Monday, April 25, 2011

உயரம் தாண்டிய 'குள்ளநரிக்கூட்டம்'

காலேஜ் படிக்கும்போது ஹாஸ்டலை விட்டு ,மேன்சனில் தங்கி  இருக்கும்போது, ஞாயிற்றுக்
கிழமைகளில்  மத்தியான சாப்பாட்டுக்கு பல ஹோட்டல் முயற்சி செய்து பார்ப்போம். ஆர்ய பவன் தொடங்கி அனைத்து பவன்களிலும் சாப்பிட்டு பார்த்து விட்டு 'ஓகே' ரகம் என்று சொல்லி வந்த எங்களுக்கு ஒரு ஓரத்தில் சிறியதாக இருந்த மீனாட்சி மெஸ் கண்ணில் பட மூன்று மாதங்கள் ஆகின.

வெகு குறைவான, கட்டுபடியான விலையில், தரமான ,சலிக்க வைக்காத சுவையில் , ஒரு முழுத் திருப்தியான உணவை உண்ட  மகிழ்ச்சி எங்களுக்கு ஏற்பட்டது.அதே திருப்திதான் 'குள்ளநரி கூட்டம் ' படம் பார்த்த பின்னரும் ஏற்பட்டது.


இது போன்ற படங்களை கவனிக்க தவறுவதும் ,அல்லது பெரிய பட்ஜெட் பட விளம்பர சுழலில் சிக்கி இவை காணாமல் போவதும் வேதனைக்குரியது.
எந்திரன் தொடங்கி எல்லா பெரிய பட்ஜெட் ராட்டினங்களுக்கு   நடுவில் திருவிழாவில் சுவைக்க வேண்டிய  சின்ன பஞ்சு மிட்டாயாக இனிக்கிறது குள்ளநரி கூட்டம்.கண்டிப்பாக இது ஒரு வெற்றிப்படம்தான். காரணம் இதன் முதலீடு மிக குறைந்தது. இது போன்ற படங்கள் முதல் மூன்று நாள் தியேட்டரில் ஓடினாலே தயாரிப்பாளர் நிதானமான  லாபமடைவார். இயக்குனர் பிழைத்து கொள்வார். நடிகர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும். ஆனால் அது போதுமா?

 மொக்கை படங்களை பெரிய நிறுவன தயாரிப்பு என்றும் , பெரிய இயக்குனர் எடுத்து தொலைத்து  விட்டார் என்பதற்காகவும்  ஒரு முறையாவது தியேட்டர் போய் பார்க்கும் நாம் , இது போன்ற படங்கள் நன்றாக இருக்கிறது என்று யார் சொன்னாலும் அதற்க்கு கொடுக்கும் பதில் : 'அப்படியா ? சரி  நல்ல பிரிண்ட் வரட்டும் ; பார்த்திடுவோம்'  என்பதுதான்.

 'கிக்'கையும் 'நடுநிசி நாய்கள்'ஐயும் தியேட்டர் போய் காசு கொடுத்து பார்த்து திட்டும் நாம் இது போன்ற படங்களுக்கு கொடுக்க  வேண்டிய  அடிப்படை மரியாதையான டிக்கெட் வாங்கி பார்ப்பதை கூட செய்வதில்லை.


இது எல்லாவற்றையும் தாண்டி இது போன்ற நல்ல கதை அம்சத்துடன் வெற்றி பெற்று நம்மை தியேட்டருக்கு வரவழைக்க ஆரம்பித்தது 'சித்திரம் பேசுதடி'   படம் தொடங்கியே. பிறகு சுப்ரமணியபுரம், களவாணி , மைனா என்று நம்பிக்கை தர ஆரம்பித்தது புது இயக்குனர்களின் சவால் விட கூடிய திறமையும் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்த தயாரிப்பாளர்களும். அதன் தொடர்ச்சியே இந்த குள்ளநரி கூட்டமும்.


இது போன்ற தொய்வில்லாத , ஒரு நிமிடம் கூட சலிக்காமல் பார்த்த படம் களவாணி. பிறகு இதுதான். அதற்காக படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. என்றைக்கும் நன்றாக சமைக்கும் அம்மா சமையலில் குற்றம் பார்க்கலாம். என்றைக்காவது அம்மா ஊரில் இல்லாத சமயம் தங்கை சமைத்து கொடுத்தால் அதுவும் வீட்டில் இருக்கும் சொற்ப காய்கறிகளில் இருந்து செய்து பரிமாறினால்  ,அது சுமாராக இருந்தாலும் சுவைதானே. அதற்காக இந்த படம் சுமார் ரகம் அல்ல . உண்மையிலேயே சூப்பர் ரகம்.

பொதுவாக விமர்சனம் பண்ணும்போது கதை  சொல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை. இந்த படத்தில் அந்த கஷ்டம் கூட இல்லை. காரணம் கதை சிக்கல் இல்லாத ஒரே ஒரு லைன். காதலியை  கைப்பிடிக்க அவள் தந்தை ஆசைப்படி  காதலன் போலிஸ் ஆக செய்யும் காமெடி கலந்த  போராட்டம்.

முதல் பாராட்டு இயக்குனருக்கு. ஸ்ரீ பாலாஜி திரைக்கதை எழுதி  இயக்கியிருக்கிறார். இந்த படத்தை கதை மட்டும் எழுதி வேறு யாரிடமாவது கொடுத்திருந்தால் இதில் என்ன இருக்கிறது? ; இருபது நிமிடத்திற்கு மேல் இதில் இழுக்க கதையே  இல்லையே என்று ஒதுங்கியிருப்பார்கள். இவர் வசனத்தையும் கதையையும் செதுக்க மெனக்கெட்டு இருப்பது , ஒவ்வொரு நிமிடமும் படம் பார்க்கும் போது வரும் புன்னகையும் சிரிப்பிலுமே தெரிகிறது.

இந்த படத்தின் வெற்றிக்கு காரணம் கண்டிப்பாக இவரின் வசனமும்,
காட்சி அமைப்பும், பாத்திரங்களை கையாண்ட விதமுமே . பிற விஷயங்கள் அணில் போல் உதவியிருக்கின்றன .வாழ்த்துக்கள் பாலாஜி. வெள்ளித்திரை வாசலை திறக்க வைத்து விட்டீர்கள். இனி கவனமாக அடியெடுத்து வையுங்கள்.


அடுத்து விஷ்ணு. வெற்றி என்ற பாத்திரத்தில் உண்மையிலயே கலக்கியிருக்கிறார். பத்து ருபாய் அப்பாவிடம் வாங்க மூச்சிரைக்க ஓடி வருவதும் , அண்ணனிடம் அலம்பல் பண்ணுவதும் , ரம்யா நம்பீசனிடம் முதலில் கெத்தாகவும் பிறகு பம்முவதும் , பின் போலீஸ் தேர்வு சமயத்தில் மைதானத்தில் செலக்ட் ஆக முனைப்பு காட்டுவதிலும் என நடிக்க வாய்ப்பு இருக்கும் எல்லா இடத்திலும் சிக்ஸர் அடிக்கிறார்.
அதுவும் அண்ணன் வண்டி ஓட்ட பின்னால் அமர்ந்து கொண்டு , பக்கத்தில் ஆட்டோவில்  போகும் பள்ளிக் குழந்தைகளிடம் ' ஹேய் டோரா .. எங்க நாம போறோம்? ' என்று கத்தி சைகை செய்யும்போது ...
'ஹ்ம்ம்.. திறமை இருக்கும் நடிகர்களை  விட்டுவிட்டு  நாம், பஞ்ச் டைலாக் பேசுபவன்தான்  நாயகன் என்று நம்பிகொண்டிருக்கிறோம் ' .


இவரின் பெரிய பலம் தனுஷ் போல்  இவருக்கு இருக்கும் எதிர் வீட்டு பையன் முக ஜாடை. தான் சிரிக்காமல் பார்ப்பவரை   சிரிக்க செய்யும் பக்குவமான நடிப்பு. சரியான ரூட்டில் செல்கிறீர்கள் விஷ்ணு .. பாதையை மாற்றி விடாதீர்கள்.
ரம்யா நம்பீசனை தேர்வு செய்த இயக்குனருக்கு மீண்டும் ஒரு பாராட்டு.இது போன்ற சிறிய பட்ஜெட் படமா ? என்று சிந்திக்காமல் நடித்திருக்கும் ரம்யாவுக்கு இன்னொரு பாராட்டு. பொண்ணுக்கு மதுரை பாஷை , அதற்கான முக நளின அசைவுகளும் மிக கட்சிதமாக பொருந்துகிறது.போனில் விஷ்ணுவிடம் எகிறுவதும் ,பின் பரிதாபப்பட்டு பேசுவதும் மிக அழகு . இவருக்கும் விஷ்ணுவுக்கும் இடையில் மலரும் காதலை மிக நாகரீகமாக நகைச்சுவையாக படமாக்கியுள்ளனர்.

 பணத்தை வாங்கியதும் விடைபெற்று எந்த உணர்ச்சியும் இல்லாமல் போகும் விஷ்ணுவை ஏக்கத்துடன் பார்ப்பதும், அவர் திரும்பி வந்து ' இந்த ஐநூறு ரூபாயய நாளைக்கு வாங்கிக்கிறேன்' என்று சொல்ல , கண்களில் காதலை காட்டுவதும் கவிதை.
எல்லாவற்றையும் விட மிக பெரிய விஷயம் , அசால்ட்டாக  காமெடி வருதுப்ப்பா இந்த பொண்ணுக்கு ? பாத்துக்கோங்க  பாலா.. அடுத்த படத்துக்கு உதவும்.

 
மீதி அதே வெண்ணிலா கபடிகுழு நண்பர்கள் கூட்டம். மைதானத்தில் நடக்கும் அலப்பறை சிரிக்க வைத்து கண்களில் நீர் வர வைக்கிறது. பொதுவாக ஒரு வெற்றி படத்தில் இருந்த அனைவரும் அடுத்து ஒரு படத்தில் நடித்தால் படம் படுத்து விடும் என்பது இதுவரை  கண்ட உண்மை .இதில் நேர்மாறாக சுத்தி சுத்தி சிரிக்க வைத்து கை தட்டல் வாங்கியிருகிரார்கள். அந்த குழு அனைவருக்கும் நல்ல எதிர்காலம் ஏற்படுத்தி கொடுக்க இயக்குனர்கள் முன்வரவேண்டும்.
மற்றபடி விஷ்ணுவின் அப்பா , அம்மா ,அண்ணன் என எல்லா பாத்திரத்தையும் மிக நுண்ணியமாக மதுரை ஒரிஜினாலிட்டி தெரியும்படி கையாண்டிருக்கிறார்கள். விஷ்ணுவின் அம்மா ' இது வரைக்கும் அப்பாக்கு தெரியாம செஞ்சுட்ட; இதையும் செஞ்சுடு;நல்ல பொண்ணுடா..' என இழுத்து பேசும் இடத்தில் அட அட .. மண் மணக்கும் மதுரைடா..
சரி நண்பர்களே , நல்ல படம்..இதுவரைக்கும் இதற்கு எப்படி அங்கிகாரம் கிடைத்திருக்கிறது என்பது பிடிபடவில்லை.. ஆனால் இது போன்ற நல்ல படங்களை ஊக்குவிக்க வேண்டியது நம்மை போன்ற ரசிகர்களின் கடமை. மற்றபடி பெரிய படங்களுக்காக இவைகளுக்கு தியேட்டரில் காட்சி ஒதுக்காமல் இருக்கும் புண்ணியவான்களை நாம் ஏதும் செய்ய முடியாது.


பொதுவாக நான் எந்த படத்தையும் (எதையும்..) சிபாரிசு செய்வதில்லை. அதன் சிறப்புகளை,சாதக பாதக விஷயங்களை மட்டுமே சொல்ல விரும்புவேன். மேற்கொண்டு முடிவெடுப்பது அவரவர்  கையில்..இதற்கு மட்டும் 'ஒரு முறை பாருங்கள்' என வேண்டுகோள் விடலாமா என்று சிந்திக்கிறேன்.காரணம் இந்த படகுழுவினரின் (பட்ஜெட்டுக்குள் அடங்கிய ) உழைப்பும் தரமும்.

குள்ளநரிக்கூட்டம் - தரமான தந்திரம்

1 comment:

Anonymous said...

dear friend ,
really superb film. very good work and act..go to the theatre buy a ticket and relax !!you also be run with the hero THIS IS THE TRIUMPH OF THE DIRECTOR..

Post a Comment