Thursday, March 31, 2011

கேப்'டான்' விஜயகாந்த் : தேர்தல் டிட்-பிட்ஸ்


கட்சியை வழிநடத்தும் தலைவர்களைப்பற்றிய அலசல் வரிசையில் இப்போது தேமுதிக தலைவர் விஜயகாந்த்.



பெயர் : விஜயராஜ்

பிறப்பிடம் : மதுரை , தமிழ் நாடு

படிப்பு : பத்தாம் வகுப்பு , சென் மேரிஸ் , மதுரை

சொந்த அரிசிக்கடை . பின் நடிப்பு ஆசை . சென்னை விஜயம். இப்ராஹீம் ராவுத்தர் துணை. எல்லாரும் எப்படி நடிகர் ஆனார்களோ அப்படியே கஷ்டப்பட்டு நடிப்புலக பிரவேசம். 


நடிப்பு முகவரி கொடுக்க ,சண்டைக்காட்சிகள் கை கொடுக்க , அனல்பறக்கும் வசனங்கள் தாய்குலங்களையும்  இளைஞர்களையும் பின்னால் பக்கபலமாக சேர்க்க... ஓஹோவென உயர்ந்து வளர்ந்தது விஜயகாந்த் இமேஜ்.

ஆனால் ரமணா தவிர  கடந்த பத்து வருடங்களாக காமெடி கைவிட , செண்டிமெண்ட் காலைவார ,வெறும் சண்டையும் சூப்பர் ஹீரோ இமேஜும் ஓவர்டோஸ் ஆகி இவர் படங்களை பெட்டிக்கு திருப்பி அனுப்ப சரியான நேரத்தில் நடிப்பை தூக்கி எறிந்து அரசியலுக்கு குதித்த புத்திசாலி இவர்.  

தெரிந்த மொழி : தமிழ் .. கண் சிவக்க பேசும் தமிழ்..செந்தமிழ் அல்லாமல் பாமரனையும் நரம்பு முறுக்க நாடி துடிக்க வைக்கும் தமிழ் .. உணர்ச்சி ததும்பும் தமிழ் ..

பேச்சு திறன் :கடந்த ஐந்து வருடங்களாக படபடவென கேள்விகளையும் சூடு பறக்கும் அறிக்கைகளையும் வெளிவிட்டு தனக்கும் பேச்சுத்திறன் இருக்கிறது என்று ஓரளவுக்கு நம்ப வைத்திருக்கிறார்.இந்த தேர்தல் பிரசாரத்திலும் , இனி வரும் காலத்திலும்தான் இவரின் இந்த திறன் பற்றி எடைபோட முடியும். பார்ப்போம். 

அரசியல் பிரவேசம் :
 எம்.ஜி.ஆரின் , என்.டி.ஆரின் வாழ்க்கை கிராஃப்பை நன்றாக ஊன்றி கவனித்து , சினிமா டூ அரசியல் ஸ்டார்டிங் ட்ரபுள் ஏதுமின்றி தேமுதிகவை கம்பீரமாக ஆரம்பித்தார் .
2005யில் இவர் கட்சி ஆரம்பித்தபோது மற்றவர் விமர்சித்தது போல் வெறும் கைதட்டலையும் எம்.ஜி.ஆரின் காரையும் மட்டுமே நம்பாமல் தன பின்னணி பலத்தை தெரிந்து வந்தார் என்பதுதான் உண்மை. 

நம்புங்கள் ...போன தடவை கலைஞரை முதல்வர் ஆக்கியது ஒரு ரூபாய் அரிசியும் கலர் டிவியும் அல்ல ... கேப்டனின் பிரவேசம்தான்.  அதிமுக வாக்குவங்கியை பல இடத்திலும் , திமுக வாக்குவங்கியை சில இடத்திலும் பிரித்து கணிசமாக இவர் கட்சி வாங்கி தன் கன்னி தேர்தலில் தனக்கான மரியாதையை தக்க வைத்தது.

விருத்தாசலம் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒரே ஆளாக தமிழக சட்டபேரவையில் கம்பீரமாக நுழைந்தார் புரட்சிகலைஞர். ஆனால் கடந்த ஐந்து வருடங்களாக விருத்தாச்சலத்துக்கு என்ன செய்தார் என்பது கேள்விக்குறியே ? கேட்டால் ஆயிரம் காரணம் - ஆளும் கட்சி மீது குறை என்று இருக்கும். போன முறை போல் இல்லாமல், இந்த முறை இந்த கட்சியின் பிரமுகர்கள் அந்தந்த பகுதி மக்களுக்கு நன்றாக பரிச்சயம் ஆகும்படி இவர் எடுத்த நடவடிக்கை பாராட்டுக்குரியது. 

இனிமேல்தான் அரசியலில் இவர் ஜெயித்தால் ஆளுமை பொறுப்பை ஏற்றால் என்ன சாதனை செய்வார் என்பதை கணிக்க முடியும். ஆக இப்போது அந்த பட்டியல் காலியாகவே இருக்கிறது. இவரின் சில நல்ல விஷயங்கள் கீழே :

  • 2006ல் இந்திய அரசின் சிறந்த குடிமகன் விருதை பெற்றவர்.   

  • மற்றவரைப்போல் போக்கு காட்டாமல் 'வருவேன் என்று சொன்னால் வருவேன் '   என்று உத்திரவாதம் கொடுத்தபடி உடனே வந்து அரசியலுக்கு தேவையான தைரியம் தனக்கு உண்டு என்று நிரூபித்தவர் இவர். 

  • 'கட்சி ஆரம்பிக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது ?' என்று இவரைப் பார்த்து கேள்வி கேட்போர் இவர் கடந்த இருபது வருடங்களாக உதவிய மக்களின் நன்றிபெருக்கை காண தவறியவர்கள். 

  • சரத்குமாரை போல் தன்னை சார்ந்த மக்களுக்கு எதுவுமே செய்யாமல் எந்த குரலும் எழுப்பாமல் , பின்னால் அவர்களை உபயோகப்படுத்தி கொண்டவர் அல்ல இவர். எத்தனையோ மாணவர்களின் படிப்புக்கும் , எத்தனையோ இளைஞர்களுக்கு வாழ்க்கையையும் இவர் அமைத்து கொடுத்ததை ஊர் அறியும்.  

  • தன் பலமும் தன் கட்சி பலமும் எப்படி என்று தெரிந்து கொள்ள தனித்து போட்டி போட்டு தனக்குரிய அரசியல் சாதுர்யத்தை வெளிபடுத்தினார்.

  • 'ஊழல் மலிந்த இரு கட்சிகளின் ஆட்சியை ஒழிக்க எனக்கு வாக்களியுங்கள்'  என்ற இவரின் வேண்டுகோள் சென்ற முறை நல்ல பயனை தந்தது. 

  • பண்ருட்டி ராமச்சந்திரனின் ஆலோசனை இவரின் பெரிய பக்கபலம். 

  • ஈழத்தில் பிரபாகரன் ஜெயிக்கும் வரை பிறந்த நாள் கொண்டாட போவதில்லை என்று அறிவித்தவர். 


உண்மையை ஒத்துக்கொள்ள வேண்டும். காங்கிரஸ் கட்சியை விட, பாமகவை விட இப்போது  இவருக்குதான் சப்போர்ட் இருக்கிறது.ஆனால் ஐந்து வருடம் கட்டி காப்பாற்றிய தன் பல பலங்களை இந்த இரண்டு மாதத்தில் இழந்து விட்டார்.

தன் கட்சிக்கு என்று எந்த ஒரு கொள்கையும் தேமுதிகவுக்கு இல்லை . (விட்டுத்தொலைக்கலாம்.. எந்த கட்சிக்குதான் இருக்கிறது?) 

இவ்வளவு நாளாக கூட்டணி இல்லாமல் தனி ஆட்சி உறுதிமொழி கொடுத்தவர் ஒன்று அவ்வாறே இருந்திருக்க வேண்டும். அல்லது இந்த முறை வெகு நாட்கள் முன்னாலேயே காங்கிரஸ் , இன்ன பிற கட்சியை அழைத்து மூன்றாம் அணியை ஆரம்பித்திருந்தால் அமோகமான வரவேற்பு இருந்திருக்கும். அதை விடுத்து அதிமுக கூட்டணியில் ஐக்கியமாகி சறுக்கி விட்டார். காலம் போன கடைசியிலும் போன வாரம் அதற்கு ஒரு வாய்ப்பு வந்தது. அதையும் பயன்படுத்தவில்லை.



'மாற்று ஆட்சிக்கு வழிவகுங்கள் ' என்று சொல்லித்தான் அரசியலுக்கு வந்தார்.இதற்குதான் பல ஓட்டுக்கள்  சென்ற முறை விழுந்தன. இப்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்தது இந்த ஓட்டுகளுக்கு வேட்டு.

ஒரு கேள்வி : இரு கட்சிகளின்  ஊழல் ஆட்சியை ஒழிக்க எனக்கு வாக்களியுங்கள் என்று சொல்லி வந்தவர் இப்போது அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் ஊழலுக்கு துணை போனது போலத்தானே? 


ஆனால் ஒரு வேலை இப்படியும் இருக்கலாம். கீழ்வருமாறு இவர் யோசித்திருந்தால் இவர் முடிவு சரிதான். 

தனியாக நின்று மொத்தமாக தோல்வியுறுவதை விட இப்படி நாற்பது தொகுதிகளில் நின்றால் எப்படியும் ஆளும்கட்சி எதிர்ப்பலைகளினால் குறைந்தது முப்பதாவது கிடைக்கும்.திமுக படுதோல்வி அடைந்தால் அந்த கட்சி உடைந்து விடும் கூறு அழகாக கண் முன் தெரிகிறது. 

பின் இந்த அம்மையார் எப்போதும் போல (தனி பெரும்பான்மையில் வந்தால் ) உடனே கூட்டணியில் இருந்து விலக்கி விடுவார். அதுதான் நமக்கும் வேண்டும்.

திமுக :குடும்ப சண்டையில் அழகிரி - ஸ்டாலின் - மாறன் என்று அடித்துக் கொண்டிருப்பார்கள். காங்கிரஸ் உட்கட்சி பூசல் - எந்த தலைவரும் இல்லை. .வைகோவின் மதிமுக மரணத்தருவாயில். பாமக எல்லாம் அம்மையாருக்கு ஒரு பொருட்டே அல்ல. 

பிறகென்ன ?  நாம்தான் பிரதான எதிர்க்கட்சி. ஐந்து வருடம் பொறுத்திருந்தால் அடுத்த முறை தேமுதிக - அதிமுக தான். வேறு யாரும் இல்லை. 

2016  சரியான நீயா ? நானா ? போட்டியாக இருக்கும். இப்போது இருப்பது போல் நீயா ? நானா ? அவனா ? இவனா? என்பதெல்லாம் இருக்காது. தமிழ் மக்களுக்கே உரிய குணமான ஆட்சி மாற்ற எண்ணம் நம்மை முதல்வர் ஆக்கி விடும்.

ஆக , இப்படி இவர் காய் நகர்த்துவது இந்த முறை பலனை எதிர்பார்த்து அல்ல .இப்போது கிடைக்க போகும் எதிர்க்கட்சி அந்தஸ்தையும் , திமுகவை பின் தள்ளி இரண்டாம் இடத்தை தக்க வைத்துக்கொள்வதிலும் , பின் வரும் பெரிய பலனையும் எதிர்பார்த்துதான். 

வெளிப்படையாக சொன்னால் , ரஜினிகாந்த் செய்திருக்க வேண்டிய விஷயத்தை விஜயகாந்த் துணிந்து செய்து இன்று வரை அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.



குடித்து விட்டு பிரச்சாரத்தில் பேசுவதும் , தன வேட்பாளரையே மக்கள் முன் அடிப்பதும் என இவர் செய்யும் அட்டுழியங்கள் இவரின் புகழ் ஏணியின் உயரத்தை உடைகின்றன. வடிவேலுவின் பேச்சுகளுக்கு எதிர் பேச்சு பேசாத சாமர்த்தியத்தை , இந்த விசயத்தில் ஏன் கடைபிடிக்கவில்லை என்று அவர் கட்சி தொண்டர்களே புலம்புவது வெளிப்படை. 
 ஜெயலலிதாவின் சில அகங்கார குணம் இவருக்கும் உண்டு என்பது தொண்டர்களின் எண்ணம். அதை விடுத்து , இவர் எதற்காக அரசியலுக்கு வருவதாக சொன்னாரோ , அதை செய்வார் என்ற நம்பிக்கையை வரும் ஐந்து வருடங்களில் ஏற்படுத்தினால் அடுத்த முறை இவருக்கு தாராளமாக வாய்ப்பளிக்கலாம். 

இந்த முறை ? முடிவு உங்கள் கையில்.  

Monday, March 28, 2011

வடிவேலு - அரசியலில் இன்னும் பயிற்சி வேண்டுமோ ???!!!


'அரசியல்  நாகரீகம்' அதிகம் உள்ள கட்சி என்று மதிக்கப்பட்ட திமுக மீது வைத்திருந்த கடைசி அபிமானமும் இப்போது மக்களுக்கு கரைந்து போயிருக்கும். காரணம் - தனி இருவரின் தனிப்பட்ட பகையை தங்கள் கட்சிக்கு ஆதரவாக , ஓட்டாக மாற்ற நினைத்து இப்போது அவர்கள் செய்யும் அநாகரீகமான செயல். 




கட்சியை இன்று ஆரம்பித்தாரோ , நேற்று ஆரம்பித்தாரோ அதை விடுங்கள் .. ஒரு கட்சியின் தலைவரை அடிப்படை நாகரீகம் கூட இன்றி ஏக வசனத்தில் எதிரியை பேச வைத்து , அதை அரசியலில் முன்னணி தலைவர்களாக இருக்கும் மாண்புமிகு கலைஞர், மானமிகு வீரமணி , ஸ்டாலின் போன்றோரும் அனுமதித்த மிக கேவலமான ஒரு நடத்தை திருவாரூரில் நடந்துள்ளது. 

சில கேள்விகள் :

  • நித்யானந்தா காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப கண்டனம் தெரிவித்து அபிமானம் பெற்ற தாத்தா கலைஞர் , இதை மட்டும் ஏற்றுக்கொண்டது என்ன வகை நியாயம் ?
  • காடுவெட்டி குரு அநாகரீகமாக தன்னைப்பற்றி பேச அதை மருத்துவர் அய்யா வேடிக்கை பார்த்தார் என்று விமர்சித்த கலைஞர் மற்றும் கழகம் , இப்போது அதே வேலையை விஜயகாந்துக்கு செய்வது என்ன வகையில் சேர்ந்தது ? 
  • 'நான் பெரியார் பள்ளியில் படித்தவன் .. அண்ணாவின் அரிச்சுவடியை பின்பற்றுபவன் ' என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லும் கலைஞர் , இந்த செயலை அதே பெரியாரும் அண்ணாவும் கைதட்டி அங்கீகாரப்படுத்துவார்கள் என்று எண்ணியது என்ன வகை எதிர்பார்ப்பு ?
  • 'வைகோவை ஒத்தைக்கு ஒத்தை வரியா' என்று கேட்க எனக்கும் தெரியும் .. ஆனால் அவ்வளவு தாழ்ந்து போக தலைவர் எனக்கு கற்றுகொடுக்கவில்லை' என்று சொன்ன தயாநிதி மாறன் இதை மட்டும் கைதட்டி விசில் அடிக்காத குறையாக பாராட்டுவது என்ன வகை நடவடிக்கை ?
  • கிரிக்கெட்டிலும் சரி , எந்த ஒரு விளையாட்டிலும் சரி , எதிரி ஜெயித்து விடுவான் என்று கடைசியில் பயந்தால் மட்டுமே , தன் அணியின் திறமை மீது நம்பிக்கை குன்றினால் மட்டுமே தனி மனித அவமதிப்பை உபயோகப்படுத்தி எதிராளியை கோபப்பட செய்து அதன் மூலம் வெற்றி பெற முயல்வதுண்டு. இதை இந்த பிரசாரத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பித்து விட்டீர்களே உடன்பிறப்புகளே ? பயந்து விட்டீர்களா ? 

சரி இந்த கேள்விகள் எதற்கும் பதில் சொல்ல உங்களுக்கு ஏப்ரல் 13 வரை நேரமிருக்காது.இனி வடிவேலை சந்தித்து சில வினாக்கள் :




  • உங்கள் தீவிர ரசிகன் நான் . எப்போது நீங்கள் பேசினாலும் சிரிப்பு எங்களை மீறி சீறிக்கொண்டு வரும்.  உங்களைப் பார்த்தாலேயே புன்னகைக்க ஆரம்பிப்போம்.அதுதான் உங்கள் வெற்றி. ஆனால் இப்போது உங்களை பார்த்தால் பரிதாபமும் கோபமும் வருகிறது. நீங்கள் பேசினால் எரிச்சல் அடைகிறோம். இது உங்களுக்கு தேவையா ?
ஒரு படம் தோல்வியடையும் சாத்தியகூறு இருந்தால் நீங்கள் எப்பாடுப்பட்டாவது உங்கள் நகைச்சுவையை பயன்படுத்தி அந்த தோல்வியை சரிக்கட்ட முயல்வீர்கள் என்று எங்களுக்கு தெரியும். இப்போது அதைதான் திமுக கூட்டணிக்கும் செய்ய முயற்சி செய்கிறீர்களோ என்று நினைக்க தோன்றுகிறது. 

  • கொஞ்ச காலம் முன் ராமேஸ்வரத்தில் ஈழ மக்களுக்கு குரல் கொடுக்க இயக்குனர்கள் சென்று அவர்கள் நலன் பற்றி பேசினால் , அங்கும் சென்று நீங்கள் மக்களுக்கு குரல் கொடுக்காமல் , அதிக நேரம் உங்களின் இந்த தனிப்பட்ட பிரச்சனையை பேசி எல்லோரையும் நெளிய செய்தீர்கள் . தவறில்லையா அது ? 

  • ஏறத்தாழ எல்லா நேர்காணலிலும் சொல்வீர்கள்- என்னை ஆதரித்து வாழ்வு கொடுத்த மக்களுக்கு நான் எதாவது செய்ய வேண்டும் என்று . அது சத்தியமாக இது அல்ல வேலு .சரி ஏதோ அரசியலோ ,அல்லது தனியாகவோ சமூகத்தொண்டில் ஈடுபட்டு மக்களுக்கு உதுவுவீர்கள் என்று நினைத்தால் அப்படி ஏதும் செய்யாமல் என்ன இது அச்சுபிச்சுதனம் ? 

உங்களுக்கு தனிப்பட்ட எதிரிகள் எவ்வளவோ இருக்கலாம் .அது உங்கள் பிரச்சனை. அதை எங்கள் தலையில் கொண்டு வந்து சுமத்தி பழிதீர்க்க நினைப்பது சிறுபிள்ளைத்தனம் அல்லவா ? . உங்களக்கு புரியும்படி சொல்கிறேன். உங்கள் மிக நெருங்கிய நண்பர் வந்து ' நேற்று விஜய் படம் பார்க்க தியேட்டர் போயிருந்தேன். அங்கே டிக்கெட் தராமல் என்னை அவமானப்படுத்தி விட்டார்கள். விஜய் ரசிகர்களும் என்னை கண்டுகொள்ளவில்லை. ஆகையால் நீ இனி விஜய் படத்தில் நடிக்காதே..' என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள் ' என்னையா சின்னபுளத்தனமா இருக்கு. உனக்கும் அவனுக்கும் பிரச்சனைனா என்னை எதுக்குயா இடையில இழுக்குற ' என்று உங்கள் ட்ரேட்மார்க் டயலாக்கில் கேட்பீர்கள்தானே? அதைதான் நாங்களும் உங்களிடம் கேட்கிறோம்.    

நீங்கள் மக்களுக்கு நல்லதை எடுத்துகூற வந்துள்ளேன் என்று சொல்வது உண்மையென்றால் திமுக சாதனைகளை மட்டும் பேசியிருக்க வேண்டும். இதை அல்ல. 


  • சரி , ஒரு வேலை திமுக கூட்டணிக்கு விஜயகாந்த் வந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள் வேலு ? அம்மாவுடன் மேடையில் இதே கேள்விகளை அங்கே இருந்து கேட்பீர்களா? 

  • மிக முக்கியமான கேள்வி ..திமுக கூட்டணிக்கு வாக்களியுங்கள் .. விஜயகாந்தை தோற்கடியுங்கள் என்று மட்டும் மிக கவனமாக பேசுகிறீர்களே .. எங்காவது ஒரு இடத்தில் கூட அம்மாவை பற்றியோ , அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என்றும் பேசுவது இல்லையே ? ஏன்? ஒரு வேளை அதிமுக ஜெயித்தால் 'அம்மா ..எனக்கு எதிரி கேப்டன்தான்.. உங்களை நான் அப்படி ஒருபோதும் எண்ணியதில்லை தாயே..' என்று அந்தர்பல்டி அடிக்க ஏதுவாக இருக்கும் என்றுதானே ?( ரஜினி பாமகவுக்கு செய்து பிறகு கலைஞரிடம் சொன்னது போல .. )

  • வார்த்தைக்கு வார்த்தை நேற்று கட்சி தொடங்கி மக்களுக்கு ஏதும் செய்யாமல் நாளை முதல்வர் ஆக ஆசைபடும் ஆள் என்று விஜயகாந்தை கேலி பேசுகிறீர்களே ? அவர் காலங்காலமாக மக்களுக்கு நிறைய உதவி செய்து அதன் பிறகு அரசியலில் குதித்துள்ளார் என்பது ஊரறிந்த உண்மை . நீங்கள் என்ன செய்து விட்டு  இப்போது எங்களிடம் எந்த உரிமையில் பேசுகிறீர்கள்..?

  • சரி விஜயகாந்த் பகையை முடிக்க எங்களை பயன்படுத்தும் நீங்கள் நாளை சிங்கமுத்து அரசியலுக்கு வந்தால் அதற்கும் எங்களை இழுப்பீர்களா? எங்களுக்கு வேறு வேலை இல்லையா ? 

உண்மையிலேயே நீங்கள் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் வந்திருந்தால் வரவேற்றிருப்போம்.இனியும் வரவேற்போம். ஆனால் இது சகுனித்தனம். தனிப்பகை. துரியோதனன் வஞ்சம். விஜயகாந்த் உண்மையிலயே உங்களுக்கு அநீதி செய்திருந்தால் அதை தனியாக போராடி பதிலடி கொடுங்கள். இது பொது இடம். இங்கு வேண்டாம். 


உங்களுக்கு அதீத திறமை இருக்கிறது வடிவேல் சார் .. அது திரையில் நடிக்கும்போது எடுபடும். அரசியலிலும் பொதுமக்கள் வாழ்க்கையிலும் அல்ல ..
ஒரு முறை தவறி விட்டீர்கள். இனி திருத்தி கொள்ளுங்கள். ஆட்சி மாறி காட்சி மாறினால் நிலைமை என்னவாகும் என்று யோசித்து கொள்ளுங்கள்.  மேடையில் கை தட்டியவர்கள் , உதவிக்கு வரமாட்டார்கள். ஸ்பெக்ட்ரம் உட்பட பல வழக்குகளில் அலைய போகும் அவர்களுக்கு உங்கள் குரல் கேட்காது.  

Thursday, March 24, 2011

இப்படை தோற்கின் எப்படை ஜெயிக்கும் ???

/பின்னூட்டம் : இந்த பதிவு எழுதி விட்டு சற்று பயந்தது என்னவோ உண்மைதான்.. ஆனாலும் நம் அருமை செல்வங்கள் கனவை நிறைவேற்றி ஆஸ்திரேலியா அணியை ரத்தம் சிந்த வைத்து ஊருக்கு அனுப்பி வைத்து , பனிரெண்டு வருடமாக ஆணவ ஆட்டம் ஆடிய பூனைக்கு மணியை கட்டி பெருமை தேடிக் கொண்டனர்..  /


இன்னும் சில மணித்துளிகளே இருக்கிறது ..மார்ச் 23 ,  2003இல் வாங்கிய அடிக்கு பதிலடி கொடுக்க... கொடுப்போமா என்பதுதான் கேள்விகுறி..


சரியாக எட்டு ஆண்டுகளாக விஷமாக மனதில் ஊறியிருக்கும் வஞ்சம் ,வெறி , பழியுணர்ச்சி , கர்ணனிடம் சேர்ந்த நாகஸ்திரம் போல் பொருமிக்கொண்டிருகிறது ஒவ்வொரு இந்திய ரசிகன் மனதிலும்.


இப்போதெல்லாம் இந்தியா - பாகிஸ்தான் மேட்சை விட இந்தியா - ஆஸ்திரேலியா மோதும் போட்டிதான் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே பாகிஸ்தான் அரை இறுதிக்கு தகுதி  பெற்ற நிலையில் இன்று நமக்கு சவால்.அதுவும் பழிவாங்க சந்தர்ப்பமாக அமைந்திருகிறது .மூன்று முறை கோப்பையை வென்றவர்களை திருப்பி அனுப்பி நம் பேரை நிலைநாட்டுவோமா ? இப்படித்தான் வெஸ்ட் இண்டீஸ் டீமும் கிரிக்கெட்டில் கோலோச்சிக் கொண்டிருந்தபோது 83இல் ஒரு அடி அடித்து உட்கார வைத்தோம். அதன் பிறகு இன்று வரை அவர்கள் பெரிதாக சோபிக்கவில்லை . இப்போது இதே வேலையை ஆஸ்திரேலியா டீமுக்கு செய்ய வேண்டும் என்பது என் அவா மட்டுமல்ல நெடுநாள் கனவு. 

 என்ன வேண்டுமானாலும் திட்டுங்கள் எனக்கு கவலை இல்லை ... வெளிப்படையாகவே சொல்கிறேன். எனக்கு பாண்டிங்கை சுத்தமாக பிடிக்காது. விளையாட்டை விளையாட்டாக எடுத்து கொள்ள வேண்டாமா என்று நீங்கள் நியாயமாக கேள்வி கேட்டால் நானும் நியாயமாகவே பதில் சொல்கிறேன். ஆஸ்திரேலியா தவிர எனக்கு எந்த டீமிடமும் தோற்றாலும் வலிக்காது. அப்ரிடியை  கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் பாண்டிங் ??? 


சச்சின் சாதனையை நோக்கி போகும் ஒரே ஆள் பாண்டிங் தான் என்பதற்காகத்தானே நீ வெறுக்கிறாய் என்றால் சத்தியமாக கிடையாது . ஹ்ஹா .. இந்த ஆளாவது சச்சின் சாதனையை முறியடிப்பதாவது ?? கடந்த மூன்று வருடமாக நம்மாள் ஆட்டத்தையும் இந்த ஆள் ஃபார்மையும் பார்த்தவர்கள் பார்த்தவர்கள் இந்த கேள்வியை கேட்க மாட்டார்கள் .



இந்த கோபத்திற்கு இரண்டு காரணங்கள் :

பாண்டிங் மட்டுமல்ல ,ஆஸ்திரேலியா டீமே ஒரு நாகரீகமற்ற டீம். நேர்மையாக விளையாடி ஜெயிப்பது என்பது அவர்கள் வரலாறிலேயே இல்லை.இருபது வருடங்கள் முன்பே ,  ஒரு பந்தில் ஆறு ரன் எடுத்தால் எதிரணி  வெற்றி பெறலாம் என்று இருக்கும்போது மிக கேவலமாக பந்தை தரையில் உருட்டி போட்டு ஜெயித்த மாவீரர்கள் இவர்கள். இந்த ஏமாற்றும் பழக்கம் இது வரை இவர்களோடு பனிரெண்டாவது ஆளாக டீமில் ஒட்டிக்கொண்டிருகிறது. இவர்களை கருவறுக்க இது அருமையான சந்தர்ப்பம்.
பாண்டிங்கின் ஆணவத்தை அளக்க வார்த்தைகளே  இல்லை . ஜெயிப்பதற்கு எல்லா வேலைகளையும் வார்னே , கில்லி , ஹேடன் போன்றவர்கள் செய்ய , கூடமாட ஏதோ அவ்வப்போது சதங்கள் அடித்து, பிறகு பேட்டி கொடுக்கும்போது மிக பந்தாவாக இவர் சொல்லும் வார்த்தைகள் மிக கொடுமையானவை . கண்டிக்கத்தக்கவை. 
அம்பயரிடம் எதிர்த்து பேசுவதும் , தோற்றால் டிரெஸ்ஸிங் ரூமில் நாற்காலியை உடைப்பதும் , ஒரு பேட்ஸ்மேன் நன்றாக விளையாடினால் , பின்னால் நின்று கிண்டல் அடித்து கோபப்படுத்தி அவரை அவுட் ஆக்குவதும்.. ஐயோ கடவுளே .. இந்த ஜென்மத்தை எங்கள் கிரிக்கெட் கடவுளுக்கு போட்டியாக சொல்வது என்ன ஒரு அபத்தம் ...   

சரி இந்த ஆள் கிடக்கட்டும்.. இன்றைய ஆட்டத்துக்கு வருவோம் .

தோனி தலைமையிலான இந்திய அணி ஃபீல்டிங் , பௌலிங் விஷயத்தில் மிக தொய்வாகவே உள்ளது.ஆனால் பேட்டிங் ஆர்டர் எப்போதும் இல்லாதது போல் மிக அருமையாக உள்ளது . முன்பெல்லாம் சச்சின் ,டிராவிட் ,கங்குலி அவுட் ஆனால் டிவியை அணைத்து விடலாம். ஆனால் இப்போது மிடில் ஆர்டரும் சரி , டெயில் ஆர்டரும் சரி பேட்டிங்கில் மிக பலம் வாய்ந்த அணியாக உள்ளது. 


ஆனாலும் அடிக்கடி சொதப்பும் பழக்கம் இன்னும் நம்மை விட்டு போக வில்லை. அதில் இரண்டு வகை உண்டு. 

ஒன்று : எடுத்த எடுப்பிலேயே விக்கெட்டுகளை கொடுத்து பிறகு கௌரவமாகவாவது தோற்க போராடி தோற்பது.

இரண்டு: முன்னணி வீரர்கள் ரன் மழை பொழிந்து நல்ல அடித்தளம்  அமைத்து கொடுத்தாலும் பின்னால்  வருபவர்கள் எதுவுமே செய்யாமல் திரும்பி வருவது. 
உதா:   கடைசியாக நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான போட்டி .

இப்படி இந்த தவறுகளை செய்யாமல் பொறுப்பாக விளையாடி பதிலடி கொடுக்க இறைவன் இவர்களுக்கு இன்று புத்திசாலித்தனத்தை கொடுக்க வேண்டும். முக்கியமாக மூன்றாம் ஆளாக தோனி அவசரப்பட்டு வந்து ஆட்டத்தை கெடுக்காமல் பொறுமையாக யுவராஜை அனுப்பி விட்டு பின்னால் வர வேண்டும். 

சரி இப்படி அபசகுனமாக எதாவது சொல்ல கூடாது .. எல்லாம் நல்லபடி நடக்கும். 

அங்கு ஆஸ்திரேலியாவும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை . வாட்சன்  தவிர எல்லாரும் அவுட் ஆப் பார்ம் தான். கில்லி , ஹேடன் ,வார்னே கொண்ட பழைய டீம் என்றால்தான் பயப்பட வேண்டும்.இது எலி. என்ன ..குருடர்களுக்கு மத்தியில் ஒற்றைக்கண்ணன் ராஜா என்பது போல் , மற்ற டீம்களை விட ஏதோ பரவாயில்லை. அவ்வளவுதான். 

சேவாக் விளையாடுவாரா என்பது இன்னும் தெரியவில்லை . விளையாட வேண்டும். பௌலிங் விசயத்தில் யாரை நம்புவது என்பது தோனிக்கு மட்டுமல்ல நமக்கும் குழப்பமாகவே இருக்கிறது. 


 கடைசி ஓவரில் எதாவது புதியதாக முயற்சி செய்யலாம் என்னும் பழக்கத்தை தோனி இன்று விட்டுவிடுவாராக என்று நம்புவோம். 
பவர் ப்ளேயில் கவனமாக இருப்போம் என்று நேற்று உறுதி அளித்திருக்கிறார்.பார்ப்போம். 'யப்பா நெஹ்ரா... பௌலருக்கு வேலை விக்கெட் எடுக்கறது , ரன் கொடுக்கறது இல்லை ..' 

சச்சின் , சேவாக்/கம்பீர் அடித்தளம் அமைக்க மிடில் ஆர்டரில் யுவராஜும் , யூசுப் பதானும் கலக்க கடைசி ஓவர் வரைக்கும் நின்று ஆடி ரன்னை உயர்த்தி கொடுக்க ,
அதன் பின்னர் பாண்டிங்கை , வாட்சனை , கிளார்க்கை , ஹஸ்ஸிகளை நம் பௌலர்கள் பெவிலியனுக்கு மடமடவென அனுப்ப , எந்த பக்கம் அவர்கள் அடித்தாலும் விராத் கோலியும் , மற்ற ஃபீல்டர்களும் பாய்ந்து தடுக்க , வெற்றிக்கனியை பறித்து கம்பீரமாக அரை இறுதிக்கு நுழைவோம் என்று எல்லாரும் நம்புவோம். 



என்னை பொறுத்த வரை , 
கிரிக்கெட்டில் முதல் எதிரி பாகிஸ்தான் அல்ல ..ஆஸ்திரேலியாதான் ...
தனிப்பட்ட ஜென்ம  எதிரி ஜாவீத் மியாண்டட் அல்ல , ரிக்கி பாண்டிங்தான்..
உலக கோப்பை ஃபைனல் ஏப்ரல் இரண்டு அல்ல .. இன்றைக்குத்தான்.. 

துடிக்குது புஜம் .. ஜெயிப்பது நிஜம் .. 

Monday, March 21, 2011

காரிய வித்தகர் கலைஞர்: தேர்தல் டிட் -பிட்ஸ்


கட்சியை வழிநடத்தும் தலைவர்களைப் பற்றிய அலசல் வரிசையில் இப்போது கலைஞர். இவரின் கலையுலக சாதனைகளையும் , கதைவசன திறமையையும் , தமிழ் ஆற்றலையும் இங்கு பார்க்க வேண்டியதில்லை . ஆளுமைத்திறனையும் , அனுபவத்தையும் மட்டும் பார்ப்போம். 


பெயர்: முத்துவேல் கருணாநிதி 

பிறப்பிடம் : திருக்குவளை ,திருவாரூர் மாவட்டம்

படிப்பு : சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பள்ளிப்படிப்போ ,பட்டப்படிப்போ இல்லை. ஆனால் அபாரமான தமிழ் அறிவும் அரசியல் அறிவும் உண்டு.

ஐந்தாவது படிக்கும்போது 'பனகல் அரசர்' என்ற நூலை படித்ததிலிருந்து திராவிட தத்துவங்களில் நாட்டம் வந்தது.படிக்கும் காலத்தில் அரசியலும் சமூக ஈடுபாடும் அதிகமானதால் மூன்று முறை இறுதி தேர்வில் தோல்வி .அடைந்தவர். மிக சிறிய வயதில் ஒரு கட்டுரையை எழுதி அனுப்ப, அதை படித்த அண்ணா , இவர்  ஊருக்கு வரும்போது அழைத்து , மிக சிறுவயதுள்ள கலைஞரை பார்த்து ஆச்சரியப்பட்டு முதலில் படிப்பில் அக்கறை காட்டி பிறகு இயக்கத்தில் வந்து சேர்ந்துகொள்ள அறிவுறுத்தினார்.

அதன் பின்னரும் படிப்பில் நாட்டமில்லாமல் , போராட்டங்களிலும் இயக்க நிகழ்வுகளிலும் தன்னை ஈடுபடுத்தி கொண்டு தன் இடத்தை பலமாக தக்க வைத்துக்கொண்டார். 

தெரிந்த மொழி :  புருஸ்லீ சொன்ன வாக்கியம் இது -   'நூறு உத்திகளை  தெரிந்த ஒருவனைக்கண்டு நான் என்றும் பயந்ததில்லை. ஆனால் ஒரு உத்தியை நூறு முறை பழகியவனைக் கண்டு நான் அஞ்சுகிறேன்.' இது கலைஞரின் அரசியல் எதிரிகளுக்கு தெரியவேண்டிய ஒன்று. பழமொழிகள் கற்றவரில்லை கலைஞர். ஆனால் தமிழில் இவர் பெற்ற புலமை இந்த நூற்றாண்டில் வெகு சிலரே பெற்றிருந்தனர்.இப்போது இவர் மட்டுமே.  தான் வாழும் ஊரில் , தன் சமூக மொழியை திறம்பட கற்றவன் , தலைவன் ஆவதற்கு முழுத்தகுதி உடையவன் என்பதற்கு கலைஞர் மிகச்சிறந்த சான்று. 

பேச்சுத்திறன் :இவரின் முதல் மேடைபேச்சு 'நட்பு' என்ற தலைப்பில் , பள்ளிபருவத்தில்.முதல் சட்டசபை கன்னிபேச்சு மே 4  1957லில்.கலைஞர் சொல்வன்மைக்கு நிகர் இப்போது யாரும் இல்லை. இவரின் சொல்வன்மையைப் பற்றி எத்தனையோ புத்தகங்கள் வெளிவந்துள்ளன. எதிர்க்கட்சி தலைவர்களும் வியந்து பாராட்டும் வண்ணம் கேள்விகளுக்கு சுவை மிகுந்த  , ஆழம் நிறைந்த கருத்தை நகைச்சுவையாக , மற்றவர் மனம் புண்படாமல் பதில் உரைக்கும் திறன் இவர் உடன்பிறந்தது. கட்சியில் ஒரு கருத்தையோ , சட்டசபையில் ஒரு கட்டளையையோ முன்வைக்கும்போது எதிர்ப்பவர்களின் கேள்விகளுக்கு அசராமல் பதில் சொல்லி அவர்களை உடன்பட வைப்பதில் வல்லமை படைத்தவர். 


அரசியல் பிரவேசம்:  தன் பதினாலாவது வயதில் அரசியலில் சாதாரண தொண்டனாக காலடி எடுத்து வைத்தவர். எல்லா தலைவர்களுடனும் நெருங்கிய இனிய நட்பு கொண்டவர். பெரியாருடன் மனக்கசப்பு வந்து அண்ணா விலகிய போது அவரின் பின் நிழலாக ஓடி வந்தவர். 1957லில் தொடங்கி பதினோரு முறை சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 

இவரின் உண்மையான , ( கட்சிசார்பற்ற ) பொதுமக்களுக்கு உதவிய சாதனைகள் :
முன்னர்:
  • மாணவர்களுக்கு இலவச பேருந்து பயணச்சீட்டு 
  • இலவச கண்சிகிச்சை , கண்ணாடி வழங்குதல்
  • கைரிக்ஷா முறையை ஒழித்தது
  • ஏழை பெண்கள் திருமண உதவி - பத்தாயிரம் ருபாய்
  • ஏழை பெண்களுக்கு இலவச கல்வி - பனிரெண்டாம் வகுப்பு வரை 
  • குடிசை வாரியம் அமைத்தது 
  • பெண்களுக்கு சொத்தில் சம உரிமை  சட்டம்
  • பிற்படுத்தப்பட்டவ்ர்களுக்கு தனி நலம் பேணும் இலாகா 
  • விதவைகள் மறுமணம்/ கலப்பு மணம் செய்வோருக்கு ஊக்கத்தொகை
  • மிக பிற்படுத்தப்பட்டவ்ர்களுக்கு தனி இருபது சதவீத ஒதுக்கீடு 
  • ஆதி திராவிட மக்களுக்கு இலவச வீட்டு மனை வழங்குதல் 

தற்போதையவை :

  • ஒரு ரூபாய்க்கு அரிசி (இந்த மகத்தான சாதனையை குறைகூறுவோர் சில நாட்கள் வேறு மாநிலங்கள் சென்று அங்குள்ள வறுமைக்கோடுக்கு  அருகிலிருக்கும் மக்களின் நிலைமையை பார்த்து பிறகு பேச வேண்டுகிறேன்)
  • மருத்துவ காப்பீடு திட்டம் (இது ஒரு பாராட்டத்தக்க  பெரிய சாதனை -  மேலதிக விபரங்களுக்கு இதனால் பயன்பட்ட யாரை வேண்டுமானாலும் கேட்க.. ) 
  • இலவச தொலைக்காட்சி ( எத்தனையோ எதிர் விமர்சனங்கள் இருந்தாலும் , எல்லா கட்சிக்காரர்களும் இதனால் பயன்படுகிறார்கள் என்பது சத்தியம் )

(சமத்துவபுரமும் , செம்மொழி மாநாடும் மக்களுக்கு பயன்படவில்லை என்பது என் கருத்து. மாற்றுக்கருத்துள்ளவர்கள் இதை நிராகரிக்கலாம் )

இன்னும் சில காலத்தில் யாரும் ஒருவரை அரசியல் சாணக்கியன் என்று புகழமாட்டார்கள் ; மாறாக அரசியலில் கலைஞர் போல் என்றுதான் பேச்சு இருக்கும். அப்படி ஒரு மைல்கல்லாக கலைஞர் தன்னை நிலைப்படுத்தியுள்ளார். இப்போதைக்கு எதிர்கட்சியிலும் சரி , எந்தக்கட்சியிலும் சரி , இவருக்கு நிகரான அனுபவமும் ஆற்றலும் யாருக்கும் இல்லை என்பது திண்ணம்.

 இவர் முதலமைச்சராய் இருந்த போது ,ஜெயலலிதா சினிமாவில் டூயட் பாடிகொண்டிருந்தார் ; விஜயகாந்த் விஜயராஜுவாக பதினேழு வயது விடலை பையனாக ஊர் சுற்றிக்கொண்டிருந்தார்; வைகோ கட்சியில் அப்போதுதான் ஒரு அடையாளம் கிடைக்க பாடுபட்டுகொண்டிருந்தார்.சோனியா அப்போதுதான் ராஜீவ்வை திருமணம் செய்திருந்தார். 


எம்.ஜி.ஆரை அண்ணாவுக்கும் அரசியலுக்கும் அறிமுகப்படுத்தியவர் கலைஞர். (சொந்த செலவில் சூனியம் என்ற சொற்றொடர் அப்போது புழக்கத்தில் இல்லை ) 

இவர் ஆட்சியில் இருந்தால் அரசியல் நாகரிகம் (கூடிய வரையில் ) காப்பாற்றப்படும் . எதிரிகளை அரவணைத்து ஆட்கொள்ளும் ஆற்றல் பெற்றவர். 

ஊழலை தமிழ்நாட்டுக்கும் ,  விஞ்ஞான ரீதியான ஊழலை இந்தியாவுக்கும் அறிமுகப்படுத்திய கசப்பான பெருமையும் இவருக்கு உண்டு. அதை காப்பியடித்து பெரிதாக பேராசையுடன் செய்து மாட்டிக்கொண்ட பெருமை ஜெயலலிதாவுக்கு உண்டு. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இவர் பங்கு மிகப்பெரியது. 

  • தனக்கு அடுத்த நிலையில் அன்பழகன் போன்ற  சான்றோரை  வைத்திருப்பது இவர் திறமைக்கு உதாரணம் . 
  • தனக்கு அடுத்த நிலையிலேயே காலங்காலமாக அன்பழகன் போன்ற சான்றோரை வைத்திருப்பது இவர்  திறமைக்கு சிறந்த  உதாரணம்.
  • தனக்கு அடுத்த நிலையிலேயே காலங்காலமாக இருந்த அன்பழகனையும் தாண்டி ஸ்டாலினை கொண்டுவந்தது இவர் திறமைக்கு மிகச்சிறந்த உதாரணம்.

இவர் கூட்டணியில் ஒரு ஆட்சி அமைந்தால் குறைந்தது அடுத்த இரண்டு வருடங்களுக்காவது கூட்டணி நிலவும். அதிமுக ஆட்சியில் உடனே ஈகோ பிரச்சனையால் கூட்டணி பிளவுபடும்.மூத்த  பத்திரிக்கையாளராக இவர் இருப்பதால் ஓரளவுக்கு பத்திரிக்கை தர்மம் காப்பாற்றப்படும். சர்வாதிகாரம் இவருக்கு ஒத்து வராத ஒன்று. எல்லாரோடும் பதவிகளையும் புகழ்களையும் பகிர்ந்து கொண்டு வெற்றி பெறுபவர். எம்.ஜி.ஆருக்கு பிறகு இரு கட்சிகளில் இவர் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்கள் ஓரளவுக்கு பயம் இன்றி வாழ்வார்கள். 
 எந்த கட்சியானாலும் சரி , எவ்வளவு விமர்சனம் செய்தாலும் சரி , கூட்டணி வேண்டும் என்று வந்தால் மன்னித்து ஏற்றுக்கொள்வார் . ஒதுங்கி போனால் கோபப்படவும் மாட்டார் . திரும்பி வந்தால் திருப்பி அனுப்பவும் மாட்டார். இந்த கொள்கையால் எவ்வளவோ அரசியல் பிரச்சனைகள் அமைதியாக முடிந்தன. சான்று : அவ்வப்போது    ராமதாஸ் , எப்போதும் இடது கம்யூனிஸ்ட்... யாருக்கு தெரியும் ..வைகோ இனி ஒரு தடவை வந்து இவர் ஒருவேளை ஏற்று கொண்டால் அரசியலை விட்டு ஆயிரம் பேர் பைத்தியம் பிடித்து விலகி ஓடுவார்கள் .

அதுவும் சட்டசபையில் இவர் வீற்றிருந்தால் எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மனதுக்குள் நிம்மதியாக அமர்ந்திருப்பார்கள். ஹி வோன்ட் கீப் ஹிஸ் வென்ஜென்ஸ். என்ன கேள்வி கேட்டாலும் நகைச்சுவை கலந்த மரியாதையான பதில் எல்லாரையும் நிதானப்படுத்தி விடும். 

எதிர்பக்கம் கண்டிப்பான தலைமையில் ஒரு கட்சி இருக்கிறது என்றால் இவர் தன  கட்சிக்கு கொடுப்பது அன்பு நிறைந்த , நட்பு கலந்த தலைமை . அதுதான் இவர் வெற்றிக்கான மந்திரம் .(இத்தனை இலவசங்களுக்கு பிறகும்)அரசு இயந்திரம் துருப்பிடிக்காமல் இருக்க இவரின் ஆலோசனைமிக்க அணுகுமுறை மிக நன்றாக உதவுகிறது என்பது வல்லுனர்களின் கருத்து . 

மொத்தமாக சொன்னால் , தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல உலகத்துக்கே சிறந்த நாகரீகமான அரசியல் என்றால் அது கலைஞர்தான்.
இவரிடமும் ஊழல் இல்லாமல் இல்லை , ஆனால் இருக்கும் கட்சிதலைமைகளில் இவர் சிறந்தவர். அராஜகங்களிலும் சரி அட்டூழியங்களிலும் சரி , இவர் ஆட்சி எதிர்கட்சியின் ஆட்சிகால செயல்கள் அளவுக்கு போகவில்லை . இவர் ஆட்சியில் எதிர்கட்சிக்காரர்கள் பாதிக்கப்படலாம்; பொதுமக்கள் அவ்வளவாக பாதிக்கப்பட்டதில்லை




கட்சியில் குடும்ப அரசியலை அதிகம் கலக்காமல் , தவறு செய்தவர்களை உடனே துரத்தி தன் பழுத்த அரசியல் ஞானத்தை பயன்படுத்தி மக்களுக்கு நல்லது செய்வதை தொடர்வதாக இருந்தால் இவருக்கு இன்னொரு வாய்ப்பு கொடுப்பதில் தவறில்லை.

முடிவு உங்கள் கையில். பிற தலைவர்களை பற்றி பின்னர் .. 

Wednesday, March 16, 2011

கடவுள் கண்டிப்பானவர் அல்ல ...



அண்மையில் என் ஊர் அருகில் உள்ள கோவிலில் நடந்த ஒரு விபத்தை கேள்விப்பட்டதும் மிக வருத்தத்துடன் இந்த பதிவு . சபரிமலை ஜோதி பார்க்க செல்வோருக்கும் இந்த பதிவின் கேள்விகள் பொருந்தும். 

கடவுள் , கோவில் விஷயத்தில் எல்லாருக்கும் பொதுவாக பயபக்தியோடு கூடிய ஒரு பிடிவாதம் உண்டு. ஆனால் அது அவர்களை மட்டுமல்லாமல் அவர்கள் குடும்பத்தையும் பாதிக்கும் நிலை சில சமயம் ஏற்படுகிறது. உண்மையிலேயே உடல்வலிமை இருந்து ,  கடுமையாக விரதம் இருந்து கட்டுப்பாடோடு தங்களால் தங்கள் பக்தியை வெளிப்படுத்த முடிபவர்கள் இதில் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் வயதானவர்கள் , உடல் நலிவுற்றவர்கள் இதை தாங்களும் பின்பற்றி பிறகு பாதிக்கப்பட்டு கடவுளையே திட்டுவது மன்னிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல.

முன்னோர்கள் சில அர்த்தங்களை புரிய வைப்பதற்காக ,நாம் அவற்றை மறக்க கூடாது என்பதற்காக சம்ப்ரதாயங்களாக சில தருணங்களில் சிலவற்றை சொல்லிவிட்டு சென்றனர். ஆனால் அதன் உட்கருத்தை விட்டுவிட்டு அதை வெறும் சடங்குகளாக மட்டுமே பாவித்து செய்யும் அவல நிலை இப்போது ஏற்பட்டு உள்ளது. 




சில உதாரணங்கள் :

பழனி மலை எங்கள் ஊரிலிருந்து அரை மணி நேர பயணமே. மாதாமாதம் எங்கள் பக்கத்து வீட்டு பெண்கள் பௌர்ணமி அன்றோ வேறு எதாவது விஷேச தினத்திலோ அதிகாலை கிளம்பி, பேருந்தில் சிரமப்பட்டு, நெரிக்கும் கூட்டத்தில் பயணப்பட்டு சென்று, வெயிலில் மலை ஏறி, நீண்ட வரிசையில் சிக்கி ....... அப்ப்ப்பப்ப்பா   தரிசனம் பெறும்போது நடுப்பகல்  ஆகி பாதி பேர் மயக்கம் ஆகியிருப்பார்கள். அதிலும் ஒரு தடவை ஒருவருக்கு மிகவும் முடியாமல் போக , ஒரு வாரம் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி வருத்தப்பட்டு சொன்னார் - ' இனி அந்த முருகனுக்கும் எனக்கும் ஆகாது .. எத்தனை தடவை மலை ஏறி வந்துருப்பேன்.. இப்படி பண்ணிட்டானே ?' 

கேள்வி : ஏன் இப்படி ? முருகனுக்கு  எப்போதும் நமக்கு யோசனை சொல்ல நேரம் இல்லாத காரணத்தினால்தான் Common Sense எனப்படும் இயல்பறிவை கொடுத்திருக்கிறார். உங்கள் இயல்பறிவுக்கு வேலை கொடுக்காமல் இப்படி சிரமப்பட்டு வந்தால் அதற்கு அவர் என்ன செய்வார்?.அப்படியானால் எப்போது கோவிலுக்கு போவது ?  இதற்கு ஒரு வழி இருக்கிறது. என அப்பாவும் நானும் , சகோதரனும்  மாலை  ஒரு நான்கு மணிக்கு கிளம்பி நிதானமாக , எந்த ஒரு விஷேச நாளும் இல்லாத நாளில் மெதுவாக் கதை பேசி மலையேறி காத்திருக்கவே வேண்டாத ,அன்று வந்திருக்கும் மிக சிறிய கூட்டத்தில் சென்று இரண்டு மூன்று முறை தரிசித்து பின் தங்க தேரோட்டமும் பார்த்து , ஒரு மணி நேரம் கதை பேசி விட்டு பத்து மணிக்குள் வீட்டுக்கு சென்று விடுவோம்.

 கடவுளை தரிசித்த திருப்தியும் உண்மையான அமைதியை அனுபவித்த பரம சந்தோசத்தையும்  உணர்வோம். இப்போது சொல்லுங்கள் ? எது புத்திசாலித்தனம் ? அதே முருகன்தான் , அதே பழனிதான்.. கிடைத்த வரமும் ஒன்றும் குறைந்ததல்ல ..  யோசியுங்கள் .. 

அடுத்த நிகழ்வு :  'அய்யயோ .. அவ்வளவு  தூரம் போயிட்டு அர்ச்சனை பண்ண முடியாம போய்டுச்சே .. இது என்ன சோதனை ? பவுர்ணமி அன்னைக்கு அர்ச்சனை பண்ணுனா கோடி புண்ணியமே ' என்று சிலர் புலம்புவார்கள். அர்ச்சகர்களால் செய்யும் அர்ச்சனை மட்டுமே ஆண்டவனை சென்றடைகிறது என்று முழுமையாக நம்பும் பரிதாபத்திற்குரிய பக்தர்கள் அவர்கள். 

அர்ச்சகர்கள் உச்சரிப்பது சமஸ்க்ருத மந்திரம்.   சமஸ்க்ரிதம் என்பது தேவலிபி என்று கொண்டாடப்படுவது.அதாவது கடவுளின் பாஷை.நாம் நம் பெயரை எழுதி கொடுத்தால் , அவர் அந்த மொழியில் கடவுளிடம் நமக்கு வேண்டுவார்.
கேள்வி -   கடவுளுக்கு அந்த பாஷை மட்டும்தான் தெரியுமா ? அதையே நாம் நமக்கு தெரிந்த தமிழில் (அது எந்த தமிழாக இருந்தாலும் ) ' ஆண்டவா , இந்த அறிவு கெட்ட ராமசாமிய காப்பாத்துப்பா..'  , ' இன்னா கணேஷா .. நீ மட்டும் ரெம்போ சுளுவா உங்க அப்பா வெச்ச எக்ஸாம்லோ பாஸ் பண்ணி பழம் கெலிச்சுட்ட?  .. அத்தயே நான் பண்ணுனா பிட் அடிக்கரேன்னு வெளிய தொரத்துறாங்க.. இன்னா நியாயமப்பா இது'  என்று எப்படி சொனாலும் அவருக்கு புரியும். 

கோவிலுக்கு போவதே மன திருப்திக்குத்தான் . அங்கு போயும் அர்ச்சனை பண்ண முடியவில்லை , அபிஷேகம் பார்க்க முடியவில்லை என்று புலம்பினால் கடவுளையும் கோவில் கட்டிய உண்மையான காரணத்தையும்  புரிந்து கொள்ளவில்லை என்று அர்த்தம் 

அடுத்த நிகழ்வு : எனக்கு அதிக பணம் கொடுத்து சிறப்பு தரிசனம் செய்வதில் உடன்பாடு இல்லை .ஒன்று பொது தரிசனத்தில் போவேன் . கூட்டமாக இருந்தால் கோபுர தரிசனம் மட்டுமே. கோவில் என்பது சமத்துவமாக இருக்க வேண்டும். அங்கும் பணம் சார்ந்த  இத்தனை பிரிவுகள் இருந்தால் , மறைமுகமாக அங்கு ஒரு ஏற்றத்தாழ்வு வருகிறது.  முன்னூறு ருபாய் டிக்கெட்டில் போகும் பக்தர்கள் , பொது தரிசனத்தில் வருவோர் முன் அர்ச்சகர்களால் பணிவுடன் கவனிக்கபடுவது கண்டிக்க வேண்டிய மிகபெரிய தவறு. 




கோவிலில் மற்றவரை பார்த்து வணங்ககூடாது என்ற சடங்கு முட்டாள்தனம் அல்ல . கோவிலில் வணங்கத்தக்கவன் இறைவன் மட்டுமே என்பதை உணர்த்தவே அது. அங்கும் வி.ஐ.பி தரிசனம் என்று கருவறை வரை சிலரை அனுமதிப்பதும் , பலரை காக்க வைப்பதும் மக்களை அவமானப்படுத்துகிறதோ    இல்லையோ கலியுகத்தில் மௌன விரதம் கடைபிடிக்கும் கடவுளின் பொறுமையை சோதிக்கிறது.

கேள்வி: ஆணவத்தையும் , அகங்காரத்தையும் மறந்து நமக்கு மேல் ஒருவன் இருக்கிறான் என்று நினைக்கவே கோவிலுக்கு போகிறோம். அங்கும் சிறப்பு தரிசனத்தில் போய் , பொது தரிசன பக்தர்கள் கூட்டம் தனக்கு முன்னால் செல்வதைக்கண்டு ' தேவஸ்தானத்திற்கு மானேஜ் செய்யவே தெரியல .. அவங்கள முன்னால விட்டா நமக்கு என்ன மரியாதை ?'  என்று தன் வரட்டுத்திமிரை காட்டுவோரை பக்தர் என்று கடவுள் ஏற்றுக்கொள்வாரா? 

நிகழ்வு: விரதம் என்பதை கடுமையாக இருத்தல் என்று தவறாக அர்த்தம் செய்து பட்டினி கிடந்து உருகி மயங்கி தன உடல்நிலையை கெடுத்துக்கொண்டு கடைசியில் கடவுளை திட்டும் புண்ணியவான்கள் மிக அதிகம்.

 உதாரணமாக சபரிமலை விரதங்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு காரணம் உண்டு . காட்டில் நட , கல் மண்ணில் வெறுங்காலில் நடந்தால் 'Accupressure' முறையால் தசைகளின் நரம்புகள் அழுத்தப்பட்டு உடல் ஆரோக்கியம் அடையும் . ஒரு வேலை மட்டும் உண் - வருடம் முழுக்க உடலில் ஏற்பட்ட  சில கோளாறுகள் தானாகவே சரியாகும். குளிர்ந்த நீரில் நீராடு - உடல் சூடும் தணியும் , தியானம் செய்ய உடல் ஒத்துழைக்கும் என்பதே அவற்றின் நோக்கம்.   

கேள்வி : கால்வலி இருக்கும்போது கண்டிப்பாக வெறுங்காலில் நடக்கவும் , அல்சர் இருக்கும்போதும் ஒரு வேலை மட்டும் உண்ண வேண்டும் என்பதும் , காய்ச்சல் அடிக்கும்போதும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும் என்றும் அந்த விரதங்கள் போதிப்பதில்லை . அதை செய்து விட்டு , கடவுள் வருவார் ,'பக்தா .. உன் பக்தியை மெச்சினேன் . வேண்டும் வரம் கேள் ' என்று கேட்பார் என்று நினைத்து ஏதும் கிடைக்காமல் கடவுளைத் திட்டினால் கடவுள் உங்களை மதிக்க கூட மாட்டார். 

எல்லாவற்றிற்கும் மேலாக வரிசையில் ஒரு ஒழுங்கு இல்லாமல் , கடவுளை இவனுக்கு முன்னால் நான் தரிசிக்கவேண்டும் என்று அடித்து பிடித்து மற்றவரைத் தள்ளிவிட்டு கடவுளை கை எடுத்து கும்பிட்டால் பாவம் தீராது. 



கடவுள் நல்லவர்தான். என்றாவது ஒரு நாள் உண்மையிலேயே பக்குவப்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று ஆசைப்பட்டு காத்துகொண்டிருகிறார். பாவம் அவருக்கு அந்த பக்தரின் தரிசனம் கிடைக்காமலேயே இருக்கிறது. 

என்னை பொறுத்தவரை , இப்படி ஒரு முரட்டுத்தனமான , சுயநலமான , சடங்குளை வெறும் சடங்குகளாக அர்த்தம் புரியாமல் கடைப்பிடிக்கும் பக்தர்களை விட , கடவுள் இல்லை என்று ஒதுங்கி இருக்கும் நாத்திகர்கள் சீக்கிரம் சொர்க்கம் அடைவார்கள். இவர்கள் ? 

அது சரி , பகலிலேயே சுட்டெரிக்கும் வெயிலில் அருந்ததி நட்சத்திரம் பார்க்கும் புத்திசாலிகளுக்கும் ,கோவிலில் குங்குமத்தையும் திருநீறையும் சுவரில் கொட்டுவோருக்கும் கடவுள் மன்னித்து சொர்க்கக் கதவை திறந்தால் அங்கும் முண்டியடித்து நெரிசலில் பலபேரை எமலோகம் அனுப்புவார்கள். 

சர்வம் கிருஷ்ணார்ப்பணம்..  

Monday, March 14, 2011

புத்தக வாசம்


சில வருடங்களுக்கு முன்னால் மின்னூல் வசதிகள் இருந்திருந்தால் எனக்கு நிறைய பணம் மிச்சம் ஆகியிருக்கும்.வீட்டில் ஒரு அறை விசாலமாக் இருந்திருக்கும். ஒவ்வொரு முறை நான் ஊர் மாற்றும்போதும் என் அம்மாவுக்கு புத்தங்களை பத்திரமாக பேக் செய்யும் பெரிய வேலை குறைந்திருக்கும்.  அதனால் என்ன ?



இப்போதும் மின்னூல் பதிவு வந்தாலும் எனக்கு கனமான அந்த புத்தகங்களை கையில் பிடித்து படிப்பதிலேயே மன நிறைவும் ஆனந்தமும் கிடைக்கிறது.அதிலும் நான் சாண்டில்யன் காதலன். சொல்ல வேண்டுமா ? அவரின் புத்தக விலையும், சுமையும் அதே சமயம் சுவையும் மிக அதிகம். என் வீட்டில் ஒரு அலமாரி முழுக்க அவர்தான் வியாபித்திருக்கிறார். இப்போது அந்த அலமாரியை , அந்த புத்தகங்களை அப்படியே இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து விட்டேன்.தெரியாத்தனமாக இந்த முறை ஊருக்கு போனபோது அப்பாவிடம் அதை சொல்லி மடிக்கணினியை திறந்து காண்பிக்க  'அடப்பாவி... என் சம்பளத்தில பாதிய  அதுக்குதானடா செலவு செஞ்ச ...' என்று ஒரு முறை அந்த அலமாரியை திறந்து மேலிருந்து கீழ் பெருமூச்சுடன் அங்கலாய்த்தார். 




ஆனால் எண்ணிப்பாருங்கள்.. அந்த கனமான புத்தகத்தை படிப்பதில் உள்ள சுகமும் , மகிழ்ச்சியும் மின்னூலில் கிடைக்கிறதா ? 

அப்போதெல்லாம் அடிக்கடி  உடுமலையிலோ பொள்ளாச்சியிலோ புத்தக கண்காட்சி வைப்பார்கள்.என் அப்பாவுடன் சென்று குறைந்தது ஆறு மணி நேரம் தேடி , எனக்கு பிடித்ததை , தேவையானதை குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் அள்ளிக்கொண்டு வருவேன். அது ஒரு கலை.

என் முதல் சரித்திர புத்தகம் 'பொன்னியின் செல்வன் ' இல்லை ; ராகிராவின் 'நான் கிருஷ்ணதேவராயன்' .முதல் தத்துவ புத்தகம் 'அர்த்தமுள்ள  இந்து மதம்' இல்லை ; 'விவேக சிந்தாமணி . என் முதல் சமுதாய ஏற்றத்தாழ்வை பற்றிய புத்தகம் ஜெயகாந்தனுடையதல்ல...'ராஜா வந்திருக்கிறார்' உட்பட இருந்த ஒரு  கதைத்தொகுப்பு.. 

என் புத்தக விஷயத்தில் நான் மிக சுயநலவாதி. புத்தகம் வாங்கிய கையோடு ,முன்பக்கத்தில் என் பெயரையும் ,வாங்கிய நாளையும் இடத்தையும் எழுதி ஒரு கையெழுத்தும் இட்டபிறகுதான் எனக்கு அது முழு சொந்தம் என்ற பரிபூரணம் வரும். அதை உடனே எடுத்து பத்திரமாக அடுக்கி வைத்த பின் ,எதோ ஒரு புது புதையலை பூதத்திடம்  பாதுகாப்பாக ஒப்படைத்தது போல ஒரு நிறைவு . யாருக்கும் அதை இரவல் தரமாட்டேன். சில புத்தகங்களை பிறர்  பார்க்க கூட விட மாட்டேன்.  'இனி அது முழுக்க முழுக்க எனக்கு சொந்தம்' என்று மனதிற்குள் ஒரு பிரதிக்ஞை எடுத்துகொள்வேன் . புத்தக விஷயத்தில் நாம் Possessive-ஆக  இருக்க வேண்டும்;அதில் தவறில்லை .  உங்களால் அப்படி இருக்க முடியவில்லை என்றால் , யாருக்காவது புத்தகத்தை கொடுக்கும்போது அது திரும்ப வராது அல்லது ஊனப்பட்டு வரும் என்று நினைத்துக்கொள்ளுங்கள்.அதுதான் நடக்கும்.

எந்த புத்தகம் வாங்கினாலும் அதை படிக்கும்போது அதோடு வாழ வேண்டும்; அதோடு மட்டுமே வாழ வேண்டும் . ஒரு புத்தகம் படிக்கும்போது இடைப்பட்ட நேரத்தில் வேறு ஒரு புத்தகம் படித்தால் இரண்டிலுமே நம்மால் பூரணமாக மகிழ்ச்சியை அறிய முடியாது. கல்லூரியோ அலுவகமோ முடித்து பிறகு உங்களுக்கு வசதியான இடத்தில (தனியாக அமைதியாக ) அமர்ந்துகொண்டு , அதை கையில் எடுத்து முகர்ந்துப்பார்த்து படிக்க ஆரம்பிக்கும்போது அடடா .. ஏதோ நம்  மனதிற்கினிய காதலியுடன் கண்ணியமாக உரையாடுவதுபோல் ஒரு ஆனந்தம் பிறக்கும். அது என்ன கண்ணியமாக உரையாடுவது ? அது மிக முக்கியம் .

  • சிலர் புத்தகத்தை படிக்கும்போது அதை மடக்கி படிப்பார்கள். -அயோக்கியர்கள்.
  • சிலர் எதுவரை படித்திருக்கிறோம் என்று ஞாபகப்படுத்த அந்த பக்கத்தை ஒரு முனையில் சிறிதாக மடிப்பார்கள்- ஐந்தறிவு ஜென்மங்கள். 
  • சிலர் மற்றவரிடம் கதை அளந்துகொண்டோ , டிவியோ பாடோ கேட்டுக்கொண்டோ படிப்பார்கள்.-புத்தி கெட்டவர்கள்.
  • சிலர் ஏதோ பெரிய சிறுகுறிப்புத்தொண்டர் போல் குறிப்பெடுக்க வேண்டி , வரிகளுக்கு கீழ் கோடிட்டோ , வரிகள் மேலேயே  கோடிட்டோ தாங்கள் அதை புரிந்துகொண்டதுபோல் ஆதரிப்பது போல் புத்தகத்தை அலங்கோலப்படுத்துவார்கள்  - கடைமடையர்கள்
(பாடபுத்தகங்கள் நிலைமை மிகப்பரிதாபம்.'பிட்'டுக்கு பக்கங்கள் கிழிக்கப்பட்டு, கிழிக்கப்பட்டு வருடக்கடைசியில் அட்டை மட்டுமே எஞ்சியிருக்கும்.  )


புத்தகத்தை நாம் அஃறிணையாகப் பார்க்க கூடாது . அது ஒரு இனிய நல்ல  நண்பன் , அழகிய காதலி, எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு குரு (சில புத்தகங்களுக்கு இது பொருந்தாது - உறவுகளை தேர்ந்தெடுப்பதில் இருக்கும் கவனம் புத்தகங்களுக்கும் பொருந்தும் ). அதோடு வாழும்போது அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். நான் ஒரு புத்தகத்தை எவ்வளவு முறை படித்தாலும் அவ்வளவு முறையும் அது புதிதாக நிறைய கற்றுகொடுக்கிறது. 

எத்தனை பிரச்சனைகளை சந்தித்தாலும் ,இரவு படுக்கும் முன் ஒரு புத்தகத்தை எடுத்து படித்தால் மனம் இலவம்பஞ்சாக இலகுவாகி நித்தரை நிம்மதியாய் இருக்கும் . (தூக்கம் வருவதற்காகவே புத்தகம் படிக்கும் சிலர் உண்டு - அவர்கள்  புத்தகத்தை படிப்பதில்லை , கையில் பிடிக்கமட்டுமே செய்கிறார்கள்) 

என்னை பொறுத்தவரை புத்தகம் படிக்க சிறந்த நேரம் மாலைதான். வீட்டில் எல்லாரும் தொலைக்காட்சி பார்க்கும்போது தொல்லையில்லாமல் படிக்க அதுவே சிறந்த நேரம். புத்தகம் படிக்கும் பழக்கம் மட்டும் ஒருவனுக்கு இருந்தால் அவனுக்கு நண்பர்கள் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை . காரணம் சில நண்பர்கள் தருவது Quantity டைம் ; புத்தகங்கள் தருவது Quality டைம்.  

இப்படி அருமையான புத்தகத்தை முழதாக அனுபவிக்க சிறந்த வழி , அதை கடையில் வாங்கி படிப்பதுதான். இதே எண்ணம் பலருக்கும் இருப்பதனால்தானோ  என்னவோ ஒவ்வொரு வருடமும் சென்னை புத்தக கண்காட்சியில் விற்பனை சக்கைபோடு போடுகிறது.



மின்னூலுக்கு நான் எதிரி அல்ல.அது ஒரு மிக அருமையான வரவேற்கத்தக்க முன்னேற்றம். மக்களுக்கு எளிதாக புத்தகங்களை கிடைக்க செய்து அவர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திய ஒரு அற்புதம். மின்னூல்  இல்லையென்றால் ஒய்வு நேரத்தில் பேஸ்புக்கிலும் ஆர்குட்டிலும் நேரத்தை போக்கியிருப்போம்.

ஆனால் அதில் எனக்கு எழுத்துக்கள் மட்டுமே தென்படுகிறது. ஒரு சிநேகம் வருவதில்லை. புத்தகத்திற்கு என இருக்கும் ஒரு வாசம் கிடைப்பதில்லை. பக்கத்தை திருப்பும் போது இருக்கும் சுகம் Next
Page க்ளிக்-கும்போது   கிடைப்பதில்லை.இது என் புத்தகம் என்று ஒரு உரிமை வருவதில்லை;மாறாக இரவல் வாங்கி படிக்கும் குற்ற உணர்வே மேலோங்குகிறது. காலத்திற்கு ஏற்ப மாறவேண்டும் என்று தெரிந்திருந்தும் , சுஜாதா சார் 'இன்னும் சில வருடங்களில் புத்தகங்கள் அனைத்தும் கணினியில் அச்சேறும் காலம்தான் வரும் ' என்று எச்சரித்திருந்தும் , இதில் என்னால் பழமைவாதியாகவே இருக்கமுடிகிறது.

எது எப்படியோ... இனிமேலும் புத்தகங்கள் வாங்குவதை நான் நிறுத்த போவதில்லை . என் புத்தக அலமாரி எனக்கு கொடுக்கும் திருப்தி என் ஈபுக்ஸ் போஃல்டர் கொடுப்பதில்லை. 

 நீங்கள் எப்படி? 

Friday, March 11, 2011

'ஜெ ஜெ' - சில குறிப்புகள் : தேர்தல் டிட் -பிட்ஸ்

தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் தலைவர்கள் பற்றி முழுக்க ( அல்லது கொஞ்சமாவது ) தெரிந்து கொள்ள வேண்டியது மிக முக்கியம். ஆனால் தலைவர்கள் பின்னணியை அலசி அவர்களை பற்றிய நல்ல குணங்களை சொன்னால் அவரின் அனுதாபி/விசுவாசி என்றும் , மோசமான உண்மையை போட்டு உடைத்தால் 'நீ எதிர்கட்சிக்காரனா ?' என்றும் எதிர்கேள்வி கேட்பதும் வழக்கமான ஒன்று . அதைப்பற்றி நான் கவலைப்பட போவதில்லை. இது கட்சியின் அலசல் அல்ல , கட்சியை வழிநடத்தும் தனி மனிதர்களின் அலசல் .அந்த வரிசையில் முதலில் அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதாவை பற்றி இந்த பதிவு .நடிப்புலக அனுபவம்  , நடனம் , புகழ்துதி எல்லாம் நமக்கு தேவை இல்லை . இவர்களிடம்  இருக்கும் அரசியலுக்கு தேவையான திறமைகள் பற்றி மட்டும் இங்கே . 




பெயர் : ஜெயலலிதா 
பிறப்பிடம்: மைசூர் 
படிப்பு: சென்னை பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப்பள்ளி 
               சென்னை பிரசன்டேசன் கான்வென்ட் சர்ச் பார்க் 

 படிப்பில் மிக சுட்டி. பத்தாவது தேர்வில் முதல் மதிப்பெண். வக்கீல் தொழிலில் ஈடுபட விருப்பம் கொண்டு , அது சம்பந்தப்பட்ட துறை நூல்களில் அதிக ஆர்வம் காட்டினார் . இந்திய அரசின் உயர்படிப்புக்கான உதவித்தொகைக்கு தகுதி பெற்றும் அதை விடுத்து தாயின் வற்புறுத்தலுக்காகவும் குடும்ப சூழ்நிலை கருதியும் நடிப்புலக பிரவேசத்திற்காக ஒதுங்கினார். 

தெரிந்த மொழிகள் : பன்மொழி புலமை பெற்றவர் . தமிழ் தவிர கன்னடம் , ஹிந்தி , ஆங்கிலம் உற்பட பல மொழிகள் சரளமாக பேசக்கூடியவர். இவரின் ஆங்கில புலமையை பல மூத்த பத்திரிக்கையாளர்களும் , அரசியல் தலைவர்களும் வியந்து பாராட்டியதுண்டு. 

பேச்சு திறன் : எதிர்கட்சியில் கலைஞர் போல் சொல்வன்மை மிக்கவர் வீற்றிருக்கும்போது ,அதை எதிர் கொள்ள நல்ல திறன் தேவை . இவர் அதில் சளைத்ததில்லை. 
1982ல் 'பெண்ணின் பெருமை ' என்ற தலைப்பில் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் முன்னிலையில் தன முதல் பேச்சை வெளிப்படுத்தி பாராட்டு பெற்றார். 
இரண்டு வருடம் கழித்து ராஜ்ய சபா உறுப்பினராக இருக்கும்போது , இவரின் பேச்சை கேட்டு வியந்து பாராட்டினார் இந்திரா காந்தி. 

அரசியல் பிரவேசம் :  1981. ஏழு வருடம் கழித்து ராஜ்ய சபா உறுப்பினர் பதவி . அடுத்த ஒரு குறுகிய காலகட்டத்தில் சட்டசபையில் நடந்த ஒரு அசம்பாவித சம்பவம் 'அடுத்த முறை , இங்கே காலடி எடுத்து வைத்தால் ,அது முதல்வராகத்தான் ' என்று சபதம் செய்ய வைத்தது.(என்னை பொறுத்த வரை ஜெயலலிதாவின் இந்த வளர்ச்சிக்கு காரணம் எம்.ஜி.ஆர் அல்ல , துரைமுருகன் தான் .. )  அந்த நிகழ்வு இவர் மேல் அனுதாப ஓட்டுகளை அள்ளி வீச செய்து ,மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் தமிழ் முதல்வரானார். 

இவரின் முழுத்திறமையும் வெளிவர தொடங்கியது , முதல் அமைச்சர் ஆனபின்தான்.  இவரின் செயல்கள் யாவுமே ஒரு அர்த்தம் உள்ளதாக Management Communication வல்லுனர்கள் கருத்து. 
Effective Communication என்பதை இவர் பெரும்பாலும் தன் பேச்சுக்கள் மூலம் வெளிப்படுத்துவதில்லை . சிறிய செயல்களில் அதை சாத்தியப்படுத்துகிறார்.


உதாரணம்:  சட்டசபையில் இவர் அமர்ந்திருக்கும்போது ,அடுத்த இடம் காலியாகவே இருக்கும். ஒரு இடம் விட்டுதான் பன்னீர் செல்வமோ வேறு யாரோ அமர்ந்திருப்பார்கள்.  தனக்கு பின் இன்னொரு ஆளுமை  ( Immediate Authority )  தான் இருக்கும் வரை இல்லை என்பதை குறிப்பால் உணர்த்தும் தன்மை இது.

ஒருவர் தன்மேல் அறிக்கைகளை எதிராக அள்ளி வீசினால் இவர் இதை கையாளும் விதம் இன்னொரு உதாரணம் . எந்த ஒரு எதிர் அறிக்கையும்  விடாமல் அவரை உதாசினப்படுத்துவார். 'நான் உன்னிடம் சண்டை போடும் அளவுக்கு நீ எனக்கு ஒரு பொருட்டே இல்லை' என்பதை சொல்லாமல் சொல்லும் விதம் அது. 

சரியான சமயத்தில் சரியான கேள்வி கேட்பது இவரின் இன்னொரு திறன் -' ராசாவை கைது செய்தால் எம்பிகளை இழப்போம் என்று நீங்கள் பயந்தால் பதினெட்டு எம்பிகளை உடனே தர , காங்கிரஸ் கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு தர நான் தயார். உங்கள் நிலைப்பாடு என்ன ?' என்று ஒரே  கல்லில் இரண்டு மாங்காய்களாக , திமுகவை கக்கப்பட செய்தும் , காங்கிரஸ் கட்சியை முடிவு எடுக்க துரிதப்படுத்தியதும் இவர் அசாத்திய திறமை. 

ஹிட்லர் ஆட்சி , பாசிசம் என்று இவரின் மிக கட்டுப்பாடான ஆட்சியை எல்லோரும் விமர்சனம் செய்தாலும் , அப்படி ஒரு கடினமான எளிதில் அணுக முடியாத இமேஜாக தன்னை அடையாளப்படுத்துவதன்  மூலம் , தன் கட்சிக்குள் (நன்றாக கவனிக்க -   தன் கட்சிக்குள் மட்டும் ) ஒரு கட்டுப்பாடை, ஒழுங்கை முறைப்படுத்தி வைத்துள்ளார். 

செய் அல்லது செய்யாதே ( Either Zero or One / Be Black or White ) என்பதில் மிக தெளிவாக இருப்பார். ஒரு செயல் செய்ய முடிவு எடுத்தால் அதை மற்றவர்களுக்கு  நியாயபடுத்த முயற்சி செய்வதில்லை . அரைகுறையாக அதை விட்டுவிடுவதோ , இல்லை ஒத்தி போடுவதோ நடக்காது - அது தவறான ஒன்றானாலும் .

இவரின் (நியாயமான ,உண்மையான  ) சில சாதனைகள் :
  • கந்துவட்டி முறையை ஒழித்தது.
  • லாட்டரி சீட்டுக்கு முற்றுபுள்ளி  வைத்தது .
  • பள்ளி மாணவர்களுக்கு மிதிவண்டி 
  • தொட்டில் குழந்தை திட்டம் 
  • வீராணம் குடிநீர் திட்டம் 
  • சிறைகளில் ,நீதிமன்றங்களில்  வீடியோ கான்பரன்சிங் முறை
  • வீரப்பனை ஒழித்தது 
  • மகளிர் காவல் நிலையம் 
(இலவச அன்னதானம் என்று பிச்சைக்காரர்களை வளர்த்ததும் , மழைநீர் சேகரிப்பு என்று வீட்டுக்கு வீடு தோண்டியதும் சாதனை என்று ஏற்றுக்கொள்ள முடியாது ) 

இவரை இந்தியாவின் இரும்பு பெண்மணி என்பதில் எள்ளளவும் எதிர்வார்த்தை இல்லை .இவரின் படிப்பு ,பன்மொழி புலமை , செயல் திறமை ,ஆளுமைத்தன்மை ஆகிய இவைகளை மட்டும் பார்த்தால் , நாட்டின் பிரதமராகும் தகுதி கூட இவருக்கு இருக்கிறது. 

மேற்கூறிய யாவும் இவரின் உண்மையான தகுதிகள் . மற்றபடி இவரின் ஊழல் சாதனைகளும் , காவல்துறையை அடியாளாக பயன்படுத்தியதையும் உங்களுக்கு நியாபகப்படுத்த தேவை இல்லை . இதை மனதில் ஒரு ஓரத்தில் வைத்துக்கொண்டு இந்த தேர்தலை எதிர்கொள்ளுங்கள் . 



என்னை பொறுத்த வரை அமெரிக்க தேர்தல் போல் தனி மனித திறமைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு தலைவரை தேர்ந்தெடுக்க சொன்னால் ஜெயலலிதா கண்டிப்பாக ஒரு சரியான தேர்வாக இருப்பார்.  

முடிவு உங்கள் கையில். பிற தலைவர்களை பற்றி பின்னர் .. 

Monday, March 7, 2011

திடீர் திருப்பம் - திமுகவில் இணைந்தார் ஒ.பன்னீர் செல்வம்


உலகத்திலயே வேகமா பரவும் ஜந்து என்ன தெரியுமா ? பாக்டீரியா ? வைரஸ் ? எய்ட்ஸ் ? ஹுஹும்ம் இது எதுவும் இல்ல சார்..  ஆனா ஒரு வகைல இது எல்லாமே நல்லதுதான் . ஏனா நம்மலா போயி வம்பா மாட்டுனாத்தான் இதுக எல்லாம் புடிச்சுக்கும். இதை  எல்லாம் தாண்டி ஒன்னு இருக்குனா அதுக்கு பேருதான் வதந்தி ..


என்னது ? வதந்தி..வதந்தி....

 தீ மாதிரி பரவறதுனால வதந்தீ அப்படினும் சொல்லுவாங்க.  இந்த வதந்தியோட கேரக்டர இப்போ ஒரு அனலிசிஸ் பண்ணலாமா ?







வதந்தி எனப்படுவது யாது ?அதன் வகைகள் எவை ? விளக்குக . 2X1 = 2 


வதந்தி எனப்படுவது யாதெனில் யாதொன்றும்
உண்மை இலாத சொலல். 

வதந்தி இருவகைப்படும். ஒன்று பொய்யான ஒன்றை ,  இல்லாத ஒன்றை  பரப்புவது. உதாரணம் - பதிவின் தலைப்ப பாருங்கப்பா 
 மற்றது உண்மையை அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் ஊதி பெரியதாகி ஆக்கி பரப்புவது. உதாரணம் - தினந்தோறும் சன் , ஜெயா செய்திகள் பாருங்கப்பா ..
-------------------------------------------------------------------------
வதந்தியின் குணங்கள் பற்றி விளக்குக . 6X1 = 6  

வதந்திக்கு எப்போதுமே நிகழ் காலம்தான். இறந்த காலம் கெடையாது. 


'ஆட்சியில இருந்தப்ப அந்த ஆளு எவ்வளவு சம்பாதிச்சான் தெரியுமா ?'

'அட போடா..இப்பவும்  கூட அவனுக்கு ஒரு பங்கு போய்ட்டு இருக்காம். நம்ம எழாவது வட்டம் சொன்னாரு.. ' 


ஏழாவது வட்டத்துக்கு யார் சொன்னாங்கனு எவனுக்கும் தெரியாது. அவன கேட்டா மூணாவது பிளாக் கவுன்சிலர்னு  சொல்லுவான் .. 
வதந்தியோட பெரிய ப்ளஸ் பாய்ண்டே அத  ஆரம்பிச்ச ஆள கண்டுபிடிக்க முடியாது . நூறு பெர்சென்ட் சேஃப்டி. 


---------------------------------------------------------------
 சரி இறந்த காலந்தான் கிடையாதுனா அது இறக்கற காலமும் கெடையாது. அஞ்சு வருசமா தூங்கிட்டு இருக்குற வதந்திய அரை நிமிசத்துல்ல ரீ-ஓபன் பண்ணிடலாம்.


'அவரு பொண்ணு கல்யாணத்துக்கு அப்புறம் குடிக்கறதயே விட்டுட்டாருப்பா '


'இல்லேங்க .. போன வாரம் கூட டாஸ்மாக்ல கலாட்டா பண்ணி பெரிய பிரச்சனை ஆயிடுச்சுங்க..'


'அப்படியா ..அப்போ ஏன் நான் கூப்பிட்டா கூட வர மாட்டேங்கறாரு.. '

அது உண்மையோ பொய்யோ (வதந்தி என்பதே பொய்தான் என்று ஒரு சாரார் கொடி பிடிக்கிறார்கள் , ஆனால் 'நெருப்பிலாமல் புகையாது' என்ற பழமொழி சற்றே யோசிக்க வைக்கிறது ..) அன்னைக்கு நைட்டே ஒழுங்கா இருக்குற மனுஷன் வீட்டுக்கு வந்ததுமே , என்னைக்குமே மதிக்காத ரெண்டாவது பொண்ணு பக்கத்துல வந்து 'அப்பா ..ஏன்பா லேட்டு ? வயசாகுதுல.. உடம்ப பாத்துக்கோங்க.. என்னப்பா உங்ககிட்ட வாசம் ..  ஊதுங்க'னு அவர் அமைதிக்கு சங்கு ஊத ஆரம்பிச்சிடும். 

-----------------------------------------------------------
 வதந்தி ஒரு முற்போக்குவாதி. எந்த விஷயம் நடந்தாலும் கண் மூக்கு காது வைச்சு முற்போக்கா சொல்லும் . 


'அவங்க கல்யாணத்துக்கு யாரையுமே கூப்பிடல .. ஏன்னு தெரியல ? ' - இது ஆரம்ப செய்தி வடிவம்  .


'அவங்க பொண்ணு லவ் மேரேஜாமா ? உங்களுக்கு தெரியுமா ? - இது இடை நிலை செய்தி வடிவம் .


அடுத்து.. சாரி ..இந்த இடத்துலதான் உங்க எதிர்பார்ப்பு உடையும் . வதந்திக்கு கடை நிலை வடிவமோ சாவோ கிடையாது. அனுமாருக்கு அப்புறம் சாகா வரம் பெற்று சிரஞ்சீவியாக இருப்பது வதந்தி மட்டும்தான்.


-------------------------------------------------------------
வதந்தியின் மிகபெரிய பலமே அதன் எளிதாக மாறும் தன்மைதான். Its flexible sir...


'இந்த அம்மா ஏதோ நல்ல பையன பெத்த மாதிரி பேசிட்டு போறாங்க. நேத்து அவன் தம் அடிக்கிறத நான் பாத்தேங்க.. '


'உளறாத.. அவன் நேத்து என பையனோட க்ரூப் ஸ்டடி பண்ணிட்டு இருந்தானாம். ரெண்டு பெரும் அவன் பிரெண்ட் வீட்டுக்கு போயிருந்தாங்க.. '


'ஒ .. ஆமா ஆமா .. உங்க பையன் கூடத்தான் பக்கதுல இருந்தான் .. நான் மறந்துட்டேன்..'


'என் பையனுமா தம் அடிச்சான் ?'


'அப்படிதான் நெனைக்கிறேன். எதுக்கும் கொஞ்சம் பத்திரமா பாத்துக்கோங்க . '

----------------------------------------------------------------


வதந்தி  உருவாக்கத்தின் காரணம் என்ன ? சுருக்கமாக விளக்குக 6X1=6

ஒ .. ரெம்ப சுருக்கமா விளக்கலாமே ..

  • வெட்டியா இருக்குற வீணா போனவங்க தங்கள் பொன்னான காலத்தை நல்ல முறையில் போக்க வதந்தி உதவுகிறது.
  • தங்கள் நண்பர்களோ  தெரிந்தவர்களோ சந்தோசமாக இருந்தால் பொறுக்க முடியாத மன உளைச்சலுக்கு வடிகால் - வதந்தி. 
  • வதந்தியின் காரணமாக வருத்தப்படும் மக்களை காண்பதில் கிடைக்கும் பேரின்பம்.

மேல்கூறிய மூன்றுக்கும் ஒரே உதாரணம் :
காலேஜ் ஹாஸ்டல இருந்தப்போ ராக்கிங் , சைட் அடிப்பது எல்லாம் போர் அடிச்சு வீட்டு நெனப்பு வரும். எங்கள டென்சன் பண்ற மாதிரி , பக்கத்துக்கு ரூம் பசங்க படுதீவிரமா படிச்சுட்டு இருப்பாங்க. இவனுகளுக்கு வீட்டு நெனப்பே வராதான்னு கேட்டா ' படிக்கதாண்டா ஐநூறு கிலோமீட்டர் தாண்டி வந்துருக்கோம். அத விட்டுட்டு .. போடா போயி முன்னேற வழிய பாருடா 'னு நம்மளயே கலாய்ப்பாங்க. அவங்க சந்தோசமா இருப்பாங்க. நமக்கு பொறுக்குமா ? 

ஒருத்தன அவங்க ரூமுக்கு அனுப்புவோம் .


'என்னங்கடா.. நீங்க எப்போ கிளம்பறீங்க ?'


'எங்கடா ?' 


'ஊருக்குதான். வெள்ளிகிழமை லீவு தெரியும்ல '


'லீவா ? எதுக்குடா ? '


' டேய் .. போன வாரம் கிரிக்கெட்ல ஸ்டேட் லெவல் வரைக்கும் போனோமே . அதுக்கு லீவ்  விட்டுருக்காங்க.. சரிடா. நான் இப்போவே போயி ட்ரெயின் புக் பண்றேன் '

ஒரு மணி நேரம் கழிச்சு எங்க ரூம்லயே வந்து ஒருத்தன் கேப்பான். - 'என்னங்கடா.. நீங்க எப்போ கிளம்பறீங்க ?'

அப்புறம் அந்த பசங்க அங்க இங்க போன் பண்ணி வீட்டுல சொல்லிட்டு , திரும்ப வந்து துணியெல்லாம் எடுத்து பேக் பண்ணிட்டு வியாழகிழமை மத்தியானம் வரைக்கும் இன்னும் எதுவும் நியூஸ் வரலயேன்னு பீல் பண்ணிட்டு நம்மகிட்ட கேப்பாங்க . நாங்க இப்போ சொல்லுவோம் -  ' படிக்கதாண்டா ஐநூறு கிலோமீட்டர் தாண்டி வந்துருக்கோம். அத விட்டுட்டு .. போடா போயி முன்னேற வழிய பாருடா '.


அவங்க மூஞ்சிய பாக்கும்போது ஒரு சந்தோசம் கிடைக்கும் பாருங்க . அதுக்கு பேர்தான் பேரின்பம்னு எங்க பசங்க சொல்லுவாங்க .. மத்தபடி நான் இப்படி யாருக்கும் பண்ண மாட்டேன் . உங்களுக்குதான் தெரியுமே நான் நல்லவன்னு..ஆனா இந்த ஐடியாவுக்கு ஆக்கம் ஊக்கம் இயக்கம் எல்லாம் நான்தான்... ஹிஹிஹி.. 



எனவே BEWARE OF வதந்தி.

இதையே சிறுவர்மலர் ஸ்டைல சொல்லனும்னா ,
ஆகவே குழந்தைகளே , 
எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் ... அட போங்கப்பா சலிச்சு போய்டுச்சு..