Wednesday, February 9, 2011

அர்ச்சுனர்களை ஆதரிப்போம்!

மார்கழி மாதம். காலை நேரம். 'வாக்கிங் போலாமா ?' என்று தொலைபேசியில் கேட்கும்  நண்பனிடம் 'இந்த குளிர்ல எங்கடா? நாளைக்கு பாப்போம்..'. மீண்டும் கண்மூடி இனிமையான உறக்கம்.

பனி உறையும் மலைப்பிரதேசம். பதுங்கு குழியில் பாதி பேர். மெல்லிய நடை போட்டு துளியும் கவனம் குறையாமல் தொலைவு வரை பார்க்கும் மீதி பேர். தன் எடையில் பாதிக்கு மேல் இருக்கும் நவீன கனரக துப்பாக்கிகள்;இன்ன பிற ஆயுதங்கள். என்னதான் துல்லியமாக கவனித்தாலும் முதலில் வரும் ஏவுகணை கண்ணில் தெரிய 90 சதவீதம் வாய்ப்பில்லை - கண்ணை மறைக்கும் பனிக்காற்று.

உணவு நேரம். பொட்டலங்கள் கொடுக்க வரும் சக வீரனிடம் -'எனக்கு எதாவது வீட்டிலிருந்து கடிதம் ? அழைப்பு ?'.
மறுமுறை வரும்போது தெரிவிப்பதாக கையில் உணவைத் திணித்து செல்கிறான்.

விரும்பிய நேரத்தில் சாப்பிட முடியாது. உணவு நேரம் 7  நிமிடங்கள் என்றால்  ஏழே நிமிடங்கள்தான்.
 உண்ட பிறகு நீர் அருந்துகிறான். என்னதான் பனி உருகும் மலையில் இருந்தாலும் நீரை விரும்பியபடி அருந்த முடியாது. காய்ச்சி பதபடுத்தப் பட்ட நீர்தான். மாறினால் குடல் வலியும் சுவாச கோளாறும் இரண்டே நாளில் ஏற்படும். 

மூன்று நாட்கள் பிறகு அவனுக்கு செய்தி தெரிவிக்கப்படுகிறது - 'அடுத்த AMMO KIT  தேவையென்றால் தெரிவிக்கவும். RADOR clearance ரிப்போர்ட்  நாளை அறிவிக்கப்படும்.LONG 34 ; LAT 45 -க்கு இரண்டு பேர் அனுப்பவும் . RESOURCE PERS :  உனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது'

மகிழ்ச்சியை கொண்டாட எத்தனிக்கிறான்- கத்தவும் முடியாது ; இருக்கும் ஆனந்தத்தில் துப்பாக்கியை ஒரு முறை அழுத்தி ஆர்ப்பரிக்க ஆசை - நடக்காது. குறைந்தபட்சம் யாரிடமாவது இதை தெரிவிக்கலாம் என்றால் அடுத்த ஜவான் அரை காத தூரத்தில். Unnecessary position  change is violation.சரி குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் முன்பு எப்படியாவது சென்று பார்க்க வேண்டும் என நினைத்துக்கொண்டு  மீண்டும் தூரத்தை அலசுகிறான்.

- இது போர் காலம் அல்ல. தினமும் எல்லையில் நடக்கும் ஒரு சராசரி நிகழ்வு.

நமக்கு வீரர்களைப்பற்றிய நினைவு வர வேண்டும் என்றால் எதாவது போரோ அல்ல ஒரு ஊடுருவலோ நடக்க வேண்டும். பல உயிரிழப்புக்கு பிறகு அமைதியடைந்த பின்னர் நாம் மார்தட்டி இரண்டு நாள் திரிந்து விட்டு நம் வேலையை கவனிக்க ஆரம்பிப்போம்.

யார் மீதும் குறை எதுவும் சொல்லவில்லை. இது இயற்கைதான். ஆனால் நாம் அனுபவிக்கும் சாதாரண சந்தோசங்களையும் விட்டுக்கொடுத்து கால்கடுக்க அங்கு நிற்பவனுக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?.  அதுதான் வருடத்தில் ஒரு நாள் கொடி நாள் வருகிறதே ? அப்போது நிதி அளவில் நம்மால் முடிந்ததை கொடுத்து ஆதரிக்கிறோமே என்று பதிலுரைத்தால்  இதோ அடுத்த கேள்வி ? பணம் மட்டும் அவனுக்கு பெரியதென்றால் , ராணுவத்தை விட சுலபமான வேலையை அவன் இங்கிருந்தே செய்திருக்க முடியும். அவனுக்கு தேவை பணம் (மட்டும்) அல்ல.

கிரிக்கெட்டில் ஜெயிக்க  போராடும் விளையாட்டு வீரனுக்கு பவுண்டரி விளாசுவதால் முழுத்திருப்தி வருவதில்லை . அதை தொடர்ந்த கைத்தட்டலும் விசில் சத்தமுமே அடுத்த பவுண்டரிக்கு அவனை தயார்படுத்தும். அணியில் முன்னணியில் இருக்கும் வீரனுக்கும் substitute வீரனுக்கும் பெரிய அளவில் சம்பளத்தில் வித்தியாசம் இல்லை. ஆனால் அவன் முழுத்திறமை வெளிப்படுத்த காரணம் , moral  support  எனப்படும் நாம்   கொடுக்கும் உற்சாகமே. அதை கொடுப்பதில் நாம் எள்ளளவும் அவனுக்கு குறை வைப்பதில்லை. ஆனால் இது நாட்டைக் காப்பவனுக்கு தருகிறோமா ? உங்கள் சிந்தனைக்கு..

போராடி திரும்பி வருபவனாகட்டும் ; அல்ல விடுமுறையில் வீடு வருபவனாகட்டும் , சற்று தன் வேலையை பற்றி பேசினால் அதை கேட்க நமக்கு பொறுமை இல்லை. அவன் கஷ்டத்தை பெரும்பாலும் அவன் மனைவியிடமோ பெற்றவரிடமோ சொல்ல முடியாது.'என் குடும்ப சந்தோஷத்தில் நான் எதற்கு இதை சொல்லி அவர்களை புண்படுத்த ?' என்னும் ஒரு எண்ணம் அவனை ஊமையாகி விடுகிறது . ஆக அவனுக்கு தேவை , அதை கொட்டிவிட ஒரு வடிகால்; அணைத்து உரமேற்ற ஒரு தோள்; உங்கள் சிந்தனைக்கு..



இவருக்கு கீழே வேலை செய்கிறோம் என்ற ஒரே காரணத்தினால் , சின்ன ஒரு செயலுக்கும் நம் பாராட்டை மேலதிகாரிக்கு  தெரிவிக்கிறோம். உயிர்ப்பணயம் வைத்து போராடி வருபவன் சொல்லும் கதை நமக்கு பொறுமையை சோதிக்கிறது. நினைவில் கொள்ளுங்கள் - இந்த முறைக்கு உங்கள் அங்கீகாரம் கிடைக்காமல் போனால் அடுத்த முறை அவன் போராடும் வீரியம் பலமாக பாதிக்கப்படும். 'என்னை மதிக்காத இவர்களுக்காக நான் என் போராட வேண்டும் ?'என்ற ஒரு சலனம் அவன் மனதில் விழுந்தால் நம் சுதந்திரமும்  சுலபத்தில் விழுந்திடும்.  கிடைக்குமா அங்கீகாரம்? உங்கள் சிந்தனைக்கு..

ஒரு பத்து அடி முன்னால் சென்று முயன்றால்  எதிராளியை வீழ்த்தலாம். 'ஆனால் எனக்கு எதாவது ஏற்பட்டால் என் குடும்பத்தின் கதி??' என்ற எண்ணம் அவன் மனதில் வந்தால் நம் நாடு வரைப்படம் சுருங்கிக்கொண்டே போகும் . 'நாங்கள் இருக்கிறோம் ' என்ற நம்பிக்கை அவனுக்கு கொடுக்க நாம் தயாரா ? உங்கள் சிந்தனைக்கு..

கால் இழந்து வீடு திரும்பிய மேஜரைப் பார்க்க வரும் ஜவானிடம் ' நான் ஊருக்கு வரும்போது என்னை பார்க்ககூட யாரும் வரவில்லை. எல்லாரும் தேசிய விருது பெற்ற நடிகனின் பாராட்டு விழாவுக்கு சென்றதாக கேள்விப்பட்டேன்' என்று சொன்னால் வந்தவன் மனதில் என்ன கேள்வி எழும்பும் ? பணிக்கு திரும்ப அவன் மனம் முழுதாக ஒத்துழைக்குமா ? தேவை ஒரு ஆறுதல்; கிடைக்குமா? உங்கள் சிந்தனைக்கு..

உயிரோடு இருக்கும்போது ஒதுக்கிவிட்டு , பல காலம் தாண்டி 'பரம்வீர் சக்ரா'  கொடுப்பதில் புண்ணியமில்லை.நாம் யாரும் நம் வீரர்களை அவமானப்படுத்துவதில்லை. ஆனால் அலட்சியப்படுத்துகிறோம்.மாறாக அவர்களின் கௌரவத்தையும் குடும்பத்தையும் பேணிக் காத்தால் தன் இறுதி கணத்திலும் தன் மக்களுக்காக  மரிப்பதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வான்.

ஓரே ஒரு சிந்தனை : 'சில நன்றிகளை நாம் எப்போதோ ஒரு முறை நினைப்பதை விட  எப்போதும் நினைத்திருப்பதே புனிதம்'

No comments:

Post a Comment