Tuesday, October 11, 2011

அலைபேசி - சவால் சிறுகதை-2011

'இதுல்ல இவ்வளவு ஆபத்து இருக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல.புதுசா முளைச்சிருக்கிற இந்த பிரச்னையை சத்தமில்லாம முடிச்சிடணும்.  எதாவது நம்ம கை மீறி நடந்தா...?'
மறுப்பாக தலையாட்டினான் இரண்டாமவன்.

'பயப்படாத. நம்மள யாருக்கும் தெரியாது. தெரிய வாய்ப்பும் இல்லை. நிலைமை என்னனு தெரியாம நாம எதுவும் செய்ய முடியாது.'

'நம்ம திட்டத்துல எதாவது மாறுதல் இருக்கா? '

'கண்டிப்பா இல்ல.'

'இனி இந்த மாதிரி விஷபரிட்சை எல்லாம்  வேணாம். பேசாம இந்த பிளானையும் கூட பாதியிலேயே ட்ராப் பண்ணிடலாம் '

'இன்னொரு தடவ இப்படி பேசாத. இது ஒரு புரட்சி. முத்துக்கள் சில கிடைக்க வேண்டுமானால் சிப்பிகள் சில உடையத்தான் வேண்டும். இது நமக்கான வேத வாக்கு. மனசுல வெச்சுக்கோ. '

இதுவரை அமைதியாய் இருந்த நடுத்தர வயதுக்காரர் அவன் தோளைத்  தட்டி கொடுத்தார்.

'உன் தைரியம் என்னை பெருமைப்பட வைக்குது. உன்ன மாதிரி எல்லா தோழர்களும் இருந்துட்டா நம்ம இயக்கம் பெரிய வெற்றி அடைஞ்சிடும். சரி ஆயுதம் பத்திரமா இருக்கா ?'

இரண்டாமவன் பேண்ட் பாக்கெட்டில் கை வைத்து பார்த்து உறுதிசெய்து கொண்டான்.வெளியில் தைரியமாக பேசினாலும் , அதன் கனமும் உறுத்தலும் அவனை கவலைக்குண்டாக்கியது. தலையாட்டினான்.

'ஞாபகம் இருக்கட்டும்.வேற வழியே இல்லைனாதான் அதை உபயோக்கிக்கணும்.அது பிரமாஸ்திரம். அப்புறம் தகவல் எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியுமா? '

'நம்பத்தகுந்த எடத்துல இருந்து வந்திருக்கு.சத்தமில்லாம போய் பார்ப்போம்'

 நிசப்தத்தை கிழித்து அலைபேசி கதறியது. எடுத்து திரையை பார்த்தவன் அலறினான்.

'மேலிடம். மேலிடம். என்ன சொல்றது?'

'எதுவும் சொல்லாத.பேசாத.தேவையில்லாமல் நெறைய கேள்விக்கு பதில்  சொல்ல வேண்டியிருக்கும்.

வீதியில் வெளிச்சம் குறைந்திருந்தது.

'அதோ கடைசி வீடு. ஆள் பேர் முத்துசாமி.கவனமா பேசணும். வீட்டுல இருக்கறவங்களுக்கு நம்ம மேல ஒரு துளி சந்தேகமும் வந்துற கூடாது.'

'ஆள் என்ன செய்றான்?'

'சொன்னா சிரிப்பிங்க . பள்ளிக்கூட வாத்தியார்.அதுவும் சின்ன பசங்களுக்கு'

'அதுக்காக குறைவா மதிக்க கூடாது.கொஞ்சம் தகவலை வெச்சுகிட்டே இவ்வளவு தூரம் போயிருக்கானா அவன் லேசுபட்ட ஆள் இல்ல.  நிலைமை கொஞ்சம் விபரீதமானாலும் நம்மதான் பொறுப்பு. அட்ரஸ் சரிதான?'

'மறந்துடீங்களா?. இது என் ஊர். நல்லா தெரியும்'

கேட்டை சத்தமில்லாமல் திறந்தபடி உள்ளே சென்றார்கள்.அழைப்புமணியை அழுத்தும் முன் முகத்தில் வேர்வை அரும்பியது. பாக்கெட்டை ஒரு முறை தொட்டுபார்த்து கொண்டு அடுத்தவனை திரும்பி பார்த்தான். அவன் தலையாட்டவே பொத்தானை அழுத்தினான்.
------------------------------------------------

மூன்றாவது முறை அழைப்பு மணி கேட்டது.

எரிச்சலாக  தலையை உயர்த்தி பார்த்து அந்த சத்தத்தை அலட்சியபடுத்தினார் முத்து. தன் நாற்காலியிலிருந்து அவர் இம்மியும் நகரவில்லை. கண்கள் கருவளையத்தில் அகப்பட்டிருந்தன.மேஜையில் இருந்த இரண்டு குறிப்புகளையும் மீண்டும் குழப்பமாக  பார்த்தார்.இரண்டும் விஷ்ணு பெயரில் இருந்தது.

ஒரு முடிவுக்கு வந்தவராக எழுந்து சென்று அறை மூலையில் இருந்த தொலைபேசியை எடுத்தார்.கை நடுக்கத்துடன் எண்களை அழுத்தினார்.


அதே நேரத்தில் மேஜை மேலிருந்த அவரின் அலைபேசி திடீரென கனைக்கத் தொடங்கியது. பதறியபடி , ஓடி சென்று பார்த்தார். நினைத்த இடத்திலிருந்துதான் அழைப்பு.இதயம் உச்சகட்ட வேகத்தில் துடிக்கத் தொடங்கியது. இரண்டு குறிப்புகளும் அவரை ஏளனமாக பார்த்ததுபோல் இருந்தது.

'இனியும் தள்ளிபோட கூடாது.முடிவெடு.என்ன செய்யலாம்? யோசி யோசி..'

அழைப்பு நின்றது. அலைபேசி திரையில் '67 missed call ' என்றிருந்தது. முத்து பொறுமை இழந்தார். தலை சுற்ற தொடங்கியது.அலைபேசியை தூர எறிந்தார்.

அருகிலிருந்து ஸ்டீல் ஸ்கேலை எடுத்து கையைக் கிழிக்க ஆரம்பித்தார்.  ரத்தம் பெருக ஆரம்பித்து தரையை ஈரமாக்கியது.

'கோகுல்ல்ல்லல்ல்.......' என்று வீறிட தொடங்கினார்.
முத்துவின் அலறல் வீதியில் எதிரொலித்தது. காய்ந்த சருகாக தரையில் உதிர்ந்தார். 
-----------------------------------------------

கதவை திறந்தபடி கவலை தோய்ந்த முகத்தோடு ஒரு நடுத்தர வயது பெண்மணி எதிர்பட்டார்.அருகில் ஒரு சிறுவன்.

'நீங்க...?'

'முத்து சார் இருக்காரா ? நாங்க அவருக்கு வேண்டியவங்க.'

'உள்ளார  வாங்க.நான் மீனாட்சி.அவர் வீட்டுலதான் இருக்காரு'

ஹாலில் சிறிது நேரம் அமர்ந்திருந்தனர். தூரத்தில் அலைபேசி அடிக்கும் சத்தம் மெல்லியதாய்  கேட்டது.

'பையனை அனுப்பி கடைல வாங்குனதுதான். சமைக்க நேரமில்லை.சாப்பிடுங்க.தொலவுல இருந்து வரீங்களா?'

மூன்று தட்டில் சாம்பார் இட்லியை பரிமாறியபடி மீனாட்சி கேட்டதற்கு மெல்லியதாய் தலையாட்டினார்கள்.

'அவருக்கு கொஞ்சம் உடம்பு சரியில்ல.  எதாவது முக்கியமான விஷயங்களா? இருங்க அவரை கூட்டிட்டு வரேன்.'
என்றவர் திடீரென திரும்பி , 'உங்களுக்கு கோகுல்னு யாராவது தெரியுமா ? என்றார். மூன்று பேர் முகமும் மின்சாரம் பாய்ந்ததுபோல் திடுக்கிட்டன. திணறலாக மறுத்தார்கள். மீனாட்சி சந்தேகமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு ,உள்ளே சென்றார்.

'நாம நெனச்சது சரிதான். உடனே காரியத்தை முடிச்சாகணும். இனி தாமதிக்கிற ஒவ்வொரு வினாடியும் ஆபத்து.'

அலைபேசி மீண்டும் அலறியது. திரும்பவும் மேலிடம். இப்போது அவனுக்கு பயம் அதிகரித்தது.மேலிடத்திற்கு என்ன காரணம் சொல்வது?  ஆபத்து சுற்றி வளைக்க ஆரம்பித்திருப்பது மட்டும் அவனுக்கு நன்றாக புரிந்தது. அருகிலிருந்தவனைப்  பார்க்க, அவனிடம் ஒரு பரிதாபமான   பார்வை தோன்றியது.

நடுத்தர வயதுக்காரர் சூழ்நிலையின்  இறுக்கத்தை குறைத்தார்.பேச்சை மாற்றினார்.
'தம்பி என்ன படிக்கிற? பாவம் இந்த நேரத்துல எந்த கடைல இட்லி வாங்குன ?'
பையன் பேசிகொண்டிருக்கும்போதே ஒரு அலறல்  சத்தம் மூவரையும் திடுக்கிட வைத்தது. உள்ளே ஓடினார்கள்.
---------------------------------------
டாக்டர் மீனாட்சியை தேற்றிகொண்டிருந்தார்.

'ஒன்னும் இல்லம்மா.
இப்போ நல்லா தூங்கிட்டிருக்கார் .இது ஒரு சின்ன depression . சூழ்நிலையோட இறுக்கத்தை மூளையும் மனசும் ஏத்துக்க  முடியாதபடி  அழுத்தம் வரும்போது இப்படி நடக்கறது இயற்கை.

ஒரு விஷயத்தைப் பத்தி திரும்ப திரும்ப யோசிச்சு தீர்வு கிடைக்கலைனா இப்படி ஆகும்.இதுக்கு Obsessed stateன்னு சொல்லுவாங்க.
ஆமா இந்த அளவுக்கு போக அவருக்கு என்ன பிரச்சனை? உங்களுக்குள்ள எதாவது சண்டையா?'

கண்ணீரை கட்டுபடுத்திக்கொண்டே மீனாட்சி கதறலோடு கோபத்தில் பொங்க ஆரம்பித்தார் - 'அதெல்லாம் ஒன்னும் இல்லேங்க டாக்டர். பத்து நாள் முன்னாடி வரைக்கும் நல்லாத்தான் இருந்தாரு.  எல்லாம் இந்த எழவு பிடிச்ச கம்ப்யூட்டர்னாலதான்.
எதோ கதை எழுதுற போட்டியாம். மூணாயிரம் ரூபா பரிசாம். அந்த  அறிவிப்பு வந்ததுல இருந்து இந்த ஆளு புத்தியோடவே  இல்லீங்க டாக்டர். 

வீட்டுபோன்ல இருந்தே செல்போனுக்கு கால் பண்ணிக்கிட்டு, பேப்பர் பேப்பரா எழுதி கிழிச்சு  போட்டுட்டு ஒரே தொல்லைங்க டாக்டர்.

பையன்கிட்ட ரெண்டு வரி அளவுக்கு எதையோ  கொடுத்து ,இதே மாதிரி எழுதி பிரிண்ட் அவுட் எடுத்துட்டு வாடான்னு சொல்லி, கொட்ட கொட்ட அந்த கெரகத்த பார்த்துட்டு இல்லாத  அட்டுழியம் பண்ணிட்டு இருந்தாருங்க டாக்டர். ஏணுங் டாக்டர் நீங்களே சொல்லுங்க ? அன்னைக்கு எதோ அவருக்கு தெரிஞ்சவங்க மூணு பேரு வந்ததால சட்டுன்னு இங்க வந்து சேர்க்கறதுக்கு ஆச்சுங்க. மவராசனுக நல்லா இருப்பாங்க.இல்லீனா இந்த மனுசனுக்கு எதாச்சும் ஆயிருந்தா எனக்கும் என்ர பையனுக்கும் யாருங்க டாக்டர் பொறுப்பு?

ஆளு முழிச்சதும் , இந்த கன்றாவியெல்லாம் இனி தொடக்கூடாதுன்னு  கண்டிசனா சொல்லிபோடுங்க டாக்டர்.மறுக்கா இது மாறி பண்ணுனா நான் பையன கூட்டிட்டு என்ர பாட்டுக்கு போய்ட்டே இருப்பேன். போதுஞ்சாமி இந்த புத்திகெட்ட ஆளு சகவாசம். இப்ப கதை ஒண்ணுதான் இந்த ஆளுக்கு கேடு.
போட்டி வைக்கரானுகளாமா  பொல்லாத போட்டி? நாசமா போறவனுக நல்லாவே இருக்க மாட்டானுக டாக்டர்.'

--------------------------------------
  பரிசல் , ஆதியை தேற்றிக்கொண்டிருந்தார்.

'விடுப்பா அந்த ஆளுக்கு ஒன்னும் ஆகலைல.udanz இயக்கத்துக்கு எந்த கெட்ட பேரும் இல்ல.தப்பிச்சோம். '

'யோவ் சும்மா இருய்யா.
பெரிய தீவிரவாத இயக்கம்  ரேஞ்சுக்கு பில்டப் பண்ணிக்கிட்டு
இருக்கீங்க.
நல்ல வேளை சரியான நேரத்துக்கு நம்ம போனோம் ,அந்த ஆளு உயிர் பிழைச்சான் .
அந்த அம்மாவுக்கு மட்டும் நாம யாருன்னு தெரிஞ்சிருந்தது , செத்திருப்போம்..முதல தகவல் சொன்னவனுக்கு ஒரு பெரிய கும்புடு போடணும்.இல்லேன்னா நம்ம கதி என்ன ஆவறது ? '

'ஒன்னும் ஆயிருக்காது.
புலம்ப அரம்பிச்சிராத..அதான் போகும்போதே
கஷ்டப்பட்டு கடன வாங்கி  , பாக்கெட்ல பணமும் கொண்டு போயிருந்தோம்ல. ஒரு வேளை அந்த ஆளு  கதை எழுதாம சாக மாட்டேன்னு சொல்லியிருந்தா,  போதும்பா நீ கதை எழுதுனதுன்னு சொல்லி பணத்தை அப்போவே கொடுத்திருப்போம். பரவாயில்ல பணம் மிச்சம்.'

பரிசல் பேசிக்கொண்டே போக தடுத்து நிறுத்தியது அலைபேசியின் அழைப்பு. மேலிடம்.ஒரு பெருமூச்சு விட்டபடி இப்போது அழைப்புக்கு பதில் கொடுத்தார்.

'எங்கங்க இருக்கீங்க? மூணு மணி நேரமா கால் பண்ணிட்டு இருக்கேன்.எடுக்க மாட்டீங்கறீங்க.வீட்டுக்கு வாங்க.உங்களுக்கு இருக்கு.'

'ஐயோ இல்லமா.அது ஒரு சின்ன பிரச்சனை. வந்து கூகிள்.. இல்ல கோகுல்....'

'உளறாதீங்க..இன்னும் பத்து நிமிசத்துல வீட்டுல இருக்கணும்'

பரிசலின் தவிப்பை ரசித்தபடி ஆதி கேட்டார்.

'என்ன சங்கர் உங்களுக்கு ,  ட்ரைனுக்கு லேட் ஆகல?'

பதில் சொல்லாமல் கேபிள் சங்கர் மிக சிரத்தையோடு எதையோ லேப்டாப்பில் டைப் செய்து  கொண்டிருந்தார்.

'சாப்பாட்டுக்கடை -  திருப்பூரில் பதிவர்கள் சார்பில் ஓர் அவசரகூட்டம் ஆதி , பரிசல் தலைமையில் நடைபெற்றது. ....
.....இவர்களின் ஸ்பெஷாலிட்டி சாம்பார் இட்லி .அருமையான நெய் மணக்கும் சாம்பார் இட்லி , கொத்தமல்லிதழை மிதக்க வெகு சூடாக  இருக்கிறது. ம்ம்ம்ம் அட்டகாசமான சுவை.விலை கொஞ்சம் அதிகமென்றாலும் worth .திருப்பூர் போகும்போது தவறாம ஒரு நடை போயிட்டு வந்திருங்க.
ராத்திரி  ஒரு மணி வரைக்கும்  பார்சலும் உண்டு.
 டிவைன்.'

----------------------------------------------------------------

11 comments:

Anonymous said...

இது தான் பதிவு. பதிவு சூப்பர் தலைவா.

Anonymous said...

super story anna.. but wouldnt they angry on u for making fun out of them?

-renuga devi

கார்த்திக் பாலசுப்ரமணியன் said...

கதை அருமையாக இருக்கிறது. வாழ்த்துகள் !!

குறையொன்றுமில்லை. said...

கதை நல்லாவே சொல்லி இருக்காங்க.

அபிமன்யு said...

உங்கள் அனைவரின் பாராட்டுக்கும் நன்றி.

ரேணு -
யாரும் தவறாக எண்ண மாட்டார்கள் என்றே நினைக்கிறேன். நகைச்சுவைக்காகவே இந்த முறையை எடுத்தேன்.கூடியவரை கவனமாக கையாண்டிருக்கிறேன் . தவறுதலாய் நினைத்தால் மன்னிப்பு கேட்க தயாராய் இருக்கிறேன். :)

lenin said...

நகைச்சுவையுடன் முடித்து இருக்கிரீர்கள் மிகவும் அருமை

ananthu said...

Story well said with good humor sense...Congrats

ஷைலஜா said...

super!

Sharmmi Jeganmogan said...

நல்ல கதை. ஓட்டு போட்டுவிட்டேன்...

சி.பி.செந்தில்குமார் said...

குட்

நம்பிக்கைபாண்டியன் said...

கடைசியில் சிரிக்க வைத்து விட்டீர்கள்,அம்மணியின் கோவை பாஷையில் நன்றாக இருந்தது வாழ்த்துக்கள்

Post a Comment