Monday, January 31, 2011

கண்டனக்குரல்

கடலன்னையின் அன்பளிப்புகளை யாரும் வெறுமனே சென்று கவர்ந்து வருவதில்லை . உயிரை ஒரு கையிலும் துடுப்பை மறு கையிலும் பிடித்துக்கொண்டு  மீன்பிடிக்க செல்லும்போது எந்த ஒரு மீனவனும் ஒருமுறையாவது  கரையை திரும்பிப்பார்க்காமல் கடல் புகுவதில்லை. மீனவ வீடுகளில்  மனைவிமார்கள் தங்கள் தாலியும் வலையும் சேர்ந்தே பின்னப்பட்டுள்ளது என்பதை ஒவ்வொரு  வினாடியும் சிந்திக்காமல் இருப்பதில்லை.

எல்லா வேலைகளிலும் ஆபத்து உண்டு. ஆனால் கடல் சார்ந்த வேலையில் ஆபத்து மட்டுமே உண்டு. இயற்கை  எப்படி சீறினாலும் முதல் பலி , மீனவ சமுதாயத்தில் இருந்தே என்பது நிதர்சனம். ஒரு புயலோ மழையோ அல்லது சுனாமியோ அவர்கள் உயிரை கொள்ளை கொண்டு போகும்போது ,நாம் வருத்தமும் கண்ணீரும் சிந்தி நம் உச்சக்கட்ட வேதனையை காட்டுவோம். அதுவே நம்மால் இயன்றது. The Maximum we can do.

ஆனால் இது வேறு விஷயம் . ஒரு அநியாயம் பலமுறை அரங்கேறுகிறது . ஒருமுறை கூட யாரும் (உண்மையாக) எதிர்க்குரல் கொடுக்க வில்லை.  அங்கே இருந்து வரும் ஒவ்வொரு உடலும் இங்கு புதைக்கப்படும்போது கூடவே நம் தன்மானமும் , சகோதரப்பற்றும் சேர்ந்தே புதைக்கப்படுகிறது. 

சிங்களம் சீறி அடிப்பதில்லை ; சிரித்துக்கொண்டே அடிக்கிறது ; எதிர்ப்பு எதுவும் இல்லையென்பதால் , எதிர்ப்படும் அப்பாவி மீனவனுக்கு துப்பாக்கி குண்டுகளை அள்ளித் தெறிக்கிறது.கை அளவு இருக்கும் இலங்கைப்படைக்கு  தன் கடல் பகுதியை பாதுகாக்க மட்டுமன்றி இப்படி அட்டுழியம் செய்யவும் பலம் இருக்கும் என்றால் எண்ணிக்கை மிகுந்த இந்தியப்படைக்கு  என்ன இல்லை எதிர்க்க ?. இப்படி ஆரம்பித்தால் பல கேள்விகள் முளைக்கும் ; ஆனால் பதில் என்று கிடைக்கும்?

 சரி.. மத்திய அரசு   என்ன செய்தது ; மாநில அரசு என்ன செய்தது என்று கேட்பதை நிறுத்தி நாம் என்ன செய்யலாம் என்பதை மட்டும் சிந்திக்கலாம். முதல் கட்டமாக நம் தமிழக மீனவர்களை கொன்று குவிக்கும் சிங்கள அரசை எதிர்த்தும், தமிழ் நாட்டு மீனவர்களை காக்கவும், அரசிடம் நடவடிக்கை எடுக்கக் கோரியும், இந்த கையெழுத்து மடலில் உங்கள் கையெழுத்தை இட இங்கே சொடுக்கவும்.

இது காந்திய வழி. நம்மால் ஆன முதல் எளிய நடவடிக்கை. அடுத்த போராட்டங்களுக்கு பிறகு இணைந்து  கை கொடுப்போம். அதுவரை எங்கள் மீனவ உயிர்களை கடவுளோ இயற்கையோ காப்பாற்றட்டும்.

No comments:

Post a Comment