Friday, May 20, 2011

பாப்கார்ன் பாக்கெட்- 20110520

'தி அதர்ஸ்' படத்தை நேற்று நான்காவது முறை பார்த்தேன். பேய் படத்தில் இருக்க வேண்டிய எதுவும் இதில் இல்லை.அதுதான் இதன் வெற்றிக்கு மிகப் பெரிய ப்ளஸ்.  கிளைமாக்ஸ் காட்சியில் முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் திருப்பம் கொடுக்கும் படபடப்பு எனக்கு மிக பிடிக்கும்.மெதுவாக நகரும் இந்த கதையில் நிகோல் கிட்மேனும் , அவரின் குழந்தைகளாக வரும் இரு வாண்டுகளும் மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

பேய் படம் என்றபோதும்  ,சடாரென பயக்க வைக்கும் காட்சிகள் இல்லை ; பயங்கரமான சத்தம் இல்லை; மிக அமைதியான கதை. படம் முழுக்க அந்த வீட்டுக்குள்ளேயே நடந்தாலும் , நமக்கு சலிப்பு வராதபடி வசனங்கள் ,நிகோல்- குழந்தைகள் நடுவில் நடக்கும் சில வாக்குவாதங்கள் என கதையை நேர்த்தியாக நகர்த்தியுள்ளார் இயக்குனர்.
 
 
கதை லைன் இதுதான். சூரிய வெளிச்சம் ஒத்துக்கொள்ளாத இரு குழந்தைகளும் அவர்களை மிக கவனமாக பார்த்துக் கொள்ளும்   தாயும்  ,ஒரு பெரிய வீட்டில் வசிக்கிறார்கள்.  அந்த வீட்டில் வேலைக்கு வருகிறார்கள் ஒரு நடுத்தர வயது பெண் , வயதான ஆண் மற்றும் ஒரு ஊமைப்பெண்.

இரு குழந்தைகளில் சிறியவன் தன அக்காவிடம் , யாரோ ஒரு பையன் அவர்கள் அறையில் இருக்கிறான் என்று அடிக்கடி பயந்து சொல்கிறான். போருக்கு போன கணவன் ,ஏதோ இழந்த மனநிலையில் வந்து பிறகு சில நாட்களில் கிளம்பி செல்கிறான்.

அதன் பின்  சில விபரீத விஷயங்கள் நடக்க , நிகோல் ,வேலைக்கு வந்த மூவரையும் சந்தேகப்பட , ஒரு கட்டத்தில் , அந்த மூவரும் நோய்வாய்ப்பட்டு இறந்த போது   எடுத்த புகைப்படம்  அவள் கையில் சிக்குகிறது. பிறகு நடக்கும் கிளைமாக்ஸ் காட்சி கதையை , தலைப்பை நிமிரவைக்கிறது.

இந்த விமர்சனத்தைப் பார்த்து படம் பார்ப்பவர்கள் , படத்தின் கடைசி காட்சி வரை பொறுமை காத்து ஒவ்வொரு காட்சியையும் உன்னிப்பாக கவனித்து ,பிறகு பின்னோட்டம் இட வேண்டுகிறேன். காரணம் மூன்று வருடம் முன்பு , ஒண்ணே முக்கால் மணி நேர இந்த படத்தை , ஒரு மணி நேரம் பார்த்த என் நண்பன் 'என்னடா படம் இது ?' என்று எழுந்து சென்றவன் , பிறகு ஒரு தடவை ,முழுதாகப் பார்த்து  எனக்கு போன் செய்து கடைசிகட்ட காட்சியை வியந்து பாராட்டினான்.

திகில் கதை வகையில் இது சேராது.இது மர்ம பின்னணி உடையது. பேய் படமா ? என்று பயப்படத் தேவை இல்லை.குழந்தைகள் முதல் பெரியவர் வரை  எல்லாரும் பார்க்கலாம்.
---------------------------

பல மொழிகள் கற்றுக்கொள்ளும் ஆசை உள்ள உங்களுக்கு இதோ   இருக்கிறது http://www.conversationexchange.com/

உங்களுக்கான ஒரு மொழித் துணைவரை (ஹிஹி .. லேங்குவேஜ் பார்ட்னர்ப்பா ) தேர்ந்தேடுத்துக்  கொண்டு , அவரிடம் அவர் மொழியைக் கற்றுகொள்ளலாம். உங்கள் மொழியை அவருக்கு சொல்லிக் கொடுக்கலாம். இப்படி அருமையான ஒரு வலைத்தளம் கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சாட்டிங் மூலமாகவும் , நேருக்கு நேராகவும் , இன்னும் பல வசதிகள் மூலமாகவும் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளை இணைக்கும் ஒரு தளமாக இது அமைந்திருக்கிறது.

வேறு நாட்டவரை நண்பராக பெறும் வாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கிறது. இப்போதே பல கல்லூரி மாணவர்கள் இதில் உறுப்பினர்களாகி இருக்கிறார்கள் என தெரிகிறது. ஆனால் உருப்படியாக  இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.கல்லூரிகளில் ஆர்குட் ,பேஸ்புக் ஆகியவற்றை தடை
செய்தவர்கள் ,மாணவர்களை நம்பி இதை இன்னும் அனுமதிக்கிறார்கள்.

 நல்ல வசதிகள் நிறைய வலைகளில் கிடைக்கிறது. அதை தவறாக பயன்படுத்தாமல் நல்ல முறையில் பயன்படுத்தினால் நாமும் பயன்பெறலாம். இல்லையென்றால் இதுவும் 
firewall-க்கு  பின்னால்தான்.
--------------------------------

இன்றைய சூழ்நிலையில் உலக அரங்கத்தில் நாம் இன்னும் நிமிர்ந்து  நம் மாணவர்களைப் பற்றி தாராளமாக பெருமைப்பட்டு கொள்ளலாம். காரணம் அவர்களே உணராத அவர்களின் திறன். உணர்ந்தவர் ஒபாமா.

அமெரிக்காவின் டென்னஸ்ஸீ மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் கல்லூரி மாணவர்களுடன்  உரையாடியபோது ஒபாமா சொன்னது :

 ' அமெரிக்க மாணவர்கள் இனிவரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும். எதிர்காலத்தில் போட்டிகள் இன்னும் கடுமையாக இருக்கும். இந்தியாவிலும், சீனாவிலும் மாணவர்கள் கடினமாக உழைத்து முன்னேறி வருகின்றனர்.

எனவே தங்களது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.உள்நாட்டு போட்டியை சமாளித்தால் போதும் என்ற நிலை இனி இருக்காது. வெளிநாட்டிலிருந்து போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சவாலான சூழல் உருவாகி வருகிறது.

இந்திய,சீன மாணவர்கள் சாதிக்க வேண்டும்,முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடன் படிப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.தங்களது இலக்கை எட்டுவதற்காகக் கடினமாக உழைக்கின்றனர். இப்போது நாம் உலகமயமாக்கல் சூழலில் உள்ளோம். இந்த உலகில் வலிமையானதுதான் மிஞ்சும். திறமைபடைத்தவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்புகள் கிடைக்கும். இதை அமெரிக்க மாணவர்கள் உணர வேண்டும்.

படிப்பை முடித்துவிட்டு நீங்கள் வேலை தேடச் செல்லும்போது நீங்கள் நாஷ்விலே பகுதியைச் சேர்ந்தவருடனோ அல்லது அட்லாண்டா பகுதியைச் சேர்ந்தவருடனோ போட்டியிடப் போவதில்லை. இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வந்துள்ள திறமைமிகுந்த மாணவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.'

உண்மைதான். நம் மாணவர்களுக்கு இப்போதெல்லாம் முன்பிருந்த பல பிரச்சனைகள் இல்லை. படிப்பதிலும் சுட்டிதான். அவர்கள் கவனிக்க வேண்டிய ஒன்றே ஒன்று   - இலக்கு. எதிர்ப்படும் சின்ன தோல்விகளுக்காக அடிக்கடி  இலக்கை மாற்றாமல் முன்னேறினால் அவர்களுக்கு பின்தான் உலகம் நிற்கும்.அதன் முன்னறிவிப்பு மணியே ஒபாமாவின் பாராட்டு.ஹ்ம்ம் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி.கலக்குங்கள் ..
----------------------------------------------------------

தனுஷுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. நல்ல நடிப்பை தொடர்ந்து கொடுத்து வரும் அவருக்கு தோளைத்தட்டி இந்த அங்கிகாரம் கொடுக்க பெறுவது மிக சந்தோஷமே.
என்ன ஒன்று ..ஆடுகளம் தாண்டி பல நல்ல படங்கள் போன வருடம் வந்தன.இதில் என்ன சிறப்பு அதிகம் உள்ளது என்று விருதுக்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று புரியவில்லை.

எப்படியோ,அவ்வபோது கமர்ஷியல் படங்களில் சறுக்கினாலும் நச்சென்று இடையில் ஒரு படம் கொடுத்து தன் பெயரைக் காப்பாற்றிக்கொள்ளும் தனுஷ் திறமை பாராட்டப்பட வேண்டியது. சூர்யாவுக்கு அடுத்து உங்களிடம் கூட  இன்னொரு கமலை எதிர்பார்க்க முடியும். வாழ்த்துக்கள். 'கெளப்புடா கெளப்புடா தம்பி'


நமக்கு இனி அடுத்த ஆச்சி சரண்யாதான் . நடிக்கும் எல்லா படங்களிலும் நம்மை எழுந்து நின்று கைதட்ட வைக்கிறார்.நாயகன் தொடங்கி பிறகு  கதாநாயகியாக நடித்த படங்களில் அவ்வளவு பேர் பெறாத குறையைப் போக்க , இப்போது அரிதாரம் பூசாமலேயே அதிர வைத்து அசத்துகிறார்.
களவாணி அம்மாவுக்கு குவிகிறது பாராட்டுக்கள். ரேவதியும் சுஹாசினியும் இப்படி வளர்வார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்திருந்த நமக்கு இவரின் இப்படி ஒரு வரவு இனிப்பான  விஷயம்.இயக்கம் தொடங்கி நடிப்பு என எல்லாவற்றிலும் தேர்ந்த கணவர்  பொன்வண்ணனுக்கும் , இவர் ஒரு இனிய சவால்.


மைனா ,தென்மேற்குப் பருவக்காற்று படங்களின் வரவேற்பைப் பார்த்தபின்னும் இனி மேல் யாராவது 'நல்ல கதை;ஆனா அவார்டுக்கு படம் எடுத்தா வசூல் வராது '  என்று சொல்ல முடியுமா ?

வைரமுத்துக்கு கிடைத்த விருதுக்கு அவர் ஒரு முறை சொன்ன பதிலே விளக்கம் - 'முதல் முறை விருது கிடைக்கும்போதுதான் எனக்கு என தோன்றியது.தொடர்ந்து கிடைக்கும்போதுதான் தெரிந்தது , அது தமிழுக்கு என்று.'

அரசியல் என்னாகுமோ .. சினிமாவ வாழ வைக்க நம்மகிட்ட நெறைய பேரு இருக்காங்கப்பா.. 
-------------------------------------------------------
நக்கலுக்கு கவுண்டமணிதான்னு அவர் நடிக்கிறத நிறுத்துன பின்னாடியும் இன்னும் மாத்தமுடியல..
சத்யராஜ் கவுண்டமணி கூட்டணி பின்னி பெடலெடுத்த காலங்கள் தமிழ் ரசிகர்களுக்கு பொற்காலம்.
இந்த சீனில் சத்யராஜ்-முகபாவனையும் கவுண்டர் படிப்பைப் பற்றி பேசும் டயலாக்கும் மிகப் பிரசத்தி.
ஆபிஸ்ல யாரும் பாத்துடாதப்படி சிரிங்க ..   
 
  
 
 இந்த மனுஷனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகா அடுத்தவன-ஓட்ட முடியுது ?  சந்தானம் ரெண்டு ஜென்மம் எடுத்தாதான் இவர் பக்கத்துல வர முடியும். 

4 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Kovandar always comedy super star

"என் ராஜபாட்டை"- ராஜா said...

All the best to dhanush

"என் ராஜபாட்டை"- ராஜா said...

Vote podaju

Anonymous said...

பாஸ் .. நீங்க சொன்னது கரெக்ட் .. தி ஒதேர்ஸ் செம படம். கடைசி சீன் பயங்கர ஷாக் . Thanks.

Post a Comment