Wednesday, February 16, 2011

காமெடி நடிகர்கள் - ஒரு சீரியஸ் அலசல்

தமிழ் சினிமாவிற்கு இருக்கும் எண்ணற்ற சிறப்புகளில்
சொல்லும்படியான ஒன்று: நீடித்து நிற்கும், தரமும் தனி பாணியும் கொண்ட நகைச்சுவை நடிகர்களை கொண்டிருப்பது. மிக பழங்காலத்துக்கு போக வேண்டாம் ; என்எஸ்கே தொடங்கி  தங்கவேலு , சந்திரபாபு வரை எல்லா நகைச்சுவை நடிகர்களும் தங்களுக்கென ஒரு பாணியையும் , தனக்கென ஒரு ஆளுமைக்காலத்தையும்  ஏற்படுத்தி அந்த காலத்தில் தங்கள் பேரை நிலைத்து நிற்க செய்து மறைந்தனர்.




அதன் பின்னால் வந்த நாகேஷ் ஒரு தனி சகாப்தத்தையும் , நல்ல மாற்றத்தையும் கொண்டு வந்தார். அதற்கு பெரிய உறுதுணை - இயக்குனர் கே. பாலச்சந்தர்.
நகைச்சுவைக்கு மட்டுமல்ல, நல்ல நடிப்பையும் ,அதோடு கூடிய கதை ஒன்றிய பாத்திரப்படைப்பாகவும் மாறி ஜொலித்தவர் நாகேஷ். எதிர் நீச்சலையும் , சர்வர் சுந்தரத்தையும் , தருமியையும் , காதலிக்க நேரமில்லையையும் மறக்க முடியுமா ? கடைசி வரை இவரக்கும் எந்த விருதும் மறுக்கப்பட்டது திரையுலகம் வெட்கப்படவேண்டிய விஷயம். தனி ஒரு பதிவுக்குரிய விசயமும் சிறப்பும் கொண்டவர் நாகேஷ். விரைவில் எழுதுகிறேன்.



  


அடுத்த 25 வருஷம் கவுண்டமணி காலங்கள். செந்தில் இல்லாமல் கவுண்டமணி ஜெயிப்பார். கவுண்டமணி இல்லாமல் செந்திலுக்கு சொல்லும்படியாக எதுவும் இல்லை. ஆனால் இவர்கள் கூட்டணி அடித்த ஹிட்டுகள் , இதுவரை முறியடிக்க்கப்படவில்லை. முறியடிப்பதும் சிரமம்.

கரகாட்டக்காரன் ஒரு வருஷம் ஓடியதும் ,'உள்ளத்தை அள்ளித்தா ' , மேட்டுக்குடி  மூலம்  கார்த்திக்குக்கு  திரும்ப  வாழ்வளித்ததும் , கமல் தவிர எல்லா நடிகர்களின் அனேக படங்களையும் ஓட வைத்து வசூலை நிரப்பியதும் , காலம் தாண்டியும் கவுண்டரின் முத்திரைகள் என பேசப்படும். கூட ஒட்டிக்கொண்டு தன்னைக் காப்பாற்றிக் கொண்டது செந்திலின் புத்திசாலித்தனம். இன்று வரை கவுண்டர் இருந்தால் , அவர் மட்டுமே ஆண்டு கொண்டிருப்பார். உடல்நிலை கருதி , மார்கெட் நன்றாக இருக்கும்போதே விலகி சென்று பின் திரும்பி வந்து ஒதுங்கி கொண்டார் .

  • எம்.ஜி.ஆருக்கு கூட நாகேஷோ ,  சோவோ தேவைப்பட்டார்கள். 
  • சிவாஜிக்கு (அந்த காலகட்டத்தில்) கதை மட்டும்  போதும்.
  •  ரஜினிக்கு இவர்கள் யாரும்  தேவைப்படவில்லை. ஒன் மேன் ஆர்மி.
  • கமலுக்கு நாகேஷ்  தவிர வேறொருவர் தேவையில்லை. தேவைப்பட்டால் கிரேசி மோகனை சேர்த்துக்கொண்டு ஜெயித்து விடுவார்.


இப்போது இந்த தலைமுறைக்கு வரலாம். நகைச்சுவை நடிகர்கள் இல்லாமல் ஒரே ஒரு வெற்றிப்படமாவது விஜயோ அஜித்தோ கொடுக்க முடியுமா ? என்றால் 99 %  முடியாது என்பதுதான் பதில் . காரணம் கதையை நம்பி படம் எடுக்கும் தைரியம் தயாரிப்பாளர்களுக்கு இல்லை. கதை மட்டும் இருந்தால் நாங்கள் எதுக்கு ,விக்ரமோ  பிரசன்னாவோ செய்யட்டுமே என்று இருவரும்  ஒதுக்குவதும் ஒரு காரணம். சூரியாவும் இதில் இப்போது சேர்த்தியே.
ஆனால் மாஸ் ஹீரோ சப்ஜெக்ட் என்றால் டபுள் ஓகே. ஒரு வில்லன் ; நான்கு  சண்டைக்காட்சிகள் ; ஆறு  பாட்டு , இதை இரண்டரை மணி நேரம் ஓட்ட தேவை ,வில்லனுக்கும் நாயகனுக்கும் ஒரு மோதல். அது போதும். இரு இரு .. இருந்தாலும் இந்த படம் ஓடுமா ?இதே மாதிரிதான் எல்லா படங்களின் கதையுமே இருக்கே ? என்ன செய்யலாம் ?  எதுக்கு கவலை ? இங்குதான் காமெடி நடிகர்கள் தேவைப்படுகிறார்கள்.
கூப்பிடு நகைச்சுவை நடிகர்களை. அவர்களுக்கு ஒரு ஆறு சீன் விட்டுக்கொடுத்தால் வெற்றி உறுதி. ஆனால் ஹீரோவை மீறி புகழ் அடைய கூடாது .. நண்பன் பாத்திரத்தை ஒதுக்கு.. கூடிய மட்டும் ஹீரோவுடனே சுற்றி ,முடிந்தால் அதில் திறமையை நிருபிக்கட்டும். எல்லாம் சரியாக போனால் அது ஹீரோ படம் ; படம் பப்படமானால் கை காமிக்க உதவும்.

ஆக இதற்கு முந்திய தலைமுறைகளை விட இந்த தலைமுறைக்கு காமெடி நடிகர்களின் சப்போர்ட் அதிகம் தேவை . அதை கொடுக்கும் திறன் அவர்களுக்கு இருக்கிறதா ? அலசுவோம்..

வடிவேலு:



தேவர் மகன் வந்து கிட்டத்தட்ட 20  வருடம்  ஆகிவிட்டது. அன்றிலிருந்து இன்று வரை ஏறுமுகம்தான். இவரின் பெரிய பலமே , எந்த ஒரு வட்டத்துக்குள் சிக்காமல் இருப்பதுதான்.

சிட்டி சப்ஜெக்டா ? பாடி லேங்குவேஜ்  மாற்றி முடிந்த வரை ஆங்கிலம் பேசினால் அந்த வருடம்  அந்த படம் படு ஹிட் உத்திரவாதம்.'மனதை திருடி விட்டாய் ' , ' மருதமலை' என இவரின் சிட்டி அதிவேட்டுகள் எண்ணில் அடங்காது..
கிராமத்து கதையா ? நமக்குதான் அது கூடவே பிறந்ததே .. எதையுமே மாற்றாமல் ஒழுங்காக செய்தால் கலக்கல் ஹிட் . 'வின்னர்' கைப்புள்ளயும் , 'கண்ணாத்தா' சூனாபானாவும் , 'மாயி' மொக்கச்சாமியும் தமிழர்கள் தின வாழ்வில் இணைந்து காலகாலம் மனதில்  இருக்கும்.

குணசித்திர வேடம் அழகாக வரும் - பொற்காலம், எம்டன் மகன் ...

இன்றைய தேதிக்கு குழந்தைகள் விளையாட்டானாலும்  ஆனாலும் சரி , பெரியவர்கள் அன்றைய  வாழ்க்கையானாலும் சரி , சந்தோசமானாலும் சரி, துக்கமானாலும் சரி - இவரின் டியலாக்குகள்தான் அதிகம் உபயோகிக்கப்படுகின்றன..  

சிறிய பட்ஜெட் ,பெரிய பட்ஜெட் என எதுவும் பார்க்காமல் , தன பகுதியை ஒழுங்காக செய்து வருவது இவரின் வெற்றிக்கு பெரிய காரணம்.

எந்த நடிகர் படம் ஆனாலும் , அது எவ்வளவு மோசமாக விமர்சிக்கப்பட்டாலும் , அல்ல தோல்வியுற்றாலும் இவர் அதில் இருந்தால் கூடிய வரை அந்த படம் காப்பாற்றப்படும். விதிவிலக்குகளும் சில உண்டு - குசேலன் , சுறா ,வில்லு , எல்லா அஜித் படங்களும்..இவர் பாணியில் சொன்னால்  ' முடியல....'  

ஆதவன் , மருதமலை ,வின்னர் படங்களின் ஹீரோ சத்தியமாக இவர்தான்.
இந்திரலோகத்தில் ந.அழகப்பனுக்குப் பிறகு  தனி ஆவர்த்தனம் வேண்டாம் என்று முடிவு பண்ணி திரும்ப தன் வழிக்கு வந்தது குட் மூவ். தேவை இல்லாத அரசியல் சர்ச்சையிலும் , தனி மனித எதிர்ப்பும் இவர் ஒதுக்க வேண்டும் . மற்றபடி  இவர் மாற்ற வேண்டியது இப்போதைக்கு எதுவும் இல்லை.. வாழ்த்துக்கள்..

------------------------------------------


சந்தானம் :




கவுண்டமணிக்கு பிறகு டீசிங் காமெடி , இவரைப்போல் யாருக்கும் வராது . ஹீரோவை கிண்டல் பண்ணும் உரிமையை கவுண்டருக்கு பிறகு இவருக்கு அருளியிருக்கிறது திரையுலகம். லொள்ளு சபா முகவரி கொடுக்க ,எந்த கஷ்டமும் படாமல் வெள்ளித்திரைக்கு வந்தவர். வந்தது பெரிதல்ல .. வந்து நின்றது பெரிது..

 பொல்லாதவன் , சிவா மனசுல சக்தி , வாமனன், கண்டேன் காதலை , சில்லுனு ஒரு காதல் ,பாஸ் என்கிற பாஸ்கரன் , என்று சொல்லிகொள்ளும் அளவுக்கு தரமான படங்கள்.வந்து குறுகிய  காலம் மட்டுமே ஆனதால் இப்போதைக்கு வேறு எதுவும் சொல்ல இல்லை . படம் தேர்ந்தெடுக்கும்போது சற்று யோசித்தால் சிறந்த எதிர்காலம் உறுதி. (ரோபோ உங்களுக்கு எதற்கு சார் ?)

----------------------------------------
கருணாஸ்:


அதிரடியான அறிமுகம். முதல் படத்திலேயே இவ்வளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர்கள் அதிகம் பேர் இல்லை . பாலாவின் கண்டுபிடிப்பு. பாதி வரை நன்றாகத்தான் போனார். ஏப்ரல் மாதத்தில் , வில்லன் ,  பொல்லாதவன் , தேவதையை கண்டேன் , யாரடி நீ மோகினி என ஒழுங்காக போய் கொண்டிருந்த இவரை திண்டுக்கல் சாரதியின் வெற்றி சற்றே தடம் மாற செய்து விட்டது. தொடர்ந்து அம்பாசமுத்திரம் அம்பானி எடுத்து அவுட் ஆப் ஆர்டரில் மாட்டிக்கொண்டிருக்கிறார். பானா காத்தாடி சுமாராக போனாலும் , இவரின் சமீபத்திய சர்ச்சைகள் , ஒரு சிறந்த நடிகனை திசை மாற செய்திடுமோ என பயப்பட வைக்கிறது.

 'உங்களுக்கு அரசியலும் , படதயாரிப்பும்  வேண்டாமே சார்? ரெட்டைகுதிரை சவாரி எத்தனையோ பேர்களை வீழ்த்தியிருக்கிறது. நீங்களுமா ?' . சிந்தித்து திருந்தி திரும்பி வருவார் என எதிர்பார்ப்போம் .   

----------------------------------------------

கஞ்சா கருப்பு :

யாருமே எதிர்பாக்காத இடத்தில இருந்து புதிதாக ஒரு பொக்கிஷம் கிடைத்தால் எப்படி இருக்கும் என்பது இவரை ' ராம்' படத்தில் பார்த்தபின்பு தமிழ் திரையுலகத்துக்கு தெரிந்தது .

 பாலாவின் இன்னொரு கண்டுபிடிப்பு . அமீரின் அரவணைப்பு. இவரின் எகத்தாளமான , ஊர்பேச்சு கையாடல் , டயலாக் டெலிவரி , அசாத்தியமான , எதார்த்தமான நடிப்பு இவரை உச்சியில் வைத்திருகிறது. சண்ட கோழி , பருத்தி வீரன் , வம்சம் , களவாணி என காமெடியில் கலக்கியவர் சுப்ரமணியபுரத்தில் யாரும் எதிர்பாக்காத பாத்திரத்தை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டார்.  இவரும் வந்து  குறுகிய காலம் மட்டுமே  ஆனதால் இனி என்ன சாதிப்பார்  என்பதை பொறுத்தே இவர் கேரியர் கிராப் அமையும். தனக்கான படம் மட்டுமே தேர்ந்தெடுப்பது மிக முக்கியம் - நல்லதை எதிர்நோக்குவோம்.

 --------------------------------------------------

விவேக் :



தனி பதிவாக இதை இட்டிருக்கலாம். இருந்தாலும் இங்கேயே சொல்லிவிடுகிறேன். இவரை பட்டியலில் கடைசியாக  சேர்த்தது வேதனையாகத்தான் உள்ளது .  வேறு வழியில்லை - காரணம் இவரின் இப்போதைய செயல்பாடுகளும் இன்னபிறவும்.


 பத்மஸ்ரீ , கலைமாமணி , ஜனங்களின்  கலைஞன் , சின்ன கலைவாணர் என்ற எல்லா புகழுக்கும் இவர் well deserved .
எந்த ஒரு இரண்டாம் சிந்தனையும் இல்லாமல் பட்டென்று சொல்லலாம் - 'இவர் ஒரு ஜீனியஸ்' .பாலச்சந்தரின் எந்த அறிமுகமும் தோற்காது என்பதற்கு இவர் ஒரு முக்கிய உதாரணம்.

 மனதில் உறுதி வேண்டும் தொடங்கி பல படங்கள் நடித்தாலும் தனக்கென ஒரு பாணியை இவர் பிடித்து ஜெயிக்க ஆரம்பித்தது திருநெல்வேலி படத்திலிருந்து. அதன் பின் 2004 வரை நோ யு  டர்ன் .. காதல் மன்னன் , வாலி ,பெண்ணின் மனதை தொட்டு ,  ரன் , மின்னலே , சாமி என்று இவர் நடித்த படங்கள் ஓஹோவென ஓடியவை. 

எனக்கு நினைவிருக்கிறது - கல்லூரியில் நண்பர்களுள் யாராவது படத்துக்கு அழைத்தால் ,ஒரு நொடி படம் எப்படி இருக்கும் என யோசிப்போம் ..அடுத்த நொடி விவேக் இருக்கிறாரா ? வா போகலாம் என்று நம்பி போய் இவரை ரசித்து விட்டு வந்ததெல்லாம் ஒரு காலம். இப்போது எங்கே எங்கள் விவேக்?


எந்த ஒரு விசயமும் ஒரு தடவை ரசிக்கப்படும். இரண்டாம் தடவை ஏற்கப்படும். மூன்றாம் தடவை சகிக்கப்படும். அதற்கு பிறகு?

முக்கியமாக மூன்று மாற்றங்கள் விவேக்கிடம் தற்போது அவசரமாக தேவை.

  • 'அப்துல் கலாமும் , பாரதியாரும் மரியாதைக்கு உரியவர்களே. அவர்களின் கருத்துக்கள் மக்களுக்கு மிகவும் தேவை. ஆனால் அதை போதிய மட்டும் நிறைய படங்களில் சொல்லியாகி விட்டது சார். இன்னமும் அவர்களையே துணைக்கு அழைப்பது ஓவர்டோஸ் ஆகி பல வருடம் ஆகிவிட்டது.அதற்காக நீங்கள் உங்கள் பாணியை முழுதாக மாற்ற தேவை இல்லை. ஆனால் நீங்கள் சொல்லும் சமுக சிந்தனையை செரிக்க  நகைச்சுவையின் தரத்தை  அதற்கேற்ப அதிகப்படுத்துங்கள். நீங்கள் கிண்டல் செய்யும் பொதிகை டிவி-யை போல்தான் இப்போது நீங்களும் . மாறுங்கள்.'                                                          
  • 'மிமிக்ரி' வகை காமெடிகள் நீங்கள் வந்த புதிதில் வரவேற்கப்பட்டன. அப்போது தொலைக்காட்சி ஊடகங்களில் அதை போன்ற நிகழ்ச்சிகள் வரட்சியாய்  இருந்தது. இப்போது 'அசத்த போவது யாரு' , 'கலக்க போவது யாரு ' என்று எல்லா சேனல்களிலும் எப்போதும் அதைதான் ஓட்டுகிறார்கள். புதிதாக வருபவர்களுக்கு மட்டுமே மிமிக்ரி உதவும். உங்களுக்கு அல்ல .. உங்களிடம் நாங்கள் எதிர்பார்ப்பது ,நீங்கள் கஷ்டப்பட்டு செய்யும் சுருளி ராஜனோ , சிவாஜியோ ,பெண் வேடமோ அல்ல .. உங்களுக்கே உரித்தான விவேக் மேஜிக்.  ப்ளீஸ் ஸீ ரன் , டும் டும் டும் , தூள் ..  '
  • '2004க்கு பிறகு சற்று திரும்பி பாருங்கள் . எங்கே நீங்கள் இருக்கிற அடையாளமாவது எந்த படித்திலாவது தெரிகிறதா ? இடையில் வந்த  அந்நியன் ,பசுபதி மே/பா ராசாக்கப்பாளையம் , படிக்காதவன்   தவிர்த்து சொல்லும்படி அல்ல சகிக்கும்படி ஒரு நகைச்சுவை உங்களிடம் இருந்து வரவில்லை என்பது நிதர்சனம். அதற்கு நாங்கள் யூகிக்கும் காரணம்  - உங்கள் crew உங்களுக்கு முன்போல தரமாக  ஒரு தனி ட்ராக் எழுத நேரமில்லாமல், வந்த படங்களை எல்லாம் நீங்கள் புக் செய்து படபிடிப்புக்கு  ஓடுவதினால் இருக்கலாம். சற்றே Quantity -யை மறந்து Quality -யை பற்றி யோசியுங்கள் சார்..ஒரு சின்ன பிரேக் எடுத்து உங்களை refresh செய்து வந்தால் மீண்டும் கோலோச்சலாம். '
இந்த மாற்றங்களை சிந்தித்து திரும்பி வாருங்கள் . ஒரு விமர்சகனாக இதை சொல்லவில்லை .. உங்கள் ரசிகனாக சொல்கிறேன்.
விரைவில் பழைய 'புதிய'  விவேக்கை எதிர்பார்க்கிறோம்
 --------------------------------------------------------

எது எப்படியோ நம் தமிழ் திரை உலகத்துக்கு காமெடி பஞ்சம் இல்லாமல் இருக்க நிறைய பேர் உண்டு.
அதை விட காமெடியை ஊக்கப்படுத்தி , உற்சாகபடுத்தி , அதை அனுபவிக்கும் ரசனை தமிழனுக்கு அதிகம் உண்டு என்பது சத்தியம் - நம் பெருமை.

7 comments:

N.H. Narasimma Prasad said...

அருமையான பதிவு நண்பரே.

அபிமன்யு said...

நன்றி பிரசாத்.. :)

shabi said...

இம்சை அரசனுக்கு பிறகு தனி ஆவர்த்தனம் வேண்டாம////INTTHIRA LOKATTHIL NAA AZHAHAPPANUKKU PIRAHU ENRU IRUKKALAMA

bandhu said...

நல்ல அனாலிசிஸ்!

andrenrumanbudan said...

அருமையான அலசல் வெல்டன் நன்றி பிரசாத்..

வினோத் கெளதம் said...

//எல்லா அஜித் படங்களும்//

அஜித் கூட சில வருடங்களுக்கு முன் ராஜா, பல வருடங்களுக்கு முன் ராசி.இரண்டு படங்களுமே மொக்கை காமெடி. படமும் சொல்வதர்க்கு ஒன்றும் இல்லை. வேறு என்ன படங்கள்.??

சில பதிவுகள் தான் படித்தேன். படித்த வரைக்கும் அனைத்தும் அருமை. தொடர்ந்து எழுதுங்கள்.

Anonymous said...

உங்கள் எழுத்து நடை நன்றாக இருக்கிறது. சொல்ல வந்ததை தெளிவாக எளிதாக புரியும் படி சொல்கிறீர்கள். நன்று.

Post a Comment