Thursday, April 21, 2011

தேவையா புதிய கல்லூரிகள் ?

/* செய்தி : பொ‌றி‌யிய‌ல், பா‌லிடெ‌‌க்‌‌னி‌‌க், மேலா‌ண்மை க‌ல்லூ‌ரிக‌ள் தொட‌ங்க 83 பே‌ர் ‌வி‌ண்ண‌ப்ப‌ம் செ‌ய்து‌ள்ளதாக அ‌ண்ணா ப‌ல்கலை‌க்கழக துணைவே‌ந்தன‌ர் ம‌ன்ன‌ர் ஜவஹ‌ர் கூ‌றினா‌ர்.83 ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்க‌ள் ‌மீது ப‌ரி‌சீலனை முடி‌ந்து‌ள்ளதாக கூ‌றிய ம‌ன்ன‌ர் ஜவஹ‌ர், 16 க‌ல்லூ‌ரிக‌ள் ம‌ட்டுமே முறையாக அனும‌தியுட‌ன் க‌ட்டிட‌ங்க‌ள் க‌ட்டியுள்ளன எ‌‌ன்றா‌ர்.
எ‌‌ஞ்‌சிய க‌ல்லூ‌ரிகளு‌ம் அனும‌தி பெ‌ற அ‌றிவுறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளதாக ம‌ன்னவ‌ர் ஜவஹ‌ர் கூ‌றினா‌ர். */





பத்து வருடங்கள் முன்னால்  ஹாஸ்டலில் அஹிம்சை முறையில் ராகிங் செய்து கொண்டிருந்தோம். எங்களுக்கு அடுத்த செட் அப்போதுதான் கல்லூரி சேர்ந்திருந்தனர்.டிபார்ட்மெண்ட் வாரியாக பிரித்து  இரண்டு பொடியன்களில் ஒருவனிடம் நான் கேட்டுகொண்டிருந்தேன்.

'எந்த ஊருடா?'

'மதுரைண்ணே'

'எந்த டிபார்ட்மெண்டு?'

'ஐ டி-ண்ணே'

'எதுக்கு ஐ டி சேர்ந்த? '

'எனக்கு ஐ டி படிக்கணும்னு ரெம்ப ஆசைண்ணே' என ஆரம்பிக்க நான் விடாமல் ஏறுக்குமாறாக கேள்வி கேட்க  கடைசியில் பாதி அழாத குறையாக 'தெரியாம ஐ டி சேர்ந்துட்டேன்ணே ..என்ன விட்டுருங்க ' என ஓடி போனான்.

சிரித்து கொண்டே அருகிலுருந்த என் நண்பன் அடுத்த பொடியனிடம் ஆரம்பிக்க அவன் தடாலடியாக 
'ஐ டி படிக்கணும்னு எல்லாம் எனக்கு ஆசை இல்லேண்ணே.. எங்க ஊரு ஆர்ட்ஸ் காலேஜ்ல எடம் கெடைக்கல.. அதான் இங்க வந்து சேர்ந்தேன்.  சும்மா வளவளனு கேள்வி கேக்காதீங்க ' என்று சொல்லி மெதுவாக நடந்து போனான்.

அதிர்ச்சியில் உறைந்திருந்த எங்கள் கண் முன் போன வருடம் பொறியியல் கல்லூரியில் சீட்டு கிடைக்க நாங்கள் பட்ட கஷ்டங்கள் கண் முன் விரிந்தன.
  
இதை எங்கள் பொறாமையாக பார்க்காமல் , பொதுவாக பாருங்கள். எங்கே போகிறது நம் கல்வித்துறை?  பொறியியல் கல்லூரிகள் பெருகும் விதம் மேலோட்டமாக பார்த்தால் முன்னேற்றமாக தெரியும். ஆனால் எண்ணிக்கை மட்டுமே தரத்தை கொடுக்காது. நான்கு கூரைகளும் , எட்டு தடுப்புகளும் , ஆறு கணிப்பொறிகளையும்  வைத்து 'இது அங்கிகாரம் பெற்ற பொறியியல் கல்லூரி' என்று சொன்னால் சிரிப்பதா ? அழுவதா ?

ஏற்கனவே தற்போது 383 பொறியியல் மற்றும் 323 பா‌லிடெ‌‌க்‌‌னி‌‌க் கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன என்பதை நினைவில் கொள்க .எஞ்சிய நூற்றி சொச்ச மருத்துவ கல்லூரிகள் நம் பதிவுக்கு அவுட் ஆப் சிலபஸ்.

சரி இப்போது இந்த கல்லூரிகள் என்ன நிலையில் உள்ளன என்பதை சற்று ஆராய்வோம். பொறியியல் படிப்பிற்கு பட்டம் பெற இரண்டு வழி. ப்ளஸ் டூ முடித்து நேராக பொறியியல் கல்லூரியிலோ அல்லது பத்தாம் வகுப்பு முடித்து பா‌லிடெ‌‌க்‌‌னி‌‌க் சேர்ந்து , பொறியியல் படிப்புக்கு இரண்டாம் வருடத்தில் இருந்து ஒன்றாக சேரலாம். இதை ஐந்து வயது பையனை கேட்டாலும் சொல்வான்.

ஆக பொறியியல் பட்டம் என்ற ஒன்றை அடைய இந்த இரு வழிகளும் மாணவனின் திறனை பொருத்து தேவைப்படுவதால்  (கடவுள்   ஒருவர்தான் ; அதை அடைய எந்த மதங்கள் மூலமாக வந்தாலும் தவறில்லை என்பது போல் ) இதை வைத்து பல கல்லூரிகளும் கல்வித்தந்தைகள் கூட்டமும் பல்கி பெருகி கொண்டிருகின்றன.

இங்கு பஞ்சாயத்து என்னவென்று முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்லூரிகள் தேவை இல்லை என்று கருத்தை முன்வைக்கவில்லை. இருக்கும் கல்லூரிகளை முதலில் நன்றாக உபயோகப்படுத்தி பிறகு அடுத்த முன்னேற்றங்களை பார்க்கலாமே  என்பதே கேள்வி.
கல்வி வருடம் 2000த்தில்  நான் பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு சென்றபோது 173 கல்லூரிகள் இருந்ததாக நினைவு.இப்போது இரண்டு மடங்குக்கு மேல். எண்ணிக்கை பெருகியதால் சந்தோசப்படலாமா என்றால் சற்று நிதானியுங்கள்.

'சரிப்பா .. நெறைய காலேஜ் புதுசா சேர்ந்தா நல்லதுதான.. என் பையன் ஜஸ்ட் பாஸ்தான் ஆவான் . அவனுக்கு பெரிய காலேஜ் கெடைக்காது. ஏதோ ஒரு காலேஜ்ல சேர்த்து விட்டோம்னா எப்படியும் வேலை கெடைச்சுடும்ல?' என்று புத்திசாலிதனமாக கேள்வி கேட்கும் பெற்றோர்களுக்கு பதில் : 'சாரி சார் .. வெரி  சாரி. உங்க பையன் படிச்சிட்டு வெளிய வரும்போது கைல பட்டம் இருக்கும்.அதை வெச்சுருக்கிற தகுதி , அதை பயன்படுத்தி நல்ல வேலைல சேருற திறமை (பெரும்பாலும்) அவன்கிட்ட இருக்காது.காரணம் - அந்த கல்லூரிகளுக்கு அவ்வளவுதான்  மதிப்பு.சொல்லித்தந்த லட்சணமும் அப்படிதான் இருக்கும்  '

ஏற்றுகொள்ள வேண்டிய மாற்றுகருத்துக்கள்

  •  'எந்த கல்லூரிதான் சொல்லிதருது? நம்ம பையனுகதான் ஜெராக்ஸ் எடுத்து படிச்சு மார்க் வாங்குறாங்க.'
  • 'என் பையன் திறமையானவங்க. காலேஜ் கை விட்டாலும் எப்படியோ வேலை வாங்கிடுவான்'
ஒரு காலத்தில் பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே பொறியியல் பட்டம் என்பதை மாற்றி ,படிப்புக்கு மரியாதை கொடுக்க   ஒற்றைசாளரமுறை  பயன்பட்டது வாஸ்தவமே. இப்போதும் அந்த முறையில் எந்த ஒரு குறையும் இல்லை. ஆனால் அந்த முறை ஆரம்பிக்கும்போது லிஸ்டில் இருந்த கல்லூரிகள் தரம் மிகுந்தவைகளாக இருந்தன. அதே தரம் , இப்போது கூட சேர்ந்திருக்கும் புதிய கல்லூரிகளுக்கு இருக்கிறதா என்றால் ஹுஹும்..

எந்த எந்த கல்லூரிகள் தரமற்றவை என்று சொல்ல இங்கு தேவை இல்லை. தேவை இல்லாமல் அதற்கு வக்காலத்து வாங்கி பின்னூட்டம் இடுபவர்கள் நேரத்தை நாம் எதற்கு வீணடிக்க வேண்டும்.

சரி, மேற்கூறிய விஷயங்கள் ஒருபுறம் இருக்கட்டும். புதிய கல்லூரிகளுக்கு அங்கிகாரம் கொடுத்து அவை துவக்கப்படுவதற்கு முன் தமிழக கல்வித்துறையிடம்   சில கேள்விகள்:


வருடா வருடம் மாணவர் சேர்க்கையின்போது இறுதியில் சில கல்லூரிகளும் கணிசமான எண்ணிக்கையில் சீட்டுகளும் காலியாக இருக்கும்போது புதிதாக கல்லூரிகள் சேர்க்க என்ன அவசியம்? 


இந்த கேள்விக்கு பதில் அளிக்க கடினமாக உள்ளதென்றால் கேள்வியை பாதியாக குறைக்கலாம்.


வருடா வருடம் மாணவர் சேர்க்கையின்போது இறுதியில் சில கல்லூரிகளும் கணிசமான எண்ணிக்கையில் சீட்டுகளும் காலியாக இருக்க என்ன காரணம்?






அடுத்த கேள்வி:


இப்படி இரண்டு மூன்று வருடம் மிக சொற்பமாக மாணவர்கள் இருந்தும் சில கல்லூரிகள் அடுத்த வருட  பட்டியலில் தொடர என்ன காரணம் ?

இடப்பற்றாகுறை என்றால் அதிக இடம் சேர்க்கலாம்.இடம் நிரம்பவில்லை என்றால் எங்கு தவறு? இதை ஆராய என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

கல்லூரி நல்லபடிதான் உள்ளது. மாணவர்கள் அதை தேர்வு செய்யவில்லை. அதற்காக அதை ரத்து செய்வது எப்படி என்று நியாயமாக கேள்வி கேட்பது போல் கேட்டால் , மிக நியாயமாக பதில் ஒன்று உள்ளது - மாணவர்கள் அதை தேர்வு செய்யாமல்  இருக்க காரணம்  அதன் தரமற்ற நிலைதான். வகுப்பில் இருந்து , பரிசோதனை கூடம், ஆசிரியர்கள் தரம் - தகுதி, போக்குவரத்துக்கு வசதி என எதுவும் சரியில்லாமல் இருப்பதே.

//கூடுதல் விவரம்:
எல்லா வருடமும் தேர்வெழுதிய மாணவர்கள் எண்ணிக்கை -குருப் ஒன்று மற்றும் இரண்டு எல்லாம் சேர்த்தாலும் ,எல்லாருக்கும் சீட் உள்ளபடி கல்லூரி எண்ணிக்கை உள்ளது.ஆனால் மதிப்பெண் அடிப்படையில் அதில் உத்தேசமாக  முப்பது சதவீதம் விலக்கப்படுகிறார்கள்.ஆக எது எப்படியோ இது வரை இருக்கும் கல்லூரிகள் போதும் என்றாலும் கூட , தமிழக மற்றும் அண்டை மாநில மாணவர்கள் பாதிக்கபடபோவதில்லை. //

 புதிய கல்லூரி தரம்மிக்கவையாக உள்ளது ? சேர்ப்பதில் என்ன தவறு ?
என்று ரோசப்பட்டு கேட்டால்  - 'தாராளமாக சேருங்கள் - ஆனால் அதே நேரத்தில் மோசமாக தரமற்று இருக்கும் பழைய கல்லூரிகளை களையெடுங்கள்'.

மாநில பெருமையை கல்லூரிகளின் எண்ணிக்கை பொருத்து அல்ல.. அவைகளில் படித்து வெளி வரும் மாணவர்கள் தகுதியும் திறமையும் பொருத்து.  அண்டை மாநிலமான (மெத்தப்படித்த  ) கேரளா நம்மை நாடி வருவதற்கு காரணம் , இத்தனை வருடங்களாக நாம் காட்டிய கல்வி மேம்பாட்டுத்திறன். அதை கெடுக்க வேண்டாமே...

முதலில் ஒரு நேர்மையான  - மாநிலம் தழுவிய ஆய்வை கல்லூரிகளுக்கு நடத்தி , தரமற்றவைகளை ஒழுங்குபடுத்தி ,குறைந்தது அடிப்படை வசதிகள் கிடைக்குமாறு செய்தால்  அதில் படிக்க மாணவர்களுக்கு  நம்பிக்கை தானாக வரும். சீட்டுகள் காலியாக வாய்ப்பு இல்லை.


பொறியியல் படிப்பு மிடில் கிளாஸ் பெற்றோர்கள்,மாணவர்களின் ஒரே சாத்தியமான கனவு.அதை  ஊக்கபடுத்த கவர்ச்சி திட்டங்கள்   வேண்டாம். கவனிப்பு மட்டுமே போதும்.

புதிய காரை அப்புறமாக டெஸ்ட் டிரைவ் பண்ணலாம். பழைய சைக்கிளை முதலில் பஞ்சர் ஒட்டுங்கள்.

 
//மற்றவர்கள் தங்கள் அபிப்ராயத்தை பின்னூட்டலாம். . //

6 comments:

Unknown said...

good one

ஆனந்தி.. said...

தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்.
http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_23.html

Rathnavel Natarajan said...

புதிய காரை அப்புறமாக டெஸ்ட் டிரைவ் பண்ணலாம். பழைய சைக்கிளை முதலில் பஞ்சர் ஒட்டுங்கள்

அருமையான பதிவு..
கல்லூரிகள் தங்களது 'சொல்லிக் கொடுக்கும்' திறனை உயர்த்த வேண்டும்.
வாழ்த்துக்கள்.

அபிமன்யு said...

அன்பின் ஆனந்தி ,
என் பதிவை பற்றி பகிர்ந்ததற்கு மிக்க நன்றி. இன்னும் கூடியவரை பதிவின் தரத்தையும் விஷய ஆழத்தையும் காப்பாற்ற முயற்சிக்கிறேன்.
நன்றிகள் பல.

அபிமன்யு said...

மிக்க நன்றி rathnavel.. :)

பாலா said...

நண்பரே சென்ற வருடம் பொறியியல் கல்லூரியை விட பிகாம் படிப்புக்கு நிறைய பேர் இடம் கிடைக்காமல் அல்லாடினார்கள் என்று கேள்வி பட்டேன். படிச்சா பொறியியல்தான் படிப்பேன் என்று எல்லோரும் அலைகிறார்கள். ஆனால் இன்னொரு பக்கம் தேவை உருவாகி வருவதை மறக்கிறார்கள்.

Post a Comment