Friday, January 21, 2011

நான் யாருன்னா,,,

டிஸ்கி:
முதல் தடவை உங்களுடன் அறிமுகம் ஆவதற்கு இந்த சுய தம்பட்டம் தவிர்க்க முடியாதது .. மன்னிக்க!


பள்ளி நாட்கள் :
மிகுந்த தமிழ் ஆர்வம் .எப்பவும் 95க்கு  மேல்தான்  தமிழில் மதிப்பெண். வருடந்தோறும் கவிதை , பேச்சு போட்டியில் உள்ளூர் , வெளியூர் கோவை மாவட்டம் பக்கம் நிறைய முதல் பரிசுகள். இரண்டாம் பரிசு கொடுத்தால் வாங்கச்  செல்லாமல் ஒதுக்கும் ஆணவம் ,அகம்பாவம் . சொல்லிகொள்ளும் அளவுக்கு நாடக அனுபவம் .

கல்லூரி  நாட்கள் : 2001  திண்டுக்கல் கல்லூரிகளுக்கு இடையே முதல் பரிசு - கவிதை .  2003 மாநில அளவில் கவிதை முதல் பரிசு : வைரமுத்துவிடம் இருந்து.2004 மாநில அளவில் கவிதை முதல் பரிசு : பேராசிரியர் கு. ஞானசம்பந்தனிடமிருந்து.

அகிலன் , சாண்டில்யன்,கல்கி,கண்ணதாசன்  தொடங்கி சுஜாதா , மதன் ,ஞானி, ரா.கி.ர  என புத்தகங்கள் நிறைய படித்த/படிக்கிற அனுபவம் . இவை எல்லாம் இருந்தும் கணினித்துறையில் வேலை கிடைத்ததும் கடிவாளம் போடப்பட்டதை உணர்ந்து ஒதுங்கினேன். பதிவுலகம்  பற்றி அறிந்தும் அறியாதது போல் விலகினேன் . என்னை பதிவெழுத அன்பு தொல்லை கொடுத்த நண்பர்களுக்கு எல்லாம் நான் சொன்ன பதில் : ' எத்தனையோ பதிவர்கள் நடுவுல நானும் பத்தோட பதினொன்னா இருக்க விரும்பல; நான் தனி.. ' . திரும்பவும் ஆணவமான/அபத்தமான  பேச்சு .

ஆனால் உண்மை என்னவோ முற்றும் மாறுதல் :

 • என் கவிதைகளை தொகுப்பாக வெளியிடும்   பேராசையான எண்ணம் இருந்தது/இருக்கிறது . எங்கே வலையில்  விட்டால் உரிமை போய் விடுமோ என்னும் ஒரு காரணம்.
 • எல்லாரும் கோலோச்சும் பதிவுலகத்தில் இனி மேல் நான் சென்று என்னை நிலைபடுத்தி , பேர் வாங்குவது .. இப்போதான் வாழ்க்கைல போராடி ஒரு நிதானத்துக்கு வந்துருக்கேன் .. அதுக்குள்ள இன்னோனா ? அட போங்கடா ? என்னும் ஒரு சலிப்பு.
 • 'நம்ம எதாவது எழுதி அத நாலு பேரு நிராகரிச்சுட்டா ; அவமானபடுத்திட்டா?  ' என்னும் ஒரு பயம் .
 • 'தமிழுல டைப் செய்ய நேரமும் பொறுமையும் இல்லையே ' என்னும் ( ஓரளவுக்கு உண்மையான ) சாக்கு .
 • 'நமக்கு அந்த அளவுக்கு சரக்கு இருக்கா ?'  என்னும் சந்தேகம்.
 • 'வலையுலகம் இரு பிரிவு . ஒன்று நல்லா திறம்பட எழுதும் பதிவர்களுடயது . மற்றது தங்களை மட்டுமே உயர்வு என்று   நினைத்து தங்கள் கருத்துகளை திணித்து மற்றவர்களை புண்படுத்தும் வலையுலக குப்பைகளுடயது .. இதில் என்னை எதில் சேர்பார்களோ ??' என்னும் ஐயம்.
இப்படி நினைத்து , மற்றவர்களின் பதிவுகளை மட்டும் படித்து வந்தவன் கண்களில் போன வாரம் சில பதிவர்களின்(?!!?) வலைப்பக்கம் கண்ணில் பட்டது.. யாரை பற்றியும் அக்கறை இல்லாமல் , மற்றவர்கள் நினைப்பதை பொருட்படுத்தாமல் தங்களுக்கு தோன்றியதை எழுதி இருந்த களங்கள் அது.  சரக்கும் இல்லை , சொல்வதில் சுவையும் இல்லை ; அங்கு இருந்தவை வெறும் வார்த்தைகளின் கோர்வைகளும் , வரட்டுதன்மையுமான எண்ணங்கள் மட்டுமே.

ஆக நான் தூங்கி கொண்டே எழுதினாலும் இந்த அளவுக்கு கேவலமாக எழுத முடியாது என்ற நம்பிக்கை துளிர்த்தது ; விளைவு உங்களுக்கு இந்த துன்பகரமான செய்தி : நானும் பதிவு எழுத தொடங்கி விட்டேன் . ( என்னோட பக்கத்த பார்த்து இனி எவ்ளோ பேரு இதே காரணத்தோட எழுத தொடங்குவானுகளோ ? ! அதுக்கு நான் பொறுப்பில்லை. )

செய்ய போகும் சில குற்றங்களுக்கான முன்ஜாமின்கள் :
 • எனக்கு இலக்கணம் சரியாக வராது . ஒற்று பிழை அதிகம் இருக்கும்; பொறுத்துக்கோங்க
 • எழுத்துப்பிழை இருந்தால் மொழி பெயர்க்கும் பட்டை 90 சதவீதமும்  நான் 10  சதவீதமும் பொறுப்பு.(இப்போதான் தமிழ்ல டைப் பண்ண பழகிருக்கேன்.. ஷப்ப்ப்பா முடியல ..)
 • நான் சீரியசான விசயத்த எப்போவாவதுதான் தொடுவேன் . சும்மா 'அங்க அப்படி கொடுமை நடக்குது' , 'இங்க இப்படி அநியாயம் நடக்குது' நீ ஏன் இத பத்தி எழுதலன்னு கேக்காதீங்க .. எனக்கு எப்போ அத பத்தி எல்லாம் அலசி ஆராய்ஞ்சு தீர்ப்பு வழங்க பக்குவம் வருதோ அப்போ எழுதுவேன் .. ( அது எல்லாம் வராதுங்க.. தைரியமா இருங்க.. )
 • கூடிய வரைக்கும் தமிழ்ல எழுதுவேன் .. இல்லேன்னா தங்க்லீஷ்தான் .. அட்ஜஸ்ட் கரோ ..
 • என்னைக்காவது எதாவது தப்பா எழுதுனா எனக்கு தப்புன்னு பட்டாதான் மன்னிப்பு , மரக்கட்டை எல்லாம் .. சும்மா சும்மா 'நீ செய்தது குற்றம் குற்றமே'னு சொல்லிக்கிட்டு இருந்தா எனக்கு காது கேக்காது .
 • முக்கியமான ஒன்னு : யாரும் உங்களுக்கு புடிச்ச பதிவர் / பதிவு யாருன்னு கேக்காதீங்க .. ஏற்கனவே நான் ஒருத்தர் ரெண்டு பேர சொல்லி அத படிச்சுட்டு எதோ நான் எழுதுன மாதிரி என்னை திட்டுன  அனுபவம் இருக்கு.. ஆக இந்த கேள்விக்கு தடா ..

சரி மக்களே , எதோ பெரிய அறிஞர் எழுத வந்துட்டாருன்னு நெனச்சாலும் சரி ; புதுசா ஒரு லூசு வந்துருக்குனு நெனச்சாலும் சரி    - வந்துட்டேன் ..இனி நீங்களும் நானும் ஒன்னும் பண்ண முடியாது .. பதிவ படிச்சிட்டு திட்டுனாலும் சரி  நேர்ல  வந்து தட்டுனாலும்  சரி என்னோட பாலிசி ' கொள்வோர் கொள்க ; குரைப்போர் குரைக்க ; உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது'ங்கறது தான்.

வந்தாரை வாழ வைக்கும் வலையுலகத்துக்கும்  , வந்து என் வலைல  சிக்க போற வாசகர்களுக்கும் வந்தணம்..

1 comment:

Anonymous said...

super ji.. Atlast you accepted our long year's request.. welcome and we expect your brandmark style (as ur first blog ) to experience a happy reading.. anbudan - kavi kumar

Post a Comment