கடந்த ஒரு வாரமாக கனத்த மனதுடன்தான் நடமாட முடிகிறது. காஞ்சிபுரம் அருகே நடந்த தனியார் பேருந்து விபத்தில் எனக்கு
தெரிந்த மூன்று பேரை இழந்திருக்கிறேன்.
அதுவும் கருகிய நிலையில் பிணங்களை அடுக்கி வைத்திருந்த புகைப்படத்தைப் பார்த்தபோது , வலி அதிகமாகிறது.
எல்லாரும் பேருந்து ஓட்டுனரையும் அதன் நிறுவனத்தையும் குறை சொல்கிறார்கள்.ஒரு வகையில் அது உண்மையே.ஆனால் முழுதாக குறை சொல்வதற்கு முன் நாம் எப்படி தனியார் பேருந்துகளை சார்ந்திருக்கும் நிலைமைக்கு வந்தோம் என்பதை திரும்பிப் பார்க்க வேண்டியது கட்டாயமாகிறது.
அது தொண்ணூறின் தொடக்கம். தமிழகத்தின் எந்த ஊரிலிருந்தும் தலைநகரமான சென்னைக்கு போவதானால் எல்லாரும் அணுகுவது ரயில் வசதியை மட்டுமே.இள வயதுள்ளவர்களும்,கடின பயணத்துக்கு பழக்கப்பட்டவர்களும் மட்டுமே பேருந்தை ,அவ்வளவு நீண்ட பயணத்துக்கு
பயன்படுத்துவார்கள்.
பெரும்பாலும் ஒரே பேருந்து உபயோகம்
அப்போது இல்லை. இரண்டு , மூன்று பேருந்துகள் மாறி மாறி சென்னையை அடைய வேண்டியிருக்கும்.ஆனால் இப்படி பயணிப்பவர்கள் மிக சொற்பமே. மீதி பேர் ரயிலின் சுகமான அலுப்பில்லாத , பயணத்திற்கும் , நிதானமான கட்டணத்துக்கும் பழகி ரயிலையே சார்ந்திருந்தார்கள்..இப்போதும் இருக்கிறார்கள்.
அடுத்த பத்து வருடத்தில் மக்கள் எண்ணிக்கை கூட , சென்னையின் தரமும் வேலைவாய்ப்பும் அதிகரிக்க , பயணிகளின் எண்ணிக்கை மிக கணிசமாக உயரத் தொடங்கியது. அதற்கு ஈடாக எத்தனை
ரயில்களைத்தான் ,பெட்டிகளைத்தான் அரசும் அதிகரிப்பது ?
பயணிகளுக்கு வேறு வழி இல்லை. மாறி மாறி செல்லும் பேருந்துகளை முயற்சி செய்து பார்த்து , அந்த பயணத்தின் அலுப்பில் அடுத்த நாட்களை தூக்கம் இழந்த கண்ணோடும் , சோர்வோடும் எதிர்கொண்டு கிரங்கியிருந்தார்கள்.அவர்களின் வேலை பாதிக்கப்பட்டது.
பயணிகள் இருவகை உண்டு :
மனைவி,குடும்பத்தை ஊரில் விட்டு , வாரம் ஒரு நாள் விடுமுறையில் வீடு வரும் திருமணம் ஆனவர்கள்.
மாதம் , இருமாதங்களுக்கு ஒரு முறை பெற்றோரைக் காண வரும் திருமணம் ஆகாத பயணிகள்.
இதில் அதிகம் பாதிக்கப்பட்டது முதல் வகையே. காரணம் இரண்டாம் வகை பயணிகள் பொறுத்திருந்து ரயிலில் முன்பதிவு செய்து மாதம் ஒரு முறை வருவதால் அது அவர்களுக்கு போதுமானதாய் இருந்தது. ஆனால் வாரம் ஒரு முறை வீடு செல்லும் கட்டாயம் உள்ளவர்கள் ,எப்படி இதே முறையை பயன்படுத்துவது? அது சாத்தியம் என்றாலும் அப்போதைய நேரடி முன்பதிவு மட்டுமே இருந்த காலத்தில் ,மிக கடினமாய் இருந்தது.
இங்குதான் தொடங்கியது தனியார் பேருந்து சேவை.
இந்த பயணிகளை குறி வைத்து ,இவர்கள் தேவை என்ன என்பதை அறிந்து அருமையான திட்டத்துடன் களம் இறங்கின இந்த நிறுவனங்கள்.
'இவர்களுக்கு இருப்பது வார இறுதி நாட்கள் மட்டுமே. ஆக முக்கிய தினங்கள் இரண்டு - வெள்ளி , ஞாயிறு. அதில் கூடியவரை அலுப்பில்லாமல் இவர்களை அழைத்து சென்றால் ,தரமான இந்த சேவையை தொடர்ந்தால் நிரந்தர வாடிக்கையாளர்கள் நிறைய பேர் வருவார்கள். ஆனால் இந்த சொகுசான பயணத்தைக் கொடுக்க , அரசு பேருந்துகள் போல் சாதாரண கட்டணம் கட்டுபடியாகாது. இரண்டு மடங்காக இருந்தால் மட்டுமே சமாளிக்க முடியும். முயற்சிப்போம். .பயணிகளின் வரவேற்பு எப்படி இருக்கிறது என்று..' என சிந்தித்தபடி தொடங்கியது தனியார் சொகுசு பேருந்து சேவை.
இது வரை இரு சாரார் பக்கமும் தவறு இல்லை. இவர்கள் தேவை பூர்த்தியாகிறது.அவர்களின் வேலைக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. A Well Balanced Equation.
முன்னேற்றத்தின் அடுத்த கட்டமாக
திடீரென்று வந்தது சென்னை மற்றும் அண்டை மாநில தலைநகர் பெங்களுரின் புதிதாய் முளைத்த
எக்கச்சக்க வேலை வாய்ப்புகள்.கூடவே தகவல் தொழில்நுட்பத்தின் துறை சார்ந்த முன்னேற்றமும் நம் ஊர்
பிள்ளைகளுக்கு அங்கே செல்ல வேண்டிய கட்டாயம் உருவாக்கியது. இப்போது பயணிகள் எண்ணிக்கை நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மும்மடங்கு.
ரயிலுக்கு போவதென்றால் அருகிலிருக்கும் பெரிய ஊரின் ரயில் நிலையம் சென்று அங்கிருந்து சென்னைக்கு/பெங்களுருக்கு போக வேண்டும். ஆனால் தனியார் பேருந்துகளின் கிளைகள் ஒவ்வொரு ஊருக்கும் இருக்கிறதே.இரவு வரை வீட்டில் இருந்து விட்டு மெல்ல செல்லலாமே என்ற
நியாயமான வாதம் ,இந்த பக்கம் காந்தம் போல இழுக்க எதுவாய் இருந்தது.
பையனோ பெண்ணோ ஊர்க்கு விடுமுறையில் வருகிறேன் என்று சொன்னால் பெற்றோர் கேட்கும் அடுத்த
கேள்வி 'எந்த பஸ்ல வர? இப்போவே ரிட்டனும் புக் பண்ணிடுறேன்.அப்போதான் இடம் கிடைக்கும்' என்பதுதான். இந்த நிலையில் ரயிலையும் அரசு பேருந்தையும் நம் மக்கள் மறந்தே போயிருந்தனர் , ஒரு சில நாற்பது ஐம்பது வயது பயணிகளைத் தவிர .
நல்லபிள்ளைகளாக இருந்த தனியார் பேருந்துகள் தடம் மாறியது இந்த சந்தர்ப்பத்தில்தான். அடடா..இப்போது உணவு , உடை போல
பயணிகளுக்கு நம் சேவையும் தேவையான ஒன்றாகி விட்டது
என்று தெரிந்ததும் அவர்கள் பணிவும் உபசரிப்பும் கழுதை தேய்ந்து கட்டெறும்பு கூட அல்ல சிற்றெறும்பு ஆன கதை ஆனது.
கோயம்பேட்டில் இந்த தனியார் பேருந்துகளுக்காகவே தனியாக நிலையம் உருவானது.ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை
ஏறும்போது அதை காரணமாக காட்டி மிக அதிகமாக கட்டணத்தை உயர்த்தியபோதும்
மக்கள் கூட்டம் இம்மியும் குறையவில்லை.
போதாகுறைக்கு ஆன்லைனில் புக் செய்யும் வசதியும் வந்ததால் இளவயது பயணிகளுக்கு இன்னும் வசதி.தீபாவளி , பொங்கல் போன்ற விடுமுறைகளுக்கு ஒரு மாதம் முன்பே முன்பதிவுக்கு ராத்திரி பனிரெண்டு மணி வரை விழித்து புக் செய்யும் ஒருவித நாகரீகத்துக்கு மிக நேர்த்தியாக தள்ளப்பட்டது நம் மக்கள் நிலை. கேன்சல் செய்தால் பதினைந்து சதவீத பணம் எடுப்பார்கள் என்று தெரிந்தும் புக் செய்யும் நிலைமை.நாம் என்ன செய்தாலும் இவர்களுக்கு நம்மை விட்டால் வேறு வழி இல்லை என்று தன் ஆட்டத்தை தொடங்கியது இந்த சேவை.
- விடுமுறை நேரங்களில் அநியாய விலைக்கு டிக்கெட் விற்பது
- மிக நேரம் தாழ்த்தி வண்டி எடுப்பது
- தங்களுக்கு வருமானத்தில் பங்கு தருகிறார்கள் என்பதற்காக ஊருக்கு வெளியே தாண்டி மிக மட்டமான ஹோட்டலில் இரவு உணவுக்கு இறக்கி விடுவது
- ஓட்டுனரும், கூட உதவிக்கு இருக்கும் நபரும் பயணத்தின் போது அநாகரீகமாக பேசுவது;எதிர்த்து கேட்டால் 'போய் புகார் பண்ணிக்கோ' என்று அலட்சியமாக பதில் சொல்வது
- 'ரெட்பஸ்' என்னும் மூன்றாம் நிறுவனம் மூலம் புக் செய்திருந்தால் ,தங்கள் கிளை லாபம் போகிறது என்று , சம்பந்தப்பட்ட பயணியை மரியாதைக்குறைவாக நடத்துவது
- நேரம் தாழ்த்தி வண்டி எடுத்ததை ஈடு செய்ய இரவில் மிக வேகமாக வண்டி ஓட்டுவது
இப்படி இன்னும் நிறைய. யார் இந்த பூனைகளுக்கு மணி கட்டுவது ? அரசுதான் என்று சொன்னால் நீங்கள் முதுகெலும்பு இல்லாதவர் என்று ஒத்துக்கொள்ள வேண்டும்.
அரசு செய்ய வேண்டியது குறைவுதான்.
- இருக்கும் அரசு பேருந்துகளை நல்லபடியாக செம்மைபடுத்தி வசதியான பயணத்துக்கு உத்திரவாதம் தரவேண்டும்.
- ஒருமுறை போக்குவரத்து அமைச்சர் எந்த துரித பேருந்திலாவது போய் பூச்சிகடிகளுக்கு மத்தியில்,உடைந்த ஜன்னல் அருகே ,சாய்வு வசதி செயலற்ற சீட்டில் அமர்ந்து அனுபவப்பட்டு பிறகு செய்வதை செய்யட்டும்.
- எந்தெந்த ஊர்களில் , சராசரியாக எவ்வளவு பேர் பெரிய நகரங்களுக்கு செல்கிறார்கள் என்று கணக்கெடுப்பு நடத்தி ,அந்த ஊர்களில் இருந்து தரமான அரசு பேருந்துகளை (குறைந்தது வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலாவது ) இயக்க வேண்டும்.அரசுக்கும் வருமானம் கிடைக்கும்.முக்கியமாக அப்படி இயக்கும் பேருந்துகளை , கர்நாடகாவில் இருப்பது போல ஆன்லைனில் புக் செய்யும் வசதி செய்ய வேண்டும்.
- தனியார் பேருந்துகளின் தரம்,ஒழுக்கம், சாலை விதிகள் பேணல் - இவற்றை கவனிக்க ஒரு குழுவோ ஆணையமோ அமைக்க வேண்டும் . விதிகள் தவறினால் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு லைசன்ஸ் ரத்து செய்ய குழுவுக்கு அங்கிகாரம் வழங்க வேண்டும்.அவர்களை மக்கள் நேரடியாக அணுகும்படி வசதி செய்ய வேண்டும்.
தனியார் பேருந்தில் செல்வதும் , அதுவும் எங்கும் போகாமல் நம் ஊர் கிளையிலிருந்தே ஏறிக்கொள்வதும் வசதிதான். ஆனால் அதற்காக அநியாய கொள்ளைக்கு தெரிந்தே அதரவு அளிக்க கூடாது. அதே சமயம் அதிக பணத்தைப் பற்றி கவலைப்பட தேவை இல்லை. வாங்கும் வசதி உள்ளவர்கள் போகட்டும். ஆனால் அதற்கேற்ப நாகரீகமான,பாதுகாப்பான , வசதியான சேவையை தரவில்லை என்றால் கேள்வி கேட்க வேண்டும்.
- ஒரு பயணியை தரக்குறைவாக நடத்தினால் மீதி பேர் தூங்குவது போல் நடிக்காமல் தட்டிகேட்க வேண்டும். எப்போதும் கூட பயணிப்பவர்களுடன் சேர்ந்து சென்று அணுகி கூட்டமாக கேளுங்கள்.கிடைக்கும் பதிலில் எப்படி மரியாதை உயர்ந்து வருகிறது என்று பாருங்கள். ஒரு கை ஓசை உதவிக்கு வராது.
- மாற்று போக்குவரத்துக்கு எப்போதும் ஆதரவளியுங்கள்.கூடியவரை ரயிலில் செல்ல பாருங்கள். மூன்று மாதம் முன்னமே பதிவு செய்யுங்கள். கான்சல் செய்ய வேண்டியிருந்தால் கவலை இல்லை. அவர்கள் எடுக்கும் பணம் மிக சொற்பமே.அது உங்களுகே தெரியும்.
- எதாவது தவறு செய்தாலோ அல்லது உங்களுக்கு மோசமான அனுபவம் நடந்தாலோ மேற்படி நிறுவனத்திற்கு புகார் செய்யுங்கள். பலன் இருக்காது.ஆயினும் செய்வது நம் கடமை.பின் அதையே வண்டி எண் ,பிற விபரங்களுடன் உங்கள் நண்பர்களுடன் ஃபேஸ்புக்கிலோ ,வேறு சமுக இணையதளத்திலோ பகிருங்கள்.எது எதற்கோ ஸ்டேடஸ் மெசேஜ் போடும் நீங்கள் இதையும் போட்டால் மற்றவர்கள் அறிய வசதியாய் இருக்கும்.
- முக்கியமாக , சரியான நேரத்தில் பேருந்து வரவில்லை என்றால் உடனடியாக என்ன காரணம் என்று கேளுங்கள். பயண நேரத்தை கணக்கு வைத்துக்கொண்டு ,வண்டி எவ்வளவு தாமதமாக எடுக்கபடுகிறது என்று நேரத்தை பாருங்கள். காலையில் நீங்கள் எப்போதும் போல் சரியான நேரத்தில் ஊர் சேர்ந்தால் , வண்டி ஆபத்தான வேகத்தில் வந்திருக்கிறது என்று அர்த்தம். இதையும் எல்லாரோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
- நினைவிருக்கட்டும்-வண்டி தாமதமாகும் ஒவ்வொரு வினாடியும் , வேகத்தை அதிகரிக்க வேண்டிய நிர்பந்தத்தை ஓட்டுனருக்கு உருவாக்குகிறது.
- முன் எல்லாம் இரண்டு ஓட்டுனர்கள் இருப்பார்கள்.இப்போது ஒரு பேருந்துக்கு ஒருவரே தென்படுகிறார்.விசாரியுங்கள்.முதல் நாளும் ஒய்வு எடுக்கவில்லை என்று அவர் சொன்னால் அதையும் நிறுவனத்திடம் கேளுங்கள்.
- மிக அதிகமாக அநியாயம் நடப்பதாக தெரிந்தால் மொத்தமாக எல்லோரிடமும் நடந்தவையை எழுதி அதை உறுதிபடுத்த கையெழுத்தும் , முகவரியையும் வாங்குங்கள்.நுகர்வோர் நீதிமன்றம் செல்ல நமக்கு உரிமை உள்ளது.
இதை எல்லாம் செய்தால் இது போன்ற தவறுகள் எப்படி நடக்கும் என்று பார்ப்போம்.
மொத்தத்தில்..பகிருங்கள் சார்.. தகவல்களை பகிர்வதுதான் நம் பலமே. எல்லாருக்கும் , நடப்பது உடனுக்குடனே தெரிகிறது என்றால் யாரும் தவறுகளை மேற்கொண்டு செய்ய பயப்படுவார்கள் .முன் போல இந்த ஒருங்கிணைப்புக்கு சங்கமோ வேறு எதுவோ தேவை இல்லை. இணையம் என்ற மிகப் பெரிய ஆயுதம் நம்மிடம் உள்ளது.அதை கேடயமாகவும் பயன்படுத்தலாம்.கூர்வாளாகாவும் பயன்படுத்தலாம். இனி உங்கள் முடிவு.
ஃபேஷ்புக்கோ , ட்விட்டரோ.. இந்த தகவல்களை உங்கள் நண்பர்களிடம் கொண்டு சேர்ப்பது உங்கள் முதல் பொறுப்பு. இனியாவது ஒவ்வொரு பெற்றோரும் , தங்கள் பிள்ளைகள் பயணிக்கும் இரவு பயமின்றி உறங்கட்டும்.
விபத்தில் உயிரிழந்த மக்களுக்கு கண்ணீரை விட,அவர்கள் குடும்பத்திற்கு ஆறுதல் வார்த்தைகளை விட , இதில் நாம் கற்ற பாடமும் ,அதில் பெற்ற விழிப்புமே சிறந்த அஞ்சலியாகட்டும் .
14 comments:
அருமை..நல்ல தெளிவான அலசல்..அந்த படத்தை தவிர்த்திருக்கலாம்..
நன்றி தோழரே.. படத்தை பதியுமுன் எனக்கும் உறுத்தியது.இருப்பினும் மக்களுக்கு இதன் வீரியம் தெரிய வேண்டும் என்பதற்காக இணைத்தேன். இப்போது மாற்றி விடுகிறேன். சுட்டிக்காட்டியதற்கு நன்றி.
என்ன தெளிவான அலசல் இதில்லா இருக்கு ..? இவன் எதோ பெரிய ஆல் மாதிரி அரசு அத செயயனும் இத செய்யனும்னு ஆர்டர் போடறான்.இதுக்கு ஜால்ரா வேற ...
இவன் சொலரத்கு ஏதது ஆதாரம் இருக்கா?
அனானிகளுக்கு பதில் சொல்ல கூடாது என்ற கோட்பாடு வைத்திருக்கிறேன்.
இருந்தாலும் நண்பரே...
அரசாங்கம் எதை செய்ய வேண்டும் என்று ஆலோசனை சொல்ல பெரிய ஆளாக இருக்க அவசியம் இல்லை. ஒட்டு போடும்,வரி கட்டும் என் குறைந்தபட்ச தகுதியே போதும்.
ஆதாரம்தானே..உங்கள் ஊரில் இருந்து செல்லும் எந்த ஒரு பயணியையும் கேட்டுப் பாருங்கள்..
என் பதிவை படித்து திட்டுவதற்கு உங்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது.. ஆனால் ஏக வசனம் நாகரீகமல்ல..உங்களுக்கு முப்பது வயதுக்கு மேல் ஆகியிருந்தால் அதுவும் தப்பில்லை..
மிகத் தெளிவான அலசல்... சொகுசுப் பேருந்துகளின் முன்னிருக்கையில் அமர்ந்தவர்களுக்கு அந்த வேகத்தின் கொடூரம் புரியும்... எல்லா இடங்களிலும் ஒரு தீர்வு காண்பதற்கு நாம் விலையில்லா உயிர்களை அல்லவா பணயம் வைத்துக்கொண்டிருக்கிறோம்...
பல கட்டங்களில் விவாதித்து தீர்வு காண வேண்டிய பிரச்சனை இது...
good post.........
நல்ல அலசல்
இன்று என் வலையில்
இந்தியர்களை மீட்க, பாகிஸ்தானில் இருந்து ஆள் வரணுமா?என்ன கொடும இது ?
A good article, but you have forgotten one thing... almost all these omni busses are owned by VIPs in the administration. Do you really think they will create competition to themselves by providing good public transportation?, you must be joking!!
நல்ல பதிவு... படுக்கை வசதி கொண்ட பஸ் வரை போய்விட்டது தனியார் பஸ் நிறுவனங்கள்.... இன்னும் வெளியூர் செல்லும் அரசு விரைவு பேருந்துகள் சொல்லிக் கொள்ளும் படியாக இல்லை... இணைய தளத்தில் முன்பதிவு செய்து கொள்ள அனுமதித்தால் அரசு போக்குவரத்தின் உபயோகம் அதிகப்படலாம்.... ஆனால் அரசுப் பேருந்திலோ- சரியான நேரத்திற்கு செல்வதில்லை... பயணிகளுக்கு உரிய மரியாதை கொடுப்பது இல்லை... இன்னும் நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்... கலியுகம் பாஸ்... வேற என்னத்த சொல்ல...!
அருமை அபிமன்யு அவர்களே , மிஸ்டர் அனோனி அவர்களே தங்கள் இன்னும் அரசு பேருந்திலோ அல்லது தனியார் பேருந்திலோ பயணம் செய்தது இல்லை என்று நினைக்கிறன். முதலில் அதை செய்யுங்கள், இந்த சிறிய விஷயம் கூட புரிந்து கொள்ளாத நீங்கள் எதைத்தான் வாழ்க்கையில் புரிந்து கொள்ள போகிறீங்கள்
அருமை! இத இத தான் நானும்(?!) சொல்லனும்னு நெனச்சேன்! ஆன இதை பகிர்வதற்கு வசதியா Twitter, Facebook Like, Google buzz etc. பட்டன்கள சேர்த்து விடுங்க சார்!
உதவிக்கு இங்க பாருங்க.
அவ்வளவுதாங்க! கலக்கிட்டிங்க!!
it's my duty to share this article.
PLEASE ADD THE FOLLOWING ALSO:
BUS SHOULD NOT DEPARTURE AFTER 10.30 PM
SPEED SHOULD BE LIMITED BY PROVIDING ELECTRONIC GADGETS.
TWO DRIVERS ARE COMPULSORY.
BUS SHOULD BE OPERATED ONLY BY THE OWNER; THAT IS NOT BY LEASEE OR AGENT OR CONTRACTOR IN ORDER TO FIX RESPONSIBILITY FOR TAKING ACTION AGAINST ANY VIOLATION &ACCIDENT
FOR ANY VIOLATION PERMIT BE CANCELLED IN ADDITION CRIMINAL PROCEEDINGS AGAINST THE OWNER AND THE DRIVER.
Post a Comment