாவது உருப்படியாக செய்ய முனைவதும் , அதில் முழுமுனைப்போடு ஈடுபடுவதும்தான் என்று வாழ்ந்து காட்டியவர்கள். They are Legends.
------------------------------------

முரண் படம் தமிழுக்கு புதியது.நல்ல முயற்சி.சேரனும் சரி , பிரசன்னாவும் சரி ,தங்கள் நிலை உணர்ந்து பாத்திரத்தை தேர்ந்தெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கதையின் முதல் காட்சி விஷயத்தை , கடைசி காட்சிக்கு முடிச்சு போடும் உத்திக்கு பேர் என்னவென்று தெரியவில்லை. ஆனால் அதை படத்தில் நுழைக்க கதையை மிக கவனமாக கையாள வேண்டும்.  இயக்குனர் அதை செய்திருக்கிறார்.

ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் 'Strangers on a Train' படத்தின் தழுவலாக இருந்தாலும் , அதை பெரிதாக எடுத்துகொள்ள தேவையில்லை. தெய்வதிருமகள் வெற்றிக்கு பிறகு ஏறக்குறைய எல்லா பெரும் 'அட விடுங்க பாஸ்..எங்க இருந்து எடுத்தா என்ன ? நமக்கு போர் அடிக்காம ரெண்டு மணி நேரம் ஓட்டரானுகளா.. அது போதும் ' என்ற மனப்பான்மை வந்திருக்கிறது. அதுவும் சரிதான்.

நான்கு படத்தை தெலுங்கில் இருந்து நல்லபடியாக அப்படியே திருப்பிபோட்ட ஜெயம் ராஜா கூட 'கிக்'கை தில்லாலங்கடி ஆக்கும்போது குப்புற விழுந்தார்.  தழுவலோ காப்பியோ , படத்தை ரசிக்கும்படி கொடுத்தால் போதும் போல. முரண் அந்த ரகம்.




சேரனுக்கு 'யுத்தம் செய் 'க்கு பிறகு சொல்லிகொள்ளும்படி இன்னொரு படம். ஆனால் ஒரே குறை - இந்த விஷயத்துக்கு இப்படிதான் ரியாக்ட் பண்ணுவார் என்று பார்ப்பவருக்கு நன்றாக முன்னரே தெரிகிறது.

வேறு வழியில்லை. விஜய்க்கு எப்படி முதிர்ச்சியான கேரக்டர் ஒத்து  வராதோ , தனுஷ்க்கு எப்படி டீசென்டான கேரக்டர் ஒத்து வராதோ , அதே போல சேரனுக்கு முரட்டு கேரக்டர் ஒத்து வராது. தப்பில்லை.முயற்சி எடுக்கிறேன் பேர்வழி என்று காமெடி  ஆக்காமல் இருக்கும் வரை இவர் பாராட்டப்பட  வேண்டியவர்.
முரண் - Classic Thriller.
----------------------------------------

எல்லாரும் எப்போதும் அரசியல் சுப்புடு ஆகி விட முடியாது. சோ போல பாலிடிக்ஸில் பின்னால் நடப்பதை அப்படியே ஒப்பிக்க முடியாது. ஆனால் சில விஷயங்கள் 'சூரியன் காலை உதிக்கும்.இரவில் மறையும்' என்பதுபோல் வெகு சுலபமாக கணிக்க முடியும். தேர்தலுக்கு முன்னால்
கேப்டன் விஷயத்தில் அம்மாவின் போக்கு பற்றிய என்னுடைய கணிப்பும் நூறு சதம் இதில் உண்மையாயிருக்கிறது.

//
ஆனால் இப்படியும் இருக்கலாம். கீழ்வருமாறு இவர் யோசித்திருந்தால் இவர் முடிவு சரிதான். 

தனியாக நின்று மொத்தமாக தோல்வியுறுவதை விட இப்படி நாற்பது தொகுதிகளில் நின்றால் எப்படியும் ஆளும்கட்சி எதிர்ப்பலைகளினால் குறைந்தது முப்பதாவது கிடைக்கும்.திமுக படுதோல்வி அடைந்தால் அந்த கட்சி உடைந்து விடும் கூறு அழகாக கண் முன் தெரிகிறது. 

பின் இந்த அம்மையார் எப்போதும் போல (தனி பெரும்பான்மையில் வந்தால் ) உடனே கூட்டணியில் இருந்து விலக்கி விடுவார். அதுதான் நமக்கும் வேண்டும்.

திமுக :குடும்ப சண்டையில் அழகிரி - ஸ்டாலின் - மாறன் என்று அடித்துக் கொண்டிருப்பார்கள். காங்கிரஸ் உட்கட்சி பூசல் - எந்த தலைவரும் இல்லை. .வைகோவின் மதிமுக மரணத்தருவாயில். பாமக எல்லாம் அம்மையாருக்கு ஒரு பொருட்டே அல்ல. 

பிறகென்ன ?  நாம்தான் பிரதான எதிர்க்கட்சி. ஐந்து வருடம் பொறுத்திருந்தால் அடுத்த முறை தேமுதிக - அதிமுக தான். வேறு யாரும் இல்லை. 

2016  சரியான நீயா ? நானா ? போட்டியாக இருக்கும். இப்போது இருப்பது போல் நீயா ? நானா ? அவனா ? இவனா? என்பதெல்லாம் இருக்காது. தமிழ் மக்களுக்கே உரிய குணமான ஆட்சி மாற்ற எண்ணம் நம்மை முதல்வர் ஆக்கி விடும்.

ஆக , இப்படி இவர் காய் நகர்த்துவது இந்த முறை பலனை எதிர்பார்த்து அல்ல .இப்போது கிடைக்க போகும் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் , திமுகவை பின் தள்ளி இரண்டாம் இடத்தை தக்க வைத்துக்கொள்வதிலும் , பின் வரும் பெரிய பலனையும் எதிர்பார்த்துதான். 
//

அம்மாவும் ,தாத்தாவும்,ஐயாவும் குணம்  மாறாமல் இருக்கும் வரை பல விஷயங்கள் இப்படிதான் எல்லாராலும் எளிதாக கணிக்க முடியும்.
--------------------------------------

எம்ஜீஆர் சூட் போட்டாலே அவருக்கு ஒரு தனி அழகு வந்து விடும். அவரின் முக வசீகரம்  இந்த பாடலில் மிக பிரகாசிக்கும்.தன்மையும் மிக கண்ணியமும் உள்ள நாயகன் பாடும் பாடல். எந்த காலத்துக்கும் பொருந்தும்.

அதிலும் இந்த பாடலில் கையை அதிகம்  ஆட்டாமல் , நடனம் ஆடாமல் மிக நளினமாக நடித்திருப்பார்.  (ராதாரவி இதே பாணியைத்தான் 'பூவே செம்பூவே' பாடலில் பயன்படுத்தியிருப்பார் ). கூடவே வாலியின் பாடல் வரிகள் ஆளை தலைகீழாக உலுக்கிபோடும்.




'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்; வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்;
 இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.'

கடைசி வரியை எம்ஜீஆரை தவிர எந்த ஹீரோ பாட முடியும்?
--------------------------------

Tuesday, October 11, 2011

அலைபேசி - சவால் சிறுகதை-2011

'இதுல்ல இவ்வளவு ஆபத்து இருக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல.புதுசா முளைச்சிருக்கிற இந்த பிரச்னையை சத்தமில்லாம முடிச்சிடணும்.  எதாவது நம்ம கை மீறி நடந்தா...?'
மறுப்பாக தலையாட்டினான் இரண்டாமவன்.

'பயப்படாத. நம்மள யாருக்கும் தெரியாது. தெரிய வாய்ப்பும் இல்லை. நிலைமை என்னனு தெரியாம நாம எதுவும் செய்ய முடியாது.'

'நம்ம திட்டத்துல எதாவது மாறுதல் இருக்கா? '

'கண்டிப்பா இல்ல.'

'இனி இந்த மாதிரி விஷபரிட்சை எல்லாம்  வேணாம். பேசாம இந்த பிளானையும் கூட பாதியிலேயே ட்ராப் பண்ணிடலாம் '

'இன்னொரு தடவ இப்படி பேசாத. இது ஒரு புரட்சி. முத்துக்கள் சில கிடைக்க வேண்டுமானால் சிப்பிகள் சில உடையத்தான் வேண்டும். இது நமக்கான வேத வாக்கு. மனசுல வெச்சுக்கோ. '

இதுவரை அமைதியாய் இருந்த நடுத்தர வயதுக்காரர் அவன் தோளைத்  தட்டி கொடுத்தார்.

'உன் தைரியம் என்னை பெருமைப்பட வைக்குது. உன்ன மாதிரி எல்லா தோழர்களும் இருந்துட்டா நம்ம இயக்கம் பெரிய வெற்றி அடைஞ்சிடும். சரி ஆயுதம் பத்திரமா இருக்கா ?'

இரண்டாமவன் பேண்ட் பாக்கெட்டில் கை வைத்து பார்த்து உறுதிசெய்து கொண்டான்.வெளியில் தைரியமாக பேசினாலும் , அதன் கனமும் உறுத்தலும் அவனை கவலைக்குண்டாக்கியது. தலையாட்டினான்.

'ஞாபகம் இருக்கட்டும்.வேற வழியே இல்லைனாதான் அதை உபயோக்கிக்கணும்.அது பிரமாஸ்திரம். அப்புறம் தகவல் எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியுமா? '

'நம்பத்தகுந்த எடத்துல இருந்து வந்திருக்கு.சத்தமில்லாம போய் பார்ப்போம்'

 நிசப்தத்தை கிழித்து அலைபேசி கதறியது. எடுத்து திரையை பார்த்தவன் அலறினான்.

'மேலிடம். மேலிடம். என்ன சொல்றது?'

'எதுவும் சொல்லாத.பேசாத.தேவையில்லாமல் நெறைய கேள்விக்கு பதில்  சொல்ல வேண்டியிருக்கும்.

வீதியில் வெளிச்சம் குறைந்திருந்தது.

'அதோ கடைசி வீடு. ஆள் பேர் முத்துசாமி.கவனமா பேசணும். வீட்டுல இருக்கறவங்களுக்கு நம்ம மேல ஒரு துளி சந்தேகமும் வந்துற கூடாது.'

'ஆள் என்ன செய்றான்?'

'சொன்னா சிரிப்பிங்க . பள்ளிக்கூட வாத்தியார்.அதுவும் சின்ன பசங்களுக்கு'

'அதுக்காக குறைவா மதிக்க கூடாது.கொஞ்சம் தகவலை வெச்சுகிட்டே இவ்வளவு தூரம் போயிருக்கானா அவன் லேசுபட்ட ஆள் இல்ல.  நிலைமை கொஞ்சம் விபரீதமானாலும் நம்மதான் பொறுப்பு. அட்ரஸ் சரிதான?'

'மறந்துடீங்களா?. இது என் ஊர். நல்லா தெரியும்'

கேட்டை சத்தமில்லாமல் திறந்தபடி உள்ளே சென்றார்கள்.அழைப்புமணியை அழுத்தும் முன் முகத்தில் வேர்வை அரும்பியது. பாக்கெட்டை ஒரு முறை தொட்டுபார்த்து கொண்டு அடுத்தவனை திரும்பி பார்த்தான். அவன் தலையாட்டவே பொத்தானை அழுத்தினான்.
------------------------------------------------

மூன்றாவது முறை அழைப்பு மணி கேட்டது.

எரிச்சலாக  தலையை உயர்த்தி பார்த்து அந்த சத்தத்தை அலட்சியபடுத்தினார் முத்து. தன் நாற்காலியிலிருந்து அவர் இம்மியும் நகரவில்லை. கண்கள் கருவளையத்தில் அகப்பட்டிருந்தன.மேஜையில் இருந்த இரண்டு குறிப்புகளையும் மீண்டும் குழப்பமாக  பார்த்தார்.இரண்டும் விஷ்ணு பெயரில் இருந்தது.

ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்து சென்று அறை மூலையில் இருந்த தொலைபேசியை எடுத்தார்.கை நடுக்கத்துடன் எண்களை அழுத்தினார்.


அதே நேரத்தில் மேஜை மேலிருந்த அவரின் அலைபேசி திடீரென கனைக்கத் தொடங்கியது. பதறியபடி , ஓடி சென்று பார்த்தார். நினைத்த இடத்திலிருந்துதான் அழைப்பு.இதயம் உச்சகட்ட வேகத்தில் துடிக்கத் தொடங்கியது. இரண்டு குறிப்புகளும் அவரை ஏளனமாக பார்த்ததுபோல் இருந்தது.

'இனியும் தள்ளிபோட கூடாது.முடிவெடு.என்ன செய்யலாம்? யோசி யோசி..'

அழைப்பு நின்றது. அலைபேசி திரையில் '67 missed call ' என்றிருந்தது. முத்து பொறுமை இழந்தார். தலை சுற்ற தொடங்கியது.அலைபேசியை தூர எறிந்தார்.

அருகிலிருந்து ஸ்டீல் ஸ்கேலை எடுத்து கையைக் கிழிக்க ஆரம்பித்தார்.  ரத்தம் பெருக ஆரம்பித்து தரையை ஈரமாக்கியது.

'கோகுல்ல்ல்லல்ல்.......' என்று வீறிட தொடங்கினார்.
முத்துவின் அலறல் வீதியில் எதிரொலித்தது. காய்ந்த சருகாக தரையில் உதிர்ந்தார். 
-----------------------------------------------

கதவை திறந்தபடி கவலை தோய்ந்த முகத்தோடு ஒரு நடுத்தர வயது பெண்மணி எதிர்பட்டார்.அருகில் ஒரு சிறுவன்.

'நீங்க...?'

'முத்து சார் இருக்காரா ? நாங்க அவருக்கு வேண்டியவங்க.'

'உள்ளார  வாங்க.நான் மீனாட்சி.அவர் வீட்டுலதான் இருக்காரு'

ஹாலில் சிறிது நேரம் அமர்ந்திருந்தனர். தூரத்தில் அலைபேசி அடிக்கும் சத்தம் மெல்லியதாய்  கேட்டது.

'பையனை அனுப்பி கடைல வாங்குனதுதான். சமைக்க நேரமில்லை.சாப்பிடுங்க.தொலவுல இருந்து வரீங்களா?'

மூன்று தட்டில் சாம்பார் இட்லியை பரிமாறியபடி மீனாட்சி கேட்டதற்கு மெல்லியதாய் தலையாட்டினார்கள்.

'அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல.  எதாவது முக்கியமான விஷயங்களா? இருங்க அவரை கூட்டிட்டு வரேன்.'
என்றவர் திடீரென திரும்பி , 'உங்களுக்கு கோகுல்னு யாராவது தெரியுமா ? என்றார். மூன்று பேர் முகமும் மின்சாரம் பாய்ந்ததுபோல் திடுக்கிட்டன. திணறலாக மறுத்தார்கள். மீனாட்சி சந்தேகமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ,உள்ளே சென்றார்.

'நாம நெனச்சது சரிதான். உடனே காரியத்தை முடிச்சாகணும். இனி தாமதிக்கிற ஒவ்வொரு வினாடியும் ஆபத்து.'

அலைபேசி மீண்டும் அலறியது. திரும்பவும் மேலிடம். இப்போது அவனுக்கு பயம் அதிகரித்தது.மேலிடத்திற்கு என்ன காரணம் சொல்வது?  ஆபத்து சுற்றி வளைக்க ஆரம்பித்திருப்பது மட்டும் அவனுக்கு நன்றாக புரிந்தது. அருகிலிருந்தவனைப்  பார்க்க, அவனிடம் ஒரு பரிதாபமான   பார்வை தோன்றியது.

நடுத்தர வயதுக்காரர் சூழ்நிலையின்  இறுக்கத்தை குறைத்தார்.பேச்சை மாற்றினார்.
'தம்பி என்ன படிக்கிற? பாவம் இந்த நேரத்துல எந்த கடைல இட்லி வாங்குன ?'
பையன் பேசிகொண்டிருக்கும்போதே ஒரு அலறல்  சத்தம் மூவரையும் திடுக்கிட வைத்தது. உள்ளே ஓடினார்கள்.
---------------------------------------
டாக்டர் மீனாட்சியை தேற்றிகொண்டிருந்தார்.

'ஒன்னும் இல்லம்மா.
இப்போ நல்லா தூங்கிட்டிருக்கார் .இது ஒரு சின்ன depression . சூழ்நிலையோட இறுக்கத்தை மூளையும் மனசும் ஏத்துக்க  முடியாதபடி  அழுத்தம் வரும்போது இப்படி நடக்கறது இயற்கை.

ஒரு விஷயத்தைப் பத்தி திரும்ப திரும்ப யோசிச்சு தீர்வு கிடைக்கலைனா இப்படி ஆகும்.இதுக்கு Obsessed stateன்னு சொல்லுவாங்க.
ஆமா இந்த அளவுக்கு போக அவருக்கு என்ன பிரச்சனை? உங்களுக்குள்ள எதாவது சண்டையா?'

கண்ணீரை கட்டுபடுத்திக்கொண்டே மீனாட்சி கதறலோடு கோபத்தில் பொங்க ஆரம்பித்தார் - 'அதெல்லாம் ஒன்னும் இல்லேங்க டாக்டர். பத்து நாள் முன்னாடி வரைக்கும் நல்லாத்தான் இருந்தாரு.  எல்லாம் இந்த எழவு பிடிச்ச கம்ப்யூட்டர்னாலதான்.
எதோ கதை எழுதுற போட்டியாம். மூணாயிரம் ரூபா பரிசாம். அந்த  அறிவிப்பு வந்ததுல இருந்து இந்த ஆளு புத்தியோடவே  இல்லீங்க டாக்டர். 

வீட்டுபோன்ல இருந்தே செல்போனுக்கு கால் பண்ணிக்கிட்டு, பேப்பர் பேப்பரா எழுதி கிழிச்சு  போட்டுட்டு ஒரே தொல்லைங்க டாக்டர்.

பையன்கிட்ட ரெண்டு வரி அளவுக்கு எதையோ  கொடுத்து ,இதே மாதிரி எழுதி பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வாடான்னு சொல்லி, கொட்ட கொட்ட அந்த கெரகத்த பார்த்துட்டு இல்லாத  அட்டுழியம் பண்ணிட்டு இருந்தாருங்க டாக்டர். ஏணுங் டாக்டர் நீங்களே சொல்லுங்க ? அன்னைக்கு எதோ அவருக்கு தெரிஞ்சவங்க மூணு பேரு வந்ததால சட்டுன்னு இங்க வந்து சேர்க்கறதுக்கு ஆச்சுங்க. மவராசனுக நல்லா இருப்பாங்க.இல்லீனா இந்த மனுசனுக்கு எதாச்சும் ஆயிருந்தா எனக்கும் என்ர பையனுக்கும் யாருங்க டாக்டர் பொறுப்பு?

ஆளு முழிச்சதும் , இந்த கன்றாவியெல்லாம் இனி தொடக்கூடாதுன்னு  கண்டிசனா சொல்லிபோடுங்க டாக்டர்.மறுக்கா இது மாறி பண்ணுனா நான் பையன கூட்டிட்டு என்ர பாட்டுக்கு போய்ட்டே இருப்பேன். போதுஞ்சாமி இந்த புத்திகெட்ட ஆளு சகவாசம். இப்ப கதை ஒண்ணுதான் இந்த ஆளுக்கு கேடு.
போட்டி வைக்கரானுகளாமா  பொல்லாத போட்டி? நாசமா போறவனுக நல்லாவே இருக்க மாட்டானுக டாக்டர்.'

--------------------------------------
  பரிசல் , ஆதியை தேற்றிக்கொண்டிருந்தார்.

'விடுப்பா அந்த ஆளுக்கு ஒன்னும் ஆகலைல.udanz இயக்கத்துக்கு எந்த கெட்ட பேரும் இல்ல.தப்பிச்சோம். '

'யோவ் சும்மா இருய்யா.
பெரிய தீவிரவாத இயக்கம்  ரேஞ்சுக்கு பில்டப் பண்ணிக்கிட்டு
இருக்கீங்க.
நல்ல வேளை சரியான நேரத்துக்கு நம்ம போனோம் ,அந்த ஆளு உயிர் பிழைச்சான் .
அந்த அம்மாவுக்கு மட்டும் நாம யாருன்னு தெரிஞ்சிருந்தது , செத்திருப்போம்..முதல தகவல் சொன்னவனுக்கு ஒரு பெரிய கும்புடு போடணும்.இல்லேன்னா நம்ம கதி என்ன ஆவறது ? '

'ஒன்னும் ஆயிருக்காது.
புலம்ப அரம்பிச்சிராத..அதான் போகும்போதே
கஷ்டப்பட்டு கடன வாங்கி  , பாக்கெட்ல பணமும் கொண்டு போயிருந்தோம்ல. ஒரு வேளை அந்த ஆளு  கதை எழுதாம சாக மாட்டேன்னு சொல்லியிருந்தா,  போதும்பா நீ கதை எழுதுனதுன்னு சொல்லி பணத்தை அப்போவே கொடுத்திருப்போம். பரவாயில்ல பணம் மிச்சம்.'

பரிசல் பேசிக்கொண்டே போக தடுத்து நிறுத்தியது அலைபேசியின் அழைப்பு. மேலிடம்.ஒரு பெருமூச்சு விட்டபடி இப்போது அழைப்புக்கு பதில் கொடுத்தார்.

'எங்கங்க இருக்கீங்க? மூணு மணி நேரமா கால் பண்ணிட்டு இருக்கேன்.எடுக்க மாட்டீங்கறீங்க.வீட்டுக்கு வாங்க.உங்களுக்கு இருக்கு.'

'ஐயோ இல்லமா.அது ஒரு சின்ன பிரச்சனை. வந்து கூகிள்.. இல்ல கோகுல்....'

'உளறாதீங்க..இன்னும் பத்து நிமிசத்துல வீட்டுல இருக்கணும்'

பரிசலின் தவிப்பை ரசித்தபடி ஆதி கேட்டார்.

'என்ன சங்கர் உங்களுக்கு ,  ட்ரைனுக்கு லேட் ஆகல?'

பதில் சொல்லாமல் கேபிள் சங்கர் மிக சிரத்தையோடு எதையோ லேப்டாப்பில் டைப் செய்து  கொண்டிருந்தார்.

'சாப்பாட்டுக்கடை -  திருப்பூரில் பதிவர்கள் சார்பில் ஓர் அவசரகூட்டம் ஆதி , பரிசல் தலைமையில் நடைபெற்றது. ....
.....இவர்களின் ஸ்பெஷாலிட்டி சாம்பார் இட்லி .அருமையான நெய் மணக்கும் சாம்பார் இட்லி , கொத்தமல்லிதழை மிதக்க வெகு சூடாக  இருக்கிறது. ம்ம்ம்ம் அட்டகாசமான சுவை.விலை கொஞ்சம் அதிகமென்றாலும் worth .திருப்பூர் போகும்போது தவறாம ஒரு நடை போயிட்டு வந்திருங்க.
ராத்திரி  ஒரு மணி வரைக்கும்  பார்சலும் உண்டு.
 டிவைன்.'

----------------------------------------------------------------

Monday, October 10, 2011

ஸ்டீவ் ஜாப்ஸ் - I-sad ...

கடவுளுக்கு ஒரு பொறாமை உண்டு. மிக நல்லவர்களை , அறிவு ஜீவிகளை பூமிக்கு அனுப்பி வைத்தால் வெகு சீக்கிரம் பொறுமை இழந்து விடுவார். உடனே  அவர்களை திருப்பி அழைத்துக் கொள்வார். பாரதி ,ஷெல்லி , மொசார்ட்,கணிதமேதை ராமானுஜம் ,ப்ரூஸ்லீ ,மைக்கேல் ஜாக்சன், இப்படி பலர். இப்போது ஸ்டீவ் ஜாப்ஸ் - ஆப்பிள் கணினி நிறுவனர்.


இவரின் எண்ணமும் தொழில் முன்னேற்றமும் எந்த அளவுக்கு அதிக வளர்ச்சியடைந்ததோ அதே அளவுக்கு அவர் உடலில் புற்றுநோய் செல்களும் வளர்ந்து அவரை  நாளுக்கு நாள் கொன்று  வந்திருக்கிறது.அதை எதிர்த்து இவ்வளவு வருடங்கள் போராடியவர் , போன மாதம்தான் பணியில் இருந்து விருப்ப ஓய்வை அறிவித்தார்.
வேலையில் இருக்கும்போது இவரை அணுக முடியாத மரணம் , ஓய்வை நாடியபோது வெகுசுலபமாக அதன் வேலையை முடித்துவிட்டது.
--------------------

இனி இவரைப் பற்றி  வெப்துனியா :

ஐபோன், ஐபாட், ஐடியூன்ஸ்  போன்றவைகளை கண்டுபிடித்து ,கணினி தொழில்நுட்பத்தில் மைக்ரோசாப்டுக்கு போட்டியாக ஒரு சகாப்தமாக விளங்கியவர் ஸ்டீவ்.
இவரின் தகுதி என்று பார்த்தால் - பொறியியல் படிப்பில் எந்த  முறையான பட்டமும் பெறவில்லை.கல்லூரியில் முதல்  செமஸ்டருடனேயே படிப்புக்கு முழுக்கு போட்டுவிட்டு கணினி ஆர்வம் காரணமாக அந்த துறையில் மூழ்க தொடங்கினார்.

பிறந்தது - அமெரிக்கா, சான் ஃபிரான்சிஸ்கோ நகரில் , 1955 ஆம் ஆண்டு பிப்ரவரி 24ல் .  அருகில் உள்ள ஒரு ஊரை சேர்ந்த தம்பதியரால் பிறந்த ஒரு வார காலத்திலேயே தத்தெடுக்கப்பட்டார்.

பள்ளி படிப்பின்போதே கம்ப்யூட்டர் விவகாரங்களில் ஆர்வம் காட்டிய ஸ்டீவ் ஜாப்ஸ், தாம் வசித்த நகருக்கு அருகில் உள்ள பாலோ ஆல்டோ என்ற ஊரில் இருந்த கம்ப்யூட்டர் நிறுவனம் ஒன்றில் கணினி நிபுணர்கள் உரையாற்றும் நிகழ்ச்சிகளுக்கு ஆர்வமுடன் சென்று வருவார்.பின்னர் கோடை விடுமுறையில் ஸ்டீவ் வாஸ்னிக் என்ற பொறியாளருடன் சேர்ந்து பணியாற்றினார்.

இந்நிலையில் போர்ட்லாண்டில் உள்ள கல்லூரி ஒன்றில் சேர்ந்த ஸ்டீவ் ஜாப்ஸ், முதல் செமஸ்டருடனேயே தமது படிப்புக்கு மங்களம் பாடிவிட்டு கம்ப்யூட்டர் தொடர்பான வடிவமைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்ட தொடங்கினார்.

இந்த ஆர்வம் அவரை வீடியோ கேம் டெக்னீசியன்களில் முன்னோடி எனக் கூறப்படும் அடாரி என்பவருடன் சேர்ந்து பணியாற்ற வைத்தது.அதன் பின்னர் தம்மை போன்றே கல்லூரி படிப்பை பாதியில்விட்ட வோஜ்னியாக் என்பவருடன் சேர்ந்து கம்ப்யூட்டர் கிளப் ஒன்றில் சேர்ந்தார்.
கம்ப்யூட்டர் மீதான இவர்கள் இருவரது ஆர்வமும் ஒரே அலைவரிசையில் ஒத்துப்போன நிலையில், 1976 ஆம் ஆண்டு இருவரும் சேர்ந்து தொடங்கியதுதான் " ஆப்பிள் கம்ப்யூட்டர்".

இந்த நிறுவனத்தை தொடங்கியபோது ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு வயது 21; அவரது சகாவான வோஜ்னியாக்கின் வயது 26.


பின்னர் 1980 ஆம் ஆண்டு இருவரும் இணைந்து ஆப்பிள் கம்ப்யூட்டரை உருவாக்கி வெளியிட, அது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

எங்கும் எடுத்துச் செல்லும் வகையில் கணினி தொழில் நுட்பத்தை மாற்றிய பெருமை இவருக்கே உரியது. சாதாரணமான கம்ப்யூட்டர் தயாரிக்கும் நிறுவனமாக உருவாகிய ஆப்பிள் நிறுவனத்தில் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஐ பாடு மற்றும் ஐ டியூன்ஸ், ஐபோன் உருவாக்கியவர் இவரே.

2003 ஆம் ஆண்டு ஐ பாடு உருவாக்கபட்ட பிறகு இசை உலகில் ஒரு மாற்றமே ஏற்பட்டது. சுமார் 20 கோடி பேர் இதில் பதிவு செய்து ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட பாடல்களை பதிவிறக்கம் செய்து ரசித்து வருகின்றனர்.

2007 ஆம் ஆண்டு ஐ‌ போனை இவர் உருவாக்கினார்.ஸ்மார்ட் போன் உருவாக இது ஒரு முன்னோடியாக விளங்கியது. 2011ல் உருவாக்கப்பட்ட ஐ டியூன்ஸ் சேவை மேலும் ஒரு புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து முழு கம்ப்யூட்டர் பயன்பாட்டை ‌கையடக்க வடிவில் கொண்டு வரும் வகையில் இவர் உருவாக்கிய ஐ பேடு வடிவமைப்பு மற்றும் தொழில் நுட்பம், கணினி யுகத்தில் புதிய வரலாற்றைப் படைத்தது.

கடந்த ஆண்டு வரை பிரபலமாக இருந்த டேப்லட் பிசி என்ற கம்ப்யூட்டரை, ஐ பேடு பின்னுக்குத் தள்ளி, 2010 இறுதியில் ஒன்றரை கோடி விற்பனையானது. இவர் கடந்த ஆகஸ்ட் வரை அதன் ‌தலைவராகவும் இருந்தார்.  

சாதனையாளர்களை விதி அதிக நாட்கள் வாழவிடுவதில்லை என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது ஸ்டீவ் ஜாப்ஸின் மரணம். ஆனால் அவரது சாதனைகளுக்கு அழிவில்லை!
--------------------

இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக உங்கள் வாழ்க்கை பாதை அமைந்துவிட்டது  ஸ்டீவ். அந்த விதத்தில் நீங்கள் , இனி வெற்றி பெரும் ஒவ்வொரு இளைஞன் மூலமாகவும் , என்றும்  உயிர்ப்போடுதான் இருப்பீர்கள்.     

Friday, October 7, 2011

எங்கேயும் எப்போதும்

சேது வெற்றிக்கு பிறகு தமிழ்  படங்கள் பார்முலா மாற்றப்பட்டது. கடைசி  காட்சி மட்டும் கொடூரமாய் இருக்க வேண்டும் ; மீதி முழுக்க  நகைச்சுவையாகவும் , 
மசாலாத்தனம்  உள்ளதாகவும் மேலோட்டமாக பார்த்தால் எதார்த்தமாகவும் இருக்க வேண்டும் என்பதை பல படங்களில் கடைபிடிக்கப்பட்டது.

நந்தா,  காதல், பிதாமகன்,7G ரெயின்போ காலனி,செல்லமே,பருத்திவீரன், காதலில் விழுந்தேன், மைனா என ஒரு நீண்ட வரிசையில் படங்கள் வந்தன; வெற்றியும் பெற்றன. ஆனால் அந்த வகையில் பத்தோடு பதினொன்று என சேர்க்க முடியாத படம்  - எங்கேயும் எப்போதும். காரணம் கடைசியில்.


கிளைமாக்ஸ் காட்சி முதலில். அதை நோக்கி நடைபெறும் காட்சி நகர்த்தல்களில் படம் சொல்லும் முறை. ஆங்கில படங்களில் அதிகம் பயன்படுத்தபட்டிருந்தாலும் , தமிழில்  தசாவதாரம்,அங்காடி தெரு , கிட்டத்தட்ட வெயிலில்.. இப்போது  இந்த படத்தில். இதில் உள்ள ஒரே ஆபத்து , தெரிந்த கிளைமாக்ஸ் காட்சிக்கு சுவாரசியம் குறையாமல் பார்ப்பவரை அமர வைக்க தெரிந்திருக்க வேண்டிய உத்தி. அது இயக்குனர் சரவணனுக்கு இருக்கிறது.

ஜெய் - சுப்ரமணியபுரம் வெற்றி மமதையில் இருந்து இறங்கி வந்து , தன் இடம் தெரிந்து நடித்திருக்கும் படம். இடையில் அவள் பெயர் தமிழரசி என்ற ஒரு நல்ல படம் கொடுத்தார். மற்றவை குப்பைகள். இந்த படத்தில் அவரின் அப்பாவித்தனமான நடிப்பும் , காதலிக்கு அடங்கி ஒடுங்கும் பாத்திரமும் கனகச்சிதம்.
இது சரியான ட்ராக். ஜெய்.. போலாம் ரைட்...

அஞ்சலி - கற்றது தமிழ் , அங்காடிதெரு போன்ற பேர் சொல்லும் படங்களில் , நினைவில் நிற்கும்  பாத்திரங்களில் நடித்து இவரும்  இடையில் ரெட்டசுழி, மங்காத்தா,ஆயுதம் செய்வோம்  இன்னும் சில குப்பைகள் நடித்து மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.

இந்த மாதிரி வாயாடி காதலி பாத்திரத்தில் நடிக்க நிறைய தைரியம் வேண்டும். பார்ப்பவருக்கு எதோ ஒரு இடத்திலாவது  , 'இந்த சுமாரான பொண்ணுக்கு போய் எதுக்கு இவ்ளோ பயப்படறார்?' என்று நினைத்தால்  கதை கந்தல். அதை உடைத்தெறியும் நடிப்பும் , அளவான அழகும்  அஞ்சலிக்கு உண்டு. இதை தொடர்ந்தால் சுஹாசினி இடத்துக்கு வர முடியும். வாழ்த்துக்கள்.

அனன்யா - ஷர்வானந் காதல் காட்சிகள் , இளைஞர்கள்  மத்தியில் ஹிட். ' கோவிந்தா..கோவிந்தா' பாடலில் அனன்யாவின் நடிப்பும் , அப்பாவித்தனமும் , கடந்த இருபது நாளாக பேஸ்புக்கில் அதிகம்  பகிரப்பட்ட ஒன்று.

படத்தின் கதை இந்த நேரம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். எல்லாருக்கும் தெரிந்து பயன் இல்லை.  ஓட்டுனர்கள்,குறிப்பாக தனியார் பேருந்து , லாரி ஓட்டுனர்கள் பார்க்க வேண்டிய படம்.  விஜய் டிவி இனி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் என்று தனியாக ஒரு பிரிவை ஆரம்பித்து இந்த படத்திற்கு தாராளமாக விருது கொடுக்கலாம்.

முருகதாஸ் கொண்டாடப்பட்ட வேண்டிய இயக்குனர் ஒன்றும் அல்ல.  ஆனால் இந்த படத்தை கொடுத்ததன் மூலம் பாராட்டப்பட வேண்டிய தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். சங்கர் S பிக்சர்ஸ் மூலம் செய்ததை, பிரகாஷ்ராஜ் முன்பு  டூயட் மூவீஸ் மூலம் செய்ததை  இவர் தொடரலாம் என்று நம்புவோம். புதிய  பல இயக்குனர்கள் வர ஏணியாய்/ஏதுவாய்  இருக்கும்.

சரி , படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்று விட கூடாது.  யோசிப்போம். இது ஒன்றும் மிகைபடுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. சென்னை - கோவை-திருச்சி - மதுரை- பெங்களுரு என்று இருக்கும் எல்லா தேசிய நெடுஞ்சாலைகளிலும் நடக்கும் அன்றாட விபத்துகளில் ஏற்படும் தனி மனித பாதிப்பை உணர்த்தும் கதை இது. 

நன்றாக படித்து , கணினி நிறுவனத்தில் வேலை வாங்கி , கடினமாக ஐந்து வருடம் உழைத்து பதவி உயர்வு பெற்ற பிறகே திருமணம் என்று சொல்லி ,அதன் பிறகு கல்யாணத்திற்கு தலையாட்டி , நிச்சியதார்த்ததிற்கு செல்லும்போது சமீபத்தில் விபத்தில் கருகிய என் தோழியை நினைக்கிறேன். மீதி வாழ்க்கையை எங்கு வாழ அனுப்பி வைக்கபட்டாள் சிரிக்க மட்டுமே தெரிந்த என் அப்பாவி தோழி ? காரணம் - முகமறியா ஒரு ஓட்டுனர்.  

மேலும் வலியை உணர இதையும் பார்க்கலாம்.   

எங்கேயும் எப்போதும் - இப்போதும் எப்போதும் நினைவில் இருக்க வேண்டிய படம்.
-------------------