Friday, November 4, 2011

ஏழாம் அறிவு

'தமிழர் பண்பாடு சிறந்தது. அதன் சரித்திரம் மிக பன்மையானது. அதை  மறந்துகொண்டிருக்கும் தலைமுறை அதை மீண்டும் போற்ற வேண்டும். அதன் பெருமையை காக்க வேண்டும்.' - இந்த மிக முக்கியமான கருத்தை உணர்த்தும் படம் ஏழாம் அறிவு.

ஆனால் நாம் மறந்த இந்த கசப்பான  உண்மையை  உணர்த்த இனிப்பு தடவி தரும் விஷயத்தில் கோட்டை விட்டதால் படம் கசக்கிறது. ஆனால் ஆச்சர்யம் முக்கிய கதையான போதிதர்மன் கதை காட்சிகள்  மட்டும் ரசிக்கத்தக்க வண்ணம் இருக்கிறது.

சக்கரைப் பொங்கல் சுவையாய் சூடாக இருந்தாலும்  , நைந்த இலையில் வாங்கியதால்  ரசித்து சாப்பிட முடியாமல் அவசரகதியில் விழுங்க வேண்டிய நிர்பந்தம் போல இருக்கிறது படம்.

படங்கள்  பெரும்பாலும் இருவகைகளில் அடங்கி விடும். ஆவணம் அல்லது கருத்தை மட்டும் க்ளாசிக்கலாக தரும் படம்  , கமர்சியல் படம் .  இரண்டும் தனித்தனியே இருக்கும் வரை பிரச்சனை இல்லை. ஆனால் இரண்டையும் சேர்த்து தரும்போது இயக்குனர் அதில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காஞ்சிவரம்,பெரியார்,கல்லூரி போன்ற படங்கள் கிட்டத்தட்ட முதல் வகை. விஜய் , எஸ்.ஜே.சூர்யா ,சிம்பு,தரணி,பேரரசு  படங்கள் இரண்டாம் வகை.

இந்த இரண்டையும் கலந்து தரும்போது மிக நுட்பமாக கையாள வேண்டிய படமாக இருக்கும். ஜென்டில்மேன் ,இந்தியன்,அந்நியன் போன்ற ஷங்கர் படங்களும், தற்போது வந்த வானம், எங்கேயும் எப்போதும் ( கவனிக்க வேண்டிய irony -இது முருகதாஸ் தயாரித்த படம்) போன்ற படங்கள் கலவை பட்டியலில் சேரும் .

ஏழாம் அறிவும் இந்த பட்டியலில் சேர்ந்திருக்க வேண்டிய படம்.  துரதிர்ஷ்டவசமாக திரிசங்கு மாதிரி இங்கேயும் அல்லாமல் அங்கேயும் இல்லாமல் தலைகீழாக தொங்கிக் கொண்டிருக்கிறது.

ஈழம் முதல் தமிழ் பற்று  , தமிழர் பெருமை என மக்களை உணர்ச்சிவசப்படுத்தும்  பல வசனங்கள் படத்தில் உள்ளன. ஆனால் வசனம் மட்டுமே அந்த உணர்ச்சியை படம் பார்ப்பவர்களுக்கு தராது. அதை காட்சியில் ஊட்ட வேண்டும். அதில் சறுக்கியிருக்கிறார் இயக்குனர்.

கிருமியை பரப்புவது என்ற ஆதி கால ஜேம்ஸ் பாண்ட் பட வில்லன் உத்திதான்  Operation Red என்று தெரிந்ததும் தலை வலிக்கிறது. படத்தை பார்ப்பவர்களும் அதே ட்ரீட்மென்ட்டில் சிக்கியது போல ஒரு வலி.

முதல் பதினைந்து நிமிடம் முருகதாஸ் இயக்கியிருக்கிறார். பிறகு அவரின் ஏதோ ஒன்றிரண்டு கத்துக்குட்டி உதவி இயக்குனர்கள் படத்தை எடுத்து  முடித்துள்ளனர் - இறுதி காட்சி உட்பட.
தமிழின் மேல் நமக்கு இருக்கும் மதிப்பும் மரியாதையும் ஒரு இம்மியளவும் குறையவில்லை. இந்த படத்தை குறை சொல்லுபவர்களை , தமிழை மதிக்க தவறியவர்கள் என்று  பிறர் கருதும் வகையில் படத்தில் அதன் கதையோடு தமிழை
முடிச்சு  போட்டு
விளையாடியிருக்கிறார்  முருகதாஸ். படத்தின் ஒரே பலம் இதுதான்.


'படம் நல்லா இல்லை' என்று சொன்னாலே ஏதோ தமிழ் மொழிக்கு நிரந்தர  விரோதி போல மற்றவர்கள் பார்ப்பது குழப்பமடைய வைக்கிறது. முன் எச்சரிக்கையாக ' இந்த படம் தெலுங்கில் பார்தேன். நல்லாவே இல்ல 'என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

பதிவுக்கு சம்பந்தமான கேள்வி: 

 'போதி தர்மர் தமிழர்தானே? காஞ்சிபுரத்தில் தானே பிறந்தார்.?அப்புறம் ஏன் தெலுங்கு படத்துல அவர் குண்டூர்ல பிறந்ததாகவும் ..ஹிந்தி படத்துல தாரவில பிறந்ததாகவும் சொல்கிறார்கள்.இரண்டு மொழிகளிலும் அவர் தமிழர்ன்னு பெருமையா சொல்லி இருக்கலாமே

தமிழர்களை பெருமைப்படுத்துற படம்னு சொல்லிட்டு தமிழர்களை ஏன் இப்படி அசிங்கப்படுத்தனும்???'
- இயக்குனர் மு.களஞ்சியம்


முதல் பார்வையில் காதல் என்றதும் கிளை கதை 'நான் ஒன்றும் வித்தியாசமான கதை அல்ல ' என்பதை அறிவித்து விடுகிறது.

ஹீரோவுக்கு ஒரு நண்பன், எல்லாரும் படியில்  இறங்கியதும் லிப்ஃட்டில் வில்லன் வருவது போன்ற வழக்கமான எல்லாரும் யுகிக்ககூடிய காட்சிகள் சலிப்படைய வைக்கின்றன. 
தன் மேல் கொண்டிருந்தது காதல் அல்ல நடிப்பு என்று தெரிந்ததும் சூர்யா பாடும் பாடல், ஹீரோயின் அப்பா நடித்த அபூர்வ  சகோதரர்கள் படப்பாடலை நினைவு படுத்துகிறது.

சண்டை காட்சிகளிலும்  , ரோட்டில் நடக்கும் கார்களை பயன்படுத்தி  சூர்யாவை வில்லன்  கொல்ல முயலும் காட்சியில்  மூன்றாம் தர கிராபிக்ஸ் சிரிக்க வைக்கிறது.

கடைசியாக எல்லாரும் எதிர்பார்த்த சண்டைகாட்சியும் , பீட்டர் ஹெய்ன் அவசரகதியில் முடித்த , நிறைவைத் தராத ஒன்றாகவே இருக்கிறது. அவ்வளவு அடி கொடுத்த வில்லனை எப்படியெல்லாம் புரட்டி எடுக்க வாய்ப்புள்ள சண்டைக் காட்சி அது.. ஹுஹும்ம்.. failed the expectation..


சுருதி ஹாசன் தமிழில் அறிமுகமான படம் என்று பின்னாளில் ஞாபகம் வைக்க பயன்படும் படமாக மட்டும் இது இருக்கும்.இவர் நடிப்பு பாராட்டகூடியது; தமிழ் உச்சரிப்பு ஏன்
மூச்சு திணறும்படி , அழுத்தம் கொடுத்து ,இவ்வளவு சிரமப்பட்டு வருகிறது என்று புரியவில்லை. வேறு குறை இல்லை..முன்னேற வாய்ப்பிருக்கிறது .

போதி தர்மர் சூர்யா மட்டுமே வித்தியாசமாய் தெரிகிறார். சர்க்கஸ் சூர்யா எல்லா படத்திலும் பார்த்த , பழகிய பாவனையுடைய  ஒருவராகவே இருக்கிறார்.கெட்டப் மாற்றத்தில் இருக்கும் கவனம் , நடிக்கும் உடல் அசைவு,முக பாவனை ,மற்ற  மேனரிசத்திலும் இருக்க வேண்டும்.
இவரைப் பொறுத்த வரையில் , இதுவும் இன்னொரு படமே..நல்ல நடிப்பு என்று பெருமைப்படவும் முடியவில்லை.. மோசமான நடிப்பு என்று புறந்தள்ளவும் தேவையில்லை....

ஹாரிஸ் ஜெயராஜ் இன்னொரு திருஷ்டி. தான் கொடுத்த  பழைய வெற்றி பாடல்களின் தாக்கத்திலிருந்து இவர் மீளாத வரை ,  இவரை நம்பி இருக்கும் இயக்குனர்கள் பரிதாபப் படவேண்டியவர்கள்  .


முருகதாஸ்க்கு , நல்ல ஒரு கருத்தை சொல்ல முனைந்ததமைக்கு  பாராட்டுகள். அதை சரியாக சொல்லாததற்கு
பலமான ஒரு கண்டனம்.
இரண்டையும் சொல்ல ரசிகர்களுக்கு உரிமை இருக்கிறது.

கிளைகதையில் மெனக்கெட்டு , முக்கிய கதையில் இணைக்கும் வித்தையை இன்னும் கற்க வேண்டும். உங்கள் பலம் புதுகதையை உருவாக்குவதில் அல்ல.. அது எங்கிருந்தாலும் எடுத்து விடுவீர்கள். அந்த கதையை செதுக்குவதில் மட்டுமே உள்ளது.

கஜினி வெற்றிக்கு காரணம் Memento அல்ல..அதில் நீங்கள் சேர்த்த சரக்கும் (improvising) , உங்கள் புதுவித ட்ரீட்மென்ட்டும் தான் காரணம்.இதில் அது துளியும் இல்லை.
விஜய் அவார்ட் நடுவர் குழுவில் அடுத்த வருடம்   இடம்பெற நீங்கள் இன்னொரு முறை உங்களை நிரூபிக்க வேண்டும்.
கண்டிப்பாக இந்த படம் அந்த பெருமையைக்  கொடுக்காது.

மொத்தத்தில் நல்ல கதைக்கருவை , திறமையுள்ள ஒரு குழு , தங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தாமல் ,அதை குறைபடுத்தி அரைகுறையாய் முடித்திருக்கும் படம் ஏழாம் அறிவு.

வெரி சாரி முருகதாஸ்.  அடுத்த முயற்சியில் உங்களையும்   ரசிகர்களையும் ஏமாற்றாமல் இருப்பீர்கள்  என்று நம்புகிறோம்.

6 comments:

Unknown said...

//மொத்தத்தில் நல்ல கதைக்கருவை , திறமையுள்ள ஒரு குழு , தங்கள் முழுத்திறமையையும் வெளிப்படுத்தாமல் ,அதை குறைபடுத்தி அரைகுறையாய் முடித்திருக்கும் படம் ஏழாம் அறிவு//
ரொம்ப சரி !!!

கோவை நேரம் said...

அலசலான அதே சமயம் அசத்தலான விமர்சனம்

உலக சினிமா ரசிகன் said...

//கஜினி வெற்றிக்கு காரணம் Memento அல்ல..அதில் நீங்கள் சேர்த்த சரக்கும் (improvising) , உங்கள் புதுவித ட்ரீட்மென்ட்டும் தான் காரணம்.இதில் அது துளியும் இல்லை. //

என் கருத்தும் இதே!

உலக சினிமா ரசிகன் said...

“அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மருத்துவ மனையாக மாற்ற வேண்டாம் அம்மா.
இதை விட சிறப்பாக பெரிதாக மாநகராட்சி தோறும்...
கல்விக்கண் திறந்த காமராஜர் பெயரில் நூலகங்களை உருவாக்குங்கள் தாயே...” என வேண்டி பதிவிட்டுள்ளேன்.
வருகை புரிந்து எனது கருத்துக்கு வலு சேர்க்குமாரு அன்போடு அழைக்கிறேன்.

பாலா said...

உங்கள் கருத்தே என்னுடையதும்...

N.H. Narasimma Prasad said...

படம் பார்த்த எல்லாரும் படம் அவ்வளவா நல்லா இல்லைன்னு சொல்றாங்க. நானும் இன்னும் படம் பார்க்கல. இந்த படத்தை விட, 'டாக்டர்' படம் சூப்பரா இருக்கறதா சொல்றாங்க.

Post a Comment