உலகத்தின் எங்கோ ஒரு ஓரத்தில் எப்போதும் ஏதோ ஒரு கொடூரம் நடந்து கொண்டே இருக்கும். பரிதாபம்தான். வருத்தத்திற்குரியதுதான். ஆனால் அவை எதுவுமே நம்மால் தடுக்க முடியாத ஒன்றாக இருக்குமானால் , கடந்து செல்வதைத் தவிர வேறு வழியில்லை. இலங்கை அப்படியில்லை.
கடந்த முப்பது வருடங்களாக இலங்கை விஷயத்தில் இந்தியாவின் பங்கு என்ன என்று யோசித்தால் , முதுகில் குத்தும் நிகழ்வே மாறி மாறி நடந்திருக்கிறதே தவிர
ஆறுதலுக்கு கூட நம் கரங்கள் அங்கே அண்டியதில்லை. நம்மவர்கள் நலனை மட்டுமல்ல ,உயிரைக் கூட காப்பாற்ற இயலாத சகோதர நாடாகத்தான் இருந்திருக்கிறோம்.
ஒவ்வொரு அடிக்கும் கண்ணில் நம்பிக்கையுடன் கடல் தாண்டி பார்த்த சகோதரர்கள் ,அடி வாங்கி வாங்கி , பொறுமை மீறி , தானே எழுந்து திருப்பி அடிக்கத் தொடங்கியவுடன் இலங்கை பின்வாங்கியது.தடுமாறியது.
ராணுவ கட்டுக்கோப்பாய் ஒரு படை , தனக்கு சிம்மசொப்பனமாய் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்காத இலங்கை , கிறங்கி போய் பயத்தின் பிடியில் துவண்ட காலம் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் .
கூப்பிடும் தூரத்தில் தமிழ் உறவு. உலகின் தலைசிறந்த படைபலம் கொண்ட நாடு. படை அனுப்பக் கூட தேவையில்லை. ஒரு உறுமல் கொண்ட அறிக்கை மட்டுமே போதும் - பின்வாங்கி பதுங்கியிருக்கும் சிங்களம். இந்த பக்கமிருந்து ஒரு சின்ன ஆறுதல் குரல் கூட அவர்களை அணுகவில்லை.
கடைசிவரை கதறிவிட்டு ஒரு சதுர மைல் சுற்றளவில் அடங்கும் வரை போராடி, இறுதியில் மாண்டது வீரம். 2009 -இல் இலங்கையில் வென்றது அராஜகம்.
புலிகளுக்கு எதிரான போரை காரணம் காட்டி நடந்தேறிய கொலைகளும், அட்டூழியங்களும் மூன்றாண்டுக்குப் பிறகே வெளிவந்திருக்கிறது. நமது ஊடகங்கள் செய்ய வேண்டிய கடமையை , இங்கிலாந்தின் சேனல் 4 செய்திருக்கிறது. அவர்கள் வெளியிட்ட வீடியோவின் ஒவ்வொரு நொடியும் ரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகளும், 'யாருக்கு தெரியப் போகிறது?' என்று ராவண வம்சம் போட்ட ஆட்டத்தையும் காண யாருக்கும் இதயத்தில் பலம் இருக்காது.
அதுவும் கொடுமைப்படுத்தி அழிக்கப்பட்டது நம் தமிழினம் என்றால் இதை பார்த்த பின்பும் உயிர் மிச்சமிருப்பது விசித்திரமே.
போன உயிர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை நாற்பதாயிரம். போர் மரபை மீறிய அநாகரீகம் நடந்திருக்கிறது. போருக்கு நடுவில் சிக்கிகொண்ட அப்பாவி மக்களின் உயிரும் மானமும் சூறையாடப்பட்டிருக்கிறது .இதை முக்கால் மணி நேர காட்சிகளில் கூட பார்க்க தெம்பில்லாத நமக்கு இயலாமையும் , குற்றவுணர்வும் மனதை அரிப்பதை தடுக்க முடியாது.
கடந்த பத்து வருடங்களாக சிங்கள ராணுவ தாக்குதலை தடுத்து நிறுத்த ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை இந்திய அரசு.
போரின் போது அப்பாவி தமிழ்மக்கள் சாரி சாரியாக கொல்லப்படும்போதும் வாய் திறந்து பேச மறுத்தது.
அகதிகள் நிலைமையை அறியச்சென்ற எம்.பிக்கள் குழுவினாலும் எந்த பயனும் இல்லை.
இடைப்பட்ட நேரத்தில், தமிழக மீனவர்களையும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் சுட்டுத்தள்ளும் போக்கை பழக்கமாய் கொண்டது சிங்களம்.அதற்கும் எதிர்ப்புக்குரல் வெறும் சம்பரதாயமாகவே இங்கிருந்து வெளிப்பட்டது.
இங்கு நிலை இப்படி இருக்க , உலகின் போலிஸ் அமெரிக்காவிற்கு , காலம் தாண்டி மனசாட்சி உறுத்தியிருக்கிறது. விளைவு - ஐ நா மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம். இதை தடுக்க இலங்கை மிக தீவிர முயற்சி எடுக்கிறது.
தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகள் உடன்பட்டிருக்க இன்னும் மவுனம் சாதிக்கிறது இந்தியா.
எந்த ஒரு உறுதிப்பாடான நிலையும் இது வரை அளிக்கப்படவில்லை.
அண்ணன் தம்பி இருவருமே போரிட்டு சாவது தவறில்லை - கோழைத்தனமில்லை . அண்ணன் நல்ல பலத்துடன் கம்பீரமாய் உலகில் வாழ்ந்திருக்கும்போதே , தம்பி அடிபட்டு மரணிப்பதை எந்த வகையில் சேர்ப்பது?
'இலங்கையுடனான உறவு வரலாற்றுப் பூர்வமானது ; நட்பு ரீதியானது ' என்று இன்று வரை சொல்லி வரும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணாவின் அறிக்கை எதிர்பார்த்த ஒன்றுதான். காஸ்மீர் விவகாரத்தில் , பாகிஸ்தான் உறவைப் பற்றியும் இதையே சொல்லுவாரா என்பதுதான் கேள்வி.
இலங்கையில் இதுவரை இருந்த இந்திய சொந்த பந்தங்களும், சகோதர உறவுகளும் மாண்டபின் , என்ன நட்பு ரீதியான உறவு இனியும் தேவைபடுகிறது என்ற கேள்விக்கு யார் விடை சொல்வது?
அமெரிக்காவின் இந்த தீர்மானம் வெற்றிபெற்று உலக நாடுகளின் பிடியில் இலங்கை பதுங்கி அடங்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம். அதைத் தவிர நம்மால் செய்ய இயல்வது இப்போதைக்கு எதுவும் இல்லை. அந்த காலம் எப்போதோ தாண்டி போய்விட்டது.
இந்திய வரைபடத்தில் இன்னும் இலங்கையை ஒட்டி வைத்திருப்பதற்கான காரணம் இனி அர்த்தமற்றது.
மொழி புரியாத, இனத்தால் ,நிறத்தால் வேறுபட்ட நாடுகளுக்கு புரிந்த வலி, கேட்ட கூக்குரல், தெரிந்த நியாயம் , வெகு அருகில் கரை தாண்டி வசிக்கும் நமக்கு இன்னும் உரைக்காததற்கு
காரணம் : அரசியல் பாஷையில் சொன்னால் 'அஹிம்சை' , வேறு எந்த பாஷையில் சொன்னாலும் - 'சுயநலம்'
மற்றபடி, இங்கு குறை ஒருத்தரிடம் மட்டும் அல்ல.ஒரு கட்சியிடம் மட்டும் அல்ல.
இது பொது அவமானம். வரலாற்றுப் பக்கங்களில் இது எப்படி பதியுமோ , அதை தலை குனிந்து ஏற்றுகொள்ள தயாராய் இருப்போம்.