அது தூர்தர்ஷனில் மகாபாரதம் ஓடிக்கொண்டிருந்த காலம்.
'இல்லப்பா ,அர்ஜுனன் எப்போ பாத்தாலும் கிருஷ்ணனோட இருந்துகிட்டு ரெம்ப பாதுகாப்பா சண்டை போடுறாரு! அபிமன்யுவ பாருங்களேன் , ஒரே ஆளா உள்ள போயி எல்லா பெரிய ஆளுகளையும் ஒரு கை பாத்துட்டான்.. அவன்தான் உண்மையான ஹீரோ'.
பாரதம் பற்றி எந்த ஒரு புத்தகத்தையும் உரையும் அதன் பின்புலமும் தெரியாத காலத்திலயே என்ன பாதித்த கதாபாத்திரம் அபிமன்யு .அவன் சூழ்ச்சியால் கொல்லப்படும்போது எதோ என்னையே கொன்றது போல் ஒரு வலி.
எல்லாருக்கும் இந்த அனுபவம் வாய்க்கும் . சிறு வயதில் யாரையோ ஒருவரை மனதில் நாயகனாக வரித்து அவனைப்போலவே செயல்படும் ஒரு அபூர்வமான ஆனந்தமான வெகுகுறுகிய காலம்.அது நமக்கு வருடம் பல கடந்தாலும் மனதில் நிற்கும். எனக்கு அப்படி வாய்த்தவன் அபிமன்யு!
எதோ ஆட்டோக்ராப் கதை மாதிரி ரெம்ப சென்டிமென்டல போகுதுன்னு பீல் பண்ணாதீங்க .. அதுக்கப்புறம் எங்க தெருவுல என்னால நடந்த அட்டுழியம் இன்னும் எத்தனை காலமானாலும் அப்படியே இருக்கும் . இப்போவும் நான் ஊருக்கு போனா , எனக்கு ஞாபகமே இல்லாத யாராவது வந்து என்ன பாத்து , வடிவேலு ஸ்டைலேல ' அவனா நீ?'னு கேக்குற அளவுக்கு நான் பேமஸ்!
அது என்னமோ தெரியல , சின்ன வயசுல எனக்கு வில் அம்பு மேல அப்படி ஒரு ஈர்ப்பு. அது அபிமன்யுவ புடிச்சதுனாலையா இல்ல வேற எதாவது பூர்வ ஜென்ம தொடரலோ தெரியல ..ஆனா எனக்கு வில் அம்பு புடிக்க ஆரம்பிச்ச நேரம் எங்க பக்கத்துக்கு வீட்டுக்காரங்களுக்கு தொல்லை ஆரம்பிச்ச நேரம்!
அப்பவும் சரி இப்பவும் சரி வில் அம்புனா ஏதோ சாதாரணமா கெடைக்கற விஷயம் இல்ல ! 'தேடினாலும் கெடைக்காது'ங்கற இப்போதைய விளம்பரத்துக்கு வில் அம்பு சரியான உதாரணம். அப்பாகிட்ட அடம்புடிச்சு அழுக , அவர் வேலைய விட்டுட்டு 3 நாள் தேடி கோயம்புத்தூர்ல இருந்து ஒரு வில் அம்பு வாங்கிட்டு வந்து 'கண்டேன் வில்லை'னு வியர்க்க விறுவிறுக்க என் கைல கொடுத்தார் !
பையன் சந்தோசமா வாங்கிட்டு போய் விளையாடுவானு ரெம்ப எதிர்பார்ப்பா பார்த்தவர் முன்னாடி நான் வில்ல அப்படியும் இப்படியும் வளைச்சு பாத்துட்டு , கடுங்கோபம் கொண்டு 'என்ன குற்றம் செய்தாய் மானிடா.. பிழையான ஒரு தனுவை கொண்டு வந்து என்னை அவமதிக்கிறாயா ? ' னு ஏதோ தருமியிடம் சினந்த நக்கீரன் மாதிரி முறைக்க , அவர் ஏதோ கடவுள் நேரா வந்து பிள்ளைக்கறி கேட்டு demand செய்த மாதிரி செய்வதறியாது திகைத்து நிற்க, பின்னாடி வந்து நின்ன என் அம்மாதான் என் முதுகுல ரெண்டு தட்டு தட்டி 'இதுக்கு மேல நல்லதா வேணும்னா நீயே செஞ்சுக்கோ. போடா..'னு அப்பாவ எங்கிட்ட இருந்து காப்பாத்தினாங்க..
ஆகா ..முதல் முறையாக நான் கேட்டது கிடைக்கவில்லை. வில்வித்தைக்கு பேர் போன சேரநாட்டில் ஒரு வில்லுக்கு பஞ்சமா ? இனி பொறுப்பதில்லை.. நாமே களம் இறங்க வேண்டியதுதான் என்று முடிவு செய்து , எந்த ஒரு குருவும் இல்லாமல் தானாக ஞானம் தேடுவது போல் , நானாக வில் தேட புறப்பட்டேன் - 'உனக்கு நீயே ஒளியாவாய்' என்று!
இந்த இடத்துலதான் அபிமன்யுவுக்கும் எனக்கும் இருந்த ஒரு ஒற்றுமை புலப்பட்டது ! அவன் எப்படி தானாகவே பத்ம வியுகத்தை உடைக்க கற்றுக்கொண்டானோ அதே போல் நானும் தரமான வில் செய்வது எப்படி என்று துரோணர் இல்லாத ஏகலைவனாக கற்றுக்கொண்டேன்.
வில் செய்யும் வழிமுறைகள் :
வில்லின் தரம் என்பது 70% , அதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மரக்கிளை மூலமே நிர்ணயம் செய்யபடுகிறது. பச்சை மரக்கிளையில் எப்போதும் வில் செய்யக்கூடாது! கிளை காய்ந்த பின் வில்லின் நாண் தொய்ந்து விடும் அவலமோ அல்ல வில் முறிந்து விடும் அபாயமோ உள்ளது . ஆகவே நான் மூன்று கிலோமீட்டர் நடந்து சென்று கொய்யா மரத்தை தேடி அதன் கிளையை யாருக்கும் தெரியாமல் உடைத்து வந்தேன் ..
அடுத்தது நாண்.சாதாரண நூலா / சனல் கயிறா ?? செல்லாது செல்லாது .. அம்பின் வேகத்தை நிர்ணயப்பது வில்லின் நாண். அது பலமாகவும் எளிதில் அறுந்து விடாததாகவும் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு சிறந்த நாண் எங்கு கெடைக்கும் ? அட . இருக்கவே இருக்கு நம்ம செட்டியார் கடையில் , தூண்டில் செய்ய விற்கப்படும் நரம்பு .. go for it immediately ..
இந்த ரெண்டுதாங்க ஒரு வில் செய்ய வேண்டிய அடிப்படை பண்டகங்கள்..அப்புறம்தான் மிக முக்கியமான ,கடினமான வேலை மிச்சமிருக்கு . அதுதான் வில்லை வளைத்து நாண் ஏற்றுவது .. இங்குதான் இறைவன் எனக்கு ஒரு Assistant மிக அதிமுக்கிய தேவை என்பதை உணர்த்தினான் .. ஏன்னா என் பலத்துக்கு ஈர்குச்சிய வளைக்கும் பக்குவம் மட்டுமே உள்ளதுங்கறது எந்த ஒரு ஜாம்பவானும் சொல்லாமல் நானே அறிந்த உண்மை. சரி அப்படி ஒரு அப்பாவி எங்க கிடைப்பான் ? .. இருக்கவே இருக்கான் நம்ம ஆனந்து.. பக்கத்துக்கு வீட்டு பையன்.. என்ன விட நாலு வருஷம் சின்னவன். எப்போ திருடன் போலீஸ் விளையாண்டாலும் திருடனாகவே இருந்து என்னிடம் அடி வாங்கும் புத்திசாலி ..
அவனை கூப்பிட்டு உனக்கும் இதே மாதிரி ஒண்ணு செஞ்சு கொடுக்கறேன்னு சத்தியம் பண்ணி , எப்படியோ கிளையை வளைச்சு நாண் ஏற்றி (சரியா வரல , மறுபடியும் ,சரியா வரல , மறுபடியும் . அண்ணா கை வலிக்குது , இன்னும் ஒரே தடவைடா ... ஓகே ஓகே போதும் ) ஒரு வழியாய் சரித்திர புகழ் பெற்ற வில் தயாராகி விட்டது ..
அடுத்து இப்படி சிறந்த ஒரு வில்லுக்கு ஏற்ற அம்பு எப்படி தயாரிப்பது ? மீண்டும் விழித்து பதில் சொன்னது என் பிறவி ஞானம்.. அப்போது தீபாவளி முடிஞ்சா சமயம் .. எல்லாரும் ராக்கெட் உட்பட பல விதமான பட்டாசுகள் வெடிச்சுட்டு அயர்ந்து போய் இருந்த நேரம்.. எங்கள் அம்பு வேட்டை ஆரம்பமானது..
'வானத்துக்கு போன ராக்கெட் வெடிச்ச பிறகு அதோட குச்சி கீழ விழும் தெரியுமாடா ..? ஏன்னா gravitational force அத கீழ இழுக்கும்'
'அப்படியாண்ணா? எங்க சிலபஸ்ல அது எல்லாம் இன்னும் இல்லைண்ணா '
'பரவாயில்ல ..என்னை மாதிரி பெரிய கிளாஸ் வரும்போது உனக்கு தெரிய வரும் .நானே போன வருஷம் ஏழாம் கிளாஸ் பாஸ் பண்ண எவ்ளோ கஷ்டப்பட்டேன் தெரியுமா ? நீ இன்னும் நெறைய படிக்கணும். சரி அத விடு .. நமக்கு இப்போ தேவை அந்த குச்சிதான் .. எவ்ளோ கெடைச்சாலும் விடாத.. '
ஏறக்குறைய 200 குச்சிகளுக்கு மேல சேர்த்தாச்சு .. ஆனா கூர்மைக்கு என்ன பண்றது .. ?மொத்தமா வாங்குடா குண்டூசிய .. ஒரு அம்புக்கு நாலுன்னு செலப்பின் டேப் போட்டு ஒட்டு ..
இதோ முடிந்து விட்டது வில் அம்பு தயாரிக்கும் பணி. காப்புரிமை , மாடல் உரிமை அனைத்தும் எனக்கே எனக்கு மட்டும்.வில்லை கையில் எடுத்த உடன் ஏதோ இந்திரனிடம் காண்டீபம் வாங்கிய பார்த்திபனைப் போல புளகாகிதம் அடைந்தேன் .
ஒரு அம்பை எடுத்து வில்லில் நாண் ஏற்றி குறி பார்த்து விட , சரியாக (சற்றே ஒரு 3 அடி தள்ளி ) இலக்கை அடைந்தது பாணம்.
அன்றிலிருந்து பல மாதங்கள் நானும் என் வில்லும் செய்த வீரதீர சாகசங்கள் இன்று வரை பேர் பெற்று நிலைக்கிறது. அம்பு விடுவது மட்டும்தான் என் வேலை.. அது எவ்வளவு தூரம் போனாலும் அங்கு சென்று அதை எடுத்து , முனை முறிந்திருந்தால் அதை மீண்டும் சரிபடுத்தி திருப்பி தர வேண்டியது ஆனந்தின் கடமை. இப்படியே போனது பல நாட்கள்.
ஓரிரு மாதம் கழித்து , எதிர் வீட்டில் புதிதாய் பந்தல் போட, நான் என் வீட்டு மொட்டை மாடியில் இருந்து அம்பு மழை பொழிந்து பந்தலை கந்தல் ஆக்கியதால் வெளி உலகத்துக்கு என் வில்லின் மேல் வெறுப்பும் , அந்த பந்தலை சரி செய்ய பணம் கொடுத்தால் என் அப்பாவுக்கு அதன் மேல் பயமும் கூடியது. எங்கள் அட்டுழியம் எல்லை மீறி போக , ஆனந்தின் அம்மா அவனை அடித்து இழுத்து சென்றது இன்று வரை கண்ணீருடன் நினைவில் இருக்கும் ஒரு நிகழ்வு. அதுவும் அவன் ' அம்மா , அந்த அண்ணன் இனி மேலதான்மா எனக்கு வில் அம்பு செஞ்சு தருவாரு.. அத வாங்கிட்டு வந்துடுறேன்மா..இன்னைக்கு மட்டும் 15 தடவ அம்பு எடுக்க நடந்துருக்கேன்மா 'னு கதறியதை அவன் அம்மாவும் சரி ,நானும் சரி கேட்காதது போலவே கவனிக்காமல் விட்டது இன்று வரை அவனை பார்க்கும் மன தைரியத்தை எனக்கு குறைத்து விட்டது.. (இப்போ ஏழு அடி உயரமும் தொன்ண்ணூறு கிலோ உடம்போடும் விஷாலுக்கு அண்ணன் மாதிரி இருக்கான் .. பாத்து பேசலாம்னு ஆசைதான் ..எங்க பழசை ஞாபகம் வெச்சுகிட்டு பட்டுன்னு கைய வெச்சுருவானோனு ஒரு பயம்).
அடுத்த முறை என் இலக்கு மின்சார கம்பம் மீது பாய்ந்து ஏதோ ஒரு wire கருகி ,மின்விசிறியும் வெளிச்சமும் இல்லாத ஒரு வெப்பம் மிகுந்த நீண்ட இரவு தெரு முழுக்க வியாபித்தது .
அடுத்த நாள் ஏரியா Association மீட்டிங் - என் வில்லாள திறமை கடுமையாக பேசப்பட்டது . என் அப்பா கிரீடம் படத்துல வரும் ராஜ்கிரண் மாதிரி தலை தாழ்த்தி வீட்டுக்கு வந்தார் .
அதன் பிறகு ஒரு நாள் காலை என் பாசத்திற்குரிய, காதலுக்குரிய வில் எங்கோ மறைக்கப்பட்டு விட்டது . அபிமன்யு இறுதியாக போராட ஒரு சிறு அம்பையாவது கௌரவர்களிடம் கேட்டு கிடைக்காமல் போனது போல் நான் எவ்வளவோ கேட்டும் என் வில் இறுதிவரை எனக்கு மறுக்கப்பட்டது . மிக விவரமாக யாரும் என் அம்புகளை தொடாமல் ' இத மட்டும் வெச்சு அவன் என்ன பண்ணுவான் பாப்போம் ?' என்று விட்டு வைத்திருந்தனர்.
அதற்கப்புறம் தாடி வளராத அந்த பருவத்தில் , என் தோல்வியை வெளியே காண்பிக்க தெரியாமல் , தனியே சுற்றிகொண்டிருந்து , நாட்கள் வருடங்களாகி காலம் ஓடி விட்டது .அடுத்த தலைமுறை துப்பாக்கியோ , வீடியோ கேம்சோ என்னை flirt செய்ய போராடி தோற்றன.
இப்போது வரை வில் அம்பு மீதும் அபிமன்யுவின் மீதும் மாறா பக்தியும் நேசமும் எனக்கு குறையாமல் கூடிக்கொண்டிருக்கிறது.
யாருக்கு தெரியும்.. நாளைக்கு என் பையனுக்கு ஒரு வில் செய்து கொடுத்து என் காதலின் ரெண்டாவது அத்தியாயத்தை தொடங்கினாலும் ஆச்சர்யம் இல்லை. ஆனால் இந்த காலகட்டத்தில் அவனுக்கு வில் அம்பு மேல் மோகம் வருமா என்பது கேள்விக்குறிதான்.