மிக அருகில் இது நடக்கலாம். தாராளமாக 'திமுக கால திட்டங்கள் ஒழிப்பு' என்ற புது இலாக்காவை அதிகாரபூர்வமாக உருவாக்கி அதை அம்மா தன் கட்டுபாட்டில் வைக்கக்கூடும். நல்லது. திமுக காலத்தில் உருப்படியில்லாத எந்த திட்டத்தையும் ஒழிக்க எல்லார் ஆதரவும் அம்மாவுக்கு உண்டு. ஆனால் அண்ணா நூலக விஷயம் கண்டிப்பாக அதில் இல்லை.
புதிய சட்டபேரவையை உப்பு பெறாத காரணம் சொல்லி அதை மருத்துவமனை ஆக்கியபோது , அதை யாரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காரணம் அது யாரையும் பாதிக்கபோவதில்லை. யார் பதவியில் இருந்தாலும் அவர் ஒழுங்காக ஆட்சி செய்தால் அதை கொடநாட்டில் செய்தால் என்ன ? கோபாலபுரத்தில் செய்தால் என்ன? நல்லாட்சிதான் முக்கியம். எனவே அது விவாததிற்கு தேவை இல்லாதது.
ஊழல் செய்த முன்னாள் மந்திரிகளை கைது செய்வதும் , மேலவை வேண்டாம் என்று நிராகரித்ததும் உத்தமமே.
ஆனால் அண்ணா நூலகம் அப்படி இல்லை. அது அங்குதான் இருக்க வேண்டும்.காரணம் அதன் பயன்பாடும் பெருமையும்.சுமார் இருநூறு கோடியில் செலவு செய்து உருவாக்கிய நூலகம். மொத்தம் ஒன்பது தளங்களில் நூலகத்தின் ஒவ்வொரு பாகத்திலும் கொட்டிகிடக்கும் புத்தகங்கள்.ஏறக்குறைய பனிரெண்டு லட்சம் புத்தகங்கள் அடங்கிய நூலகம். ஆங்கிலம் மற்றும் தமிழில் இருக்கும் எல்லா வகையான நூல்களும் வகைபடுத்தி அடுக்கிவைக்கப்பட்டு ,அவைகளை படிக்க தனியாக படிப்பறைகளும் கொண்ட நூலகம். பல்வேறு புத்தகங்களுடன் , ஆடியோ - வீடியோ மூலம் தகவல்களை அறிந்து கொள்ள வசதியும் ,புகைப்பட நூல்களும் தனியாக உள்ளன. கூடவே உணவுகூடமும். ஆசியாவின் இரண்டாவது பெரிய நூலகமாக கருதப்படுவது.
இதைதான் குறிவைத்திருக்கிறது தற்போதைய அரசு. சொல்லும் காரணம் - கூட்டம் வரவில்லை என்பது. உண்மையான காரணம் உலகறிந்தது.
புதிய சட்டசபையை மருத்தவமனையாக்குவோம் என்று அறிவித்தபோது மக்கள் சந்தோசப்பட காரணம் 'இவ்வளவு செலவு செய்து கட்டிய கட்டிடம் அப்படியாவது பயன்படட்டுமே ' என்றுதானே தவிர 'இதை போல எந்த கட்டிடத்தையும் மருத்துவமனை ஆக்கினால் நல்லது ' என்றல்ல.
இப்போது நூலகமும் மருத்துவமனை ஆக்கப்படும் என்பது
அறிவிப்பு.மருத்துவனைகள் மிக அவசியம்தான். அதை புதிதாக உருவாக்கி கொடுங்கள். வணங்குகிறோம்.வாழ்த்துகிறோம்.ஆனால் நூலகத்தை மாற்றி அல்ல.
பெரிய கோவிலை சுற்றிபார்க்க வருபவர்களுக்கு கால் வலிக்கும்தான். எங்கேயாவது அமர ஏதாவது இடம் கிடைக்குமா என மனம் நினைக்கும்தான்.அதற்காக அழகான சிற்பத்தை உடைத்து , அதை கீழே போட்டு , இதில் அமருங்கள் என்று பெருமிதமாக சொல்லுவதை எந்த கணக்கில் சேர்ப்பது ? கண்டிப்பாக இதற்கு நன்றியோ பாரட்டுதலோ கிடைக்காது.
தவிர நூலகம் கட்டும்போதே ,இதன் பயன் புத்தகங்களை அடுக்க, வாசிக்க என திட்டமிட்டு ஒரு அமைப்பாய் இருக்கும்.அதை மருத்துவமனை ஆக்கும்போது , முழுதும் தலைகீழாக மாற்ற வேண்டும். அதன் செலவு கண்டிப்பாக புது மருத்துவமனை கட்டுவதை விட அதிகம் ஆகும். இது வேண்டாமே.
இருக்கும் அறிவை அழித்து உடல்நலத்தை வாங்கும் முட்டாள்தனம் போல ஆகிவிடும் இதன் பயன்.
இப்படி பெரிய பணத்தை போட்டு அதிநவீன மருத்துவமனை ஒன்றை பெருநகரத்தின் மத்தியில் கட்டுவதை விட , குறைந்தது இருபது மைல் தொலைவில் இருக்கும் மருத்துவமனையை நம்பியிருக்கும் கிராமங்களுக்கு சிறு சிறு மருத்துவமனைகளாக அவர்கள் கிராமத்திலேயே கட்டி உதவலாம். காலகாலம் அவர்கள் ஓட்டு உங்களுக்குதான்.சத்தியம்.
நூலகம் சரியாக பயன்படுத்தபடுவதில்லை என்ற அக்கறைக்கு நன்றி. அதை பிரபலமாக்க அரசு பலவழிகளில் முயற்சிக்கலாம். சென்னை பள்ளிகள் , கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு நூல்களின் பலன்களை எடுத்துரைத்து , அவர்களை வர செய்யலாம். கண்டிப்பாக புரிந்து வருவார்கள். குமுதம் , கல்கண்டு படித்து புத்தி தடுமாறிய 80 ,90 காலகட்ட மாணவர்கள் அல்ல இப்போது. 'புதிய தலைமுறை'யும் நாணயம் விகடனும் படித்து முன்னேற ஆர்வமுள்ளவர்கள் காலம் இது.
பழி வாங்குவதுதான் முக்கியம் என்று நினைத்திருந்தால் 2006 -இல் கருணாநிதி ஆட்சி பொறுப்பேற்றதும் ஆயிரக்கணக்கான டாஸ்மாக் ஊழியர்கள் வேலை இழந்திருப்பார்கள். அதற்கு நன்றிக்கடனாக நூலகமும் , கண்ணகி சிலையும் , கன்னியாகுமரி வள்ளுவர் சிலையும் , சிவாஜி சிலையும் இனி பிழைத்து போகட்டுமே . நூலகம் தப்பினால் அந்த பெருந்தன்மைக்கு 2016ல் நன்றிகள் ஓட்டுகளாக அதிமுகவிற்கு கிடைக்கும்.
எம்ஜீஆர் ஆத்மா உங்களை கண்டிப்பாக வாழ்த்தும்.
--------------------------------