Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Tuesday, October 11, 2011

அலைபேசி - சவால் சிறுகதை-2011

'இதுல்ல இவ்வளவு ஆபத்து இருக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல.புதுசா முளைச்சிருக்கிற இந்த பிரச்னையை சத்தமில்லாம முடிச்சிடணும்.  எதாவது நம்ம கை மீறி நடந்தா...?'
மறுப்பாக தலையாட்டினான் இரண்டாமவன்.

'பயப்படாத. நம்மள யாருக்கும் தெரியாது. தெரிய வாய்ப்பும் இல்லை. நிலைமை என்னனு தெரியாம நாம எதுவும் செய்ய முடியாது.'

'நம்ம திட்டத்துல எதாவது மாறுதல் இருக்கா? '

'கண்டிப்பா இல்ல.'

'இனி இந்த மாதிரி விஷபரிட்சை எல்லாம்  வேணாம். பேசாம இந்த பிளானையும் கூட பாதியிலேயே ட்ராப் பண்ணிடலாம் '

'இன்னொரு தடவ இப்படி பேசாத. இது ஒரு புரட்சி. முத்துக்கள் சில கிடைக்க வேண்டுமானால் சிப்பிகள் சில உடையத்தான் வேண்டும். இது நமக்கான வேத வாக்கு. மனசுல வெச்சுக்கோ. '

இதுவரை அமைதியாய் இருந்த நடுத்தர வயதுக்காரர் அவன் தோளைத்  தட்டி கொடுத்தார்.

'உன் தைரியம் என்னை பெருமைப்பட வைக்குது. உன்ன மாதிரி எல்லா தோழர்களும் இருந்துட்டா நம்ம இயக்கம் பெரிய வெற்றி அடைஞ்சிடும். சரி ஆயுதம் பத்திரமா இருக்கா ?'

இரண்டாமவன் பேண்ட் பாக்கெட்டில் கை வைத்து பார்த்து உறுதிசெய்து கொண்டான்.வெளியில் தைரியமாக பேசினாலும் , அதன் கனமும் உறுத்தலும் அவனை கவலைக்குண்டாக்கியது. தலையாட்டினான்.

'ஞாபகம் இருக்கட்டும்.வேற வழியே இல்லைனாதான் அதை உபயோக்கிக்கணும்.அது பிரமாஸ்திரம். அப்புறம் தகவல் எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியுமா? '

'நம்பத்தகுந்த எடத்துல இருந்து வந்திருக்கு.சத்தமில்லாம போய் பார்ப்போம்'

 நிசப்தத்தை கிழித்து அலைபேசி கதறியது. எடுத்து திரையை பார்த்தவன் அலறினான்.

'மேலிடம். மேலிடம். என்ன சொல்றது?'

'எதுவும் சொல்லாத.பேசாத.தேவையில்லாமல் நெறைய கேள்விக்கு பதில்  சொல்ல வேண்டியிருக்கும்.

வீதியில் வெளிச்சம் குறைந்திருந்தது.

'அதோ கடைசி வீடு. ஆள் பேர் முத்துசாமி.கவனமா பேசணும். வீட்டுல இருக்கறவங்களுக்கு நம்ம மேல ஒரு துளி சந்தேகமும் வந்துற கூடாது.'

'ஆள் என்ன செய்றான்?'

'சொன்னா சிரிப்பிங்க . பள்ளிக்கூட வாத்தியார்.அதுவும் சின்ன பசங்களுக்கு'

'அதுக்காக குறைவா மதிக்க கூடாது.கொஞ்சம் தகவலை வெச்சுகிட்டே இவ்வளவு தூரம் போயிருக்கானா அவன் லேசுபட்ட ஆள் இல்ல.  நிலைமை கொஞ்சம் விபரீதமானாலும் நம்மதான் பொறுப்பு. அட்ரஸ் சரிதான?'

'மறந்துடீங்களா?. இது என் ஊர். நல்லா தெரியும்'

கேட்டை சத்தமில்லாமல் திறந்தபடி உள்ளே சென்றார்கள்.அழைப்புமணியை அழுத்தும் முன் முகத்தில் வேர்வை அரும்பியது. பாக்கெட்டை ஒரு முறை தொட்டுபார்த்து கொண்டு அடுத்தவனை திரும்பி பார்த்தான். அவன் தலையாட்டவே பொத்தானை அழுத்தினான்.
------------------------------------------------

மூன்றாவது முறை அழைப்பு மணி கேட்டது.

எரிச்சலாக  தலையை உயர்த்தி பார்த்து அந்த சத்தத்தை அலட்சியபடுத்தினார் முத்து. தன் நாற்காலியிலிருந்து அவர் இம்மியும் நகரவில்லை. கண்கள் கருவளையத்தில் அகப்பட்டிருந்தன.மேஜையில் இருந்த இரண்டு குறிப்புகளையும் மீண்டும் குழப்பமாக  பார்த்தார்.இரண்டும் விஷ்ணு பெயரில் இருந்தது.

ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்து சென்று அறை மூலையில் இருந்த தொலைபேசியை எடுத்தார்.கை நடுக்கத்துடன் எண்களை அழுத்தினார்.


அதே நேரத்தில் மேஜை மேலிருந்த அவரின் அலைபேசி திடீரென கனைக்கத் தொடங்கியது. பதறியபடி , ஓடி சென்று பார்த்தார். நினைத்த இடத்திலிருந்துதான் அழைப்பு.இதயம் உச்சகட்ட வேகத்தில் துடிக்கத் தொடங்கியது. இரண்டு குறிப்புகளும் அவரை ஏளனமாக பார்த்ததுபோல் இருந்தது.

'இனியும் தள்ளிபோட கூடாது.முடிவெடு.என்ன செய்யலாம்? யோசி யோசி..'

அழைப்பு நின்றது. அலைபேசி திரையில் '67 missed call ' என்றிருந்தது. முத்து பொறுமை இழந்தார். தலை சுற்ற தொடங்கியது.அலைபேசியை தூர எறிந்தார்.

அருகிலிருந்து ஸ்டீல் ஸ்கேலை எடுத்து கையைக் கிழிக்க ஆரம்பித்தார்.  ரத்தம் பெருக ஆரம்பித்து தரையை ஈரமாக்கியது.

'கோகுல்ல்ல்லல்ல்.......' என்று வீறிட தொடங்கினார்.
முத்துவின் அலறல் வீதியில் எதிரொலித்தது. காய்ந்த சருகாக தரையில் உதிர்ந்தார். 
-----------------------------------------------

கதவை திறந்தபடி கவலை தோய்ந்த முகத்தோடு ஒரு நடுத்தர வயது பெண்மணி எதிர்பட்டார்.அருகில் ஒரு சிறுவன்.

'நீங்க...?'

'முத்து சார் இருக்காரா ? நாங்க அவருக்கு வேண்டியவங்க.'

'உள்ளார  வாங்க.நான் மீனாட்சி.அவர் வீட்டுலதான் இருக்காரு'

ஹாலில் சிறிது நேரம் அமர்ந்திருந்தனர். தூரத்தில் அலைபேசி அடிக்கும் சத்தம் மெல்லியதாய்  கேட்டது.

'பையனை அனுப்பி கடைல வாங்குனதுதான். சமைக்க நேரமில்லை.சாப்பிடுங்க.தொலவுல இருந்து வரீங்களா?'

மூன்று தட்டில் சாம்பார் இட்லியை பரிமாறியபடி மீனாட்சி கேட்டதற்கு மெல்லியதாய் தலையாட்டினார்கள்.

'அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல.  எதாவது முக்கியமான விஷயங்களா? இருங்க அவரை கூட்டிட்டு வரேன்.'
என்றவர் திடீரென திரும்பி , 'உங்களுக்கு கோகுல்னு யாராவது தெரியுமா ? என்றார். மூன்று பேர் முகமும் மின்சாரம் பாய்ந்ததுபோல் திடுக்கிட்டன. திணறலாக மறுத்தார்கள். மீனாட்சி சந்தேகமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ,உள்ளே சென்றார்.

'நாம நெனச்சது சரிதான். உடனே காரியத்தை முடிச்சாகணும். இனி தாமதிக்கிற ஒவ்வொரு வினாடியும் ஆபத்து.'

அலைபேசி மீண்டும் அலறியது. திரும்பவும் மேலிடம். இப்போது அவனுக்கு பயம் அதிகரித்தது.மேலிடத்திற்கு என்ன காரணம் சொல்வது?  ஆபத்து சுற்றி வளைக்க ஆரம்பித்திருப்பது மட்டும் அவனுக்கு நன்றாக புரிந்தது. அருகிலிருந்தவனைப்  பார்க்க, அவனிடம் ஒரு பரிதாபமான   பார்வை தோன்றியது.

நடுத்தர வயதுக்காரர் சூழ்நிலையின்  இறுக்கத்தை குறைத்தார்.பேச்சை மாற்றினார்.
'தம்பி என்ன படிக்கிற? பாவம் இந்த நேரத்துல எந்த கடைல இட்லி வாங்குன ?'
பையன் பேசிகொண்டிருக்கும்போதே ஒரு அலறல்  சத்தம் மூவரையும் திடுக்கிட வைத்தது. உள்ளே ஓடினார்கள்.
---------------------------------------
டாக்டர் மீனாட்சியை தேற்றிகொண்டிருந்தார்.

'ஒன்னும் இல்லம்மா.
இப்போ நல்லா தூங்கிட்டிருக்கார் .இது ஒரு சின்ன depression . சூழ்நிலையோட இறுக்கத்தை மூளையும் மனசும் ஏத்துக்க  முடியாதபடி  அழுத்தம் வரும்போது இப்படி நடக்கறது இயற்கை.

ஒரு விஷயத்தைப் பத்தி திரும்ப திரும்ப யோசிச்சு தீர்வு கிடைக்கலைனா இப்படி ஆகும்.இதுக்கு Obsessed stateன்னு சொல்லுவாங்க.
ஆமா இந்த அளவுக்கு போக அவருக்கு என்ன பிரச்சனை? உங்களுக்குள்ள எதாவது சண்டையா?'

கண்ணீரை கட்டுபடுத்திக்கொண்டே மீனாட்சி கதறலோடு கோபத்தில் பொங்க ஆரம்பித்தார் - 'அதெல்லாம் ஒன்னும் இல்லேங்க டாக்டர். பத்து நாள் முன்னாடி வரைக்கும் நல்லாத்தான் இருந்தாரு.  எல்லாம் இந்த எழவு பிடிச்ச கம்ப்யூட்டர்னாலதான்.
எதோ கதை எழுதுற போட்டியாம். மூணாயிரம் ரூபா பரிசாம். அந்த  அறிவிப்பு வந்ததுல இருந்து இந்த ஆளு புத்தியோடவே  இல்லீங்க டாக்டர். 

வீட்டுபோன்ல இருந்தே செல்போனுக்கு கால் பண்ணிக்கிட்டு, பேப்பர் பேப்பரா எழுதி கிழிச்சு  போட்டுட்டு ஒரே தொல்லைங்க டாக்டர்.

பையன்கிட்ட ரெண்டு வரி அளவுக்கு எதையோ  கொடுத்து ,இதே மாதிரி எழுதி பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வாடான்னு சொல்லி, கொட்ட கொட்ட அந்த கெரகத்த பார்த்துட்டு இல்லாத  அட்டுழியம் பண்ணிட்டு இருந்தாருங்க டாக்டர். ஏணுங் டாக்டர் நீங்களே சொல்லுங்க ? அன்னைக்கு எதோ அவருக்கு தெரிஞ்சவங்க மூணு பேரு வந்ததால சட்டுன்னு இங்க வந்து சேர்க்கறதுக்கு ஆச்சுங்க. மவராசனுக நல்லா இருப்பாங்க.இல்லீனா இந்த மனுசனுக்கு எதாச்சும் ஆயிருந்தா எனக்கும் என்ர பையனுக்கும் யாருங்க டாக்டர் பொறுப்பு?

ஆளு முழிச்சதும் , இந்த கன்றாவியெல்லாம் இனி தொடக்கூடாதுன்னு  கண்டிசனா சொல்லிபோடுங்க டாக்டர்.மறுக்கா இது மாறி பண்ணுனா நான் பையன கூட்டிட்டு என்ர பாட்டுக்கு போய்ட்டே இருப்பேன். போதுஞ்சாமி இந்த புத்திகெட்ட ஆளு சகவாசம். இப்ப கதை ஒண்ணுதான் இந்த ஆளுக்கு கேடு.
போட்டி வைக்கரானுகளாமா  பொல்லாத போட்டி? நாசமா போறவனுக நல்லாவே இருக்க மாட்டானுக டாக்டர்.'

--------------------------------------
  பரிசல் , ஆதியை தேற்றிக்கொண்டிருந்தார்.

'விடுப்பா அந்த ஆளுக்கு ஒன்னும் ஆகலைல.udanz இயக்கத்துக்கு எந்த கெட்ட பேரும் இல்ல.தப்பிச்சோம். '

'யோவ் சும்மா இருய்யா.
பெரிய தீவிரவாத இயக்கம்  ரேஞ்சுக்கு பில்டப் பண்ணிக்கிட்டு
இருக்கீங்க.
நல்ல வேளை சரியான நேரத்துக்கு நம்ம போனோம் ,அந்த ஆளு உயிர் பிழைச்சான் .
அந்த அம்மாவுக்கு மட்டும் நாம யாருன்னு தெரிஞ்சிருந்தது , செத்திருப்போம்..முதல தகவல் சொன்னவனுக்கு ஒரு பெரிய கும்புடு போடணும்.இல்லேன்னா நம்ம கதி என்ன ஆவறது ? '

'ஒன்னும் ஆயிருக்காது.
புலம்ப அரம்பிச்சிராத..அதான் போகும்போதே
கஷ்டப்பட்டு கடன வாங்கி  , பாக்கெட்ல பணமும் கொண்டு போயிருந்தோம்ல. ஒரு வேளை அந்த ஆளு  கதை எழுதாம சாக மாட்டேன்னு சொல்லியிருந்தா,  போதும்பா நீ கதை எழுதுனதுன்னு சொல்லி பணத்தை அப்போவே கொடுத்திருப்போம். பரவாயில்ல பணம் மிச்சம்.'

பரிசல் பேசிக்கொண்டே போக தடுத்து நிறுத்தியது அலைபேசியின் அழைப்பு. மேலிடம்.ஒரு பெருமூச்சு விட்டபடி இப்போது அழைப்புக்கு பதில் கொடுத்தார்.

'எங்கங்க இருக்கீங்க? மூணு மணி நேரமா கால் பண்ணிட்டு இருக்கேன்.எடுக்க மாட்டீங்கறீங்க.வீட்டுக்கு வாங்க.உங்களுக்கு இருக்கு.'

'ஐயோ இல்லமா.அது ஒரு சின்ன பிரச்சனை. வந்து கூகிள்.. இல்ல கோகுல்....'

'உளறாதீங்க..இன்னும் பத்து நிமிசத்துல வீட்டுல இருக்கணும்'

பரிசலின் தவிப்பை ரசித்தபடி ஆதி கேட்டார்.

'என்ன சங்கர் உங்களுக்கு ,  ட்ரைனுக்கு லேட் ஆகல?'

பதில் சொல்லாமல் கேபிள் சங்கர் மிக சிரத்தையோடு எதையோ லேப்டாப்பில் டைப் செய்து  கொண்டிருந்தார்.

'சாப்பாட்டுக்கடை -  திருப்பூரில் பதிவர்கள் சார்பில் ஓர் அவசரகூட்டம் ஆதி , பரிசல் தலைமையில் நடைபெற்றது. ....
.....இவர்களின் ஸ்பெஷாலிட்டி சாம்பார் இட்லி .அருமையான நெய் மணக்கும் சாம்பார் இட்லி , கொத்தமல்லிதழை மிதக்க வெகு சூடாக  இருக்கிறது. ம்ம்ம்ம் அட்டகாசமான சுவை.விலை கொஞ்சம் அதிகமென்றாலும் worth .திருப்பூர் போகும்போது தவறாம ஒரு நடை போயிட்டு வந்திருங்க.
ராத்திரி  ஒரு மணி வரைக்கும்  பார்சலும் உண்டு.
 டிவைன்.'

----------------------------------------------------------------

Tuesday, August 23, 2011

குறுக்கு வழி : A Fiction


----------------------------------------------------
ஆகஸ்ட்  14 ,2011:

'அப்போ இது நிச்சயம் சாத்தியம்தானா ஜெனரல்?
இந்த இக்கட்டான நிலைமையில் இந்த முயற்சி வெற்றி தருமா?'

'வேறு வழி இருக்கா..சொல்லுங்க சார்..?'

'கண்டிப்பா இல்ல..ஆனா இந்த மாதிரி முறை இருப்பதே எனக்கு ஒரு பக்கம் சந்தோசமாவும், இன்னொரு பக்கம் நம்ப முடியாமலும் இருக்கு..நான் சொன்னாலும் மினிஸ்டர் நம்பணுமே..'

'சார்..சில விஷயங்கள் ராணுவத்தை தாண்டி வெளிய போகாது..யார் ஆட்சிக்கு வந்தாலும் கூடியவரை அவர்களுக்கு தெரியாமல் இந்த கண்டுபிடிப்புகளை வைத்திருப்போம்.இப்போ நீங்களா ஆலோசனை கேட்டதால இத சொல்றோம்..வன்முறை எதுவுமே இல்லாம இந்த நிலைமையை சமாளிக்கணும்னா இதுதான் ஒரே வழி..'

'ஆல்ரைட். ஐ அக்ரீ.அப்போ யார் இந்த வேலைய செய்ய போறது?'

'ஒரு சீனியர் Grade-One சயன்டிஸ்ட்.லெவல் ஏ.இந்தியன் சீக்ரெட்  மிலிட்டரி சர்வீஸ் விங்'

'சரி.  ஆல் தி பெஸ்ட் . நான் மேலிடத்துக்கு தகவல் சொல்லிடறேன்.உங்க போன்காலுக்காக காத்திருப்பேன்.'

-------------------------------------------

 ஜூன்  23 , 1976:

'ஆச்சர்யமா  இருக்கு  டாக்டர் . நீங்க சொல்றத பாத்தா இந்த மருந்து தீவிரவாதத்த உலகம் முழுக்க ஒழிச்சிடும் போலிருக்கே'

'சந்தேகம் வேண்டாம் கவ்ரவ். என்னோட பதினைந்து வருட உழைப்பு  இது. அந்த மூணு பேர பார்த்தீங்களா..?'

'ஆமா... அபாரமான மாற்றம்..அதிலயும் சப்ஜெக்ட் 47 பேச்சும் நடையும் நூறு சதவீதம் மாறிடுச்சு..அவ்வளவு மூர்க்கமா தன்  நாட்டுக்காக  மனித வெடிகுண்டா ,எல்லை தாண்டி வந்தவன் இப்படியா அமைதியாவான்?  '

'இதுல ஆச்சர்யபடறதுக்கு ஒன்னும் இல்ல . மருத்துவத்தோட மிக எளிதான சிறப்பு இது.. மூர்க்கத்தை குறைச்சு , அமைதியான மனநிலையை கொடுக்கிற மாத்திரைகள் பல இருக்கே. ஆனா என் கண்டுபிடிப்பு அதோட அடுத்த கட்டம். கூடவே ஒரு சுயநலத்தை புத்திக்குள்ள செலுத்துது.. தன் பாதுகாப்பு , தன் குடும்பம்,தன் குழந்தைன்னு ஒரு வட்டத்த தாண்டாம அதுக்குள்ளயே யோசிக்க வைக்குது. தன் குடும்ப பயம் வந்துதுனாவே ஒரு மனுஷனுக்கு  தீவிரவாதம் ,கொள்கையெல்லாம் 
ரெம்ப தூரம் ஓடி போய்டும்.. பிடிவாதமும் காணாம போய்டும்..'

'எல்லாரையும் இப்படி மன்னிச்சு விட்டுட்டா நம்ம நாட்டுக்குத்தான் டாக்டர் ஆபத்து.?'

'இல்ல..போர்னு வந்தால் நேருக்கு நேர் மோதலாம். அதில் எத்தனை பேரை வேணுமென்றாலும் அழிக்கலாம். ஏன்னா  அது நாடுகள் சம்பந்தப்பட்டது. அப்படி சாகும் வீரர்கள் ஒன்றும் தவறானவர்கள் அல்ல..தங்கள் நாட்டுக்காக போரிட்டு அழிகிறார்கள்..ஆனால் தீவிரவாதிகள் அப்படி அல்ல..தவறான மனிதர்களின் மூளை சலவையினால் பாதை மாறியவர்கள்.திருந்தப்படவேண்டியவர்கள். அவர்களில் ஒருவனை  அழித்தால் தீவிரவாதிதான் சாகிறான்.ஆனால் தீவிரவாதம் சாகாது.அதற்கு இந்த முறைதான் சரி..'
 
'இனி அடுத்த கட்டம் என்ன டாக்டர் ?'

'வேற என்ன? உடனே இந்த மருந்த இந்திய  ராணுவத்துக்கு அர்பணிக்கிறதுதான்.. இனி எதிர்பக்கம் எந்த தீவிரவாதி வந்தாலும் , கொல்லணும்னு அவசியம் இல்ல... மனுசனா ,அதுவும் தன்னலத்துக்காக  அடங்கிபோற சாதுவான மனுசனா மாத்திடலாம்..
இந்தியா அஹிம்சை தேசம்னு பெருமையா சொல்லிக்கலாம் கவ்ரவ்.'

'பாராட்டுக்கள் டாக்டர் மோத்தா '

புதிய குரல் கேட்டு இருவரும் திரும்பினார்கள்.  ராணுவ உடையில் மிடுக்காக ஜெனரல்.அருகில் புது நாகரீக உடையில் ப்ரித்வி. 

----------------------------------------------

ஆகஸ்ட்  18 ,2011:

'எனக்கு ரெம்ப பயமா இருக்கு. இதெல்லாம் நடக்குமா? இன்னும் கொஞ்ச நேரத்துல ஆள் ஜெயில்ல இருந்து வெளிய வர போறதா செய்தி வந்திருக்கு... '

'சார்..இத கண்டிப்பா நம்பலாம். இது வரைக்கும் படத்தில,கதைல  மட்டுமே சாத்தியம்னு நெனச்ச டைம் மெசின் ,இப்போ நம்ம ராணுவ விஞ்ஞானிகள் கிட்ட கைக்குழந்தை மாதிரி இருக்கு... எல்லா பிரச்சனையும் சுமுகமா முடிஞ்சுடும்.'

காரியதரிசி பேசிக்கொண்டே போக , அவரை சந்தேகமாக , கலக்கமாக பார்த்தார் மந்திரி.

-----------------------------------------------

ஜூன்  23 , 1976:

'எனக்கு புரியல ஜெனரல். நான் இந்த மருந்த தீவிரவாதிகளுக்காக கண்டுபிடிச்சிருக்கேன்.அதை நம்ம ராணுவ வீரன் ஒருத்தன்கிட்டயே  சோதனை செய்ய என்ன அவசியம்?'

'எதுவும் கேக்காதீங்க டாக்டர் மோத்தா.மேலிடத்து உத்தரவு.உடனடியா இது நடந்தாகணும்.'

'சாரி ஜெனரல்.காரணம் தெரியாம நான் இதுக்கு ஒத்துக்க முடியாது'

'சரி டாக்டர்..நீங்க ப்ரித்விகிட்ட பேசுங்க..அவர் எவ்வளவு சிரமப்பட்டு இங்க வந்திருக்காருன்னு தெரிஞ்சா நீங்க கண்டிப்பா ஒத்துக்குவீங்க'

'ஹாய்.ஐ அம் டாக்டர்.ப்ரித்வி.உங்க கண்டுபிடிப்பு அபாரம்.ஆனா
ஏன் பயப்படுறீங்கனு தெரியல..தப்பா போய்டும்னு நெனச்சா ?'

'வாட் நான்சென்ஸ். என் கண்டுபிடிப்ப கேள்வி கேட்க , சந்தேகப்பட உங்களுக்கு என்ன தகுதி இருக்கு.?'

'வாஸ்தவம்தான்.உங்க திறமையை சந்தேகப்பட இப்போ எனக்கு தகுதி மட்டும் இல்ல வயசும் இல்ல.. பை தி பை ,எனக்கு இப்போ ஆறு வயசுதான் ஆகுது'

மோத்தா முகத்தில் குழப்பமும் வியப்பும். ப்ரித்வி பேசத் தொடங்கினார்.

 ----------------------------------------

ஆகஸ்ட்  18 ,2011:

'உங்களுக்கு எப்படி இத பத்தி தகவல் தெரிஞ்சுது?'

'சமீபத்துல ராணுவத்துல நம்பிக்கையான என் ஆள் மூலமா அங்க நடந்த முக்கியமான பரிசோதனைகளைப் பற்றிய தகவல் எனக்கு கிடைச்சுது சார். அதுல எனக்கு ரெம்ப வியப்பா  பட்டது டாக்டர் மோத்தா மேற்கொண்ட பரிசோதனைதான்.

சுயநலம் புகுத்தி ஒரு மனிதனோட முழு போராட்ட குணத்தையும் மாத்தி அமைதியாக்குற மருந்தை கண்டுபிடிச்சு, அதுல  
வெற்றியும் அடைஞ்சிருக்காரு.ஆனா எதோ ஒரு காரணத்தால அவர் கண்டுபிடிச்ச மருந்துகள ,அதன் ரகசியத்த ராணுவத்துக்கு கொடுக்காம   பரிசோதனை தோல்வினு அவரா விலகிட்டார்.

ஆனா அவரோட முயற்சி வெற்றிங்கறது ,அவர் சோதனைக்கு உட்பட்ட  தீவிரவாதிகள தொடர்ந்து கண்காணிச்ச நம்ம ராணுவம்   உறுதிபடுத்திருக்கு. அவரோட மருந்துதான் இப்போ நமக்கு கை கொடுக்க போகுது. '

 பேசி கொண்டே போன அவரை ,பாக்கெட்டில்  ஈங்காரமிட்ட செல்போன் தடுத்தது
---------------------------------------

ஜூன்  23 , 1976:

'ஓகே ப்ரித்வி .உங்கள் திட்டத்திற்கு அரைமனதுடன் சம்மதிக்கிறேன்.மருந்த கொடுக்க வேண்டிய ஆள் பேர் என்ன ?

'இந்திய ராணுவத்தில் வேலை பார்க்கும் டிரைவர். 1965இல் நடந்த இந்திய பாகிஸ்தான்  போரில்  
ஒரு  ட்ரக்கில் எறியப்பட்ட குண்டுவீச்சில், உயிர் தப்பிய ஒரே வீரன்.  
பேர் - கிஷன் பாபுராவ் .'

அரை மணி நேரம். ஒரு மயக்க நிலையில் அந்த ராணுவ வீரனை கொண்டு வந்து படுக்க வைத்தார்கள்.

டாக்டர் மோத்தா , மருந்து கலக்கப்பட்ட ஊசியை எடுத்தார்.

----------------------------------------

ஆகஸ்ட்  18 ,2011:

'ஹலோ.மினிஸ்டர் பி.ஏ ?'

'சொல்லுங்க ஜெனரல். உங்க போன்காலுக்காகதான் வெய்ட் பண்ணிட்டு இருக்கேன். '

'போன காரியம் சக்சஸ்.
அனுப்புன ஆள் வெற்றிகரமா வேலையை முடிச்சிட்டு திரும்பிட்டார்.. '

'கிரேட்.உங்க திட்டம் அபாரம். நான் அப்புறம் கூப்பிடறேன்.'
போனை அணைத்து விட்டு சிரித்தார்.

பிறகு சொன்னார் - 'இப்போ ஆள தைரியமா வெளிய விடலாம் சார்.அமைதியா அவர் வீட்டுக்கு மட்டும் போவார்'

-----------------------------------------

ஜூன்  23 , 1976:

'உண்மையாதான் சொல்றீங்களா மோத்தா..'

'ஆமா..
நான் என் பரிசோதனை தோல்வின்னு சொல்லிட போறேன். இது சம்பந்தமான எல்லா  தகவல்களையும் அழிச்சிட போறேன்.
திவிரவாதிகள மனமாற்றம் செய்யணும்னு நான் கண்டுபிடிச்ச மருந்தை,இந்த மாதிரி நல்லவங்கள  ஓரங்கட்ட உபயோகபடுத்துவாங்கனு எனக்கு இப்போதான் தெரியுது.'

'அப்போ இந்த வீரன் நல்லவனா?'

'ஆமா. இன்னும் 35 வருஷம் கழிச்சு நாட்டுல ஊழலுக்கு எதிரா ஒரு மாபெரும்  புரட்சி ஏற்படுத்த போற ஒரு போராளி. அவரோட தேச உணர்வை அழிச்சு , சுயநலத்தை புகுத்திட்டா , அவர்  
அமைதியாயிடுவார்ன்னு நம்பித்தான் இப்போ டைம் மெசின் மூலமா இங்க வந்திருக்காங்க. தற்போது ப்ரித்வி வந்த வருங்காலத்தில் 
இதே நேரத்தில் , இவர் சிறையில் இருக்கிறார். அவர் வெளிவரும்போது மனம் மாறியிருக்க வேண்டும் என்பதே இவர்கள் எண்ணம். ஆனா அவங்களுக்கு ஒரு உண்மை தெரியாது'

'என்ன டாக்டர் அது?'

'நான் அவருக்கு
அந்த மருந்தை செலுத்தவே இல்ல .செலுத்தியிருந்தாலும் பெரிய மாற்றம் ஏற்படாதுன்னு  நெனைக்கிறேன்.'

'ஏன் அப்படி?'

'அவரோட மிலிட்டரி ரெகார்ட் புரட்டி பாத்தேன்.  ஆள் இது வரைக்கும் கல்யாணமே செஞ்சுக்கல.அந்த குண்டுவீச்சில உயிர் பிழைச்ச பின்னாடி ,மறுபடியும் ஒரு விபத்துல இருந்து தப்பிச்சிருக்கார். அதன் பின்னாடி சமூக சிந்தனையோடவே  வாழ்ந்திட்டிருக்கார்.
எதுவுமே தனக்குன்னு இல்லாதவன்கிட்ட  என்ன சுயநலத்த விதைக்க  முடியும்?  '

'அப்போ அவர் மனம் மாறிட்டார்-ன்னு நெனச்சுட்டு போனவங்களோட கதி ?'

கவ்ரவ் கேள்விக்கு மோத்தா ஒரு விஷம சிரிப்பு சிரித்தார்.

-------------------------------------------------------

ஆகஸ்ட்  18 ,2011:

டெல்லி மைதானம்:

'இந்தியாவுக்கு இரண்டாம் சுதந்திர போருக்கான நேரம் வந்து விட்டது.நான் இல்லாவிட்டாலும் இளைஞர்களே  , விட்டு விடாதீர்கள்..' 
- மக்களின் மிகுந்த ஆரவாரத்திற்கு இடையே துடிப்பான பேச்சைத் தொடங்கினார்  அன்னா ஹசாரே என்றழைக்கப்படும் கிஷன் பாபுராவ். 

---------------------------------------------------------