Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Thursday, March 17, 2016

உடுமலைப்பேட்டை : விலகட்டும் மாய பிம்பம்


எல்லா ஊரிலும் நல்லதும் கெட்டதும் எல்லா காலங்களிலும்  உண்டு.

சாதியைக் காரணமாக்கி நடக்கும் அக்கிரமங்கள் புதிதல்ல..
காதலை எதிர்த்து , காதலரை அழிக்கும் கோபத்தின் கொடூரமும் புதிதல்ல..
பகை முற்றி பழி  தீர்ப்பதும் புத்தம் புதியதல்ல ..
நடுத்தெருக்களில் , சுற்றியிருக்கும் மக்கள் நடுங்க , கொலைகள் நடப்பதும் கண்டிப்பாக புதியதல்ல..

ஆனால் இந்த கொடுமைகளின்  நிழல் கூட உடுமலை ஊர் எல்லையை நெருங்கியதில்லை.
இன்றோ எங்கள் இதயத்தின் மையப்புள்ளியில் , கோரத்தின் நிஜம் , அதன் கூரிய நகத்தினால் கொத்திக் கிழித்திருக்கிறது .

அமைதியான ஊர்; மக்களும் சரி ,  ஊரில் அடிக்கும் வெயிலுக்கும் மழைக்கும் சரி : ஒரே குணம் - நிதானம்.

சேர நாட்டு வாசல் அருகில் என்பதால் , தெருவுக்கு ஒருவராவது கேரளத்து  பூர்விகம் ; கடவுளின் சொந்த நாட்டிலிருந்து வந்தவர்களுக்கு , உடுமலையில் எந்த வித்தியாசமும் தெரியவில்லை.  சொந்தத்தில் கல்யாணம் செய்த பெண்ணுக்கு புகுந்த வீடு முன்னமே  பழக்கப்பட்டது போல  , சேட்டன்களுக்கும் சேச்சிகளுக்கும் எங்கள் ஊர் சொந்த ஊரானது.



சுந்தரத் தெலுங்கும்  , கொங்குத்தமிழும் சரிசமமாய் புரளும். மனதில் எந்த பாரம் இருந்தாலும் , பக்கத்துக்கு வீட்டு குடும்பத்தோடு பேசும் பேச்சு மயிலறகு.

அடுத்த வீட்டில் என்றைக்கும் சாரோ மேடமோ எங்களுக்கு இருந்ததில்லை. நடுத்தர வயதிருந்தால் அக்கா மாமா ; அதற்கும் மேலிருந்தால் அப்பா அம்மா.

எல்லாருடைய நிலங்களையும் மனங்களையும் குளிர வைத்து ஊர் சுற்றி ஓடும் வாய்க்கால்  நீருக்கும்  , எங்கள் ஊருக்கும்  - சாதி மதம்  என்பது சத்தியமாய்,  ஒதுக்கி ஓரமாய் புறந்தள்ளும் குப்பைதான்.

கடந்த நூறு வருடங்களை சற்று புரட்டி பார்த்தால் , உடுமலை  அமைதியின் அரவணைப்பில் திளைத்து வளர்ந்த குழந்தை என்பது தெரியும். அதனால்தான் அறிவுதிருக்கோவிலும் , அதன் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது.

வருடந்தோறும் ஊர் குட்டையில் நடக்கும் மாரியம்மன் திருவிழாவில் , மதமோ சாதியோ நிறமோ , இப்படி எந்த ரேகையும் தென்படாமல் , பாசமான உள்ளூர்வாசிகளின் உற்சாகத்தை பார்க்கலாம்.



தலைசிறந்த பள்ளிகளை கொண்ட ஊரில் , எங்கள் உச்சகட்ட பிரிவினையே - 'நல்லா படிக்கிற பிள்ளை  ; சுமாரா படிக்கிற பிள்ளை ' ; இந்த இரண்டே ரகம்தான். பக்கத்துக்கு கிராமத்து குழந்தைகள் , ஊருக்குள் பள்ளித்தோழனின்  வீட்டில் தங்கியிருந்து படிப்பதும் , குடும்பத்தில் இன்னொரு பிள்ளையாய் இருப்பதும் வெகு சாதாரண நிகழ்வு.

அருகிலிருக்கும் திருப்பூருக்கும் , கோவைக்கும் , பொள்ளாச்சிக்கும் பீடித்து வரும் சுற்றுசூழல் மாசுக்கு இன்னும் பலியாகாமல் பசுமையின் ஆரோக்கியத்தை காத்து கம்பீரமாய் நிற்கிறது , ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் உடுமலைப்பேட்டை.

இப்படி எல்லா புகழும் இருக்கும் ஊர் பெயர்தான் இப்போது முகநூலிலும் , வாட்ஸப்பிலும் , எல்லார் வாய்க்கும் கிடைத்த அவலாக பரிதாபப்பட்டு மாட்டியிருக்கிறது.

ஒரு தனிப்பட்ட குடும்பத்தின் பகைக்கு , ஒரு உயிர் மட்டும் அல்ல ; ஒரு ஊரின் பெயரும் பலியாகியிருக்கிறது.
'வேறு எங்கோ போய் கொலை செய்வதுதானே?' என்று உணர்ச்சி மேலிட கேட்கும் அளவுக்கு நாங்கள் சுயநலக்காரர்கள் அல்ல . எந்த ஊரிலும் இது போல தவறு நிகழக்கூடாது.எங்கும் அது மன்னிக்கமுடியாத குற்றமே.

ஆனால் , இது எங்கள் ஊர் . எல்லா சாதியினரும் எந்த பேதமும் இல்லாமல் வாழும்  ஊர்.எங்கள் ஊர் பெயரில் , சாதிச்சாயமோ , கலவரக்கீற்றோ உள்ளே வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

ஊடகங்கள் என்ற பெயரில் ஊர் பெயரைக்  கெடுக்க ஓராயிரம் வண்டிகள் வந்தாலும் , உண்மை என்பது மிகத் தெளிவு ; உடுமலை களங்கமற்றது.

நடந்தது கௌரவக் கொலையோ பகையின் மிச்சமோ; அதன் முடிவின் களம் எங்கள் ஊராய் அமைந்ததற்கு , நாங்கள் படுவது நரக வேதனை.  பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மட்டுமல்ல , ஊருக்கும் இப்போது தேவை அனுதாபம்.



ஊர் மொத்தமும் ஒன்றாய் கைக்கோர்த்து , உரக்க முழக்கமிடுகிறோம் - சாதிகளுக்கோ , பிரிவினைக்கோ ஊருக்குள் இடமில்லை. அதை வளர்ப்பவருக்கும் இங்கே வேலையில்லை.

நினைவிருக்கட்டும் - இந்த ஒரு கொடிய நிகழ்வால்  , தன்  தவறு ஏதுமின்றி ,  ஒரு ஊர் களங்கமில்லாத தன் சரித்திரத்தில்  , கருப்பு புள்ளியை ஒரு  பக்கத்தில் தெளிக்க நேர்ந்துள்ளது. நாளை  உங்கள் ஊருக்கும் இதே நடக்கலாம்.

சாதியின் பசிக்கு இன்னும் எத்தனை காலம் , எத்தனை  ஊர்களும் நகரங்களும் தங்கள் முகவரியின் புனிதத்தைக்  காவு கொடுப்பது?

இப்படியா நம் மண்ணின் பெருமை உலகத்திற்கு அறியப்படுவது ?


-
அசோக் மூர்த்தி

Thursday, March 15, 2012

வலியும் வலி சார்ந்த தீவும்...

உலகத்தின் எங்கோ ஒரு ஓரத்தில் எப்போதும் ஏதோ ஒரு கொடூரம் நடந்து கொண்டே இருக்கும். பரிதாபம்தான். வருத்தத்திற்குரியதுதான். ஆனால் அவை எதுவுமே நம்மால் தடுக்க முடியாத ஒன்றாக இருக்குமானால் , கடந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இலங்கை அப்படியில்லை.



கடந்த முப்பது வருடங்களாக இலங்கை விஷயத்தில் இந்தியாவின் பங்கு என்ன என்று யோசித்தால் , முதுகில் குத்தும் நிகழ்வே மாறி மாறி நடந்திருக்கிறதே தவிர
ஆறுதலுக்கு கூட நம் கரங்கள் அங்கே அண்டியதில்லை.  நம்மவர்கள் நலனை மட்டுமல்ல ,உயிரைக் கூட காப்பாற்ற இயலாத சகோதர நாடாகத்தான் இருந்திருக்கிறோம்.

ஒவ்வொரு அடிக்கும் கண்ணில் நம்பிக்கையுடன் கடல் தாண்டி பார்த்த சகோதரர்கள் ,அடி வாங்கி வாங்கி , பொறுமை மீறி , தானே எழுந்து திருப்பி அடிக்கத் தொடங்கியவுடன்  இலங்கை பின்வாங்கியது.தடுமாறியது. 

ராணுவ கட்டுக்கோப்பாய் ஒரு படை , தனக்கு சிம்மசொப்பனமாய் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்காத இலங்கை , கிறங்கி போய் பயத்தின் பிடியில் துவண்ட காலம் இருபத்தி ஐந்து  வருடங்களுக்கு மேல் .

கூப்பிடும் தூரத்தில் தமிழ் உறவு. உலகின் தலைசிறந்த படைபலம் கொண்ட நாடு. படை அனுப்பக் கூட தேவையில்லை. ஒரு உறுமல் கொண்ட அறிக்கை மட்டுமே போதும் - பின்வாங்கி பதுங்கியிருக்கும் சிங்களம். இந்த பக்கமிருந்து ஒரு சின்ன ஆறுதல் குரல் கூட அவர்களை    அணுகவில்லை.

கடைசிவரை கதறிவிட்டு ஒரு சதுர மைல் சுற்றளவில் அடங்கும் வரை போராடி, இறுதியில் மாண்டது வீரம். 2009 -இல் இலங்கையில் வென்றது அராஜகம்.  

புலிகளுக்கு எதிரான போரை காரணம் காட்டி நடந்தேறிய கொலைகளும், அட்டூழியங்களும் மூன்றாண்டுக்குப் பிறகே வெளிவந்திருக்கிறது. நமது ஊடகங்கள்  செய்ய வேண்டிய கடமையை , இங்கிலாந்தின் சேனல் 4  செய்திருக்கிறது. அவர்கள் வெளியிட்ட வீடியோவின் ஒவ்வொரு நொடியும் ரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகளும், 'யாருக்கு தெரியப் போகிறது?' என்று ராவண வம்சம் போட்ட ஆட்டத்தையும் காண யாருக்கும் இதயத்தில் பலம்  இருக்காது.

அதுவும் கொடுமைப்படுத்தி அழிக்கப்பட்டது நம் தமிழினம் என்றால்   இதை பார்த்த பின்பும் உயிர் மிச்சமிருப்பது விசித்திரமே.
போன உயிர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை நாற்பதாயிரம். போர் மரபை மீறிய அநாகரீகம் நடந்திருக்கிறது. போருக்கு நடுவில் சிக்கிகொண்ட அப்பாவி மக்களின்  உயிரும்  மானமும் சூறையாடப்பட்டிருக்கிறது .இதை முக்கால் மணி நேர காட்சிகளில் கூட பார்க்க தெம்பில்லாத நமக்கு  இயலாமையும்  , குற்றவுணர்வும்   மனதை அரிப்பதை தடுக்க முடியாது.

கடந்த பத்து வருடங்களாக சிங்கள ராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்த ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை இந்திய அரசு.
போரின் போது அப்பாவி தமிழ்மக்கள் சாரி சாரியாக கொல்லப்படும்போதும் வாய் திறந்து பேச மறுத்தது. 
அகதிகள் நிலைமையை அறியச்சென்ற எம்.பிக்கள் குழுவினாலும் எந்த பயனும் இல்லை.  

இடைப்பட்ட நேரத்தில், தமிழக மீனவர்களையும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சுட்டுத்தள்ளும் போக்கை பழக்கமாய் கொண்டது சிங்களம்.அதற்கும் எதிர்ப்புக்குரல் வெறும் சம்பரதாயமாகவே இங்கிருந்து வெளிப்பட்டது.

இங்கு நிலை இப்படி இருக்க , உலகின் போலிஸ் அமெரிக்காவிற்கு , காலம் தாண்டி மனசாட்சி உறுத்தியிருக்கிறது. விளைவு - ஐ நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம். இதை தடுக்க இலங்கை மிக தீவிர முயற்சி எடுக்கிறது.
தீர்மானத்திற்கு  ஆதரவாக 22 நாடுகள் உடன்பட்டிருக்க இன்னும் மவுனம்  சாதிக்கிறது இந்தியா. 
எந்த ஒரு உறுதிப்பாடான நிலையும் இது வரை அளிக்கப்படவில்லை.

அண்ணன் தம்பி இருவருமே போரிட்டு சாவது  தவறில்லை  - கோழைத்தனமில்லை . அண்ணன் நல்ல பலத்துடன் கம்பீரமாய் உலகில் வாழ்ந்திருக்கும்போதே , தம்பி அடிபட்டு மரணிப்பதை எந்த வகையில் சேர்ப்பது?

'இலங்கையுடனான உறவு வரலாற்றுப் பூர்வமானது ; நட்பு ரீதியானது ' என்று இன்று வரை  சொல்லி வரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவின் அறிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான்.  காஸ்மீர் விவகாரத்தில் , பாகிஸ்தான் உறவைப் பற்றியும் இதையே சொல்லுவாரா என்பதுதான் கேள்வி.

இலங்கையில் இதுவரை இருந்த இந்திய சொந்த பந்தங்களும், சகோதர உறவுகளும் மாண்டபின் , என்ன நட்பு ரீதியான உறவு இனியும் தேவைபடுகிறது என்ற கேள்விக்கு யார் விடை சொல்வது?  

அமெரிக்காவின் இந்த தீர்மானம் வெற்றிபெற்று உலக நாடுகளின் பிடியில் இலங்கை பதுங்கி அடங்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். அதைத் தவிர நம்மால் செய்ய இயல்வது இப்போதைக்கு எதுவும் இல்லை. அந்த காலம் எப்போதோ தாண்டி போய்விட்டது.
இந்திய வரைபடத்தில் இன்னும் இலங்கையை ஒட்டி வைத்திருப்பதற்கான காரணம் இனி அர்த்தமற்றது.

மொழி புரியாத, இனத்தால் ,நிறத்தால் வேறுபட்ட நாடுகளுக்கு புரிந்த வலி, கேட்ட கூக்குரல், தெரிந்த நியாயம் , வெகு அருகில் கரை தாண்டி வசிக்கும் நமக்கு இன்னும் உரைக்காததற்கு  
காரணம்  : அரசியல் பாஷையில் சொன்னால்  'அஹிம்சை'  , வேறு  எந்த பாஷையில் சொன்னாலும்  - 'சுயநலம்'

மற்றபடி, இங்கு குறை ஒருத்தரிடம் மட்டும் அல்ல.ஒரு கட்சியிடம் மட்டும் அல்ல.
இது பொது அவமானம். வரலாற்றுப் பக்கங்களில் இது எப்படி பதியுமோ , அதை தலை குனிந்து ஏற்றுகொள்ள தயாராய் இருப்போம்.

Saturday, November 12, 2011

அண்ணா நாமம் வாழ்க..அண்ணா நூலகம்???


மிக அருகில் இது நடக்கலாம். தாராளமாக 'திமுக கால திட்டங்கள் ஒழிப்பு'  என்ற புது இலாக்காவை அதிகாரபூர்வமாக உருவாக்கி அதை அம்மா தன்  கட்டுபாட்டில் வைக்கக்கூடும்.  நல்லது.  திமுக காலத்தில் உருப்படியில்லாத எந்த திட்டத்தையும் ஒழிக்க எல்லார் ஆதரவும் அம்மாவுக்கு உண்டு. ஆனால் அண்ணா நூலக விஷயம் கண்டிப்பாக அதில் இல்லை.  


புதிய சட்டபேரவையை உப்பு பெறாத காரணம் சொல்லி அதை மருத்துவமனை ஆக்கியபோது , அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் அது யாரையும் பாதிக்கபோவதில்லை.  யார் பதவியில் இருந்தாலும் அவர் ஒழுங்காக ஆட்சி செய்தால் அதை கொடநாட்டில் செய்தால் என்ன ? கோபாலபுரத்தில் செய்தால் என்ன?  நல்லாட்சிதான் முக்கியம். எனவே அது விவாததிற்கு தேவை இல்லாதது.
 
ஊழல் செய்த முன்னாள் மந்திரிகளை கைது செய்வதும் , மேலவை வேண்டாம் என்று நிராகரித்ததும் உத்தமமே.
ஆனால் அண்ணா நூலகம் அப்படி இல்லை. அது அங்குதான் இருக்க வேண்டும்.காரணம் அதன் பயன்பாடும் பெருமையும்.

சுமார் இருநூறு  கோடியில் செலவு செய்து உருவாக்கிய நூலகம். மொத்தம் ஒன்பது தளங்களில் நூலகத்தின் ஒவ்வொரு பாகத்திலும் கொட்டிகிடக்கும் புத்தகங்கள்.ஏறக்குறைய பனிரெண்டு லட்சம் புத்தகங்கள் அடங்கிய நூலகம். ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும் எல்லா வகையான நூல்களும் வகைபடுத்தி அடுக்கிவைக்கப்பட்டு ,அவைகளை படிக்க தனியாக படிப்பறைகளும் கொண்ட நூலகம். பல்வேறு புத்தகங்களுடன் , ஆடியோ - வீடியோ மூலம் தகவல்களை அறிந்து கொள்ள வசதியும் ,புகைப்பட நூல்களும் தனியாக உள்ளன. கூடவே உணவுகூடமும். ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகமாக கருதப்படுவது.
 
இதைதான் குறிவைத்திருக்கிறது தற்போதைய அரசு. சொல்லும் காரணம் - கூட்டம் வரவில்லை என்பது. உண்மையான காரணம் உலகறிந்தது.
 
புதிய சட்டசபையை மருத்தவமனையாக்குவோம் என்று அறிவித்தபோது மக்கள் சந்தோசப்பட காரணம் 'இவ்வளவு செலவு செய்து கட்டிய கட்டிடம் அப்படியாவது பயன்படட்டுமே ' என்றுதானே தவிர     'இதை போல எந்த கட்டிடத்தையும் மருத்துவமனை ஆக்கினால் நல்லது '  என்றல்ல.  
 
 
இப்போது நூலகமும் மருத்துவமனை ஆக்கப்படும் என்பது
அறிவிப்பு.மருத்துவனைகள் மிக அவசியம்தான். அதை புதிதாக உருவாக்கி கொடுங்கள். வணங்குகிறோம்.வாழ்த்துகிறோம்.ஆனால் நூலகத்தை மாற்றி அல்ல.
 
பெரிய கோவிலை சுற்றிபார்க்க வருபவர்களுக்கு கால் வலிக்கும்தான். எங்கேயாவது அமர ஏதாவது இடம் கிடைக்குமா என மனம் நினைக்கும்தான்.அதற்காக அழகான சிற்பத்தை உடைத்து , அதை கீழே போட்டு , இதில் அமருங்கள் என்று பெருமிதமாக சொல்லுவதை எந்த கணக்கில் சேர்ப்பது ? கண்டிப்பாக இதற்கு நன்றியோ பாரட்டுதலோ கிடைக்காது.
 
தவிர நூலகம் கட்டும்போதே ,இதன் பயன் புத்தகங்களை  அடுக்க, வாசிக்க என திட்டமிட்டு ஒரு அமைப்பாய் இருக்கும்.அதை மருத்துவமனை ஆக்கும்போது , முழுதும் தலைகீழாக  மாற்ற வேண்டும். அதன் செலவு கண்டிப்பாக புது மருத்துவமனை கட்டுவதை  விட அதிகம் ஆகும். இது வேண்டாமே.
இருக்கும் அறிவை அழித்து உடல்நலத்தை வாங்கும் முட்டாள்தனம் போல ஆகிவிடும் இதன் பயன்.
 
இப்படி பெரிய பணத்தை போட்டு அதிநவீன மருத்துவமனை ஒன்றை பெருநகரத்தின் மத்தியில் கட்டுவதை விட , குறைந்தது இருபது மைல் தொலைவில் இருக்கும் மருத்துவமனையை நம்பியிருக்கும் கிராமங்களுக்கு சிறு சிறு மருத்துவமனைகளாக அவர்கள் கிராமத்திலேயே கட்டி உதவலாம். காலகாலம் அவர்கள் ஓட்டு உங்களுக்குதான்.சத்தியம். 
 

நூலகம் சரியாக பயன்படுத்தபடுவதில்லை என்ற அக்கறைக்கு நன்றி. அதை பிரபலமாக்க அரசு பலவழிகளில் முயற்சிக்கலாம். சென்னை பள்ளிகள் , கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நூல்களின் பலன்களை எடுத்துரைத்து , அவர்களை வர செய்யலாம்.  கண்டிப்பாக புரிந்து வருவார்கள். குமுதம் , கல்கண்டு படித்து புத்தி தடுமாறிய 80 ,90 காலகட்ட மாணவர்கள் அல்ல இப்போது. 'புதிய தலைமுறை'யும் நாணயம் விகடனும் படித்து முன்னேற  ஆர்வமுள்ளவர்கள் காலம் இது.
 
பழி வாங்குவதுதான் முக்கியம் என்று நினைத்திருந்தால் 2006 -இல் கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்றதும் ஆயிரக்கணக்கான டாஸ்மாக்  ஊழியர்கள் வேலை இழந்திருப்பார்கள். அதற்கு நன்றிக்கடனாக நூலகமும் , கண்ணகி சிலையும் , கன்னியாகுமரி   வள்ளுவர் சிலையும் , சிவாஜி சிலையும் இனி பிழைத்து போகட்டுமே . நூலகம் தப்பினால் அந்த பெருந்தன்மைக்கு 2016ல் நன்றிகள் ஓட்டுகளாக அதிமுகவிற்கு கிடைக்கும். 
 
எம்ஜீஆர் ஆத்மா உங்களை கண்டிப்பாக வாழ்த்தும். 
--------------------------------

Tuesday, September 27, 2011

உள்ளாட்சித் தேர்தல் -A Solo Stunt

'எங்கள் கூட்டணியே நேர்மையான கூட்டணி' 

' அதர்மத்தை அழிக்கவே இந்த கூட்டணி' 

 'எங்கள் கொள்கைகள் வெவ்வேறாயினும் குறிக்கோள் ஒன்றுதான் ; அதன் விளைவே இந்த கூட்டணி ' 

 'பழையதை மறந்து விட்டோம் ; இனி நடப்பது நல்லதாய் இருக்க வேண்டும் என்ற காரணத்திற்காகவே இந்த கூட்டணி ' 

 'எங்கள் இரண்டு கட்சிகளும் , மக்கள் சேவை என்ற புள்ளியில்  இணைந்திருக்கிறோம் என்பதை மக்களுக்கு சொல்லத் தேவையில்லை'  

'நாங்கள் ஒரே குருகுலத்தில் அரசியல் பயின்றவர்கள்.. நாங்கள் இணைவதில் என்ன ஆச்சர்யம்? '

'இத்தனை வருடங்கள் எங்களை மதிக்காதவர்கள் கூட்டணியில் இருந்து இப்போதுதான் வெளியே வந்திருக்கிறோம். ஒரு விதத்தில் இது எங்களுக்கு ஒரு விடுதலை.இனி மக்கள் பணியே எங்களுக்கு முக்கியம்'

'பாசிச கட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு மரியாதை இல்லை. ஆனால் இங்கு வந்ததும் தலைவர் கட்டி அணைத்து வரவேற்றதில் ஏற்பட்ட கண்ணீரில் எங்கள் மனகசப்புகள் கரைந்துவிட்டன.. '

யப்பா...இப்படி எத்தனை உளறல்கள் தாண்டி வந்திருக்கிறோம்.பொறுத்து வந்திருக்கிறோம். மேலே கண்ட அறிக்கைகள் அனைத்தும் ஒரு கட்சி ,இன்னொரு கட்சியுடன் கூட்டணி வைக்கும்போது கூறிய காரணங்கள் - . கொடுமை.

திமுக தோற்றதில் யாருக்கு என்ன லாபம் கிடைத்ததோ என்னவோ , இந்த உள்ளாட்சி தேர்தல் ஒரு வரமாக ,தமிழக மக்களுக்கு கிடைத்து விட்டது.
தமிழக வரலாற்றிலேயே ,இந்த உள்ளாட்சி தேர்தல் மிக முக்கியமான ஒன்று.. நம்புங்கள்... யாரும் யாரோடும் கூட்டணி இல்லை...  

ஜெயிப்பது எந்த கட்சியாய் வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் Victory Factor எனப்படும் வெற்றிக்கான காரணத்தை, குழப்பமில்லாமல்  நிர்ணயம் செய்ய மக்களுக்கு இப்போது ஒரே கேள்விக்கான பதில் தெரிந்தால் போதும் - 'இந்த கட்சிக்கு ஒட்டு போட்டால்  ,ஏமாற்றாமல் மக்களுக்கு எதாவது செய்யுமா ? 
இதற்கு முன் செய்திருக்கிறார்களா ?' -  இது மட்டுமே..

மற்ற முறை போல - ' நல்லவர்தான்..ஆனால் இவருக்கு போட்டால் , அந்த கட்சியில் நம் கட்சி கூட்டணி வைத்திருக்கிறதே .. என்ன செய்யலாம்?' என்றோ
'போன முறை ஒன்றும் செய்யவில்லை.இந்த முறை போட வேண்டாம் என்று பார்த்தால் , ஆளும் கட்சியோடு கூட்டு வைத்திருக்கிறாரே..எதாவது தேறுமா?' என்றோ 'குழப்பமா இருக்கே.. இந்த ஆள் ரெம்ப மோசம்.ஆனா என்ன பண்ணித்தொலைக்கிறது? நம்ம ஜாதிகட்சியோட ஆதரவுல நிக்கறாரே..' என்றோ எதுவும் குழம்ப வேண்டாம்.

எல்லாரும் தனித்தனி. அதற்காக எல்லாரும் 'நாங்கள் நல்லவர்கள்.அந்த தைரியத்தில்தான் தனியாக நிற்கிறோம்' என்று சொல்லவில்லை (சொல்ல தகுதியும் இல்லை). கூட்டணி படியவில்லை. அதுதான் காரணம்.

சரி .. இப்போ ஒரு பாமரத்தனமா, வெள்ளந்தியா , சராசரி வாக்காள  ஜனமா கட்சிகள அலசுவோம். 


அதிமுக தனி மெஜாரிட்டி. ஏற்கனவே சொன்ன மாதிரி  ,தேர்தல் முடிஞ்சதும் தேமுதிகவை (இன்னபிற சில்லறை கட்சிகளை )அம்மா தலைமையிலான   அ.இ.அ.தி.மு.க. கட்சியில் நடந்த பொதுக்குழு கூட்ட நிர்வாக கூட்டம்  (இதுல்ல என்ன சுத்தி வளைக்கிறது ? அம்மா தான் கட்சி. அம்மா மட்டும்தான் கட்சி )கழட்டி விடும் என்ற உண்மை அரசியலில் அ , ஆ மட்டுமே தெரிஞ்ச சின்ன பையனுக்கு கூட தெரியும்.

அம்மா அம்மாதான். எப்பவாவது 'இந்த கட்சியை கூட்டணியிலிருந்து  அதிமுக  விலக்குகிறது'ன்னு அவங்களா சொல்லிருக்காங்களா.. ? அந்த கட்சியே வெளிய போறோம்னு அழுதுட்டு ஓடிவர  மாதிரி பண்ணுவாங்க..அதான் பெர்பெக்ட் லீடர்ஷிப்.

ஆக அதிமுக தனியாக நிக்கறதுல எந்த சந்தேகமும், ஆச்சர்யமும்  இல்லை.



திமுக.. மன்னிக்கவும்..அடுத்த நாலரை  வருசத்துக்கு  தேமுதிகவுக்கு அப்புறம்தான் திமுகவை பத்தி பேச முடியும்.
சரி.. தேமுதிக சிறந்த எதிர்கட்சியாக கடந்த நான்கு மாதமாக ,மிக சிறப்பாக ,அருமையாக ,ஒட்டு போட்ட மக்களுக்காக உடனடியாக.. அட என்னப்பா செஞ்சிருக்காங்க..யாராச்சும் சொல்லுங்க - சட்டசபையில் நூற்றுக்கு நூறு சதவீதம் Attention போடுவதை தவிர. 

சரி இப்போ ஒரு வழியா  கூட்டணியில் இருந்து வெளிய வந்திருக்காங்க.. அவங்க கேட்டது மாதிரி அவங்களுக்கு மார்க் போட இன்னும் ஒரு ஆறு மாசம் கொடுப்போம். (இப்படி ஆறு ஆறு மாசம் கொடுத்து அடுத்த தேர்தலே வந்துடும் போல ) .

இப்போ அவங்க தனி. கூட மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட். இந்திய கம்யுனிஸ்டையையும் கூப்பிட போறார் கேப்டன்.  ஹ்ம்ம் அதனால ஒன்னும் பெரிய வித்தியாசம் இல்ல. ஏறக்குறைய தேமுதிக மட்டும்தான்.  ராஜ அதிர்ஷ்டம் சூழ்நிலை காரணமா யாருக்காவது ஒரு தடவ வரும். ஆனா அத தக்க வைக்கிறது உங்க சாமர்த்தியம் கேப்டன். இதை அப்புறமா பேசலாம். இப்போ இவங்க தனி. அதான் நமக்கு முக்கியம்.


சரி..இப்போ திமுக.  தோல்விக்கு பிறகு சட்டசபை பக்கம் வரலை. மன்னிக்க. சட்டசபைக்கு உள்ள வரல. பெரும்பாலும் எல்லாரும் உள்ள இருக்காங்க. வெளிய இருக்கறவங்க ,உள்ள இருக்குறவங்கள போய் பாத்துட்டு இருக்காங்க. அவங்க இப்போ ஏழை கட்சி ஆகிட்டாங்களாம் -திமுக தலைவர் சொல்லியிருக்கார்..  ஆனா நல்ல முடிவு எடுத்திருக்காங்க - தனியா நிக்கறதுன்னு.

'உன்னால நான் கெட்டேன்;என்னால நீ கெட்ட'-ன்னு எத்தனை நாள்தான் கோபத்தை அடக்கிட்டு கைகோர்த்து இருக்கறது. இந்த தடவ தனியாவே அடி வாங்கிக்கிறோம்ன்னு காங்கிரஸ்க்கு டாட்டா  காமிச்சிட்டார் தாத்தா . இந்த கட்சி சார்பா நிக்கறதுக்கு , ஜெயிலுக்கு போக பயப்படாம தைரியமா இருக்க ,  வேட்பாளர்கள் கிடைச்சிடாங்க போல .அதுவே பெரிய சந்தோசம். இப்போ இவங்க தனி.


அடுத்து காங்கிரஸ்.  வெளி கூட்டணி எதுவும் எடுபடல. சரி உள்ளயாவது ஒற்றுமையா இருக்கறாங்களானா அப்படி எதுவும் தெரியல. மத்தியில சிதம்பரம் நெலமையும் சரியில்ல;உள்ளூர்ல காங்கிரஸ் கரைவேட்டிக்கும்  கட்டம் சரியில்ல. நாடு முழுக்க எதிர்ப்பலை. அது எப்படிங்காணும் இவ்வளவு அடிவாங்கியும் பயமே இல்லாம தனியா ஒட்டு கேக்க வரீங்க..?..
ஹ்ம்ம் எந்த தைரியத்துல தனியா நிக்கறாங்கன்னு தெரியல. ஆனா தனியா நிக்கறாங்க.

பாமக - ரெண்டு மாசம் முன்னாடியே டாக்டர் சொல்லிட்டார் - நாங்க இனி தனி-ன்னு. இப்படி சொல்றோமே ? மக்களாவது நம்மள  சேர்த்துக்குவாங்களான்னு ஒரு தடவைக்கு நாலு தடவ யோசிச்சு  சொல்லிருக்கணும். இந்த தடவையாவது சொல்லுங்க டாக்டர் - உங்க கொள்கைதான் என்ன? சரி அத விடுங்க.. உலக மகா அதிசயம் .. இவங்களும் தனி.

மதிமுக..சாரி - வைகோ தனியா நிக்கறார்.

மீதி இருக்குற கட்சிகளும் பெருசா எந்த கூட்டணியும் இல்லாம அங்கங்க தனி கடை போட்டுருக்காங்க..
எத்தனை பேர் மறந்து போய் பழக்கதோசத்துல 'எங்க கூட்டணிக்கு ஒட்டு போடுங்க'-ன்னு சொல்ல போறாங்களோ?!!!? .
இனி பிரசாரத்துலதான் பெரிய காமெடி இருக்கு.

பிரசாரம் நடக்க நடக்கவே , சொல்லும் விஷயங்களுக்கு ஏற்ப  அதிமுகவில இருந்து பல கட்சிகள் சட்டபேரவையில் வெச்ச கூட்டணியிலிருந்து விலக்கப்படும்.

சரி மக்களே.. கட்சிக்கு தனித்தனியா மார்க் போட ரெம்ப வசதியான சந்தர்ப்பம்.  அது பூஜ்யம்னாலும் பரவாயில்ல..சந்தோசமா போடுங்க.
யாருக்கு தெரியும்? இந்த தேர்தல்ல தமிழ்நாட்டுல இருந்து பல கட்சிகள் காணாமலேயே போய்டலாம்.

முந்துங்கள் இந்த சலுகை இந்த முறை மட்டுமே. இந்த ஒரு முறையாவது மக்கள் எல்லாரும் கூட்டணி வைப்போம்.

Get Ready Folks...

Monday, June 6, 2011

நடுநிலையாய் ஒலிக்கட்டும் கேப்டனின் 'முரசு'


உலகத்தில் எந்த  குடியாட்சி ஆனாலும் எந்த நாடானாலும் சரி ,ஆளும் கட்சியை விட விழிப்பாக இருக்க வேண்டியது
எதிர்கட்சியே. காரணம் ,அந்த ஸ்தானத்தில் இருக்கும்போதுதான் மக்களுக்காக குரல் கொடுக்கும்
 முதல் உரிமையும் ,அரசு தவறினால் சுட்டிக்காட்டும் பொறுப்பும் அதிகமாகிறது.  தெளிவாக சொன்னால் ஒரு கட்சி ,தன் ஆளுமை காலத்தை விட , எதிர்கட்சியாய் இருக்கும்போதுதான் மக்களிடம் அதிக அபிமானம் பெற வாய்ப்பு அதிகம்
கிடைக்கிறது.

போன ஐந்து வருடம் அதிமுக அப்படி எந்த ஒரு உருப்படியான செயலையும் மக்களுக்கு செய்யவில்லை. மக்களுக்கு உதவும்படி  ஒரு சிறு துரும்பைக் கூட கிள்ளி போடாமல் இருந்த கட்சிக்கு , மாநிலம் முழுதும் நிறைந்திருந்த திமுக எதிர்ப்பலை  மட்டுமே ஓட்டுகளாக மாறி மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது . என்ன செய்ய போகிறார்கள் என்று பாப்போம்.

அதிமுகவிற்கு சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை. ஆனால் கேப்டன் செய்ய வேண்டியது நிறைய.

ஆறே வருடத்தில் எதிர்க் கட்சியாய் வளர்ந்திருக்கிறது  தேமுதிக. கட்சி  ஆரம்பித்து ஆறே மாதத்தில் ஆட்சியை பிடித்த எம்ஜிஆரை முன்மாதிரியாக நினைத்து , அரசியலுக்கு
வந்தவர்தான் விஜயகாந்த். ஆனால் மிக ஆணித்தரமாக சொல்லலாம். -இரண்டாமவருக்கு துணிச்சல் அதிகம். 

காரணம் அப்போதைய தமிழகத்துக்கு இரண்டே முகவிலாசம் தான். ஒன்று தன் பேச்சாலும் எழுத்தாலும்,அரசியல்
ஞானத்தாலும் 
அதீத  செல்வாக்கு பெற்ற கலைஞர். இன்னொன்று மிக சுமாரான நடிப்பை மட்டும் வைத்திருந்தாலும் , தன் படங்களிலும் அதில் வரும் பாடல்களிலும் மக்களுக்கு ஆதரவு குரல் கொடுத்து மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை கைவசம் வைத்திருந்த எம்ஜிஆர்.

சிவாஜியை   எல்லாம் அப்போது மக்கள் , தலைவர்கள்  கணக்கில் எடுத்துக் கொள்ளவே இல்லை. ஆக கலைஞர் சற்றே வெளிப்படையாக தவறிழைக்க , இந்த பக்கம் திரும்பியது மக்கள் ஆதரவு. எஞ்சியிருப்பது ஒரே எதிர் தலைவர். எம்ஜிஆருக்கு ஜெயம்.


ஆனால் விஜயகாந்த் வரும்போது எண்ணற்ற போட்டிகள். ஆட்சியில் ஜெயலலிதா. எதிர்பக்கம் கலைஞர். இரண்டு பக்கமும் எண்ணற்ற ,கைவசம் ஒவ்வொருவருக்கும் இருந்த வாக்கு வங்கிகளுடன் பல தலைவர்கள் என அரசியல் கடலில் பல பெரிய கப்பல்கள் .அவைகளுக்கு நடுவே படகோட்ட வந்தார் விஜயகாந்த்.

ஏற்கனவே ரஜினி சறுக்கியிருக்க , சரத் குழம்பியிருக்க , எதைப் பற்றியும் கவலைப்படாமல் துணிச்சலாய்  வந்து அடுத்த மாற்றத்துக்கான ஆணிவேர் ஆதாரமாய் மாறி பல வாக்குகளை திசை மாற செய்து , எந்த கட்சிக்கும் தனிபெரும்பான்மை கிடைக்க விடாமல் , கூட்டணி ஆட்சிக்கு வழிவகுத்தவர் விஜயகாந்த்.

இப்போது இவருக்கு கிடைத்திருப்பது ,இவரே எதிர்பார்க்காத ஜாக்பாட். கிடைத்த வெற்றியை உடனே தலைக்கு கொண்டுபோகாமல் ,பதவியை பந்தாவுக்கு பயன்படுத்தாமல் பக்குவமாய் நடந்தால் அடுத்த முறை அதிமுக-திமுக போட்டி இருக்காது. அதிமுக-தேமுதிகதான். 

'இப்போதைய அரசாங்கம்  நோய்க்கு மருந்து கொடுக்கும் வேலையை நன்றாக செய்து கொண்டு வருகிறது. நன்றாக எனக்கு தெரிகிறது' என்று அரசைப் பாராட்டும் கேப்டன் , கிடைத்தற்கரிய எதிர்கட்சித் தலைவர் பணியை ஒழுங்காக செய்வாரா என்று எல்லார் மனதிலும் எண்ணம் தோன்றி வருகிறது. அரசு கொடுத்த இலவச அரிசியை சில இடங்களில் தன கைப்பட கொடுத்த கேப்டன் , ஆளுனர் உரை மனதிற்கு திருப்தியாக இருக்கிறது
என்றும் 'இப்போதுதான் எல்லாம் ஒரு நேர்கோட்டில் போய்க்
கொண்டிருக்கிறது  ' என்றும் சொல்லியுள்ளார்.  

எனக்கு இவரைப் பார்க்கும் போதெல்லாம் ஏனோ வைகோ ஞாபகம் வந்து தொலைக்கிறது. அவரும் இப்படிதான் ஐந்து வருடமாக அம்மாவுக்கு தலையாட்டி பின்பு கடைசியில் தனிமரம் ஆனார். கேப்டன் அதுபோல் ஆகாமல் முதுகெலும்பை நிமிர்த்தி, இந்த ஆட்சி தவறு செயும்போது சுட்டிக் காட்டினால்தான் அடுத்த முறை மிக  தைரியமாக  மீண்டும் எந்த கூட்டணியையும் நம்பாமல் தனித்து நின்று முதல்வர் ஆக முயற்சிக்கலாம்.

எவ்வளவு   சீக்கிரம் கூட்டணியில் இருந்து வெளியே வந்து எதிர்குரல் கொடுக்க ஆரம்பிக்கிறாரோ
அப்போதுதான் இவருக்கு ஒரு தனி அங்கிகாரம் கிடைக்கும். 
சரி , இன்னும் காலம் இருக்கிறது. 
கூட்டணி தர்மத்திற்காவது(??!!?) ஒரு ஆறு மாதமாவது கூட்டணியில் இருந்து அதன்பின் இந்த தனி ஆவர்த்தன வேலையை ஆரம்பித்தால் கேப்டன் முழு அரசியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று விட்டார்  என்று நம்பி சொல்லலாம்.

அப்படியில்லாமல் ,ஐந்து வருடம் அனுசரணையாக இருந்து விட்டு , தேர்தலுக்கு மட்டும் தனித்து வந்தால் இந்த முறை வைகோவுக்கு நேர்ந்தது போலத்தான் ஆகும்.பார்த்துக் கொள்ளுங்கள்.

(அலார்ட்:  முன்னெல்லாம் ஜெயா டிவிலதான் ஒவ்வொரு தடவையும் மைனாரிட்டி திமுக ,  
மைனாரிட்டி திமுகனு சொல்லி உயிரை வாங்குவாங்க. இப்போ
உங்க கேப்டன் டிவி நியுஸ்ல உங்கள பத்தி சொல்லும்போதெல்லாம், 'தேமுதிக நிறுவன தலைவரும் , தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான கேப்டன் விஜயகாந்த் ' அப்படின்னு சொல்றத நிப்பாட்ட சொல்லுங்க சார்.. இம்சை அரசன் படத்துல வர 'ராஜாதி ராஜ ராஜ குலோத்துங்க..'மாதிரியே இருக்கு..)

தேமுதிக , பல விஷயங்களில் பதுங்குவதை விட்டொழிக்க வேண்டும். முதலில் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் தன் நிலைப்பாடு என்ன என்று உறுதியாக அறிவிக்க வேண்டும்.உதாரணம்- இலங்கை பிரச்சனை, சமச்சீர் கல்வி, புதிய சட்டபேரவை தேவை...இதில் நீங்கள் என்ன கருத்து வேண்டுமானாலும் சொல்லுங்கள்.ஒதுங்காதீர்கள். இல்லையென்றால் சிரஞ்சீவி கதிதான்.

'நான் ஆட்சிக்கு வந்ததே கலைஞரை ஒழிக்கத்தான் ' என்று முன்னர் சொன்னதை ஏறக்குறைய செய்தாகி விட்டது. ஆனால் அதே வசனம் காலத்துக்கும் உதவாது. மூன்றாம் சக்திக்கு ஒதுங்கிய கூட்டம்தான் இன்று வரை உங்களிடம் அதிகமாக இருக்கிறது. அதை தக்க வைக்க வேண்டுமானால் - நீங்கள் உதவுவீர்கள் ..எளிதில் நெருங்க கூடியவர்  என்ற நம்பிக்கையை மக்களுக்கு கொடுங்கள்.

சமீப காலமாக உங்களிடமும் சில ஆணவப்போக்கு   தென்படுகிறது. மக்கள் பேய்க்கு  பயந்து பிசாசிடம் வரமாட்டார்கள்.தமிழகத்துக்கு ஒரு ஹிட்லர் போதும்.

குடும்ப அரசியல் பற்றி எங்களுக்கு கவலை இல்லை.அது உங்கள் கட்சிக்குள் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும். மக்களை பாதிக்காத வரை அது ஒரு பொருட்டல்ல.ஆனால் அடுத்த முறை உங்கள் மனைவியும் , மைத்துனரும் தேர்தலில் நின்றால் இருவரும் கடந்த வருடங்களில் என்ன செய்தார்கள் என்று மக்கள் கேள்வி எழுப்பினால்  நியாயமானதே.

29 எம்எல்ஏ என்பது பெரிய வட்டம். விருதாச்சலதிற்கு என்ன செய்தீர்கள் என்று இனி கேட்க மாட்டோம். அப்போது நீங்கள் ஒரு கை ஓசை. இப்போதோ நீங்கள் ஒரு ஆளுமை சக்தி. ஆளும்கட்சி ஆதரவுடன் அந்த
தொகுதிகளுக்கு நல்லதை
செய்தால் அடுத்த முறை அவைகளை மக்கள் பரிசீலனை செய்து அதற்கான பலனை கண்டிப்பாக கொடுப்பார்கள். 


மொத்தத்தில் இது உங்களுக்கு ஒரு பொற்காலம்.அதிமுகவுடன் அடித்தாலும் அணைத்தாலும் நீங்கள் எதிர்கட்சிதான்.அதை முடிந்த வரை மக்களுக்கு உபயோகபடுத்தினால் உங்கள் கட்சிக்கு நல்ல எதிர்காலம்.கட்சிக்கு மட்டுமே பயன்படுத்தினால் மக்களுக்கும் வேறு தலைவர்கள் நிறைய உண்டு.

ஆரம்பத்தில் ஆரவாரமாய் பொங்கி பின் சத்தமே இல்லாமல் அடங்கிப் போகும் சோடா பாட்டில் உற்சாகமாக இல்லாமல்  , நிலைத்து நின்று மக்களுக்கு உதவினால் , இவ்வளவு நாள் கலைஞருக்கு அளித்த ஆதரவை 'புரட்சிக்'கலைஞரான உங்களுக்கும் தருவார்கள் தமிழக மக்கள்.
செய்வீர்களா கேப்டன்?

வாழ்த்துக்களுடனும்  எதிர்பார்ப்புகளுடனும்  ..
வாக்களித்த மக்கள்

Wednesday, May 18, 2011

நீங்களும் முதல்வராகலாம்

டிஸ்கி :நக்கீரன் பதிப்பகத்தின் ரா.கி.ர எழுதிய 'நீங்களும் முதல்வராகலாம்' புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் இது. பதிவுக்கும் தற்போதைய புது ஆட்சி மாற்றத்திற்கும் எந்த சம்பந்தமும் அல்ல.
 
எல்லாரும் எல்லாருக்கும் பரிந்துரைக்கும் நூல்கள் என சில எப்போதும் உண்டு. திருக்குறளும் , சரித்திர  நாவலுக்கு பொன்னியின் செல்வனையும்  சாண்டில்யனையும் , காந்தியின் சத்திய சோதனையும் , மதனின் வந்தார்கள் வென்றார்களையும் எப்படி கண்ணை மூடிக்கொண்டு சிபாரிசு செய்கிறோமோ அதே  போல ரா.கி.ர எழுதிய 'நீங்களும் முதல்வராகலாம்' நூலையும் தாராளமாக பரிந்துரைக்கலாம்.
 
 


ரா.கி.ர பல மைல்கல்களைத் தொட்ட எழுத்தாளர். மொழிபெயர்ப்பு நூல் எழுதும்போது மிக கவனமாக  , அதன் உண்மையான சுவை குறையாமல் ,அதே சமயம் எழுதப்படும் மொழியில் படிப்பவர்க்கு அன்னியமாக தோன்றாமல் எழுதும் கலை அவருக்கு விரல் நுனியில். அதை இந்த நூலிலும் கையாண்டு நூலின் தரத்தை  உயர்த்தியுள்ளார். 
 
தலைப்பைப்   பார்த்ததும் 'நமக்கு எதுக்குடா இந்த ஆசை?' என்று ஒதுங்கி விட வேண்டாம்.  தலைப்புதான் ஏடாகூடமாக ; மற்றபடி உள்ளிருக்கும் உத்திகள் எல்லா நாளும் எல்லா இடத்திலும் நாம் முன்னணியில் வர சொல்லப்பட்டவை.
 
சரி இது போல பல தன்னம்பிக்கை நூல்கள் வந்து விட்டனவே ; இதில் என்ன சிறப்பு என்று கேட்கறீர்களா ? சொல்கிறேன் . 
 
அறிவுரை சொல்வதுப் போல எளிதானது உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை. அறிவுரையைக் கேட்பது போல கடினமானது மூவலகிலும் வேறு இல்லை. இதை யாராவது பெரியவர் நேருக்கு நேர் உட்கார வைத்து சொன்னால் , மரியாதைக்கு வேறு வழியில்லாமல் கேட்டுக் கொண்டிருப்போம். காசு கொடுத்து அந்த தொல்லையை யார் வாங்குவார்கள்.
 
ஏறக்குறைய எல்லா தன்னம்பிக்கை நூல்களும் மொந்தையாக, கட்டுகட்டாக , பக்கம் பக்கமாக , பாயிண்ட் பாய்ண்டாக அறிவுரையை சொல்லி , நமக்கு தனம்பிக்கை வருவதற்கு பதில் , 'இதில் இவ்வளவு இருக்கா ?' என்று ஒரு அயர்ச்சி தோன்றி விடும் சாத்தியம் உண்டு
பண்ணிவிடுகின்றன. அதிலும் தலைப்புக்கு   அடியில் 'நிரூபிக்கப்பட்ட முறைகள்' என்று  கூடுதல்  தகவல் வேறு.  
 
விதிவிலக்கு - உதயமூர்த்தியின் எண்ணங்கள் மற்றும் இன்னபிற.இந்த நூலும் அது போல விதிவிலக்கில் சேர்த்தியே.
 
இந்த நூல் , ஆங்கிலத்தில் வெளிவந்த ( பேர் ஞாபகத்தில் இல்லை ) இன்னொரு நூலின் மொழிபெயர்ப்பே. ஆனால் வெறும் மொழிபெயர்ப்பாக அல்லாமல் படிக்க ருசியான அதே சமயம் புத்திக்கு ஆரோகியமான உணவாக அமைந்திருக்கிறது. அதிலும்  ரா.கி.ர-வின் எழுத்து நடை சேர்ந்து விட , நூலுக்கு  புதிய சுவை கூடுகிறது.
 
எண்பத்தி எட்டு உத்திகள் . அவையே ஒவ்வொரு பகுதிக்கும் தலைப்புகள் .
ஒவ்வொரு தலைப்புக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட , நடந்த சரித்திர நிகழ்வுகளின் எடுத்துக்காட்டுகள் . அந்த பகுதி முடியும்போது ,அடுத்த தலைப்புக்கான அவசியத்தை கோடிட்டு காட்டிய முறை என்று புத்தகம் வெகு சுலபத்தில் நம்மை  ஈர்த்து விடும்.
 
 
 
சரி , முக்கியமான விஷயத்துக்கு வருவோம். இந்த நூல் யாருக்கு பயன்படும்? அரசியல்வாதிகள் , வக்கீல்கள் , நிறுவனத்தலைவர்கள் ஆகியோருக்கு மட்டுமே..என்று நினைத்தால் புத்தகத்தை படிக்க தொடங்கும்போதே அந்த எண்ணம் மாறி விடும். அட .. இது நமக்கான புத்தகம் என்ற நினைப்பை இது கொடுக்கும்..
 
காரணம்... ஆட்சி அமைப்பதும் , கட்சி தொடங்கி மக்களை ஈர்க்க மட்டுமே என அரசியல் தன்  வட்டத்தை ஒருபோதும் சுருக்கியதில்லை.
 
நன்றாக ஓடிக்கொண்டிருந்த பெட்டிக்கடைக்கு பக்கத்தில் , கொஞ்சம் புதிதாக எதோ ஒரு சலுகையை கொடுத்து ஒரே மாதத்தில் பழைய பெட்டிக்கடையை மூட வைக்கும் புது பெட்டிகடைக்காரரிடம்  இருந்தே ஆரம்பிக்கிறது அரசியல்.
 
மென்பொருள் நிறுவனங்களில் தேநீர் நேரத்தில் மேலாளரைப் பற்றி மணிக்கணக்காக   பேசும் ஊழியன் , மீட்டிங் நேரத்தில் அவர் பக்கத்தில் , அவர் என்ன சொன்னாலும் ஆமாம் போடுவதில் இருக்கிறது அரசியல்.
 
பக்கத்து வீடு காலியானதும் , தனக்கு வேண்டியவர் வரும் வரைக்கும் , வீடு தேடி வருபவரை பல பொய்க்காரணம் சொல்லி வேறு வீடு பார்க்க வைக்கும் சாதாரண இல்லத்தரசியிடம்  இருக்கிறது அரசியல்.
 
ஆக அரசியல் வைரஸ் போல. நமக்கு அது வேண்டாம் என்று ஒதுங்கினாலும் அதற்கு நாம் தேவை. அப்போது நம்மை சுற்றி நடக்கும் அரசியலை சமாளிக்க நமக்கு அதைப் பற்றி பாடங்கள் அவசியம். அதை நன்றாக போதிக்கிறது இந்நூல்.
 
இல்லை... நான் நல்லவன் என்று பம்மாத்து செய்யும் ஆசாமியா நீங்கள் ? சரி நீங்கள் அரசியல் செய்ய வேண்டாம்..உங்களை வலையில் சிக்க வைக்கும் அதிலிருந்து நீங்கள் தற்காத்து கொள்ளவாவது அதைப் பற்றிய அறிவு வேண்டும்.இதுவும்  எய்ட்ஸ் விழிப்புணர்வு போலதான் சார்.
 
 சில மிடில் கிளாஸ் மனசாட்சி உள்ளவர்க்கு இந்த நூல் 'இப்படியெல்லாம் கூட ஏமாத்தலாமா? நம்பிக்கை துரோகம் செய்யலாமா ? வேண்டாமா ?' என்ற கேள்வி  மனதில் நிழலாடும். நாம் யார் குடியையும் கெடுக்க போவதில்லை.கூடாது.ஆனால் களவும் கற்று மற என்பது போல் அரசியல் நுணுக்கங்களையும் கற்று வைப்பது நல்லது.
 
சில பிரச்சனைகளுக்கு மாத்திரை இல்லாத நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தால்  உதவும்.'அய்யயோ .. நான் மாட்டேன்' என்பவர்கள் , சத்தியசோதனையை மீண்டும் படித்து ,
ஏற்பட்ட குற்ற உணர்வை போக்கிக்கொள்ளலாம்.
 
இந்த புத்தகம் வாங்கிய இரண்டு வருடத்தில் ஆறு முறை படித்து விட்டேன்.ஒவ்வொரு முறையும் புதிதாக நிறைய விஷயங்களை உணர முடிகிறது.
 
புத்தகத்தை வெளியிட்ட நக்கீரனுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். ரா.கி.ரவுக்கு வணக்கங்கள்.
 
நீங்களும் முதல்வராகலாம்
ரா.கி.ரங்கராஜன்
நக்கீரன் பதிப்பகம்
விலை ரூ. 225
 
நீங்களும் முதல்வராகலாம்- பெரியவர்களுக்கான 'பஞ்ச தந்திரம்'

Friday, May 6, 2011

ஜெத்மலானி - சட்டத்திற்கு சாபமாய் மாறிய வரம்

எப்போதும்  சில  பேரின்  வாழ்க்கைப் பக்கங்களை   புரட்டினால்  
நமக்கு எதாவது  ஒரு  பாடம்  கிடைக்கும் .அதில்  அவரின்    நடத்தையும் குணங்களும் ஏறத்தாழ  நமக்கு புரியும் .சிலபேர்   வாழ்க்கையோ  புதிராக ,குழப்பமாக  இருக்கும்  அல்லது  ஏன்   இப்படி  இருந்தார்  என்பதை சொல்லாமலே  விட்டுவிடுவார்கள் .அல்லது நமக்கு புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாமல்  இருக்கும்.ராம்ஜெத்மலானியும்  அப்படித்தான் .

சிலபேர்  பிறக்கும்போதே  அதீத  திறமை  வாய்ந்தவர்களாக 
பிறப்பார்கள் .வாழ்க்கையின்  எல்லா  கட்டங்களிலும் 
எல்லாரையும்  விட  முன்னணியில்  இருந்தே  
முன்னேறியிருப்பார்கள் .
ஆனால்  முன்னுக்கு  வந்தப்பின்  அந்த திறமை  நல்லதற்கு  பயன்படுகிறதோ  இல்லையோ தங்கள்  தனி 
 முன்னேற்றத்திற்கு  மட்டும்  பயன்படுத்த ஆரம்பித்து  , அதனாலேயே    மக்களுக்கு  தலைவர்   ஆகும்  தகுதியை 
 இழந்து  விடுகிறார்கள் .இது  போல்  பல  தலைவர்களை  மக்கள்  
இழந்திருக்கிறார்கள் .ராம்ஜெத்மலானியும் அப்படித்தான்.

புகழ் பெறுவதில்   இரண்டு  வழி  உண்டு .ஒன்று  -மிக  நல்லபிள்ளையாக  பெருவாரியான  மக்களுக்கு   ஒத்துப்போன  கருத்தை  முன்வைத்து  அதற்காக  போராடுவது.
மற்றொன்று -எல்லாரும்   எதிர்க்கும்  ஒரு  செயலை  அல்லது ஒரு  நபரை  ஆதரிப்பது .இதில்  இரண்டாம்  வகை மனிதர்களுக்கு தைரியம்  அதிகம்  இருக்க  வேண்டும் .
ராம்ஜெத்மலானியும் அப்படித்தான் .



முதலில்  அவர்  துணிச்சலுக்கு  ஒரு  சல்யுட் 
 

.வாழ்க்கையின் எல்லா  நிலையிலும் எதிர்ப்பவருடன்  எந்த விதத்திலும்  ' நோ  காம்ப்ரமைஸ் '

பள்ளி  வயதில்  இரட்டை  நிலை  உயர்வு  பெற்று  பதிமூன்று  வயதிலேயே   பள்ளிப்படிப்பை  கடந்தவர் ஜெத்மலானி. அவர்  தன்  பதினேழாவது  வயதில்  சட்டம்  முடித்தார்   என்றால்  உங்களுக்கு  நம்ப  முடிகிறதா ?

அடுத்து  அவர்  நீதிமன்றத்தில்  வக்கீலாக  ( குறைந்த வயது தகுதி இருபத்தி ஒன்று. ஆனால் தனி  அங்கிகாரமும்  , அனுமதியும்  பெற்று ) வாதாட ஆரம்பித்தது 
தன் பதினெட்டாம் வயதில்.

பாகிஸ்தானில்  பிறந்து  பிறகு  பிரிவினைக்குப்பின்  இந்தியா  வந்தவர்.பாகிஸ்தானில்  இருக்கும்போதே அதன்  முக்கிய   அம்சமான  வரைமறை  இல்லாத  திருமண  முறையை உபயோகப்படுத்தி  இரட்டை மணம்  செய்தவர் .அதுதான் ஜெத்மலானி :)

பம்பாயில்  இந்தியா  வாசத்தை  தொடங்கி  வக்கீலாக  வேலைப்
பார்த்த  ஜெத்மலானி  மீது
சமூகத்தின்  பார்வை  விழத்தொடங்கியது
,அவர்  கடற்படை  தளபதி  நானாவதி  ,தன் மனைவியின் காதலனை கொலை செய்த வழக்கில் இறங்கியபோதுதான் .அடுத்த வருடத்திலேயே   கள்ளக்கடத்தல்  கும்பல்  ஒன்றுக்காக  வாதாடி அவர்களின்  விடுதலைக்கு
 காரணமானதால்  . 'கடத்தல்காரர்களின்  வக்கீல் ' என்று  பெயர்  பெற்றது  குறிப்பிட  வேண்டியது
 .
இதற்கு  அவரின்  அழுத்தமான  பதில்
' நான்  வக்கீலின்  கடமையைத்தான்  செய்தேன் ' என்பதே .உண்மைதானே.. எந்த சட்டத்தில் கெட்டவர்களுக்கு ஆதரவாக வாதாட கூடாது என்று குறிப்பிட்டுள்ளது  ? இதன் மூலம் பிள்ளையார் சுழி போட்டு அரம்பித்ததுதான் ஜெத்மலானியின் சர்ச்சைக்குரிய வழக்குகள்.


அடுத்து  நடந்தது  எல்லாம்
நாடறிந்த  கதைகள்.இவரின்  அரசியல்  பிரவேசமும்  ,வாஜ்பாய்  தலைமையில் இரண்டு
முறை  சட்ட  அமைச்சர்  ஆன  கதையும்  , பிறகு  வாஜ்பாயையே  எதிர்த்து  போட்டியிட்டு  தோற்றதும்  இவரின் துணிவுக்கும்  இரும்பு
மனதிற்கும்  எடுத்துக்காட்டுகள் .

போதும்  முன்னுரை.
இப்போது  இவர்  ஆதரித்து  வழக்காடிய  நபர்கள்  மற்றும்  வழக்குகளின்  பட்டியல் :


1.பிரதமர்  இந்திரா  காந்தியைக்  கொன்றவர்களுக்கு  ஆதரவாக
2.ஹவாலா  புகழ்  ஹர்ஷத்  மேஹ்தாவுக்கு   அதரவாக
3.பங்குச்சந்தை  ஊழல் புகழ் கேத்தன்  பஃரேக்க்கு  ஆதரவாக
4.நிழலுலக  தாதா ஹாஜி  மஸ்தானுக்காக  
5. தீவிரவாதி  அப்சல் குருவுக்காக
( இது  ஒரு  விதத்தில்  நியாயமே . காரணம்  ஜெத்மலானி  கூறியதே  .'இவன்  மிக சுலபமாக  சாக  வேண்டியவன்   அல்ல . சிறையில்  காலங்காலமாக  உழந்து  தண்டிக்கப்படவேண்டியவன் ')
6.ஹவாலா  வழக்கில்  அத்வானிக்கு  ஆதரவாக
7.ஜெசிக்கா  லால்  கொலை  வலைக்கில்  மனு ஷர்மாவுக்காக
8.சொஹ்ரபுதின்  போலி  என்கவுண்டர் வழக்கில்  குஜராத்தின்  முனனாள்  உள்துறை  அமைச்சருக்காக
9.ராமவடார்  ஜக்கி  கொலை  வழக்கில்  அமித்  ஜோகியை  காப்பாற்ற
10.போன  வருடம்  ஐபிஎல்  முன்னாள்  தலைவர்  லலித்  மோடிக்காக
11.தற்போது  2ஜி  ஊழல்  வழக்கில்  கனிமொழிக்காக

தொண்ணூறு  வயது  நெருங்கியும் இன்னும்  சட்டத்தில்  எங்கெங்கு  சந்துகள்  இருந்தாலும்  , அதில்  கூடியவரையில்  புகுந்து குற்றவாளியைக்  காப்பாற்றும்  
இவரின் திறமையில்  எவருக்கும்  சந்தேகம்  இல்லை .


நான்கு  முறை இந்தியா  பார்  கவுன்சில்  தலைவராகவும்  ,இரண்டுமுறை  
நாட்டின்  சட்ட  அமைச்சராகவும் ,தற்போதைய  ராஜ்யசபா  
உறுப்பினராகவும்  .இருக்கும் இவரின்  தகுதியையும்  யாரும்  விமர்சிக்க  தேவை  இல்லை

ஆனால்  இவ்வளவு  நல்ல  திறமைகள்  இருந்தும்  அதை  
நல்லதுக்கு  பயன்படுத்தாமல் ,தொடர்ந்து  ஏன்  தவறான 
அணியின்  பக்கம் துணை  போகிறார்  ஜெத்மலானி ?
இவரின்  உத்தேசம்  பணமா  , புகழா , பதவியா ? அதுதான்  என்றால் இந்த  மூன்றையும்  அதிகமாகவே  அனுபவித்து  விட்டார் .
பிறகு  எதற்கு  2 ஜி பக்கம்  ?

ஊழல்களிலும்  மக்கள்  பணத்தை  சுரண்டுவதிலும்  கை  
தேர்ந்தவர்கள்,  இவரைப்  போல  சட்ட  வல்லுநர் துணை  இருக்கும்  தைரியத்தில்,  தவறுகளின்  எந்த 
உச்சத்துக்கும்  போகும்  நிலை இருக்கிறது.ஊர்  அறிந்த  2ஜி  ஊழலுக்கு  என்ன  சப்பைக்கட்டு  
கட்ட  போகிறார் ஜெத்மலானி என்று  எல்லாரும்  ஆவலாக  காத்திருக்கிறார்கள். 

இன்னொரு அம்பேத்காராக பேசப்பட வேண்டியவர். ஆனால் இவரை  முன்மாதிரியாய்  எடுத்துக்  கொள்ள  சட்டம்
படிப்பவர்களை அறிவுறுத்த  முடியாத   நிலைதான் இப்போது இருக்கிறது.

ஆனால் இவைப் பற்றி எந்த கவலையும் படாமல் தன் வழியில் வேகமாக போய்க்கொண்டிருக்கிறார் ஜெத்மலானி. மக்களின் கோபமான கேள்விகளுக்கெல்லாம்  அவரின் தீர்க்கமான பதில் 'நான் என் ஆத்மாவையும் , அறிவையும் யாருக்கும் அடகு வைக்கவில்லை.சட்டத்தில் முன் நிறுத்தப்படும் ஒருவனை , மக்கள் குற்றவாளியாக கருதிவிட்ட ஒரே காரணத்தினால் ஒரு வக்கீல் அவனை காப்பாற்றாமல் விடுவானானால் ,அந்த வக்கீலும் குற்றவாளியே '



மிக நேரான கூர்மையான பதில். பாராட்டப்படவேண்டியது.அதே சமயம் வருத்தப்படவேண்டியது . இந்த இருப்பக்க கத்தி கொள்கை  எப்போது எந்த பக்கம் பாயும் என்பது
இதுவரை யாரும் கணிக்கவில்லை.

என்ன செய்வது ? பாரதத்தின் சாபம் இது. ஆதி காலம் தொடங்கி பீஷ்மர்களும் துரோணர்களும் , துரியோதனர்கள் பக்கமே இருந்து தொலைக்கிறார்கள் .
ஆனால் நல்லவர்கள் பக்கம் இப்போதெல்லாம் எந்த கண்ணனும் காணப்படுவதில்லை.

Tuesday, April 12, 2011

வாக்களிக்க வழிகாட்டி : தேர்தல் 2011

தமிழக மக்களே ,
நாளைக்கு  ஒரு  நாள் நீங்கதான் கிங்மேக்கர்.. இந்த மாதிரி வாய்ப்பு  ஐந்து வருடங்களுக்கு ஒருமுறைதான் வரும். போன தடவை நமக்கு இந்த மரியாதை  கெடைச்சது  மே 8  2006 -இல் . இந்த தடவை ஏப்ரல் 13 - நாளைக்கு.




இந்த கட்சிக்குதான் ஓட்டு போடுவேன்னு தெளிவா கட்சி அபிமானிகளா இருக்குற நண்பரகளுக்கு எந்த ஐடியாவும் கொடுக்க தேவை இல்ல .   ஆனா எந்த கட்சிக்கு வாக்கு அளிக்கறது-னு குழப்பமா இருக்குறவங்களுக்கு சில டிப்ஸ் :

(அய்யயோ இப்படி குழப்பமா இருக்கேன்னு நீங்க ஃபீல் பண்ண தேவை இல்லை. திமுக ஊழல் செஞ்சுடுச்சு ;அதிமுகவுக்கு போடலாம்னு தெளிவா இருந்திருப்பீங்க .இப்போ அந்த அம்மாவும் எல்லா இலவசத்தையும் அறிவிச்சு , கூட்டணியில குண்டு வெச்சு உங்கள யோசிக்க வெச்சுட்டாங்க.. கேப்டனை   நாப்பதுக்கு நாப்பது ஜெயிக்க வைக்கனும்னு நினைச்சவங்க நம்பிக்கைல , கடந்த ஒரு மாச காலமா அட்டுழியம் பண்ணி அவரே மண்ணை போட்டுடாரு.
ஆக இந்த தடவை என்ன பண்ணலாம்னு புரியாம இருக்குறவங்க , முடிவெடுக்க மேல படிங்க )


1.கட்சிய சிந்திக்கிறத  விட்டுருங்க ; வேட்பாளரோட தனி குணநலன்கள பாருங்க ; அவர் படிப்பு,திறமை , நம்பகத்தன்மை ;அனுபவம் ; இது வரைக்கும் என்ன பண்ணியிருக்கார் ; அவரே போன தடவை எதாவது தொகுதி எம்எல்ஏவா இருந்திருந்த அங்க என்ன செஞ்சாரு-னு அலசுங்க .அவர் பதவிக்கு வரதுக்கு முன்னாடி அந்த தொகுதி எப்படி இருந்தது ; அவர் வந்தப்புறம் என்ன மாற்றம் வந்ததுன்னு தெரிஞ்சிக்கோங்க.

இதுல உங்களுக்கு ரெண்டு ரிசல்ட் கெடைக்க வாய்ப்பு இருக்கு . 

ஒன்னு - நல்லது செஞ்சிருப்பாரு.வளர்ச்சிகள் அதிகம் கொடுத்திருப்பாரு   ;  ஆளும்கட்சியோ , எதிர்கட்சியோ , கூடியவரை நல்ல விதமா தன் பதவியை பயன்படுத்தி ஒரு முன்னேற்றத்தை கொடுத்திருப்பாரு . - இதுதான் ரிசல்ட்னா இவருக்கு அடுத்த சான்ஸ் தாராளமா இவருக்கு கொடுங்க.

ரெண்டு : மேல சொன்ன எல்லாத்தையும் செஞ்சிருப்பாரு - ஆனா தொகுதிக்கு இல்லேங்க ;  அவர் குடும்பத்துக்கு. இந்த ரிசல்ட் வந்தா உங்களுக்கு இன்னும் வேலை அதிகம். அடுத்த ஸ்டெப் போகணும்.அது என்னனா ...
  உடனே முக்கிய எதிர் வேட்பாளர பாருங்க. அவர்கிட்ட இதே அலசல் பண்ணுங்க. ரிசல்ட் ஒன்னு-னா ஓகே . இல்லேன்னா அதுக்கு அடுத்த ஸ்டெப்.

2.இப்போதான் மிக முக்கியமா சிந்திக்கணும். ஒரு மாயை எல்லாத்துகிட்டயும்  இருக்கு. சுயேட்சையா ஒருத்தர் நின்னா அவர் நல்லவராவே இருந்தாலும் , 'இவர் எப்படியும் தோக்க போறாரு. இவருக்கு போட்டு  என் வோட்டு எதுக்கு வீணாகனும் '-னு. ரெம்ப தப்புங்க. அவர் வெற்றி பெறுவாரோ  இல்லையோ , நல்லவரா இருந்தா   உண்மையிலேயே  மக்கள் மேல அக்கறை உள்ளவரா இருந்தா அவருக்கு நாம போடுற ஒவ்வொரு ஓட்டும் அவரை உற்சாகப்படுத்தும். இன்னும் மக்களுக்கு நல்லது செய்யணும்னு ஒரு உத்வேகம் பிறக்கும்.

அது இல்லாம அவர் டெபொசிட் காலியானா என்ன ஆகும் ? 'இவ்வளவு செஞ்சோமே; மக்கள் நம்மள ரெம்ப அவமானப்படுத்திட்டாங்களே'-னு  மொத்தமா பொது சேவைல இருந்து விலகிடுவாங்க. யாருக்கு நஷ்டம் ? நமக்குதான... எதோ ஒரு கட்சியில இருக்குற மோசமானவங்களுக்கு போட்டு அவர ஜெயிக்க வைக்கறதுக்கு பதிலா , இந்த மாதிரி எந்த கட்சி பலமும் இல்லாம, நல்லது செய்ய வாய்ப்பு கேட்கும் சுயேட்சிகளுக்கு சப்போர்ட் பண்ணினோம்னா , அவங்களுக்கு விழுகற ஒவ்வொரு வோட்டும் , அவரை  தட்டி கொடுத்து இன்னும் நமக்கு உதவி செய்ய வைக்கும். யோசிங்க.
    
 ஆனா சுயேச்சையும் சும்மா விளம்பரத்துக்கு நிக்கறாரு. தன் பெருமையை காட்ட போட்டி போடராருன்னா , நீங்க ரெம்ப பாவம். உங்களுக்கு வேற சாய்ஸ் இல்ல - 49  ஒ தவிர.

3. 49  - ஒ : இது பிரமாஸ்திரம்.'இந்திய குடிமகன் ஆகிய நான் , இந்த தேர்தலில் எனக்கு கிடைத்திருக்கும் ஓட்டு போடும் உரிமையை இந்த முறை யாரையும் ஆதரிக்க பயன்படுத்துவதில்லை என்று அரசினால் அங்கிகாரிக்கப்பட்ட  49 - ஒ வில் என் ஓட்டை பதிவு செய்வதன்  மூலம்  தெரியபடுத்துகிறேன்'.

பொதுவா இத நான் யாருக்கும் சிபாரிசு செய்யறதில்ல.   காரணம் - உன் தொகுதியில் நிக்கிற வேட்பாளரை ஒன்று நீ கட்சி அபிமானியாய் இருந்து ஏத்துக்கணும் ; அல்ல மேல் சொன்ன வழிகள் மூலம் ஏறக்குறைய  ஒழுங்கானவர அடையாளம் கண்டு ஏத்துக்கணும். இது எதுவுமே இல்லாம 'எனக்கு யாரையுமே பிடிக்கல;எல்லாரும் மோசம்'-னு யோசிக்காம 49 -ஐ உபயோகிப்பது முட்டாள்தனம்.


 இன்னொரு காரணம் , இதை கூட உன்னால அலசி ஆராய முடியலேன்னா நீ படித்திருந்து என்ன பிரயோஜனம்?  
அதுவும் சிலபேரு  , 49 -ஒ பயன்படுத்துவதை பெருமையான செயலா சொல்றாங்க. நான் பாராட்டறேன் .

 ஆனா ஒரு மிக சக்தி வாய்ந்த ஓட்டை பயன்படுத்தாமல் இப்படி செய்ய அவங்ககிட்ட ஆழமான காரணம் இருக்கணும். 

கர்ணன் கிட்ட இருக்குற நாகஸ்திரம் மாதிரி நம்ம வோட்டு. ஒரு தடவைதான் பயன்படுத்த முடியும். அதையும் தகுந்த காரணம் இல்லாம 49 -ஒவில் தூக்கில் போடாதீங்க.


காரணங்கள் எது வேணுமானாலும் இருக்கலாம் - ஆனால் நான் கேட்டுகிறது இதுதான். ' நான் 49 -ஒ இந்த தேர்தலில் பயன்படுத்தினேன். அதற்கு காரணங்கள் இவை ' -னு வரிசையா பட்டியல் போட்டு உங்க நண்பர்கள்,உறவினர்கள் ,பக்கத்து வீட்டுக்காரங்ககிட்ட  சொன்னாதான்  அதோட பயன்பாடு பூர்த்தியாகுது. அதை  தைரியமா வரிசைபடுத்தி நியாயமான காரணங்களை சொல்ல உங்களுக்கு முடியுமா..? ஏகப்பட்ட விவாதம் நடக்க வாய்ப்பிருக்கு.. எதிர்கொள்ள தயாரா இருக்கீங்களா?   அப்போ proceed...

மொத்தத்தில் எந்த கட்சி வேட்பாளரும் , சுயேட்சிகளும் சரியாக இல்லாமல் இருந்தா தாராளமாக 49 - ஒ பயன்படுத்தலாம். ஒரு சின்ன சந்தேகம் - நம்பிக்கை  யாரோ ஒரு வேட்பாளர் மீது ,அவர் நல்லது செய்வாருன்னு உங்களுக்கு தோணுச்சுனா அவருக்கே உங்க வோட்ட பதிவு செய்யுங்க நண்பர்களே.

அப்புறம் முக்கியமான விஷயம் /விண்ணப்பம் : கண்டிப்பா வோட்டு போட போயிருங்க. அது 49 -ஒனாலும் சரி .வேற எதுனாலும் சரி. இல்லேன்னா உங்க வோட்டு உங்களோடது இல்ல.

 எவ்வளவு சீக்கிரம் போயி உங்க கடமையை நிறைவேத்துறீங்களோ   அவ்வளவு  நேரம் உங்க பேரு உங்களுக்கு சொந்தம் . இல்லேன்னா ' நீங்களா பத்மநாபன் ? உண்மைய சொல்லுங்க .. ஏற்கனவே உங்க வோட்டு பதிவாயிடுச்சு ..  ஏன்பா இவர போலீஸ் கிட்டயும் ஏஜென்ட்   கிட்டயும் கூப்பிட்டு போயி உண்மையானு விசாரி ' தான் பதிலா கிடைக்கும். 




வாழ்த்துக்கள் வாக்காள பெருமக்களே..  எத்தன தடவ தப்பா நீங்க தேர்ந்தெடுத்தாலும் அதை திருத்திக்க இன்னொரு தடவை வாய்ப்பு கொடுக்குது நம்ம இந்திய ஜனநாயம்.. யூஸ் பண்ணிக்கோங்க.

//பதிவை படிக்கும் அனைவருக்கும் இனிய சன் டிவி பத்தொன்பதாம் வருட துவக்க  நாள் வாழ்த்துக்கள்.   (அதான் தமிழ் புத்தாண்டு இல்லைன்னு அரசாங்கமே சொல்லிடுச்சே ! )//

Friday, April 8, 2011

தளபதி ஸ்டாலின் : தேர்தல் டிட் -பிட்ஸ்



பெயர்: மு.க. ஸ்டாலின்
பிறப்பிடம் : சென்னை

படிப்பு : நந்தனம் கல்லூரி ,சென்னை -  இளங்கலை பட்டதாரி

சிறு வயதில் இருந்தே அரசியல் மேல் நாட்டம். காரணம் - தந்தை. மற்றவர்கள் விசயத்தில் அரசியல் அனுபவம் எப்படி என்று கேட்பதை இவரிடம் கேட்க முடியாது .காரணம் - தந்தை ; கழகம். இவர் சிறுவயதில் விளையாட போவது கூட  கழககூட்டமோ , வேறு நிகழ்ச்சியோ இல்லாதபோதுதான்.

தெரிந்த மொழிகள்: தமிழ் மற்றும் ஆங்கிலம்





பேச்சுத்திறன் :
1969 -இல் முதல் திமுக கட்சி பொதுகூட்டத்தில் தன் உரையை ஆரம்பித்தார். கலைஞர் வாரிசு என்று சாணக்யதனத்தில் நிரூபிக்க இன்றுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் மேடைபேச்சிலும் , தமிழ் நடையிலும் செம்மையாக நிருபித்து விட்டார்.  இவரின்  முதல் பிரச்சாரம் சென்னை 99 -ஆம் வார்டு திமுக கபாலிக்கு (சிரிக்காதீங்க பாஸ்)   ஆதரவாக...  1989 -இல் தமிழக சட்டபேரவையில்  பட்ஜெட் தாக்கலில் தன் முதல் பேச்சை பதிவு செய்தார்.

அரசியல் பிரவசேம் :

தன் பதினைந்தாம் வயதில் கோபாலபுரம்  பள்ளியில் தன் வயதொத்த மாணவர்களை ஒன்று திரட்டி  இளைஞர் அணி அமைத்ததில் இருந்து தன் அரசியலுக்கு அடித்தளம் அமைத்தார்.   இவரின் தனி  முன்னேற்றத்திற்காகவே 1973 -இல் கலைஞர் ஆரம்பித்து வைத்த திமுக இளைஞர் அணி , கண்டிப்பாக தன் கட்சிக்கு மிகப் பெரிய பலமாக அமையும் என்று கலைஞரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அந்த  அளவுக்கு அதை பேணிக்காத்து, செம்மைபடுத்தி  59 வயதிலும் அதன் செயலாளர் பொறுப்பை தானே வைத்து நிர்வகிப்பது ஸ்டாலினின்  தனிச்சிறப்பு.





1975 -இல் மிசா காலத்தின் போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ,ஆற்காடு வீராசாமியும் ,முரசொலி மாறனும் கூட சிறைபட , முதல் குறியாய் போலீசுக்கு கிடைத்தவர் ஸ்டாலின் . போலீஸ் தடியடியும் பூட்ஸ் உதையும் இருட்டறையும் வேப்பெண்ணையும்  உப்பும் கலந்த உணவும் இவரின் சமூக வாழ்வுக்கு ,புகழுக்கு ஆணிவேராய்  கிடைத்த முதல் முகவரி. கலைஞர் மகன் என்பதைத் தாண்டி பல இளைஞர்கள் அன்று இவர் பின் வர மிசா உதவியது.

பின்னர் 1984 -இல் தமிழக சட்டபேரவைத் தேர்தலில்  மிக குறுகிய ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி.  பின் 1989 தொடங்கி  நான்கு முறை தொடர்ந்து சட்டபேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இப்போது தமிழக துணை முதல்வராக இருப்பவர். சென்னை மேயராக ஐந்து வருடம் பொறுப்பு வகித்தவர்.

சாதனை :

சென்னை மேயராக இருந்தபோது பாலங்கள் கட்டி சிங்கார சென்னை ஆக்கியதும் , கடந்த ஐந்து வருடங்கள் கலைஞரின் சில நல்ல திட்டங்களை செம்மையாக நடத்தி வருவது மட்டுமே இவரின் சாதனைகள். மக்களுக்கு இவரின் தனிப்பட்ட சாதனைகள் குறைவு. காரணம் : பேர் தட்டி போகும் கலைஞர்.

ஆனால் கட்சிக்கு இவரின் சாதனைகள் பட்டியலில் அடங்காது. இளைஞர் அணி என்றால் திமுக அலறும். எப்போது எங்கு தளபதி வந்து ஆய்வு செய்வார் என்று எல்லா மாவட்ட செயலாளர்களும் நடுங்கி ஒழுங்காக கட்சி வேலையை செய்ய இவரின் துறுதுறு நடவடிக்கைகள் பேர் போனவை. எடுத்துக்கொண்ட எந்த பொறுப்பாய் இருந்தாலும் சரி , இதை இவர் முடிக்கும் வேகமும் திறனும் கட்சி அறிந்த ஒன்று.  90 -களில் ஆரம்பித்து இன்று வரை கலைஞர்   வார்த்தையும் இவரின் வார்த்தையும் தொண்டர்களுக்கு ஒன்றுதான் - மதுரை தவிர .

இவர் மட்டும் அழகிரி  போல் அட்டுழியம் செய்திருந்தாலோ  அல்ல மு.க.முத்து போல் காணாமல் போயிருந்தாலோ -
  • இரண்டு முறை திமுக பிரசாரம் எடுபடாமல் போயிருக்கும் 
  • கடந்த முறை இன்னும் சில வாக்குகளை விஜயகாந்த் வாங்கியிருப்பார் 
  •   வைகோ முதல்வர் ஆனாலும் ஆகியிருப்பார் அல்லது மதிமுக உருவாகியிருக்காது 
  • கனிமொழி கட்டாய முழுநேர மாநில அரசியலுக்கு வந்திருப்பார் 
  • மாறன் சகோதரர்கள் கழகத்தை இன்னும் பலமாக கைக்குள் அடக்கியிருப்பார்கள்
  • கட்சிக்குள் கோஷ்டி அதிகமாகி கலைஞர் கை மீறி போயிருக்கும் 
  •  ஜெயலலிதா எளிதாக  ஜெயித்திருப்பார். 

 மொத்தத்தில் திமுக கழகம் காணாமல் போயிருக்கும்.
ஸ்டாலின் என்றால் ரஷிய   மொழியில் 'இரும்பு மனிதன் ' என்று பொருள். கட்சிக்கு எத்தனை சோதனை வந்தாலும் ,அத்தனையையும் சமாளித்து  இதுவரை அந்த பெயரைத் தக்க வைத்துள்ளார். அமைதியான ஆரவாரமில்லாத குணம் மூலம் மக்களிடமும் , பொறுமையாக இருப்பதன் மூலம் தந்தையிடமும் , அனுசரித்து போவதன் மூலம் அண்ணனிடமும் இன்று  வரை நல்ல பிள்ளையாகவே இருக்கிறார் ஸ்டாலின்.

இவரின் பதுங்கும்  குணம் நேரம் வரும்போது எப்படி பாயும் என்று இதுவரை யாரும் கணிக்க முடியவில்லை .

பரதன் ஒன்றும் ராமனுக்கு குறைந்தவனில்லை. ஆனால் ராமன் நிழலிலேயே இருந்தனால்தான் அவன் புகழ் மக்களுக்கு அறியப்படவில்லை. அதுபோலத்தான் ஸ்டாலினும். (கவனிக்க  -இது குண பொருத்தம் அல்ல.. சூழ்நிலை பொருத்தம் மட்டுமே. இலக்கியம் கையாளப்பட்டது தற்செயல்.. ).கலைஞர் புகழ் வளையம் மிக பெரியது. அதைத்தாண்டி தனியாக விலகி பார்த்தால் மட்டுமே இவர் திறனும் தெரிய வரும். ஆனால் தந்தை மட்டுமே இப்போது பெரிய பலமாக இருப்பதனால் அந்த பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி இவர் வரமாட்டார். அதுதான் அவருக்கும் நல்லது.




இவர் பொறுமைக்கு பரிசாக அன்பழகனும் ஒதுங்கி விட்டார். அழகிரி அமைதியாய் இருந்தால்  , கலைஞருக்கு அடுத்து இவர்தான்.
இந்த முறை இவரை 234 -இல் ஒன்று என கணக்கு வைப்போம்.

கலைஞரின் நல்ல விசயங்களை மட்டும் எடுத்து ,அவரின் கடந்தகால அரசியல் அனுபவத்தின் தவறுகளை இனம்பிரித்து அறிந்து ,முக்கியமாக கூட இருப்போர் தவறு செய்தால் தயை பார்க்காமல் தூக்கி எறிந்து ,மக்களுக்கு நல்லதை செய்யும்   விஷயத்தை மறக்காமல் , ஜெயலலிதா  'நீ மட்டும் ஒழுங்கா? என்று கேட்காத  அளவுக்கு ஊழல் அற்ற ஆட்சியை தருவார் என்ற நம்பிக்கையை இவர் தந்தால்......
அடுத்த முறை இவர் தலைமைக்கு தலை அசைக்கலாம்.

இந்த முறை ?  முடிவு உங்கள் கையில் ...

Thursday, March 31, 2011

கேப்'டான்' விஜயகாந்த் : தேர்தல் டிட்-பிட்ஸ்


கட்சியை வழிநடத்தும் தலைவர்களைப்பற்றிய அலசல் வரிசையில் இப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த்.



பெயர் : விஜயராஜ்

பிறப்பிடம் : மதுரை , தமிழ் நாடு

படிப்பு : பத்தாம் வகுப்பு , சென் மேரிஸ் , மதுரை

சொந்த அரிசிக்கடை . பின் நடிப்பு ஆசை . சென்னை விஜயம். இப்ராஹீம் ராவுத்தர் துணை. எல்லாரும் எப்படி நடிகர் ஆனார்களோ அப்படியே கஷ்டப்பட்டு நடிப்புலக பிரவேசம். 


நடிப்பு முகவரி கொடுக்க ,சண்டைக்காட்சிகள் கை கொடுக்க , அனல்பறக்கும் வசனங்கள் தாய்குலங்களையும்  இளைஞர்களையும் பின்னால் பக்கபலமாக சேர்க்க... ஓஹோவென உயர்ந்து வளர்ந்தது விஜயகாந்த் இமேஜ்.

ஆனால் ரமணா தவிர  கடந்த பத்து வருடங்களாக காமெடி கைவிட , செண்டிமெண்ட் காலைவார ,வெறும் சண்டையும் சூப்பர் ஹீரோ இமேஜும் ஓவர்டோஸ் ஆகி இவர் படங்களை பெட்டிக்கு திருப்பி அனுப்ப சரியான நேரத்தில் நடிப்பை தூக்கி எறிந்து அரசியலுக்கு குதித்த புத்திசாலி இவர்.  

தெரிந்த மொழி : தமிழ் .. கண் சிவக்க பேசும் தமிழ்..செந்தமிழ் அல்லாமல் பாமரனையும் நரம்பு முறுக்க நாடி துடிக்க வைக்கும் தமிழ் .. உணர்ச்சி ததும்பும் தமிழ் ..

பேச்சு திறன் :கடந்த ஐந்து வருடங்களாக படபடவென கேள்விகளையும் சூடு பறக்கும் அறிக்கைகளையும் வெளிவிட்டு தனக்கும் பேச்சுத்திறன் இருக்கிறது என்று ஓரளவுக்கு நம்ப வைத்திருக்கிறார்.இந்த தேர்தல் பிரசாரத்திலும் , இனி வரும் காலத்திலும்தான் இவரின் இந்த திறன் பற்றி எடைபோட முடியும். பார்ப்போம். 

அரசியல் பிரவேசம் :
 எம்.ஜி.ஆரின் , என்.டி.ஆரின் வாழ்க்கை கிராஃப்பை நன்றாக ஊன்றி கவனித்து , சினிமா டூ அரசியல் ஸ்டார்டிங் ட்ரபுள் ஏதுமின்றி தேமுதிகவை கம்பீரமாக ஆரம்பித்தார் .
2005யில் இவர் கட்சி ஆரம்பித்தபோது மற்றவர் விமர்சித்தது போல் வெறும் கைதட்டலையும் எம்.ஜி.ஆரின் காரையும் மட்டுமே நம்பாமல் தன பின்னணி பலத்தை தெரிந்து வந்தார் என்பதுதான் உண்மை. 

நம்புங்கள் ...போன தடவை கலைஞரை முதல்வர் ஆக்கியது ஒரு ரூபாய் அரிசியும் கலர் டிவியும் அல்ல ... கேப்டனின் பிரவேசம்தான்.  அதிமுக வாக்குவங்கியை பல இடத்திலும் , திமுக வாக்குவங்கியை சில இடத்திலும் பிரித்து கணிசமாக இவர் கட்சி வாங்கி தன் கன்னி தேர்தலில் தனக்கான மரியாதையை தக்க வைத்தது.

விருத்தாசலம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரே ஆளாக தமிழக சட்டபேரவையில் கம்பீரமாக நுழைந்தார் புரட்சிகலைஞர். ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக விருத்தாச்சலத்துக்கு என்ன செய்தார் என்பது கேள்விக்குறியே ? கேட்டால் ஆயிரம் காரணம் - ஆளும் கட்சி மீது குறை என்று இருக்கும். போன முறை போல் இல்லாமல், இந்த முறை இந்த கட்சியின் பிரமுகர்கள் அந்தந்த பகுதி மக்களுக்கு நன்றாக பரிச்சயம் ஆகும்படி இவர் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. 

இனிமேல்தான் அரசியலில் இவர் ஜெயித்தால் ஆளுமை பொறுப்பை ஏற்றால் என்ன சாதனை செய்வார் என்பதை கணிக்க முடியும். ஆக இப்போது அந்த பட்டியல் காலியாகவே இருக்கிறது. இவரின் சில நல்ல விஷயங்கள் கீழே :

  • 2006ல் இந்திய அரசின் சிறந்த குடிமகன் விருதை பெற்றவர்.   

  • மற்றவரைப்போல் போக்கு காட்டாமல் 'வருவேன் என்று சொன்னால் வருவேன் '   என்று உத்திரவாதம் கொடுத்தபடி உடனே வந்து அரசியலுக்கு தேவையான தைரியம் தனக்கு உண்டு என்று நிரூபித்தவர் இவர். 

  • 'கட்சி ஆரம்பிக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது ?' என்று இவரைப் பார்த்து கேள்வி கேட்போர் இவர் கடந்த இருபது வருடங்களாக உதவிய மக்களின் நன்றிபெருக்கை காண தவறியவர்கள். 

  • சரத்குமாரை போல் தன்னை சார்ந்த மக்களுக்கு எதுவுமே செய்யாமல் எந்த குரலும் எழுப்பாமல் , பின்னால் அவர்களை உபயோகப்படுத்தி கொண்டவர் அல்ல இவர். எத்தனையோ மாணவர்களின் படிப்புக்கும் , எத்தனையோ இளைஞர்களுக்கு வாழ்க்கையையும் இவர் அமைத்து கொடுத்ததை ஊர் அறியும்.  

  • தன் பலமும் தன் கட்சி பலமும் எப்படி என்று தெரிந்து கொள்ள தனித்து போட்டி போட்டு தனக்குரிய அரசியல் சாதுர்யத்தை வெளிபடுத்தினார்.

  • 'ஊழல் மலிந்த இரு கட்சிகளின் ஆட்சியை ஒழிக்க எனக்கு வாக்களியுங்கள்'  என்ற இவரின் வேண்டுகோள் சென்ற முறை நல்ல பயனை தந்தது. 

  • பண்ருட்டி ராமச்சந்திரனின் ஆலோசனை இவரின் பெரிய பக்கபலம். 

  • ஈழத்தில் பிரபாகரன் ஜெயிக்கும் வரை பிறந்த நாள் கொண்டாட போவதில்லை என்று அறிவித்தவர். 


உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியை விட, பாமகவை விட இப்போது  இவருக்குதான் சப்போர்ட் இருக்கிறது.ஆனால் ஐந்து வருடம் கட்டி காப்பாற்றிய தன் பல பலங்களை இந்த இரண்டு மாதத்தில் இழந்து விட்டார்.

தன் கட்சிக்கு என்று எந்த ஒரு கொள்கையும் தேமுதிகவுக்கு இல்லை . (விட்டுத்தொலைக்கலாம்.. எந்த கட்சிக்குதான் இருக்கிறது?) 

இவ்வளவு நாளாக கூட்டணி இல்லாமல் தனி ஆட்சி உறுதிமொழி கொடுத்தவர் ஒன்று அவ்வாறே இருந்திருக்க வேண்டும். அல்லது இந்த முறை வெகு நாட்கள் முன்னாலேயே காங்கிரஸ் , இன்ன பிற கட்சியை அழைத்து மூன்றாம் அணியை ஆரம்பித்திருந்தால் அமோகமான வரவேற்பு இருந்திருக்கும். அதை விடுத்து அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகி சறுக்கி விட்டார். காலம் போன கடைசியிலும் போன வாரம் அதற்கு ஒரு வாய்ப்பு வந்தது. அதையும் பயன்படுத்தவில்லை.



'மாற்று ஆட்சிக்கு வழிவகுங்கள் ' என்று சொல்லித்தான் அரசியலுக்கு வந்தார்.இதற்குதான் பல ஓட்டுக்கள்  சென்ற முறை விழுந்தன. இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தது இந்த ஓட்டுகளுக்கு வேட்டு.

ஒரு கேள்வி : இரு கட்சிகளின்  ஊழல் ஆட்சியை ஒழிக்க எனக்கு வாக்களியுங்கள் என்று சொல்லி வந்தவர் இப்போது அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் ஊழலுக்கு துணை போனது போலத்தானே? 


ஆனால் ஒரு வேலை இப்படியும் இருக்கலாம். கீழ்வருமாறு இவர் யோசித்திருந்தால் இவர் முடிவு சரிதான். 

தனியாக நின்று மொத்தமாக தோல்வியுறுவதை விட இப்படி நாற்பது தொகுதிகளில் நின்றால் எப்படியும் ஆளும்கட்சி எதிர்ப்பலைகளினால் குறைந்தது முப்பதாவது கிடைக்கும்.திமுக படுதோல்வி அடைந்தால் அந்த கட்சி உடைந்து விடும் கூறு அழகாக கண் முன் தெரிகிறது. 

பின் இந்த அம்மையார் எப்போதும் போல (தனி பெரும்பான்மையில் வந்தால் ) உடனே கூட்டணியில் இருந்து விலக்கி விடுவார். அதுதான் நமக்கும் வேண்டும்.

திமுக :குடும்ப சண்டையில் அழகிரி - ஸ்டாலின் - மாறன் என்று அடித்துக் கொண்டிருப்பார்கள். காங்கிரஸ் உட்கட்சி பூசல் - எந்த தலைவரும் இல்லை. .வைகோவின் மதிமுக மரணத்தருவாயில். பாமக எல்லாம் அம்மையாருக்கு ஒரு பொருட்டே அல்ல. 

பிறகென்ன ?  நாம்தான் பிரதான எதிர்க்கட்சி. ஐந்து வருடம் பொறுத்திருந்தால் அடுத்த முறை தேமுதிக - அதிமுக தான். வேறு யாரும் இல்லை. 

2016  சரியான நீயா ? நானா ? போட்டியாக இருக்கும். இப்போது இருப்பது போல் நீயா ? நானா ? அவனா ? இவனா? என்பதெல்லாம் இருக்காது. தமிழ் மக்களுக்கே உரிய குணமான ஆட்சி மாற்ற எண்ணம் நம்மை முதல்வர் ஆக்கி விடும்.

ஆக , இப்படி இவர் காய் நகர்த்துவது இந்த முறை பலனை எதிர்பார்த்து அல்ல .இப்போது கிடைக்க போகும் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் , திமுகவை பின் தள்ளி இரண்டாம் இடத்தை தக்க வைத்துக்கொள்வதிலும் , பின் வரும் பெரிய பலனையும் எதிர்பார்த்துதான். 

வெளிப்படையாக சொன்னால் , ரஜினிகாந்த் செய்திருக்க வேண்டிய விஷயத்தை விஜயகாந்த் துணிந்து செய்து இன்று வரை அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.



குடித்து விட்டு பிரச்சாரத்தில் பேசுவதும் , தன வேட்பாளரையே மக்கள் முன் அடிப்பதும் என இவர் செய்யும் அட்டுழியங்கள் இவரின் புகழ் ஏணியின் உயரத்தை உடைகின்றன. வடிவேலுவின் பேச்சுகளுக்கு எதிர் பேச்சு பேசாத சாமர்த்தியத்தை , இந்த விசயத்தில் ஏன் கடைபிடிக்கவில்லை என்று அவர் கட்சி தொண்டர்களே புலம்புவது வெளிப்படை. 
 ஜெயலலிதாவின் சில அகங்கார குணம் இவருக்கும் உண்டு என்பது தொண்டர்களின் எண்ணம். அதை விடுத்து , இவர் எதற்காக அரசியலுக்கு வருவதாக சொன்னாரோ , அதை செய்வார் என்ற நம்பிக்கையை வரும் ஐந்து வருடங்களில் ஏற்படுத்தினால் அடுத்த முறை இவருக்கு தாராளமாக வாய்ப்பளிக்கலாம். 

இந்த முறை ? முடிவு உங்கள் கையில்.  

Monday, March 28, 2011

வடிவேலு - அரசியலில் இன்னும் பயிற்சி வேண்டுமோ ???!!!


'அரசியல்  நாகரீகம்' அதிகம் உள்ள கட்சி என்று மதிக்கப்பட்ட திமுக மீது வைத்திருந்த கடைசி அபிமானமும் இப்போது மக்களுக்கு கரைந்து போயிருக்கும். காரணம் - தனி இருவரின் தனிப்பட்ட பகையை தங்கள் கட்சிக்கு ஆதரவாக , ஓட்டாக மாற்ற நினைத்து இப்போது அவர்கள் செய்யும் அநாகரீகமான செயல். 




கட்சியை இன்று ஆரம்பித்தாரோ , நேற்று ஆரம்பித்தாரோ அதை விடுங்கள் .. ஒரு கட்சியின் தலைவரை அடிப்படை நாகரீகம் கூட இன்றி ஏக வசனத்தில் எதிரியை பேச வைத்து , அதை அரசியலில் முன்னணி தலைவர்களாக இருக்கும் மாண்புமிகு கலைஞர், மானமிகு வீரமணி , ஸ்டாலின் போன்றோரும் அனுமதித்த மிக கேவலமான ஒரு நடத்தை திருவாரூரில் நடந்துள்ளது. 

சில கேள்விகள் :

  • நித்யானந்தா காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கண்டனம் தெரிவித்து அபிமானம் பெற்ற தாத்தா கலைஞர் , இதை மட்டும் ஏற்றுக்கொண்டது என்ன வகை நியாயம் ?
  • காடுவெட்டி குரு அநாகரீகமாக தன்னைப்பற்றி பேச அதை மருத்துவர் அய்யா வேடிக்கை பார்த்தார் என்று விமர்சித்த கலைஞர் மற்றும் கழகம் , இப்போது அதே வேலையை விஜயகாந்துக்கு செய்வது என்ன வகையில் சேர்ந்தது ? 
  • 'நான் பெரியார் பள்ளியில் படித்தவன் .. அண்ணாவின் அரிச்சுவடியை பின்பற்றுபவன் ' என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் கலைஞர் , இந்த செயலை அதே பெரியாரும் அண்ணாவும் கைதட்டி அங்கீகாரப்படுத்துவார்கள் என்று எண்ணியது என்ன வகை எதிர்பார்ப்பு ?
  • 'வைகோவை ஒத்தைக்கு ஒத்தை வரியா' என்று கேட்க எனக்கும் தெரியும் .. ஆனால் அவ்வளவு தாழ்ந்து போக தலைவர் எனக்கு கற்றுகொடுக்கவில்லை' என்று சொன்ன தயாநிதி மாறன் இதை மட்டும் கைதட்டி விசில் அடிக்காத குறையாக பாராட்டுவது என்ன வகை நடவடிக்கை ?
  • கிரிக்கெட்டிலும் சரி , எந்த ஒரு விளையாட்டிலும் சரி , எதிரி ஜெயித்து விடுவான் என்று கடைசியில் பயந்தால் மட்டுமே , தன் அணியின் திறமை மீது நம்பிக்கை குன்றினால் மட்டுமே தனி மனித அவமதிப்பை உபயோகப்படுத்தி எதிராளியை கோபப்பட செய்து அதன் மூலம் வெற்றி பெற முயல்வதுண்டு. இதை இந்த பிரசாரத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பித்து விட்டீர்களே உடன்பிறப்புகளே ? பயந்து விட்டீர்களா ? 

சரி இந்த கேள்விகள் எதற்கும் பதில் சொல்ல உங்களுக்கு ஏப்ரல் 13 வரை நேரமிருக்காது.இனி வடிவேலை சந்தித்து சில வினாக்கள் :




  • உங்கள் தீவிர ரசிகன் நான் . எப்போது நீங்கள் பேசினாலும் சிரிப்பு எங்களை மீறி சீறிக்கொண்டு வரும்.  உங்களைப் பார்த்தாலேயே புன்னகைக்க ஆரம்பிப்போம்.அதுதான் உங்கள் வெற்றி. ஆனால் இப்போது உங்களை பார்த்தால் பரிதாபமும் கோபமும் வருகிறது. நீங்கள் பேசினால் எரிச்சல் அடைகிறோம். இது உங்களுக்கு தேவையா ?
ஒரு படம் தோல்வியடையும் சாத்தியகூறு இருந்தால் நீங்கள் எப்பாடுப்பட்டாவது உங்கள் நகைச்சுவையை பயன்படுத்தி அந்த தோல்வியை சரிக்கட்ட முயல்வீர்கள் என்று எங்களுக்கு தெரியும். இப்போது அதைதான் திமுக கூட்டணிக்கும் செய்ய முயற்சி செய்கிறீர்களோ என்று நினைக்க தோன்றுகிறது. 

  • கொஞ்ச காலம் முன் ராமேஸ்வரத்தில் ஈழ மக்களுக்கு குரல் கொடுக்க இயக்குனர்கள் சென்று அவர்கள் நலன் பற்றி பேசினால் , அங்கும் சென்று நீங்கள் மக்களுக்கு குரல் கொடுக்காமல் , அதிக நேரம் உங்களின் இந்த தனிப்பட்ட பிரச்சனையை பேசி எல்லோரையும் நெளிய செய்தீர்கள் . தவறில்லையா அது ? 

  • ஏறத்தாழ எல்லா நேர்காணலிலும் சொல்வீர்கள்- என்னை ஆதரித்து வாழ்வு கொடுத்த மக்களுக்கு நான் எதாவது செய்ய வேண்டும் என்று . அது சத்தியமாக இது அல்ல வேலு .சரி ஏதோ அரசியலோ ,அல்லது தனியாகவோ சமூகத்தொண்டில் ஈடுபட்டு மக்களுக்கு உதுவுவீர்கள் என்று நினைத்தால் அப்படி ஏதும் செய்யாமல் என்ன இது அச்சுபிச்சுதனம் ? 

உங்களுக்கு தனிப்பட்ட எதிரிகள் எவ்வளவோ இருக்கலாம் .அது உங்கள் பிரச்சனை. அதை எங்கள் தலையில் கொண்டு வந்து சுமத்தி பழிதீர்க்க நினைப்பது சிறுபிள்ளைத்தனம் அல்லவா ? . உங்களக்கு புரியும்படி சொல்கிறேன். உங்கள் மிக நெருங்கிய நண்பர் வந்து ' நேற்று விஜய் படம் பார்க்க தியேட்டர் போயிருந்தேன். அங்கே டிக்கெட் தராமல் என்னை அவமானப்படுத்தி விட்டார்கள். விஜய் ரசிகர்களும் என்னை கண்டுகொள்ளவில்லை. ஆகையால் நீ இனி விஜய் படத்தில் நடிக்காதே..' என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள் ' என்னையா சின்னபுளத்தனமா இருக்கு. உனக்கும் அவனுக்கும் பிரச்சனைனா என்னை எதுக்குயா இடையில இழுக்குற ' என்று உங்கள் ட்ரேட்மார்க் டயலாக்கில் கேட்பீர்கள்தானே? அதைதான் நாங்களும் உங்களிடம் கேட்கிறோம்.    

நீங்கள் மக்களுக்கு நல்லதை எடுத்துகூற வந்துள்ளேன் என்று சொல்வது உண்மையென்றால் திமுக சாதனைகளை மட்டும் பேசியிருக்க வேண்டும். இதை அல்ல. 


  • சரி , ஒரு வேலை திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் வேலு ? அம்மாவுடன் மேடையில் இதே கேள்விகளை அங்கே இருந்து கேட்பீர்களா? 

  • மிக முக்கியமான கேள்வி ..திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் .. விஜயகாந்தை தோற்கடியுங்கள் என்று மட்டும் மிக கவனமாக பேசுகிறீர்களே .. எங்காவது ஒரு இடத்தில் கூட அம்மாவை பற்றியோ , அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என்றும் பேசுவது இல்லையே ? ஏன்? ஒரு வேளை அதிமுக ஜெயித்தால் 'அம்மா ..எனக்கு எதிரி கேப்டன்தான்.. உங்களை நான் அப்படி ஒருபோதும் எண்ணியதில்லை தாயே..' என்று அந்தர்பல்டி அடிக்க ஏதுவாக இருக்கும் என்றுதானே ?( ரஜினி பாமகவுக்கு செய்து பிறகு கலைஞரிடம் சொன்னது போல .. )

  • வார்த்தைக்கு வார்த்தை நேற்று கட்சி தொடங்கி மக்களுக்கு ஏதும் செய்யாமல் நாளை முதல்வர் ஆக ஆசைபடும் ஆள் என்று விஜயகாந்தை கேலி பேசுகிறீர்களே ? அவர் காலங்காலமாக மக்களுக்கு நிறைய உதவி செய்து அதன் பிறகு அரசியலில் குதித்துள்ளார் என்பது ஊரறிந்த உண்மை . நீங்கள் என்ன செய்து விட்டு  இப்போது எங்களிடம் எந்த உரிமையில் பேசுகிறீர்கள்..?

  • சரி விஜயகாந்த் பகையை முடிக்க எங்களை பயன்படுத்தும் நீங்கள் நாளை சிங்கமுத்து அரசியலுக்கு வந்தால் அதற்கும் எங்களை இழுப்பீர்களா? எங்களுக்கு வேறு வேலை இல்லையா ? 

உண்மையிலேயே நீங்கள் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் வந்திருந்தால் வரவேற்றிருப்போம்.இனியும் வரவேற்போம். ஆனால் இது சகுனித்தனம். தனிப்பகை. துரியோதனன் வஞ்சம். விஜயகாந்த் உண்மையிலயே உங்களுக்கு அநீதி செய்திருந்தால் அதை தனியாக போராடி பதிலடி கொடுங்கள். இது பொது இடம். இங்கு வேண்டாம். 


உங்களுக்கு அதீத திறமை இருக்கிறது வடிவேல் சார் .. அது திரையில் நடிக்கும்போது எடுபடும். அரசியலிலும் பொதுமக்கள் வாழ்க்கையிலும் அல்ல ..
ஒரு முறை தவறி விட்டீர்கள். இனி திருத்தி கொள்ளுங்கள். ஆட்சி மாறி காட்சி மாறினால் நிலைமை என்னவாகும் என்று யோசித்து கொள்ளுங்கள்.  மேடையில் கை தட்டியவர்கள் , உதவிக்கு வரமாட்டார்கள். ஸ்பெக்ட்ரம் உட்பட பல வழக்குகளில் அலைய போகும் அவர்களுக்கு உங்கள் குரல் கேட்காது.