Tuesday, July 26, 2011

பாப்கார்ன் பாக்கெட்- 20110726


நடிகர் ரவிச்சந்திரன் இன்று நம்முடன் இல்லை. 'காதலிக்க நேரமில்லை' அசோக்கை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. அந்த இளமையும் , வசீகரமும் அப்போது சிவாஜி , எம்ஜீஆர் ரசிகர் அலை தாண்டி ஜெய்ஷங்கருடன் போட்டி போட இவருக்கு உதவியது. 

வேறு யாருக்கும் கிடைக்காத ஒரு சிறப்பு இவருக்கு உண்டு. தமிழில் மிக வரவேற்பை பெற்ற இரண்டு  த்ரில்லர் படங்களில்  இவர் பிரதான இடம் பெற்றிருக்கிறார். இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில் எடுக்கப்பட்டவை.  முதலாவதில் ஹீரோ ;இரண்டாவதில் வில்லன். படங்கள் : அதே கண்கள் - ஊமை விழிகள்.



இவரின்  கணீர் குரல் , இவர் வசன உச்சரிப்புகளுக்கு பெரிய பக்கபலம். 'மூன்றெழுத்து'    படம் அப்போதைய தமிழ் திரையுலகில் ஜேம்ஸ் பாண்ட் சாயலில் வந்து வெற்றிப் பெற்ற படம். அடிக்கடி இடையில் நிறைய நகைச்சுவை படங்களில் நடித்துள்ளார். வசனங்களை விழுங்காமல் , தெளிவாக உச்சரிக்கும் நல்ல நடிகர். நிறைவான வாழ்க்கை வாழ்ந்து மறைந்தவர்க்கு வணக்கங்கள்.
-----------------------------------------

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் தோல்வி ,கிரிக்கெட் ரசிகர்கள் நடுவில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலும் குறிப்பாக தோனி மீது பலருக்கும் எரிச்சல். வாஸ்தவம்தான். பிரவீன் குமார் நன்றாக விக்கெட் எடுத்து வரும்போது , ரெய்னா நல்ல பாஃர்மில் இருக்கும்போது தேவையில்லாமல் எதற்கு எட்டு ஓவர் போட்டு, ஆட்டத்தை குழப்ப வேண்டும்.


 நல்ல கேப்டன் , அருமையான விக்கெட் கீப்பர் ;சிறந்த  பேட்ஸ்மேன் என்று எல்லாரும் ஏற்றுக்கொண்ட பிறகு இப்போது எதற்கு இந்த பரிசோதனை ?
அப்படியே இருந்தாலும் அதற்கு காலம்,நேரம் கிடையாதா?எங்களுக்கு புரியவில்லை -  இன்னும் எதை நிரூபிக்க நினைக்கிறீர்கள் தோனி ?
------------------------------------------------

திமுக மிக இக்கட்டான நிலைமையில் இருக்கிறது.. அடுத்த தலைமைப் பொறுப்பு யாருக்கு என்று சொல்ல வேண்டிய கட்டாயம் கலைஞருக்கு ஏற்பட்டிருக்கிறது.தன் புகழ்  நிலையிலும் ,  கட்சியின் ஏகோபித்த ஆதரவையும் பெற்றிருக்கும் தளபதி,    ஜெயலலிதாவுக்கு எதிராக அரசியல் செய்வதில் மட்டும் இன்னும் கத்துக்குட்டியாகவே இருக்கிறார். 

சமச்சீர் கல்வித்திட்டத்தில் இவர் காட்டிய வேகம் மிக  ஆமைத்தனம். இதுவே பத்து வருடம் முன்னால் இருந்திருந்தால் கலைஞர் ,நிலைமையை  மிக அழகாக கையாண்டு குறைந்தபட்சம் இழந்த செல்வாக்கை மீட்டி இருப்பார். தலைமையில் மாற்றம் வர வேண்டும் என்று திமுகவினர் நினைக்க ஒரே காரணம் கலைஞர் வயதுதானே தவிர தளபதி அந்த இடத்துக்கு ஆயத்தமாகி விட்டார் என்பதற்காக அல்ல..

ஒன்று மட்டும் நிச்சியம் , திமுகவின் ஆயுள் ஸ்டாலின் கையில் மட்டுமே. கட்சியை முதலில் வெறுப்படைந்த மக்களிடமும் , பிறகு அண்ணனிடமிருந்தும்  காப்பாற்ற வேண்டிய சூழ்நிலை தளபதிக்கு இப்போது. இவர் திறமைக்கு இப்போது இது பெரிய சவால்.



இதில் மட்டும்  ஜெயித்தால் , எதிரப்பக்கம் தவறுகளை அடுக்கி கொண்டு போகும் இந்நேரத்தில் ஸ்டாலின் கட்சியின் செல்வாக்கையும் , அவரின் நிலையையும் எளிதாக உயர்த்தி விடுவார்.

ஞாபகம் வெச்சுகோங்க தளபதி ..பாண்டவர் பலம் பெற்றது வனவாசத்தின் போதுதான். சீக்கிரம்  எதாவது முடிவெடுங்க..
 --------------------------------------------------------------

இயக்குனர் விஜய் படத்தின் மூலத்தைப்பற்றி ஒரு வார்த்தை முன்னமே சொல்லி தொலைஞ்சிருக்கலாம்.அதனால  வந்த வினை.      தெய்வத்திருமகள் படத்தின் வெற்றியை கொண்டாடும் நேரத்தில் , பல அதிபுத்திசாலிகள் , சினிமா சுப்புடு சந்ததியினர் , ஏதோ அவர்களுக்குத்தான் அந்த படம் 'I am Sam' படத்தின் காப்பி என்றும் நமக்கு அந்த உண்மை தெரியாது என்றும் கஷ்டப்பட்டு பின்னூட்டமிட்டும் , பேஸ்புக்கில் கமெண்ட் அடித்தும் தங்கள்  அறிவுஜீவித்தனத்தை அறிவித்து வருகிறார்கள். உண்மைதான். படம் காப்பிதான்.



என்ன செய்ய சொல்கிறீர்கள் ?  இதற்கு முன் எந்த படமும்  இது போல் வந்ததில்லையா ? வெற்றி பெற்றதில்லையா?  வேண்டுமானால் இயக்குனர் விஜயிடம் 'இந்த படத்தின் கதை I am Sam படத்திலிருந்து திருடப்பட்டது' என்று டைட்டில்கார்ட் போட சொல்லலாமா - 'இந்த டம்ளர் சாரதாபவனில் இருந்து திருடப்பட்டது' என்று பொறிப்பது போல ? 

 ஒரு உணர்வுபூர்வமான கிளாசிக் கதை எங்கிருந்து எடுக்கப்பட்டாலும் அதில் நடித்தவர்கள் நடிப்பு ஒன்றும் பொய் இல்லையே..

இதை இவ்வளவு பேச்சு பேசுபவர்கள் 'ஒக்கடு' கில்லியையும் , 'டான்' பில்லாவையும், 'மணிசித்ரதாழ்'  சந்திரமுகியையும் கைத்தட்டி பார்ப்பார்கள்.  

இந்தா , சீனுக்கு சீன் சட்டை கலர் கூட மாத்தாம
'3  இடியட்ஸ் ' நண்பன் வந்துட்டு இருக்கான்ப்பா.. சந்தோசமா விசிலடிச்சு முதல் நாளே போய் பாருங்க..
-----------------------------------------------------------------------------------

என் முந்தைய இந்த பதிவுக்கு நல்ல வரவேற்பு.. எதை எதிர்பார்த்து எழுதினேனோ அது நடந்ததுல ரொம்ப  சந்தோசம்..எனக்கு தெரிந்த நண்பர்கள் ஆறு பேரும் , தெரியாத  பல பேரும் கல்விக்கு தத்தெடுக்கும் முறையில் தங்களை ஈடுபடுத்திக்க விருப்பம் தெரிவிச்சாங்க..

விழுப்புரம் பக்கம் ,ஒரு இருபது முன்னாள் மாணவர்கள் , 'கை கொடுக்கும் கை' என்ற பெயரில் வருடந்தோறும் எட்டிலிருந்து  பத்து குழந்தைகளுக்கான படிப்பு மற்றும் புத்தக செலவை  கவனித்து வருவதாக ,அதில் பங்கு பெற்றிருக்கும் என் நண்பனின் நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

கவனிக்க வேண்டிய விஷயம் என்னன்னா , எல்லாருக்கும் உதவ மனசு   இருக்கு .. ஆனா எப்படின்னுதான் தெரியாம அதை ஒத்தி போட்டு இருக்காங்க.. இப்போ இது போன்ற முறைகள் , பதிவுலகம் மூலமா தெரிந்தனால , பல இடத்துல எல்லா நண்பர்களையும் இதில் குழுவாக்கும் முயற்சி ஏற்படுத்தி வருது.

தவிர கட்டணத்தை பகிர்ந்துக்குற வசதி இருக்கிறதுனால அவர்களோட மாத  பட்ஜெட்ல மிக குறைவா எடுத்தா போதுங்கற ஒரு நிறை இருக்கு..
பதிவை பகிர்ந்த நண்பர்களுக்கும் , அதை உணர்ந்து உதவ வந்த உன்னதர்களுக்கும் ,  நன்றிகளும் வாழ்த்துக்களும்.. தொடரட்டும்..

யாருக்கு தெரியும் ? நீங்கள் உதவும் குழந்தை நாளையே ஒரு மருத்துவராக பல உயிரை காப்பாற்றும். புண்ணியம் உங்களை சேரும்..
-------------------------------------------------------

இப்போல்லாம் ஆ.ராசா , சுரேஷ் கல்மாடி , நித்தியானந்தா இவங்களை எல்லாம் பாக்கும்போது எனக்கு இந்த போஸ்தான்  ஞாபகத்துக்கு வருது.. தப்பு செஞ்சுட்டு மாட்டிகிட்டா எல்லாரும் இப்படிதான் இருப்போமா?



------------------------------------------------------
இந்த பாட்டுக்கு  முன்னுரை தேவை இல்லை.. காதலில் தோற்ற அனைவரும் இந்த பாடலை அறிந்திருப்பார்கள். ஒரு காதலன் , இழந்த காதலியை நினைத்து பாடுவதில் ஒரு சிறிய கோடு தாண்டினாலும் அந்த பாத்திரத்தின் மதிப்பு போய் விடும்..

இதை விட நாகரீகமாக ,மறக்காத தன் காதலையும் , தன் தற்போதைய பொறுப்பையும் நினைத்து நாயகன் பாடும் பாடலை கண்ணதாசன் அல்லாது வேறு யார் எழுதியிருந்தாலும் ,எங்காவது சிறிது எல்லை தாண்டியிருக்ககூடும்.



இந்த படம் இப்போது வந்தால்  பொருத்தமான நடிகர்கள் கிடைக்கிறது மிக கஷ்டம்.

இன்னொரு எம்.எஸ்.வீ மைல்கல். ஏ.எல்.ராகவன் சோகமும் , ஏக்கமும் வழிந்தோடும் இனிய குரல்.. கண்ணை மூடி அனுபவியுங்கள்..
----------------------------------------------

Monday, July 18, 2011

தெய்வத்திருமகள்

அழகான மாலையில் , பூங்காவில் நிழல்குடையில்   அமர்ந்து இயற்கையை ரசிக்கும் போது , மெல்லிதாக ஒரு மழை வந்தால்  எப்படியிருக்கும்? மண்வாசமும் ,  குளிர் காற்றும் , ஆர்ப்பட்டமில்லாத மழைத்துளிகள் முகத்தில் மோதினால் தோன்றும் உணர்வு எப்படியிருக்கும்?  பக்கத்தில் உங்கள் தாயோ தந்தையோ , அவர்கள் தோள் சாய்ந்து இயற்கையை அந்த நேரத்தில் ரசித்தால் மனம் எப்படி லேசாக இருக்கும் ?

தெய்வத்திருமகள் பாருங்கள்...


கிளாசிக் படங்கள் என்றால் அது கேரளாவில் இருந்து மட்டுமே என்ற இந்திய திரைப்பட நியதி தற்போது உடைபட்டு வருகிறது. மிஸ்கின்,வசந்தபாலன்,ராதா மோகன் , பாலா ,சற்குணம்,சசி குமார் ,சமுத்திரகனி   போன்றவர்கள்  பெருகிக்கொண்டு வருவது தமிழுக்கு மிகப்பெரிய பலம்.
 
அந்த வரிசையில் கவனிக்கத்தக்கவராக மிளிர்கிறார் விஜய். மதராசப்பட்டிணம் என்ற அருமையான , மெல்லிய காதலும் ,நிதானமான கதையும் கொடுத்து வியக்க வைத்தவரின் அடுத்த படைப்பு தெய்வத்திருமகள்.
 
முதலில் , ஒரு  ஆறு வயது அழகிய ,நடிக்கத்தெரிந்த கதாநாயகியை அறிமுகப்படுத்தியதற்கு  ஒரு பெரிய சல்யுட். 
 
 
 
குழந்தை சாரா சிரிக்கிறாள் - சிலிர்க்கிறோம்; பேசுகிறாள் - கிறங்குகிறோம் ;கவலைப்படுகிறாள் - பதறுகிறோம்; தந்தையுடன் மௌன பாஷை பேசுகிறாள் - உருகுகிறோம்.இதை சாத்தியப்படுத்துவதன் மூலமே அறுபது சதவீத வெற்றி பெற்று விட்டார் இயக்குனர். படத்தில் ஜி.வி.பிரகாஷின் இசைக்கு போட்டி இவள் குரல்தான் .
 
எமி ஜாக்சன்,சாரா என்று நல்ல நடிகைகள் கண்டுபிடிப்பில் பேர் வாங்கும் அடுத்த பாரதிராஜா இதோ இங்கே.



கண்ணை உறுத்தாத நடிப்பு. பாத்திரத்துக்கு தேவையான  பாவனைகள்.  சந்தோசம். அனுஷ்கா இனி இந்த படத்தை தன் அடையாள அட்டையாக தாராளமாக பயன்படுத்தலாம்.

மைனா போன்ற மிகப்பெரிய வெற்றிப்படத்தில் அறிமுகம் ஆகி இதில் குறைந்த  காட்சிகளில் தோன்றுவதை பொருட்படுத்தாமல் நடித்த 
அமலாவுக்கு விஜய் நன்றி சொல்லியிருப்பார். இப்போது விஜய்க்கு அமலா நன்றி சொல்ல வேண்டும். இரு நடிகைகளும் சாராவுக்காக முதலிடத்தை படத்தில் விட்டு கொடுத்தது பாராட்டப்பட வேண்டியது.

நாசரை தவிர வக்கீல் பாஷ்யம் கேரக்டருக்கு யாரை தேடுவது?  எத்தனை படங்களில் வக்கீலாக நடித்திருந்தாலும் ஒவ்வொன்றிலும் மாறுதல் கடைபிடிக்கும் சிறந்த நடிகரை கையில் வைத்துக் கொண்டு விஜய் யாரை தேடுவார்?  கனப்பொருத்தம்.

இன்னும் ஒரு இரண்டு வருடம் இதை தொடர்ந்தாலே போதும்.. சந்தானம் முதலிடத்தில் இருப்பார். விவேக் வைத்திருப்பது போல எந்த டெம்ப்ளேட்டும் இல்லாதிருப்பதே இவரின் பலம்.  யதார்த்த நகைச்சுவைக்கு தற்போதைய நாயகன் சந்தானம்தான். தனி ட்ராக் எதுவும் இவருக்கு தேவை இல்லை. வாழ்த்துக்கள்.
 
ஏற்கனவே பலமுறை சொன்னதுதான். கமலுக்கு அடுத்து கதைக்குள் தன்னை ஒளித்துவைத்து பாத்திரமாக மட்டுமே தெரிவது விக்ரம் மட்டுமே.
ஆறு வருட அலைகழிப்புக்கு பிறகு விக்ரம், ரசிகர்களுக்கு  மீண்டும் தன்னை திருப்பிக் கொடுத்து விட்டார்.  

வசனங்கள் குறைவு..இருக்கும் வசனமும் எந்த தெளிவையும் சொல்லாது.. மனதில் இருக்கும் பதிலை ,வெறும் திணறலில் மட்டுமே ரசிகர்களுக்கு புரிய வைக்க வேண்டிய கட்டாயம்  விக்ரமுக்கு. அதை செய்ய கொஞ்சம் நாடகத்தனம் கொடுத்திருந்தாலும் , பாத்திரம் வலுவிழந்திருக்கும்.
அந்த கவலை இயக்குனருக்கு நேராமல் இருக்கும் நம்பிக்கையை விக்ரம்  முன்னமே கொடுத்திருப்பார். அதை காப்பாற்றியிருக்கிறார்.  



சொல்ல வந்ததை சொல்லாமலேயே புரிய வைக்கும் இவருக்கு ,சாதனை செய்ய இறைவன் நல்ல இயக்குனர்களை கொடுக்கட்டும்.
சரி.. மீன்குட்டியின் நீச்சலை பாராட்ட தேவையே இல்லை.
இயக்குனரை மட்டுமே பார்ப்போம்.
 
'குழந்தைக்கு பேரு வெக்காத..பெரிய பிரச்சனை ஆகிடும்..அப்புறம் எல்லாரும் பேர சொல்லியே கூப்பிடுவாங்க..' -
 
மனநிலை பாதிக்கப்பட்டவரின் ஆலோசனையாக இந்த டயலாக் வரும்போது மெல்லிய நகைச்சுவையினூடே அவர்களின் அப்பாவித்தனத்தை இதை விட  அழகாக இது வரை எவரும் சொன்னதில்லை..
-------------------------------

'நீ மட்டும் அப்பாகிட்ட இருக்கலாம்.நான் இருக்க கூடாதா? ' -
சாராவின் கேள்விக்கு அமலா மட்டும் அல்ல யாருமே பதில் சொல்ல முடியாது..

------------------------------

கோர்ட் காட்சியில் கொஞ்சம் தவறினாலும் , நாடகம் பார்க்கும் எண்ணம் ரசிகர்களுக்கு வந்து விடும். அல்லது எப்போதோ வந்த விதி படமும் , அவ்வப்போது வரும் சீரியல் கோர்ட் காட்சிகளும் மனதில் வந்து தொலைக்கும். அதை வரவிட அனுமதிக்காத திறமை  விஜய்க்கு இருக்கிறது.

அனுஷ்கா - ஒய்.ஜி இணக்கத்தை காட்டும் கவிதை காட்சிகள் , பல தந்தை-பெண் உறவில்  நடக்கும் ஈகோ நிகழ்வு.   

எல்லாவற்றிற்கும் மேலாக இறுதி காட்சியில் வரும் அந்த அப்பா மகள் மௌன உரையாடல்... ஹ்ம்ம்.. மெலோ ட்ராமா இல்லாமல் அழவைக்கும் மென்மையின் சக்திக்கு உதாரணம்.

எத்தனை காலம்தான் திரிசூலம் டெலிபோன் காட்சியை பார்த்து 'இதோ ..உணர்ச்சி குவியலின் சிகரம்'  என்று வேறு வழியில்லாமல் பாராட்டிக்கொண்டிருப்பது?
இங்கே அமைதியாக ,வசனம் எதுவும் இல்லாமல் ஸ்பரிசங்களின் ஸ்வரங்களாக பார்ப்பவரை 
ஆட்கொள்கிறது காட்சி..

இங்கேயே தமிழ் படங்களின் தரம் உயர்ந்திருப்பதை உணர முடிகிறது..

உங்களுக்கு விலாசம் தமிழ் திரையுலகில் தங்கத்தால் எழுதப்பட்டுவிட்டது விஜய். அதை எந்த நடிகரின் இமேஜுக்காகவும் தூசுப்பட வைக்காமல் உங்கள் வழியில் செல்லுங்கள்.



யாராவது இனி தமிழ் படத்தின் தரம் என்ன என்று நிர்ணயிக்க தொடங்கினால் , இந்த படத்தை பார்க்கட்டும். நாங்கள் பிளாஸ்டிக் புன்னகையும் , கிளிசரின் கண்ணீரையும் , தாலி செண்டிமென்ட்டையும்  தாண்டி பல காலம் ஆகி விட்டது  என புரிந்து கொள்ளட்டும். 

தெய்வத்திருமகள் - லக்ஷ்மி விக்ரகம்.

Friday, July 15, 2011

வேங்கை - வேகம் இல்லை..

ஹரிக்கு இது பதினோராவது படம்.. சரியாதான் இருக்கு.. இது அவருக்கு பத்தோட பதினொன்னு.. அத்தோட இது ஒன்னு ..
 
 

சிங்கம் படம் முடிந்ததும் ஹரியின் அடுத்த படத்திற்கான ஆரம்ப வேலை நாள் இப்படிதான் இருந்திருக்கும்..

'பிரகாஷ்ராஜ் சார்..மேக்கப்ப களைச்சுடாதீங்க.. அப்படியே
இருங்க.. இங்க வாப்பா.. மீசையை ரெண்டு பக்கமும் இன்னும்  பெருசா ஒட்டு..'

'ராதாரவிய அனுப்பிடு.. அப்பா கேரக்டருக்கு நீ போயி  கோவில் பட கெட்டப்ல  ராஜ்கிரண் சார கூட்டிட்டு வா..'

'தமன்னா மேடம்.. சாமி பட சிடி போட்டு பாருங்க.. த்ரிஷா கேரக்டர்தான் நீங்க பண்ண போறீங்க '

' இந்த படத்துக்கு ஹீரோ யார போட்டுருக்கோம். தனுஷா.. ஹ்ம்ம் சரி சண்டைக்கு நம்ம பழைய பட அரிவாள் சண்டை கிளிப்பிங் எல்லாம் போட்டு காமி..என்ன கேரக்டர்னு கேட்டார்னா ஐயா பட சரத் இல்லேன்னா 'வேல்' பட சூர்யா கேரக்டர்னு சொல்லு.. 

பைட் மாஸ்டர்ட்ட சொல்லி ஒல்லியான அடியாளுகள மட்டும் போட சொல்லிடு..மரத்துல மளமளன்னு தாவி ஏறுற சீன மட்டும் வெச்சுரு..அந்த ஒரே அடில பெரிய ஆளுகள அடிக்கிற  சீன அடுத்த சூர்யா படத்துல வெச்சுக்குவோம்.'

---------------------------------------------------

'தனுஷ் அப்பா ராஜ்கிரண்ணா ? என்னண்ணே  பொருத்தமே இல்ல?'

'அட போடா.. லாஜிக் எல்லாம் பாத்தா தனுஷுக்கு அப்பா வேசத்துக்கு மனோபாலாவும் , பட்டிமன்ற ராஜாவும்தான் போடணும்..எல்லாம் சரியா வரும்.. போ'
-------------------------------------------------

காமெடி யாரு?

'யார வேணும்னாலும் போடு.. படத்துக்கு வேகத்துக்கு நடுவுல கொஞ்சம் ஜனங்க தம் அடிக்க போறதுக்கு வசதியா இருக்கணும்..அது போதும்.'




கதாபாத்திரங்கள் என்னண்ணே...?

'அத பத்தி கவலை இல்ல.. நம்ம படத்துல நாலு பேர்தான் முக்கியம்.. ஹீரோ,ஊர் பெரியவரா ஹீரோ அப்பா,வில்லன்,ஹீரோயின்.. இவ்வளவுதான்.. ரெண்டு பக்கமும் அடியாளுகளா அந்த அருவாள் கோஷ்டிகள அப்படியே வெச்சுக்கலாம்..'
----------------------------------------------

அப்ப கதை.?

'அதுவும் பெரிய விஷயம் இல்லைடா..எல்லாரும் எதாவது ஒரு வட்டார பாஷை பேசணும். ஹீரோவுக்கு வில்லனுக்கும் நடக்கற சண்டை.. ஆனா நம்ம வித்தியாசம் எங்கேன்னா ரெண்டு பேருக்கும் நடுவுல இண்டர்வல் அப்ப ஒரு சவால் வரும்..



நமக்கு ஒரே குறிக்கோள் , படம் வேகமா போற மாதிரி இருக்கணும்..அதுக்கு டைம் பாம்  கவுண்ட்டவுன் மாதிரி  ஒரு கிளைமாக்ஸ் நாள் வெச்சுக்கணும்.. சாமி படத்துல எழு நாள் சொன்னோம்மா ? அருள் படத்துல எலெக்சன் வரைக்கும்னு சொன்னோமா ? அப்போ இந்த படத்துல முப்பது நாள் வெச்சுக்கலாம்.

ஹீரோவ இடைல அப்பப்போ ஓட விட்டு அத
பாஸ்ட் பார்வர்ட் பண்ணி  காமிக்கணும்.. வில்லனோ ஹீரோவோ எதாவது பிளான் பண்ணும்போது அத எடிட்டிங்ல அந்த சீன டக்கு டக்குனு காமிக்கிற மாதிரி இருக்கணும்..ராஜேஷ்குமார் நாவல்ல வர மாதிரி, சின்ன சின்ன க்ளுவ வெச்சு  ஹீரோ ,வில்லன் பிளான்ன கண்டுபிடிச்சு முறியடிக்கனும். '

இவ்வளோதான்டா.. போய் சீன டெவெலப்  பண்ணு..
------------------------------------------

இது தனுஷ்க்கு கூடுதலா ஒரு படம்.. மத்தபடி எதுவும் இல்ல..



சராசரியான மசாலா படம்.. ஆனா ஹிட் ஆகாது..
2  மணி நேரம் வெட்டியா இருந்தா பாக்கறதுல தப்பில்லை...


வேங்கை - இயக்கம்  ஹரி.. அதோட சரி..

Wednesday, July 13, 2011

பாப்கார்ன் பாக்கெட் - 20110713




ஒரு திருடன் மாட்டிகிட்டானா  'நான் திருடல ..திருடல...'ன்னுதான்  முதல கத்துவான். ஆனா  பெரிய திருடன் மாட்டிகிட்டானா கொஞ்சம் நாகரீகமா கத்துவான்.
சரி இந்த டயலாக்   யாரு சொன்னதுன்னு சொல்லுங்க..

'ஆளும் கட்சி தேவை இல்லாமல் , எங்கள் கட்சி மீது அடுக்கடுக்காக புகார்களை சுமத்தி வருகிறது. எங்கள் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இப்படி வழக்குகளை எங்கள் மீது திணிக்கிறார்கள். நாங்கள் குற்றமற்றவர்கள். இதை கண்டிப்பாக நிரூபிப்போம். எந்த வழக்கையும் சட்டரீதியாக சந்திக்க தயார்.'

யாரு சொன்னது ?

விவரம் தெரியாதவங்க டக்குனு தளபதின்னு சொல்லிடுவாங்க.

புத்திசாலிங்க குழம்பிடுவாங்க.
காரணம் ஒவ்வொரு தடவையும் ஆட்சி மாறும்போது மாஜி  ஆளும்கட்சி பிரமுகர்கள் 
இப்படிதான் சொல்லுவாங்க.

அப்போ அம்மா சொல்லிட்டு இருந்தாங்க.. இப்போ தளபதி.. நாளைக்கே காட்சி மாறும்..கூட்டணி கவுந்தா கேப்டன் கூட இததான் சொல்லுவாரு.


'வாழ்கையின் தத்துவம் ஒன்றுதான் - அதை சொல்லும் சமயங்கள் வேறு வேறு' என்பது போல்.. இதுதான் டெம்ப்ளேட் டயலாக்; சொல்லும் பிரமுகர்களும் நேரங்களும் வேறு வேறுங்கறதுதான்   உண்மை.
ஆனாலும் தளபதி இப்படி ஒவ்வொரு எடத்துலயும்
ஜீப்ப விட்டு இறங்குனதும் இதேயே ஒப்பிகிறது உள்ள இருக்குற உச்சகட்ட பயத்தோட உச்சகட்ட அடையாளம்.
 
இப்படி நடுங்காம , இதுக்கெல்லாம் அசராம எதுவுமே பண்ணாத மாதிரி தைரியமா சொல்லுறதுக்கு அம்மாதான் கரெக்ட். கலைஞருக்கும் எனக்கும் இந்த காரணத்துக்காக அம்மாவை ரொம்ப  பிடிக்கும்..ஹிஹிஹி..
--------------------------------------------------------------------------

நில ஆக்கிரமிப்பு வழக்குகளை விசாரிக்க அம்மா கொடுத்த  அறிக்கை ரெம்ப விவரமா  இருந்துது..2006-க்கு பிறகு நடந்த  ஆக்கிரமிப்பு பத்தி மட்டும் பாருங்கப்பா-ன்னு மிக சாதுர்யமாக அறிக்கை விட்டு தூள் கிளப்பியிருக்காங்க..

இது காமெடினா , இத விட பெரிய காமெடி  கலைஞரோட எதிர் அறிக்கைதான். ' நாங்க எதுவும் செய்யலை.. முடிஞ்சத பண்ணுங்க'-ன்னு சொல்லுவாருனு  பாத்தா '2006-க்கு முன்னாடி நடந்த ஆக்கிரமிப்பு பத்தியும் அலசுங்க'ன்னு சொல்லியிருக்காரு... 

இந்த போட்டி எப்போ முடியுமோ தெரியல..உண்மையா விசாரணை நடந்தா , ஆளும் கட்சி , ஆண்ட கட்சி எல்லாரும் மாட்டுவாங்க.. 'சரி போனா எல்லாரும் ஒண்ணா   போவோம்'-ன்னு தாத்தா நினைச்சுட்டார் போல.. அது நடந்தா  நல்லதுதான்..

யாராவது   புதுசா வருவாங்க - புதுசா கொள்ளையடிக்க ..

---------------------------------------------------

ரபி பெர்னார்ட் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகிறார். அதிமுக சார்பில் அவைக்கு செல்லும் பெர்னார்ட் மிகுந்த திறமைசாலி.

 சன் டிவியில் தன் பயணத்தை ஆரம்பித்த அவர் ,இப்போது முன்னணியில் இருக்கும் பல  பேச்சாளர்களுக்கு, அரசியல் விமர்சகர்களுக்கு குரு. ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக ஜெயா டிவியில் அடக்கி வாசித்துக் கொண்டிருந்தார்.

 பல காலம் முன்னால் சன் டிவியில் , அரசியல் பிரமுகர்களை   தன் கேள்விகளால் விளாசிக் கொண்டிருந்த ரபிக்கு ஜெயலலிதாவை பேட்டி எடுக்கும் ஒரு வாய்ப்பு  கிடைத்தது.     
 'ஜெயிலுக்குள் போனதும் என்ன செய்தீர்கள் ? அழுதீர்களா ? ' என்றெல்லாம் கேள்வி கேட்ட ரபி பின்னால் அமைதியாக்கப்பட்டார். சன் டிவியிலிருந்து விலகினார்.

ஜெயா டிவியில் இத்தனைக் காலம் பணியாற்றிய பிறகு , கடந்த தேர்தலில் அம்மா எங்கெல்லாம் சென்றாரோ எங்கு நேர்  வர்ணனை செய்து அதிமுகவினரை ஈர்த்தார். 

இப்போது அரசியலில் நேரடியான  முதலடி எடுத்து வைக்கிறார்.

இவர் திறமை மீது யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.

ஆனால் இப்படி எல்லா புத்திசாலிகளும் எதாவது கட்சியின்  நிழலில் தங்கள் சுய அடையாளத்தை தொலைத்து  விடுகிறார்களே என்பதே வருத்தமாக உள்ளது. 
அதனால்தான் நடுநிலையான அரசியல் விமர்சகர்கள் குறைந்து வருகிறார்கள்.

அதிமுகவுக்கு நல்ல ஒரு  எம்.பி கிடைத்து விட்டார். தமிழகத்துக்கு இன்னொரு சோ கிடைக்கும் வாய்ப்பு போய் விட்டது.

வாழ்த்துக்கள் ரபி.
------------------------------------------------------------------------------------

ஆர்குட்டை இப்போதுதான் ஒதுக்கி வைத்து ,  பேஸ்புக்கில் எல்லா நண்பர்களையும் தேடி கண்டுபிடித்து இன்வைட் பண்ணி 
'அப்பாடா' என்று அசந்திருக்கும் வேளையில் , கூகிள் ப்ளஸ்  என்று புதிதாக ஒன்றைக் கொண்டு   வந்து உயிரை வாங்குகிறார்கள்.

மூன்று நாளில் எக்கச்சக்க இன்வைட்.என்னைப் பொறுத்த வரை  உருப்படியாக எதாவது ஒரு சோசியல் நெட்வொர்க்கில் இருந்தாலே போதுமானது. இங்கே   கொஞ்சம் அங்கே கொஞ்சமென்று இருந்தால் சரியாக இருக்காது.. ஆனால் ஆர்குட் அவுட்டேட் ஆகி காலமானதால் , பேஸ்புக்கில் நிரந்தரமாக இருக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன்..


இப்போதே ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை பேஸ்புக்கை Refresh செய்து பார்க்கும் ஒரு வித 'மேனியா'விற்கு தள்ளப்பட்டு விட்டோம் என்பது நிதர்சனம்.
இப்படியே போனால் இது போன்ற  ஏழு எட்டு  இணையதளங்கள் மட்டுமே  மாறி   மாறி திரையில் ஓடும்.

மூன்று மெயில் அனுப்பியும் பதில் அனுப்பாத என் நண்பனின் நண்பனை (சத்தியமா நான் இல்லீங்க ...) , அவன் மானேஜர்  வேறு வழியில்லாமல் பேஸ்புக் வந்து 'Friend Request' அனுப்பி பின் கெஞ்சி கூத்தாடி வேலை செய்ய அழைத்த கூத்து  எல்லாம் நடந்திருக்கிறது.. 

இனியும் ஒரு முறை நண்பர்களை தேடி கண்டுபிடிப்பது என்றால்   ' திரும்பவும் முதலிருந்தா......? ' ரக சலிப்புதான் வரும்..
-----------------------------------------------------------------

நூறாவது சதத்திற்காக தயாராகி விட்டார் சச்சின். இன்னும் இரண்டே  இரண்டு  சதங்கள் அடித்து விட்டால் , என் அன்றாட வேண்டுதலில் ஒரு வேண்டுதல் நிறைவேறும்.

மொட்டை போடுவதில் தொடங்கி கிடா வெட்டி விருந்து வைப்பது வரை நிறைய நண்பர்கள் நிறைய விதங்களில் பிரார்த்தனை செய்து வருகிறார்கள். கடந்த இரண்டு வருடமாக இந்திய அணிக்கு நல்லது மட்டுமே நடந்துக் கொண்டிருக்கிறது என்பது  மகிழ்ச்சியான விஷயம்.
இது மட்டும்தான் பாக்கி.



கவலைப்பட எத்தனையோ விஷயங்கள் ஒவ்வொரு இந்தியன்  மனதிலும் இருந்தாலும்
எல்லாரும் எல்லாவற்றையும் மறந்து பார்ப்பது சச்சின் ஆட்டம்  மட்டுமே. ஆஸ்திரேலிய பத்திரிக்கையாளர் பீட்டர் ரீபோக்  சொன்னது போல் 'This Genius can stop time in India!'
  
எல்லார் வேண்டுதலும் நிறைவேற எல்லாம் வல்ல சச்சினாண்டவரை கும்பிடுவோம்.

தோனிக்கு லிம்கா சாதனை புத்தகத்தில் பேர் இடம்பெற்றதற்கு வாழ்த்துக்கள். 20 -20  மற்றும் 50 ஓவர் உலகக் கோப்பை என இரண்டுமே வென்ற ஒரே கேப்டன் தோனி என்பதால் இந்த பெருமை.
---------------------------------------------------------------------

நடிகைகள் பற்றிய அசட்டு ஜோக்குகள் சிலசமயம் அதிக கற்பனையோ என்று எண்ணியிருக்கிறேன். ஆனால் தற்செயலாக இந்த வீடியோ கிளிப்பைப் பார்த்ததுமே அவை உண்மைதான் என்று தோன்றுகிறது.. 'நடிக்கவே வர மாட்டேன் ' என்று இங்கு ஒருத்தர் சொல்லியிருக்காங்கப்பா..



'Itzzz not my cup of tea'.... ஐயோ ராமா..
-------------------------------------------------------------------

Monday, July 11, 2011

டாம் ஹாங்க்ஸ்

ஹாலிவுட் படங்களின் தீவிர ரசிகர்களுக்கு டாம் ஹாங்க்ஸ் என்னும் பேர் மயக்கத்தையும் ஆவலையும் உண்டாக்கும். டாம் க்ரூஸ் போல   இவர் எந்த  ஒரு ஆக்சன் படங்களும் செய்ததில்லை.போலீஸ் வேடத்தில்  ஒன்றிரண்டு படங்களில் தோன்றிய போதும்  விறைப்பாக கூட நடித்ததில்லை.எப்போதுமே காதல் படங்கள் மட்டுமே செய்வதில்லை. ஆனாலும் அடித்து சொல்லலாம் - ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் ஹாங்க்ஸ்தான். 



அது 'காதல்' படம் வருவதற்கு ஆறு மாதங்கள் முன். தமிழில் நல்ல படங்கள் வருகை குறைந்த வறட்சி காலம்.

தில்,சாமி, தூள் ,ரன்  வெற்றியை தொடர்ந்து அரிவாளும் காட்டுக்கத்தலும் தியேட்டரில்  நிரம்பியிருந்த காலம்.சரி ஒழியட்டும் .. ஹாலிவுட் பக்கம் பார்ப்போம் என்று இந்த பக்கம் திரும்பி  imdb படங்கள் பார்த்து கொண்டிருந்த நான் அதிர்ஷ்டவசமாக கவனித்த  நடிகர் - டாம்   ஹாங்க்ஸ். படம் 'தி டெர்மினல்' .

நல்ல நடிகரின் படங்களை , நல்ல கதையம்சமுள்ள படங்களை எல்லாம் தமிழில் பார்த்தாயிற்று என்றால் , வாருங்கள் இந்த பக்கம். இங்கு ஒரு அற்புதமான நடிகர் , தர வரிசையாக படங்களை அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டிருக்கிறார். உங்களை சிரிக்க வைக்கிறார். அழ வைக்கிறார். நெகிழ வைக்கிறார். ஆச்சர்யப்பட வைக்கிறார்.பரவசப்பட வைக்கிறார்.  மொத்தத்தில் கமல் செய்யும் அனைத்தும் செய்கிறார்.

கமல் படங்களுக்கு பிறகு நான் தவறாமல் பார்க்கும் படங்கள் இவருடையதுதான்.

இருவருக்கும் நிறைய ஒற்றுமைகள்.
படத்துக்கு படம் வித்தியாசம் - கதையிலும் சரி , தேர்ந்தெடுக்கும் பாத்திரத்திலும் சரி.
நடிப்புக்கு மெனக்கெடுதல் மட்டுமன்றி  உச்சரிக்கும் வசனத்தின் அதிர்வுகளிலேயே காட்சியின் விறுவிறுப்பை ஊட்டுவது.
கதையை ஹீரோயசம்  ஓவர்டேக் செய்யாமல் கவனமாக கையாளுவது.
இப்படி எத்தனையோ ஒற்றுமைகள்.

நான்  பார்த்த முதல் டாம் ஹாங்க்ஸ் படம் - 'தி டெர்மினல்' .அமெரிக்க விமான நிலையத்தில் மாட்டிகொள்ளும் ஒரு அப்பாவி பாத்திரத்தில் டாமின் நடிப்பு என்னை வெகுவாக ஈர்த்தது.
ஆங்கிலம் தெரியாமல் திண்டாடி , வேறு வழியில்லாமல் விமான நிலையத்துக்கு உள்ளேயே வாழ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டு , எல்லார்க்கும் உதவி செய்து , நண்பர்களாக்கி , வேலை செய்து போராடி ஜெயிக்கும் மனிதனாக வாழ்ந்திருப்பார் ஹாங்க்ஸ்.


அது வரை அவரைப் பற்றி எந்த ஒரு அறிமுகமும் இல்லாததால் அவர் நடிப்பு என்னை ஆச்சர்யபடுத்தியது.

தொடர்ந்து அவர் படங்களே பார்க்க முடிவு செய்து அடுத்ததாய் பார்த்த படம் எல்லாருக்கும் நன்கு தெரிந்த 'கேஸ்ட் அவே' .
விமான விபத்தில் யாருமே இல்லாத ஒரு தீவில் தனியாக மாட்டிகொண்டு , உயிர் வாழ தன்னையே மாற்றிக்கொள்ளும் ஒரு மனிதனின் பரிணாமத்தை அவர் நடித்து காட்டிய விதம் என்னை அவர் நடிப்பில் கட்டிபோட்டது.

 உடலை வருத்தி , உணவுக்காக மீனைப் பிடிக்க கற்றுக்கொண்டு , நெருப்பு மூட்ட கற்றுக்கொண்டு ,தனிமையை போக்க ஒரு பந்தினை நண்பனாக  கற்பனை செய்து பேசிக் கொள்வது ,  கடைசியில் படகு செய்து தப்பிக்க போராடுவது என அந்த தீவில் உண்மையில் வாழ்ந்திருப்பார் டாம்.



'சேவிங் ப்ரைவேட் ரியான் '  - ராணுவ அதிகாரியின் பிம்பத்தை கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது. ஸ்பீல்பெர்க் இயக்கமும் டாமின் நடிப்பும் கை கோர்த்துக்கொண்டு படத்தை புகழ் உச்சிக்கு கொண்டு சென்றது.

இறுதியில் குண்டடிபட்டு வீழ்ந்தபோதும் எதிர் வரும் டாங்கியை நோக்கி சுட்டுக்கொண்டே சாகும் காட்சியில் டாமின் கை கூட நேர்த்தியாக நடித்திருக்கும்.

மிக சிக்கலுக்கு உண்டான 'தி டாவின்சி கோட் ' படமும் அதன் பின் வந்த அதன் தொடர்ச்சியான 'ஏஞ்சல்ஸ் அண்ட் டீமான்ஸ் ' படத்திலும் ஒரு ஆராய்ச்சியாளரின் பதிவை நம் முன் கொண்டு வந்திருப்பார் டாம். படத்தின் சுவாரஸ்யம் ,விறுவிறுப்பு துணை கொடுக்க , ஹாங்க்சின் கேரியரில் ஒரு மைல்கல்லாக அமைந்தன இரு படங்களும்..

இவர்தான் டாம் என்று தெரியாதபோது  நான் பார்த்த படம் 'கேட்ச் மீ இஃப் யூ கேன்' . மீண்டும் ஒரு முறை பார்த்தேன். டீகப்ரியோ, டாம் இருவரும் போட்டி போட்டு நடித்த படம்.

அடுத்து நான் பார்த்த படம் 'தி கிரீன் மைல்'  . வித்தியாசமான , மிக புதிய கதைகளன். சிறை அதிகாரியாக வரும் டாம் மட்டுமல்லாமல் எல்லாரும் அற்புதமாக நடித்திருப்பார்கள்.

'யூ ஹாவ் காட் எ மெயில் ' - இது போன்ற மென்மையான , மோதலில் மலரும் காதல் கதை மிக அபூர்வம். ஒவ்வொரு காட்சியும் டாமின் முக பாவனைகளும், கதை நாயகியை வரும் அற்புதமான நடிகை மெக் ரியான் நடிப்பும் தூள் கிளப்ப படம் எல்லாம் காதலர்கள் மனதிலும் சிம்மாசனம் போட்டு அமர்ந்தது.



இப்படி நான் தொடர்ச்சியாய் பார்த்த படங்கள் அனைத்தும் டாம் நடுத்தர  வயதானபின் நடித்தவை.  
அதன் பின் அவரை இளமையாக பார்த்த படம் ' Big'  (நம் எஸ்.ஜே.சூர்யாவின் 'நியூ' படத்தின் மூலம்) .

இன்னும் பல படங்கள் அவரின் வசீகர நடிப்பின் கட்டுக்குள் என்னை வைத்திருக்கின்றன.'பிலடெல்ப்ஹியா' படத்தில் எய்ட்ஸ்  நோயாளியாக , நோயின் வீரியத்தை ஒவ்வொரு காட்சிக்கும்  அதிகரிப்பதை  உணர்த்தும்  நடிப்பை கொடுத்திருப்பார்.

குழந்தைகளும் நாமும் விரும்பி பார்க்கும் ' டாய் ஸ்டோரி ' தொடர் படங்களின்  ஹீரோ வூடியின் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்.  

ஹாங்க்சின் வெற்றிக்கு காரணமே அவரின் அலட்டிக்கொள்ளாத  நடிப்பும் , கதையின் தன்மையை உணர்ந்து பாத்திரத்தை உள்வாங்கி கொள்ளும் திறனே. பின்பு அதை நடிப்பில் வெளிக்காட்டும்போது அது பாராட்டப்படுவது ஒன்றும் ஆச்சர்யம் இல்லையே.. 
 
நல்ல கலைஞர்கள் எங்கு இருந்தாலும் பாராட்டப்பட வேண்டியது நல்லது.அதுவே நல்ல ரசிகர்களுக்கான அடையாளமும் கூட.

மொழி தாண்டி , கலாசாரம் தாண்டி , கலையினால் நம்மை ஈர்க்கும் மனிதர்கள் வரிசையில் டாம் ஹாங்க்ஸ்-க்கு தனி இடம் உண்டு.
என்னைப் பொறுத்தவரை ஒவ்வொரு சினிமா ரசிகனும் கட்டாயம் பார்க்க வேண்டிய படங்கள் இவருடையது.


ஐம்பத்தைந்து வயது தாண்டி இன்னும் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் கிரீடத்தை தக்க வைத்திருக்கும் டாம் ஹாங்க்ஸ்க்கு  இன்று பிறந்தநாள்.
எப்போதும் நல்ல படங்களை மட்டுமே கொடுத்து,  ரசிகர்களை என்றைக்கும் ஏமாற்றாத நடிகருக்கு வாழ்த்துக்கள்.

டிஸ்கி : இரண்டு நாள் முன்னால் எழுதிய பதிவு..  :)

Thursday, July 7, 2011

மனமிருந்தால் மார்க்கம்..

நீங்கள் நாத்திகரா ? ஆன்மீகவாதியா  ?  நடுநிலையானவரா ? எதிலும் சரியாக புரிதல் இல்லாமல்  இருக்கும் மிடில் கிளாஸ் மனிதரா?

 உங்கள் சித்தாந்தம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும்.. அதை அடைய மிக எளிய வழி ஒன்று உண்டு. கடின உழைப்பிற்கு எப்படி மாற்று/குறுக்கு வழி இல்லையோ அதேபோல இதற்கும் எந்த குறுக்கு வழியும் அல்ல..

உங்கள் இலக்கு  சொர்க்கமோ , அல்ல புகழோ , நல்ல நட்பு வட்டாரமோ  எதுவாக வேண்டுமானாலும் சரி..அதை அடைய  நல்ல, மிக இனிமையான வழி ஒன்று உள்ளது . அதற்கு தமிழ் வைத்த பெயர் - உதவி.
தன்னலமல்லாதவர்கள் வைத்த பேர் சேவை.

அதை செய்தால் நீங்கள் மதிக்கப்பெறுகிறீர்கள்; போற்றப்படுகிறீர்கள் ; காலம் தாண்டியும் நினைவில் வைக்கப்படுகிறீர்கள்; சில சமயம் சிலருக்கு கடவுளாக காட்சி அளிக்கிறீர்கள்.




 எந்த வகையில் உதவி செய்தாலும் அந்த உதவியின் பயனுக்கு முடிவுகாலம் - Expiry Date ஒன்று உண்டு.

பண உதவியா ? கடைசி தாள்  தீர்ந்ததும் மீண்டும் தேவைப்படும்.
உணவு கொடுத்து  ஆதரித்த மனிதரின் உதவி மகத்துவம் , அடுத்த பசி வந்ததும் முடிந்து விடுகிறது.

ஆனால் அடுத்தவருக்கு  அறிவைக் கொடுத்து  உதவினால் அந்த உதவிக்கு அழிவில்லை.

'பசித்தவனுக்கு உண்ண மீனைக்  கொடுப்பதை விட மீன் பிடிக்க கற்றுக் கொடு '  என்ற ஜப்பானிய பழமொழியின் சாரம்சம் இதுதான்.

இதை கடைபிடிப்பதில் இப்போது முன்னுக்கு இருப்பவர்கள் முன்னாள் மாணவர்கள் ...

பள்ளிகட்டணம் பிரச்சனை ஒரு பக்கம் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும்போது , இன்னொரு பக்கம் சத்தமே இல்லாமல் ஒரு பசுமைப்புரட்சி செய்து வருகிறார்கள் நம் முன்னாள் மாணவர்கள்.
என் சக நண்பர்கள் ஒன்று கூடி அவர்கள் வசதிக்கு ஏற்ப ஒவ்வொரு குழந்தையின் படிப்புக்கு உதவுகிறார்கள். ஒருவரோ ,அல்லது இருவரோ   சேர்ந்து ஒரு குழந்தையை தத்து எடுத்து  அந்த வருடத்திற்கான படிப்புக்கு தேவையான புத்தகங்கள் , சீருடை
பள்ளிக்கட்டணம் மற்றும் வேறு என்ன தேவையோ அதை  கொடுத்து உதவுகிறார்கள்.



இதில் விசேசம் என்னவென்றால் இவர்கள் எந்த ஒரு அமைப்பும் சாராது , ஒன்றாக படித்த மாணவர்கள்,நம்ப தகுந்த நண்பர்கள் வட்டமாக மட்டும் கொண்டு  உதவி செய்கிறார்கள்.

விசாரித்து பார்த்ததில் என் நண்பன் சொன்னது காரணம் மிகுந்ததாக இருந்தது - 'எந்த ஒரு அமைப்பிற்கோ பணம் கட்டி அது குழந்தைகளுக்கு சரியாக போய் சேருகிறதா இல்லையா எனத்தெரியாமல் இருப்பதை விட , நாமே நம் நண்பர்களுடன் சேர்ந்து செய்தால் நம் கண்காணிப்பு அதிகமாகிறது..
தவிர எந்த குழந்தையை தத்து எடுக்கிறோமோ அதை அவ்வப்போது சென்று பார்த்து வர அருகில் இருந்தால்    எளிதாக உள்ளது.
அதனால்தான் கூடியவரை நண்பர்களின் சொந்த ஊர்களில்  குழந்தைகளை தத்து எடுக்க சொல்கிறோம்  '.


உண்மை. அதை விட முக்கியம் நம் உதவி பெறும் குழந்தையோடு ஆதரவாக பேசி அதன் படிப்பு அட்டையை பார்த்தலும், நலம் விசாரிப்பதிலும் இருக்கும் திருப்தி , வெறுமனே 'ஏதோ புண்ணியம் கிடைக்கும்' என்று பணம் மட்டும் கட்டி விட்டு ஒதுங்கினால் கிடைக்காது.

இதை சரியாக விளக்க வேண்டுமானால் ,
கடவுளுக்கு தோட்டத்தில் சென்று பூப்பறித்து ,  அதை மாலையாக கட்டி சென்று சார்த்துவதிலும் , கோவில் முன் பூக்காரியிடம்  உடனே  வாங்கி , அர்ச்சகர் முன் நீட்டி வேண்டுவதிலும் இருக்கும் திருப்தியே சான்று.

உதவி செய்வது என்று முடிவெடுத்து விட்டால் அதை முழுதாக செய்யுங்கள் . அதைத்தான் இந்த முன்னாள் மாணவர்கள் செய்கிறார்கள்.
இங்கு சொல்லியிருப்பது ஒரு குழுவினரைப் பற்றிதான். தமிழகத்தில் எத்தனையோ பேர் இப்படி படிப்பிற்கு உதவி செய்து வருகிறார்கள்.

இவர்கள் உதவி இப்படியிருக்க , இன்னொரு வகையில் உதவுகிறார்கள் வேறு மாணவர்கள்.

உதாரணம் இந்த இணையத்தளம்  - http://www.a2zinterviews.com/

முன்பெல்லாம் படிப்பதற்கோ அல்ல நேர்காணலுக்கோ , நிறைய புத்தகங்களை அடுக்கி வைத்து படிக்க வேண்டும்.. இப்போதோ எல்லாமே இணையத்தில் இருந்தாலும் , எல்லாவற்றையும் சேகரித்து படிப்பது 
பிரம்மப்ப்ராயத்தனமாக   இருக்கும்..

இந்த இடத்தில்தான் மேல் சொன்ன இணையத்தளம் உதவிக்கு வருகிறது.



கணினி,மென்பொருள் , முக்கிய கணினிமொழிகள்  சார்ந்த கேள்வி பதில்கள் அனைத்தும் தேடி எடுத்து அடுக்கி வரிசைப்படுத்தி மாணவர்களுக்கு இன்ஸ்டன்ட் காஃபி  போல் கொடுத்திருக்கிறார்கள்.

அது  மட்டும் அல்லாது  நேர்காணலில் நடந்துகொள்ள வேண்டிய முறைகள் , Aptitude Test  எனப்படும் சூட்சும அறிவை திறனாய்வு செய்யும் கேள்வி பதில்கள் , கூடுதலாக Datawarehousing எனப்படும் கணித்துறையில் முக்கிய உள்துறை பற்றிய விளக்கங்களை சுருக்கமாக , எளிதாக புரியுமாறு கொடுத்திருக்கிறார்கள்.

பொது அறிவு கேள்விகளும் ,புதிர்களும்  உண்டு.

எந்த ஒரு பயனும் , எதிர்பார்ப்பும் அல்லாமல் இவர்கள் செய்யும் இந்த உதவி மகத்தானது.
மாணவர்களுக்கு மிக மிக உதவும் இது போன்ற தளங்கள் எத்தனையோ இருக்கின்றன.
ஒவ்வொன்றுக்கு பின்னாலும் சுயநலமில்லாத சில  நல்லவர்களின் உழைப்பு இருக்கிறது.

'நான் படித்தபோது எனக்கு கிடைக்காத உதவி என் தம்பி  தங்கைக்கு கிடைக்கட்டும். அது பொருளாதார ரீதியாய் இருந்தாலும் சரி, கல்வி சம்பந்தப்பட்டதானாலும் சரி
என்னால் முடிந்த உதவியை செய்ய வேண்டும்'  என்ற எண்ணம் மிகுந்தவர்கள்,  மாணவர்களுக்கு கொடுக்கும்  பரிசு அது.

இதில்  கவனிக்க வேண்டிய விஷயம் ,
இவர்கள் அனைவரும் தங்கள் கடின வேலை நேரத்தில் இருந்து   கிடைக்கும் ஒய்வு நேரங்களை தியாகம் செய்து இதை செய்கிறார்கள்..

ஹ்ம்ம்..முன்பெல்லாம் உதவிக்கு யாரும் அவ்வளவாக கிடையாது.. இப்போது எல்லா வகையிலும் உதவி கொட்டி கிடக்கிறது... அதை பயன்படுத்துவதை தீர்மானிக்க மாணவர்கள் முன்வருவார்களா என்பதுதான் கேள்விகுறி..

அடுத்த முறை ஒரு குழந்தையை தத்து எடுத்து  படிப்புக்கு உதவுவதை செய்யலாம்.

அதற்கு அச்சாரமாக  இந்த விவரங்களை பகிர்வதிலிருந்து நம் உதவியை ஆரம்பிப்போம்.

உதவும் மக்களுக்கு நன்றிகளும்.. உதவி தேவைபடுவோர்க்கு பயன்களும் சென்றடையட்டும்..