Friday, April 8, 2011

தளபதி ஸ்டாலின் : தேர்தல் டிட் -பிட்ஸ்



பெயர்: மு.க. ஸ்டாலின்
பிறப்பிடம் : சென்னை

படிப்பு : நந்தனம் கல்லூரி ,சென்னை -  இளங்கலை பட்டதாரி

சிறு வயதில் இருந்தே அரசியல் மேல் நாட்டம். காரணம் - தந்தை. மற்றவர்கள் விசயத்தில் அரசியல் அனுபவம் எப்படி என்று கேட்பதை இவரிடம் கேட்க முடியாது .காரணம் - தந்தை ; கழகம். இவர் சிறுவயதில் விளையாட போவது கூட  கழககூட்டமோ , வேறு நிகழ்ச்சியோ இல்லாதபோதுதான்.

தெரிந்த மொழிகள்: தமிழ் மற்றும் ஆங்கிலம்





பேச்சுத்திறன் :
1969 -இல் முதல் திமுக கட்சி பொதுகூட்டத்தில் தன் உரையை ஆரம்பித்தார். கலைஞர் வாரிசு என்று சாணக்யதனத்தில் நிரூபிக்க இன்றுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் மேடைபேச்சிலும் , தமிழ் நடையிலும் செம்மையாக நிருபித்து விட்டார்.  இவரின்  முதல் பிரச்சாரம் சென்னை 99 -ஆம் வார்டு திமுக கபாலிக்கு (சிரிக்காதீங்க பாஸ்)   ஆதரவாக...  1989 -இல் தமிழக சட்டபேரவையில்  பட்ஜெட் தாக்கலில் தன் முதல் பேச்சை பதிவு செய்தார்.

அரசியல் பிரவசேம் :

தன் பதினைந்தாம் வயதில் கோபாலபுரம்  பள்ளியில் தன் வயதொத்த மாணவர்களை ஒன்று திரட்டி  இளைஞர் அணி அமைத்ததில் இருந்து தன் அரசியலுக்கு அடித்தளம் அமைத்தார்.   இவரின் தனி  முன்னேற்றத்திற்காகவே 1973 -இல் கலைஞர் ஆரம்பித்து வைத்த திமுக இளைஞர் அணி , கண்டிப்பாக தன் கட்சிக்கு மிகப் பெரிய பலமாக அமையும் என்று கலைஞரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். அந்த  அளவுக்கு அதை பேணிக்காத்து, செம்மைபடுத்தி  59 வயதிலும் அதன் செயலாளர் பொறுப்பை தானே வைத்து நிர்வகிப்பது ஸ்டாலினின்  தனிச்சிறப்பு.





1975 -இல் மிசா காலத்தின் போது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு ,ஆற்காடு வீராசாமியும் ,முரசொலி மாறனும் கூட சிறைபட , முதல் குறியாய் போலீசுக்கு கிடைத்தவர் ஸ்டாலின் . போலீஸ் தடியடியும் பூட்ஸ் உதையும் இருட்டறையும் வேப்பெண்ணையும்  உப்பும் கலந்த உணவும் இவரின் சமூக வாழ்வுக்கு ,புகழுக்கு ஆணிவேராய்  கிடைத்த முதல் முகவரி. கலைஞர் மகன் என்பதைத் தாண்டி பல இளைஞர்கள் அன்று இவர் பின் வர மிசா உதவியது.

பின்னர் 1984 -இல் தமிழக சட்டபேரவைத் தேர்தலில்  மிக குறுகிய ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி.  பின் 1989 தொடங்கி  நான்கு முறை தொடர்ந்து சட்டபேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு இப்போது தமிழக துணை முதல்வராக இருப்பவர். சென்னை மேயராக ஐந்து வருடம் பொறுப்பு வகித்தவர்.

சாதனை :

சென்னை மேயராக இருந்தபோது பாலங்கள் கட்டி சிங்கார சென்னை ஆக்கியதும் , கடந்த ஐந்து வருடங்கள் கலைஞரின் சில நல்ல திட்டங்களை செம்மையாக நடத்தி வருவது மட்டுமே இவரின் சாதனைகள். மக்களுக்கு இவரின் தனிப்பட்ட சாதனைகள் குறைவு. காரணம் : பேர் தட்டி போகும் கலைஞர்.

ஆனால் கட்சிக்கு இவரின் சாதனைகள் பட்டியலில் அடங்காது. இளைஞர் அணி என்றால் திமுக அலறும். எப்போது எங்கு தளபதி வந்து ஆய்வு செய்வார் என்று எல்லா மாவட்ட செயலாளர்களும் நடுங்கி ஒழுங்காக கட்சி வேலையை செய்ய இவரின் துறுதுறு நடவடிக்கைகள் பேர் போனவை. எடுத்துக்கொண்ட எந்த பொறுப்பாய் இருந்தாலும் சரி , இதை இவர் முடிக்கும் வேகமும் திறனும் கட்சி அறிந்த ஒன்று.  90 -களில் ஆரம்பித்து இன்று வரை கலைஞர்   வார்த்தையும் இவரின் வார்த்தையும் தொண்டர்களுக்கு ஒன்றுதான் - மதுரை தவிர .

இவர் மட்டும் அழகிரி  போல் அட்டுழியம் செய்திருந்தாலோ  அல்ல மு.க.முத்து போல் காணாமல் போயிருந்தாலோ -
  • இரண்டு முறை திமுக பிரசாரம் எடுபடாமல் போயிருக்கும் 
  • கடந்த முறை இன்னும் சில வாக்குகளை விஜயகாந்த் வாங்கியிருப்பார் 
  •   வைகோ முதல்வர் ஆனாலும் ஆகியிருப்பார் அல்லது மதிமுக உருவாகியிருக்காது 
  • கனிமொழி கட்டாய முழுநேர மாநில அரசியலுக்கு வந்திருப்பார் 
  • மாறன் சகோதரர்கள் கழகத்தை இன்னும் பலமாக கைக்குள் அடக்கியிருப்பார்கள்
  • கட்சிக்குள் கோஷ்டி அதிகமாகி கலைஞர் கை மீறி போயிருக்கும் 
  •  ஜெயலலிதா எளிதாக  ஜெயித்திருப்பார். 

 மொத்தத்தில் திமுக கழகம் காணாமல் போயிருக்கும்.
ஸ்டாலின் என்றால் ரஷிய   மொழியில் 'இரும்பு மனிதன் ' என்று பொருள். கட்சிக்கு எத்தனை சோதனை வந்தாலும் ,அத்தனையையும் சமாளித்து  இதுவரை அந்த பெயரைத் தக்க வைத்துள்ளார். அமைதியான ஆரவாரமில்லாத குணம் மூலம் மக்களிடமும் , பொறுமையாக இருப்பதன் மூலம் தந்தையிடமும் , அனுசரித்து போவதன் மூலம் அண்ணனிடமும் இன்று  வரை நல்ல பிள்ளையாகவே இருக்கிறார் ஸ்டாலின்.

இவரின் பதுங்கும்  குணம் நேரம் வரும்போது எப்படி பாயும் என்று இதுவரை யாரும் கணிக்க முடியவில்லை .

பரதன் ஒன்றும் ராமனுக்கு குறைந்தவனில்லை. ஆனால் ராமன் நிழலிலேயே இருந்தனால்தான் அவன் புகழ் மக்களுக்கு அறியப்படவில்லை. அதுபோலத்தான் ஸ்டாலினும். (கவனிக்க  -இது குண பொருத்தம் அல்ல.. சூழ்நிலை பொருத்தம் மட்டுமே. இலக்கியம் கையாளப்பட்டது தற்செயல்.. ).கலைஞர் புகழ் வளையம் மிக பெரியது. அதைத்தாண்டி தனியாக விலகி பார்த்தால் மட்டுமே இவர் திறனும் தெரிய வரும். ஆனால் தந்தை மட்டுமே இப்போது பெரிய பலமாக இருப்பதனால் அந்த பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி இவர் வரமாட்டார். அதுதான் அவருக்கும் நல்லது.




இவர் பொறுமைக்கு பரிசாக அன்பழகனும் ஒதுங்கி விட்டார். அழகிரி அமைதியாய் இருந்தால்  , கலைஞருக்கு அடுத்து இவர்தான்.
இந்த முறை இவரை 234 -இல் ஒன்று என கணக்கு வைப்போம்.

கலைஞரின் நல்ல விசயங்களை மட்டும் எடுத்து ,அவரின் கடந்தகால அரசியல் அனுபவத்தின் தவறுகளை இனம்பிரித்து அறிந்து ,முக்கியமாக கூட இருப்போர் தவறு செய்தால் தயை பார்க்காமல் தூக்கி எறிந்து ,மக்களுக்கு நல்லதை செய்யும்   விஷயத்தை மறக்காமல் , ஜெயலலிதா  'நீ மட்டும் ஒழுங்கா? என்று கேட்காத  அளவுக்கு ஊழல் அற்ற ஆட்சியை தருவார் என்ற நம்பிக்கையை இவர் தந்தால்......
அடுத்த முறை இவர் தலைமைக்கு தலை அசைக்கலாம்.

இந்த முறை ?  முடிவு உங்கள் கையில் ...

1 comment:

Anonymous said...

கலைஞரிடம் உள்ள நல்லதைக் கற்றுக் கொண்டார். ஜே விடம் உள்ள கெட்டவற்றை எப்படி ஒதுக்க வேண்டும் என்றும் கற்றுக் கொண்டார். அண்ணன் அமைதி காத்தால் கட்டாயம் நல்ல ஆட்சி அமைப்பார். அடக்கம், மரியாதை,பொறுமை அண்ணா போன்று பதவியில் உய்ர உயர அதிகமாகி வருவது போற்றத்தக்கது.

Post a Comment