Tuesday, May 10, 2011

பாப்கார்ன் பாக்கெட்- 20110510
அனானிக்கு பதில் சொல்ல விரும்பாத என்னைப்போல பதிவர்களுக்கு (இதுல என்ன மண்ணாங்கட்டி சூசகம்? எனக்குதான்..)  , சில பேர் மிக விவரமாக ராமசாமி ,ஸ்ரீராம் ,சிவராம்  என்னும் பெயரில் 'உங்கள் பதிவில் பிழை உள்ளது. நீ அந்த வெப்சைட்ல இருந்துதான இதை எடுத்து எழுதுன.. அவன் தப்பானவன் ..இவன எப்படி நீ அப்படி சொல்லலாம்?  நீ உருப்படியா எதாவது எழுது..ஹிந்திய திணிக்கிறீயா நீ? ' என்று மிரட்டலாக அறிவுரை செய்வதுடன் , தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற பிம்பத்தை உருவாக்க முயல்கிறார்கள்.

அதிலும் ஒரு சிலர் 'நீ ஆபீஸ்ல என்ன பண்ணுனனு எனக்கு தெரியும் ' என்று நம் பொறுமைக்கோட்டை தாண்டுவார்கள். 

எனக்கு நெருக்கமான ஒருவர் திடீரென தொலைபேசியில் அழைத்து 'நீ எழுதுனது எனக்கு புடிக்கல..கிரிக்கெட் பத்தி இப்போ தேவையா ?' என்று கோபமாக   கேட்டார். 'சாரி சார்.. நான் உங்க ஒருத்தருக்கு மட்டும் பதிவு எழுதல..எல்லாத்துக்கும்தான்'  என்று நான் சொன்னதை அவர் கேட்கவில்லை.இன்னொருவர் வெகு புத்திசாலி . 'நீ  இந்த தகவல்களை அங்க இருந்து எடுத்து எழுதிருக்க.You spiced it up.' என்று மிகப்பெரிய கண்டுபிடிப்பை  கண்டுபிடித்து விட்டார் .  'யோவ் எங்களுக்கு என்ன சிட்டி ரோபோ மாதிரி எல்லா தகவல்களையும் உள்ளுக்குள் பதிஞ்சு வெச்சுருக்காங்களா? ' என்று நான் திரும்ப கேட்கவே இல்லையே.

 இவர்களைப் பார்த்து மிக துணிச்சலாக , நேராக விரல் நீட்டி சுளீரென ,ரோசமாக மிக நியாயமான ஒரு கேள்வி கேட்கிறேன் -
'ஹிஹி..  உங்களுக்கு இல்லாத உரிமையா  சார்?.. தாராளமா பண்ணுங்க..'  

(வேறு  என்ன செய்வது? இவர்களுடன் சண்டை போட்டு பின்னோட்டம் எழுதும் நேரத்தில் இன்னொரு பதிவே எழுதி விடலாம் )
----------------------------------------------------------------------------


ஒப்பிடுதல் என்பது கத்தி மேல் நடக்கும்  விஷயம் . எந்த  சூழ்நிலையிலும் தவறான , சம்பந்தம் இல்லாத மனிதர்களை ஒப்பிடக்கூடாது .
ஒசாமா பின் லாடன் மறைவுக்கு ஒரு கூட்டம் சென்னைல தொழுகை நடத்தீருக்காங்கப்பா.இவனுக்கு எதுக்குனு கேட்டா , எதிர்பாக்காத ஒரு பதிலா சொல்லி அதிர வைக்கறாங்க - 'நீங்க மட்டும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு வருத்தப்படுறீங்க. நாங்க ஒசாமாக்கு பண்ணக் கூடாதா ?'

விவேக் ஸ்டைல்ல சொல்லனும்னா ' அடப் பாவிகளா..உங்க உலக அறிவுக்கு ஒரு எல்லையே இல்லையாடா..ஏன்டா ஒரு இனத்துக்குக்காக  போராடுன ஒருத்தருக்கும்,உலகத்துல அந்த இனம் இந்த இனம்னு இல்லாம எல்லாரையும் அழிச்ச ஒருத்தனுக்கும் எப்படிடா உங்களால முடிச்சு போட முடியுது?  உங்கள எல்லாம் திருத்தவே முடியாதுடா '

----------------------------------------------------------------------------

ப்ளஸ்2 தேர்வில் இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே ..ஷ்ஷப்பா ..முடியல.. மாணவர்களின் இந்த காலகாலமான அவபெயருக்கு முழுக்காரணம் மாணவிகள் வருட ஆரம்பத்திலயே படிக்க   ஆரம்பிப்பதும் , மாணவர்கள் கடைசியில்  பார்த்துக்கொள்ளலாம் என்னும் நினைப்பால் ஏற்படும் தவறே .

ஆனால் நாங்கள் எங்களுடன் படிக்கும் மாணவிகளை இப்படி கிண்டல் அடிப்போம்  - ' நீ வருஷம் முழுக்க படிச்சு தொண்ணூறு மார்க் எடுத்தது பெருசில்ல. நாங்க பரீட்சைக்கு மொதல் நாள் படிச்சு எழுபது மார்க் . அப்போ நாங்கெல்லாம் மொதலிருந்தே படிச்சிருந்தா எவ்வளவு எடுத்திருப்போம்னு சின்னதா ஒரு கணக்கு போட்டு பாரு . வெறும் இருபது மார்க் அதிகம் எடுக்கறதுக்காக நீங்க எல்லாம் முழு வருசமும் இவ்வளவு கஷ்டப்படிருக்கீங்க. சின்ன பொண்ணு. ..எங்க அம்மா கேட்டாங்கன்னா 'நானும் எழுபது மார்க்தான் ஆண்டீ'னு சொல்லிட்டு ஓடி போய்டணும்..
போ ' என்று விரட்டி விடுவோம்.

எது எப்படியோ , மார்க் எடுத்த மகிழ்ச்சியில் அவர்கள் பேட்டி கொடுக்கும்போது  பார்க்கும் ஒவ்வொருவரும் பெற்றோர் போல மகிழ்ச்சியில் ஆனந்தப்படுகிறோம் . பக்கத்தில் பூரித்துப் போயிருக்கும் ,கடந்த இரு வருடங்கள் பல தியாகங்கள் செய்த  பெற்றோரை வணங்க வேண்டும் . டிவி பார்க்காமல் ,சத்தம் போட்டு பேசாமல் , பிள்ளை படிக்கும்போது அமைதியாக இருந்து,அவர்கள் அதிகாலையில் எழும்போது அவர்களும் எழுந்து , வீட்டுக்கு வரும் சொந்தக்காரர்களை  'புள்ள படிக்கிறான்' என்று தர்மசங்கடமாய் சொல்லி தவிர்ப்பதும் என -  தன் காலத்தில் கடைப்பிடிக்காத கடின படிப்பு முறைகளை தங்கள் பிள்ளைகளுக்காக கடைபிடிக்கும் தியாகிகள் பெற்றோர்கள். சாதித்த மாணவர்கள் பேட்டியின் போது  மூச்சிரைக்க சொல்லும் 'எனக்கு டாக்டர் ஆகணும்னு ஆசை .  நான் மெரைன் இஞ்சினீரிங் படிக்கணும்னு ஆசை ' ஆகிய ஆசைகளை ,எந்த (அரசியல் உள்ளிட்ட ) குறுக்கீடும் இல்லாமல் நிறைவேற .. தமிழ்த்தாயே வழிகாட்டு..
-------------------------------------------------------------------------------


அடுத்த வாரம் இந்நேரம் என்ன நடக்க போகுதோ ? 12B மாதிரி தமிழ்நாடு சூழ்நிலை ஆகிடுச்சு . ஒருவேளை அதிமுக ஜெயிச்சா:
  • காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து  எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விலகும். பிறகு மக்களவைத் தேர்தலில் மீண்டும் இணைந்து கொள்ளும்.
  • விஜய் ரசிகர்கள் ,தங்கள் தலைவருடன் மோதியதால் திமுகவுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது என்று போஸ்டர் ஓட்டுவார்கள்.
  • திமுக ஆதரவை மட்டும் நம்பியிருக்கும் - ரஜினியையும் பகைத்த வடிவேலு என்ன செய்வார் என்றே தெரியவில்லை.நிச்சயமாக  நடிப்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.
  • அடுத்த இரண்டு மாதத்தில் தேமுதிக ,அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் அல்லது விலக்கப்படும்.
  • கனிமொழி வீட்டில் அடைந்து கொள்வார். ஆண்டிமுத்து ராசா இன்று போல் என்றும் வாழ்வார்.

திமுக ஜெயிச்சா:
  • பெருசா எதுவும் மாறாது.
  • அம்மா கொடநாடுக்கு குடி போய்டுவாங்க.
  • கேப்டன் குடிக்க , சாரி நடிக்க போய்டுவாரு.
------------------------------------------------------------------------------------
மணிரத்னத்தின் முதல் தமிழ் படம் பகல் நிலவு . ஜானகியின் அற்புதக் குரலில் இழைந்தோடும் இளமையும் , இசைஞானியின் சலசலக்கும் நீரோடை போன்ற இசையும் இந்த பாடலை பல பேரின் ஹிட் லிஸ்டில் வைத்திருக்கிறது .  இளையராஜாவின் குரல் கூடுதல் சுகம்.
 ஹ்ம்ம்..நாமெல்லாம் குரலைக் கொஞ்சம் இழுத்தால் நாராசமாய் இருக்கிறது. இளையராஜாவின் பூ..மாலையே என ஒரு உயிரைப் பறிக்கும் உச்சக்குரல் ..அடடா ..
 இதில் முரளி என்ன ஒரு இப்போதைய
ஹீரோக்களின்  லட்சணமான அழுக்கான , கருப்பான ,துடிப்பான கிராமத்து இளைஞனாய்   தோற்றமளிக்கிறார்? ரேவதியின் பொட்டு வைக்காத முகம் காட்டும் பாவனைகள் மிக கொஞ்சல் .
கண்டிப்பாக மண்வாசனை பார்த்து விட்டு  இந்த படம் பார்த்தவர்கள் ஆச்சர்யப்பட்டிருப்பார்கள்.

காதலிக்கும் யாருக்கும் இந்த பாட்டு காதலை  அதிகப்படுத்தும். காதலில் இல்லாதவரை , காதலிக்க தூண்டும்.இசை என்னவெல்லாம் செய்கிறது பாருங்கள்.

------------------------------------------------------------------

கடைசி கார்ன்:

திருமணமோ, பிறந்த நாள் விழாவோ , மற்றவருக்கு பரிசு அளிக்க வேண்டும் என்றதும் உடனே அழகுப்பொருள் எதாவது வாங்கி கவர் பண்ணி கொடுப்பதே உலக வழக்கமாகி விட்டது.  எனக்கு அதில் உடன்பாடில்லை. மாறாக புத்தகம் பரிசளித்துப் பாருங்கள்.  நிச்சயம் பயன்படும்.

சம்பந்தப்பட்டவர் எந்த புத்தகம் விரும்புவார் என்று தெரிந்தால் அது அவரிடம் ஏற்கனவே இருக்கிறதா என்று தெரிந்துக்கொண்டு அதை பரிசளிக்கலாம்.  அல்லது அவரைப் பற்றி தெரியவில்லை என்றால் , பொதுவாக பயன்படுமாறு புத்தகங்கள் அளிக்கலாம்.  குழந்தைகளுக்காக என்றால் ரைம்ஸ் டிவிடியோ , கார்ட்டூன் புத்தகமோ உதவும். நாவல்கள் கொடுக்காதீர்கள்.ஒருமுறை படித்து தூக்கி எறியும் சாபம் பெற்றவை அவை.நான் பெரும்பாலும் அளிப்பது வாழ்கையில் வெற்றி அடைந்தவர்களின் வாழ்க்கை வரலாறோ அல்லது தனம்பிக்கை புத்தகங்களோ.

புத்தகங்கள் பரிசளிக்கும்போது கொஞ்சமாவது கஷ்டப்பட்டு மூளையை உபயோகித்து தேர்ந்தெடுத்துக்கொடுங்கள். உங்களுக்கு பிடித்த புத்தகம் என்று சாருவின் ஜீரோ டிகிரியை   அடுத்தவர்களுக்கு திணிக்க வேண்டாம்.  புதிதாய் கல்யாணம் ஆன நண்பனுக்கு அதிவிவேகசிந்தாமணியும் அதன் விளக்கமும் தேவைப்படுமா? என்று யோசியுங்கள்.

அழகுப்பொருள் அப்படியே இருந்து அழுக்காகும்.புத்தகமோ படிக்க படிக்க அழுக்காகும்.ஆனால் இரண்டுக்கும்  வித்தியாசம் இருக்கிறது.

7 comments:

Gopi Ramamoorthy said...

\\அழகுப்பொருள் அப்படியே இருந்து அழுக்காகும்.புத்தகமோ படிக்க படிக்க அழுக்காகும்.\\

நல்லா இருக்கு பாஸ்:-)

பாலா said...

புத்தகங்களை பரிசளிக்கலாம். ஆனால் படிப்பார்களா என்றுதான் தெரியவில்லை.

சங்கர் நாராயண் @ Cable Sankar said...

popcorn.. புத்தகங்களில் நாவல்களை படித்துவிட்டு தூக்கிப் போட்டுவிடுவார்கள் என்று எப்படி சொல்ல முடியும்? பொன்னியின் செல்வனை தூக்கி போடுவார்களா?

இராஜராஜேஸ்வரி said...

தொகுப்புகள் அருமை. மாணவிகளுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Pravin Kumar said...

Gift voucher would be much better option than books.

சண்முககுமார் said...

தங்கள் பதிவை இணைக்க புதிய தளம்
இணையவாசிகள் தங்கள் பதிவை இணைத்து பயன் பெறுங்கள்

http://tamilthirati.corank.com

அபிமன்யு said...

பாலா:
படிக்கத்தூண்டும் புத்தகங்களை பரிசளிப்போம். நல்ல பரிசு கொடுத்தோம் என்ற மனநிறைவு நமக்கு இருக்கும் அல்லவா..
படிப்பதும் படிக்காததும் அவர்கள் விஷயம் :)

சங்கர் நாராயண் @ Cable Sankar
இந்த கேள்வி நானும் யாரிடமிருந்தாவது வரும் என எதிர்பார்த்தேன்.
எல்லாவற்றிற்கும் சில விதிவிலக்கு உண்டு சங்கர் அண்ணா .
(என்னிடம் பொன்னியின் செல்வன் நான்கு பதிப்புகள் உள்ளது.அதில் ஒன்று மின்பதிப்பு வந்தப்பின்னும் வாங்கியவை.இன்னும் யாரவது அன்பளிப்பு கொடுத்தாலும் வாங்கி வைத்துக்கொள்வேன் )
கல்கி,சாண்டில்யன், பிற சரித்திர நாவல்கள் தவிர பிற பெரும்பாலான நாவல்கள் ஒருமுறை மட்டுமே படிப்போம்.அதற்காகவே நாவல்களை தவிர்க்கச் சொன்னேன்.

புது திரட்டியை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி சண்முககுமார்..

Post a Comment