Friday, October 7, 2011

எங்கேயும் எப்போதும்

சேது வெற்றிக்கு பிறகு தமிழ்  படங்கள் பார்முலா மாற்றப்பட்டது. கடைசி  காட்சி மட்டும் கொடூரமாய் இருக்க வேண்டும் ; மீதி முழுக்க  நகைச்சுவையாகவும் , 
மசாலாத்தனம்  உள்ளதாகவும் மேலோட்டமாக பார்த்தால் எதார்த்தமாகவும் இருக்க வேண்டும் என்பதை பல படங்களில் கடைபிடிக்கப்பட்டது.

நந்தா,  காதல், பிதாமகன்,7G ரெயின்போ காலனி,செல்லமே,பருத்திவீரன், காதலில் விழுந்தேன், மைனா என ஒரு நீண்ட வரிசையில் படங்கள் வந்தன; வெற்றியும் பெற்றன. ஆனால் அந்த வகையில் பத்தோடு பதினொன்று என சேர்க்க முடியாத படம்  - எங்கேயும் எப்போதும். காரணம் கடைசியில்.


கிளைமாக்ஸ் காட்சி முதலில். அதை நோக்கி நடைபெறும் காட்சி நகர்த்தல்களில் படம் சொல்லும் முறை. ஆங்கில படங்களில் அதிகம் பயன்படுத்தபட்டிருந்தாலும் , தமிழில்  தசாவதாரம்,அங்காடி தெரு , கிட்டத்தட்ட வெயிலில்.. இப்போது  இந்த படத்தில். இதில் உள்ள ஒரே ஆபத்து , தெரிந்த கிளைமாக்ஸ் காட்சிக்கு சுவாரசியம் குறையாமல் பார்ப்பவரை அமர வைக்க தெரிந்திருக்க வேண்டிய உத்தி. அது இயக்குனர் சரவணனுக்கு இருக்கிறது.

ஜெய் - சுப்ரமணியபுரம் வெற்றி மமதையில் இருந்து இறங்கி வந்து , தன் இடம் தெரிந்து நடித்திருக்கும் படம். இடையில் அவள் பெயர் தமிழரசி என்ற ஒரு நல்ல படம் கொடுத்தார். மற்றவை குப்பைகள். இந்த படத்தில் அவரின் அப்பாவித்தனமான நடிப்பும் , காதலிக்கு அடங்கி ஒடுங்கும் பாத்திரமும் கனகச்சிதம்.
இது சரியான ட்ராக். ஜெய்.. போலாம் ரைட்...

அஞ்சலி - கற்றது தமிழ் , அங்காடிதெரு போன்ற பேர் சொல்லும் படங்களில் , நினைவில் நிற்கும்  பாத்திரங்களில் நடித்து இவரும்  இடையில் ரெட்டசுழி, மங்காத்தா,ஆயுதம் செய்வோம்  இன்னும் சில குப்பைகள் நடித்து மீண்டும் களத்தில் இறங்கியுள்ளார்.

இந்த மாதிரி வாயாடி காதலி பாத்திரத்தில் நடிக்க நிறைய தைரியம் வேண்டும். பார்ப்பவருக்கு எதோ ஒரு இடத்திலாவது  , 'இந்த சுமாரான பொண்ணுக்கு போய் எதுக்கு இவ்ளோ பயப்படறார்?' என்று நினைத்தால்  கதை கந்தல். அதை உடைத்தெறியும் நடிப்பும் , அளவான அழகும்  அஞ்சலிக்கு உண்டு. இதை தொடர்ந்தால் சுஹாசினி இடத்துக்கு வர முடியும். வாழ்த்துக்கள்.

அனன்யா - ஷர்வானந் காதல் காட்சிகள் , இளைஞர்கள்  மத்தியில் ஹிட். ' கோவிந்தா..கோவிந்தா' பாடலில் அனன்யாவின் நடிப்பும் , அப்பாவித்தனமும் , கடந்த இருபது நாளாக பேஸ்புக்கில் அதிகம்  பகிரப்பட்ட ஒன்று.

படத்தின் கதை இந்த நேரம் எல்லாருக்கும் தெரிந்திருக்கும். எல்லாருக்கும் தெரிந்து பயன் இல்லை.  ஓட்டுனர்கள்,குறிப்பாக தனியார் பேருந்து , லாரி ஓட்டுனர்கள் பார்க்க வேண்டிய படம்.  விஜய் டிவி இனி சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தும் படம் என்று தனியாக ஒரு பிரிவை ஆரம்பித்து இந்த படத்திற்கு தாராளமாக விருது கொடுக்கலாம்.

முருகதாஸ் கொண்டாடப்பட்ட வேண்டிய இயக்குனர் ஒன்றும் அல்ல.  ஆனால் இந்த படத்தை கொடுத்ததன் மூலம் பாராட்டப்பட வேண்டிய தயாரிப்பாளர் ஆகியிருக்கிறார். சங்கர் S பிக்சர்ஸ் மூலம் செய்ததை, பிரகாஷ்ராஜ் முன்பு  டூயட் மூவீஸ் மூலம் செய்ததை  இவர் தொடரலாம் என்று நம்புவோம். புதிய  பல இயக்குனர்கள் வர ஏணியாய்/ஏதுவாய்  இருக்கும்.

சரி , படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு சென்று விட கூடாது.  யோசிப்போம். இது ஒன்றும் மிகைபடுத்தப்பட்ட நிகழ்வு அல்ல. சென்னை - கோவை-திருச்சி - மதுரை- பெங்களுரு என்று இருக்கும் எல்லா தேசிய நெடுஞ்சாலைகளிலும் நடக்கும் அன்றாட விபத்துகளில் ஏற்படும் தனி மனித பாதிப்பை உணர்த்தும் கதை இது. 

நன்றாக படித்து , கணினி நிறுவனத்தில் வேலை வாங்கி , கடினமாக ஐந்து வருடம் உழைத்து பதவி உயர்வு பெற்ற பிறகே திருமணம் என்று சொல்லி ,அதன் பிறகு கல்யாணத்திற்கு தலையாட்டி , நிச்சியதார்த்ததிற்கு செல்லும்போது சமீபத்தில் விபத்தில் கருகிய என் தோழியை நினைக்கிறேன். மீதி வாழ்க்கையை எங்கு வாழ அனுப்பி வைக்கபட்டாள் சிரிக்க மட்டுமே தெரிந்த என் அப்பாவி தோழி ? காரணம் - முகமறியா ஒரு ஓட்டுனர்.  

மேலும் வலியை உணர இதையும் பார்க்கலாம்.   

எங்கேயும் எப்போதும் - இப்போதும் எப்போதும் நினைவில் இருக்க வேண்டிய படம்.
-------------------

6 comments:

shortfilmindia.com said...

நைஸ் ரெவ்யூ.
கேபிள் சஙகர்

பாலா said...

நல்ல விமர்சனம் நண்பரே.

rajamelaiyur said...

உண்மையில் அருமையான படம்

rajamelaiyur said...

tamilmanam first vote

N.H. Narasimma Prasad said...

Nice Review Ashok.

R. Gopi said...

உங்கள் பதிவு பற்றி இன்று வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்

http://blogintamil.blogspot.com/2011/11/blog-post_13.html

Post a Comment