Tuesday, April 26, 2011

கோ : நம்பி 'கோ'ங்க...

 

 
வெகு கிளீனான மேஜை ; நீட்டான அழகான ஆபிஸ் ; பளிங்கு கட்டிடம் ,அழகு ததும்பும் - எப்போதும் மேக்-அப்பில் இருக்கும் பெண் நிருபர்கள்  , 'ப்ருப் இருக்கா?' என்று சும்மா பேருக்கு கேட்டு விட்டு ஸ்டோரி அப்ரூவ் செய்யும் எடிட்டர்  என்று ஒரு பத்திரிக்கை அலுவலகத்தை படத்தில் காண்பித்திருக்கிறார் கே. வீ . ஆனந்த் .  டைடல்  பார்க் உள்ளுக்குள்  கூட இப்படி குளிர்ச்சியாய் மலர்ச்சியாய் இருந்ததில்லை. 
 
 இந்தியா டுடே ,கல்கியில் தான் வேலை செய்யும்போது என்னவெல்லாம் எதிர்பார்த்திருப்பாரோ அதை எல்லாம் தன் நாயகன் ஜீவாவுக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர்.  இதை நம்பி  ரிப்போர்ட்டர் வேலைக்கு ஆசைப்படுவார்களுக்கு 
இதோ அடிப்படை இண்டர்வியு கேள்வி :-  வெகு சுத்தமாக துடைத்து வைத்த மேஜைகள் உள்ள பத்திரிக்கை ஆபிசில்  எதை அலசி ஆராய்ந்து எழுதுவார்கள்?

எனக்கு இருக்கும் ஒன்றிரண்டு பத்திரிக்கை நண்பர்களை லேசாக கேட்டு பார்த்தேன்.  வேண்டாம் .. நான் வாங்கிய திட்டு என்னோடு போகட்டும். பார்த்துக்கோங்க இளைஞர்களே..


சரி பெரிய தப்பில்லை .. நல்ல ஒரு பொருளை தரும்போது அதை அழகாக கவர்ச்சியான கவரில் சுற்றி தருவது போல , ஒரு நல்ல கதைக்கு இந்த டிஜிட்டல் பூச்சுற்றல் நன்றாகத்தான் இருக்கிறது.  
 எட்டாம் வகுப்பு தொடங்கி ஆர்.கே , பி.கே.பி நாவல்கள் புரட்டி வளர்ந்த எனக்கு 'ஹூ  இஸ் தி கில்ப்ரிட்'  விஷயம் ஆரம்பத்திலேயே புரிந்து தொலைத்து விட்டது.  ஆனால் அதை எப்படி வெளியே கொண்டு வருவார்கள் என்பதில் ஏற்பட்ட சுவாரசியத்தை மிக அழகாகவே இடியாப்ப சிக்கல் போல் சுற்ற வைத்து சொல்லியிருக்கிறார்கள்.
 
 

 
ஹீரோ அஜ்மல் நல்ல தேர்வு.  இந்த பாத்திரத்தை  ஏற்ற நடிகர் அதிகமாக வசனம் பேச வேண்டும். அதை இவர் நன்றாக செய்கிறார் என்பது மட்டுமல்ல ,மிக முக்கியமாக , உயிர்ப்போடு செய்கிறார். மக்களிடம் கேள்வி கேட்பதும்  , பிரச்சாரம் செய்யும்போது தன் பேச்சுக்கு மாடு மட்டும் தலை அசைப்பதைப் பார்த்து மெல்லிய வருத்ததுடன் புன்னகைப்பதும் , ஒவ்வொரு   சூழ்நிலைக்கும்  முக பாவனையை அழகாக மாற்றுவதும் ,  கிளைமாக்ஸில்  போலிஸ் கமிஸ்னரிடம் சீறுவதும் என தனி ஆவர்த்தனம் செய்து  - பார்ப்பவர்களை பலமாக  கை தட்ட வைத்து அடுத்த நிலை மார்கெட்டுக்கு அஸ்திவாரம் போட்டு மனதில் நன்றாக அமர்கிறார்.
 
இரண்டாம் ஹீரோ ஜீவா துருதுரு ரிப்போர்டர் வேடத்துக்கு மிக கச்சிதம். தனக்கு கொடுத்த கதாப்பாத்திர வலிமை தெரிந்து அதன் எல்லைக்குள் விளையாடி இருக்கிறார்.  எந்த ஒரு ஹீரோயிசம் சார்ந்த வேலையையும் இவர் கடைசி ஐந்து நிமிட கிளைமாக்ஸ் காட்சிக்கு முன்பு வரை செய்வதில்லை.  சந்து கிடைக்கும் இடம் எல்லாம் ,யாருக்கும் தெரியாமல்  கேமராவை சுத்த விடுவதும் சரி , ரிப்போர்டருக்கே உரிய  வேகமான விசாரிப்பு மற்றும் ஆட்களிடம் செய்தி கறப்பதிலும்  சரி ,  கிடைத்த குழப்பமான வீடியோ ஆதாரங்களைக் கொண்டு உண்மையை கண்டுபிடிப்பதிலும் சரி நிறைவான அலட்டல் இல்லாத நடிப்பு.
 
 
 
முதல் நாயகி பியா சரியான துள்ளல்.  இவர் வரும் காட்சி வரை ஒரு வித ரசனை கலந்த புன்னகை நமக்குள் வந்து ஒட்டிக்கொள்கிறது.   இவர் பேசும் கொஞ்சல் பேச்சும் , சிட்டி கல்ச்சர் கலாட்டா டயலாக்குகளும் இளமை ததும்பும் காட்சிகளுக்கு பலமாய் அமைகிறது.
 இரண்டாம் நாயகி கார்த்திகா ஓகே. நடிக்கிறார் என்பது தெரிகிறது.  ஆனால் முதல் படத்தில் அறிமுகம் ஆகும்போது ஏதாவது ஒன்று பார்ப்பவருக்கு -  இது இவர் நடிப்பின் ப்ளஸ் பாய்ன்ட் என்று தோன்ற வேண்டுமே.. எனக்கு ஒன்றும்  தோன்றவில்லை . ராதா  புதல்விக்கு இன்னும் இரண்டு படம் பார்த்து மார்க் போடலாம்.
 
  பிரகாஷ்ராஜ் , கோட்டா சீனிவாசராவ் இருவரும் வழக்கமே வழக்கம் போல.  இவர்களை   விட்டுவிட்டு அமைதியாக வில்லத்தனம் செய்யும் நடிகர்களை போட்டிருந்தால் சஸ்பென்ஸ் இன்னும் எகிறியிருக்கும்.  எத்தனை அரசியல்  கதைகள் எழுதியிருக்கிறீர்கள்  சுபா ?  எந்த முதலமைச்சர்  பேட்டியின் போது இப்படி முட்டாள்தனமாக நடந்துகொள்வார் என்று உங்களில் ஒருவருக்கு கூட சந்தேகம் வரவில்லையா ?  படத்திற்கு திருஷ்டி போல அபத்தமான காட்சி அது.  (தன் ஒரே மகனை  விபத்தில் பறிகொடுத்த சோகத்தில் இருந்து மீண்டு வந்து நடித்திருக்கும் கோட்டா சீனிவாசராவுக்கு ஆறுதல்களும் வணக்கங்களும் )

நானும் ஹாரிஸ் ரசிகன்தான்.  ஆனால் தாம் தூம் தொடங்கி தற்போது கோ , வரப்போகும் எங்கேயும்  காதல் படங்கள் எல்லாவற்றிலும் உள்ள பாடல்களை எடுத்து , கலந்து சீட்டுக்கட்டு போல் குலுக்கி போட்டால் , எந்த பாடலையும் எந்த படத்துக்கும் கண்டிப்பாக  பொருத்தலாம்.  
ஏன் இப்படி ஒரு தேக்கநிலை ?  பாடல்கள் நன்றாக இல்லை என்பதல்ல ..  எங்களுக்கு பிரித்து பார்க்க, எதுவும் வித்யாசமாய் தெரியவில்லை.  ஒரு மாற்றத்திற்கு கிராமிய கதைகளும், மதராசப்பட்டினம் போல பீரியட் கதைகளும் எடுத்து மெட்டு போட்டு காண்பியுங்கள் ஹாரிஸ்.  கண்டிப்பாக உங்களால் முடியும்.  எங்களுக்கு தேவை வெரைட்டி.

  பொலிடிக்கல்  த்ரில்லர் என்பது கத்தி மேல் நடப்பது போல. அதை இயக்கும்போது மிக கவனம் தேவை. ஆனந்தின் அனுபவம் இதில் நன்றாக கை கொடுக்கிறது. முதல் காட்சி - வங்கி கொள்ளையை , பின்னால் படத்தின் கதைக்கு சரியாக பொருத்துவது நல்ல உத்தி.  ஆனால் ஜீவா ,வெறும் தழும்பை வைத்து  மட்டும் ஆளைக்   கண்டுபிடிப்பதெல்லாம் மிக அதிகம்.  எது எப்படியோ படத்தில் ஜீவாவின் சமர்த்துதனமான நடிப்பைப் பார்த்ததுமே , ஆனந்தை பாராட்ட தோன்றியது..  காரணம் - இந்த அழகான கதாப்பாத்திரத்தை கண்டவன் கையில் (விரலில்?) கொடுத்திருந்தால்   கண்றாவியாய் இருக்கும்.  
 'இது என் கதை.இதில் எவனும் உள்ளே வர அனுமதிக்க மாட்டேன்' என்று நின்ற உங்கள் நிமிர்ந்த கண்ணியத்திற்கு ஒரு சல்யுட். 
 எப்படியோ நாங்கள் தப்பித்தோம்.

அது சரி ஆனந்த் சார் , யார் அது முதல் பாடலில் கல்யாண ராமன் வேடத்தில்... ஹ்ம்ம்  என்னமோ நடக்குது , ஆனந்துக்கு இருக்கு தெம்பு ..நமக்கு எதுக்கு வம்பு ?



உங்களுக்கு ஹாட் ட்ரிக் வெற்றி இது என்பதில் சந்தேகம் இல்லை ஆனந்த். அடுத்த படம் மாற்றானுக்கு வாழ்த்துக்கள்.
சொன்ன குறைகளை விடுங்கள். நிறைகளை எடுத்துக்கொண்டு அடுத்து இன்னும் நிறைய டிஜிட்டல் கிறிஸ்டல் படங்கள் கொடுங்கள்.
ஷங்கருக்கு ஒரு போட்டி இருந்தால்தான் எங்களுக்கும் நல்ல விருந்து கிடைக்கும்.

கோ - 'கோ'டைக்கு ஏற்ற 'கோ'க்'கோ' 'கோ'லாங்'கோ'... 

3 comments:

பாலா said...

//யார் அது முதல் பாடலில் கல்யாண ராமன் வேடத்தில்.

முதலில் எனக்கு தோன்றவில்லை. இப்போது புரிஞ்சு போச்சு. அதிலும் அவர் ஆன்டியிடம் வழிவது போல வேறு காட்டி இருக்கிறார்கள். நமக்கேதுக்கு வம்பு தும்பு...

அபிமன்யு said...

ஆமாம் பாலா .. நம் கடன் படம் பார்த்து கிடப்பதே.

Jegan said...

இந்த அழகான கதாப்பாத்திரத்தை கண்டவன் கையில் (விரலில்?) கொடுத்திருந்தால் கண்றாவியாய் இருக்கும்.
'இது என் கதை.இதில் எவனும் உள்ளே வர அனுமதிக்க மாட்டேன்' என்று நின்ற உங்கள் நிமிர்ந்த கண்ணியத்திற்கு ஒரு சல்யுட்.

:))

Post a Comment