Monday, March 14, 2011

புத்தக வாசம்


சில வருடங்களுக்கு முன்னால் மின்னூல் வசதிகள் இருந்திருந்தால் எனக்கு நிறைய பணம் மிச்சம் ஆகியிருக்கும்.வீட்டில் ஒரு அறை விசாலமாக் இருந்திருக்கும். ஒவ்வொரு முறை நான் ஊர் மாற்றும்போதும் என் அம்மாவுக்கு புத்தங்களை பத்திரமாக பேக் செய்யும் பெரிய வேலை குறைந்திருக்கும்.  அதனால் என்ன ?



இப்போதும் மின்னூல் பதிவு வந்தாலும் எனக்கு கனமான அந்த புத்தகங்களை கையில் பிடித்து படிப்பதிலேயே மன நிறைவும் ஆனந்தமும் கிடைக்கிறது.அதிலும் நான் சாண்டில்யன் காதலன். சொல்ல வேண்டுமா ? அவரின் புத்தக விலையும், சுமையும் அதே சமயம் சுவையும் மிக அதிகம். என் வீட்டில் ஒரு அலமாரி முழுக்க அவர்தான் வியாபித்திருக்கிறார். இப்போது அந்த அலமாரியை , அந்த புத்தகங்களை அப்படியே இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விட்டேன்.தெரியாத்தனமாக இந்த முறை ஊருக்கு போனபோது அப்பாவிடம் அதை சொல்லி மடிக்கணினியை திறந்து காண்பிக்க  'அடப்பாவி... என் சம்பளத்தில பாதிய  அதுக்குதானடா செலவு செஞ்ச ...' என்று ஒரு முறை அந்த அலமாரியை திறந்து மேலிருந்து கீழ் பெருமூச்சுடன் அங்கலாய்த்தார். 




ஆனால் எண்ணிப்பாருங்கள்.. அந்த கனமான புத்தகத்தை படிப்பதில் உள்ள சுகமும் , மகிழ்ச்சியும் மின்னூலில் கிடைக்கிறதா ? 

அப்போதெல்லாம் அடிக்கடி  உடுமலையிலோ பொள்ளாச்சியிலோ புத்தக கண்காட்சி வைப்பார்கள்.என் அப்பாவுடன் சென்று குறைந்தது ஆறு மணி நேரம் தேடி , எனக்கு பிடித்ததை , தேவையானதை குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் அள்ளிக்கொண்டு வருவேன். அது ஒரு கலை.

என் முதல் சரித்திர புத்தகம் 'பொன்னியின் செல்வன் ' இல்லை ; ராகிராவின் 'நான் கிருஷ்ணதேவராயன்' .முதல் தத்துவ புத்தகம் 'அர்த்தமுள்ள  இந்து மதம்' இல்லை ; 'விவேக சிந்தாமணி . என் முதல் சமுதாய ஏற்றத்தாழ்வை பற்றிய புத்தகம் ஜெயகாந்தனுடையதல்ல...'ராஜா வந்திருக்கிறார்' உட்பட இருந்த ஒரு  கதைத்தொகுப்பு.. 

என் புத்தக விஷயத்தில் நான் மிக சுயநலவாதி. புத்தகம் வாங்கிய கையோடு ,முன்பக்கத்தில் என் பெயரையும் ,வாங்கிய நாளையும் இடத்தையும் எழுதி ஒரு கையெழுத்தும் இட்டபிறகுதான் எனக்கு அது முழு சொந்தம் என்ற பரிபூரணம் வரும். அதை உடனே எடுத்து பத்திரமாக அடுக்கி வைத்த பின் ,எதோ ஒரு புது புதையலை பூதத்திடம்  பாதுகாப்பாக ஒப்படைத்தது போல ஒரு நிறைவு . யாருக்கும் அதை இரவல் தரமாட்டேன். சில புத்தகங்களை பிறர்  பார்க்க கூட விட மாட்டேன்.  'இனி அது முழுக்க முழுக்க எனக்கு சொந்தம்' என்று மனதிற்குள் ஒரு பிரதிக்ஞை எடுத்துகொள்வேன் . புத்தக விஷயத்தில் நாம் Possessive-ஆக  இருக்க வேண்டும்;அதில் தவறில்லை .  உங்களால் அப்படி இருக்க முடியவில்லை என்றால் , யாருக்காவது புத்தகத்தை கொடுக்கும்போது அது திரும்ப வராது அல்லது ஊனப்பட்டு வரும் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.அதுதான் நடக்கும்.

எந்த புத்தகம் வாங்கினாலும் அதை படிக்கும்போது அதோடு வாழ வேண்டும்; அதோடு மட்டுமே வாழ வேண்டும் . ஒரு புத்தகம் படிக்கும்போது இடைப்பட்ட நேரத்தில் வேறு ஒரு புத்தகம் படித்தால் இரண்டிலுமே நம்மால் பூரணமாக மகிழ்ச்சியை அறிய முடியாது. கல்லூரியோ அலுவகமோ முடித்து பிறகு உங்களுக்கு வசதியான இடத்தில (தனியாக அமைதியாக ) அமர்ந்துகொண்டு , அதை கையில் எடுத்து முகர்ந்துப்பார்த்து படிக்க ஆரம்பிக்கும்போது அடடா .. ஏதோ நம்  மனதிற்கினிய காதலியுடன் கண்ணியமாக உரையாடுவதுபோல் ஒரு ஆனந்தம் பிறக்கும். அது என்ன கண்ணியமாக உரையாடுவது ? அது மிக முக்கியம் .

  • சிலர் புத்தகத்தை படிக்கும்போது அதை மடக்கி படிப்பார்கள். -அயோக்கியர்கள்.
  • சிலர் எதுவரை படித்திருக்கிறோம் என்று ஞாபகப்படுத்த அந்த பக்கத்தை ஒரு முனையில் சிறிதாக மடிப்பார்கள்- ஐந்தறிவு ஜென்மங்கள். 
  • சிலர் மற்றவரிடம் கதை அளந்துகொண்டோ , டிவியோ பாடோ கேட்டுக்கொண்டோ படிப்பார்கள்.-புத்தி கெட்டவர்கள்.
  • சிலர் ஏதோ பெரிய சிறுகுறிப்புத்தொண்டர் போல் குறிப்பெடுக்க வேண்டி , வரிகளுக்கு கீழ் கோடிட்டோ , வரிகள் மேலேயே  கோடிட்டோ தாங்கள் அதை புரிந்துகொண்டதுபோல் ஆதரிப்பது போல் புத்தகத்தை அலங்கோலப்படுத்துவார்கள்  - கடைமடையர்கள்
(பாடபுத்தகங்கள் நிலைமை மிகப்பரிதாபம்.'பிட்'டுக்கு பக்கங்கள் கிழிக்கப்பட்டு, கிழிக்கப்பட்டு வருடக்கடைசியில் அட்டை மட்டுமே எஞ்சியிருக்கும்.  )


புத்தகத்தை நாம் அஃறிணையாகப் பார்க்க கூடாது . அது ஒரு இனிய நல்ல  நண்பன் , அழகிய காதலி, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு குரு (சில புத்தகங்களுக்கு இது பொருந்தாது - உறவுகளை தேர்ந்தெடுப்பதில் இருக்கும் கவனம் புத்தகங்களுக்கும் பொருந்தும் ). அதோடு வாழும்போது அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். நான் ஒரு புத்தகத்தை எவ்வளவு முறை படித்தாலும் அவ்வளவு முறையும் அது புதிதாக நிறைய கற்றுகொடுக்கிறது. 

எத்தனை பிரச்சனைகளை சந்தித்தாலும் ,இரவு படுக்கும் முன் ஒரு புத்தகத்தை எடுத்து படித்தால் மனம் இலவம்பஞ்சாக இலகுவாகி நித்தரை நிம்மதியாய் இருக்கும் . (தூக்கம் வருவதற்காகவே புத்தகம் படிக்கும் சிலர் உண்டு - அவர்கள்  புத்தகத்தை படிப்பதில்லை , கையில் பிடிக்கமட்டுமே செய்கிறார்கள்) 

என்னை பொறுத்தவரை புத்தகம் படிக்க சிறந்த நேரம் மாலைதான். வீட்டில் எல்லாரும் தொலைக்காட்சி பார்க்கும்போது தொல்லையில்லாமல் படிக்க அதுவே சிறந்த நேரம். புத்தகம் படிக்கும் பழக்கம் மட்டும் ஒருவனுக்கு இருந்தால் அவனுக்கு நண்பர்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை . காரணம் சில நண்பர்கள் தருவது Quantity டைம் ; புத்தகங்கள் தருவது Quality டைம்.  

இப்படி அருமையான புத்தகத்தை முழதாக அனுபவிக்க சிறந்த வழி , அதை கடையில் வாங்கி படிப்பதுதான். இதே எண்ணம் பலருக்கும் இருப்பதனால்தானோ  என்னவோ ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனை சக்கைபோடு போடுகிறது.



மின்னூலுக்கு நான் எதிரி அல்ல.அது ஒரு மிக அருமையான வரவேற்கத்தக்க முன்னேற்றம். மக்களுக்கு எளிதாக புத்தகங்களை கிடைக்க செய்து அவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய ஒரு அற்புதம். மின்னூல்  இல்லையென்றால் ஒய்வு நேரத்தில் பேஸ்புக்கிலும் ஆர்குட்டிலும் நேரத்தை போக்கியிருப்போம்.

ஆனால் அதில் எனக்கு எழுத்துக்கள் மட்டுமே தென்படுகிறது. ஒரு சிநேகம் வருவதில்லை. புத்தகத்திற்கு என இருக்கும் ஒரு வாசம் கிடைப்பதில்லை. பக்கத்தை திருப்பும் போது இருக்கும் சுகம் Next
Page க்ளிக்-கும்போது   கிடைப்பதில்லை.இது என் புத்தகம் என்று ஒரு உரிமை வருவதில்லை;மாறாக இரவல் வாங்கி படிக்கும் குற்ற உணர்வே மேலோங்குகிறது. காலத்திற்கு ஏற்ப மாறவேண்டும் என்று தெரிந்திருந்தும் , சுஜாதா சார் 'இன்னும் சில வருடங்களில் புத்தகங்கள் அனைத்தும் கணினியில் அச்சேறும் காலம்தான் வரும் ' என்று எச்சரித்திருந்தும் , இதில் என்னால் பழமைவாதியாகவே இருக்கமுடிகிறது.

எது எப்படியோ... இனிமேலும் புத்தகங்கள் வாங்குவதை நான் நிறுத்த போவதில்லை . என் புத்தக அலமாரி எனக்கு கொடுக்கும் திருப்தி என் ஈபுக்ஸ் போஃல்டர் கொடுப்பதில்லை. 

 நீங்கள் எப்படி? 

11 comments:

Anonymous said...

could you please post the web site where you download "சாண்டில்யன்" books

அபிமன்யு said...

ஹஹா.. அனானிகளுக்கு பதில் சொல்வதில்லை என்று ஒரு சின்ன கோட்பாடு வைத்திருக்கிறேன். பெயரும் மின்னஞ்சல் முகவரியும் கொடுத்தால் உடனே சொல்கிறேன்.

ராஜகோபால் said...

எனக்கும் உங்களை போன்று புத்தகம் வாங்கி படிக்கும் எண்ணம் உண்டு ஆனால் அதிக நேரம் கணினியுடன் செலவிடுவதால் அதனை செய்ய முடிய வில்லை., இருந்தும் எனக்கு பிடித்த சில நூல்களை மின் நூல்களாக சேர்த்து வருகிரேன் தங்களின் என்னத்திற்கு எனது பாராட்டுகள்

நாவல் படிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு உதவும் என்ற என்னத்தில் என் வலை பூ நேரம் இருந்தால் பாருங்கள் படியுங்கள்

http://gundusbooks.blogspot.com/

தமிழ் செல்வன் இரா said...

அன்புள்ள அபிமன்யு,
புத்தகங்கள் மேல் உள்ள உங்கள் காதலை புரிந்துகொள்ள முடிகிறது..
// அதில் எனக்கு எழுத்துக்கள் மட்டுமே தென்படுகிறது. ஒரு சிநேகம் வருவதில்லை. புத்தகத்திற்கு என இருக்கும் ஒரு வாசம் கிடைப்பதில்லை. பக்கத்தை திருப்பும் போது இருக்கும் சுகம் Next
Page க்ளிக்-கும்போது கிடைப்பதில்லை. //
எனக்கு பிடித்த வரிகள்..
பி . கு : நானும் உங்களை போலத்தான்
// அதை உடனே எடுத்து பத்திரமாக அடுக்கி வைத்த பின் ,எதோ ஒரு புது புதையலை பூதத்திடம் பாதுகாப்பாக ஒப்படைத்தது போல ஒரு நிறைவு . யாருக்கும் அதை இரவல் தரமாட்டேன். //

தமிழ் செல்வன் இரா said...

அன்புள்ள அபிமன்யு,
புத்தகங்கள் மேல் உள்ள உங்கள் காதலை புரிந்துகொள்ள முடிகிறது..
// அதில் எனக்கு எழுத்துக்கள் மட்டுமே தென்படுகிறது. ஒரு சிநேகம் வருவதில்லை. புத்தகத்திற்கு என இருக்கும் ஒரு வாசம் கிடைப்பதில்லை. பக்கத்தை திருப்பும் போது இருக்கும் சுகம் Next
Page க்ளிக்-கும்போது கிடைப்பதில்லை. //
எனக்கு பிடித்த வரிகள்..
பி . கு : நானும் உங்களை போலத்தான்
// அதை உடனே எடுத்து பத்திரமாக அடுக்கி வைத்த பின் ,எதோ ஒரு புது புதையலை பூதத்திடம் பாதுகாப்பாக ஒப்படைத்தது போல ஒரு நிறைவு . யாருக்கும் அதை இரவல் தரமாட்டேன். //

அபிமன்யு said...

அருமையான முயற்சி ராஜகோபால் .. உங்கள் மின்னூல் பொக்கிஷம் அற்புதமானது..

நன்றி தமிழ்செல்வன் ..

mogan said...

Hi
Just read your blog.
Your Views about book reading is true.
And another point about book sharing with friends. i had lot of experience in book sharing with friends. Either book will not return or return with some pages teared or bookmarked by pens.

Can you give me link for sanilyan books?
My mail id is moganarangan@gmail.com

Thanks
Mogan

Valli said...

/யாருக்கும் அதை இரவல் தரமாட்டேன். சில புத்தகங்களை பிறர் பார்க்க கூட விட மாட்டேன். 'இனி அது முழுக்க முழுக்க எனக்கு சொந்தம்' என்று மனதிற்குள் ஒரு பிரதிக்ஞை எடுத்துகொள்வேன் . புத்தக விஷயத்தில் நாம் Possessive-ஆக இருக்க வேண்டும்;அதில் தவறில்லை . உங்களால் அப்படி இருக்க முடியவில்லை என்றால் , யாருக்காவது புத்தகத்தை கொடுக்கும்போது அது திரும்ப வராது அல்லது ஊனப்பட்டு வரும் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.அதுதான் நடக்கும்./// so..enaku book kudukiren kudukirenu solli yemathinathuku ithu than unmayana reason-a...?

அபிமன்யு said...

ஐயையோ .. இப்படி அத பலகாலம் ஞாபகம் வெச்சுகிட்டு இப்படி ஒரு கேள்வி கேட்பீங்கன்னு நான் எதிர்பாக்கவே இல்ல வள்ளி .. உண்மையாவே நான் உங்களுக்கு புத்தகம் கொடுக்கணும்னு முயற்சி பண்ணுனேன். முடியல.. அடுத்த மாசம் ஊருக்கு போகும்போது கொண்டு வரேன்னு சொன்னா அடிக்க வருவீங்க.. கவலைப்படாதீங்க நான் உங்களுக்கு ஈபுக் லிங்க் அனுப்பறேன். .. சமாதானம் சமாதானம் ....

Anonymous said...

நானும் உங்களை போன்றவன்தான் புத்தக விடயத்தில்.
புத்தகத்தின் வடிவம் குலையாமல் படிப்பதுதான் எனக்குப் பிடிக்கும். இதற்காகவே இரவல் தருவதில்லை என்ற கொள்கை வைத்திருக்கிறேன். புத்தகத்தை வாசிக்க ஆரம்பித்தால் எனக்கு இந்த வையம் மறைந்துவிடும். காது செவிடாகிவிடும். இதனால் பலமுறை வீட்டில் திட்டு வாங்கிய அனுபவம் உண்டு.
என் மானசீக எழுத்தாளர் சாண்டில்யன் ஆவார். இவருடைய புத்தகங்கள் அனைத்தையும் வாங்கி படித்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்.
இருந்தாலும் இவருடைய நூல்கள் இணையத்தில் கிடைப்பதில்லை என்பதாலேயே. கடல்புறா,யவனராணி,ராஜபேரிகை,இராஜதிலகம் போன்ற நாவல்களை ஸ்கேன் செய்து எனது வலைப்பூவில் தர ஆரம்பித்தேன். இப்போது மற்ற நூல்களும் இணையத்தில் கிடைக்க ஆரம்பித்து விட்டன.
ஆனாலும் நான் மின்னூலை வாசிப்பதில்லை. புத்தகமாக வாங்கியே வாசித்து வருகிறேன். காரணம் சொல்லவேண்டியதில்லை என நினைக்கிறேன்.
சாண்டில்யன் நூல்கள் இணையத்தில் கிடைக்கவேண்டும் என்பதற்காகவே ஸ்கேன் செய்து வெளியிட்டேன்.
எமது வலைப்பூ முகவரி
http://thamizhthenee.blogspot.com/
மின்னஞ்சல் முகவரி
vanmathimaran@gmail.com
புத்தகங்களை பற்றி உங்களோடு பகிர்ந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன்...
புத்தகவாசம்..அருமையான பகிர்வு..பாராட்டுக்கள்

அபிமன்யு said...

இனிய தமிழ்நேசன்,

உங்களுக்கு அறிமுகம் தேவையில்லை.நான் பார்த்து வியக்கும் நபர்களில் நீங்களும் ஒருவர்.உங்கள் சேவை மகத்தானது. தற்போது வெளிநாட்டில் இருக்கும் எனக்கு புத்தகங்கள் படிக்க முடிகிறது என்றால் அது உங்களால்தான். எப்படி இத்தனை சிறந்த புத்தகங்களை தொகுத்து,அதை வகைபடுத்தி தருகிறீர்கள் என்று இன்று வரை வியக்கிறேன். கிட்டத்தட்ட என் நண்பர்கள் முப்பது பேருக்காவது நான் தமிழ்தேனீ பக்கத்தை அறிமுகம் செய்து வைத்திருக்கிறேன். நீங்கள் ஒரு ஆறு மாத காலம் இடைவெளி விட்டபோது , எல்லாரையும் போல நானும் பதைபதைத்தேன்.ஓரிரு மின்னஞ்சல் கூட அனுப்பியிருக்கிறேன். நீங்கள் திரும்ப வந்து மீண்டும் தொடர்வதனால் மிகுந்த மகிழ்ச்சியடைந்தவர்களுள் நானும் ஒருவன்.
தயவுசெய்து தொடர்பில் இருங்கள். என் மின்னஞ்சல் ashoksara@gmail.com .வாழ்த்துக்கள்.

Post a Comment