Sunday, February 20, 2011

மயக்கும் குரல் - மலேசியா வாசுதேவன்

கணக்கு வைத்துக்கொள்ளாமல் தமிழன் பார்க்கும் படங்களுள் முதன்மையானது 'முதல் மரியாதை' . சிவாஜியின் மாறிய வயதிற்கு தகுந்தபடி கதை வேண்டும் ; கிடைத்து  விட்டது ; பாட்டுக்கு பின்னணி குரல் ? புதிதாய் வேண்டுமே.. கணீர் என்ற சிவாஜியின் குரல் இந்த படத்தின் மிகபெரிய பலம் . அதை பாடும்போதும் காட்ட வேண்டுமே? டி. எம். எஸ். இப்போது அதற்கு  பொருந்த மாட்டாரே ? என்று பாரதிராஜா சற்றே சிந்தித்தபோது மனதில் வந்த ஒரே குரல் மலேசியா வாசுதேவனுடயது. இன்று வரை 'பூங்காற்று திரும்புமா ?' என்று பாடல் ஆரம்பித்தால் கண்களில் தானாக மின்னுகிறது  கண்ணீர்.

இளையராஜா, பாரதிராஜா கூட்டணியில் சேர்ந்து '16  வயதினிலே'யில் இரண்டு ஹிட் பாடலை கொடுத்தப்பிறகு இவருக்கு நிதானிக்க நேரமில்லை . தொடர்ந்து வரும் வாய்ப்புகள் ..தொய்வில்லாத குரல்.. எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் ஒரே போட்டி பாடகர். இன்று வரை தமிழில் 8000 பாடல்கள் பாடியுள்ளார்.

பாடல்களின் எந்த வகையையும் இவர் குரல் ஆட்சி செய்யும். 'ஆனந்த தேன் சிந்தும் பூஞ்சோலையே' ,'கோவில் மணி ஓசை தனை '
என்று காதல் மெலடி பாடல்களும் சரி , 'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு ','வெட்டி வேரு வாசம் ' என்று கிராமிய மணம் வீசும் பாடல்களும் சரி , 'தென்கிழக்கு சீமையில' என்று மனதை கரைய வைக்கும் சோக பாடலும் சரி , 'என்னமா கண்ணு ? சௌக்கியமா ? '  , ரோமியோவில் -'அன்பே நீதானே என் வாழ்வில் ' என நக்கலடிக்கும் பாடல்களும் சரி தமிழ் ரசிகர்களை கிறங்கடித்த கதை எல்லாரும் அறிந்தது.


இளைஞர்களை  இன்று வரை  ஆட வைக்கும் இவரது பாடல்கள் 'ஆசை நூறு வகை..வாழ்வில் நூறு சுவை '  , 'தண்ணி கருத்திருச்சு' , 'ஆளானாலும் ஆளு '  

 ரஜினிக்கு அப்போதைய ஓபனிங் சாங்குக்கு இவர் கட்டாயம் வேண்டும். 'பொதுவாக என் மனசு தங்கம்' என்று ரஜினிக்கு குரல் கொடுத்து அவர் ரசிகர்களை ஈர்த்து தன்னுடன் வைத்துக்கொண்டார் வாசுதேவன்.
அதை தொடர்ந்து 'எஜமான் காலடி மண் எடுத்து'ம் , 'சிங்கம் ஒன்று புறப்பட்டதே' வரை நிறைய பாடல்கள் இவருக்கு ரஜினி படங்களில் உண்டு.

பாடல் மட்டும் அல்லாமல் நடிப்பிலும் தனி இடம் இவருக்கு உண்டு . வேறு எந்த பாடகர்களும் நடிப்பை இரண்டாம்பட்சமாக சுமாராக பயன்படுத்தியபோது , இவர் அதிலும் தனது முழுத்திறமையை காட்டினார். 'ஒரு கைதியின் டைரி'யில் வில்லன் பாத்திரத்தில் அசத்தியபின் இவரை விழி உயர்த்தி வித்தியாசமாக திரும்பி பார்த்த தமிழ் உலகம் ஊமை விழிகளில் இவர் நடிப்பை கைத்தட்டி பாராட்டியது. அதன் பின்  முதல் வசந்தம் , கதாநாயகன் என நடிப்பில் ஒரு சுற்று வந்தார்.

சிவாஜி மறைவுக்கு பிறகு முதல் மரியாதை பார்க்கும் போதெல்லாம் மனதில் ஒரு கனம் தோன்றும். இனி அந்த கனம் இரண்டு பங்கு அதிகமாகும்.


வாசுதேவன் இப்படி ஒருமுறை பேட்டியில் சொன்னார்  - ' நான் யாரிடமும் வாய்ப்புக்கு நின்றதில்லை.நான் இந்தியா வரும்போது ஒன்றிரண்டு பாடல்கள் பாடினால் போதும் என்றுதான் வந்தேன்.ஆனால் இவ்வளவு பாடல்கள் பாட எனக்கு வாய்ப்பு கிடைத்தது. பணம் , புகழ் , வெற்றி எல்லாம் பார்த்தாகி விட்டது. மற்ற பாடகர்கள் அளவுக்கு நான் அதிகமாக பாடவில்லை என்று ஒரு போதும் நினைத்ததில்லை. எவரெஸ்டை ஏறி கடக்க முடியவில்லை என அதிருப்தி கொண்டதில்லை. மாறாக பழனி மலை ஏறிய திருப்தி எனக்கு உள்ளது. எனக்கு அது போதும்'



'வாசுதேவன் சார்,
நீங்கள் செய்யவேண்டியதை நிறைவாக செய்து முடித்து விட்டீர்கள்.
அந்த மனநிறைவுடன் விடைபெற்றும் விட்டீர்கள்.
இப்போது ஒரு படத்தின் பாடல்களை விட பாடுபவர்கள் எண்ணிக்கை அதிகமாய் இருக்கிற காலம். அவர்களுக்கு உங்கள் குரல் கற்க வேண்டிய பாடம். எங்களுக்கு உங்கள் குரல்  கவலையை மறக்கும் கீதம்.' 
  

No comments:

Post a Comment