Tuesday, July 26, 2011

பாப்கார்ன் பாக்கெட்- 20110726


நடிகர் ரவிச்சந்திரன் இன்று நம்முடன் இல்லை. 'காதலிக்க நேரமில்லை' அசோக்கை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. அந்த இளமையும் , வசீகரமும் அப்போது சிவாஜி , எம்ஜீஆர் ரசிகர் அலை தாண்டி ஜெய்ஷங்கருடன் போட்டி போட இவருக்கு உதவியது. 

வேறு யாருக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு இவருக்கு உண்டு. தமிழில் மிக வரவேற்பை பெற்ற இரண்டு  த்ரில்லர் படங்களில்  இவர் பிரதான இடம் பெற்றிருக்கிறார். இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்டவை.  முதலாவதில் ஹீரோ ;இரண்டாவதில் வில்லன். படங்கள் : அதே கண்கள் - ஊமை விழிகள்.



இவரின்  கணீர் குரல் , இவர் வசன உச்சரிப்புகளுக்கு பெரிய பக்கபலம். 'மூன்றெழுத்து'    படம் அப்போதைய தமிழ் திரையுலகில் ஜேம்ஸ் பாண்ட் சாயலில் வந்து வெற்றிப் பெற்ற படம். அடிக்கடி இடையில் நிறைய நகைச்சுவை படங்களில் நடித்துள்ளார். வசனங்களை விழுங்காமல் , தெளிவாக உச்சரிக்கும் நல்ல நடிகர். நிறைவான வாழ்க்கை வாழ்ந்து மறைந்தவர்க்கு வணக்கங்கள்.
-----------------------------------------

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்வி ,கிரிக்கெட் ரசிகர்கள் நடுவில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக தோனி மீது பலருக்கும் எரிச்சல். வாஸ்தவம்தான். பிரவீன் குமார் நன்றாக விக்கெட் எடுத்து வரும்போது , ரெய்னா நல்ல பாஃர்மில் இருக்கும்போது தேவையில்லாமல் எதற்கு எட்டு ஓவர் போட்டு, ஆட்டத்தை குழப்ப வேண்டும்.


 நல்ல கேப்டன் , அருமையான விக்கெட் கீப்பர் ;சிறந்த  பேட்ஸ்மேன் என்று எல்லாரும் ஏற்றுக்கொண்ட பிறகு இப்போது எதற்கு இந்த பரிசோதனை ?
அப்படியே இருந்தாலும் அதற்கு காலம்,நேரம் கிடையாதா?எங்களுக்கு புரியவில்லை -  இன்னும் எதை நிரூபிக்க நினைக்கிறீர்கள் தோனி ?
------------------------------------------------

திமுக மிக இக்கட்டான நிலைமையில் இருக்கிறது.. அடுத்த தலைமைப் பொறுப்பு யாருக்கு என்று சொல்ல வேண்டிய கட்டாயம் கலைஞருக்கு ஏற்பட்டிருக்கிறது.தன் புகழ்  நிலையிலும் ,  கட்சியின் ஏகோபித்த ஆதரவையும் பெற்றிருக்கும் தளபதி,    ஜெயலலிதாவுக்கு எதிராக அரசியல் செய்வதில் மட்டும் இன்னும் கத்துக்குட்டியாகவே இருக்கிறார். 

சமச்சீர் கல்வித்திட்டத்தில் இவர் காட்டிய வேகம் மிக  ஆமைத்தனம். இதுவே பத்து வருடம் முன்னால் இருந்திருந்தால் கலைஞர் ,நிலைமையை  மிக அழகாக கையாண்டு குறைந்தபட்சம் இழந்த செல்வாக்கை மீட்டி இருப்பார். தலைமையில் மாற்றம் வர வேண்டும் என்று திமுகவினர் நினைக்க ஒரே காரணம் கலைஞர் வயதுதானே தவிர தளபதி அந்த இடத்துக்கு ஆயத்தமாகி விட்டார் என்பதற்காக அல்ல..

ஒன்று மட்டும் நிச்சியம் , திமுகவின் ஆயுள் ஸ்டாலின் கையில் மட்டுமே. கட்சியை முதலில் வெறுப்படைந்த மக்களிடமும் , பிறகு அண்ணனிடமிருந்தும்  காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை தளபதிக்கு இப்போது. இவர் திறமைக்கு இப்போது இது பெரிய சவால்.



இதில் மட்டும்  ஜெயித்தால் , எதிரப்பக்கம் தவறுகளை அடுக்கி கொண்டு போகும் இந்நேரத்தில் ஸ்டாலின் கட்சியின் செல்வாக்கையும் , அவரின் நிலையையும் எளிதாக உயர்த்தி விடுவார்.

ஞாபகம் வெச்சுகோங்க தளபதி ..பாண்டவர் பலம் பெற்றது வனவாசத்தின் போதுதான். சீக்கிரம்  எதாவது முடிவெடுங்க..
 --------------------------------------------------------------

இயக்குனர் விஜய் படத்தின் மூலத்தைப்பற்றி ஒரு வார்த்தை முன்னமே சொல்லி தொலைஞ்சிருக்கலாம்.அதனால  வந்த வினை.      தெய்வத்திருமகள் படத்தின் வெற்றியை கொண்டாடும் நேரத்தில் , பல அதிபுத்திசாலிகள் , சினிமா சுப்புடு சந்ததியினர் , ஏதோ அவர்களுக்குத்தான் அந்த படம் 'I am Sam' படத்தின் காப்பி என்றும் நமக்கு அந்த உண்மை தெரியாது என்றும் கஷ்டப்பட்டு பின்னூட்டமிட்டும் , பேஸ்புக்கில் கமெண்ட் அடித்தும் தங்கள்  அறிவுஜீவித்தனத்தை அறிவித்து வருகிறார்கள். உண்மைதான். படம் காப்பிதான்.



என்ன செய்ய சொல்கிறீர்கள் ?  இதற்கு முன் எந்த படமும்  இது போல் வந்ததில்லையா ? வெற்றி பெற்றதில்லையா?  வேண்டுமானால் இயக்குனர் விஜயிடம் 'இந்த படத்தின் கதை I am Sam படத்திலிருந்து திருடப்பட்டது' என்று டைட்டில்கார்ட் போட சொல்லலாமா - 'இந்த டம்ளர் சாரதாபவனில் இருந்து திருடப்பட்டது' என்று பொறிப்பது போல ? 

 ஒரு உணர்வுபூர்வமான கிளாசிக் கதை எங்கிருந்து எடுக்கப்பட்டாலும் அதில் நடித்தவர்கள் நடிப்பு ஒன்றும் பொய் இல்லையே..

இதை இவ்வளவு பேச்சு பேசுபவர்கள் 'ஒக்கடு' கில்லியையும் , 'டான்' பில்லாவையும், 'மணிசித்ரதாழ்'  சந்திரமுகியையும் கைத்தட்டி பார்ப்பார்கள்.  

இந்தா , சீனுக்கு சீன் சட்டை கலர் கூட மாத்தாம
'3  இடியட்ஸ் ' நண்பன் வந்துட்டு இருக்கான்ப்பா.. சந்தோசமா விசிலடிச்சு முதல் நாளே போய் பாருங்க..
-----------------------------------------------------------------------------------

என் முந்தைய இந்த பதிவுக்கு நல்ல வரவேற்பு.. எதை எதிர்பார்த்து எழுதினேனோ அது நடந்ததுல ரொம்ப  சந்தோசம்..எனக்கு தெரிந்த நண்பர்கள் ஆறு பேரும் , தெரியாத  பல பேரும் கல்விக்கு தத்தெடுக்கும் முறையில் தங்களை ஈடுபடுத்திக்க விருப்பம் தெரிவிச்சாங்க..

விழுப்புரம் பக்கம் ,ஒரு இருபது முன்னாள் மாணவர்கள் , 'கை கொடுக்கும் கை' என்ற பெயரில் வருடந்தோறும் எட்டிலிருந்து  பத்து குழந்தைகளுக்கான படிப்பு மற்றும் புத்தக செலவை  கவனித்து வருவதாக ,அதில் பங்கு பெற்றிருக்கும் என் நண்பனின் நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா , எல்லாருக்கும் உதவ மனசு   இருக்கு .. ஆனா எப்படின்னுதான் தெரியாம அதை ஒத்தி போட்டு இருக்காங்க.. இப்போ இது போன்ற முறைகள் , பதிவுலகம் மூலமா தெரிந்தனால , பல இடத்துல எல்லா நண்பர்களையும் இதில் குழுவாக்கும் முயற்சி ஏற்படுத்தி வருது.

தவிர கட்டணத்தை பகிர்ந்துக்குற வசதி இருக்கிறதுனால அவர்களோட மாத  பட்ஜெட்ல மிக குறைவா எடுத்தா போதுங்கற ஒரு நிறை இருக்கு..
பதிவை பகிர்ந்த நண்பர்களுக்கும் , அதை உணர்ந்து உதவ வந்த உன்னதர்களுக்கும் ,  நன்றிகளும் வாழ்த்துக்களும்.. தொடரட்டும்..

யாருக்கு தெரியும் ? நீங்கள் உதவும் குழந்தை நாளையே ஒரு மருத்துவராக பல உயிரை காப்பாற்றும். புண்ணியம் உங்களை சேரும்..
-------------------------------------------------------

இப்போல்லாம் ஆ.ராசா , சுரேஷ் கல்மாடி , நித்தியானந்தா இவங்களை எல்லாம் பாக்கும்போது எனக்கு இந்த போஸ்தான்  ஞாபகத்துக்கு வருது.. தப்பு செஞ்சுட்டு மாட்டிகிட்டா எல்லாரும் இப்படிதான் இருப்போமா?



------------------------------------------------------
இந்த பாட்டுக்கு  முன்னுரை தேவை இல்லை.. காதலில் தோற்ற அனைவரும் இந்த பாடலை அறிந்திருப்பார்கள். ஒரு காதலன் , இழந்த காதலியை நினைத்து பாடுவதில் ஒரு சிறிய கோடு தாண்டினாலும் அந்த பாத்திரத்தின் மதிப்பு போய் விடும்..

இதை விட நாகரீகமாக ,மறக்காத தன் காதலையும் , தன் தற்போதைய பொறுப்பையும் நினைத்து நாயகன் பாடும் பாடலை கண்ணதாசன் அல்லாது வேறு யார் எழுதியிருந்தாலும் ,எங்காவது சிறிது எல்லை தாண்டியிருக்ககூடும்.



இந்த படம் இப்போது வந்தால்  பொருத்தமான நடிகர்கள் கிடைக்கிறது மிக கஷ்டம்.

இன்னொரு எம்.எஸ்.வீ மைல்கல். ஏ.எல்.ராகவன் சோகமும் , ஏக்கமும் வழிந்தோடும் இனிய குரல்.. கண்ணை மூடி அனுபவியுங்கள்..
----------------------------------------------

4 comments:

rajamelaiyur said...

Super popcornSuper popcorn

ganesh said...

நீங்கள் சொல்லும் 'ஒக்கடு' கில்லியையும் , 'டான்' பில்லாவையும், 'மணிசித்ரதாழ்' சந்திரமுகியையும்
3 இடியட்ஸ் ' நண்பன் அத்தனை படங்களும் காப்புரிமை பெற்று எடுக்கப்பட்டவை....... தெய்வத்திருமகள் ? அடுத்தவர் பெற்ற பிள்ளைக்கு நீங்கள் தந்தை பெயர் தர தயாரா? தோழரே..............

அபிமன்யு said...

இயக்குனர் செய்தது சரியென்று நான் எங்கேயுமே குறிப்பிடவில்லையே .. ஏன் படத்தில் வரும் முதல் பாட்டு கூடத்தான் அச்சிரம் பிசகாத காப்பி.. உண்மைதான். படம் காப்பிதான் என்று ஏற்கனவே மேலே சொல்லியிருக்கிறேன்.. நான் சொல்வது நடிகர்களின் உழைப்பை பாராட்டவேண்டியது என்றும் , திரும்ப திரும்ப அதையே சொல்லிக் காட்டுவதை நிறுத்துங்கள் என்பதைத்தான்.. :)

Anonymous said...

என்னய்யா இது அநியாயமா இருக்கு? பையன் பரிச்சையில காப்பி அடிச்சான்னா, அதை வுடு எம்புட்டு கஷ்டப்பட்டு உழைச்சான் அதை பாராட்டுன்னா என்ன அர்த்தம்?

Post a Comment