Tuesday, May 3, 2011

பாப்கார்ன் பாக்கெட்- 20110503


என்னை மாதிரி தீவிர ஆடம் சாண்ட்லர் ரசிகர்களை திருப்திப்படுத்த வந்திருக்கும் படம் 'ஜஸ்ட் கோ வித் இட் ' .2009 -இல் Funny People கொடுத்து ஏமாற்றிய பாவத்தை போக்க  போன வருடம் Grown Ups கொண்டு வந்து நன்றாகத்தான் சமாளித்தார்.

இருந்தாலும் அதில் அவரின் அக்மார்க் சாண்ட்லர் டச் இல்லையே என்று வருத்தப்பட்டவர்களுக்கு சரியான சம்மர் ட்ரீட்  'Just Go with It'

வழக்கமாக பெண்களை மயக்கும் அதே ரோல்தான் என்றாலும் இதில் அவர் பெண்களிடம் தன் மீது இறக்கம் வரவழைக்க அளக்கும் பொய்தான் இந்த கதையின் ஆணிவேர்.'எனக்கு ஆயிரம் பிரச்சனைகள்.எல்லாவற்றிற்கும் காரணம் என் மனைவி' - இதுதான் பொய். 

 எல்லா பெண்களிடமும் சொல்லும் அதே பொய்யை புது பிகரான ப்ரூக்ளின் டெக்கர் (நம்ம டென்னிஸ் பிளேயர் ஆன்டி ரோடிக் மனைவி )  காதிலும் அளந்து விட , அவளோ கல்யாணத்துக்கு சம்மதிக்கும் முன் மனைவியை அறிமுகப்படுத்துமாறு சொல்ல ,வேறு  வழியில்லாமல் இரு குழந்தைகளுக்கு தாயான ஜெனிபர் அனிட்சனை தன் மனைவியாக நடிக்க சொல்கிறார். கூடவே அவளின் இரண்டு குழந்தைகளை சமாளிக்கும் புது பொறுப்பும் வந்து விட எப்படி சமாளிக்கிறார் சாண்ட்லர் என்பதுதான் கதை.

வழி நெடுக சாண்ட்லரின் காமெடி .கடைசி காட்சிகள் மட்டும்   ரொமான்ஸ் உருக்கம். ஒன்னே முக்கால் மணி நேரம் ரசித்து சிரிக்க ஏற்ற தேர்வு இந்த படம். எல்லா தகிடுதத்தமும் செய்துவிட்டு  அப்பாவியாக முகத்தை வைத்துக்கொள்ளும் நடிப்பில் சாண்ட்லர் கலக்குகிறார்.பெண்களிடம் வசீகரப்படுத்தும் கலை மனிதனுக்கு கூடவே பிறந்தது போல. வெல்கம் பேக் ஆடம். உங்களிடம் இதைதான் எதிர்பார்க்கிறோம்- reign over  me  அல்ல ..


ஜெனிபர் அனிட்சனை நாற்பது வயது என்று யாரப்பா சொன்னது ? ப்ரூஸ் அல்மைட்டியில் பார்த்த அதே துள்ளல்.  சாண்ட்லரின் அலம்பலுக்கு ஈடு கொடுக்கும் நடிப்பு. 
எல்லா ரொமாண்டிக் காமெடி படத்திலும் இருக்கும் யூகிக்ககூடிய கிளைமாக்ஸ் காட்சியே இதிலும். ஆனால் அதை எப்படி திரைக்கதைப்படுத்துகிறார்கள் என்பதில்தானே ரசிகர்களின்  எதிர்பார்ப்பும் கவனிப்பும். அதை இதில் செம்மையாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.
ஒரு கோவா ட்ரிப் அடித்த மாதிரி இருக்குப்பா ..
-----------------------------------------------------------------------------------------------

சில சமயம் சில பேர் சில விஷயத்தை தவறாக எடுத்துக்கொள்ளும்போது  உடனே அவர்களுக்கு உண்மையை உணர்த்த , நன்றாக விளக்கி கூற விரும்புவோம். அந்த விளக்கத்திற்கு அவைகள் தகுதியானவர்கள். ஆனால் சில பேர் ...? மிக பாவம்.

வீட்டில் எந்த வேலையும் இல்லையென்றால் ஏதாவது ஒன்றை எதிர்த்து மனு ஒன்றை எழுதி பதவியில்  இருப்பவரையும்  'நடவடிக்கை எடுங்கள்' என்று படாதபாடு படுத்துவார்கள். அப்படிதான் சமீபத்தில் வெளியாக உள்ள படத்தின் தலைப்பை மாற்ற சொல்லி ஒரு குழு எதிர்ப்பு கிளப்பியுள்ளது. காரணம் அந்த தலைப்பு ஒரு மாமனிதரை குறிக்குமாம். ஆனால் பட நாயகனோ மனவளர்ச்சி குன்றியவனாம்.

கண்டிப்பாக அந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் 'இப்படி கூடவா யோசிப்பார்கள்?' என்று தலையில் கை வைத்து விழித்துக்கொண்டிருப்பார்கள்.எனக்கும் அதுதான் தோணுது.எப்படியா இப்படியெல்லாம் யோசிக்கறீங்க ?

சரி விடுங்க.. 'யாராவது ஒருத்தன் மொறச்சு பாத்தாலே பயந்து பின்னாடி பதுங்கறவன் நீ.  நீ எப்படி அபிமன்யு பேருல பதிவு எழுதலாம் ? மாத்துடா பேரை ' என்று சொல்லாத வரை நமக்கு பிரச்சனை இல்லை. 
----------------------------------------------------------------------------------------------
காலகாலமாக  இலங்கை கிரிக்கெட் வாரியத்தை காப்பாற்றி வருவது இந்திய வாரியம்தான். போட்டி எதுவும் இல்லை என்றால் உடனே எதாவது சின்ன நாட்டு அணியையும் ஆட்டத்தில் சேர்த்து இந்திய - இலங்கை முத்தரப்பு தொடரை உருவாக்கி , அவர்களை பிழைக்க வைப்போம்.

இப்போது ஐபில் விஷயத்தில் அவர்கள் நடந்து கொள்வதை  பார்த்தால், வருங்காலத்தில் இதற்கு எப்படி பதில் கொடுக்க வேண்டுமோ அப்படி கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் நன்றாக முடிவெடுத்திருக்கும்.  
யார் போனாலும் சரி , ஐபில் களைகட்டி கொண்டுதான் இருக்கும். கங்குலி திரும்பி வர வாய்ப்பு இருக்கும். உள்ளூர் இளங்காளைகள் உபயோகிக்கபடுவார்கள்.

என்னை பொறுத்தவரை அரசியலிலும் சரி , இப்போது கிரிக்கெட்டிலும் சரி ,இலங்கையிடம் அவமானப்படுவதே இந்தியாவுக்கு பழக்கமாகி விட்டது.


விடுதலை  புலிகளை எதிர்க்க இந்திய ராணுவம் போய் அவமானப்பட்டதிலிருந்து , ஒவ்வொரு முறை பேச்சுவார்த்தை என்ற பெயரில் கடந்த இருபது வருடமாகவும் , சமீபத்தில் தமிழர்கள் நலவாழ்வுக்காகவும் குழு அனுப்பி நமக்கு  கிடைத்த மரியாதையும் ...
எனக்கு ஒன்று புரியவில்லை .. உள்ளூரில்   கூட  கடைப்பிடிக்காத   அஹிம்சை முறையை என் இந்தியா இலங்கையிடம் மட்டும் எப்போதும் கடைப்பிடிக்கிறது?

கிரிக்கெட் விசயமும் சரி , அரசியல் விவகாரமும் சரி ..போனால் போகட்டும்.. தமிழக மீனவ உயிர்களை மதிக்காமல் இந்தியா அலட்சியபடுத்தினால் இனி தமிழ் மக்கள் பொறுமையாய் இருக்க மாட்டார்கள். காரணம் இது வரை தாத்தாவும் அம்மாவும் செய்வார்கள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இப்போதுதான் தாங்கள் ஒற்றுமையாய் எழுந்து   நின்று  முயன்றால் அது எளிதில் முடியும் என்று புத்திக்கு எட்டியிருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------

'வாக்கெடுப்பு ஏப்ரல் 13 . வாக்கு எண்ணிக்கை மே 13 . இடையில் இருப்பதோ  ஒரு மாசம்.எதற்கு இந்த அவகாசம்? இடையில் இருப்பதோ  ஒரு மாசம்.எதற்கு இந்த அவகாசம்?' என்று திரும்ப திரும்ப கத்திகொண்டிருக்கும் (வக்கீலுக்கு படித்த ) விஜய டி.ஆர் அவர்களே , முன்கூட்டியே முடிவை அறிவித்தால் , தேர்தல் நடக்கும்  ஏனைய மாநிலங்களில் ,  இந்த முடிவின் செயற்கை பிம்பம் விழுந்து கடைசி நேர குழப்பங்கள் வரும் என்று உங்களுக்கு தெரியவே தெரியாதா? புரியவே புரியாதா ? அறியவே...அட போங்கய்யா..உங்கள பத்தி பேசுனாலே உங்க பழக்கம் ஒட்டிக்கிது.

----------------------------------------------------------------------------------------------

நடிகை  சுஜாதா மறைவு   செய்தி கேட்டதும் எனக்கு 'அவள் ஒரு தொடர்கதை' ஞாபகம்   வந்தது . அவள் ஞாபகம் வந்ததுமே 'தெய்வம் தந்த வீடு ' மனதில் மெலிதாக விசும்ப தொடங்கியது. கண்ணதாசன் அதில் சமத்துவத்துக்கும் , சாஸ்திரங்களுக்கும் , சித்தாந்தங்களுக்கும் இடையே மிக கூர்மையாக ஒரு கம்பேரிடிவ் கட் கொடுத்திருப்பார்.

இப்போதும் அந்த படத்தை யாரேனும் ரீமேக் செய்தாலும் , அந்த பாடலை மட்டும் கண்டிப்பாக ப்ளாக் அண்ட் ஓய்டில் வைக்கும்படி எண்ணம் வருமாறு , அதை ஒளிப்பதிவில் விதவிதமான ஜாலங்கள் செய்ய சொல்லி எடுத்திருப்பார் பாலசந்தர்.

சந்தோசம் வந்தாலும் சரி துக்கம் வந்தாலும் சரி , இந்த பாடல் இரண்டுக்கும் ஆறுதல்படுத்தும். அப்படி ஒவ்வொன்றும் வைரவரிகள். ஆணவத்தை அழிக்க ஒரு வரி ; இவ்வளவுதான் வாழ்க்கை என்று இன்னொரு வரி என்று சமன்பாடு உள்ள பாடல் இது. எம்.எஸ்.வீ இசை கண்ணை கலங்க வைத்தால் , ஜேசுதாசின் குரல் மனதை கரைய வைக்கும்.
சில வருடங்களாக இந்த பாடலை கேட்டால் ஜெய்கணேஷ் கண்ணுக்குள் வருவார். இப்போது சுஜாதாவும்.

'ஆதி வீடு;அந்தம் காடு ;இதில் நான் என்ன ? அடியே நீ என்ன ஞானப்பெண்ணே ?
வாழ்வின் பொருள் என்ன ..? நீ வந்த கதை என்ன?'

-------------------------------------------------------------------------------------------------
கடைசி கார்ன்:

மின்வெட்டு பத்தி புகார் சொல்லிட்டே இருக்கோமே...? நாம எப்பவாவது மின்சாரத்தை சரியான முறைல பயன்படுத்திருக்கோமா?
ஆபிஸ் போக வீட்ட பூட்டும்போது பிரிட்ஜ்  தவிர எல்லா மின்சாதனத்தையும் ஆப் பண்ணுங்க..

தூங்கும்போது டிவி ஸ்க்ரீன் மட்டும் ரெம்ப சுலபமா ரிமோட் மூலமா  ஆப் பண்ணாம பவர் ஆப் பண்ணுங்க..

முடிஞ்சவரைக்கும் தூங்க போகும்போது  செல்போன் , லேப்டாப் சார்ஜ் பண்ணாதீங்க.. அப்படி பண்ணுனா ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு ஆப் பண்ணுங்க.


இது எல்லாம் பண்ணலேன்னா தேசகுற்றம் ஒன்னும்  கெடையாது.. ஆனா பண்ணுனா ஒரு நல்ல   குடிமகனா இருக்கிற திருப்தி கிடைக்கும். அப்புறம் நீங்க அரசாங்கத்தை எப்படி வேணும்னாலும் விமர்சனம் பண்ணலாம்.அதுக்கு உங்களுக்கு தகுதி இருக்கு..

-----------------------------------------------------------------------------------------

3 comments:

"என் ராஜபாட்டை"- ராஜா said...

All are sweet

இராஜராஜேஸ்வரி said...

'எனக்கு ஆயிரம் பிரச்சனைகள்.எல்லாவற்றிற்கும் காரணம் என் மனைவி' - இதுதான் பொய்.
பட விமர்சனம் அருமை.
மற்ற பாப்கார்ன்களும் சுவையுடன் இருந்தன. பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

அபிமன்யு said...

மிக்க நன்றி ...

Post a Comment