/பின்னூட்டம் : இந்த பதிவு எழுதி விட்டு சற்று பயந்தது என்னவோ உண்மைதான்.. ஆனாலும் நம் அருமை செல்வங்கள் கனவை நிறைவேற்றி ஆஸ்திரேலியா அணியை ரத்தம் சிந்த வைத்து ஊருக்கு அனுப்பி வைத்து , பனிரெண்டு வருடமாக ஆணவ ஆட்டம் ஆடிய பூனைக்கு மணியை கட்டி பெருமை தேடிக் கொண்டனர்.. /
இன்னும் சில மணித்துளிகளே இருக்கிறது ..மார்ச் 23 , 2003இல் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்க... கொடுப்போமா என்பதுதான் கேள்விகுறி..
இன்னும் சில மணித்துளிகளே இருக்கிறது ..மார்ச் 23 , 2003இல் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்க... கொடுப்போமா என்பதுதான் கேள்விகுறி..
சரியாக எட்டு ஆண்டுகளாக விஷமாக மனதில் ஊறியிருக்கும் வஞ்சம் ,வெறி , பழியுணர்ச்சி , கர்ணனிடம் சேர்ந்த நாகஸ்திரம் போல் பொருமிக்கொண்டிருகிறது ஒவ்வொரு இந்திய ரசிகன் மனதிலும்.
இப்போதெல்லாம் இந்தியா - பாகிஸ்தான் மேட்சை விட இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் போட்டிதான் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே பாகிஸ்தான் அரை இறுதிக்கு தகுதி பெற்ற நிலையில் இன்று நமக்கு சவால்.அதுவும் பழிவாங்க சந்தர்ப்பமாக அமைந்திருகிறது .மூன்று முறை கோப்பையை வென்றவர்களை திருப்பி அனுப்பி நம் பேரை நிலைநாட்டுவோமா ? இப்படித்தான் வெஸ்ட் இண்டீஸ் டீமும் கிரிக்கெட்டில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது 83இல் ஒரு அடி அடித்து உட்கார வைத்தோம். அதன் பிறகு இன்று வரை அவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை . இப்போது இதே வேலையை ஆஸ்திரேலியா டீமுக்கு செய்ய வேண்டும் என்பது என் அவா மட்டுமல்ல நெடுநாள் கனவு.
என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள் எனக்கு கவலை இல்லை ... வெளிப்படையாகவே சொல்கிறேன். எனக்கு பாண்டிங்கை சுத்தமாக பிடிக்காது. விளையாட்டை விளையாட்டாக எடுத்து கொள்ள வேண்டாமா என்று நீங்கள் நியாயமாக கேள்வி கேட்டால் நானும் நியாயமாகவே பதில் சொல்கிறேன். ஆஸ்திரேலியா தவிர எனக்கு எந்த டீமிடமும் தோற்றாலும் வலிக்காது. அப்ரிடியை கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பாண்டிங் ???
சச்சின் சாதனையை நோக்கி போகும் ஒரே ஆள் பாண்டிங் தான் என்பதற்காகத்தானே நீ வெறுக்கிறாய் என்றால் சத்தியமாக கிடையாது . ஹ்ஹா .. இந்த ஆளாவது சச்சின் சாதனையை முறியடிப்பதாவது ?? கடந்த மூன்று வருடமாக நம்மாள் ஆட்டத்தையும் இந்த ஆள் ஃபார்மையும் பார்த்தவர்கள் பார்த்தவர்கள் இந்த கேள்வியை கேட்க மாட்டார்கள் .
இந்த கோபத்திற்கு இரண்டு காரணங்கள் :
பாண்டிங் மட்டுமல்ல ,ஆஸ்திரேலியா டீமே ஒரு நாகரீகமற்ற டீம். நேர்மையாக விளையாடி ஜெயிப்பது என்பது அவர்கள் வரலாறிலேயே இல்லை.இருபது வருடங்கள் முன்பே , ஒரு பந்தில் ஆறு ரன் எடுத்தால் எதிரணி வெற்றி பெறலாம் என்று இருக்கும்போது மிக கேவலமாக பந்தை தரையில் உருட்டி போட்டு ஜெயித்த மாவீரர்கள் இவர்கள். இந்த ஏமாற்றும் பழக்கம் இது வரை இவர்களோடு பனிரெண்டாவது ஆளாக டீமில் ஒட்டிக்கொண்டிருகிறது. இவர்களை கருவறுக்க இது அருமையான சந்தர்ப்பம்.
பாண்டிங்கின் ஆணவத்தை அளக்க வார்த்தைகளே இல்லை . ஜெயிப்பதற்கு எல்லா வேலைகளையும் வார்னே , கில்லி , ஹேடன் போன்றவர்கள் செய்ய , கூடமாட ஏதோ அவ்வப்போது சதங்கள் அடித்து, பிறகு பேட்டி கொடுக்கும்போது மிக பந்தாவாக இவர் சொல்லும் வார்த்தைகள் மிக கொடுமையானவை . கண்டிக்கத்தக்கவை.
அம்பயரிடம் எதிர்த்து பேசுவதும் , தோற்றால் டிரெஸ்ஸிங் ரூமில் நாற்காலியை உடைப்பதும் , ஒரு பேட்ஸ்மேன் நன்றாக விளையாடினால் , பின்னால் நின்று கிண்டல் அடித்து கோபப்படுத்தி அவரை அவுட் ஆக்குவதும்.. ஐயோ கடவுளே .. இந்த ஜென்மத்தை எங்கள் கிரிக்கெட் கடவுளுக்கு போட்டியாக சொல்வது என்ன ஒரு அபத்தம் ...
சரி இந்த ஆள் கிடக்கட்டும்.. இன்றைய ஆட்டத்துக்கு வருவோம் .
தோனி தலைமையிலான இந்திய அணி ஃபீல்டிங் , பௌலிங் விஷயத்தில் மிக தொய்வாகவே உள்ளது.ஆனால் பேட்டிங் ஆர்டர் எப்போதும் இல்லாதது போல் மிக அருமையாக உள்ளது . முன்பெல்லாம் சச்சின் ,டிராவிட் ,கங்குலி அவுட் ஆனால் டிவியை அணைத்து விடலாம். ஆனால் இப்போது மிடில் ஆர்டரும் சரி , டெயில் ஆர்டரும் சரி பேட்டிங்கில் மிக பலம் வாய்ந்த அணியாக உள்ளது.
ஆனாலும் அடிக்கடி சொதப்பும் பழக்கம் இன்னும் நம்மை விட்டு போக வில்லை. அதில் இரண்டு வகை உண்டு.
ஒன்று : எடுத்த எடுப்பிலேயே விக்கெட்டுகளை கொடுத்து பிறகு கௌரவமாகவாவது தோற்க போராடி தோற்பது.
இரண்டு: முன்னணி வீரர்கள் ரன் மழை பொழிந்து நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தாலும் பின்னால் வருபவர்கள் எதுவுமே செய்யாமல் திரும்பி வருவது.
உதா: கடைசியாக நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டி .
இப்படி இந்த தவறுகளை செய்யாமல் பொறுப்பாக விளையாடி பதிலடி கொடுக்க இறைவன் இவர்களுக்கு இன்று புத்திசாலித்தனத்தை கொடுக்க வேண்டும். முக்கியமாக மூன்றாம் ஆளாக தோனி அவசரப்பட்டு வந்து ஆட்டத்தை கெடுக்காமல் பொறுமையாக யுவராஜை அனுப்பி விட்டு பின்னால் வர வேண்டும்.
சரி இப்படி அபசகுனமாக எதாவது சொல்ல கூடாது .. எல்லாம் நல்லபடி நடக்கும்.
அங்கு ஆஸ்திரேலியாவும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை . வாட்சன் தவிர எல்லாரும் அவுட் ஆப் பார்ம் தான். கில்லி , ஹேடன் ,வார்னே கொண்ட பழைய டீம் என்றால்தான் பயப்பட வேண்டும்.இது எலி. என்ன ..குருடர்களுக்கு மத்தியில் ஒற்றைக்கண்ணன் ராஜா என்பது போல் , மற்ற டீம்களை விட ஏதோ பரவாயில்லை. அவ்வளவுதான்.
சேவாக் விளையாடுவாரா என்பது இன்னும் தெரியவில்லை . விளையாட வேண்டும். பௌலிங் விசயத்தில் யாரை நம்புவது என்பது தோனிக்கு மட்டுமல்ல நமக்கும் குழப்பமாகவே இருக்கிறது.
கடைசி ஓவரில் எதாவது புதியதாக முயற்சி செய்யலாம் என்னும் பழக்கத்தை தோனி இன்று விட்டுவிடுவாராக என்று நம்புவோம்.
பவர் ப்ளேயில் கவனமாக இருப்போம் என்று நேற்று உறுதி அளித்திருக்கிறார்.பார்ப்போம். 'யப்பா நெஹ்ரா... பௌலருக்கு வேலை விக்கெட் எடுக்கறது , ரன் கொடுக்கறது இல்லை ..'
சச்சின் , சேவாக்/கம்பீர் அடித்தளம் அமைக்க மிடில் ஆர்டரில் யுவராஜும் , யூசுப் பதானும் கலக்க கடைசி ஓவர் வரைக்கும் நின்று ஆடி ரன்னை உயர்த்தி கொடுக்க ,
அதன் பின்னர் பாண்டிங்கை , வாட்சனை , கிளார்க்கை , ஹஸ்ஸிகளை நம் பௌலர்கள் பெவிலியனுக்கு மடமடவென அனுப்ப , எந்த பக்கம் அவர்கள் அடித்தாலும் விராத் கோலியும் , மற்ற ஃபீல்டர்களும் பாய்ந்து தடுக்க , வெற்றிக்கனியை பறித்து கம்பீரமாக அரை இறுதிக்கு நுழைவோம் என்று எல்லாரும் நம்புவோம்.
என்னை பொறுத்த வரை ,
கிரிக்கெட்டில் முதல் எதிரி பாகிஸ்தான் அல்ல ..ஆஸ்திரேலியாதான் ...
தனிப்பட்ட ஜென்ம எதிரி ஜாவீத் மியாண்டட் அல்ல , ரிக்கி பாண்டிங்தான்..
உலக கோப்பை ஃபைனல் ஏப்ரல் இரண்டு அல்ல .. இன்றைக்குத்தான்..
துடிக்குது புஜம் .. ஜெயிப்பது நிஜம் ..