Friday, May 20, 2011

பாப்கார்ன் பாக்கெட்- 20110520





'தி அதர்ஸ்' படத்தை நேற்று நான்காவது முறை பார்த்தேன். பேய் படத்தில் இருக்க வேண்டிய எதுவும் இதில் இல்லை.அதுதான் இதன் வெற்றிக்கு மிகப் பெரிய ப்ளஸ்.  கிளைமாக்ஸ் காட்சியில் முதுகுத்தண்டை சில்லிட வைக்கும் திருப்பம் கொடுக்கும் படபடப்பு எனக்கு மிக பிடிக்கும்.மெதுவாக நகரும் இந்த கதையில் நிகோல் கிட்மேனும் , அவரின் குழந்தைகளாக வரும் இரு வாண்டுகளும் மிக எதார்த்தமாக நடித்திருக்கிறார்கள்.

பேய் படம் என்றபோதும்  ,சடாரென பயக்க வைக்கும் காட்சிகள் இல்லை ; பயங்கரமான சத்தம் இல்லை; மிக அமைதியான கதை. படம் முழுக்க அந்த வீட்டுக்குள்ளேயே நடந்தாலும் , நமக்கு சலிப்பு வராதபடி வசனங்கள் ,நிகோல்- குழந்தைகள் நடுவில் நடக்கும் சில வாக்குவாதங்கள் என கதையை நேர்த்தியாக நகர்த்தியுள்ளார் இயக்குனர்.




 
 
கதை லைன் இதுதான். சூரிய வெளிச்சம் ஒத்துக்கொள்ளாத இரு குழந்தைகளும் அவர்களை மிக கவனமாக பார்த்துக் கொள்ளும்   தாயும்  ,ஒரு பெரிய வீட்டில் வசிக்கிறார்கள்.  அந்த வீட்டில் வேலைக்கு வருகிறார்கள் ஒரு நடுத்தர வயது பெண் , வயதான ஆண் மற்றும் ஒரு ஊமைப்பெண்.

இரு குழந்தைகளில் சிறியவன் தன அக்காவிடம் , யாரோ ஒரு பையன் அவர்கள் அறையில் இருக்கிறான் என்று அடிக்கடி பயந்து சொல்கிறான். போருக்கு போன கணவன் ,ஏதோ இழந்த மனநிலையில் வந்து பிறகு சில நாட்களில் கிளம்பி செல்கிறான்.

அதன் பின்  சில விபரீத விஷயங்கள் நடக்க , நிகோல் ,வேலைக்கு வந்த மூவரையும் சந்தேகப்பட , ஒரு கட்டத்தில் , அந்த மூவரும் நோய்வாய்ப்பட்டு இறந்த போது   எடுத்த புகைப்படம்  அவள் கையில் சிக்குகிறது. பிறகு நடக்கும் கிளைமாக்ஸ் காட்சி கதையை , தலைப்பை நிமிரவைக்கிறது.

இந்த விமர்சனத்தைப் பார்த்து படம் பார்ப்பவர்கள் , படத்தின் கடைசி காட்சி வரை பொறுமை காத்து ஒவ்வொரு காட்சியையும் உன்னிப்பாக கவனித்து ,பிறகு பின்னோட்டம் இட வேண்டுகிறேன். காரணம் மூன்று வருடம் முன்பு , ஒண்ணே முக்கால் மணி நேர இந்த படத்தை , ஒரு மணி நேரம் பார்த்த என் நண்பன் 'என்னடா படம் இது ?' என்று எழுந்து சென்றவன் , பிறகு ஒரு தடவை ,முழுதாகப் பார்த்து  எனக்கு போன் செய்து கடைசிகட்ட காட்சியை வியந்து பாராட்டினான்.

திகில் கதை வகையில் இது சேராது.இது மர்ம பின்னணி உடையது. பேய் படமா ? என்று பயப்படத் தேவை இல்லை.குழந்தைகள் முதல் பெரியவர் வரை  எல்லாரும் பார்க்கலாம்.
---------------------------

பல மொழிகள் கற்றுக்கொள்ளும் ஆசை உள்ள உங்களுக்கு இதோ   இருக்கிறது http://www.conversationexchange.com/

உங்களுக்கான ஒரு மொழித் துணைவரை (ஹிஹி .. லேங்குவேஜ் பார்ட்னர்ப்பா ) தேர்ந்தேடுத்துக்  கொண்டு , அவரிடம் அவர் மொழியைக் கற்றுகொள்ளலாம். உங்கள் மொழியை அவருக்கு சொல்லிக் கொடுக்கலாம். இப்படி அருமையான ஒரு வலைத்தளம் கிடைக்க நாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சாட்டிங் மூலமாகவும் , நேருக்கு நேராகவும் , இன்னும் பல வசதிகள் மூலமாகவும் கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட மொழிகளை இணைக்கும் ஒரு தளமாக இது அமைந்திருக்கிறது.

வேறு நாட்டவரை நண்பராக பெறும் வாய்ப்பும் இதன் மூலம் கிடைக்கிறது. இப்போதே பல கல்லூரி மாணவர்கள் இதில் உறுப்பினர்களாகி இருக்கிறார்கள் என தெரிகிறது. ஆனால் உருப்படியாக  இருக்கிறார்களா எனத் தெரியவில்லை.கல்லூரிகளில் ஆர்குட் ,பேஸ்புக் ஆகியவற்றை தடை
செய்தவர்கள் ,மாணவர்களை நம்பி இதை இன்னும் அனுமதிக்கிறார்கள்.

 நல்ல வசதிகள் நிறைய வலைகளில் கிடைக்கிறது. அதை தவறாக பயன்படுத்தாமல் நல்ல முறையில் பயன்படுத்தினால் நாமும் பயன்பெறலாம். இல்லையென்றால் இதுவும் 
firewall-க்கு  பின்னால்தான்.
--------------------------------

இன்றைய சூழ்நிலையில் உலக அரங்கத்தில் நாம் இன்னும் நிமிர்ந்து  நம் மாணவர்களைப் பற்றி தாராளமாக பெருமைப்பட்டு கொள்ளலாம். காரணம் அவர்களே உணராத அவர்களின் திறன். உணர்ந்தவர் ஒபாமா.

அமெரிக்காவின் டென்னஸ்ஸீ மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் கல்லூரி மாணவர்களுடன்  உரையாடியபோது ஒபாமா சொன்னது :

 ' அமெரிக்க மாணவர்கள் இனிவரும் காலங்களில் கடுமையாக உழைக்க வேண்டும். எதிர்காலத்தில் போட்டிகள் இன்னும் கடுமையாக இருக்கும். இந்தியாவிலும், சீனாவிலும் மாணவர்கள் கடினமாக உழைத்து முன்னேறி வருகின்றனர்.

எனவே தங்களது நிலையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமெனில் மாணவர்கள் கடுமையாக உழைக்க வேண்டும்.உள்நாட்டு போட்டியை சமாளித்தால் போதும் என்ற நிலை இனி இருக்காது. வெளிநாட்டிலிருந்து போட்டியை எதிர்கொள்ள வேண்டிய சவாலான சூழல் உருவாகி வருகிறது.

இந்திய,சீன மாணவர்கள் சாதிக்க வேண்டும்,முன்னேற வேண்டும் என்ற வேட்கையுடன் படிப்பில் அதிக கவனம் செலுத்துகின்றனர்.தங்களது இலக்கை எட்டுவதற்காகக் கடினமாக உழைக்கின்றனர். இப்போது நாம் உலகமயமாக்கல் சூழலில் உள்ளோம். இந்த உலகில் வலிமையானதுதான் மிஞ்சும். திறமைபடைத்தவர்களுக்கு மட்டும்தான் வாய்ப்புகள் கிடைக்கும். இதை அமெரிக்க மாணவர்கள் உணர வேண்டும்.

படிப்பை முடித்துவிட்டு நீங்கள் வேலை தேடச் செல்லும்போது நீங்கள் நாஷ்விலே பகுதியைச் சேர்ந்தவருடனோ அல்லது அட்லாண்டா பகுதியைச் சேர்ந்தவருடனோ போட்டியிடப் போவதில்லை. இந்தியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து வந்துள்ள திறமைமிகுந்த மாணவர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.'

உண்மைதான். நம் மாணவர்களுக்கு இப்போதெல்லாம் முன்பிருந்த பல பிரச்சனைகள் இல்லை. படிப்பதிலும் சுட்டிதான். அவர்கள் கவனிக்க வேண்டிய ஒன்றே ஒன்று   - இலக்கு. எதிர்ப்படும் சின்ன தோல்விகளுக்காக அடிக்கடி  இலக்கை மாற்றாமல் முன்னேறினால் அவர்களுக்கு பின்தான் உலகம் நிற்கும்.அதன் முன்னறிவிப்பு மணியே ஒபாமாவின் பாராட்டு.ஹ்ம்ம் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி.கலக்குங்கள் ..
----------------------------------------------------------

தனுஷுக்கு தேசிய விருது கிடைத்திருக்கிறது. நல்ல நடிப்பை தொடர்ந்து கொடுத்து வரும் அவருக்கு தோளைத்தட்டி இந்த அங்கிகாரம் கொடுக்க பெறுவது மிக சந்தோஷமே.
என்ன ஒன்று ..ஆடுகளம் தாண்டி பல நல்ல படங்கள் போன வருடம் வந்தன.இதில் என்ன சிறப்பு அதிகம் உள்ளது என்று விருதுக்கு தேர்ந்தெடுத்தார்கள் என்று புரியவில்லை.

எப்படியோ,அவ்வபோது கமர்ஷியல் படங்களில் சறுக்கினாலும் நச்சென்று இடையில் ஒரு படம் கொடுத்து தன் பெயரைக் காப்பாற்றிக்கொள்ளும் தனுஷ் திறமை பாராட்டப்பட வேண்டியது. சூர்யாவுக்கு அடுத்து உங்களிடம் கூட  இன்னொரு கமலை எதிர்பார்க்க முடியும். வாழ்த்துக்கள். 'கெளப்புடா கெளப்புடா தம்பி'


நமக்கு இனி அடுத்த ஆச்சி சரண்யாதான் . நடிக்கும் எல்லா படங்களிலும் நம்மை எழுந்து நின்று கைதட்ட வைக்கிறார்.நாயகன் தொடங்கி பிறகு  கதாநாயகியாக நடித்த படங்களில் அவ்வளவு பேர் பெறாத குறையைப் போக்க , இப்போது அரிதாரம் பூசாமலேயே அதிர வைத்து அசத்துகிறார்.
களவாணி அம்மாவுக்கு குவிகிறது பாராட்டுக்கள். ரேவதியும் சுஹாசினியும் இப்படி வளர்வார்கள் என்று எதிர்பார்த்து ஏமாந்திருந்த நமக்கு இவரின் இப்படி ஒரு வரவு இனிப்பான  விஷயம்.இயக்கம் தொடங்கி நடிப்பு என எல்லாவற்றிலும் தேர்ந்த கணவர்  பொன்வண்ணனுக்கும் , இவர் ஒரு இனிய சவால்.


மைனா ,தென்மேற்குப் பருவக்காற்று படங்களின் வரவேற்பைப் பார்த்தபின்னும் இனி மேல் யாராவது 'நல்ல கதை;ஆனா அவார்டுக்கு படம் எடுத்தா வசூல் வராது '  என்று சொல்ல முடியுமா ?

வைரமுத்துக்கு கிடைத்த விருதுக்கு அவர் ஒரு முறை சொன்ன பதிலே விளக்கம் - 'முதல் முறை விருது கிடைக்கும்போதுதான் எனக்கு என தோன்றியது.தொடர்ந்து கிடைக்கும்போதுதான் தெரிந்தது , அது தமிழுக்கு என்று.'

அரசியல் என்னாகுமோ .. சினிமாவ வாழ வைக்க நம்மகிட்ட நெறைய பேரு இருக்காங்கப்பா.. 
-------------------------------------------------------
நக்கலுக்கு கவுண்டமணிதான்னு அவர் நடிக்கிறத நிறுத்துன பின்னாடியும் இன்னும் மாத்தமுடியல..
சத்யராஜ் கவுண்டமணி கூட்டணி பின்னி பெடலெடுத்த காலங்கள் தமிழ் ரசிகர்களுக்கு பொற்காலம்.
இந்த சீனில் சத்யராஜ்-முகபாவனையும் கவுண்டர் படிப்பைப் பற்றி பேசும் டயலாக்கும் மிகப் பிரசத்தி.
ஆபிஸ்ல யாரும் பாத்துடாதப்படி சிரிங்க ..   
 
  
 
 இந்த மனுஷனுக்கு மட்டும் எப்படி இவ்வளவு அழகா அடுத்தவன-ஓட்ட முடியுது ?  சந்தானம் ரெண்டு ஜென்மம் எடுத்தாதான் இவர் பக்கத்துல வர முடியும். 

Wednesday, May 18, 2011

நீங்களும் முதல்வராகலாம்

டிஸ்கி :நக்கீரன் பதிப்பகத்தின் ரா.கி.ர எழுதிய 'நீங்களும் முதல்வராகலாம்' புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் இது. பதிவுக்கும் தற்போதைய புது ஆட்சி மாற்றத்திற்கும் எந்த சம்பந்தமும் அல்ல.
 
எல்லாரும் எல்லாருக்கும் பரிந்துரைக்கும் நூல்கள் என சில எப்போதும் உண்டு. திருக்குறளும் , சரித்திர  நாவலுக்கு பொன்னியின் செல்வனையும்  சாண்டில்யனையும் , காந்தியின் சத்திய சோதனையும் , மதனின் வந்தார்கள் வென்றார்களையும் எப்படி கண்ணை மூடிக்கொண்டு சிபாரிசு செய்கிறோமோ அதே  போல ரா.கி.ர எழுதிய 'நீங்களும் முதல்வராகலாம்' நூலையும் தாராளமாக பரிந்துரைக்கலாம்.
 
 


ரா.கி.ர பல மைல்கல்களைத் தொட்ட எழுத்தாளர். மொழிபெயர்ப்பு நூல் எழுதும்போது மிக கவனமாக  , அதன் உண்மையான சுவை குறையாமல் ,அதே சமயம் எழுதப்படும் மொழியில் படிப்பவர்க்கு அன்னியமாக தோன்றாமல் எழுதும் கலை அவருக்கு விரல் நுனியில். அதை இந்த நூலிலும் கையாண்டு நூலின் தரத்தை  உயர்த்தியுள்ளார். 
 
தலைப்பைப்   பார்த்ததும் 'நமக்கு எதுக்குடா இந்த ஆசை?' என்று ஒதுங்கி விட வேண்டாம்.  தலைப்புதான் ஏடாகூடமாக ; மற்றபடி உள்ளிருக்கும் உத்திகள் எல்லா நாளும் எல்லா இடத்திலும் நாம் முன்னணியில் வர சொல்லப்பட்டவை.
 
சரி இது போல பல தன்னம்பிக்கை நூல்கள் வந்து விட்டனவே ; இதில் என்ன சிறப்பு என்று கேட்கறீர்களா ? சொல்கிறேன் . 
 
அறிவுரை சொல்வதுப் போல எளிதானது உலகத்தில் வேறு ஒன்றும் இல்லை. அறிவுரையைக் கேட்பது போல கடினமானது மூவலகிலும் வேறு இல்லை. இதை யாராவது பெரியவர் நேருக்கு நேர் உட்கார வைத்து சொன்னால் , மரியாதைக்கு வேறு வழியில்லாமல் கேட்டுக் கொண்டிருப்போம். காசு கொடுத்து அந்த தொல்லையை யார் வாங்குவார்கள்.
 
ஏறக்குறைய எல்லா தன்னம்பிக்கை நூல்களும் மொந்தையாக, கட்டுகட்டாக , பக்கம் பக்கமாக , பாயிண்ட் பாய்ண்டாக அறிவுரையை சொல்லி , நமக்கு தனம்பிக்கை வருவதற்கு பதில் , 'இதில் இவ்வளவு இருக்கா ?' என்று ஒரு அயர்ச்சி தோன்றி விடும் சாத்தியம் உண்டு
பண்ணிவிடுகின்றன. அதிலும் தலைப்புக்கு   அடியில் 'நிரூபிக்கப்பட்ட முறைகள்' என்று  கூடுதல்  தகவல் வேறு.  
 
விதிவிலக்கு - உதயமூர்த்தியின் எண்ணங்கள் மற்றும் இன்னபிற.இந்த நூலும் அது போல விதிவிலக்கில் சேர்த்தியே.
 
இந்த நூல் , ஆங்கிலத்தில் வெளிவந்த ( பேர் ஞாபகத்தில் இல்லை ) இன்னொரு நூலின் மொழிபெயர்ப்பே. ஆனால் வெறும் மொழிபெயர்ப்பாக அல்லாமல் படிக்க ருசியான அதே சமயம் புத்திக்கு ஆரோகியமான உணவாக அமைந்திருக்கிறது. அதிலும்  ரா.கி.ர-வின் எழுத்து நடை சேர்ந்து விட , நூலுக்கு  புதிய சுவை கூடுகிறது.
 
எண்பத்தி எட்டு உத்திகள் . அவையே ஒவ்வொரு பகுதிக்கும் தலைப்புகள் .
ஒவ்வொரு தலைப்புக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட , நடந்த சரித்திர நிகழ்வுகளின் எடுத்துக்காட்டுகள் . அந்த பகுதி முடியும்போது ,அடுத்த தலைப்புக்கான அவசியத்தை கோடிட்டு காட்டிய முறை என்று புத்தகம் வெகு சுலபத்தில் நம்மை  ஈர்த்து விடும்.
 
 
 
சரி , முக்கியமான விஷயத்துக்கு வருவோம். இந்த நூல் யாருக்கு பயன்படும்? அரசியல்வாதிகள் , வக்கீல்கள் , நிறுவனத்தலைவர்கள் ஆகியோருக்கு மட்டுமே..என்று நினைத்தால் புத்தகத்தை படிக்க தொடங்கும்போதே அந்த எண்ணம் மாறி விடும். அட .. இது நமக்கான புத்தகம் என்ற நினைப்பை இது கொடுக்கும்..
 
காரணம்... ஆட்சி அமைப்பதும் , கட்சி தொடங்கி மக்களை ஈர்க்க மட்டுமே என அரசியல் தன்  வட்டத்தை ஒருபோதும் சுருக்கியதில்லை.
 
நன்றாக ஓடிக்கொண்டிருந்த பெட்டிக்கடைக்கு பக்கத்தில் , கொஞ்சம் புதிதாக எதோ ஒரு சலுகையை கொடுத்து ஒரே மாதத்தில் பழைய பெட்டிக்கடையை மூட வைக்கும் புது பெட்டிகடைக்காரரிடம்  இருந்தே ஆரம்பிக்கிறது அரசியல்.
 
மென்பொருள் நிறுவனங்களில் தேநீர் நேரத்தில் மேலாளரைப் பற்றி மணிக்கணக்காக   பேசும் ஊழியன் , மீட்டிங் நேரத்தில் அவர் பக்கத்தில் , அவர் என்ன சொன்னாலும் ஆமாம் போடுவதில் இருக்கிறது அரசியல்.
 
பக்கத்து வீடு காலியானதும் , தனக்கு வேண்டியவர் வரும் வரைக்கும் , வீடு தேடி வருபவரை பல பொய்க்காரணம் சொல்லி வேறு வீடு பார்க்க வைக்கும் சாதாரண இல்லத்தரசியிடம்  இருக்கிறது அரசியல்.
 
ஆக அரசியல் வைரஸ் போல. நமக்கு அது வேண்டாம் என்று ஒதுங்கினாலும் அதற்கு நாம் தேவை. அப்போது நம்மை சுற்றி நடக்கும் அரசியலை சமாளிக்க நமக்கு அதைப் பற்றி பாடங்கள் அவசியம். அதை நன்றாக போதிக்கிறது இந்நூல்.
 
இல்லை... நான் நல்லவன் என்று பம்மாத்து செய்யும் ஆசாமியா நீங்கள் ? சரி நீங்கள் அரசியல் செய்ய வேண்டாம்..உங்களை வலையில் சிக்க வைக்கும் அதிலிருந்து நீங்கள் தற்காத்து கொள்ளவாவது அதைப் பற்றிய அறிவு வேண்டும்.இதுவும்  எய்ட்ஸ் விழிப்புணர்வு போலதான் சார்.
 
 சில மிடில் கிளாஸ் மனசாட்சி உள்ளவர்க்கு இந்த நூல் 'இப்படியெல்லாம் கூட ஏமாத்தலாமா? நம்பிக்கை துரோகம் செய்யலாமா ? வேண்டாமா ?' என்ற கேள்வி  மனதில் நிழலாடும். நாம் யார் குடியையும் கெடுக்க போவதில்லை.கூடாது.ஆனால் களவும் கற்று மற என்பது போல் அரசியல் நுணுக்கங்களையும் கற்று வைப்பது நல்லது.
 
சில பிரச்சனைகளுக்கு மாத்திரை இல்லாத நேரத்தில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை வந்தால்  உதவும்.'அய்யயோ .. நான் மாட்டேன்' என்பவர்கள் , சத்தியசோதனையை மீண்டும் படித்து ,
ஏற்பட்ட குற்ற உணர்வை போக்கிக்கொள்ளலாம்.
 
இந்த புத்தகம் வாங்கிய இரண்டு வருடத்தில் ஆறு முறை படித்து விட்டேன்.ஒவ்வொரு முறையும் புதிதாக நிறைய விஷயங்களை உணர முடிகிறது.
 
புத்தகத்தை வெளியிட்ட நக்கீரனுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும். ரா.கி.ரவுக்கு வணக்கங்கள்.
 
நீங்களும் முதல்வராகலாம்
ரா.கி.ரங்கராஜன்
நக்கீரன் பதிப்பகம்
விலை ரூ. 225
 
நீங்களும் முதல்வராகலாம்- பெரியவர்களுக்கான 'பஞ்ச தந்திரம்'

Monday, May 16, 2011

இருவர்

 டிஸ்கி : இருபது நாளைக்கு முன்னால் போட்டிருக்க வேண்டிய பதிவு. தாமதத்திற்கு காரணம் ,கவனம் சிதற விடாமல் பார்த்தாக வேண்டிய அரசியல் சூழல் :)  நீங்களும் அதிலிருந்து மீண்டு வந்து வேறு விஷயங்களில் பார்வையை செலுத்துங்கள். 




பாலச்சந்தருக்கு  பின்னால்  தாதா  சாஹேப்  பிறந்திருந்தால்  அவருக்கு  பாலசந்தர்  விருது  கிடைப்பது  மிக  கடினம் .ஒரு  தனி  மனிதன்  தான்  இயக்கிய  81   படங்களில்  ஏறத்தாழ  எல்லா  படங்களும் (வசூலில் 
சாதிக்கிறதோ    இல்லையோ  ) ரசிகர்கள்  மனதை  கொள்ளை அடிப்பதில் வெற்றி பெறுவது  சாதாரண  காரியம்  அல்ல ..

எப்போதும்  இவர்  படங்களின்  கதையும் , உள்விஷயமும் ரிலீஸ் ஆகும்  காலத்தை  விட  20 வருடங்கள்  முன்னால்  இருக்கும் .இவரைப்  போல்  எண்ணிலடங்கா  நடிகர்களை  , மற்ற  தொழில்நுட்ப  கலைஞர்களை அறிமுகப்படுத்தியவர் எவரும்  இல்லை . ஒரு  நடிகனைப் பிடித்து விட்டால்  அவனை  வைத்து  பல  படங்கள்  எடுப்பார் . ஆனால் பார்க்கும் நமக்கு
சலிப்பு  இம்மியும்  தெரியாதபடி பாத்திரப்  படைப்பு  மாறியிருக்கும்.

இவர் இல்லை என்றால் கமல் இந்தளவுக்கு  வந்திருக்க  முடியாது .ரஜினி வந்திருக்கவே    முடியாது .

கேபியின் சில முத்திரைகள் :

காட்சியை  புதுமைப்படுத்துவதை  தமிழுக்கு அறிமுகம் செய்தவர்  இவரே . இவர் ஒருவர் பத்து பாக்கியராஜுக்கு  சமம் .
 
இவரின் படங்களில் இசைக்கு பெரிய பங்கு  இருக்கும் . எதாவது ஒரு பாத்திரம்  இசை  பித்தராக  இருக்கும் .
 
படத்தின் சில நிகழ்வின்  விளைவுகளை  வெறும் புகைப்படங்களை வைத்தே  சொல்லும் உத்தியை  இவருக்கு  முன்னும் பின்னும் யாரும் செய்யவில்லை .
 
இவரின்  நகைச்சுவைப்படங்கள்  காலம் கடந்தும் மக்கள் மனதில் இன்னும்  நிறைந்து  நிற்கின்றன .
பாமா  விஜயம்  , பூவா  தலையா , தில்லுமுல்லு  என  இன்னும் தமிழர்கள்  வீடுகளில் இவர் படங்களின் வீடியோ  வரிசை  இருக்கிறது .
 
 நாயகனை  விட  நாயகிக்கு  முக்கியத்துவம்  இருக்கும்.பெரும்பாலும்  அவள்  பணிந்து  போகாமல்  புரட்சி  பெண்ணாக  இருப்பாள்.
கண்டிப்பாக  அவளுக்கு  எதோ  ஒரு மேனரிசம்  இருக்கும். உச் கொட்டுவது  ; கண்  சிமிட்டுவது  ; தலையாட்டுவது  என .
 
இவரின் ஒவ்வொரு படமும் வெளியாகும்போதும் அது  மக்களால்  மிக  அதிகமாக எதிர்மறையாக  விமர்சிக்கப்படும் . இவர்  அதற்கு  என்றும்  பதிலோ  மறுப்போ சொன்னதில்லை . காலம் கடந்தப் பின்  மக்களாகவே  இவரின்  காட்சிகள்  நிகழக்கூடியவைதான்  என ஒத்துக்கொள்ளும்  நிலை  வரும் .
அப்படி  ஒரு முற்போக்கு  சிந்தனையை  தன்  படங்களில் தைரியமாக  வைத்தவர்  கே பி .

இவரின்  புதுமையான  காட்சி  அமைப்புக்கு  ஒரு  உதாரணம் - 'அச்சமில்லை  அச்சமில்லை ' படத்தின்  உச்சக்கட்ட  காட்சி .
 
 

நான்கு  முறை  தேசிய  விருது  பெற்றவர் .
1969 இரு  கோடுகள்  
1975 அபூர்வ  ராகங்கள்  
1981 தண்ணீர் தண்ணீர்  
1984 அச்சமில்லை  அச்சமில்லை  

கலைமாமணி  மற்றும்  பத்மஸ்ரீ  விருதுக்கும்  சொந்தக்காரர் .இப்பொது  இந்தியாவின் உயரிய  விருதான  தாதா  சாஹேப்  விருதும்  இவரைத்  தேடி  வந்துள்ளது . இதுவும்  ஒரு காலம்  கடந்த  விருதே . 
 
இப்படி யாருக்காவது விருது கொடுக்கும்போதெல்லாம் மனதில் ஓரம் கோபமும் வலியும் மாறி மாறி வருவதை உணர முடிகிறது. காரணம் - நாகேஷ்.
 

பாலசந்தர் சாதித்ததைப் போலவே பல சாதனைகளை புரிந்தவர் . கடைசி வரை அவருக்குரிய எந்த கௌரவமும் கொடுக்கப்படாமல் காலம் கடந்து விட்டது. யாரை குற்றம் சொல்ல? 

இந்த கேள்விக்கு நாகேஷே பதில் சொல்கிறார். ஒரு விழாவில் 'வாழ்நாள் சாதனையாளர் விருதை'ப் பெற்றுக் கொண்டு பேசிய நாகேஷ் சொன்னது - 'தேசிய விருதோ அல்ல வேறு எந்த விருதோ இது வரை நீங்க என் வாங்கல சார்-னு நெறைய பேரு கேக்கறாங்க  . உண்மை என்னனா இந்த மாதிரி விருதுக்கெல்லாம் இங்க இருக்குறவங்க யாராவது சிபாரிசு பண்ணனும். எனக்கு யாரும் பண்ணல.(விரக்தி கலந்த சிரிப்போடு ) பண்ணியிருக்கலாம்.பரவால்ல..இப்போ அதனால என்ன ? அதான் நீங்க எல்லாம் இருக்கறீங்களே.. '

ஹாலிவுட் நடிகர் ஜெர்ரி லெவிஷுடன் நாகேஷை ஒப்பிடுவார்கள். நாகேஷ் நகைச்சுவைத் தாண்டி பல விஷயங்கள் தொட்டவர்.  சரியாக ஐம்பது வருடங்கள் திரையுலகில் கோலோச்சியவர். நாயகன் சிவாஜியோ, எம்ஜீஆரோ ,யாராக வேண்டுமானாலும்  இருக்கட்டும் ... உடன் நடிப்பது நாகேஷ் என்றால் படம் மினிமம்  கேரண்டீ ஹிட் .

ஆனால் எந்த ஒரு முக வசீகரமும் இல்லாமல் , இவர் நாயகனாய்  தோன்றிய தனி படங்கள் ,இவரை உச்சிக்கு வைத்தன - நீர்க்குமிழி,சர்வர் சுந்தரம் , எதிர்நீச்சல் எல்லாம் இவரின் முத்திரைகள். ஆனால் அடுத்து வந்த கமல் இவரை நன்றாக பயன்படுத்தியது மிக புத்திசாலித்தனம். கமல் நடிக்கும் படத்தில் ஒரு அழுத்தமான பாத்திரம் கண்டிப்பாக நாகேஷுக்கு இருக்கும். பிணமாகக் கூட நடித்திருக்கிறார்
 
அதிசயப்பிறவி , மௌனம் சம்மதம் , அபூர்வ  சகோதரர்கள் ஆகிய படங்களில் வில்லன் வேடம் இவருக்கு  கச்சிதம்.
 
நெஞ்சில் ஓர் ஆலயம் வார்டுபாயையும் ,காதலிக்க நேரமில்லை செல்லப்பாவையும் நினைவில் இருந்து அகற்ற முடியாது.
அன்பே வா ராமையாவையும் ,   எங்க வீட்டு பிள்ளை உளறுவாயனையும்  , அவ்வை சண்முகி ஜோசப்பையும் இப்போது  நினைத்தாலே கண் கலங்க சிரிக்கிறோம். 
 

கமல் சொன்னது - 'நாகேஷைப் பார்த்து பொறாமைப்பட்டு அவரைத் தாண்டி நடிக்க போராடியதால்தான் இன்று நானும் ஒரு நடிகன்'
ரஜினி சொன்னது - '  நாகேஷ் முன்னாடி நீ  ஒரு தூசி .. அவன் நடிப்பைப் பார்த்து ஒழுங்காக நடி என்று என்னை கேபி எச்சரித்திருக்காவிட்டால் இன்று உங்கள் முன் ரஜினி இல்லை'
 
ஒரே ஒரு முறை சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை ஆசிஷ் வித்யார்த்தியுடன் பகிர்ந்துக் கொண்ட ஆறுதலான விஷயமே இவருக்கு கிடைத்த கௌரவம். படம் - நம்மவர்.
 
நாகேஷுக்கு ஏன் விருதுகள் மறுக்கப்பட்டன ?  ரிக்ஷாக்காரனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை எம்ஜீஆர்க்கு கொடுக்க என்ன காரணம் என்று தேர்வுகுழுவிடம் சண்டை போடுவது தவறாக இருக்கலாம்.ஆனால் வருத்தப்பட்டு  அங்கலாய்க்கும் உரிமையாவது நமக்கு உண்டு.ஒருவேளை எந்த கட்சியிலாவது இணைந்திருந்தால் ,சூழ்நிலையைப் பொருத்து, நாகேஷுக்கு விருது தேடி வந்திருக்கும்.
 

எது  எப்படியோ  இது வரை கமலுக்கு கிடைத்திருக்கும் , கிடைக்கபோகும் விருதுகள்  நாகேஷுக்கான குரு காணிக்கையாய் இருக்கும் என்பதிலும் , இப்போது பாலச்சந்தருக்கு  கிடைத்திருக்கும்  விருதில் நாகேஷுக்கு பங்கு இருக்கிறது என்பதும் நிதர்சனம். 
 
கேபிக்கு வாழ்த்துக்கள்.

Tuesday, May 10, 2011

பாப்கார்ன் பாக்கெட்- 20110510




அனானிக்கு பதில் சொல்ல விரும்பாத என்னைப்போல பதிவர்களுக்கு (இதுல என்ன மண்ணாங்கட்டி சூசகம்? எனக்குதான்..)  , சில பேர் மிக விவரமாக ராமசாமி ,ஸ்ரீராம் ,சிவராம்  என்னும் பெயரில் 'உங்கள் பதிவில் பிழை உள்ளது. நீ அந்த வெப்சைட்ல இருந்துதான இதை எடுத்து எழுதுன.. அவன் தப்பானவன் ..இவன எப்படி நீ அப்படி சொல்லலாம்?  நீ உருப்படியா எதாவது எழுது..ஹிந்திய திணிக்கிறீயா நீ? ' என்று மிரட்டலாக அறிவுரை செய்வதுடன் , தங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற பிம்பத்தை உருவாக்க முயல்கிறார்கள்.

அதிலும் ஒரு சிலர் 'நீ ஆபீஸ்ல என்ன பண்ணுனனு எனக்கு தெரியும் ' என்று நம் பொறுமைக்கோட்டை தாண்டுவார்கள். 

எனக்கு நெருக்கமான ஒருவர் திடீரென தொலைபேசியில் அழைத்து 'நீ எழுதுனது எனக்கு புடிக்கல..கிரிக்கெட் பத்தி இப்போ தேவையா ?' என்று கோபமாக   கேட்டார். 'சாரி சார்.. நான் உங்க ஒருத்தருக்கு மட்டும் பதிவு எழுதல..எல்லாத்துக்கும்தான்'  என்று நான் சொன்னதை அவர் கேட்கவில்லை.இன்னொருவர் வெகு புத்திசாலி . 'நீ  இந்த தகவல்களை அங்க இருந்து எடுத்து எழுதிருக்க.You spiced it up.' என்று மிகப்பெரிய கண்டுபிடிப்பை  கண்டுபிடித்து விட்டார் .  'யோவ் எங்களுக்கு என்ன சிட்டி ரோபோ மாதிரி எல்லா தகவல்களையும் உள்ளுக்குள் பதிஞ்சு வெச்சுருக்காங்களா? ' என்று நான் திரும்ப கேட்கவே இல்லையே.

 இவர்களைப் பார்த்து மிக துணிச்சலாக , நேராக விரல் நீட்டி சுளீரென ,ரோசமாக மிக நியாயமான ஒரு கேள்வி கேட்கிறேன் -
'ஹிஹி..  உங்களுக்கு இல்லாத உரிமையா  சார்?.. தாராளமா பண்ணுங்க..'  

(வேறு  என்ன செய்வது? இவர்களுடன் சண்டை போட்டு பின்னோட்டம் எழுதும் நேரத்தில் இன்னொரு பதிவே எழுதி விடலாம் )
----------------------------------------------------------------------------


ஒப்பிடுதல் என்பது கத்தி மேல் நடக்கும்  விஷயம் . எந்த  சூழ்நிலையிலும் தவறான , சம்பந்தம் இல்லாத மனிதர்களை ஒப்பிடக்கூடாது .
ஒசாமா பின் லாடன் மறைவுக்கு ஒரு கூட்டம் சென்னைல தொழுகை நடத்தீருக்காங்கப்பா.இவனுக்கு எதுக்குனு கேட்டா , எதிர்பாக்காத ஒரு பதிலா சொல்லி அதிர வைக்கறாங்க - 'நீங்க மட்டும் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு வருத்தப்படுறீங்க. நாங்க ஒசாமாக்கு பண்ணக் கூடாதா ?'

விவேக் ஸ்டைல்ல சொல்லனும்னா ' அடப் பாவிகளா..உங்க உலக அறிவுக்கு ஒரு எல்லையே இல்லையாடா..ஏன்டா ஒரு இனத்துக்குக்காக  போராடுன ஒருத்தருக்கும்,உலகத்துல அந்த இனம் இந்த இனம்னு இல்லாம எல்லாரையும் அழிச்ச ஒருத்தனுக்கும் எப்படிடா உங்களால முடிச்சு போட முடியுது?  உங்கள எல்லாம் திருத்தவே முடியாதுடா '

----------------------------------------------------------------------------

ப்ளஸ்2 தேர்வில் இந்த முறையும் மாணவர்களை விட மாணவிகளே ..ஷ்ஷப்பா ..முடியல.. மாணவர்களின் இந்த காலகாலமான அவபெயருக்கு முழுக்காரணம் மாணவிகள் வருட ஆரம்பத்திலயே படிக்க   ஆரம்பிப்பதும் , மாணவர்கள் கடைசியில்  பார்த்துக்கொள்ளலாம் என்னும் நினைப்பால் ஏற்படும் தவறே .

ஆனால் நாங்கள் எங்களுடன் படிக்கும் மாணவிகளை இப்படி கிண்டல் அடிப்போம்  - ' நீ வருஷம் முழுக்க படிச்சு தொண்ணூறு மார்க் எடுத்தது பெருசில்ல. நாங்க பரீட்சைக்கு மொதல் நாள் படிச்சு எழுபது மார்க் . அப்போ நாங்கெல்லாம் மொதலிருந்தே படிச்சிருந்தா எவ்வளவு எடுத்திருப்போம்னு சின்னதா ஒரு கணக்கு போட்டு பாரு . வெறும் இருபது மார்க் அதிகம் எடுக்கறதுக்காக நீங்க எல்லாம் முழு வருசமும் இவ்வளவு கஷ்டப்படிருக்கீங்க. சின்ன பொண்ணு. ..எங்க அம்மா கேட்டாங்கன்னா 'நானும் எழுபது மார்க்தான் ஆண்டீ'னு சொல்லிட்டு ஓடி போய்டணும்..
போ ' என்று விரட்டி விடுவோம்.

எது எப்படியோ , மார்க் எடுத்த மகிழ்ச்சியில் அவர்கள் பேட்டி கொடுக்கும்போது  பார்க்கும் ஒவ்வொருவரும் பெற்றோர் போல மகிழ்ச்சியில் ஆனந்தப்படுகிறோம் . பக்கத்தில் பூரித்துப் போயிருக்கும் ,கடந்த இரு வருடங்கள் பல தியாகங்கள் செய்த  பெற்றோரை வணங்க வேண்டும் . டிவி பார்க்காமல் ,சத்தம் போட்டு பேசாமல் , பிள்ளை படிக்கும்போது அமைதியாக இருந்து,அவர்கள் அதிகாலையில் எழும்போது அவர்களும் எழுந்து , வீட்டுக்கு வரும் சொந்தக்காரர்களை  'புள்ள படிக்கிறான்' என்று தர்மசங்கடமாய் சொல்லி தவிர்ப்பதும் என -  தன் காலத்தில் கடைப்பிடிக்காத கடின படிப்பு முறைகளை தங்கள் பிள்ளைகளுக்காக கடைபிடிக்கும் தியாகிகள் பெற்றோர்கள்.



 சாதித்த மாணவர்கள் பேட்டியின் போது  மூச்சிரைக்க சொல்லும் 'எனக்கு டாக்டர் ஆகணும்னு ஆசை .  நான் மெரைன் இஞ்சினீரிங் படிக்கணும்னு ஆசை ' ஆகிய ஆசைகளை ,எந்த (அரசியல் உள்ளிட்ட ) குறுக்கீடும் இல்லாமல் நிறைவேற .. தமிழ்த்தாயே வழிகாட்டு..
-------------------------------------------------------------------------------


அடுத்த வாரம் இந்நேரம் என்ன நடக்க போகுதோ ? 12B மாதிரி தமிழ்நாடு சூழ்நிலை ஆகிடுச்சு . ஒருவேளை அதிமுக ஜெயிச்சா:
  • காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து  எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் விலகும். பிறகு மக்களவைத் தேர்தலில் மீண்டும் இணைந்து கொள்ளும்.
  • விஜய் ரசிகர்கள் ,தங்கள் தலைவருடன் மோதியதால் திமுகவுக்கு தக்க பாடம் கற்பிக்கப்பட்டது என்று போஸ்டர் ஓட்டுவார்கள்.
  • திமுக ஆதரவை மட்டும் நம்பியிருக்கும் - ரஜினியையும் பகைத்த வடிவேலு என்ன செய்வார் என்றே தெரியவில்லை.நிச்சயமாக  நடிப்பு வாழ்க்கை பாதிக்கப்படும்.
  • அடுத்த இரண்டு மாதத்தில் தேமுதிக ,அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் அல்லது விலக்கப்படும்.
  • கனிமொழி வீட்டில் அடைந்து கொள்வார். ஆண்டிமுத்து ராசா இன்று போல் என்றும் வாழ்வார்.

திமுக ஜெயிச்சா:
  • பெருசா எதுவும் மாறாது.
  • அம்மா கொடநாடுக்கு குடி போய்டுவாங்க.
  • கேப்டன் குடிக்க , சாரி நடிக்க போய்டுவாரு.
------------------------------------------------------------------------------------
மணிரத்னத்தின் முதல் தமிழ் படம் பகல் நிலவு . ஜானகியின் அற்புதக் குரலில் இழைந்தோடும் இளமையும் , இசைஞானியின் சலசலக்கும் நீரோடை போன்ற இசையும் இந்த பாடலை பல பேரின் ஹிட் லிஸ்டில் வைத்திருக்கிறது .  இளையராஜாவின் குரல் கூடுதல் சுகம்.
 ஹ்ம்ம்..நாமெல்லாம் குரலைக் கொஞ்சம் இழுத்தால் நாராசமாய் இருக்கிறது. இளையராஜாவின் பூ..மாலையே என ஒரு உயிரைப் பறிக்கும் உச்சக்குரல் ..அடடா ..




 இதில் முரளி என்ன ஒரு இப்போதைய
ஹீரோக்களின்  லட்சணமான அழுக்கான , கருப்பான ,துடிப்பான கிராமத்து இளைஞனாய்   தோற்றமளிக்கிறார்? ரேவதியின் பொட்டு வைக்காத முகம் காட்டும் பாவனைகள் மிக கொஞ்சல் .
கண்டிப்பாக மண்வாசனை பார்த்து விட்டு  இந்த படம் பார்த்தவர்கள் ஆச்சர்யப்பட்டிருப்பார்கள்.

காதலிக்கும் யாருக்கும் இந்த பாட்டு காதலை  அதிகப்படுத்தும். காதலில் இல்லாதவரை , காதலிக்க தூண்டும்.இசை என்னவெல்லாம் செய்கிறது பாருங்கள்.

------------------------------------------------------------------

கடைசி கார்ன்:

திருமணமோ, பிறந்த நாள் விழாவோ , மற்றவருக்கு பரிசு அளிக்க வேண்டும் என்றதும் உடனே அழகுப்பொருள் எதாவது வாங்கி கவர் பண்ணி கொடுப்பதே உலக வழக்கமாகி விட்டது.  எனக்கு அதில் உடன்பாடில்லை. மாறாக புத்தகம் பரிசளித்துப் பாருங்கள்.  நிச்சயம் பயன்படும்.

சம்பந்தப்பட்டவர் எந்த புத்தகம் விரும்புவார் என்று தெரிந்தால் அது அவரிடம் ஏற்கனவே இருக்கிறதா என்று தெரிந்துக்கொண்டு அதை பரிசளிக்கலாம்.  அல்லது அவரைப் பற்றி தெரியவில்லை என்றால் , பொதுவாக பயன்படுமாறு புத்தகங்கள் அளிக்கலாம்.  குழந்தைகளுக்காக என்றால் ரைம்ஸ் டிவிடியோ , கார்ட்டூன் புத்தகமோ உதவும். நாவல்கள் கொடுக்காதீர்கள்.ஒருமுறை படித்து தூக்கி எறியும் சாபம் பெற்றவை அவை.நான் பெரும்பாலும் அளிப்பது வாழ்கையில் வெற்றி அடைந்தவர்களின் வாழ்க்கை வரலாறோ அல்லது தனம்பிக்கை புத்தகங்களோ.

புத்தகங்கள் பரிசளிக்கும்போது கொஞ்சமாவது கஷ்டப்பட்டு மூளையை உபயோகித்து தேர்ந்தெடுத்துக்கொடுங்கள். உங்களுக்கு பிடித்த புத்தகம் என்று சாருவின் ஜீரோ டிகிரியை   அடுத்தவர்களுக்கு திணிக்க வேண்டாம்.  புதிதாய் கல்யாணம் ஆன நண்பனுக்கு அதிவிவேகசிந்தாமணியும் அதன் விளக்கமும் தேவைப்படுமா? என்று யோசியுங்கள்.

அழகுப்பொருள் அப்படியே இருந்து அழுக்காகும்.புத்தகமோ படிக்க படிக்க அழுக்காகும்.ஆனால் இரண்டுக்கும்  வித்தியாசம் இருக்கிறது.

Friday, May 6, 2011

ஜெத்மலானி - சட்டத்திற்கு சாபமாய் மாறிய வரம்

எப்போதும்  சில  பேரின்  வாழ்க்கைப் பக்கங்களை   புரட்டினால்  
நமக்கு எதாவது  ஒரு  பாடம்  கிடைக்கும் .அதில்  அவரின்    நடத்தையும் குணங்களும் ஏறத்தாழ  நமக்கு புரியும் .சிலபேர்   வாழ்க்கையோ  புதிராக ,குழப்பமாக  இருக்கும்  அல்லது  ஏன்   இப்படி  இருந்தார்  என்பதை சொல்லாமலே  விட்டுவிடுவார்கள் .அல்லது நமக்கு புரிந்துகொள்ளும் பக்குவம் இல்லாமல்  இருக்கும்.ராம்ஜெத்மலானியும்  அப்படித்தான் .

சிலபேர்  பிறக்கும்போதே  அதீத  திறமை  வாய்ந்தவர்களாக 
பிறப்பார்கள் .வாழ்க்கையின்  எல்லா  கட்டங்களிலும் 
எல்லாரையும்  விட  முன்னணியில்  இருந்தே  
முன்னேறியிருப்பார்கள் .
ஆனால்  முன்னுக்கு  வந்தப்பின்  அந்த திறமை  நல்லதற்கு  பயன்படுகிறதோ  இல்லையோ தங்கள்  தனி 
 முன்னேற்றத்திற்கு  மட்டும்  பயன்படுத்த ஆரம்பித்து  , அதனாலேயே    மக்களுக்கு  தலைவர்   ஆகும்  தகுதியை 
 இழந்து  விடுகிறார்கள் .இது  போல்  பல  தலைவர்களை  மக்கள்  
இழந்திருக்கிறார்கள் .ராம்ஜெத்மலானியும் அப்படித்தான்.

புகழ் பெறுவதில்   இரண்டு  வழி  உண்டு .ஒன்று  -மிக  நல்லபிள்ளையாக  பெருவாரியான  மக்களுக்கு   ஒத்துப்போன  கருத்தை  முன்வைத்து  அதற்காக  போராடுவது.
மற்றொன்று -எல்லாரும்   எதிர்க்கும்  ஒரு  செயலை  அல்லது ஒரு  நபரை  ஆதரிப்பது .இதில்  இரண்டாம்  வகை மனிதர்களுக்கு தைரியம்  அதிகம்  இருக்க  வேண்டும் .
ராம்ஜெத்மலானியும் அப்படித்தான் .



முதலில்  அவர்  துணிச்சலுக்கு  ஒரு  சல்யுட் 
 

.வாழ்க்கையின் எல்லா  நிலையிலும் எதிர்ப்பவருடன்  எந்த விதத்திலும்  ' நோ  காம்ப்ரமைஸ் '

பள்ளி  வயதில்  இரட்டை  நிலை  உயர்வு  பெற்று  பதிமூன்று  வயதிலேயே   பள்ளிப்படிப்பை  கடந்தவர் ஜெத்மலானி. அவர்  தன்  பதினேழாவது  வயதில்  சட்டம்  முடித்தார்   என்றால்  உங்களுக்கு  நம்ப  முடிகிறதா ?

அடுத்து  அவர்  நீதிமன்றத்தில்  வக்கீலாக  ( குறைந்த வயது தகுதி இருபத்தி ஒன்று. ஆனால் தனி  அங்கிகாரமும்  , அனுமதியும்  பெற்று ) வாதாட ஆரம்பித்தது 
தன் பதினெட்டாம் வயதில்.

பாகிஸ்தானில்  பிறந்து  பிறகு  பிரிவினைக்குப்பின்  இந்தியா  வந்தவர்.பாகிஸ்தானில்  இருக்கும்போதே அதன்  முக்கிய   அம்சமான  வரைமறை  இல்லாத  திருமண  முறையை உபயோகப்படுத்தி  இரட்டை மணம்  செய்தவர் .அதுதான் ஜெத்மலானி :)

பம்பாயில்  இந்தியா  வாசத்தை  தொடங்கி  வக்கீலாக  வேலைப்
பார்த்த  ஜெத்மலானி  மீது
சமூகத்தின்  பார்வை  விழத்தொடங்கியது
,அவர்  கடற்படை  தளபதி  நானாவதி  ,தன் மனைவியின் காதலனை கொலை செய்த வழக்கில் இறங்கியபோதுதான் .அடுத்த வருடத்திலேயே   கள்ளக்கடத்தல்  கும்பல்  ஒன்றுக்காக  வாதாடி அவர்களின்  விடுதலைக்கு
 காரணமானதால்  . 'கடத்தல்காரர்களின்  வக்கீல் ' என்று  பெயர்  பெற்றது  குறிப்பிட  வேண்டியது
 .
இதற்கு  அவரின்  அழுத்தமான  பதில்
' நான்  வக்கீலின்  கடமையைத்தான்  செய்தேன் ' என்பதே .உண்மைதானே.. எந்த சட்டத்தில் கெட்டவர்களுக்கு ஆதரவாக வாதாட கூடாது என்று குறிப்பிட்டுள்ளது  ? இதன் மூலம் பிள்ளையார் சுழி போட்டு அரம்பித்ததுதான் ஜெத்மலானியின் சர்ச்சைக்குரிய வழக்குகள்.


அடுத்து  நடந்தது  எல்லாம்
நாடறிந்த  கதைகள்.இவரின்  அரசியல்  பிரவேசமும்  ,வாஜ்பாய்  தலைமையில் இரண்டு
முறை  சட்ட  அமைச்சர்  ஆன  கதையும்  , பிறகு  வாஜ்பாயையே  எதிர்த்து  போட்டியிட்டு  தோற்றதும்  இவரின் துணிவுக்கும்  இரும்பு
மனதிற்கும்  எடுத்துக்காட்டுகள் .

போதும்  முன்னுரை.
இப்போது  இவர்  ஆதரித்து  வழக்காடிய  நபர்கள்  மற்றும்  வழக்குகளின்  பட்டியல் :


1.பிரதமர்  இந்திரா  காந்தியைக்  கொன்றவர்களுக்கு  ஆதரவாக
2.ஹவாலா  புகழ்  ஹர்ஷத்  மேஹ்தாவுக்கு   அதரவாக
3.பங்குச்சந்தை  ஊழல் புகழ் கேத்தன்  பஃரேக்க்கு  ஆதரவாக
4.நிழலுலக  தாதா ஹாஜி  மஸ்தானுக்காக  
5. தீவிரவாதி  அப்சல் குருவுக்காக
( இது  ஒரு  விதத்தில்  நியாயமே . காரணம்  ஜெத்மலானி  கூறியதே  .'இவன்  மிக சுலபமாக  சாக  வேண்டியவன்   அல்ல . சிறையில்  காலங்காலமாக  உழந்து  தண்டிக்கப்படவேண்டியவன் ')
6.ஹவாலா  வழக்கில்  அத்வானிக்கு  ஆதரவாக
7.ஜெசிக்கா  லால்  கொலை  வலைக்கில்  மனு ஷர்மாவுக்காக
8.சொஹ்ரபுதின்  போலி  என்கவுண்டர் வழக்கில்  குஜராத்தின்  முனனாள்  உள்துறை  அமைச்சருக்காக
9.ராமவடார்  ஜக்கி  கொலை  வழக்கில்  அமித்  ஜோகியை  காப்பாற்ற
10.போன  வருடம்  ஐபிஎல்  முன்னாள்  தலைவர்  லலித்  மோடிக்காக
11.தற்போது  2ஜி  ஊழல்  வழக்கில்  கனிமொழிக்காக

தொண்ணூறு  வயது  நெருங்கியும் இன்னும்  சட்டத்தில்  எங்கெங்கு  சந்துகள்  இருந்தாலும்  , அதில்  கூடியவரையில்  புகுந்து குற்றவாளியைக்  காப்பாற்றும்  
இவரின் திறமையில்  எவருக்கும்  சந்தேகம்  இல்லை .


நான்கு  முறை இந்தியா  பார்  கவுன்சில்  தலைவராகவும்  ,இரண்டுமுறை  
நாட்டின்  சட்ட  அமைச்சராகவும் ,தற்போதைய  ராஜ்யசபா  
உறுப்பினராகவும்  .இருக்கும் இவரின்  தகுதியையும்  யாரும்  விமர்சிக்க  தேவை  இல்லை

ஆனால்  இவ்வளவு  நல்ல  திறமைகள்  இருந்தும்  அதை  
நல்லதுக்கு  பயன்படுத்தாமல் ,தொடர்ந்து  ஏன்  தவறான 
அணியின்  பக்கம் துணை  போகிறார்  ஜெத்மலானி ?
இவரின்  உத்தேசம்  பணமா  , புகழா , பதவியா ? அதுதான்  என்றால் இந்த  மூன்றையும்  அதிகமாகவே  அனுபவித்து  விட்டார் .
பிறகு  எதற்கு  2 ஜி பக்கம்  ?

ஊழல்களிலும்  மக்கள்  பணத்தை  சுரண்டுவதிலும்  கை  
தேர்ந்தவர்கள்,  இவரைப்  போல  சட்ட  வல்லுநர் துணை  இருக்கும்  தைரியத்தில்,  தவறுகளின்  எந்த 
உச்சத்துக்கும்  போகும்  நிலை இருக்கிறது.ஊர்  அறிந்த  2ஜி  ஊழலுக்கு  என்ன  சப்பைக்கட்டு  
கட்ட  போகிறார் ஜெத்மலானி என்று  எல்லாரும்  ஆவலாக  காத்திருக்கிறார்கள். 

இன்னொரு அம்பேத்காராக பேசப்பட வேண்டியவர். ஆனால் இவரை  முன்மாதிரியாய்  எடுத்துக்  கொள்ள  சட்டம்
படிப்பவர்களை அறிவுறுத்த  முடியாத   நிலைதான் இப்போது இருக்கிறது.

ஆனால் இவைப் பற்றி எந்த கவலையும் படாமல் தன் வழியில் வேகமாக போய்க்கொண்டிருக்கிறார் ஜெத்மலானி. மக்களின் கோபமான கேள்விகளுக்கெல்லாம்  அவரின் தீர்க்கமான பதில் 'நான் என் ஆத்மாவையும் , அறிவையும் யாருக்கும் அடகு வைக்கவில்லை.சட்டத்தில் முன் நிறுத்தப்படும் ஒருவனை , மக்கள் குற்றவாளியாக கருதிவிட்ட ஒரே காரணத்தினால் ஒரு வக்கீல் அவனை காப்பாற்றாமல் விடுவானானால் ,அந்த வக்கீலும் குற்றவாளியே '



மிக நேரான கூர்மையான பதில். பாராட்டப்படவேண்டியது.அதே சமயம் வருத்தப்படவேண்டியது . இந்த இருப்பக்க கத்தி கொள்கை  எப்போது எந்த பக்கம் பாயும் என்பது
இதுவரை யாரும் கணிக்கவில்லை.

என்ன செய்வது ? பாரதத்தின் சாபம் இது. ஆதி காலம் தொடங்கி பீஷ்மர்களும் துரோணர்களும் , துரியோதனர்கள் பக்கமே இருந்து தொலைக்கிறார்கள் .
ஆனால் நல்லவர்கள் பக்கம் இப்போதெல்லாம் எந்த கண்ணனும் காணப்படுவதில்லை.

Tuesday, May 3, 2011

பாப்கார்ன் பாக்கெட்- 20110503


என்னை மாதிரி தீவிர ஆடம் சாண்ட்லர் ரசிகர்களை திருப்திப்படுத்த வந்திருக்கும் படம் 'ஜஸ்ட் கோ வித் இட் ' .2009 -இல் Funny People கொடுத்து ஏமாற்றிய பாவத்தை போக்க  போன வருடம் Grown Ups கொண்டு வந்து நன்றாகத்தான் சமாளித்தார்.

இருந்தாலும் அதில் அவரின் அக்மார்க் சாண்ட்லர் டச் இல்லையே என்று வருத்தப்பட்டவர்களுக்கு சரியான சம்மர் ட்ரீட்  'Just Go with It'

வழக்கமாக பெண்களை மயக்கும் அதே ரோல்தான் என்றாலும் இதில் அவர் பெண்களிடம் தன் மீது இறக்கம் வரவழைக்க அளக்கும் பொய்தான் இந்த கதையின் ஆணிவேர்.'எனக்கு ஆயிரம் பிரச்சனைகள்.எல்லாவற்றிற்கும் காரணம் என் மனைவி' - இதுதான் பொய். 

 எல்லா பெண்களிடமும் சொல்லும் அதே பொய்யை புது பிகரான ப்ரூக்ளின் டெக்கர் (நம்ம டென்னிஸ் பிளேயர் ஆன்டி ரோடிக் மனைவி )  காதிலும் அளந்து விட , அவளோ கல்யாணத்துக்கு சம்மதிக்கும் முன் மனைவியை அறிமுகப்படுத்துமாறு சொல்ல ,வேறு  வழியில்லாமல் இரு குழந்தைகளுக்கு தாயான ஜெனிபர் அனிட்சனை தன் மனைவியாக நடிக்க சொல்கிறார். கூடவே அவளின் இரண்டு குழந்தைகளை சமாளிக்கும் புது பொறுப்பும் வந்து விட எப்படி சமாளிக்கிறார் சாண்ட்லர் என்பதுதான் கதை.

வழி நெடுக சாண்ட்லரின் காமெடி .கடைசி காட்சிகள் மட்டும்   ரொமான்ஸ் உருக்கம். ஒன்னே முக்கால் மணி நேரம் ரசித்து சிரிக்க ஏற்ற தேர்வு இந்த படம். எல்லா தகிடுதத்தமும் செய்துவிட்டு  அப்பாவியாக முகத்தை வைத்துக்கொள்ளும் நடிப்பில் சாண்ட்லர் கலக்குகிறார்.பெண்களிடம் வசீகரப்படுத்தும் கலை மனிதனுக்கு கூடவே பிறந்தது போல. வெல்கம் பேக் ஆடம். உங்களிடம் இதைதான் எதிர்பார்க்கிறோம்- reign over  me  அல்ல ..


ஜெனிபர் அனிட்சனை நாற்பது வயது என்று யாரப்பா சொன்னது ? ப்ரூஸ் அல்மைட்டியில் பார்த்த அதே துள்ளல்.  சாண்ட்லரின் அலம்பலுக்கு ஈடு கொடுக்கும் நடிப்பு. 
எல்லா ரொமாண்டிக் காமெடி படத்திலும் இருக்கும் யூகிக்ககூடிய கிளைமாக்ஸ் காட்சியே இதிலும். ஆனால் அதை எப்படி திரைக்கதைப்படுத்துகிறார்கள் என்பதில்தானே ரசிகர்களின்  எதிர்பார்ப்பும் கவனிப்பும். அதை இதில் செம்மையாக நிறைவேற்றியிருக்கிறார்கள்.
ஒரு கோவா ட்ரிப் அடித்த மாதிரி இருக்குப்பா ..
-----------------------------------------------------------------------------------------------

சில சமயம் சில பேர் சில விஷயத்தை தவறாக எடுத்துக்கொள்ளும்போது  உடனே அவர்களுக்கு உண்மையை உணர்த்த , நன்றாக விளக்கி கூற விரும்புவோம். அந்த விளக்கத்திற்கு அவைகள் தகுதியானவர்கள். ஆனால் சில பேர் ...? மிக பாவம்.

வீட்டில் எந்த வேலையும் இல்லையென்றால் ஏதாவது ஒன்றை எதிர்த்து மனு ஒன்றை எழுதி பதவியில்  இருப்பவரையும்  'நடவடிக்கை எடுங்கள்' என்று படாதபாடு படுத்துவார்கள். அப்படிதான் சமீபத்தில் வெளியாக உள்ள படத்தின் தலைப்பை மாற்ற சொல்லி ஒரு குழு எதிர்ப்பு கிளப்பியுள்ளது. காரணம் அந்த தலைப்பு ஒரு மாமனிதரை குறிக்குமாம். ஆனால் பட நாயகனோ மனவளர்ச்சி குன்றியவனாம்.

கண்டிப்பாக அந்த படத்தின் தயாரிப்பாளரும் இயக்குனரும் 'இப்படி கூடவா யோசிப்பார்கள்?' என்று தலையில் கை வைத்து விழித்துக்கொண்டிருப்பார்கள்.எனக்கும் அதுதான் தோணுது.எப்படியா இப்படியெல்லாம் யோசிக்கறீங்க ?

சரி விடுங்க.. 'யாராவது ஒருத்தன் மொறச்சு பாத்தாலே பயந்து பின்னாடி பதுங்கறவன் நீ.  நீ எப்படி அபிமன்யு பேருல பதிவு எழுதலாம் ? மாத்துடா பேரை ' என்று சொல்லாத வரை நமக்கு பிரச்சனை இல்லை. 
----------------------------------------------------------------------------------------------
காலகாலமாக  இலங்கை கிரிக்கெட் வாரியத்தை காப்பாற்றி வருவது இந்திய வாரியம்தான். போட்டி எதுவும் இல்லை என்றால் உடனே எதாவது சின்ன நாட்டு அணியையும் ஆட்டத்தில் சேர்த்து இந்திய - இலங்கை முத்தரப்பு தொடரை உருவாக்கி , அவர்களை பிழைக்க வைப்போம்.

இப்போது ஐபில் விஷயத்தில் அவர்கள் நடந்து கொள்வதை  பார்த்தால், வருங்காலத்தில் இதற்கு எப்படி பதில் கொடுக்க வேண்டுமோ அப்படி கொடுக்க இந்திய கிரிக்கெட் வாரியம் நன்றாக முடிவெடுத்திருக்கும்.  
யார் போனாலும் சரி , ஐபில் களைகட்டி கொண்டுதான் இருக்கும். கங்குலி திரும்பி வர வாய்ப்பு இருக்கும். உள்ளூர் இளங்காளைகள் உபயோகிக்கபடுவார்கள்.

என்னை பொறுத்தவரை அரசியலிலும் சரி , இப்போது கிரிக்கெட்டிலும் சரி ,இலங்கையிடம் அவமானப்படுவதே இந்தியாவுக்கு பழக்கமாகி விட்டது.


விடுதலை  புலிகளை எதிர்க்க இந்திய ராணுவம் போய் அவமானப்பட்டதிலிருந்து , ஒவ்வொரு முறை பேச்சுவார்த்தை என்ற பெயரில் கடந்த இருபது வருடமாகவும் , சமீபத்தில் தமிழர்கள் நலவாழ்வுக்காகவும் குழு அனுப்பி நமக்கு  கிடைத்த மரியாதையும் ...
எனக்கு ஒன்று புரியவில்லை .. உள்ளூரில்   கூட  கடைப்பிடிக்காத   அஹிம்சை முறையை என் இந்தியா இலங்கையிடம் மட்டும் எப்போதும் கடைப்பிடிக்கிறது?

கிரிக்கெட் விசயமும் சரி , அரசியல் விவகாரமும் சரி ..போனால் போகட்டும்.. தமிழக மீனவ உயிர்களை மதிக்காமல் இந்தியா அலட்சியபடுத்தினால் இனி தமிழ் மக்கள் பொறுமையாய் இருக்க மாட்டார்கள். காரணம் இது வரை தாத்தாவும் அம்மாவும் செய்வார்கள் என்று எதிர்பார்த்தவர்களுக்கு இப்போதுதான் தாங்கள் ஒற்றுமையாய் எழுந்து   நின்று  முயன்றால் அது எளிதில் முடியும் என்று புத்திக்கு எட்டியிருக்கிறது.
-----------------------------------------------------------------------------------------------

'வாக்கெடுப்பு ஏப்ரல் 13 . வாக்கு எண்ணிக்கை மே 13 . இடையில் இருப்பதோ  ஒரு மாசம்.எதற்கு இந்த அவகாசம்? இடையில் இருப்பதோ  ஒரு மாசம்.எதற்கு இந்த அவகாசம்?' என்று திரும்ப திரும்ப கத்திகொண்டிருக்கும் (வக்கீலுக்கு படித்த ) விஜய டி.ஆர் அவர்களே , முன்கூட்டியே முடிவை அறிவித்தால் , தேர்தல் நடக்கும்  ஏனைய மாநிலங்களில் ,  இந்த முடிவின் செயற்கை பிம்பம் விழுந்து கடைசி நேர குழப்பங்கள் வரும் என்று உங்களுக்கு தெரியவே தெரியாதா? புரியவே புரியாதா ? அறியவே...அட போங்கய்யா..உங்கள பத்தி பேசுனாலே உங்க பழக்கம் ஒட்டிக்கிது.

----------------------------------------------------------------------------------------------

நடிகை  சுஜாதா மறைவு   செய்தி கேட்டதும் எனக்கு 'அவள் ஒரு தொடர்கதை' ஞாபகம்   வந்தது . அவள் ஞாபகம் வந்ததுமே 'தெய்வம் தந்த வீடு ' மனதில் மெலிதாக விசும்ப தொடங்கியது. கண்ணதாசன் அதில் சமத்துவத்துக்கும் , சாஸ்திரங்களுக்கும் , சித்தாந்தங்களுக்கும் இடையே மிக கூர்மையாக ஒரு கம்பேரிடிவ் கட் கொடுத்திருப்பார்.

இப்போதும் அந்த படத்தை யாரேனும் ரீமேக் செய்தாலும் , அந்த பாடலை மட்டும் கண்டிப்பாக ப்ளாக் அண்ட் ஓய்டில் வைக்கும்படி எண்ணம் வருமாறு , அதை ஒளிப்பதிவில் விதவிதமான ஜாலங்கள் செய்ய சொல்லி எடுத்திருப்பார் பாலசந்தர்.

சந்தோசம் வந்தாலும் சரி துக்கம் வந்தாலும் சரி , இந்த பாடல் இரண்டுக்கும் ஆறுதல்படுத்தும். அப்படி ஒவ்வொன்றும் வைரவரிகள். ஆணவத்தை அழிக்க ஒரு வரி ; இவ்வளவுதான் வாழ்க்கை என்று இன்னொரு வரி என்று சமன்பாடு உள்ள பாடல் இது. எம்.எஸ்.வீ இசை கண்ணை கலங்க வைத்தால் , ஜேசுதாசின் குரல் மனதை கரைய வைக்கும்.




சில வருடங்களாக இந்த பாடலை கேட்டால் ஜெய்கணேஷ் கண்ணுக்குள் வருவார். இப்போது சுஜாதாவும்.

'ஆதி வீடு;அந்தம் காடு ;இதில் நான் என்ன ? அடியே நீ என்ன ஞானப்பெண்ணே ?
வாழ்வின் பொருள் என்ன ..? நீ வந்த கதை என்ன?'

-------------------------------------------------------------------------------------------------
கடைசி கார்ன்:

மின்வெட்டு பத்தி புகார் சொல்லிட்டே இருக்கோமே...? நாம எப்பவாவது மின்சாரத்தை சரியான முறைல பயன்படுத்திருக்கோமா?
ஆபிஸ் போக வீட்ட பூட்டும்போது பிரிட்ஜ்  தவிர எல்லா மின்சாதனத்தையும் ஆப் பண்ணுங்க..

தூங்கும்போது டிவி ஸ்க்ரீன் மட்டும் ரெம்ப சுலபமா ரிமோட் மூலமா  ஆப் பண்ணாம பவர் ஆப் பண்ணுங்க..

முடிஞ்சவரைக்கும் தூங்க போகும்போது  செல்போன் , லேப்டாப் சார்ஜ் பண்ணாதீங்க.. அப்படி பண்ணுனா ஒரு ரெண்டு மணி நேரம் கழிச்சு எந்திரிச்சு ஆப் பண்ணுங்க.


இது எல்லாம் பண்ணலேன்னா தேசகுற்றம் ஒன்னும்  கெடையாது.. ஆனா பண்ணுனா ஒரு நல்ல   குடிமகனா இருக்கிற திருப்தி கிடைக்கும். அப்புறம் நீங்க அரசாங்கத்தை எப்படி வேணும்னாலும் விமர்சனம் பண்ணலாம்.அதுக்கு உங்களுக்கு தகுதி இருக்கு..

-----------------------------------------------------------------------------------------