Saturday, November 10, 2012

தீபாவளி

டிஸ்கி - கொஞ்சம் பெரிய பதிவு.

என் பள்ளி நாட்கள் வரை தீபாவளி என்பது வருடத்துக்கு ஒரு முறை
மலரும் ஒரு தெய்வீக காதல் போல். ஒரு மாதம் முன்பிலிருந்தே ஒன்றிலிருந்து முப்பது வரை ஒரு பேப்பரில் எழுதி ஒவ்வொரு நாளாக அடித்துவிட்டு 'இன்னும் 24 நாள் இருக்கு ' 'இன்னும் 17 நாள் இருக்கு ' என்று காலையில் தொடங்கும் என் நாட்கள் , பண்டிகைக்கு பத்து நாள் முதலிருந்து அடுத்த கட்ட விறுவிறுப்புக்கு போகும்.காரணம் - பட்டாசு.
எதிர் வீட்டு பிரபு அண்ணன்,பக்கத்துக்கு வீட்டு ஆனந்த் , அதற்கடுத்த வீட்டு ரவி,ராஜா சகோதரர்கள் என்ற பட்டாளம் நட்பை மறந்து ஒரு போட்டி மனப்பான்மையோடு முறைத்துக் கொண்டு அலையும் நாட்கள் அவை.காரணம் - பட்டாசு.

சிந்தாமணியில் போய் முதல் கட்ட பரிவர்த்தனையை ஆரம்பித்து வைத்தால் ,தீபாவளிக்கு மூன்று நாள் முன்னரே அனைத்தையும் வெடித்து தீர்த்து விடும் அபாயம் உண்டு என்பதால் அப்பா வேறு ஒரு யோசனையை , நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது செய்ய ஆரம்பித்தார்.

கூட வேலை பார்க்கும் அனைவரிடமும் என்ன விதமான பட்டாசுகள் தேவை என கேட்டு , சிவகாசிக்கு ஆள் அனுப்பி மொத்தமாக வரவழைத்து வீட்டில் வைப்பார்.சரியாக பண்டிகைக்கு ஐந்து நாள் முன்னாடிதான் அந்த பெரிய 'மங்காத்தா' பணப்பெட்டி அளவுக்கு பெரியதாய் இருக்கும் பட்டாசு பெட்டியை பிரிக்க ஆரம்பிப்பார். கூட உதவிக்கு மூன்று பேர். இம்சைக்கு நான்.

எல்லாரும் கொடுத்திருக்கும் லிஸ்டை எடுத்து ஒவ்வொன்றாக படித்து , அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்டுள்ள பெட்டியில் பட்டாசுகளை நிரப்ப வேண்டும்.
உதவிக்கு என வந்தாலும் எல்லாரும் அமர்ந்துகொண்டு 'அதுல ஒன்னு எடுத்து அவங்க பாக்ஸ்ல போடு ; இந்த பாக்ஸ்ல ரெண்டு கலர் மத்தாப்பு' என என்னை வேலை வாங்கினாலும் எனக்கு அது அலுப்பாகவே இருக்காது.

எல்லாருக்கும் ஒரு பெட்டி என்றால் எங்கள் வீட்டுக்கு மட்டும் இரண்டு பெட்டி. எனக்கொன்று ; என் அக்காவுக்கு ஒன்று.காரணம் எனது முந்தைய தீபாவளி காலத்தில் நடந்த ஊழல்கள்தான். மொத்தமாக வாங்கி இதில் பாதி உனக்கு ;பாதி எனக்கு என்று மிக நியாயமாக தொகுதி பங்கீடு செய்தாலும் , கூட்டணி தர்மத்தை
துச்சமென மதித்து , அக்கா வீட்டில் இல்லாத
போது கொஞ்சத்தை எடுத்து ,ஓரிரு நாளில் ஏறக்குறைய முழுதும்
என் பொக்கிஷ குவியலில் இருக்கும்.
ஆகவே என் வீட்டுக்கு இரண்டு பெட்டி பட்டாசுகள் என்பது எழுதபடாத விதியாய் இருந்தது.

ஆனாலும் தீபாவளி அன்று மாஸ்டர் பிளான் செய்து , அக்கா நான்கைந்து வெடி வெடித்ததும் , பக்கத்தில் அலறும்படி ஒரு வெடியை தூக்கிப் போட்டால் ,பயந்து போய் ' எல்லாத்தையும் நீயே வெடிச்சு தொலைடா' என உள்ளே ஓடி விடுவாள்.திரியைக் கிள்ளி தரும் பொறுப்பு அப்பாவுக்கு.



எல்லா வருடமும் என் லிஸ்ட்தான் பெரியதாய் இருக்கும் என்றாலும் , எந்த பெட்டியைப் பார்த்தாலும் பொறாமையாகவும் , இந்த பெட்டி என்னுடையதை விட பெரிதாக இருக்கிறதே என்ற அவநம்பிக்கையும் இருக்கும். ஆனால் அப்பா கூட வேலை பார்க்கும் எல்லாருக்கும் வீட்டில் பெண் குழந்தைகள்தான் என்பதனால் வெறும் சங்கு சக்கரம்,பூவாணம் , மத்தாப்பு போன்ற காந்தியவாதி பட்டாசுகளாக இருக்கும். அதையெல்லாம் பார்த்து ஏதோ சோலே பட அம்ஜத்கான் போல ஒரு ஏளன சிரிப்பு என்னிடம் பிறக்கும்.

எனக்கெல்லாம் பச்சை
கயிறு இறுக்கி கட்டிய நைட்ரஜன் பாம் , செவென் ஷாட் எனப்படும் எங்கெங்கோ அலைபாய்ந்து வெடிக்கும் இன்னொரு தீவிரவாத வெடி , சரவெடி , லட்சுமி வெடி , நேதாஜி வெடி , இது எல்லாம் போக , என் சொந்த ஊரிலிருந்து சித்தப்பா கொண்டு வந்த ஓலை வெடி , நானும் வீரன்தான் என காண்பிக்க கையில் பற்ற வைத்து தூக்கி போடும் ஊசி வெடி என ஒரு படுபயங்கர வெடிபொருட்கள் லிஸ்டில் இருக்கும்.

பிள்ளையார் சுழி போடுவது ரோல் கேப் மூலம்தான்.அதிலும் ரோல் கேப் துப்பாக்கி எதுவும் ஒரு நாளைக்கு மேல் வராது. பத்து முறை லோட் செய்தால் பதினோராவது தடவை பயன்படாது. அதிகபட்சமாக ஒரு முறை நான்கு துப்பாக்கி வாங்கியிருக்கிறேன். பிறகு எனக்கே மனம் பொறுக்காமல் மீதி கேப்பை சுவற்றில் தேய்த்தும் , வெடிகளுக்கு சுற்றும் டெட்டனேட்டராக பயன்படுத்துவேன்.


வெங்காய வெடி என்கிற மாப்பிளை வெடி அப்போதே தடை செய்யபட்டிருந்தாலும் , எங்களுக்கு எப்படியாவது கிடைக்கும்படி தேவராஜன் கடை அண்ணாச்சி ஏற்பாடு பண்ணியிருப்பார். இப்போதெல்லாம் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. சரியான ரவுடி வெடி.

இது மட்டும் வைத்து சமர்த்தாக வெடிக்கும் ரகம் அல்ல எங்கள் கோஷ்டி. பாம் என்றால் அது எவ்வளவு சத்தமாக, விதவிதமாக வெடிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய தயாராய் இருக்கும் தன்மானபடை. வெயிட்டான பொருள் எது சிக்கினாலும் , அதற்கு அடியில் வெடி வைப்பது , பத்தியை அழகாக வெட்டி , வெடியுடன் சேர்த்து பற்ற வைத்து ஏறக்குறைய நாட்டு வெடிகுண்டை டைம்பாம் போல ஆக்கி வெடிக்க வைப்பது என பலவிதங்கள்.

இதில் நாங்கள் எல்லை மீறியது எதிலென்றால் , தீபாவளி சமயத்தில் மழை பெய்து தேங்கியிருக்கும் தண்ணீரில் , வெகு பக்குவமாக எதாவது ஒரு காய்ந்த இலையை மிதக்க வைத்து ,அதில் பாம் வைப்பது.
பற்ற வைக்கும்போது கொஞ்சம் அதிர்ந்தாலும் வெடி தண்ணீரில் மூழ்கி செயலிழந்து விடும் அபாயம் இருப்பதால் , எந்த யோகாவும் , ப்ராணயாமாவும் கற்றுகொள்ளாமலேயே மூச்சை முறைபடுத்தி ஒரு பட்டாம்பூச்சி அமர்வது போல் பற்ற வைத்து ஓடி வருவோம்.

இந்த சின்ன வயதில் , இந்த செயற்கரிய செயலை பாராட்டாமல், பெருசுகள் எதோ அந்த பக்கம் சரியாக வெடி வெடிக்கும்போது வந்து சட்டையை சேறாக்கி கொண்டு , எதோ நாங்கள்தான் தப்பு செய்த மாதிரி
' உங்க பையன் என் தீபாளி சட்டைய என்ன பண்ணிருக்கானு பாருங்க ' என வீட்டில் பற்ற வைத்து விடுவார்கள். பிறகு பண்டிகை நாளில் என் முதுகில் வெடி வெடிக்கும்.

ஒரு வழியாக எல்லா பட்டாசையும் வெடித்து , பிறகு இரவானதும் , ராக்கெட் , பூவாணம் , சங்கு சக்கரம் என ஒரு ரவுண்ட் வந்து அதையும் முடித்து , பாம்பு பட்டாசு புகையை முடித்து கொண்டு , எல்லா பசங்களும் ஆயுதம் தீந்த போர்வீரர்கள் மாதிரி நிராயுதபாணி ஆக நிற்போம். (நிற்க;கார்த்திகை பட்டாசு கோட்டா தனி.)

பிறகு வெடித்த எல்லா பட்டாசையும் மொத்தமாக ஓரிடத்தில் கொட்டி , நெருப்பு மூட்டி அதில் வரும் வண்ண வண்ண புகைகளை ரசித்த பிறகே எங்கள் போர் குணம் தணியும். இருந்தாலும் எங்கள் தினவெடுத்த தோள்களுக்கு இன்னும் வெடி தேவை என்று பரிதாபமாக யாரை பார்த்தாலும் , எல்லாரிடமும் சொல்லி வைத்ததுபோல் ஒரு ஏளன புன்னகை தோன்றும் ' கொஞ்சமாடா ஆடுனீங்க..இனி என்னடா பண்ணுவீங்க ? ' என்பதுபோல்.

அடுத்த நாள் எந்த வீட்டுக்கு முன்னால் பட்டாசு குப்பை அதிகமாக இருக்கிறதோ அங்கு எதாவது ஒரு வாண்டு இருக்கிறது என்று அர்த்தம்.

கால மாற்றத்தில் எது மாறினாலும் , தீபாவளி நாளின் பரபரப்பு மட்டும் மாறாமல் இருக்கிறது. இப்போதும் ஊருக்கு சென்று எங்கள் வீதியை பார்த்தால் புதிய கோஷ்டி ஒன்று நாங்கள் செய்த அதையே திரும்ப அனுபவித்து செய்து கொண்டிருப்பது தெரிகிறது.ஆனால் எனக்கு இப்போதெல்லாம் வெடி வெடிக்க பயம் ஏற்பட்டுள்ளதை ஒத்துக்கொள்ள வேண்டும். அக்கா பையன் ரோல்கேப் வெடித்தாலே கண்ணை முடிகொள்ளும் பய உணர்ச்சி வந்து விட்டது. என்ன காரணமோ?

ஆனாலும் குடும்பத்துடன் ஒன்றாய் இருப்பது , மகிழ்ச்சியாய் கொண்டாடுவது என தீபாவளியின் தனிச்சிறப்பு மாறவில்லை.டிவி சேனல்களின் பிடிகளில் சிக்காமல் அந்த நல்ல நாளை காப்பாற்றுவது நம் பொறுப்பு.
அன்றைக்கு ரிலீஸ் ஆகும் படத்தை கூட வேறொரு நாள் பார்த்துக்கொள்ளலாம். குடும்பத்துடன் சேர்ந்து கொண்டாடும் சந்தோசம் வேறு நாள் கிடைக்காது.

வேலையில் மூழ்கி, பொறுப்புகளில் சிக்கிக்கொண்டு ,எப்போதும் முகத்தில் ஒரு கண்டிப்பை போலியாய் காட்டிகொண்டு , கண்டம் தாண்டி வாழ்ந்து வரும் இந்த சமயத்தில் , எல்லாரும் ஊரில் தீபாவளி கொண்டாடி அதை படம் எடுத்து அனுப்புகிறோம் என்று சொன்னாலும் ,அது முழு சந்தோசத்தை கொடுக்காது என்பது நிதர்சனம்.

எப்போதும் தீபாவளி பின்னிரவில் ,அப்பாவை கட்டிக்கொண்டு ஏக்கமாய் கேட்கும் கேள்வி ஞாபகத்துக்கு வருகிறது - 'அடுத்த தீபாவளிக்கு இன்னும் எத்தனை நாள் இருக்குப்பா?' .

அதிக நாள் ஆகும் என்று தெரிந்திருந்தாலும் , அவர் அன்பாக அணைத்துக்கொண்டு , 'சீக்கிரமா வந்திரும்ப்பா ' என்று சொல்லும் ஆறுதலுக்கு மயங்கும் அந்த கணம் கவிதை.

ஹ்ம்ம் ..குழந்தையாகவே இருந்திருக்கலாமோ?

Saturday, June 16, 2012

பாப்கார்ன் பாக்கெட் - 20120616

'அனுதாப அலை ' மிக மோசமானது என்பது மற்றொரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது.
கழுத்தில் காயம்பட்ட எம்ஜிஆர் போஸ்டர் மட்டுமே ஓட்டுகளை அள்ளி  குவித்தது இதற்கு ஒரு எடுத்துகாட்டு. போன முறை சன் டிவி ,கலைஞர் கைதை திரும்ப திரும்ப காட்டி ஒட்டு வாங்கியது இந்த முறையில்தான்.
உண்மைகளை மறக்க வைத்து வெறும் உணர்ச்சிகளால் பெருமளவில் குத்தப்படும் இந்த ஓட்டுகள்  , ஆந்திர இடைதேர்தலில் காங்கிரஸ்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.   
ஜெகன்மோகன் கட்சிக்கு 15 சீட்டுகள் கிடைத்திருக்கிறது. காங்கிரஸ்க்கு 2  மட்டும்.
சொத்துகுவிப்பு வழக்கில் கைதாகி சிறைப்பட்டிருக்கும் ஜெகன் ,  இடைதேர்தல் பிரசாரத்துக்கு ஜாமீன் கேட்க , அதுவும் கொடுக்கப்படாத   நிலையில்  ,அதுவே அவருக்கு பெரிய அநுகூலமாகி விட்டது.
2014 தேர்தலில் அவரே முதல்வர் ஆவார் என்று இப்போதே அரசியல்  ஆருடங்கள் ஆரம்பித்து விட்டன. 
வெட்டவெளிச்சமாக அவர் குற்றங்கள் , ஊழல்கள் எல்லாம் வெளியே உலா வரும்போதும் இந்த வெற்றி கிடைத்திருப்பது நியாயமான அரசியல்வாதிகளை தலைகுனிய வைக்கிறது ( அதற்காக ,காங்கிரஸ் நியாயமான் கட்சி என்பதல்ல அர்த்தம்) .
இப்படி எந்த ஒரு புரிதலும் இல்லாமல் மக்கள் இருக்கும் வரை , இது போன்ற ஆச்சர்யங்கள் அரசியலில் அடிக்கடி நிகழ்ந்து கொண்டே இருக்கும். கண்டிப்பாக இவை மக்களுக்கு நல்லதல்ல. 
போகிற போக்கை பார்த்தால் , முதல்வர் பதவிக்கு போட்டி போட , முதல் தகுதியே  அந்த நபர் ஊழல்  வழக்கிலும்,சொத்துகுவிப்பு வழக்கிலும் கைதாகியிருக்க வேண்டும் 
என்பதாக  மாறிவிடும் போல.
 அது சரி , அக்கம் பக்கம் எல்லா மாநிலத்திலும் இந்த நிலை இருக்கும்போது ஆந்திரா மட்டும் என்ன புண்ணியம் செய்திருக்கிறது , தப்பிக்க ?
-------------------------------------------------

 அதிமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆகியிருக்கும் நிலையில் , இந்த காலகட்டத்தில் என்ன சாதனை நிகழ்ந்துள்ளது என்று அலசினால் பெரிய ஏமாற்றமே மிஞ்சுகிறது. முக்கிய பிரச்சனையான மின்வெட்டு அதிகமாகியிருக்கிறதே தவிர எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை. அண்ணா நூலக மாற்றம் , இரண்டு இடைதேர்தல் , புதுக்கோட்டை இடைதேர்தலுக்கான 32 அமைச்சர்கள் கொண்ட குழு
அமைத்தது   , முன்னாள் எம்எல்ஏக்கள் வீடுகளில் சோதனை செய்வது, எதிர்கட்சியான தேமுதிகவை அவமதிப்பது என்ற வட்டத்துக்குள் மட்டுமே ஒரு வருடம் செலவாகியிருக்கிறது.

எதற்கு ஒரு இடைதேர்தலுக்கு 32 அமைச்சர்கள் கவனம் தேவை ? கூடவே முதல்வரின் நேரடி பிரசாரமும்? ஓராண்டு ஆட்சி திருப்தி அளிக்கும்படியிருந்தால்   மக்கள் தாங்களாகவே  அரசுக்கு வாக்களிக்க போகிறார்கள்.


ஆளுங்கட்சி செயல் இப்படி என்றால் எதிர்கட்சியின் செயல்திறன் அதையும் மிஞ்சிவிட்டது.  தேமுதிக செயல்பாட்டை விமர்சனம் செய்யும் முன் எங்களுக்கு கொஞ்சம் நேரம் கொடுங்கள் என்று விஜயகாந்த் சொல்லி பல மாதங்கள் ஓடி விட்டது. பொறுப்பான ஒரு எதிர்க்கட்சி செய்யவேண்டிய எந்த ஒரு பணியையும் இவர்கள் செய்யவில்லை.இவர்களும் இடைதேர்தலில் மட்டுமே சக்தியை 
செலவழிப்பது வேதனை.

ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் இடைதேர்தல்களில் மட்டுமே கவனம் செலுத்தினால் மக்களை யார் பார்ப்பது?

வாழ்க ஜனநாயகம்
---------------------------------------------------------

கப்பார்சிங் கலக்கி எடுத்துட்டு இருக்கு - ஆந்திரா மட்டுமல்ல  உலகம் முழுக்க.
'பத்து வருஷம் பெரிய ஹிட் இல்லைனாலும் பரவாயில்ல ; சுமாரான ஒரு படமாவது கொடுங்க தலைவா'ன்னு  பவன் கல்யாண் ரசிகர்கள் வெறித்தனமான வேண்டுக்கோள் வைக்க , பவனும் அங்க இங்க தேடி,  'தபாங்'கை கையில் எடுத்து , அவரைப்போலவே தொடர் தோல்விய  தந்துட்டு இருந்த இயக்குனர் ஹரிஷ் கையில கொடுத்து படம் பண்ணலாம்னு  சொன்ன தைரியத்துக்கு  கிடைச்ச  வெற்றி இது.

கூடவே நம்மூர் ஸ்ருதி கமல். அந்த பொண்ணுக்கும் அங்க ராசியில்லாத நடிகைனுதான் பேர். இப்படி எல்லாம் வெளங்காத  ராசியும் ஒண்ணா சேர்ந்து , நல்ல ராசியான படத்த கொடுத்துட்டாங்க..

இதுவரைக்கும் இந்த படத்தை எனக்கு தெரிஞ்ச எல்லா தெலுங்கு  நண்பர்களும் 2 தடவை பாத்துட்டாங்க.சண்டை , நக்கல் வசனம், அலற வைக்கிற பாட்டுன்னு கமர்சியல் பார்முலா சரியான கலவைல கலந்த காக்டெயில் ,
தெலுங்குதேசத்தில்  யாருக்குதான் பிடிக்காது?



ரீமேக் படம்னா ,சட்டை கூட மாத்தாம அப்படியே சீனுக்கு சீன் காப்பி அடிக்க தேவையில்லன்னு , விஜய்க்கும் ,ஜெயம் ராஜாவுக்கும்,  ஒஸ்தி தரணிக்கும் சொல்லாம சொல்லி கொடுத்திருக்கு இந்த படம். கெவ்வ்வ்வ்  கேகா..
  --------------------------------------------------------------------------

அப்துல் கலாம் பரிசீலனையில் இல்லை என்பது உறுதியாகி விட்ட பிறகு , யார் வந்தால் என்ன என்ற மனநிலை வந்துவிட்டது.

இந்தியாவின் முதல் குடிமகனாக  கண்டிப்பாக ஒரு அரசியல்வாதி வரகூடாது என்பதுதான் மீதியுள்ள  இந்திய குடிமக்களின்  ஆசை. அதுவும் இன்று  வரை கலாம் பல நாடுகளில் சென்று ஆற்றிய உரைகளை பார்க்கும்போது , ஒரு ஏக்கம் நம்மையறியாமல் மனதை வாட்டுகிறது.

காங்கிரஸ் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள பிரணாப்க்கு மார்க்சிஸ்ட் , திமுக உள்ளிட்ட கட்சிகள் எல்லாம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள நிலையில் மக்கள்தான் என்ன செய்வது என்று புரியாமல் வழக்கம் போல திணறுகிறார்கள். 51  சதவீதம் தாண்டி ஆதரவு இருப்பதால் அவர் ஜெயித்தது போலதான்.  பிரதமர் ஆக வேண்டும் என்று விரும்பிய அவருக்கு ஜனாதிபதி பதவி கிடைக்கிறது.

கலாமை ஆதரித்த மம்தாவுக்கு நன்றிகள்.அடுத்த 'ரப்பர் ஸ்டாம்ப்'க்கு வாழ்த்துக்கள்.
---------------------------------------------------

MIB 3 - மிக ரசித்து பார்த்தேன். நான் முதல்முதலில் தனியாக தியேட்டர் போய்   பார்த்த படம் MIB முதல் பாகம். அதன் பின்னால் வந்த இரண்டாம் பாகத்தில் எனக்கு எந்த குறையும் தெரியவில்லை என்றாலும் , படம் படுவிமர்சனத்துக்கு உள்ளானது,  இழந்த நிலையை மீட்ட , மீண்டும் இணைந்த இந்த குழு மிகபெரிய வெற்றி அடைந்துள்ளது. 


வில் ஸ்மித் பதினைந்து வருடம் கழித்தும் அப்படியே இருக்கிறார். இடைப்பட்ட காலத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருந்தாலும் , கதைக்கு இன்னமும் பொருந்துகிறார். அதே அவசரத்தனம்,சின்ன தவறுகள் செய்து முழிப்பது என்று நொடிக்கு நொடி ரசிக்க வைக்கிறார்.

டாமி லீ ஜோன்ஸ் வயதிற்கு தக்கவாறு கதை அமைத்து , அதை பல முடிச்சுகள் போட்டு குழப்பிவிட்டு , பின் கடைசி காட்சி வரும் வரை ஒவ்வொன்றாக தெளியவைத்து முடித்திருப்பது மிக அருமை. கடைசி ஐந்து நிமிடம் ,வில் ஸ்மித்தின் தந்தை யார் என்று விளக்கி , அவருக்கும் ஜோன்ஸ்க்கும் உள்ள உறவைப்பற்றி உணரும்போது , கதை அமைத்த விதம் ஆச்சர்யப்படுத்துகிறது.

எனக்கு படம் இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. அவ்வளவு சுவாரஸ்யம். கூட வந்த மீதி இரண்டு பேர், படம் முடிந்ததும்  ஒரே மாதிரி சொன்னார்கள் - 'சரியான மொக்கை டா.. எப்போ முடியும்னு ஆகிடுச்சு'  -  ஹ்ம்ம் Yes..Opinion differs.
--------------------------------------------
வைரமுத்து வரிகளும் ரஹ்மானின் இசையும் ... காதல் பிரிவின் வலியை இதை விட உணர்ச்சிபூர்வமாய் யாரும் உணர்த்தமுடியாது என்னும்படி சவாலான பாடல்..

Saturday, May 19, 2012

கலகலப்பு @ மசாலா கஃபே

1996 -இல் நவரச நாயகன் கார்த்திக் மார்க்கெட் இழந்து , நடிப்பதை விட்டுவிட்டு சொந்த ஊர்  போய்விடலாம் என்று முடிவு செய்தபோது ஒரு பட வாய்ப்பு வந்தது. அதை முடித்து விட்டு நம்பிக்கையில்லாமல் கிளம்ப தயாரானபோது, படம் சரவெடி போல படு ஹிட் ஆகி ,கார்த்திக்கை கம்பீரமாக அடுத்த ரவுண்ட் வரவைத்தது. படம் - உள்ளத்தை அள்ளித்தா . இயக்கம் - சுந்தர் சி.

பதினைந்து வருடங்களுக்கு பிறகு 'நடிகர்' சுந்தர் சி ,ஏறக்குறைய அதே நிலைமையில் இருக்க, இயக்குனர் சுந்தர் சி அவரை காப்பாற்றியிருக்கிறார். படம் - கலகலப்பு @ மசாலா கஃபே. நல்ல இயக்குனர் தமிழுக்கு  திரும்ப கிடைத்ததற்கு  மகிழ்ச்சி.

லாஜிக்  என்ற ஒரே ஒரு விதியை தளர்த்திவிட்டு சுந்தர் சி படத்துக்கு போனால் , கண்டிப்பாக ரசிகர்களை ஏமாற்ற மாட்டார் என்பதை மீண்டும் நிருபித்திருக்கிறார். படம் இரண்டரை மணி நேரம் புன்னகைக்க  - ரசிக்க -விலா நோக சிரிக்க வைக்கிறது.


விமல் - சிவா - சந்தானம் என்று மூன்று நாயகர்கள்.  அப்பாவி நடிப்பில் வழக்கம் போல கிண்டல் கலந்து விமல் கலக்கினால், பஞ்ச் டயலாக் கொடுத்து  அவருக்கு இணையாக கூடிய வரை நடிக்கிறார் சிவா. ஆனால் நடிப்பில் வெல்வது விமல்தான்.

கும்பகோணத்தில் நடக்கும் கதை. அப்பா காலம் வரைக்கும் நன்றாக ஓடிய ஹோட்டல்  டல்லடிக்க தொடங்கியதும் , அதை மீண்டும் முன்னுக்கு கொண்டு வர அவர் படும் பாடும் , ஒவ்வொரு  முயற்சியும் தோற்கும்போதும் அவர் கட்டும் ரியாக்சனும் , இளவரசுவிடம்  கடன்  வாங்கி கட்ட முடியாமல் 
அவரிடம் இருந்து தப்பிக்க போராடுவதும் - நல்ல நடிப்பு.

காமெடி தாண்டி சிவா எந்த படத்திலும் நடிக்க முடியாது என்பதை தெரிந்து , இயக்குனர் அவரை உபயோகபடுத்தியிருப்பது நன்றாக வேலை செய்கிறது. டீக்கடையில் நண்பன் 'மச்சான் உன் ஆளு போறாடா' என்றவுடன் 'அண்ணே..இவனுக்கு மட்டும் ரெண்டு பிஸ்கட் கொடுங்க' என்பதிலிருந்து  விமலிடம் ' கேள்வி கேக்கறது ரெம்ப சுலபம்.பதில் சொல்றதுதான் கஷ்டம். அதுவும் மகாநதி பாக்காதவன்கிட்ட பதில் சொல்லவே முடியாது' என கத்துவதிலும் 'சகோதரர்' என்று விமலை அழைப்பதிலும் -ஹ்ம்ம்  நல்ல முயற்சி சிவா.குறை ஏதும் இல்லை.   

இடைவேளை தாண்டி சந்தானம் வந்ததும் , ஏதோ பெருமாள் கோவில் சொர்க்க வாசல் திறக்கும்போது ஏற்படும் ஆனந்த கூச்சல் போல தியேட்டர் எங்கும் கைதட்டல் எதிரொலிக்கிறது. 'அவ்வ்வ்ளோ  பெரிய ஜோக் இல்ல இது ' என்ற டயலாக் கூட சிரிப்புக்கு மினிமம் கேரன்ட்டி.
அதிரடி introவுக்கு அடுத்த சீனிலேயே , ' வழக்கம் போல இன்னைக்கும் உங்கள ஒருத்தன் என்ன பத்தி படு கேவலமா பேசியிருப்பானே..அவன் யார்னு போட்டு  கொடுத்தா ஐநூறு ரூபா தருவேன்' ன்னு தன் அக்மார்க் அலம்பலை ஆரம்பித்து விடுகிறார்.



அதுவும்
வள்ளி பட ரஜினி வசனத்தை சொல்லும்
அஞ்சலியிடம் ' ஏன் இத இப்டி சொல்லேன்.நீ விரும்புற பையனை விட உன்னை விரும்பற பையனை கட்டிகோன்னு.' என்று நச் கேள்வி கேட்டு பிறகு உதிர்க்கும் மொட்டைமாடி டயலாக் பின்னுகிறது.இம்சை அரசன் திரும்பி வருவதற்குள் ஒரு நல்ல உயரத்துக்கு போய்விடுவார் சந்தானம்.இவரோடு போட்டி போட்டு கலக்கும் மனோபாலா கேரக்டர் ஸ்கெட்ச் அசத்தல். அவர் கெட்டப் படு பொருத்தம்.

அஞ்சலி , ஓவியா நடிப்பு ஓகே. not  bad.

ஹீரோக்கள் மூன்று பேர் இருந்தாலும் படத்தின் நிஜ ஹீரோக்கள்  திரைக்கதையும் வசனமும்தான். ஹோட்டல் நிகழ்வையும் , வைரம் கைமாறும் கதையையும் சரியாக பொருத்தி அமைத்த விதம் அருமை. வசனங்கள்தான் படத்தின் ஆணிவேர். சுந்தர் சி -  பத்ரி இருவரின் உழைப்பு தெள்ளதெளிவாக தெரிகிறது.  
சுந்தர் சி-யின் 25வது படம் இது.சொல்லும்படியான லேண்ட்மார்க்.  ஒவ்வொரு காட்சியிலும் perfection தெரிகிறது

'அட்டு பிகருக்கு குட்டு பாய்' உட்பட சில வசனங்கள் கேபிள் சங்கரின் கைவண்ணம் என்று நினைக்கிறேன்.திரையுலகில் அவர் பிள்ளையார் சுழி வெற்றிப்படமாக அமைந்திருக்கிறது .மகிழ்ச்சி.அவர் பயணம் தொடர வாழ்த்துக்கள்.

கடனை திருப்பி  கேட்டு விமலை மிரட்டும் இளவரசுவை ,
சிவா வந்தவுடன் , இன்ஸ்பெக்டரிடம் மாட்டிவிட்டு அவரை பல கெட்டப்களில் ஓட வைக்கும் காட்சிகள் செம கலக்கல். இளவரசு - ஜான் விஜய் - பஞ்சு சுப்பு என எல்லாரும் நிறைவாக செய்திருக்கிறார்கள்.

மொத்தத்தில் , ரசிகர்களின் மாறிவரும் ரசனையை உணர்ந்து ,அதற்கு ஈடுகொடுக்கும்  திறமையான  ஒரு குழு இணைந்து , தரமான காமெடி படத்தை கொடுத்திருக்கிறார்கள். தாராளமாக ரசிக்கலாம்.

கலகலப்பு - நல்ல பொழுதுபோக்கு படம்.


பேஸ்புக்கில் தொடர , வலது பக்க மேல் ஓரத்தில் உள்ள 'Find us on Facebook'ல்  Like பட்டனை அழுத்தவும்.

Monday, April 16, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி


'சினிமா என்னும் ஊடகத்தை வியாபாரமாக மாற்றுகிறார்கள்; கமர்ஷியல் என்னும் பெயரால் அதை  அழிக்கிறார்கள்' என்று அடிதொண்டையில் கத்தும் சினிமா விமர்சகர்கள் ஓகே ஓகே  தியேட்டர் பக்கம் வர வேண்டாம்.
எப்படியும் இவர்களும் யாருக்கும் தெரியாமல் ராத்திரி வந்து படம் பார்க்கத்தான்
போகிறார்கள்; முழுக்க பார்த்து ரசித்து பிறகு அடுத்த நாள் கலைத்தாயின் காவல்காரர்களாக படத்தை குற்றம் சாட்டுவார்கள்.

ஆனால் இது எதைபற்றியும் கவலைப்படாமல், படம் பார்க்க வரும் சாமான்ய ரசிகர்களை , இரண்டரை மணி நேரம் சிரிக்க வைத்து , கவலையை மறக்க வைத்த இயக்குனர் ராஜேஷ்க்கு பெரிய கைதட்டல் கொடுக்கலாம். நிச்சயமாக சொல்லி அடித்த கல் இது - டார்கெட் மிஸ் ஆகல.


இதுதான் யதார்த்தம். என்னதான் கலை , உலகத்தரம் என்று எத்தனையோ மேதைகள் சினிமாவைப் பற்றி பேசினாலும் , சாதாரண ரசிகனின் சந்தோசமான கைதட்டல் சத்தத்தில் அவை எதுவுமே யாருக்கும் கேட்காது.இந்த உண்மையால்தான் சிவாஜி காலத்தில் எம்ஜீஆரும் , கமல் காலத்தில் ரஜினியும் ஓவர்டேக் செய்து வெற்றிபெற முடிந்தது.

நாலாயிரத்து முன்னூற்றி இருபத்தி ஏழு தடவை பார்த்த  கதை.  அதில் கடைசி இரண்டு , இதே இயக்குனர் தன் போன இரண்டு படத்தில் ஏற்கனவே காட்டி விட்டார். இப்போதும் அதே. ஆனால் நடிகர்கள் வேறு வேறு.  அதனாலென்ன? படத்தின் தோல்வி என்பது நிர்ணயம் ஆவது - படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கு சலிப்பு வந்தால் மட்டுமே . அதை ஒவ்வொரு நிமிடமும் மனதில் வைத்து ஒவ்வொரு சீனையும் தரமான சிரிப்பிற்காக செதுக்கி வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குனர்.

சிவா மனசுல சக்தி , பாஸ் என்கிற பாஸ்கரன் - இந்த இரண்டு படங்களும் இப்போதும் டிவியில் போட்டால் ,அது எத்தனை முறை பார்த்ததானாலும் மீண்டும் பார்க்க தோன்றும் ஈர்ப்பு  உண்டாகியிருக்கிறது. அந்த வரிசையில் இந்த படமும் இனி கண்டிப்பாக இடம்பெறும்.

படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின்.  தளபதி மகன் என்பதால் பன்ச் டயலாக்கோ , தலைவர் பேரன் என்பதால் பக்கபக்கமாய் வசனமோ வேண்டும் என்று கேட்காமல் , ஒரு சராசரி யூத் கேரக்டர் மூலம் அறிமுகம் ஆகி பெரிய பாராட்டை பெறுகிறார். கொஞ்சமே கொஞ்சம் அரசியலை கலந்திருந்தாலும் , மண்ணை கவ்வியிருக்கும் இந்த படம்.

நல்ல ஒரு தயாரிப்பாளர்க்கு  இருக்க வேண்டிய புத்திசாலித்தனம் உதய்க்கு  இருக்கிறது. அதற்கு கிடைத்த பரிசு - படத்தின் இமாலய வெற்றி. மென்மையான குரல், உணர்ச்சிகளை வேறுபடுத்தி காட்டத்தெரியாத நடிப்பு,  வராத நடனம் என்று எத்தனையோ மைனஸ் இருந்தாலும் , கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்த விதத்தில் எல்லாவற்றையும் ஓரங்கட்டி கைதட்டல் பெறுகிறார் உதயநிதி.

சந்தானத்தை பேச விட்டு , அடக்கி வாசித்து நடிக்கும் உத்தி ஜெயித்திருக்கிறது.
குரலிலும் மேனரிசத்திலும் ஜீவாவை நினைவுபடுத்தினாலும் , முதல்  படத்துக்கு நல்ல ஹோம் வொர்க் செய்து உழைத்திருப்பது தெரிகிறது.  சரண்யா - அழகம்பெருமாள் காட்சிகள் யதார்த்தம் - சண்டைக்கு சொல்லும் காரணம் தவிர.

படத்தில் சகிக்க முடியாத ஒன்று , சந்தானத்துக்கு ஜோடியாக வரும் பெண்ணை கிண்டலடிக்கும் காட்சிகள். அழகில்லாததால் மட்டுமே அந்த பாத்திரம் இவ்வளவு கிண்டலுக்கு உட்படுகிறது என்ற நினைப்போடு டைரக்டர் காட்சிப்படுத்தியிருந்தால் ,அது மிக கண்டிக்கப்படவேண்டிய விஷயம்.

போன இரு படத்திலும் செய்த அதே தவறு இந்த படத்திலும் மீண்டும் எதிரொலிக்கிறது. கிளைமாக்ஸ் சொதப்பல். தேவையில்லாமல் ஆர்யா , ஆண்ட்ரியா என நட்புக்கு ஆளை நடிக்க கூட்டிவந்து இழுத்தடித்த கடைசி  இருபது நிமிட கொடுமை தவிர மற்றவை எல்லாம் ஓகே. இந்த படத்தை இப்படிதான் முடிக்க முடியும் என்பது திரையுலக டிக்சனரியில் உள்ளதென்பது பார்க்கும் எல்லாருக்கும் தெரியும்.அதனால் டைரக்டர் பிழைக்கிறார்.


படத்தின் இரண்டு சறுக்கல்கள் இசை மற்றும் கதாநாயகி. சரக்கு தீர்ந்து போன ஹாரிஸ் ,ஏற்கனவே ஹிட்டடித்த தன் பாடல்களை வைத்து ஒட்டியிருக்கிறார். பின்னணி இசை காட்சிக்கு ஏற்ற தாளம் பிசகுகிறது. எதிர்பார்த்து ஒன்றுதான்.

SMS அனுயா போலவோ , பாஸ் நயன்தாரா போலவோ நடிக்க தெரியவில்லை ஹன்சிகாவுக்கு.Just chubby  yet cute. போகட்டும். மற்ற பாசிடிவ் விஷயங்களால் இவை இரண்டும் மறைந்து விடுகிறது.  

படத்தின் ஆணிவேர் , தூண் , ஏன் மொத்த பலமுமே சந்தானம்தான்.  போன விஜய் அவார்டில் சந்தானத்துக்கு விருது கொடுக்கும்போது , மூன்றாம்  முறையும் இந்த படம் மூலம் சந்தானத்துக்கே கிடைக்கும் என்று அடித்து  சொன்ன ராஜேஷ் அதை உறுதிபடுத்தியிருக்கிறார். நல்ல நடிகரும் , அந்த நடிகரிடம் இருந்து சிறந்த நடிப்பை வாங்க தெரிந்த இயக்குனரும் சேர்ந்தால் கிடைக்கும் ரிசல்ட் நூற்றுக்கு நூறு என்பதை உணர்த்தியிருக்கிறது இந்த படம்.



கண்ணை உறுத்தும் கலர் பேன்ட் , பொருந்தாத டி ஷர்ட் ,
எண்ணெய்  வைத்து ஒழுங்காய் வாரிய தலைமுடி  என ஒரு மாதிரியான கெட் அப்பில் அசத்துகிறார் சந்தானம். அடிக்கடி சிவாஜியையும், கமலையும் மிமிக் செய்து அடிக்கும்  அட்டூழியமும் , உச்சகட்டமாக கிளைமாக்ஸ்  காட்சியில் மதபோதகரை இமிடேட் செய்யும் காட்சியிலும், என கிடைத்த எல்லா கேப்பிலும் பவுண்டரி அடித்து விளையாடியிருக்கிறார்.

வடிவேலுவின் இடம் காலியாய் இருக்கும் நேரத்தில், விவேக்கின் காமெடி காலி பெருங்காயமாய் கரைந்து முடிந்திருக்கும் நேரத்தில்,  இருக்கும் மிச்ச சொச்சங்களை புறந்தள்ளி டாப் காமடியனாக கம்பீரமாக உயர்ந்திருக்கிறார்  சந்தானம்.இது போன்ற படங்களை ஒரு ஐந்து வருடங்கள் தொடர்ந்து கொடுத்தால், பல வருடம் காத்திருந்த கவுண்டமணியின் கிரீடத்தை சந்தானத்துக்கு தாராளமாக வழங்கலாம்.

எந்த லாஜிக்கும் பார்க்காமல் மூன்று மணி நேரம் சிரிக்க , சரியான மினிமம் கேரன்ட்டி இந்த படம்.

ஓகே ஓகே - டபுள் ஓகே.


பேஸ்புக்கில் தொடர , வலது பக்க மேல் ஓரத்தில் உள்ள 'Find us on Facebook'ல்  Like பட்டனை அழுத்தவும்.

Tuesday, April 10, 2012

பாப்கார்ன் பாக்கெட் - 20120410

'மூணு' படத்தின் என் விமர்சனத்தைப் பார்த்து எனக்கு தெரிந்த ஒருவர்     
'உங்களுக்கு என்ன அந்த படத்து மேல அவ்ளோ கோபம்? அப்படியே   இருந்தாலும் அதை சொல்ல உங்களுக்கு என்ன  உரிமை இருக்கு? ரொம்ப ஓவரா போறீங்க' என்று  தாளித்தார். 'பணம் கொடுத்து டிக்கெட் எடுத்து பார்த்த எனக்கு இல்லாத உரிமை யாருக்கு இருக்கு?'ன்னு மட்டும் சிரித்துக் கொண்டே சொல்லி விட்டு பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தேன்.

'இவ்ளோ பேசறீங்களே..என் விமர்சனத்தை விமர்சனம் செய்ய உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?ன்னு அவர் பாய்ண்டை திருப்பி அவரையே எதிர் கேள்வி கேட்க   கடைசி வரைக்கும் நான்  யோசிக்கவே இல்லை.பழகின தோஷம்.  

இவங்க எல்லாம்  தான் என்ன நினைக்கிறோமோ அதையே பார்க்கணும், அதை ஆமோதிக்கிற கருத்தை மட்டுமே மத்தவங்க எழுதணும்  பேசணும்ன்னு நினைக்கிறாங்களே தவிர அடுத்த  கோணத்துல ,மத்தவங்க ரசனைக்கும் மதிப்பு கொடுக்கணும்னு யோசனை கூட செய்யறது இல்ல.
 
படத்தை நல்லாயிருக்குன்னு சொல்றவங்ககிட்ட நாம எதிர்வாதம் செய்ய கூடாது.
.'படம் நல்லாயிருக்கு'ன்னு நீயும் சொல்லித்தான் ஆகணும்ன்னு சொல்றவங்கள மதிக்கவே  கூடாது.

இது எல்லாத்துக்கும் பொருந்தும்.

'சுய கருத்துரிமையை விட்டுகொடுத்துதான் நட்பை காப்பாத்திக்கணும்னா அந்த நட்பே தேவை இல்ல'ங்கறது என் கருத்து.
-----------------------------------------------------------------------

அடுத்த ஜனாதிபதி யாரென்று இன்னும் மூன்று மாதத்தில் தெரிந்து விடும். தற்போதைய ரப்பர் ஸ்டாம்ப் பிரதீபா பாட்டில் ,இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை தவிர வேறு எந்த ஒரு சிறு துரும்பையும் கிள்ளி போடவில்லை. எதிர்பார்த்ததுதான்.அதனால் ஏமாறவில்லை.

வாழ்த்துக்கள் பிரதீபா. வரலாறு மிக முக்கியம் என்பதை தெரிந்து அதில் உங்கள் பேரையும் இடம்பெற செய்து விட்டீர்கள்.நீங்கள் ஜனாதிபதியாய் வரவேண்டும் என்று இந்தியாவில் முதன்முதலில் ஆதரவு கூட்டம் போட்ட கலைஞருக்கு ஒரு நன்றியை  அறிவித்து விட்டு விடைபெறுங்கள்.

காங்கிரஸ் சார்பில் மக்களவை சபாநாயகர் மீராகுமார், துணை ஜனாதிபதி ஹமித்அன்சாரி, பிரபல தொழில் நுட்ப நிபுணர் சாம்பிட்ரோடா, நிதி அமைச்சர் பிரணாப்முகர்ஜி, கரண்சிங் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டன. போன முறை போல இந்த முறையும் கலாம் இந்த போட்டியில் கலந்துகொள்ளாமல் இருந்து விடுவாரோ என்ற வருத்தம் கலந்த எதிர்பார்ப்பு இளைஞர்கள் மத்தியில் இருக்கிறது.


 மீண்டும் அழைக்கும்படி அவர் அப்படி என்ன செய்து விட்டார் என்று கேட்பவர்கள் , அவரின் முன்னும் பின்னும் இருந்தவர்கள் யாரும் செய்யாத ஒன்றை செய்தவர் என்பதை அறியாதவர்கள். நாட்டுக்கு தன் இளமை காலம் தொட்டு சேவை செய்து அதன் புகழை தாங்கி நிற்கும் தூணாக இருந்த பின்தான் ஜனாதிபதி தேர்தலில் நின்றார்.ஐந்து வருடங்கள் எத்தனையோ மாணவர்களுக்கு தன் பேச்சின் , ஆலோசனையின்  சேவையை வழங்கினார்.

இது எல்லாம் அவர் ஜனாதிபதியாய் இருந்து செய்யவேண்டும் என்பது இல்லை என்பதையும் விளம்பரம் ஏதும் இல்லாமல் அடுத்த ஐந்து ஆண்டுகள் தொடர்ந்து செய்து நிருபித்தார். இவரைத் தவிர பொருத்தமானவர் வேறு யார் ?

பாஜக இவரை ஆதரிப்பதாக  செய்திகள் வருகிறது. உண்மையாய் இருந்தால் மிக்க நல்லது. வாருங்கள் கலாம்.
----------------------------------------------------------

மத்திய அரசு ஊழியர்களுக்கு அறிவித்ததுபோன்று தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 7 சதவீத அகவிலைப்படி உயர்வு அளிக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்திருக்கிறார். கூடவே , இந்த உயர்வு மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1,383.49 கோடி செலவு ஏற்படும் என்றும் ஒரு ஓரத்தில் கோடிட்டு காட்டியுள்ளார்.சந்தோஷம்.

மின் பற்றாகுறை பிரச்சனை  பூதாகாரமாய் இருக்கும் சமயத்தில் இந்த அறிவிப்பு ஒன்றும் பெரிய அனுகூலத்தை அரசுக்கு கொடுக்காது.  இருந்தாலும் ஆசிரியர்கள் உட்பட சத்துணவு ஊழியர்கள்,வருவாய் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள் என பலருக்கும் இந்த உயர்வு கொஞ்சம் நிம்மதி அளிக்கும்.

இதை நம்பி நடுத்தர மக்கள்  யாரும் குடும்ப பட்ஜெட்டில் உடனே எந்த திட்டத்தையும் செலவு வகையில் வைத்து விட
முடியாது.  காரணம் பால் , மின் கட்டணம் , மூன்று முறை பெட்ரோல் விலை உயர்வு என்று எல்லாம் சேர்ந்து இதை நேர்படுத்தி விடும்.

எது இங்கிருந்து கொடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
There exists an equation.
---------------------------------------------------

'நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி' எரிச்சலூட்டுகிறது.  கேள்விகள் தரம் பற்றி அதிகம் விமர்சனம் கேட்டாகி விட்டது.



எனக்கு பெரிய உறுத்தல் சூர்யாவின்  தடுமாறும்  செந்தமிழ் உச்சரிப்பும்,அந்த  மெனக்கெடலுக்காக அவர் படும் பாடும்தான்.  என்னதான் அவர் சிரித்தாலும், பதட்டத்தை மறைக்க முற்பட்டாலும் ஒருவித இறுக்கம் அவரை மீறி தெரிகிறது.

அதை விட போட்டியில் கலந்து கொள்பவர்களின் சுய புராணத்தை விஜய் டிவி அளிக்கும் விதம் மிக கொடுமை. பொழுதுபோக்கு நிகழ்ச்சியை , அதில் கலந்து கொள்பவர்கள் சோகத்தை
( வருத்தத்திற்குரியதுதான் ) வைத்து , நிகழ்ச்சியின் தரத்தை   கெடுக்கிறார்கள்.

பல வருடங்கள் முன்னால் வந்த கோடிஸ்வரன் நிகழ்ச்சி இதை விட நூறு மடங்கு நன்றாக இருந்தது. சரத்குமார் சூர்யாவை  விட நல்ல முறையில் செய்திருப்பார்.
நகைச்சுவையோடு ஒரு எதார்த்தம் அவரிடம் இருந்தது.
-----------------------------------------------------------

சச்சினின் பின்வாங்கல் பெரிய ஷாக். சென்னையை விட மும்பைக்கு இந்த முறை ஆதரவு அளிக்கலாம் என்ற என் எண்ணத்தில் பெரிய தடுமாற்றம். ஹர்பஜனுக்கு எல்லாம் சென்னையை விட்டுகொடுக்க முடியாது.

ஆனால் சென்னைக்கு  கோப்பை இல்லை என்ற கட்டம் உருவானால் என் ஓட்டு  தாதாவுக்கே.  கங்குலி தலைமையில் புனே அணி கொல்கத்தாவை பந்தாட வேண்டும் என்பதே கொல்கத்தா மக்களின் எதிர்பார்ப்பும் கூட. இவர்களுக்கு கோப்பையை விட கங்குலிக்கு போன வருடம் ஷாருக் அளித்த அதிர்ச்சி வைத்தியத்துக்கு மருந்து கொடுப்பதே முக்கிய குறிக்கோள். கானுக்கு இது தேவைதான்.


சென்னை டீம் வழக்கம் போல கலக்கலாகத்தான் இருக்கிறது. தோனி தவிர ரைனா , முரளி விஜய் , பிராவோ கூடவே அஷ்வின் என நல்ல பலமான பட்டாளம். சறுக்கலான காலகட்டத்தில் ஸ்ரீகாந்த் அனிருதா போன வருடம் நன்றாக உதவினார். தோனி எப்போதும் செய்யும் தப்பான ,   முக்கியமான தருணத்தில் ஜோஹிந்தருக்கு ஓவர் கொடுக்காமல் இருந்தால் பல வெற்றிகளை சென்னை பார்க்கலாம்.

இந்த முறை என் சாய்ஸ் சென்னை மற்றும் புனே. Let see who deserve.
----------------------------------------------------

உன்னி மேனன்  குரலில் ரஹ்மானின் அற்புதம்.வைரமுத்து வார்த்தை கையாடல் இந்த பாடலில் உச்சகட்டத்தை எட்டியிருக்கும்.
அதிர்ஷ்டவசமாக ஒளிப்பதிவும், பாடலின்  லொக்கேஷனும்  ,கண்களை உறுத்தாமல் பாடலை முழுதாக ரசிக்க வைக்கிறது. இந்த படம் வணிகரீதியாக தோல்வி அடைந்தாலும் , தமிழுக்கு புதிய முயற்சி. பாடல்கள் அனைத்தும் மிக அருமை.

சுரேஷ் மேனன் இயக்கத்தில் 'புதிய முகம்'  படத்தில் வந்த பாடல். தெலுங்கில் இதே பாடலை எஸ்பிபி பாடியிருந்தாலும் , உன்னி மேனனின் குரல் அதிகம் மயங்க  வைக்கிறது.



'கள்வர்க்கு இரவழகு;காதலர்க்கு நிலவழகு '  -
ஆகச்சிறந்த கற்பனை ஊற்று.
-----------------------------------------

Wednesday, April 4, 2012

'3' - தனுஷின் ரத்த சரித்திரம்

ஒரு ஆறு மாசமா படத்தோட தலைப்புக்கு என்ன அர்த்தம்னு தெரியாம முழிச்சிட்டு இருந்த ரசிகர்களுக்கு ரெண்டரை மணி நேரம் மூச்சு திணற திணற சுத்தி சுத்தி அடிச்சிட்டு   '' கேளாய் மானிடா .. 3  என்பது 3 அடிமுட்டாள்கள் என்பதன் சுருக்கமே . ..இயக்குனரும் , நடிகரும் முதல்  இரண்டு பேர். மூன்றாவது நபர் நீதான் எங்கள்  செல்லமே... 'ன்னு புரியாம புரிய வெச்சிருக்காங்க..

இத அனுபவபட்டுதான் புரியனும்னு இன்னும் நினைக்கிறவங்க ,வீட்டுல ஒருதடவைக்கு ரெண்டு தடவை சொல்லிட்டு தியேட்டர்க்கு போகலாம்.மத்தவங்க போஸ்டர் பக்கம் கூட போய்டாதீங்க.. டிவில இந்த படத்தை போடும்போது  , தப்பித்தவறி உங்க வீட்டுல கரண்ட் இருந்ததுனா , வெளிய ஓடிபோய் வெயில்லுல நின்னுக்கோங்க...


தனுஷ் மூணாவது தடவையா லூஸா நடிக்கிற படம். தலைப்பு இதுக்கும் பொருந்துது. 

ஸ்கூல் காலத்துல இருந்து வர காதல், ப்ரெண்ட்ஸ் கூட்டத்தோட நாலு காமெடி, அப்பா செண்டிமெண்ட்,ரெண்ட வீட்டுலயும் காதலுக்கு எதிர்ப்பு ,   பல பரிணாம வளர்ச்சிக்கு பிறகு கல்யாணம்.இப்படி தமிழ் திரைவரலாற்றிலயே இதுவரைக்கும் யாரும்  தொடாத கதையை கையில எடுத்து திரைக்கதை எழுதி அப்புறம் அதை படமா ரிலீஸ் செஞ்சிருக்காங்க.

படத்துல இவ்வளவு  இருந்தாலும் இது தனுஷ் படம் ஆச்சே...எதோ மிஸ் ஆவுதேன்னு நீங்க நெனச்சா எல்லாம் தெரிஞ்ச  இயக்குனருக்கு தெரியாதா என்ன? ஆடியன்ஸ் பல்ஸ கரெக்டா தெரிஞ்சிக்கிட்டு கல்யாணத்துக்கு அப்புறம் தனுஷ்க்கு மனநோய் தாக்குதுன்னு ஒரு ட்விஸ்ட் வெச்சிருக்காங்க.. அதுக்கு அப்புறம் கதை என்னவாகுதுங்கறதுதான் படம்.பாக்குற நாம என்னவாகறோம்ங்கறது நம்ம விதி.

பிரபு , பானுப்ரியா , ஸ்ருதிஹாசன் ,சிவகார்த்திகேயன்னு வரிசையா நல்ல ஸ்டார் வேல்யு உள்ள நடிகர்கள் இந்த படத்துல தேவை இல்லாம இருக்காங்க. அனிருத் , கொலைவெறி பாட்டு  தவிர இன்னும் ரெண்டு மெலடி நல்லபடியா கொடுத்திருக்காரு.இவர் ஓபனிங்  மட்டும்தான் இந்த படத்துல உருப்படியான விஷயம்.

ஐஸ்வர்யாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. ஒரு கமர்ஷியல் இயக்குனர் ஆக முதல் தகுதி அடுத்த படத்துல இருந்து கதையை சுடறதுதான். அது இவங்களுக்கு அழகா வருது. என்ன ஒன்னே ஒன்னு .. எல்லாமே தனுஷ் நடிச்ச பழைய படங்கள்ல இருந்தே உருவனதுனால நம்ம பசங்க கரெக்டா கண்டுபிடிச்சிடாங்க...

அவரோட முதல் படத்துல இருந்து கடைசியா வந்த படம் வரைக்கும் இருக்குற எல்லா சீனையும் எடுத்து 'இங்க்கி பிங்க்கி பாங்க்கி' போட்டு எது வருதோ அத எடுத்து இதுல மறுபடியும் யூஸ் பண்ணிருக்காங்க. நல்ல வருவீங்க மேடம். உங்கள மாதிரி திறமையான இயக்குனர்கள் சினி பீல்டுக்கு தேவை.

அம்மா..நாங்கெல்லாம் பேரரசு படத்தை கூட விசிலடிச்சு பார்ப்போம். மரண மொக்கை படமா இருந்தாலும் சிரிச்சிக்கிட்டே கமென்ட் அடிச்சிட்டு பாப்கார்ன மென்னுட்டு படத்தை ஜீரணம் பண்ணிக்குவோம். சத்தியமா இந்த மாதிரி கைக்குழந்தை கணக்கா தேம்பி தேம்பி  அழுது  பாத்தா படம் இதுதான். 

பவர் ஸ்டார் உட்பட மத்தவங்க யாருமே எங்கள அழ வெச்சி பாக்க விருப்பபட்டதில்ல.. நீங்க மட்டும் ஏன்? உங்களுக்கு செல்வராகவன் படங்கள்தான் இயக்குனர் ஆக இம்ப்ரெஸ் பண்ணுச்சுதுனா அதுக்காக இப்படியா?  செல்வராகவன் மாதிரி படம் எடுக்க செல்வராகவன் இருக்காரே.நீங்க எதுக்கு?

தனுஷ்  நீங்க ரொம்ப அடக்கமான மனிதர்.நல்ல நடிகர். தறுதலை,ரவுடி,வீட்டுக்கு அடங்காத பிள்ளை,லோக்கல் ஆளு,மெண்டல் கேரக்டர் எல்லாம் நல்லா பண்ணுவீங்க. அதுக்காக கேப் விடாம மெண்டலாவே நடிச்சிட்டு இருந்தா உண்மைலயே  அப்படி ஆகிடற அபாயம்  உங்களுக்கு இருக்கோ இல்லையோ ,பாக்கற   எங்களுக்கு இருக்கு.

ஒரு நாலஞ்சு வருஷம் உங்க வீட்டு ஆளுககிட்ட இருந்து விலகி நல்ல இயக்குனர்களோட சேர்ந்து நடிச்சா ,பேர காப்பாத்திக்க சான்ஸ் இருக்கு.என்ன பண்றது? சிம்பு தொல்லைல இருந்து தப்பிக்க எங்களுக்கு நீங்கதான கதி.

இது எல்லாத்தையும் மீறி இந்த படம் முதல் மூணு நாளுல ஒன்னே கால் கோடி வசூல் அள்ளி ஹவுஸ்ஃபுல்லா ஓடிட்டு இருக்கறது என்னைய  மாதிரி சாதாரண ரசிகனுக்கு வெளங்கல. ஒரு வேளை நமக்குதான் கலை கண்ணோட்டம் அந்த அளவுக்கு இல்லையோ..?!!?

அத விட இந்த படத்தோட  தெலுங்கு பதிப்பு பத்து கோடிக்கு வியாபாரம் ஆயிருக்காம். விமர்சனத்துக்கு அப்பாற்பட்டு , மக்கள் கூட்டம் சாரிசாரியா படத்துக்கு போகுதாம். ஹிந்திக்கு அடுத்த மாசம் படம் போகுதாம்.

நல்லது .. ரெம்ப நல்லது.. எவ்வளவு அள்ளணுமோ இந்த ஒரு தடவைலயே அள்ளிடுங்க எஜமான் அள்ளிடுங்க .. ஆனா தயவுசெஞ்சு இதே மாதிரி '4 ' , '5 'ன்னு எடுத்துராதீங்க..அந்த விபத்தை சந்திக்க எங்ககிட்ட    
தைரியம் இல்ல...

மூணு - முடியல..

Thursday, March 15, 2012

வலியும் வலி சார்ந்த தீவும்...

உலகத்தின் எங்கோ ஒரு ஓரத்தில் எப்போதும் ஏதோ ஒரு கொடூரம் நடந்து கொண்டே இருக்கும். பரிதாபம்தான். வருத்தத்திற்குரியதுதான். ஆனால் அவை எதுவுமே நம்மால் தடுக்க முடியாத ஒன்றாக இருக்குமானால் , கடந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இலங்கை அப்படியில்லை.



கடந்த முப்பது வருடங்களாக இலங்கை விஷயத்தில் இந்தியாவின் பங்கு என்ன என்று யோசித்தால் , முதுகில் குத்தும் நிகழ்வே மாறி மாறி நடந்திருக்கிறதே தவிர
ஆறுதலுக்கு கூட நம் கரங்கள் அங்கே அண்டியதில்லை.  நம்மவர்கள் நலனை மட்டுமல்ல ,உயிரைக் கூட காப்பாற்ற இயலாத சகோதர நாடாகத்தான் இருந்திருக்கிறோம்.

ஒவ்வொரு அடிக்கும் கண்ணில் நம்பிக்கையுடன் கடல் தாண்டி பார்த்த சகோதரர்கள் ,அடி வாங்கி வாங்கி , பொறுமை மீறி , தானே எழுந்து திருப்பி அடிக்கத் தொடங்கியவுடன்  இலங்கை பின்வாங்கியது.தடுமாறியது. 

ராணுவ கட்டுக்கோப்பாய் ஒரு படை , தனக்கு சிம்மசொப்பனமாய் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்காத இலங்கை , கிறங்கி போய் பயத்தின் பிடியில் துவண்ட காலம் இருபத்தி ஐந்து  வருடங்களுக்கு மேல் .

கூப்பிடும் தூரத்தில் தமிழ் உறவு. உலகின் தலைசிறந்த படைபலம் கொண்ட நாடு. படை அனுப்பக் கூட தேவையில்லை. ஒரு உறுமல் கொண்ட அறிக்கை மட்டுமே போதும் - பின்வாங்கி பதுங்கியிருக்கும் சிங்களம். இந்த பக்கமிருந்து ஒரு சின்ன ஆறுதல் குரல் கூட அவர்களை    அணுகவில்லை.

கடைசிவரை கதறிவிட்டு ஒரு சதுர மைல் சுற்றளவில் அடங்கும் வரை போராடி, இறுதியில் மாண்டது வீரம். 2009 -இல் இலங்கையில் வென்றது அராஜகம்.  

புலிகளுக்கு எதிரான போரை காரணம் காட்டி நடந்தேறிய கொலைகளும், அட்டூழியங்களும் மூன்றாண்டுக்குப் பிறகே வெளிவந்திருக்கிறது. நமது ஊடகங்கள்  செய்ய வேண்டிய கடமையை , இங்கிலாந்தின் சேனல் 4  செய்திருக்கிறது. அவர்கள் வெளியிட்ட வீடியோவின் ஒவ்வொரு நொடியும் ரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகளும், 'யாருக்கு தெரியப் போகிறது?' என்று ராவண வம்சம் போட்ட ஆட்டத்தையும் காண யாருக்கும் இதயத்தில் பலம்  இருக்காது.

அதுவும் கொடுமைப்படுத்தி அழிக்கப்பட்டது நம் தமிழினம் என்றால்   இதை பார்த்த பின்பும் உயிர் மிச்சமிருப்பது விசித்திரமே.
போன உயிர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை நாற்பதாயிரம். போர் மரபை மீறிய அநாகரீகம் நடந்திருக்கிறது. போருக்கு நடுவில் சிக்கிகொண்ட அப்பாவி மக்களின்  உயிரும்  மானமும் சூறையாடப்பட்டிருக்கிறது .இதை முக்கால் மணி நேர காட்சிகளில் கூட பார்க்க தெம்பில்லாத நமக்கு  இயலாமையும்  , குற்றவுணர்வும்   மனதை அரிப்பதை தடுக்க முடியாது.

கடந்த பத்து வருடங்களாக சிங்கள ராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்த ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை இந்திய அரசு.
போரின் போது அப்பாவி தமிழ்மக்கள் சாரி சாரியாக கொல்லப்படும்போதும் வாய் திறந்து பேச மறுத்தது. 
அகதிகள் நிலைமையை அறியச்சென்ற எம்.பிக்கள் குழுவினாலும் எந்த பயனும் இல்லை.  

இடைப்பட்ட நேரத்தில், தமிழக மீனவர்களையும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சுட்டுத்தள்ளும் போக்கை பழக்கமாய் கொண்டது சிங்களம்.அதற்கும் எதிர்ப்புக்குரல் வெறும் சம்பரதாயமாகவே இங்கிருந்து வெளிப்பட்டது.

இங்கு நிலை இப்படி இருக்க , உலகின் போலிஸ் அமெரிக்காவிற்கு , காலம் தாண்டி மனசாட்சி உறுத்தியிருக்கிறது. விளைவு - ஐ நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம். இதை தடுக்க இலங்கை மிக தீவிர முயற்சி எடுக்கிறது.
தீர்மானத்திற்கு  ஆதரவாக 22 நாடுகள் உடன்பட்டிருக்க இன்னும் மவுனம்  சாதிக்கிறது இந்தியா. 
எந்த ஒரு உறுதிப்பாடான நிலையும் இது வரை அளிக்கப்படவில்லை.

அண்ணன் தம்பி இருவருமே போரிட்டு சாவது  தவறில்லை  - கோழைத்தனமில்லை . அண்ணன் நல்ல பலத்துடன் கம்பீரமாய் உலகில் வாழ்ந்திருக்கும்போதே , தம்பி அடிபட்டு மரணிப்பதை எந்த வகையில் சேர்ப்பது?

'இலங்கையுடனான உறவு வரலாற்றுப் பூர்வமானது ; நட்பு ரீதியானது ' என்று இன்று வரை  சொல்லி வரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவின் அறிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான்.  காஸ்மீர் விவகாரத்தில் , பாகிஸ்தான் உறவைப் பற்றியும் இதையே சொல்லுவாரா என்பதுதான் கேள்வி.

இலங்கையில் இதுவரை இருந்த இந்திய சொந்த பந்தங்களும், சகோதர உறவுகளும் மாண்டபின் , என்ன நட்பு ரீதியான உறவு இனியும் தேவைபடுகிறது என்ற கேள்விக்கு யார் விடை சொல்வது?  

அமெரிக்காவின் இந்த தீர்மானம் வெற்றிபெற்று உலக நாடுகளின் பிடியில் இலங்கை பதுங்கி அடங்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். அதைத் தவிர நம்மால் செய்ய இயல்வது இப்போதைக்கு எதுவும் இல்லை. அந்த காலம் எப்போதோ தாண்டி போய்விட்டது.
இந்திய வரைபடத்தில் இன்னும் இலங்கையை ஒட்டி வைத்திருப்பதற்கான காரணம் இனி அர்த்தமற்றது.

மொழி புரியாத, இனத்தால் ,நிறத்தால் வேறுபட்ட நாடுகளுக்கு புரிந்த வலி, கேட்ட கூக்குரல், தெரிந்த நியாயம் , வெகு அருகில் கரை தாண்டி வசிக்கும் நமக்கு இன்னும் உரைக்காததற்கு  
காரணம்  : அரசியல் பாஷையில் சொன்னால்  'அஹிம்சை'  , வேறு  எந்த பாஷையில் சொன்னாலும்  - 'சுயநலம்'

மற்றபடி, இங்கு குறை ஒருத்தரிடம் மட்டும் அல்ல.ஒரு கட்சியிடம் மட்டும் அல்ல.
இது பொது அவமானம். வரலாற்றுப் பக்கங்களில் இது எப்படி பதியுமோ , அதை தலை குனிந்து ஏற்றுகொள்ள தயாராய் இருப்போம்.

Friday, March 9, 2012

தேசிய விருதுகள்: வாகை சூடிய தமிழ்த்திரை

மெகா பட்ஜெட் ஆடம்பர செலவுகள் இல்லை. படத்தின் அரை வாசி செலவை சம்பளமாக கேட்கும் நட்சத்திர நாயகர்கள் இல்லை. பறந்து அடிக்கும் சண்டைக் காட்சிகள் இல்லை. கவர்ச்சியான கதாநாயகி இல்லை. முக்கியமாக ,சேட்டிலைட் டிவிகளில் நிமிடத்துக்கு ஒரு முறை வரும் விளம்பரம் இல்லை. 

இப்படி எதுவுமே இல்லாமல்  ஐந்து தேசிய விருதுகளை அள்ளியிருக்கிறது தமிழ் திரையுலகம்.

சிறந்த பொழுதுபோக்கு திரைப்படம் : அழகர்சாமியின் குதிரை
சிறந்த தமிழ் திரைப்படம்                         : வாகை சூட வா
சிறந்த துணை நடிகர்                                 : அப்புக்குட்டி (அழகர்சாமியின் குதிரை )
சிறந்த புதுமுக இயக்குனர்                     : தியாகராஜன் குமாரராஜா (ஆரண்ய காண்டம் )
சிறந்த படத்தொகுப்பாளர்                         : பிரவீன் கே .எல் (ஆரண்ய காண்டம் )

சாதிக்க திறமை மட்டுமே போதும் என்பது இன்னொரு முறை நிரூபணம் ஆகியிருக்கிறது. மேற்கூறிய எல்லா படங்களுமே   வசூலில் அடி வாங்கிய படங்களே.
திரையிட சரியான அரங்குகளும் நாட்களும் கிடைக்காமல்  , கமர்சியல் படங்களின் வரவுகளுக்கு இடையே இருந்த மிக குறுகிய காலகட்டத்தில் திரையரங்குகளை சந்தித்தவை.ஆனால் அரங்குகளை நிரப்பவில்லை.  காரணம் - படிக்க பதிவின் முதல் பத்தி.

இப்போதைய காலகட்டத்தில் பலகாரம் சுவையாய் தரமாய் இருப்பதை விட அதை  பார்ப்பதற்கு அழகாக wrap செய்து  மக்களை வாங்க வைக்கும் உத்தியே வெற்றி பெறுகிறது.ஆனால் வெற்றி என்பது வேறு. அங்கிகாரம் என்பது வேறு. இரண்டாவதற்கு , கடின உழைப்பையும்,திறமையையும் தவிர எந்த மேற்பூச்சு வேலையும் தேவை இல்லை. ஆதாரம் -  இந்த ஐந்து விருதுகள்.
திரையுலகின் பல விதிகளை உடைத்திருக்கின்றன மேற்கூறிய படங்கள்.

ஆரண்ய காண்டம் :

கதையும் அதன் களமும் முடிவான உடனே , தயாரிப்பாளருக்கு புரிந்திருக்கும் - கல்லாவை நிரப்ப தேவைப்படும் தாய்க்குலங்கள் ஆதரவு இந்த படத்திற்கு சைபர் என்று. உபயம் - படத்தில் தவிர்க்க முடியாத வசனங்கள்.ஆனாலும் முட்டி மோதி படத்தை வெளியிட்ட சரணுக்கு வாழ்த்துக்கள்.

மீதி வர வேண்டிய சொற்ப  கூட்டத்தையும் சாதாரண தமிழ் ரசிகனுக்கு புரியாத தரமான போஸ்டரின் ஆங்கில தாக்கத்தால் இழந்தது இந்த படம்.


படம் வெளிவந்து ஓடி முடித்த நான்கைந்து நாட்கள் தாண்டியே இது ஒரு தமிழ் படம் என்று பெரும்பானவர்களுக்கு  புரிந்தது.
  ஆனாலும் இயக்குனரும் , தொகுப்பாளரும் படத்தின் நாயகர்களாய் மிளிர்ந்தது சத்தியம்.
படத்தின் வேகத்தில் பிரவீனின் உழைப்பு நன்றாக தெரிந்தது. 
ஆரண்ய காண்டம் , கேங்ஸ்டர் படங்களின்  புது கோணத்தை , வேறு பாணியில் சொல்லும் விதத்தை அறிமுகப்படுத்தியது.

வசனங்களின் கூர்மையையும் , திருப்பங்களையும் நம்பிய இந்த படம்  தமிழ் திரை சரித்திரத்தில் ஒரு மைல்கல்.

அழகர்சாமியின் குதிரை:

வெண்ணிலா கபடிகுழு சுசீந்திரனின் இன்னொரு காவியம். ஒரு கதையை திரைப்படம் ஆக்கும்போது அந்த மாற்றத்திற்கு தேவையான அனைத்தையும் படத்தில் உபயோகித்த விதத்திற்கு பரிசு கிடைத்திருக்கிறது.
அப்புக்குட்டி , அழகர்சாமி பாத்திரத்தின் கனகச்சிதமான நல்ல தேர்வு. இளையராஜா இசை , காட்சிகளில் தெறித்த  உணர்வுகளுக்கு  மேலும் அழுத்தம் கொடுத்திருக்கிறது.


பொழுதுபோக்குக்கு தேவையான அனைத்து நல்ல அம்சமும் படத்தில் உண்டு.ஆனால் அவை யாவும் யதார்த்த   கோட்டுக்குள் மட்டுமே நின்று சாதித்திருக்கிறதே தவிர , காதை அடைக்கும்  குத்து பாட்டும் , கண்ணை உறுத்தும் சண்டை காட்சிகளும் அல்ல. கதை ,குதிரையை சுற்றிய நூலை நழுவவிடாமல் மற்ற துணை கதைகளை இணைத்து சென்ற விதம் அருமை.


ஒரு நடிகனுக்கு , நாயகனுக்கு தேவையான எந்த அடையாளமும் அப்புகுட்டிக்கு இல்லை. அதுவே இந்த வெற்றிக்கும் காரணம். அப்புகுட்டியின் இந்த வளர்ச்சி  கண்டிப்பாக திரையுலகில் நுழைய நினைக்கும் எந்த சாமானியனுக்கும் ஒரு உத்வேகத்தை கொடுக்கும்.

சுசீந்திரன் ,தமிழுக்கு இன்னொரு பாரதிராஜாவாக வர தகுதியான இயக்குனர். அவசரப்பட்டு 'ராஜபாட்டையில்' பயணிக்காமல் நிதானமாய் சென்றால் வளர்ச்சி தொடரும்.

வாகை சூட வா:

வசூலில் கடும் இழப்பு , நாயகன் விமல்  , வாங்கிய சம்பளத்தை திருப்பிக் கொடுக்க வைத்தது. நல்ல படங்களுக்கு மட்டுமே உண்டான சாப நிலை இது.

பீரியட் படங்கள் வரிசையில் நல்ல கருத்தையும் முன்வைத்து வெளியான படம். வெயில் தகிக்கும்  சூழலில் , கலகலப்பான கிராமிய பின்னணியுடன்  அழகான காதலையும் சேர்த்து கொடுத்த படம். கிப்ரானின் இசை புது மாதிரியாய் கிறங்கடிக்க வைத்தது.


விமலின் அப்பாவித்தனமான நடிப்பும் , இனியாவின்  வாயாடித்தனம் கலந்த துடிப்பும் , ஏனைய நடிகர்களின் ஆரவாரமில்லாத பங்களிப்பும் , படத்தின்  தரத்தை உயர்த்தியது.   சிறந்த படங்களில் இந்த படத்துக்கு முதலிடம் கிடைத்தது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.வெகு பொருத்தமான தேர்வு.

-------------------------------------

இந்த படங்கள்  வெளியாகி , மக்களின் மவுத்டாக் மூலம் ' நல்ல படம் , பார்க்கலாம்' என்று கூட்டம் தயாரவதற்குள், திரையரங்குகளில் இருந்து காணாமல் போக நேர்ந்தது.  இது போன்ற நல்ல முயற்சிகளை 'ஆவண படம்' அல்லது  'அவார்டுக்கு மட்டும் தகுந்த படம் ' என்று ஒதுக்குகிற  விபத்தும் எப்போதும் நேர்கிறது.

ஆனால் இந்த மூன்று படங்களும் , ஆவணப்படம் போல  வெறும் செய்தியை மட்டும் சொல்லாமல் அதை சுவாரஸ்யமாகவும் . நகைச்சுவையுடனும்  சொல்லி பார்ப்பவரை சிரிக்க வைத்திருந்தாலும் ,தயாரிப்பாளர்களை அழ வைத்தவை என்பது உண்மை.

ஒரு பெரிய நடிகனின் பட பட்ஜெட்டில் ,இது போன்ற பத்து படங்கள் செய்து விடலாம் என்பது நிதர்சனம்.

ஒரு பக்கம்  , நல்ல படங்களை  கொடுக்க தயாரிப்பாளர்கள் இருக்க வேண்டும். அப்படி மிக கடினப்பட்டு அவர்கள் கொடுக்கும் படத்தை வரவேற்று  அதை காப்பாற்றும் ரசிகர்கள் இருக்க வேண்டும்.  இரண்டும் இல்லை என்றால் நல்ல கதை சொல்லி இயக்குனர்கள் காணாமல் போய் , ஹீரோயிசத்தில் கதையை பலி கொடுக்கும் இயக்குனர்கள் மட்டுமே எஞ்சியிருப்பார்கள்.

தொடரட்டும் இந்த அங்கீகாரங்கள்.
 

Thursday, March 1, 2012

பாப்கார்ன் பாக்கெட் - 20120301

//டிஸ்கி : வேலை  மாற்றம். புது ஊர் , புது இடம் , புது மக்கள் , வந்த இடத்துல  'நான் நல்லவன்'ன்னு மறுபடியும்  எல்லாரையும் ஏமாத்த வேண்டிய கட்டாயம் - இதெல்லாம் சேர்ந்து மூணு மாசம் பதிவு பக்கம் தலைவைக்க விடாம பண்ணிடுச்சு. என் நல்ல நேரம் , உங்க கெட்ட நேரம்  - மறுபடியும் வந்துட்டேன்.  //
-------------------------------------------------------
சுஜாதா மறைந்து சரியாக நான்கு வருடங்கள் ஓடி விட்டன. இன்னும் எனக்கு அவர் இழப்பு உறைக்கவில்லை. ஒரு படைப்பாளிக்கு இதை விட பெரிய வெற்றி எதுவும் கிடையாது.  இப்போதும் சக்கைபோடு போட்டு விறபனையில் முன்னணியில் இருக்கிறது  அவர் படைப்புகள்.  ஆதாரம் - இந்த வருட புத்தக கண்காட்சி.


பொழுதுபோக்கு படைப்புகளில் மட்டும் சிக்கியிருந்த வாசக வட்டத்தை , சிந்திக்க வைக்கும் படைப்புகளின் ரசிகர்களாக மாற்றிய பெருமை சுஜாதாவுக்கு மட்டுமே உண்டு.
விஷயங்களை அறிவிக்கும் புத்தகமாக இருந்தால் , அது மொந்தை மொந்தையாக , பெரிய பெரிய பாராவாக , படிக்க ஆரம்பித்ததும் தூக்கம் வரவைக்கும் வஸ்துவாகவே இருக்கும் என்று நினைத்திருந்தவர்களுக்கு , ஒரு படம் பார்ப்பதை விட , சுவாரஸ்யமாக விஷயங்களை தர முடியும் என்று உணர்த்தியவர்.

எந்த துறையிலும் வல்லவர்கள் எவ்வளவோ பேர் வரலாம்;போகலாம். ஒரு சிலரே அந்த துறையின் வண்ணத்தையும் , வடிவத்தையும் மாற்றி செல்வார்கள். எழுத்துக்கும் ,சினிமாவுக்கும்  சுஜாதா அத்தகையவர்.

ஒரு வேளை, மறு ஜென்மம் உண்மை என்றால் , எங்கு இருக்கிறதோ  படு சூட்டிகையான , துறுதுறுப்பான ,மெல்லிய நக்கல் தெறிக்க பேசும் ,புதியவருக்கு அதிகப்ரசங்கியாய் தெரியும் எங்கள் சுஜாதா குழந்தை?
----------------------------------------------------

கேப்டன் பொங்கி எழுந்துட்டார். இனி தினம் தினம் தமிழ் மக்களுக்கு தலைவலி.திமுகவுக்கு சரவெடி.

சட்டசபை நாகரீகம்-ன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசவேண்டாம். அதெல்லாம் அப்போவே எல்லாரும் ஒழுங்கா கடைபிடிச்சிருந்தா அதிமுக  இன்னைக்கு வேற தலைமைல இருந்திருக்கும். துரைமுருகனுக்கு நன்றி.

படிச்சவங்க . கொஞ்சம் பண்பானவங்க அரசியலுக்கு சரியாய் வராதுன்னு சொல்றது சரிதான்னு தேமுதிக எம்.எல்.ஏ  அருண்பாண்டியன பாக்கும்போது நல்லா தெரியுது..

கட்சித்தலைவர் , தனக்கு முன்னாடி எதிர்க்கட்சிய  பாத்து ,  உச்ச குரல்ல பேசிட்டு இருக்கும்போது , மத்தவங்க மாதிரி கை தட்டாம ,     கூட சேர்ந்து கத்தாம ,கைய கட்டி இருந்திட்டு , அப்புறமா  வேற  வழியில்லாம ,கூட சேர்ந்து எழுந்து நின்னு , என்ன செய்றதுன்னு தெரியாம ஒரு அப்பாவி  சிரிப்போட முழிச்சிட்டு இருந்தத பார்க்கும்போது .. ஐயோ பாவம் ..உங்க ஃபீலிங் எங்களுக்கு புரியுது சார்..


இது தேமுதிகவுக்கு பொன்னான காலம்.ஒரே அணியில ரெண்டு பெரிய தலைகளும் இருந்தா ஒருத்தர் வளர முடியாது. காங்கிரஸ்ல இருந்து  பெரியாரும் , பெரியார்கிட்ட இருந்து  அண்ணாவும்  , கலைஞர்கிட்ட  இருந்து எம்ஜீஆரும்  பிரிந்த பின்னாடிதான் மக்களுக்கு அவங்க மேல கவனமும் , சிதறாத அடையாளமும் வேகமா கெடைக்க ஆரம்பிச்சுது.  எல்லாரும் எதிர்பார்த்தபடிதான் நடக்குது..அதுதான் மக்களுக்கு நல்லது..

2016 , முன்னாடி சொன்னமாதிரியே அம்மா-கேப்டன் நேருக்கு நேர்தான்.  
-------------------------------------------------

 வீரப்பன் சுடபட்டபின் வெள்ளதுரைக்கு கிடைத்த புகழுக்கு பிறகு , என்கவுண்டர் செய்வது ஒரு ஹீரோயிசமாக உருப்பெற்று வருகிறது. போன வருடம் கோவை , இந்த வருடம் சென்னையில் ஐவர் கொலை என நீண்டுகொண்டே போகிறது என்கவுண்டர் லிஸ்ட்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் ரவுடிகள் அட்டகாசம் குறையும் என்பதற்காக , எல்லாரும் இந்த செயல்களை ஆதரிக்க வேண்டும் என்பது தேவை அல்ல.
வங்கிக்  கொள்ளையில் ஈடுபட்டிருந்ததாக சொல்லப்படும் ஐவரும் , எந்த வகையில் குற்றவாளிகள் என்று ஊர்ஜிதபடுத்தப்பட்டனர்  என்பது இது வரை விளங்கவில்லை.

இங்கு காவல்துறை தவறு செய்ததா இல்லையா என்பதைவிட அதிக கவனம் கொள்ள வேண்டியது , இந்த செயலுக்கு மக்களின் உணர்ச்சிப்பெருக்கான ஆதரவுதான்.   எந்த ஒரு அடிப்படை தகவல்களும் இல்லாமல் அவர்கள் குற்றவாளிகள் என்று முடிவு செய்து , கொலையை வரவேற்பது முட்டாள்தனம். 

அதே நேரத்தில் , காவல்துறை பக்கம் உயிர்சேதம் நடந்திருந்தால் என்ன சொல்வீர்கள் என்று கேட்டால் , ஏற்றுக்கொள்கிறேன் - என்னிடம் பதில் இல்லை. உண்மையை ,விசாரணையும் , மனித உரிமை அமைப்புகளும் பார்த்துக்கொள்ளட்டும்.  மக்களின் எண்ணபோக்குதான் இங்கு பிரதானமே தவிர , விவாதம் அல்ல.


இதே எண்ணம் வளர்ந்தால் , நாளை குற்றம் செய்தவனை சவுக்கடி கொடுத்து நடுத்தெருவில் சாகடிக்கும் மனிதர்களையும் வரவேற்கும் மூர்க்கத்தனம் வந்தாலும் ஆச்சர்யபடுவதற்கில்லை. ஈராக்கும் ,சவுதியும் இந்தியாவுக்குள் வர வேண்டாமே..
-------------------------------------------------------------

'தோனி' மேனியா மெல்ல சரிகிறது. இது எப்போதும் நடப்பதுதான். முன்பு கங்குலி. இப்போது தோனி. 'Captain of the Ship'  விமர்சனத்திற்கு எப்போதும் தயாராக இருக்க  வேண்டிய கட்டாயம் உண்டு.இவர் மேல் இன்னும் நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம்.

இங்கிலாந்துக்கு பிறகு , ஆஸ்திரேலியாவிடமும் மரண அடி வாங்கிக் கொண்டிருக்கும்  இந்திய கிரிக்கெட் அணிக்கு , நின்று ஆட கூடிய ஒரு பேட்ஸ்மேன்  கண்டிப்பாக தேவை.
சேவாக் 219  எடுத்த சிறந்த ஆட்டக்காரர்தான் என்றாலும் ,  ஆட்டத்தின் நிலைமையை கவனிக்காமல், பொறுப்பிலாமல் விக்கட்டை  கொடுக்கும்  பழக்கத்தை விடும் வரை இந்திய அணியை 'Consistant Team' என்று சொல்ல முடியாது.

அவர் மட்டுமே , ஆட்டம் தொடங்கியவுடன் , பார்முக்கு வந்து அடிக்கும்  தன்மை படைத்தவர். சச்சினோ நேரம் எடுத்து பின் நின்று ஆடுவார். ஆனால் துரத்ரிஷ்டம் , சமீப காலங்களில், அவர்  ஆட்டத்தை தன் கையில் கொண்டு வரும் முன்பே வெளியேறி விடுகிறார்.  ஆக மிக முக்கிய பொறுப்பு சேவாக் கையில். உணர்ந்தால் இந்திய ஜெயிக்குமா என்னமோ , கவுரவமாக  தோற்கும். திருந்துவாரா?


தன்னை சாம்பியன் என்று நிரூபிக்க வேண்டிய நிலையில் , இந்த வருடம் இந்திய அணிக்கு ஐபிஎல் தேவையா? எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் ஒன்றும் செய்ய முடியாது ..Money Money Money..

கிரிக்கெட் நிலைமை இப்படி இருக்க , ஹாக்கியில் , இந்தியாவின் கவுரவம் காப்பாற்றப்பட்டு வருகிறது. வழக்கம் போல ,அவ்வளவாக கவனிக்கபடாமல் அலட்சியபடுத்தப்பட்டும் வருகிறது.  ஓரவஞ்சனை எப்போது ஒழியுமோ?
--------------------------------------------------------

எல்லாரும் வெள்ளித்திரையில் வெற்றிபெற , முட்டி மோதி  புதுமை செய்து கொண்டிருக்க , கால சக்கரத்தை பின்னால் ஓட்டி ஐந்து ஆஸ்கார்களை அள்ளியிருக்கிறது 'The Artist' .

பேசும் படங்கள் புதிதாய் வரத்தொடங்கிய தருணத்தில் நடக்கும் கதையாக , அதன் பின்புலத்தை உணர்ந்து தெளிவாக கையாளபட்டிருக்கிறது தி ஆர்டிஸ்ட்.ஒரு முன்னணி நடிகனுக்கும் , முன்னேறி வந்துகொண்டிருக்கும் ஒரு நடிகைக்கும் இடையே ஏற்படும் காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை. வசனங்கள் எங்கும் இல்லை - இறுதி காட்சியை தவிர.

முழுக்க கருப்பு வெள்ளை திரைப்படம்.சிறந்த நடிகர்,இயக்குனர்,திரைப்படம் உட்பட ஐந்து விருதுகள் இந்த படத்திற்கு மட்டுமே.


படம் முழுக்க ஓடும்  மெல்லிய நகைச்சுவையும் , வசனம் இல்லாததால் , உணர்ச்சிகளை வெளிக்காட்ட நடிகர்களின் கண்களும் ,முக பாவனைகளும் கொடுக்கும் இனிய அனுபவத்தையும் , காட்சிகளை  அதிக மடங்கு அழகாக்க , சிறந்த ஆர்ப்பாட்டம் இல்லாத இசையும் , நம்மை கட்டிபோட்டு விடுகிறது.
இந்த படம் விருதுகளை வென்றது ஆச்சர்யம் இல்லை.வாழ்த்துக்கள்.
--------------------------------------------------------

 சுசீலா கானமழை. விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசை. சௌகார் ஜானகியின் நடிப்பு.  மூன்றும் சேர்த்து மயக்க வைக்கும் மந்திரம் இந்த பாட்டுக்கு  உண்டு. 
காட்சியில் எல்லாரும் புன்னகைத்துக் கொண்டே இருப்பதும் ,  ஜானகி தன் வாழ்க்கையை நினைத்து கலங்குவதும், அதை வெளிக்காட்டாது பாடுவதும் அற்புதம் என்றால் அதை விட அற்புதம் கண்ணை மூடி இந்த பாடலை கேட்டால் தானாக வரும் கண்ணீர். இசையின் வரைமுறை இல்லாத சக்திக்கு இந்த பாட்டு ஓர் உதாரணம்.
 

காலம் தாண்டி நிற்கும் இனிய படைப்பு.
---------------------------------------------