Monday, September 5, 2011

மூன்றாம் கடவுள் தினம்

ஆசிரியர்கள் தினமாக செப்டம்பர் ஐந்தை அப்போதுதான் அறிவித்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. ஒரு கல்லூரியில் அந்த நாளை கொண்டாட ,விழா ஏற்பாடு செய்து ,அங்கே  பணி புரிந்த  விரிவுரையாளர்களை பேச அழைத்தனர். எல்லாரும் ஆசிரியர் தின பெருமையைப் பற்றி விலாவரியாக பேச,
 சந்திர  மோகன்  ஜெயின்  என்னும் ஒருவர் மட்டும் தன் முறை வந்ததும் இப்படி சொன்னார்:

'ஒரு ஆசிரியராக இருந்து   , அதை விட்டு விலகி ஜனாதிபதியாக பொறுப்பேற்றுகொண்ட ராதாகிருஷ்ணன் பிறந்தநாளை  ஆசிரியர்கள் தினமாக கொண்டாடுவதில் எந்த அர்த்தமும் இல்லை.ஒரு வேளை அவர் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்து விட்டு , மீண்டும் ஆசிரியர் பணிக்கு திரும்பினால், அவர் திரும்பிய அந்த நாளை  ஆசிரியர்கள் தினமாக  வெகு சிறப்பாக கொண்டாடலாம்' என்று பொட்டில் அடித்ததுபோல் சொல்லிவிட்டு சென்றார்.

பின்னாளில் அந்த சந்திர  மோகன்  ஜெயின்  , மக்களால் ஓஷோ என்று கொண்டாடபட்டார்.
-----------------------------------

திலகர் காலத்தில் சுதந்திரம் கிடைப்பதற்கான சாத்தியகூறுகள் அதிகம் இருந்தன.அப்போது அவரை அணுகிய நண்பர்கள் , சுதந்திர இந்தியாவில் அவர் வகிக்க விரும்பும் பதவியைப் பற்றி நிறைய ஆலோசனைகள் கூறியபடி இருந்தனர். சிலர் , அவரை ஜனாதிபதியாக வேண்டும் என்றும் , சிலர் பிரதமமந்திரி ஆக வேண்டும் என்றும் சொல்ல , திலகர் கொஞ்சங்கூட  தயங்காமல் சொன்ன பதில்:

'நான் ஏன் பிரதமமந்திரி ஆக வேண்டும்? நான் மீண்டும் என் ஆசிரியர் பணிக்கு செல்வேன்.. நூறு பிரதமர்களை உருவாக்குவேன்..'
-------------------------------------

நீங்கள் ஓஷோவை ஆதரிக்கிறீர்களோ ,அல்ல திலகர் வழியை  பின்பற்றுகிறீர்களோ எதுவும் தவறில்லை. ஆனால் எந்த துறை
வல்லுனரையும் உருவாக்கும் ஆசிரியர் இனத்தை வாழ்த்த ,
அவர்களுக்கு நன்றி செலுத்த வருடத்தில் ஒரு நாள்,அது எந்த நாளாக இருந்தாலும் சரி, ஒதுக்குவது மிக முக்கியம்.

உலகறிந்த பெரியவர்களைத் தவிர, என் வாழ்க்கையில் நான் சந்தித்த  யாரையும் முன்மாதிரியாய் நினைத்து முன்னேற இயலவில்லை.ஆனால் ஒரு சிலர் நாம் நினைவுப்படுத்தாமலேயே , நம் மனதில் அவ்வப்போது வந்து நமக்கு ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துவார்கள். அதில் கண்டிப்பாக நமக்கு ஆசிரியராய் இருந்த  ஒருவராவது இருப்பார்.அப்படி இல்லையென்றால் நீங்கள் 
அதிர்ஷ்டம் இல்லாதவர் என்று அர்த்தம். நானும் கிட்டத்தட்ட அப்படிதான் , அவரை சந்திக்கும் வரை.




பதினோராவது வகுப்பு தொடங்கியபோது , புதிதாக எங்கள் பள்ளிக்கு வந்து சேர்ந்தார் முத்துகுமாரசாமி - பௌதீக ஆசிரியர் .MKS என்று சுருக்கி கூப்பிட சொன்னார்.

எல்லாரும் ஆசிரியர் பணி என்ன  என்பதில்  மிக சரியான ஒரு தவறான அபிப்ராயம் வைத்திருக்கிறோம்.பாடம் சொல்லிக் கொடுப்பவன்தான்  வாத்தியார் என்று.  அல்ல. வாழக் கற்றுக்கொடுப்பவன்தான் உண்மையான குரு. MKS  இரண்டாம் வகை.

எதற்கும் வளைந்துகொடுக்காத தைரியம். நேராக கண்ணை ஊடுருவி மனதைப்  படிக்கும் பார்வை.  
யாரையும் அடிக்க தேவையில்லை - வெறும் எச்சரிக்கையில் மட்டுமே மாணவனின் தவறை ஒத்துக்கொள்ள வைத்து விடும் கண்ணியம். இதுதான் MKS.

வகுப்பில் யாரையும் கண்டிக்க மாட்டார்.அத்தனை பேர் முன்னிலும் அவமானபடுத்தமாட்டார்.அதிகமாக போனால் அவரின் கோபத்தின்  உச்சக்கட்டம் 'Quit the hall'லில் முடியும். தனியாக அழைத்து தவறை சொல்லி  திருத்துவார்.திருந்த வேண்டும்.இல்லையென்றால் கண்டிப்பாக திருத்துவார்.  

பாடம் நடத்தும்போது புத்தகம் அவர் கையில் என்றுமே இருந்ததில்லை. வெறுங்கையை வீசி வகுப்புக்கு வரும் ஒரே வாத்தியார் அவர்தான். அவர் நடத்துவதை ஒரு முறை கவனித்தால் , கண்டிப்பாக புத்தகத்தை மறுபடியும் மேயத்தேவை இல்லை.

'Be Black or White' என்பதற்கு மிக சிறந்த உதாரணம். எந்த சூழ்நிலையில் எப்படி இருக்க  வேண்டும் என்பது அவருக்கு தெரியும்.மார்க் எடுக்கவில்லை என்றால் வார்த்தையாலேயே  புரட்டி எடுப்பவர் ,  மாணவர்கள் எல்லாரையும் அழைத்துக் கொண்டு 
 சுற்றுலா கூட்டிச்சென்று  கூடப்படிக்கும்   மாணவன் போல் விளையாடுவார்.

புத்தகத்திற்கு அட்டை போடாமல் கந்தலாக வைத்திருக்கும் மாணவனைப் பளார் என்று அறையும் ஆசிரியர் மத்தியில் , அவர் புன்னகையுடனே இப்படி சொன்னார் - 'எவ்வளோ அழகான பையன் நீ. புத்தகத்தையும் அதே மாதிரி வெச்சா நல்லா இருக்கும் இல்ல..?' . அடுத்த நாள் புத்தகம் பளீர்.

மொழிபாடங்களிலும், கணிதத்திலும் நல்ல மதிப்பெண் எடுக்கும் நான் இயற்பியலிலும் , பௌதீகத்திலும் ஒரு சுமார் ரகம்தான்.காரணம் எனக்கு பிடிக்காத பாடத்தில்,  ஆர்வம் இல்லாமல் எதோ படிக்கவேண்டுமே என்று காட்டிய மெத்தனம்.

என் விஷயத்தில் அவர் முடிவெடுக்க சிரமபட்டார். மோசமான மாணவன்  என்று  முடிவெடுக்கவும் முடியவில்லை அதே சமயம் அவர் பாடத்தில் மட்டும் அக்கறை காட்டாமல் இருப்பவனை விடவும்  முடியவில்லை. ஒருநாள் மிக வருந்தி என்னை அழைத்து சொன்னார் - ' நல்லா படிக்கிறவன் நீ. ஆனா பிடிக்காதத,  வலுக்கட்டாயமா படிக்க சோம்பேறித்தனம்.உன் விருப்புவெறுப்பை பாடத்துல காட்டக்கூடாது. பின்னால வருத்தபடுவ.போ' .

அவர் சொன்ன பின்னால , ரிசல்ட் வரும்போது வந்தது. பௌதீகத்தில் மட்டும் ஒரு முப்பது குறைந்து என் இஞ்சினீரிங் கட்-ஆப் மார்க்கில்  ஓரளவு நல்ல அடி. மெரிட் சீட் கிடைக்க விடாமல் தடுத்தது ,அவர் சுட்டிக்காட்டிய என் மெத்தனம்.வருத்தப்பட்டேன்.

வெறும் மனப்பாடம் செய்வது அவருக்கு பிடிக்காது. அந்த விஷயத்தில் மதிப்பெண் என்ன எடுத்தாலும் பாராட்ட மாட்டார். புரிதல்தான் அவர் இலக்கு. டியுசன் எடுக்கும்போது செருப்பு அணிந்து பாடம் நடத்த மாட்டார். அவர் வீடு திருவிழா போல் வண்டிகளால் சூழப்பட்டிருக்கும்.அவர் சோர்வாக இருந்து நான் பார்த்ததில்லை.

 ஒரு கல் , ஆணி, பை, சாக்பீஸ் என எது கையில் கிடைத்தாலும் அதை வைத்து அழகாக ,சொல்லவேண்டிய விஷயத்தை விளக்குவார்.ஒருமுறை , ப்யூஸ் போன ட்யுப்லைட்டை கரண்ட் கம்பத்தில் போகும் வயர்கள் அருகில் பிடித்தால் அது எரியும் என்று அவர் சொல்ல , கிட்டத்தட்ட இருபது பேர் ஏழு , எட்டு ட்யுப்லைட்களை இரவில் அப்படி செய்து பார்த்து ஏதோ நாங்களே அந்த உண்மையை கண்டுபிடித்த மாதிரி சத்தம் போட்டு அக்கம்பக்கம் இருப்பவர்கள் துரத்தும் வரை  சந்தோசத்தை கொண்டாடினோம். 

வசதி குறைந்த மாணவர்களிடம் அவர் எந்த கட்டணமும் வாங்கியதில்லை. அதையும் அவரால் உதவிபெற்ற  மாணவன் ஒருவன் சொல்லித்தான் எனக்கு தெரியும். 

அவரை பொறுத்தவரை நான் அவரிடம் பயின்ற மாணவரில் ஒருவன். என்னை சரியாக நினைவு வைத்திருப்பாரா என்பது சந்தேகமே.இல்லையென்றாலும்  தவறில்லை.நினைவில் வைக்கும் அளவுக்கு நான் அவருக்கு எந்த பெருமையையும் தந்ததில்லை.



பதினோரு வருடம் கடந்தாயிற்று.இன்று வரை எதை செய்தாலும் ஒரு ஒழுங்கும்,அக்கறையும்,சரியாக செய்தால் எவருக்கும் பயப்படத் தேவையில்லை என்ற தைரியமும் கொண்டிருப்பது அவரிடம் கற்ற பாடம்தான்.எதிலும் Practical அணுகுமுறை என்பது அவர் சொல்லிகொடுத்த மிகபெரிய மந்திரம்.

நான் கடைபிடிக்கும் வாழ்க்கைமுறை யாராவது பாரட்டும்படியிருந்தால் அந்த பாராட்டு அவருக்கே சேரும். அவர் வாழும்முறையை பார்த்தே அதை மிகத்தெளிவாக  கற்றுக்கொண்டேன். அவரிடம் இதுவரை நான் சரியாக கற்றுகொள்ளாதது..வேறென்ன? பௌதீகம்தான்.

இப்படி எத்தனையோ ஆசிரியர்கள் , நம்மை வழிநடத்தி கொண்டிருக்கிறார்கள்.படிக்கும் காலத்தில் அவர்களை , அவர்களின்  கட்டுபாடுகள் நமக்கு பிடிக்காமல் போனாலும் காலம் தாண்டியும் நாம் அவர்களுக்கு கட்டுப்பட்டுள்ளோம்.

இனிய ஆசிரியர்கள் தின வாழ்த்துக்கள்.

2 comments:

போளூர் தயாநிதி said...

ஓடி ஆடும் வயதில்
ஒதுக்குப்புறமாய்
நீயும் நானும்;
ஆடி அடங்கும் வயதில்
வந்திருக்கிறேன் உன் அருகில்;
வளைகுடாவிற்கு
வயது ஒத்துழைக்காததால்!/ nice

பாலா said...

ஆசிரியர் தின வாழ்த்துக்கள். ஆசிரியராக பெருமைப்படுகிறேன்.

Post a Comment