Thursday, June 23, 2011

பாப்கார்ன் பாக்கெட்- 20110623



ஏற்கனவே சொன்னதுதான்..இன்னொரு தடவை ஞாபகப்படுத்தரதுல தப்பு இல்ல.. மறக்காம ஜூன் 26-ம் தேதி மெரினாவுக்கு வந்துடுங்க..தமிழீழப் படுகொலைகளுக்கு எதிராக அமைதியாக , ஆர்ப்பாட்டம் இல்லாமல் மெழுகுத்திரி ஏந்தி நம் வேதனையை தெரியப்படுத்துவது ஒவ்வொரு தமிழனின் கடமை.

ராமேஸ்வரத்தில் போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் மீனவர்களுக்கும் இது ஆதரவளிக்ககூடிய விஷயமா இருக்கும். முப்பது வருஷம் இல்லாம இப்போ மெல்ல மெல்ல இலங்கை தமிழர்கள் பிரச்சனையில் ஒரு விழிப்பு அதிகமாய்ட்டு வர்றது சந்தோசமா இருக்கு.தெரியாதவங்களுக்கு பணிவா எடுத்து சொல்லி கூட்டிட்டு வாங்க..நிகழ்ச்சி விபரம் இங்க ...
----------------------------------

சமச்சீர் கல்வி , பள்ளிக்கட்டணம் தொடர்பான போராட்டங்கள் பெற்றோரை பணரீதியாக பாதிப்பதை விட குழந்தைகளை மனரீதியாக பாதிக்கும் வாய்ப்பு அதிகம். பள்ளி நிர்வாகத்துடன் சண்டை போட்டுக்கொண்டிருக்கும் நண்பரிடம் அவர் பையன்
 ' அப்பா .. என் பிரெண்டுக்கு புது நோட் ,புக்ஸ் எல்லாம் கொடுத்துடாங்கப்பா.. அவங்கப்பா எல்லாத்துக்கும் கவர் போட்டுட்டு இருக்காரு.எனக்கு எப்போப்பா ஸ்கூல் ? 'னு கேட்க   இவர் என்ன சொல்வது என்று தெரியாமல் விழித்திருக்கிறார். கொடுமை.



அதை விட கொடுமை , சொன்ன பணத்தை கட்டியவர்களின் குழந்தைகளுக்கு தனியாக பாடம் நடத்தும் பள்ளிகளின் செயல்.. இது குழந்தைகள் நடுவே பெரிய தாழ்வுமனப்பான்மையை
வளர்க்கும். படிப்பை கெடுக்கும். இந்த வயதில் , பிரச்சனை முழுதாக  புரியாமல் பெற்றோர் மீது கோபப்பட வைக்கும்.

இதற்கு தீர்வு காண்பதுதான் அரசின் முதல் பணி.. பிற பின்னரே..
-------------------------------------------------

ஆரண்ய காண்டம் குழுவுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள். எஸ்.பி.பி. சரண் இந்த படத்துக்காக தன் தந்தையின் ரெக்கார்டிங் தியேட்டரை விற்று , கஷ்டப்பட்டு
வெளியிட்ட உண்மை பலபேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. வணிக ரீதியில் எந்த பலனும் இந்த படம் கொடுக்கலைனாலும் , அத தெரிஞ்சே படத்தை தயாரிச்ச
சரணுக்கு இயக்குனர் மட்டும் அல்ல , படத்தை பார்த்த எல்லாரும் கடமைப்பட்டிருக்கிறோம்.



சம்பத் படத்துக்கு படம் நடிப்பில செஞ்சுரி அடிக்கிறாரு. நல்ல பாத்திரதேர்வு செய்து நடித்தால் இன்னொரு பிரகாஷ்ராஜ் ஆக வாய்ப்பு இருக்கு. பசுபதி மாதிரி ஆகாம பாத்துகோங்க.
ஜமீன் சோமசுந்தரம் பாத்திரம் போல கிராமத்துக்கு ஒருத்தர் கண்டிப்பா இருப்பாங்க.

சென்சார் வெட்டுக்கு ஒரு மணி நேர படத்துக்கான ரீலை பலி கொடுத்தும் , படம் பாக்கறவங்கள அசர வைக்குதுனா , முழு சபாஷும் எடிட்டர்கள் ஸ்ரீகாந்த் , ப்ரவீனுக்குதான்.

காலை தொடங்கி மாலை முடியும் சம்பவங்களின் கோர்வையை , கோர்வை இல்லாமல் சொல்லி ,சினிமா வெறும் கதைசொல்லி ஊடகம் கிடையாதுன்னு
மறுபடியும் இன்னொரு தடவை நிரூபித்திருக்கிறார் இயக்குனர். பாராட்டுக்கள் தியாகராஜன் குமாரராஜா.

எல்லா முந்தய தலைமுறை நல்ல இயக்குனர்களும் ரிட்டைர் ஆகி இவங்களுக்கு வழிவிட்டது வீணா போகாதுன்னு இதுபோல புது இயக்குனர்கள் தங்கள் படத்தின் மூலமா உணர்த்தறாங்க...

நிமிர்ந்து நிக்குது எங்கள் தமிழ் சினிமா... பெருமையா இருக்கு..

-------------------------------------------------
தனியார் பேருந்துகள் பற்றிய விழிப்புணர்வு பதிவை நிறைய பேருக்கு எடுத்த சென்ற சக பதிவர்கள்,வாசகர்களுக்கு என் நன்றிகள்..எதிர்பார்த்தபடியே பாதிக்கப்பட்ட பல பேர் தங்கள் பேஸ்புக் சுவற்றில் பகிர்ந்திருந்தனர். பல பேர் தங்கள் அலுவலகத்தில் வேலை செய்யும் சக ஊழியர்களுடன் பகிர்ந்ததாக கூறியிருந்தனர். மிக்க நன்றி..

இப்போது பதிவை சுலபமாக பகிர உதவியாக இடப்பக்கம் பேஸ்புக், ட்விட்டர், கூகிள் Buzz போன்றவற்றின் கருவிப்பட்டையை இணைத்துள்ளேன். பகிர்வது வெகு சுலபம்.இதை அறிவுறுத்திய சித்தா 
ட்ரீம்ஸ்-க்கு தனி நன்றி..  
-------------------------------------------------------

கர்நாடகாவுல இனி யாரும் கோர்ட்டுக்கு போக வேணாம்... ஒருத்தன் பொய் சொல்றானா இல்லையான்னு கண்டுபிடிக்க  போலீசோ , நீதிமன்றமோ இனி தேவை இல்லப்பா..முதலமைச்சர் ஊழல் செய்யறாருன்னு எதிர்க்கட்சி தலைவர் சொல்ல ,அதுக்கு கோபப்பட்ட எடியூரப்பா உடனே ஒரு சிறப்பு நீதிமன்றம் ,சிறப்பு நீதிமுறை ரெண்டையும் சொல்லியிருக்காரு. அதுக்கு உடனே தலையாட்டுன குமாரசாமி அதை ஏத்துகிட்டாரு.

சிறப்பு நிதிமன்றம் : தர்மஸ்தலா கோவில்
நீதிபதி : ஜஸ்டிஸ் மஞ்சுநாதா
நீதிமுறை : சத்தியம் செய்வது

என்ன ஒரு எளிமையான , ஆனா பவர்ஃபுல்லான வழிமுறை ?!! விசாரணை கமிஷன் கிடையாது. ..வாய்தா கிடையாது. வக்கீல் செலவு  கிடையாது. ஜாமீன் கிடையாது..தப்பு உறுதியானதும் உடனே உம்மாச்சியை அனுப்பி சாமி கண்ண குத்திடும்..




இவங்க மக்களை பத்தி என்ன நெனச்சுட்டு இருக்காங்க ? மக்களை விடுங்க .சாமிய பத்தி என்ன நெனச்சுட்டு இருக்காங்க ? 'நாம ரெண்டு பேரும் செத்து செத்து விளையாடுவோமா?'னு முத்துகாளை வடிவேல்கிட்ட கேக்குற மாதிரி சத்தியம் செஞ்சு சத்தியம் செஞ்சு விளையாட போறாங்களாம். உங்க மதவாத அரசியல கடவுள வெச்சு பண்ணிட்டு இருந்தீங்க.. இப்போ கடவுள்கிட்டயே பண்றீங்களேப்பா ...

நல்ல ஐடியா ராஜாக்களா.. அப்படியே ஒரு போன்ன போட்டு இத தமிழ்நாட்டுக்கு சொன்னீங்கனா , இருக்குற மிச்ச மீதி வழக்குகளையும் எங்க அம்மா ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கமிஷன்கிட்டயோ ,மேல்மலையனூர் செசன்ஸ் கோர்ட் மாஜிஸ்ட்ரேட் அங்காள பரமேஸ்வரிகிட்டயோ சத்தியம் பண்ணி வெளிய வந்துடுவாங்க..

நல்லவேளை தாத்தா நாத்திகவாதி..இல்லைனா கனிமொழிகிட்ட 'எங்க குடும்பத்துக்கு சிவாஜிதான் பழக்கம்.. 2ஜியோ 3ஜியோ அவங்க யாருனே எனக்கு தெரியாது'னு சத்தியம் பண்ண சொல்லிடுவாரு..

பாவம் ஓட்டு போட்ட ஜனங்க
-------------------------------------------------

என்னைக்காவது சோர்ந்து போனா இந்த பாட்ட ஒரு தடவை கேட்டா போதும்.. தன்னம்பிக்கை வளர்க்க கடினமான , புரிஞ்சிக்க கஷ்டமான புத்தகங்களோ , மணிக்கணக்கான பேச்சோ தேவை இல்லை .. மூணே மூணு நிமிஷம் போதும்..




உத்வேகமும் உற்சாகமும் உபயம் - கண்ணதாசன்.

-------------------------------------------------

1 comment:

உலக சினிமா ரசிகன் said...

பாப்கார்ன் பாக்கெட் சூடா இருக்கு.

Post a Comment