Thursday, July 7, 2011

மனமிருந்தால் மார்க்கம்..

நீங்கள் நாத்திகரா ? ஆன்மீகவாதியா  ?  நடுநிலையானவரா ? எதிலும் சரியாக புரிதல் இல்லாமல்  இருக்கும் மிடில் கிளாஸ் மனிதரா?

 உங்கள் சித்தாந்தம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. அதை அடைய மிக எளிய வழி ஒன்று உண்டு. கடின உழைப்பிற்கு எப்படி மாற்று/குறுக்கு வழி இல்லையோ அதேபோல இதற்கும் எந்த குறுக்கு வழியும் அல்ல..

உங்கள் இலக்கு  சொர்க்கமோ , அல்ல புகழோ , நல்ல நட்பு வட்டாரமோ  எதுவாக வேண்டுமானாலும் சரி..அதை அடைய  நல்ல, மிக இனிமையான வழி ஒன்று உள்ளது . அதற்கு தமிழ் வைத்த பெயர் - உதவி.
தன்னலமல்லாதவர்கள் வைத்த பேர் சேவை.

அதை செய்தால் நீங்கள் மதிக்கப்பெறுகிறீர்கள்; போற்றப்படுகிறீர்கள் ; காலம் தாண்டியும் நினைவில் வைக்கப்படுகிறீர்கள்; சில சமயம் சிலருக்கு கடவுளாக காட்சி அளிக்கிறீர்கள்.
 எந்த வகையில் உதவி செய்தாலும் அந்த உதவியின் பயனுக்கு முடிவுகாலம் - Expiry Date ஒன்று உண்டு.

பண உதவியா ? கடைசி தாள்  தீர்ந்ததும் மீண்டும் தேவைப்படும்.
உணவு கொடுத்து  ஆதரித்த மனிதரின் உதவி மகத்துவம் , அடுத்த பசி வந்ததும் முடிந்து விடுகிறது.

ஆனால் அடுத்தவருக்கு  அறிவைக் கொடுத்து  உதவினால் அந்த உதவிக்கு அழிவில்லை.

'பசித்தவனுக்கு உண்ண மீனைக்  கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடு '  என்ற ஜப்பானிய பழமொழியின் சாரம்சம் இதுதான்.

இதை கடைபிடிப்பதில் இப்போது முன்னுக்கு இருப்பவர்கள் முன்னாள் மாணவர்கள் ...

பள்ளிகட்டணம் பிரச்சனை ஒரு பக்கம் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும்போது , இன்னொரு பக்கம் சத்தமே இல்லாமல் ஒரு பசுமைப்புரட்சி செய்து வருகிறார்கள் நம் முன்னாள் மாணவர்கள்.
என் சக நண்பர்கள் ஒன்று கூடி அவர்கள் வசதிக்கு ஏற்ப ஒவ்வொரு குழந்தையின் படிப்புக்கு உதவுகிறார்கள். ஒருவரோ ,அல்லது இருவரோ   சேர்ந்து ஒரு குழந்தையை தத்து எடுத்து  அந்த வருடத்திற்கான படிப்புக்கு தேவையான புத்தகங்கள் , சீருடை
பள்ளிக்கட்டணம் மற்றும் வேறு என்ன தேவையோ அதை  கொடுத்து உதவுகிறார்கள்.இதில் விசேசம் என்னவென்றால் இவர்கள் எந்த ஒரு அமைப்பும் சாராது , ஒன்றாக படித்த மாணவர்கள்,நம்ப தகுந்த நண்பர்கள் வட்டமாக மட்டும் கொண்டு  உதவி செய்கிறார்கள்.

விசாரித்து பார்த்ததில் என் நண்பன் சொன்னது காரணம் மிகுந்ததாக இருந்தது - 'எந்த ஒரு அமைப்பிற்கோ பணம் கட்டி அது குழந்தைகளுக்கு சரியாக போய் சேருகிறதா இல்லையா எனத்தெரியாமல் இருப்பதை விட , நாமே நம் நண்பர்களுடன் சேர்ந்து செய்தால் நம் கண்காணிப்பு அதிகமாகிறது..
தவிர எந்த குழந்தையை தத்து எடுக்கிறோமோ அதை அவ்வப்போது சென்று பார்த்து வர அருகில் இருந்தால்    எளிதாக உள்ளது.
அதனால்தான் கூடியவரை நண்பர்களின் சொந்த ஊர்களில்  குழந்தைகளை தத்து எடுக்க சொல்கிறோம்  '.


உண்மை. அதை விட முக்கியம் நம் உதவி பெறும் குழந்தையோடு ஆதரவாக பேசி அதன் படிப்பு அட்டையை பார்த்தலும், நலம் விசாரிப்பதிலும் இருக்கும் திருப்தி , வெறுமனே 'ஏதோ புண்ணியம் கிடைக்கும்' என்று பணம் மட்டும் கட்டி விட்டு ஒதுங்கினால் கிடைக்காது.

இதை சரியாக விளக்க வேண்டுமானால் ,
கடவுளுக்கு தோட்டத்தில் சென்று பூப்பறித்து ,  அதை மாலையாக கட்டி சென்று சார்த்துவதிலும் , கோவில் முன் பூக்காரியிடம்  உடனே  வாங்கி , அர்ச்சகர் முன் நீட்டி வேண்டுவதிலும் இருக்கும் திருப்தியே சான்று.

உதவி செய்வது என்று முடிவெடுத்து விட்டால் அதை முழுதாக செய்யுங்கள் . அதைத்தான் இந்த முன்னாள் மாணவர்கள் செய்கிறார்கள்.
இங்கு சொல்லியிருப்பது ஒரு குழுவினரைப் பற்றிதான். தமிழகத்தில் எத்தனையோ பேர் இப்படி படிப்பிற்கு உதவி செய்து வருகிறார்கள்.

இவர்கள் உதவி இப்படியிருக்க , இன்னொரு வகையில் உதவுகிறார்கள் வேறு மாணவர்கள்.

உதாரணம் இந்த இணையத்தளம்  - http://www.a2zinterviews.com/

முன்பெல்லாம் படிப்பதற்கோ அல்ல நேர்காணலுக்கோ , நிறைய புத்தகங்களை அடுக்கி வைத்து படிக்க வேண்டும்.. இப்போதோ எல்லாமே இணையத்தில் இருந்தாலும் , எல்லாவற்றையும் சேகரித்து படிப்பது 
பிரம்மப்ப்ராயத்தனமாக   இருக்கும்..

இந்த இடத்தில்தான் மேல் சொன்ன இணையத்தளம் உதவிக்கு வருகிறது.கணினி,மென்பொருள் , முக்கிய கணினிமொழிகள்  சார்ந்த கேள்வி பதில்கள் அனைத்தும் தேடி எடுத்து அடுக்கி வரிசைப்படுத்தி மாணவர்களுக்கு இன்ஸ்டன்ட் காஃபி  போல் கொடுத்திருக்கிறார்கள்.

அது  மட்டும் அல்லாது  நேர்காணலில் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் , Aptitude Test  எனப்படும் சூட்சும அறிவை திறனாய்வு செய்யும் கேள்வி பதில்கள் , கூடுதலாக Datawarehousing எனப்படும் கணித்துறையில் முக்கிய உள்துறை பற்றிய விளக்கங்களை சுருக்கமாக , எளிதாக புரியுமாறு கொடுத்திருக்கிறார்கள்.

பொது அறிவு கேள்விகளும் ,புதிர்களும்  உண்டு.

எந்த ஒரு பயனும் , எதிர்பார்ப்பும் அல்லாமல் இவர்கள் செய்யும் இந்த உதவி மகத்தானது.
மாணவர்களுக்கு மிக மிக உதவும் இது போன்ற தளங்கள் எத்தனையோ இருக்கின்றன.
ஒவ்வொன்றுக்கு பின்னாலும் சுயநலமில்லாத சில  நல்லவர்களின் உழைப்பு இருக்கிறது.

'நான் படித்தபோது எனக்கு கிடைக்காத உதவி என் தம்பி  தங்கைக்கு கிடைக்கட்டும். அது பொருளாதார ரீதியாய் இருந்தாலும் சரி, கல்வி சம்பந்தப்பட்டதானாலும் சரி
என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்'  என்ற எண்ணம் மிகுந்தவர்கள்,  மாணவர்களுக்கு கொடுக்கும்  பரிசு அது.

இதில்  கவனிக்க வேண்டிய விஷயம் ,
இவர்கள் அனைவரும் தங்கள் கடின வேலை நேரத்தில் இருந்து   கிடைக்கும் ஒய்வு நேரங்களை தியாகம் செய்து இதை செய்கிறார்கள்..

ஹ்ம்ம்..முன்பெல்லாம் உதவிக்கு யாரும் அவ்வளவாக கிடையாது.. இப்போது எல்லா வகையிலும் உதவி கொட்டி கிடக்கிறது... அதை பயன்படுத்துவதை தீர்மானிக்க மாணவர்கள் முன்வருவார்களா என்பதுதான் கேள்விகுறி..

அடுத்த முறை ஒரு குழந்தையை தத்து எடுத்து  படிப்புக்கு உதவுவதை செய்யலாம்.

அதற்கு அச்சாரமாக  இந்த விவரங்களை பகிர்வதிலிருந்து நம் உதவியை ஆரம்பிப்போம்.

உதவும் மக்களுக்கு நன்றிகளும்.. உதவி தேவைபடுவோர்க்கு பயன்களும் சென்றடையட்டும்..

7 comments:

Niroo said...

vadai

Niroo said...

me the first

இராஜராஜேஸ்வரி said...

எந்த ஒரு பயனும் , எதிர்பார்ப்பும் அல்லாமல் இவர்கள் செய்யும் இந்த உதவி மகத்தானது//

பாராட்டுக்களும் வாழ்த்துகளும்.

எஸ்.பி.ஜெ.கேதரன் said...

நல்லொரு விடயம்.குறித்த உதவி வழங்கும் அவர்களுக்கும்,பகிர்ந்துகொண்ட உங்களுக்கும் நன்றிகள்.
சமூகத்தில் அனைவரும் தம்மால் இயன்றவாறு உதவி புரிந்து,வருங்கால சந்ததியேனும் 100% படித்த சந்ததியாக்க முன்வரவேண்டும்.
மிக முக்கியம்- மாணவர்களும் கல்வியின் முக்கியத்துவத்தையும்,பண்பாட்டையும்,உணர்ந்துகொண்டு தமக்கு கிடைக்கின்ற உதவிகளை முழுமையாகப் பயன்படுத்தி,நல்ல நிலைக்கு வந்து, தமக்கு அடுத்துவரும் சந்ததிக்கு தாமும் உதவ வேண்டும்.

எஸ்.பி.ஜெ.கேதரன் said...

குறிப்பு: comments ஐ எதிர் அம்புகள் என்று ஏன் குறிப்பிட்டிருக்கிறீர்கள்?பதியப்படும் அனைத்துக் கருத்துக்களும் உங்கள் கருத்தை எதிர்த்தா பதியப்படுகின்றன?

அபிமன்யு said...

ஹ்ஹஹா.. பெரும்பாலும் எதிர்வாதம்தான் வரும் நண்பரே.. அதனால்தான் அப்படி வைத்திருக்கிறேன்..

N.H.பிரசாத் said...

நல்லது யார் பண்ணாலும் சந்தோஷம் தான். அந்த மாணவர்களின் உதவும் மனப்பான்மைக்கு என் சல்யுட்.

Post a Comment