Monday, October 24, 2011

பாப்கார்ன் பாக்கெட் - 20111024



' உள்ளாட்சி தேர்தல் முடிவு ஒன்றும் வியப்பில்லை'ன்னு திமுக , தேமுதிக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மாறி மாறி அறிக்கை விடும்போது, பாஸ் என்கிற பாஸ்கரன் சந்தானம் டயலாக்தான்  ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.

பெரும்பாலான கட்சிகள் உள்ளாட்சித் தேர்தல்ல இந்த தடவ போட்டியிட்டதுக்கு காரணம் , கட்சி காணாம போகக் கூடாதுங்கற பயம்தான். அதுவும் குறிப்பா இந்த தடவ படுகேவலமா தோற்போம்னு தெரிஞ்சும் நாளுக்கு ரெண்டு பில்டப் அறிக்கை விட்டு, நாங்க இன்னும் இருக்கோம்னு மக்களுக்கு அட்டென்சன் போட்ட கட்சிகள் நிறைய..



தேர்தல் முடிவ பார்த்ததும் தெரிஞ்ச விஷயம் -

திமுக உயிரோடதான் இருக்கு. பிழைக்க வாய்ப்பிருக்கு.

தேமுதிக , ஏற்கனவே சொன்னதுதான். ஒரு தடவை தப்பித்தவறி ஜெயிச்சதுக்காக எல்லா தடவையும் அப்படியே நடக்கும்னு நெனைக்கிறது முட்டாள்தனம்.

வைகோ தன்னோட உண்மையான ஈழபோரட்டத்தோட பலனை ,அதன் அங்கிகாரத்தை மக்கள்கிட்ட இருந்து ஓரளவுக்கு வாங்கிட்டார். 

மீதிகட்சிகள் பத்தி அறிய ரெண்டாம் பத்தியை மறுபடியும் படிங்க.

இந்த தேர்தலில் நான் பார்த்த சந்தோசமான விஷயம் , பத்து மேயர்கள்ல ஆறு பெண் மேயர்கள்.



அட இனியும் என்ன முப்பத்தி மூணு சதவீதம் ? அறுபது சதவீதம் எடுத்துட்டாங்க.. வாழ்த்துக்கள்.
------------------------------------------------------------

ஸ்டீவ் ஜாப் மறைவில் இருந்து மீள்வதற்குள் இன்னொரு அதிர்ச்சி செய்தி -  'சி' நிரலாக்க மொழியை உருவாக்கிய டென்னிஸ் ரிட்ச்சி காலமானது. கணினி தோழர்களுக்கு  பாலபாடமே சி-தான்.எந்த தொழில்நுட்பம் சார்ந்த கணினி தளத்தில் இருந்தாலும் இந்த மொழியறிவு இல்லாமல் ஒரு துரும்பு கூட அசைக்க முடியாது. இல்லை என்று சொல்லுபவர்கள் ,அவர்களை அறியாமல் அதன் சாரங்களை பயன்படுத்தியிருப்பார்கள்.
யுனிக்ஸ் இயங்குதளத்தை வேறு சிலரோடு சேர்ந்து  உருவாக்கியவரும்  இவர்தான். இவரும் புற்றுநோய்க்குதான் பலியாகியிருக்கிறார்.



இவர்களைப் போன்ற சிறந்த அறிவு ஜீவிகளை மரணத்தை தவிர வேறு யாராலும் தோற்கடிக்க முடியாது.அதே சமயம் மரணம் வருவது தெரிந்தாலும் , அதை ஒத்திபோட தகுதி படைத்தவர்கள் இவர்கள் - 'இரு..என்ன அவசரம்? என் வேலையை முடிச்சுட்டு வரேன்.' என்று தங்கள் பணிகளில் ஐக்கியம் ஆகும் ரகத்தை சேர்ந்தவர்கள் இவர்கள். மரணமும் கைகட்டி ஒரு ஓரமாக நின்று ,அவர்கள் வேலை முடிந்ததும் அழைத்து செல்லும்.

ஆக மரணத்தை தள்ளிபோட சிறந்த வழி, எதாவது உருப்படியாக செய்ய முனைவதும் , அதில் முழுமுனைப்போடு ஈடுபடுவதும்தான் என்று வாழ்ந்து காட்டியவர்கள். They are Legends.
------------------------------------

முரண் படம் தமிழுக்கு புதியது.நல்ல முயற்சி.சேரனும் சரி , பிரசன்னாவும் சரி ,தங்கள் நிலை உணர்ந்து பாத்திரத்தை தேர்ந்தெடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். கதையின் முதல் காட்சி விஷயத்தை , கடைசி காட்சிக்கு முடிச்சு போடும் உத்திக்கு பேர் என்னவென்று தெரியவில்லை. ஆனால் அதை படத்தில் நுழைக்க கதையை மிக கவனமாக கையாள வேண்டும்.  இயக்குனர் அதை செய்திருக்கிறார்.

ஆல்பர்ட் ஹிட்ச்காக்கின் 'Strangers on a Train' படத்தின் தழுவலாக இருந்தாலும் , அதை பெரிதாக எடுத்துகொள்ள தேவையில்லை. தெய்வதிருமகள் வெற்றிக்கு பிறகு ஏறக்குறைய எல்லா பெரும் 'அட விடுங்க பாஸ்..எங்க இருந்து எடுத்தா என்ன ? நமக்கு போர் அடிக்காம ரெண்டு மணி நேரம் ஓட்டரானுகளா.. அது போதும் ' என்ற மனப்பான்மை வந்திருக்கிறது. அதுவும் சரிதான்.

நான்கு படத்தை தெலுங்கில் இருந்து நல்லபடியாக அப்படியே திருப்பிபோட்ட ஜெயம் ராஜா கூட 'கிக்'கை தில்லாலங்கடி ஆக்கும்போது குப்புற விழுந்தார்.  தழுவலோ காப்பியோ , படத்தை ரசிக்கும்படி கொடுத்தால் போதும் போல. முரண் அந்த ரகம்.




சேரனுக்கு 'யுத்தம் செய் 'க்கு பிறகு சொல்லிகொள்ளும்படி இன்னொரு படம். ஆனால் ஒரே குறை - இந்த விஷயத்துக்கு இப்படிதான் ரியாக்ட் பண்ணுவார் என்று பார்ப்பவருக்கு நன்றாக முன்னரே தெரிகிறது.

வேறு வழியில்லை. விஜய்க்கு எப்படி முதிர்ச்சியான கேரக்டர் ஒத்து  வராதோ , தனுஷ்க்கு எப்படி டீசென்டான கேரக்டர் ஒத்து வராதோ , அதே போல சேரனுக்கு முரட்டு கேரக்டர் ஒத்து வராது. தப்பில்லை.முயற்சி எடுக்கிறேன் பேர்வழி என்று காமெடி  ஆக்காமல் இருக்கும் வரை இவர் பாராட்டப்பட  வேண்டியவர்.
முரண் - Classic Thriller.
----------------------------------------

எல்லாரும் எப்போதும் அரசியல் சுப்புடு ஆகி விட முடியாது. சோ போல பாலிடிக்ஸில் பின்னால் நடப்பதை அப்படியே ஒப்பிக்க முடியாது. ஆனால் சில விஷயங்கள் 'சூரியன் காலை உதிக்கும்.இரவில் மறையும்' என்பதுபோல் வெகு சுலபமாக கணிக்க முடியும். தேர்தலுக்கு முன்னால்
கேப்டன் விஷயத்தில் அம்மாவின் போக்கு பற்றிய என்னுடைய கணிப்பும் நூறு சதம் இதில் உண்மையாயிருக்கிறது.

//
ஆனால் இப்படியும் இருக்கலாம். கீழ்வருமாறு இவர் யோசித்திருந்தால் இவர் முடிவு சரிதான். 

தனியாக நின்று மொத்தமாக தோல்வியுறுவதை விட இப்படி நாற்பது தொகுதிகளில் நின்றால் எப்படியும் ஆளும்கட்சி எதிர்ப்பலைகளினால் குறைந்தது முப்பதாவது கிடைக்கும்.திமுக படுதோல்வி அடைந்தால் அந்த கட்சி உடைந்து விடும் கூறு அழகாக கண் முன் தெரிகிறது. 

பின் இந்த அம்மையார் எப்போதும் போல (தனி பெரும்பான்மையில் வந்தால் ) உடனே கூட்டணியில் இருந்து விலக்கி விடுவார். அதுதான் நமக்கும் வேண்டும்.

திமுக :குடும்ப சண்டையில் அழகிரி - ஸ்டாலின் - மாறன் என்று அடித்துக் கொண்டிருப்பார்கள். காங்கிரஸ் உட்கட்சி பூசல் - எந்த தலைவரும் இல்லை. .வைகோவின் மதிமுக மரணத்தருவாயில். பாமக எல்லாம் அம்மையாருக்கு ஒரு பொருட்டே அல்ல. 

பிறகென்ன ?  நாம்தான் பிரதான எதிர்க்கட்சி. ஐந்து வருடம் பொறுத்திருந்தால் அடுத்த முறை தேமுதிக - அதிமுக தான். வேறு யாரும் இல்லை. 

2016  சரியான நீயா ? நானா ? போட்டியாக இருக்கும். இப்போது இருப்பது போல் நீயா ? நானா ? அவனா ? இவனா? என்பதெல்லாம் இருக்காது. தமிழ் மக்களுக்கே உரிய குணமான ஆட்சி மாற்ற எண்ணம் நம்மை முதல்வர் ஆக்கி விடும்.

ஆக , இப்படி இவர் காய் நகர்த்துவது இந்த முறை பலனை எதிர்பார்த்து அல்ல .இப்போது கிடைக்க போகும் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் , திமுகவை பின் தள்ளி இரண்டாம் இடத்தை தக்க வைத்துக்கொள்வதிலும் , பின் வரும் பெரிய பலனையும் எதிர்பார்த்துதான். 
//

அம்மாவும் ,தாத்தாவும்,ஐயாவும் குணம்  மாறாமல் இருக்கும் வரை பல விஷயங்கள் இப்படிதான் எல்லாராலும் எளிதாக கணிக்க முடியும்.
--------------------------------------

எம்ஜீஆர் சூட் போட்டாலே அவருக்கு ஒரு தனி அழகு வந்து விடும். அவரின் முக வசீகரம்  இந்த பாடலில் மிக பிரகாசிக்கும்.தன்மையும் மிக கண்ணியமும் உள்ள நாயகன் பாடும் பாடல். எந்த காலத்துக்கும் பொருந்தும்.

அதிலும் இந்த பாடலில் கையை அதிகம்  ஆட்டாமல் , நடனம் ஆடாமல் மிக நளினமாக நடித்திருப்பார்.  (ராதாரவி இதே பாணியைத்தான் 'பூவே செம்பூவே' பாடலில் பயன்படுத்தியிருப்பார் ). கூடவே வாலியின் பாடல் வரிகள் ஆளை தலைகீழாக உலுக்கிபோடும்.




'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்; வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்;
 இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.'

கடைசி வரியை எம்ஜீஆரை தவிர எந்த ஹீரோ பாட முடியும்?
--------------------------------

4 comments:

rajamelaiyur said...

//
' உள்ளாட்சி தேர்தல் முடிவு ஒன்றும் வியப்பில்லை'ன்னு திமுக , தேமுதிக உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் மாறி மாறி அறிக்கை விடும்போது, பாஸ் என்கிற பாஸ்கரன் சந்தானம் டயலாக்தான் ஞாபகத்துக்கு வந்து தொலைக்குது.

//
உண்மைதான்

rajamelaiyur said...

//
'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்; வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்;
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்; இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.'

கடைசி வரியை எம்ஜீஆரை தவிர எந்த ஹீரோ பாட முடியும்? //

நச்சுனு கேட்டிங்க ...

rajamelaiyur said...

இன்று என் வலையில்

விஜய் Vs சூர்யா : ஜெய்க்கபோவது யார்?

உலக சினிமா ரசிகன் said...

பாப் கார்ண் எல்லாமே மொறுமொறு.

Post a Comment